Friday 13 September 2019

சொர்க்கத்தில் நவபாரதம் - காட்சி 8


சொர்க்கத்தில் நவபாரதம்

                                                                      காட்சி  8

நிகழிடம்        :  கலா மண்டபம்
நிகழ்த்துவோர் :  சிவன், உமை, திருமால், பிரம்மா, அரம்பை, ஊர்வசி,
                     திலோத்தமை, திருவள்ளுவர், கம்பர், பாரதியார், நாரதர்.
***
                பௌர்ணமி நிலவு மெத்தென வெண்கதிர்களைப் பரப்பும் நேரம். தென்திசையிலிருந்து வரும் பொதிகைத் தென்றல் மெல்லென வீசியது.  மல்லிகைப் பந்தரின் ஊடே நுழைந்து வந்தமையால் அதன் இனிய மணம் மனத்தை மயக்குகிறது. நட்சத்திரங்கள் வண்ண விளக்குகளாய் கலா மண்டபத்தை அலங்கரிக்கின்றன. ஊர்வசியின் நாட்டிய நிகழ்ச்சியைக் காண ஆவலாய் அனைவரும் குழுமி இருக்கிறார்கள்.
***
சிவன் : இக் கலை நிகழ்ச்சியைக் காண உலகப் பொதுமறையாம் திருக்குறள் யாத்து தமிழின் ஈடில்லாப் பெருமையை உலகுக்குணர்த்திய திருவள்ளுவப் பெருந்தகை, கவிச்சக்கரவர்த்தி கம்ப மாகவி, பாஞ்சாலி சபதத்தைப் பாமரனும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய தமிழில் யாத்து தமிழுக்குப் புது வடிவம் கொடுத்த பாட்டுக்கொரு புலவன் பாரதி - இவர்கள் அனைவரையும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கச் சொன்னேனே!  அவர்கள் வந்துவிட்டார்களா?
திருவள்ளுவர், கம்பர், பாரதி (ஒருமித்த குரலில்) :
                நாங்கள் இங்கே இருக்கிறோம் பரம்பொருளே, எங்கள் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்!
சிவன் : அழகு தமிழில் வணங்கிய உங்களுக்கு நானும் எனது வணக்கத்தை உரைக்கின்றேன்.  உங்களுக்கு தேவ லோகத்தில் ஒன்றும் குறை இல்லையே?
வள்ளுவர் : எமக்கென்ன குறை ஆதி பகவ!  இங்கு பூவுலகில் யாம் எவ்வளவு தேடியும் கிடைக்காத தொல்காப்பியத்திற்கு முன் தோன்றிய அகத்தியரால் இயற்றப்பெற்ற அகத்தியம் என்ற இலக்கண நூலை அவரிடமே பாடம் கேட்டு அறிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கம்பர் : அம்மட்டோ?  கடள்கோளால் தமிழ்கூறு நல்லுலகம் இழந்த முதற்சங்க காலத்தில் இயற்றப்பெற்ற பெரும் பரிபாடல், முது நாரை, முது குருகு, களரியாவிரை முதலான நூல் களையும் இடைச்சங்க காலத்தில் தோன்றிய பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழ மாலை, மா புராணம், பூத புராணம், இசை நுணுக்கம் முதலான நூல்களையும் நமது தேவலோகத்து நூலகத்திலிருந்து பெற்று அவற்றை ஆய்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம் ஓம்காரநாதனே!
பாரதி : உண்மைதான் பார்வதி நேசா!  நான் நிலவுலகில் இருந்தபொழுது முதற்சங்க, இடைச்சங்க நூல்கள் கடற்கோளால் அழிந்துவிட்டதாக இறையனார் அகப்பொருள் உரை எழுதிய நக்கீரர் சொல்லியிருக்க நான் அந்தச் சொற்களில் நம்பிக்கை இல்லாது இருந்தேன்.  முதற்சங்கம் இருந்த ஆண்டுகள் 4449 என்றும் பாடிய புலவர் எண்ணிக்கை 4449 என்றும் இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் இருந்தன என்றும் அக்கால புலவர் எண்ணிக்கையும் 3700 என்றும் இருந்த  செய்திகளைப் படித்து எல்லாம் மிகையாகக் கூறப்பட்டுள்ளன என்று நினைத்திருந்தேன்.  அத்துடன் கடல்கோள் என்பதையும் அதீத கற்பனை என்று ஒதுக்கித் தள்ளினேன்.   ஆனால் இங்கு வந்தபிறகுதான் அத்தனையும் உண்மை என்பதையும் புலவர்கள் பொய் உரைக்க மாட்டார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன்.
திருமால் : கடல்கோள் என்ற ஒன்றை மானிடர்  மறந்து விட்டார்கள் என்பதால் அதை மீண்டும் அவர்களுக்கு நினைவுபடுத்த என் படுக்கையாக முகங்கோணாது இருக்கின்ற ஆதிசேடன்  சற்றே புரண்டு படுத்தான். அவ்வாறு அவன் புரண்டதால் ஏற்பட்ட சிறிய சலனத்தை மானிடர் தாங்க முடியாமல் எவ்வளவு துன்புற்றனர் பார்த்தீரா? இப்பொழுதுசுனாமிஎன்றாலே அவர்களுக்குச் சிம்மசொப்பனம் ஆகிவிட்டது.
பிரம்மா : வரவர திருமாலுக்குக் காத்தல் தொழில் அலுத்துவிட்டது என்று நினைக்கிறேன்.  அதனால்தான் அவர் அழித்தல் தொழிலில் ஈடுபாடு காட்டுகிறார். 
திருமால்  :  ஆமாம் பிரம்மா, எனது சக்கரப் படையும் குருஷேத்திர யுத்தத்திற்குப் பிறகு பயன்படுத்தப் பெறாமல்துருஏறிக்கிடக்கிறது.  அதைப் பயன்படுத்த வாய்ப்பிருந்தால் சொல்லும்! 
சிவன்  : போதும், போதும், உங்கள் கேலிப்பேச்சு!  நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்துகொள்ள நல்ல நேரம் கண்டீர்கள்!  இங்கே குழுமியுள்ள அனைவரும் ஊர்வசி குழுவினரின் புதிதாக வடிவமைக்கப்பட்ட நாட்டிய நிகழ்ச்சியைக் காண ஆவலோடு இருக்கிறார்கள்.  அதனால் உங்கள் பரிகாசங்களைப் பிறகு வைத்துக்கொள்வோம்.
                (ஊர்வசியை நோக்கி)
                என்ன ஊர்வசி!  நாட்டியத்திற்கு நீயும் உன் தோழிகளும் தயாரா? ஆரம்பியுங்கள் உங்கள் நடனத்தை!
ஊர்வசி  :  அனைவரும் தயாராக இருக்கிறோம்.  இதோ நாட்டியம் ஆரம்பமாகிறது திரிலோக மூர்த்தியே! 
(முழவு, உடுக்கை, இடக்கை, கொம்பு, எக்காளம், கின்னரம், கடிப்பு, திமிலை, குடப்பறை, நாகசுரம், துருத்தி, புஜங்கம், சீறி யாழ், பேரி யாழ், சகோட யாழ், டமாரம், முக வீணை, நரகெஜம், கந்தர்வம், தவளச்சங்கு, பூரி, நபுரி, துத்தாரி, திருச்சின்னம், தம்புரு, சித்தார், கினாரம், சாரங்கி, மத்தளம், பேரிகை, புல்லாங்குழல், தண்ணுமை, மல்லரி, சல்லரி என அனைத்து வாத்தியங்களும் ஆரவாரத்தோடு ஒருசேர ஒலிக்கின்றன. கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. சுமார் முந்நூறு நங்கையரும் முந்நூறு நம்பியரும் குறுக்கும் நெடுக்குமாக ஓடி ஓடிக் கை கால்களை அசைத்துக்கொண்டு பம்பரமாக ஆடுகிறார்கள்)
                                                ஓஹோஹோ ஓஹோஹோ!
                                                                                                ஓய்யா ஒய்யா ஒய்யா. . .!
                ஹேய் ஓய்யா ஒய்யா ஒய்யா  ஒய்ய்ய்யயயா
                வாயா வாயா வாயா  பாயா வாயா வா
                                வரமாட்டேன் வரமாட்டேன் வரமாட்டேன்
                                தாய்யா!! மாய்யா!! தாய்யா!! தா தா தா
                                தரமாட்டேன் தரமாட்டேன் தர்ர்ர்ர மாட்டேன்
                                அட குப்பதொட்டி அட குண்டாஞ்சட்டி
                                அட வெல்லப்பாகு அட வெத்தல பொட்டி
                                அட சிக்கன்குன்யா! அட சிலுக்கச் சட்ட!
                                அட பெட்டிப்பாம்பு! அட பேட்ட ரவ்வ்வுடி!
                                                                                ஒஹோஹோ ஓஹோஹோ!
                                                                                                                                ஓய்யா ஒய்யா ஒய்யா. . . !
சிவன் : (உரத்த குரலில் - இடி இடிப்பதுபோல்) நிறுத்துங்கள்! 
                (சிவனின் அதிரடியான அதட்டலில் ஒட்டு மொத்த தேவலோகமே ஸ்தம்பித்து ஒரு கணம் நிற்கிறது)
                                என்ன இது கூத்து?
ஊர்வசி : கூத்து இல்லை. . . மகாதேவா, குத்து!
சிவன் : என்ன உளறுகிறாய்?
ஊர்வசி : பூவுலகில் இப்பொழுது இப்படிப்பட்ட குத்துப் பாடல்களை மக்கள் அனைவரும் விரும்பிக் கேட்கிறார்கள் மகாதேவா!
சிவன் : என்ன! குத்துப் பாடல்களா?  தொல்காப்பியக் காலந்தொட்டு தமிழகத்தில் கூத்துகளைத்தானே மக்கள் பெரிதும் விரும்பி வருகிறார்கள்!  அவற்றில் ஒரு கதை இருக்கும்; பாடலில் பண் இருக்கும்; சொற்களில் பொருள் இருக்கும்; தேனினும் இனிய இசை இருக்கும்;  அதில் புலவர் சொல்ல வந்த இலட்சியம் தோய்ந்த கருத்திருக்கும்.
ஊர்வசி : அத்தகைய பாடல்கள் இப்பொழுது வழக்கொழிந்து வருகின்றன மகாதேவா.  இளைய தலைமுறையினர் குத்துப் பாடல்களில் தாம் குதூகலித்துத் திரிகின்றனர்.
சிவன் : அதிசயமாக இருக்கிறதே இன்றைய மக்களின் இரசனையை நினைத்தால்! நீ பாடிய பாடல் ஒன்றுமே புரியவில்லை. அர்த்தம் இல்லாத வார்த்தைகள்! அனர்த்தமான அசைவுகள்! ஆர்ப்பரிக்கும் இசை! அப்படியும் இப்படியும் உடல் குலுங்க ஆடுவதும் ஒரு கலையா? கலையின் பெயரால் கொலை அன்றோ நடக்கிறது?  அங்கே மக்கள் கலையைக் கெடுப்பது போதாதென்று நீ வேறு இங்கு அதனைப் பரப்ப வந்துவிட்டாயா?
ஊர்வசி : இல்லை மகாதேவா, உங்கள் அனைவருக்கும் இந்தப் புதிய ஆடல் வகை பிடிக்கும் என்று எண்ணினேன். 
சிவன் : காதைப் கிழிப்பதுபோல் இசைக் கருவிகளின் காட்டுக் கூச்சல்! நூற்றுக் கணக்கானோரின் குறுக்குமறுக்கான பாய்ச்சல்! கையும் காலும் இழுத்துக்கொண்டதுபோல் ஒரு ஆடல்! முகத்திலோ காணச் சகியாத அஷ்டகோணல்! நீங்கள் பாடியதும் ஆடியதும் ஒன்றுமே புரியவில்லை, அப்புறம்பிடிக்கிறதாஎன்ற கேள்வி எங்கே எழுகிறது?
பாரதி : உமையொரு பாகா!      செல்வி ஊர்வசி அவர்கள் இன்னும் பாடலை ஆரம்பிக்கவில்லை என்று நான் கருதுகிறேன்.
ஊர்வசி : பாடலே இவ்வளவுதான் கவிஞரே! இதையே இன்னும் நான்கைந்து முறை திரும்பப் பாட வேண்டும்.  உடல் அசைவுகளை மட்டும் சற்றே மாற்றிக் கொண்டால் போதும்.
பாரதி : என்ன! விநோதமாக இருக்கிறதே! அகராதியிலிருந்து ஏதோ பத்துப் பதினைந்து சொற்க¬ளை அடுக்கிக் கூறியதைப் போன்று இருந்தது.  அதுவும், அவை தமிழ்ச் சொற்கள் போன்றும் காணப் பெறவில்லையே!
அரம்பை : இதையே நாங்கள் பூவுலகில் சிறந்த கவிஞர் ஒருவரிடம் மிகுந்த பிரயாசைப்பட்டுப் புதிதாக இயற்றித் தருமாறு கேட்டு வாங்கி வந்தோம் பிரபோ!
பாரதி : இது ஒரு பாடல்! இதற்குப் பிரயாசை வேறு பட்டீர்களாக்கும்?  அகராதியிலிருந்து ஒரு நூறு சொற்களைத் துண்டுச் சீட்டில் எழுதிச் சுருட்டிப்போட்டுக் குலுக்கி அதிலிருந்து எடுக்கும் இருபது சொற்களை ஒன்றாய்ச் சேர்த்தால் நீங்கள் சொன்னபாடல்தயாராகிவிடுமே!
கம்பர் : பொருள் நிறைந்த சொற்கள் இல்லாவிடில்பாவத்தை எப்படிக் காட்டமுடியும்?
பாரதி : முத்துமுத்தான கருத்துகளோடு சித்தம்     தெளிவிக்கும் தமிழ்ப் பாடல்கள் பலவற்றை நாங்கள் புவியில் பாடி மகிழ்ந்த நாட்களை மறக்க முடியுமா?  அதற்கு ஆடல்கலையில் வல்லவர்கள் அபிநயம் பிடித்து உயிரூட்டியதை நினைத்தால் இன்றும் உள்ளம் பூரிக்கிறது!
திருமால் : உண்மைதான் பாரதி! நீ பாடியதீராத விளையாட்டுப் பிள்ளை, கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லைஎன்ற பாடலை ஒருநாள் திலோத்தமை அபிநயம் பிடித்து ஆடிக்காட்டியபோது, அன்று கோகுலத்தில் குழந்தையாகக் குறும்புசெய்த காட்சிகளை என்னால் உண்மையாக உணர முடிந்தது.  குழந்தைப் பருவக் குறும்பினை எவ்வளவு அற்புதமாகப் படம் பிடித்திருந்தாய்! கவிஞர்கள் தங்கள் கற்பனை ஆற்றலால் தாம் காணாதவற்றையும் படைத்துக் காட்டும் ஆற்றல் பெற்றிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
திலோத்தமை : உங்கள் பாடல்கள் பொருள் நிறைந்தவையாக இருந்ததால் எங்களால் அதற்குகந்த முத்திரைகளை அளித்து உயிரூட்ட முடிந்தது.  ஆனால் இன்றோ வெறும் வெற்றுச் சொற்களாக அமைந்திருப்பதால் கையை, காலை இப்படியும் அப்படியும் பொருளின்றி அசைத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது கவிஞர் பெருமக்களே!
பாரதி : ஆமாமாம்.  அதனால்தான்பாவம்வெறும் பாவமாகிவிட்டது.  ஐயோ பாவம்!  வள்ளுவரே! நீர் ஒன்றும் பேசாது அமைதி காக்கின்றீர்கள்?
வள்ளுவர் : நான் எனது கருத்தைச் சுருக்கமாக ஒரு குறள் வெண்பாவில் உரைக்கின்றேன், கேளுங்கள் :
                கண்குத்தி மாந்தர் மனங்குத்திப் பண்பாட்டின்
                புண்குத்திப் போடுவதாம் குத்து.
                குத்து குறித்த என்னுடைய புதிய குறள் எப்படி?
சிவன் : ஆஹா! அருமை! அருமை! இன்றைய சூழலை அப்படியே சுருக்கமாகக் கூறிவிட்டீர்கள்.
 பாரதி : சிவசக்தி மணாளா! இனிமேல் இவர்கள் இசைப்பதற்கும் நடிப்பதற்கும் கருத்துள்ள எளிய பாடல்களை நான் எழுதித் தருகிறேன்.  நமக்குத் தொழில் கவிதைஎன்று நான் அன்றே சொல்லியிருக்கிறேன்.
சிவன் : ஆமாம் ஆமாம் அப்படியே செய்யும். பாரதியே!  உமது பேச்சில் நான் ஒன்றைக் கவனித்தேன்.  எப்பொழுதும் என்னை நீர் அழைக்கும்பொழுது என் தர்மபத்தினியை முன்நிறுத்தியே பார்வதிப் பிரியா, உமையொரு பாகா, சிவசக்தி மணாளா என்றுதான் அழைக்கின்றீர்?
பாரதி : ஆம், துர்க்கை துணைவா, பெண்தான் சக்தியின் சொரூபம்.  நிலவுலகிலும் சரி, இங்கும் சரி, பெண் இன்றேல் வாழ்க்கை பெரும் சூனியம்தான்.  அதனால்தான் நான்பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடாஎன்றும்காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதற்பெண்கள் கடைக்கண் பணியிலேஎன்றும் உணர்ச்சிபொங்கப் பாடியிருக்கிறேன்.
உமை : பாவையர் சிறப்பைப் பாவில் வடித்த பாரதியே! உனக்கு முன்னால் எத்தனையோ புலவர்கள் எம்மைத் துதித்திருந்தாலும் பெண்களின் சிறப்பை - வீரத்தை - அறிவுத் திறத்தை இன்னும் அவர்தம் பன்முகப் பாங்கை உலகுக்கு உணர்த்தியவன் நீதான்.  அதனால் பெண்கள் சார்பில் நான் உன்னுடைய பாத்திறத்தை - பாவியத்தை மெச்சுகின்றேன்.
பாரதி : நன்றி தாயே!
உமை : நாதா, நான் ஒன்றைச் சொல்லட்டுமா?
சிவன் : நிச்சயமாக! உன் கருத்தை நான் செவிமடுக்காவிட்டால் என்னைப் பெண்ணிய வாதத்தினர் கூறுபோட்டுவிட மாட்டார்களா?  அது மட்டுமில்லாமல் உன் மேல் சொல்லொணா மரியாதையும் பெண்களிடத்து அளப்பறிய வாஞ்சையும் கொண்ட பாரதி வேறு இங்கிருக்கிறார்.  என்ன கம்பரே! நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
கம்பர் : பிரபோ, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தவர்களில் முதன்மையானவர் தாங்கள் அன்றோ? மானிடர்கூட பல போராட்டங் களுக்குப் பிறகும் 33 சதவீதம் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.  ஆனால் நீங்களோ எப்பொழுதோ உமை அம்மைக்கு உங்கள் உடலில் 50 சதவீதத்தைக்  கொடுத்துவிட்டீர்கள். பெண்மைச் சிறப்பை இதைத்தவிர எப்படிக் காட்ட முடியும்?
திருமால் : நன்றாகச் சொன்னீர். ஆனால் இதே போன்று அனைவரும் செய்ய ஆரம்பித்தால் அது கதைக்கு உதவாது; அதையும் நீர் அறிந்து கொள்ளும். பிறகு எங்கள் மனைவியரும் இப்படி இடம் கேட்டால் நாங்கள் என்னாவது?
பிரம்மா : ஒரு மனைவி இருந்தால் இடம் கொடுப்பதில் ஒன்றும் சிரமமில்லை.  ஆனால் திருமாலுக்கோ?
சிவன் : . . . ! நீங்கள் இருவரும் திரும்பவும் உமது பரிகாசத்தை ஆரம்பித்து விட்டீர்களாக்கும்!  முதலில் அனைவருக்கும் தாயாக விளங்கும் நம் ஆதிபராசக்தியாம் உமை கூறவந்தது யாதெனக் கேட்போம்.
உமை : ஆச்சரியமாய் இருக்கிறதே! இன்றும் அன்றுபோல். . .
சிவன் : தேவியே! பெண்களுக்குச் சமஉரிமை அளிக்கவேண்டியது ஆடவர் கடமை என்பதையும் பெண்களின் அறிவுத் திறம் வெளிப்படும்போது ஆடவர் இடையூறு செய்யலாகாது என்பதையும் நான் நன்றாக உணர்ந்துகொண்டேன்.
பாரதி :             சட்டங்கள் செய்வதும் பட்டங்கள் ஆள்வதும்
                                பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
                                எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
                                இளைப்பில்லை காண் என்று கும்மியடி
                என்று நான் அன்று கனவுகண்டு பாடியது இன்று மெய்ப்பட்டுவிட்டது அம்மையே!
உமை : உண்மைதான் பெண்விடுதலைக் கவிஞரே! ஆனால் இன்னும் பெண்களின் அடிமை நிலை முழுமையாக மாறவில்லை. முதலில் பெண்களிடையே விரும்பியோ விரும்பாமலோ தொன்றுதொட்டு திணிக்கப் பெற்றுள்ள அடிமை மனப்பான்மையை மாற்றி அவர்களைச் சுயவிடுதலை அடையச் செய்ய வேண்டும்.  சமூகத்தில் அவள் மதிப்பு உயரவேண்டுமாயின் தாயாக அவள் ஆற்றவேண்டிய கடமை பெரிது. அவள் குழந்தை வளர்ப்பின்போது ஆண் குழந்தையையும் பெண்குழந்தையையும் சமமாக வளர்த்தெடுக்க வேண்டும்.  இன்னும் கேட்டால் பெண்களின் சிறப்பை ஆடவர் அறிந்து கொள்ளுமாறு அவர்கள் மனத்தில் பதியவைக்க வேண்டும். இல்லறத்தையும் அலுவலகப் பணியையும் சீராகச் செய்வதில் ஆணும் பெண்ணும் அதாவது, கணவனும் மனைவியும் சமமான ஈடுபாடு காட்ட வேண்டும்.  பெண்ணியவாதம் என்பது தம் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதல்ல என்பதையும் பெண்கள் உணரவேண்டும். 
சிவன் : தேவி, சரியாகச் சொன்னாய். நான் இப்பொழுது சொல்லப்போவதை அனைவரும் கவனமாகக் கேளுங்கள். இனிமேல் தேவ லோகத்தின் எல்லாப் பணிகளிலும் ஆலோசனைக் குழுக்களிலும் ஆண், பெண் ஆகிய இரு தரப்பினருக்கும் சமவாய்ப்பு அளிக்கப் பெறும்.  அவரவர் கருத்துக்களை அனைவரும் தாராளமாக அவையின் முன் வைக்கலாம்.  ஆனால் பெண்கள் தம்மிடம் இயல்பாக இருக்கும் கூச்ச சுபாவத்தைக் கிழித்தெறிந்துவிட்டு வெளியேவரவேண்டியது அவர்தம் பொறுப்பு.  இதற்கு அவர்களது துணைவர்தாம் உதவிபுரிய வேண்டும்.
உமை,சரஸ்வதி, இலக்குமி, இந்திராணி அனைவரும் (ஒருமித்த குரலில்) :
                                நன்றி! நன்றி! நன்றி மகேஸ்வரா!
பாரதி : பெண் பேதமை ஒழிக!
                                                                பெண் அறிவு ஓங்குக!
                                                                பெண் விடுதலை வாழ்க!
சிவன் : நல்லது! நமது விருந்தினர்களுக்காக இன்று விசேஷ விருந்து ஏற்பாடாயிருக்கிறது.  இப்பொழுது அதை நுகரச் செல்வோம்.  செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்என்ற நம் வள்ளுவப்  பெருந்தகையின் குறள் இப்போது மிகவும் பொருத்தமானது.
                புலவர்களே!  வாருங்கள் உணவருந்தச் செல்வோம்!

(அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு உணவருந்தச் செல்கிறார்கள்)
***
(தொடரும்)

No comments:

Post a Comment