Friday 13 September 2019

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 24


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 24
            சுந்தரிக்கு இப்போதெல்லாம் அடிக்கடி முடியாமல் போனது. சந்திரன் வீட்டில் இருக்கும் தருணங்களில் '', '', 'அம்மா!', 'அப்பா!' என்று அவ்வப்போது முனகிக் கொண்டிருந்தாள். சந்திரனின் கவனம் முழுக்கத் தன்மீதே வீழ்ந்துகிடக்க அவள் செய்த முயற்சிகள் நன்றாகவே வேலைசெய்தன.
            சந்திரன் தங்கள் குழந்தை முக்கியம் என்று தாட்சாயணியிடம் வற்புறுத்திக்கொண்டே வந்தான். அதற்காகவே சுந்தரியின் உடல் நலத்தைப் பேண வேண்டும் என்று வற்புறுத்தினான்.
            இப்போதெல்லாம் சுந்தரி அதிகமாக வீட்டு வேலைகளைச் செய்வதில்லை. மேல் வேலைகளை மட்டுமே எப்போதேனும் செய்ய முன்வந்தாள்.
            சுந்தரியைத் தன் எதிரில் பார்க்கப் பார்க்கத் தாட்சாயணிக்கு எரிச்சல் மண்டியது. அதனால் அவளே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள்.
            வேறொரு வேலைக்காரியை அமர்த்திக்கொள்ளலாம் என்றால் அவசரத்துக்கு யார் கிடைப்பார்கள்?
            மேலும் வேலைக்காரி என்றாலே ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது தாட்சாயணிக்கு.
            பாத்திரம் துலக்குவது, வீடு கூட்டுவது, துடைப்பது என்று முழுநேர வேலைக்காரியானாள் தாட்சாயணி.
            சொந்த நாட்டின் அடிமைகள் என்பதுபோல சொந்தவீட்டின் வேலைக்காரி!
            இரவில் சந்திரன் தாட்சாயணியுடன் படுக்கும்போது தாட்சாயணி அவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
            அதனைச் சாக்காகக் கொண்டு சந்திரனும் இடையிடையே நைசாக நழுவிச்சென்று சுந்தரிக்குக் காவலானான்.
            இரவு நேரங்களிலும் சுந்தரி அவ்வப்போது 'அய்யோ', 'அம்மா', 'ம்' என்று விநோத ஒலிகளை எழுப்பிச் சந்திரனைத் தன் கட்டுக்குள் கொணர்ந்தாள்.
சுந்தரியை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்றான் சந்திரன்.
                'தாட்சு . . . ! நான் அவளத் தனியா கூட்டிட்டுப் போனா யாராவது ஏதாச்சும் கேப்பாங்க. நீயும் கூட வாம்மா, யாராவது கேட்டா உன் தங்கச்சின்னு சொல்லிக்கலாம்!' தாட்சாயணி கேட்காமலேயே புது உறவு முறையைத் தோற்றுவித்தான் சந்திரன்.
            மருத்துவரிடம் செல்லும்போது பின்சீட்டில் அமர்ந்து கொண்டாள் சுந்தரி. சந்திரனுக்குப் பக்கத்தில் முன்சீட்டில் அமர்ந்தாள் தாட்சாயணி.
            சந்திரனும் தாட்சாயணியும் காரில் செல்லும்போது அவனுடைய நண்பர்களும் உடன் வருவதாக இருந்தால் அவர்கள் யாரும் தாட்சாயணியைப் பின்சீட்டுக்குத் தள்ளியதில்லை. தாட்சாயணியை வற்புறுத்தி முன்சீட்டில் அமருமாறு செய்து அவர்கள் பின்சீட்டில் அமர்ந்து கொள்வார்கள். அப்படி அந்த இருக்கை அவள் பயணம் செய்யும் தருணங்களில் அவளுக்காக மட்டுமே இருந்தது.
            சுந்தரிக்கு டானிக் மாத்திரைகளை டாக்டர் எழுதிக்கொடுத்தார். அவ்வப்போது மருத்துவ செக்கப் தவறாது செய்து கொள்ள வேண்டும் என்றார். செக்கப் முடித்ததும் சுந்தரி மிகுந்த களைப்படைந்தவளைப் போல் தன் முகத்தை வைத்துக்கொண்டாள். சற்றே தாட்சாயணியைப் பின்தள்ளிச் சந்திரனைத் தோளோடு தோள் உரசிக்கொண்டு நடந்தாள். டாக்டர் தந்த பிரிஸ்கிரிப்ஷனைத் தாட்சாயணியிடம் கொடுத்து மருந்து வாங்கிவருமாறு சொல்லிவிட்டுச் சுந்தரியை அழைத்துச் சென்றான் சந்திரன்.
            சுந்தரியை மெதுவாக அழைத்துச்சென்று காரின் முன் கதவைத் திறந்து சுந்தரியை அமரவைத்தான் சந்திரன்.
            மருந்து வாங்கச் சென்ற தாட்சாயணி திரும்பிவரும்போது சுந்தரி முன் சீட்டில் அமர்ந்திருப்பதைக் கண்டாள். கோபம் சற்றே தலைக்கேற ஒரு நிமிடம் மௌனித்தாள் தாட்சாயணி.
            அவள் உணர்வைச் சந்திரன் புரிந்துகொண்டு சுதாரித்தான்.
                'பாவம் சுந்தரிக்கு ரொம்ப மயக்கமா இருக்காம். பின்னால ஏசி கம்மியாத்தான் வரும்! அதனாலதான் முன்னால ஒக்காரச் சொன்னேன். நீ பின்னாடி ஒக்காந்துக்கோ!' என்று சகஜ பாவனையில் கூறிப் பின்சீட் கதவைத் திறந்தான். நடுரோட்டில் தர்க்கம் செய்யவேண்டாம் என்று காரில் ஏறி அமர்ந்தாள் தாட்சாயணி.
            இரண்டாவதாக ஒருத்தி வந்துவிட்டால் முதல் மனைவிதான் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமல்லவா? இன்றுவரை வெளிவந்துள்ள கதைகளும் அதனைத்தானே வற்புறுத்துகின்றன. நிஜ வாழ்க்கையிலும் அதுதான் நடைமுறை என்பதை எத்தனையோ பெண்களின் வாழ்க்கையும் உறுதிப்படுத்துகின்றனவே. அப்படி முதல்மனைவி விட்டுக் கொடுக்காவிட்டால் அதனையே ஒரு காரணமாகக் காட்டி அவளை அப்புறப்படுத்திவிடுவது கணவனுக்கு எளிதான காரியமல்லவா? 'இவள் அடங்காப் பிடாரி, அதனால்தான் நான் இன்னொருத்தியைத் தேட வேண்டியதாகிவிட்டது' என்று கூசாமல் சொல்லித் திரிவான். தன் செயலை நியாயப் படுத்துவான்.
            வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு சுந்தரியை உள்ளே அழைத்துச் சென்றான் சந்திரன். இரண்டு நிமிடம் கழித்துக் காரில் வைத்த மருந்துகளை எடுத்துவரலாம் என்று எட்டிப் பார்த்தவனுக்குத் தன் வாசலில் நின்றிருந்த கார் காணவில்லை என்பது தெரிந்தது. என்னாயிற்று என்று அவசரமாக வெளியே சென்றான். தாட்சாயணியும் தொடர்ந்தாள்.
            காரின் கிளட்ச் தானாகவே ரிலீஸ் ஆகி பின்னால் சறுக்கி தெருவின் எதிர்ப் பக்கத்தில் அமைதியாக நின்றுகொண்டிருந்தது.
            ஆச்சரியப்பட்டான் சந்திரன். யாருக்கும் எதுவும் ஆகாமல் இந்த விந்தை எப்படி நடந்தது என்றான்.
                'கண்டவங்க உக்காந்தா இப்படித்தான் நடக்கும்' என்று பொடிவைத்தாள் தாட்சாயணி. உயிரற்ற பொருளான காருக்காவது தன்னிடம் ஒரு பற்றுதல் இருக்கிறதே என்று நினைத்தாள்.
                'அவங்க நல்லவங்களா இருந்ததாலதான் யாருக்கும் எதுவும் ஆகாம இருந்துருக்கு!' - பதிலடி கொடுத்தான் சந்திரன்.
                'ம், அதெல்லாம் என் தாலி பாக்கியத்தினால!' என்று எதிர் அடி கொடுத்தாள் தாட்சாயணி.
(தொடரும்)

No comments:

Post a Comment