Tuesday 24 September 2019

அண்ணாவின் கபோதிபுரக்காதலில் பெண்

அண்ணாவின் கபோதிபுரக்காதலில் பெண்

            சமுதாயத்தில் பலதார மணங்கள் பரவலாகக் காணப்பட்ட காலகட்டத்தில் - பல மடங்கு வயது மூத்த ஆடவன் இளம்பெண்ணை மணமுடித்த காலகட்டத்தில் - பெண்ணிற்கு எவ்வித உரிமைகளும் வழங்கப்படாமல் மறுக்கப்பட்ட காலகட்டத்தில் - பெண்ணின் உணர்வுகளுக்கு எந்தவித அங்கீகாரமும் கொடுக்கத் தயங்கிய காலகட்டத்தில் பெண்ணிற்காகக் குரல்கொடுக்கத் தம் படைப்புகளைப் பயன்படுத்திக் கொண்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவ்வகையில் 1939இல் குடியரசு இதழில் வெளிவந்த கபோதிபுரக் காதல் என்னும் தம் கதையில் ஓர் இளம்பெண்ணின் வாழ்க்கை ஆணாதிக்க அடக்குமுறைகளால் எவ்வாறு சின்னாபின்னமடைகிறது என்பதை வெளிப்படுத்தி, சமுதாயத்தில் வரவேண்டிய மாற்றத்தைப் புரியவைத்தவர் அண்ணா.

கதைச்சுருக்கம்
                கடன்தொல்லையிலிருந்து தப்பிக்கத் தன் ஒரே மகள் சாரதாவை அவளைவிட மூன்று மடங்கு வயதுடைய கிழவனாகிய மாரியப்ப பிள்ளைக்குத் திருமணம் செய்விப்பதாக வாக்களிக்கிறான் வீராசாமிப் பிள்ளை. இதற்கிடையில் வீராசாமிப் பிள்ளையின் மகள் வயிற்றுப் பேரனாகிய பரந்தாமன் வண்டிக்காரனாக அறிமுகமாகி சாரதாவின் மனத்தில் காதலுணர்வைத் தூண்டுகிறான். தன் தாத்தாவின் மூன்றாம் திருமணத்திற்குச் செல்லும் பரந்தாமன் மணமகளாகத் தான் காதலிக்க நினைத்த சாரதா அமர்ந்திருப்பதைப் பார்த்துத் துன்புறுகிறான். திருமணம் முடிந்தவுடனே சாரதா மனமுடைந்து உடல்நலம் குன்றுகிறாள். வைத்தியரிடம் மருந்துவாங்கிவரும் பரந்தாமன் சாரதாவைக் கண்டவுடன் உணர்ச்சிவசப்பட்டு முத்தமிடுகிறான். அதனைக் காணும் அவன் தாத்தா அவனை அடித்துவிரட்டுகிறார். பாழ்மண்டபத்தில் படுத்துறங்கும் பரந்தாமனுக்குப் பக்கத்தில் திருடர்கள் தாம் திருடிவந்த பொருட்களை வைத்துத் தப்பிக்க காவல்காரரிடமிருந்து தப்பித்து ஓடும் பரந்தாமன் சாமியார் ஒருவனிடம் தஞ்சம் புகுந்து காவிக்குள் புகுகிறான். மாரியப்ப பிள்ளையின் கணக்குப்பிள்ளையாகிய கருப்பையா சமாதானம் செய்துவைக்க மாரியப்ப பிள்ளை சாரதாவை மன்னித்து உடன் வாழ்கிறான். ஆனால் மாரியப்ப பிள்ளைக்கு அபின் கொடுத்துத் தூக்கத்தில் ஆழ்த்திவிட்டு சாரதாவை அச்சுறுத்தி அனுபவிக்கிறான் கருப்பையா. சாரதா கர்ப்பிணியாகிறாள். ஊரிலிருந்து மாரியப்ப பிள்ளையின் உறவென்று சொல்லிக்கொண்டுவரும் வஞ்சக அண்ணன் தங்கையாகிய சிங்காரவேலுவும் கோகிலமும் கருப்பையா - சாரதாவின் தொடர்பைக் கண்டுபிடிக்கின்றனர். சூழ்ச்சிசெய்து இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சியைப் புகைப்படம் எடுத்து அவர்களை மிரட்டிப் பணம் பறிக்கின்றனர். மாதாமாதம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்திற்காகப் பொய்க்கணக்கு எழுதுகிறான் கருப்பையா. தன் நகைகளையெல்லாம் விற்கக் கொடுக்கிறாள் சாரதா. இதனால் கருப்பையாவிற்கும் சாரதாவிற்கும் இடையே அடிக்கடி சச்சரவு எழுகிறது. வருட முடிவில் பொய்க்கணக்கை மாரியப்ப பிள்ளை கண்டுபிடித்துவிடக் கூடும் என்று அஞ்சும் கருப்பையா தற்கொலை செய்து கொள்கிறான். சாமியாராக உருமாறிய பரந்தாமன் தன் குருவான கருணானந்த சாமியார் தீயவன் என்பதை உணர்கிறான். அவன் உண்மையில் துறவி இல்லை என்பதையும் அவனுக்கு ஏற்கெனவே கோகிலம் என்ற மனைவி இருப்பதையும் அவளுடன் மீண்டும் அவன் இன்பம் நுகர்வதையும் அறிகிறான். மேலும் கோகிலமும் அவளின் அண்ணன் சிங்காரவேலனும் தன் முன்னாள் காதலியாகிய சாரதாவை அச்சுறுத்திக் கொண்டிருப்பதையும் அறிந்துகொள்கிறான். அவர்கள் எடுத்த புகைப்படத்தைத் தராவிடில் கோகிலா - சாமியாரின் உறவை அம்பலப் படுத்திவிடுவதாக பயமுறுத்துகிறான். கோகிலா தன் அண்ணனிடமிருந்து அப் புகைப்படத்தையும் பிற ஆதாரங்களையும் களவாடிக்கொணர்ந்து தருகிறாள். அவற்றை எடுத்துக்கொண்டு சாரதாவின் தாய்வீட்டிற்குச் செல்கிறான் பரந்தாமன். அம்மையால் தாக்கப்பட்ட பரந்தாமன் சாரதாவைச் சந்தித்து ஆதாரங்களை ஒப்படைக்க விரும்புகிறான். தன் கணவனைத் தூக்கத்தில் ஆழ்த்த அபின் கலந்த பாலை அளித்துவிட்டுப் பரந்தாமனைச் சந்திக்கச் செல்கிறாள் சாரதா. அபின் அளவுக்கு அதிகமானதால் சாரதாவின் கணவன் இறந்துவிடுகிறான். அம்மை நோயின் தீவிரத்தால் பரந்தாமன் கண்பார்வை பறிபோகிறது. அந்நிலையிலும் பரந்தாமனை உள்ளன்போடு நேசிக்கிறாள் சாரதா. பரந்தாமன் அவளுடைய சமுதாய அச்சத்தைப் போக்கி மறுமணம் செய்துகொள்கிறான். அவன் கண்பார்வையற்ற கபோதியாக இருந்தாலும் அவர்களிடையிலான காதல் அழியா இன்பத்தை அளிக்கிறது என்று கதையை முடிக்கிறார் பேரறிஞர் அண்ணா.

தந்தையும் ஓர் ஆடவனே
                மகளிடம் பாசம் காட்டுவதில் தந்தையின் பங்கு அளப்பரிது என்றாலும் திருமண விஷயங்களில் பெண்மன உணர்வை அறியாதவர்களாகவும் மதிப்பளிக்காதவர் களாகவுமே தந்தையும் நடந்துகொள்வது நடப்பியலாக உள்ளது.
            வாழவகை தெரியாமல் தன் சொத்தையெல்லாம் இழந்து கடன்தொல்லையில் சிக்கிய வீராசாமிப் பிள்ளை தன் கடனை அடைத்து நிம்மதியாக வாழ தன் மகளை நூறுவேலி நிலமும் வீடும் செல்வமும் ஆடுமாடுகளும் வேலைக்கு ஆட்களும் உள்ள கிழவனுக்கு மூன்றாம் தாரமாகக் கொடுத்துவிடத் துணிந்தமை பெண்ணின் உணர்வுகளை எவ்விதத்திலும் அறிவதற்கோ அல்லது அறிந்தாலும் அதற்குரிய மதிப்பளிக்கவோ முன்வராத ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகிறது.

ஆணாதிக்கச் சமுதாயம்
            அறுபது வயது நிறைந்து இருபது வயதில் ஒரு பேரனையும் உடைய மாரியப்ப பிள்ளைக்கு பதினாறு வயதுகூட நிரம்பாத பெண்ணாகிய சாரதாவை மணமுடித்துக்கொடுக்க ஏற்பாடாகியது. சமுதாயத்தினர் இத்தகைய நிகழ்வுகளைக் கேலிபேசிச் சிரித்துக் கொண்டாலும் அவற்றைத் தடுக்கவேண்டும் என்று உள்ளார்ந்த விருப்பத்துடன் செயல்பட முனைவதில்லை. இது சமுதாயத்தின் ஆணாதிக்கப் போக்கின் வெளிப்பா டன்றி வேறில்லை என்பதனை,
இப்படிப்பட்ட பொருத்தமில்லாத ஜோடிகளைச் சேர்ப்பதற்காக யார் என்ன செய்கிறார்கள்? ஊரார் கேலியாகப் பேசிக் கொள்வார்களேயொழிய இவ்விதமான வகையற்ற காரியம் நடக்கவொட்டாது தடுக்கவா போகிறார்கள்? கல்லென்றாலும் கணவன், புல்லென் றாலும் புருஷன்என்று பழமொழி இருக்க கல்லோ புல்லோ அல்லாத மாரியப்பபிள்ளைக்கு சரதாவை மணமுடித்துக் கொடுக்காது இருப்பார்களோ! (7)
என்னும் பகுதியில் அண்ணா புலப்படுத்தக் காணலாம்.

புதைக்கப்படும் பெண் உணர்வுகள்
            பெண்ணிற்கு நேரும் துன்பங்களை அவர்களால் வெளிப்படையாக சொல்லஇயலாமல் உள்ளம் மருகி உடல் உருக்குலைந்து போகும்போது அதற்குரிய காரணத்தை அறிய எவரும் முயல்வது கிடையாது. அப்படியே சிலருக்குப் புரிந்தாலும் சூழல் காரணமாகக் கண்டுங்காணாது விட்டுவிடுவதே நடைமுறையாக இருக்கிறது.
            தன் வாழ்க்கையை நினைத்து மருகி உடலாலும் உள்ளத்தாலும் தளர்ந்துபோகும் சாரதாவிற்குப் பிசாசு பிடித்துக்கொண்டது என்று அவளைப் பூசாரியுடம் அழைத்துச் செல்கிறார்கள். பூசாரி வீட்டிற்குச் செல்கையில் வண்டியோட்டிய இளைஞன் பரந்தாமனின் பார்வை சாரதாவிற்குப் புதுத்தெம்பினை அளிக்க, பூசாரியிடம் பிரசாதம் பெற்றதே அவள் நோயைத் தீர்த்ததாகக் கூறும் தந்தையின் அறியாமையைப் புலப்படுத்துகிறார் அண்ணா. தாய் வேதவல்லிக்கு உண்மை தெரிந்திருந்திருந்தும் சூழ்நிலைக் கைதியாக தன் மகளை அச் சிக்கலிலிருந்து விடுவிக்க எதுவும் செய்யாமல் தவிர்க்கிறாள்.
பெண்ணோ பதுமைபோல ஜிலுஜிலுன்னு இருக்கிறாள். பருவமோ ஜோரான பருவம். புருஷனாக வந்த ஆளோ ஒரு கிழம். இதைக் கண்ட பெண்ணுக்கு வருத்தம் இருக்காதா? என்றான் வைத்தியன். (17)
என்று திருமணத்திற்குப் பின்னும் சாரதாவிற்கு நேர்ந்த உடல்நலக்கேட்டிற்கு மனஉளைச்சலே காரணம் என்பதைப் புலப்படுத்துகிறார் அண்ணா.

பெண்ணடிமையும் வறுமையும்
            மாரியப்ப பிள்ளை ஓர் ஏழையாக இருந்தால், ‘கிழவனுக்கு எவ்வளவு கிறுக்கு பார்த்தீர்களா! காடு வாவா என்கிறது. வீடு போபோ என்கின்றது. தலையிலோ வெள்ளிக் கம்பி. கிழவன் சரியான சிறு குட்டி வேண்டுமென்று அலைகிறானே. காலம் கலிகாலமல்லவாஎன்று கேலி செய்வார்கள். மாரியப்ப பிள்ளையோ பணக்காரர். எனவே அந்த ராணி சாரதா சமூகத்தில் வளர்த்து விடப்பட்ட பழக்கத்துக்கு தனது அழகையும் இளமையும் பலிகொடுக்கப் போகிறாள். இவ்விதம் அழிந்த அழகுகள் எவ்வளவு! தேய்ந்த இளமை எத்தனை! (7)
என்று உரைத்திடும்போது பெண்ணடிமைத்தனத்திற்கும் அவர்தம் துன்பத்திற்கும் வறுமை ஒரு காரணியாவதை வெளிப்படுத்துகிறார் அண்ணா. பணம் படைத்தவர் செய்யும் அநீதிக்கு எதிராகக் குரல்கொடுக்க இயலாத நிலை பெண்களை அதிகமாகப் பாதிப்பதை அவர் குரலாகவே பதிவுசெய்கிறார் அண்ணா.

கடவுள்பெயரால் ஏமாற்று
                பெண்களின் துன்பத்திற்குக் கடவுளே காரணம் என்று விதியின்பேரில் பழியிட்டு அவர்களை மேலும் மேலும் துன்பத்தில் ஆழ்த்துவாரைக் கடவுளை உதாரணம் காட்டித் தெருட்டுகிறார் அண்ணா.
எல்லாம் ஆண்டவன் எழுதி வைத்தபடிதானே நடக்கும் என்றான் பரந்தாமன். ஆண்டவனை ஏனப்பா இந்த வேலைக்கு அழைக்கிறே. அவர் தன் வரைக்கும் சரியாகத்தான் செய்து வைத்துக்கொண்டார். பார்வதி - பரமசிவன் ஜோடிக்கு என்ன குறை! லட்சுமி - விஷ்ணு இந்த ஜோடிதான் என்ன இலேசானதா, சாமிகளெல்லாம் பலே ஆசாமிகளப்பா. அவர்கள் பேரைச் சொல்லிக் கொண்டு நாம்தான் இப்படி இருக்கிறோம் என்று வைத்தியன் சொன்னான். (18)
என்று வைத்தியன் கூற்றாக வெளிப்படுத்தும் அண்ணா கடவுளரைப் பொறுத்தவரையில் மக்கள் வெகு பொறுத்தமான ஜோடியைச் சேர்த்திருப்பதைக் கூறுகிறார்.

இயந்திரகதியில் பெண்
                பெண்கள் மரபுவழிப்பட்ட சித்தாந்தங்களில் வளர்க்கப்படும்போது சுயசிந்தனை அற்றவர்களாக ஆகிப்போகிறார்கள். தமக்கு எது நிகழ்ந்தாலும் அதனை எதிர்த்துக் கூறும் துணிவு அற்றவர்களாக இருக்கிறார்கள். எதையும் எதிர்க்காமல் ஆடவர் சொல்வதைக் கேட்டுப் பணிவாக நடந்துகொள்வதைச் சிறந்த பெண்மணியின் இலக்கணமாகச் சமுதாயம் நோக்குகிறது. அத்தகைய பெண்களைப் பாராட்டவும் செய்கிறது.
எவ்வளவு அடக்கம், எவ்வளவு பணிவு, நான் நின்றால் உட்காரமாட்டேனென்கிறாள். ஒரு குரல் கூப்பிட்டதும் ஓடோடி வருகிறாள். வீட்டுக்காரியமோ மிக மிக ஒழுங்காகச் செய்கிறாள்.  (28)
என்று தன் மனைவி சாராதாவின் நடவடிக்கைகளில் மகிழ்ச்சி கொள்கிறான் மாரியப்ப பிள்ளை.
புருஷனுக்கு அடங்கி நடப்பதுதான் மனைவியின் கடமை என்பது உணர்ந்து அவ்விதம் நடந்தாளே தவிர, புருஷனிடம் அவளுக்கு, அன்பு எழவில்லை. பயம் இருந்தது, மதிப்பு இருந்தது, கடமையில் கவலை இருந்தது, காதல் மட்டும் இல்லை.  (29)
என்று சாரதாவின் பற்றற்ற வாழ்க்கை முறையை அண்ணா மதிப்பீடு செய்கிறார். பெரும்பாலான பெண்களின் நிலை இத்தன்மையதாகவே அமைந்துள்ளதை,
பெண் மகா நல்லவள், உத்தமி, நாலு பேர் எதிரே வரமாட்டாள்; நாத்தி மாமி எதிரே சிரிக்கமாட்டாள்; சமையற் கட்டைவிட்டு வெளிவர மாட்டாள்; புருஷனைக் கண்டால், அடக்கம்; உள்ளே போய்விடுவாள்; கண்டபடி பேசிக் கொண்டிருக்க மாட்டாள் என்று பெண்ணின் பெருமை பற்றிப் பேசுவதுண்டு. அந்தப் பேதைகள் வாழ்க்கையில் ரசமற்ற சக்கைகளாக இருப்பதை உணருவதில்லை. வெறும் இயந்திரங்களாகக் குறிப்பிட்ட வேலைகளைக் குறித்தபடி செய்துமுடிக்கும்குடும்ப இயந்திரம்’ - அந்தப் பெண்கள். ஆனால் காதல் வாழ்க்கைக்கு அதுவல்ல மார்க்கம். (29)
என்று எடுத்துரைக்கும் அண்ணா, அத்தகைய பெண்கள் உண்மையில் உயிருள்ள மனிதர்களாக இயங்காமல் இயந்திரமாகத்தான் ஆகிப்போகிறார்கள் என்ற உண்மையை முன்வைக்கிறார்.
நமது குடும்பப் பெண்களிலே எவ்வளவோ பேர் தங்கள் மன விகாரத்தை மாற்ற முகத்தில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு வாழுகின்றனர். எத்தனைப் பெண்கள் வாழ்க்கையின் இன்பம் என்றால் சமையற் கட்டில் அதிகாரம் செலுத்துவதும் கட்டிலறையில் விளக் கேற்றுவதும் கலர் புடவை, கல்கத்தா வளையல், மங்களூர் குங்குமம், மயில் கழுத்து ஜாக்கெட் ஆகியவைகளைப் பற்றிப் புருஷனிடம் பேசுவதும் தொட்டிலாட்டுவதும்தான் என்று கருதிக்கொண்டு வாழுகின்றனர். ரசமில்லாத வாழ்க்கை பாவம்! (30)
என்று கூறுகையில் பெண்கள் காலப்போக்கில் இன்பம் என்பது என்ன என்பதையே அறியாமல் அறியாமையில் வீழ்ந்துகிடப்பதை எடுத்துரைக்கிறார் அண்ணா.
காதலற்று வேறு எதனாலேனும் பொருள் காரணமாகவோ, வேறு போக்கு இல்லை என்ற காரணத்தாலோ, கட்டுப்பட்ட காரிகை தன்னுடன் பிணைக்கப்பட்டுள்ளவன் தன்னைக் காணும்போது உள்ளத்தில் களிப்பு இருப்பினும் இல்லாது போயினும் பற்களை வெளியே காட்டியும் அவன் அப்புறம் சென்றதும், முகத்தில் மெருகு அற்றுச் சோருவதும் உண்டு! தானாக மலர்ந்த மலருக்கும் அரும்பை எடுத்து அகல விரித்ததற்கும் உள்ள வித்தியாசம் இங்கு உண்டு. (36-37)
என்னும் அண்ணாவின் கூற்றில் பெண்களின் சிரிப்பு கூட இயந்திரத்தன்மையின் ஓர் அங்கமே என்பதைப் புலப்படுத்துகிறார்:
சமுதாயத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருக்கி ஊற்றப்பட் டிருக்கும் பழக்க வழக்கம் சமூகத்தை ஒரு சருக்குமரமாக்கிவிட்டது. அதில் தம்மிஷ்டப்படி செல்ல விரும்பி சருக்கிவிழுந்து சாய்ந்தவர், கோடி கோடி, அதில் சாரதா ஒருத்தி. (71)
சமூகம், திடமுடன் யார் எதைச் செய்யினும் பொறுத்துக் கொள்ளும், தாங்கி, பதுங்கினால் அவர்கள்மீது பாய்ந்து அவர்களைப் பதைக்க வைக்கும்.

பெண்கள் போராட வேண்டும்
            பெண்கள் தம் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமாயின் சமுதாயத்தை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும். தம் மீது திணிக்கப்படும் அச்சுறுத்தல்களை எதிர்த்து நின்றால் சமுதாயம் தானாக வழிக்கு வந்துவிடும்.
            ராதா, கழுதையின் பின்புறம் நின்றால் உதைக்கும், முன்னால் செல் ஓடிவிடும்.
பழக்கவழக்கமெனும் கொடுமையை, தீவிரமாக எதிர்த்தால்தான் முடியும் எனப் பரந்தாமன் சாரதாவிடம் வாதாடினான். தன்னை மறுமணம் செய்து கொள்ளும்படி. (76)
என்று மறுமணம் என்பதைப் பெண்கள் நினைத்துப் பார்க்கலாகாது என்ற காலகட்டத்தில் பரந்தாமன் வாயிலாகப் புரட்சிவிதை தூவுகிறார் அண்ணா. அண்ணாவின் அன்றைய சிந்தனைகளே வேர்விட்டு வளர்ந்து இன்று விதவையர் மறுமணம் சமுதாய அங்கீகாரம் பெறக் காரணாய் அமைந்தது எனலாம்.
வீதி மூலைகளில் வீணர்கள் வம்பு பேசினர். சமையற் கட்டுகளில் பெண்டுகள் சகலமும் தெரிந்தவர்கள்போலக் கேலி செய்தனர். வைதீகர்கள் வந்தது விபரீதம் எனக் கைகளைப் பிசைந்தனர். உற்றார் உறுமினர். ஆனால் கபோதிபுரக் காதலை இனி யாராலும் தடுக்கமுடியாது. (78)
என்று அன்று பேரறிஞர் அண்ணா கண்ட கனவு இன்று நினைவாகியிருப்பது கண்கூடு. அதுவே அவரது படைப்பின் வெற்றியுமாகும்.
            பேரறிஞர் அண்ணாவின் விதவை மறுமணக் கோட்பாடு அவரது கபோதிபுரக் காதல் என்னும் சிறுகதை மூலம் வேர்விட்டு கிளைபரப்பி நின்று இன்று வெற்றி பெற்றிலங்குவதைக் காணும்போது அவரது எதிர்காலவியற் சிந்தனையை உணர்ந்துகொள்ள முடிகிறது.

நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி, பெண்ணியச் சாரலில், காரைக்கால் :      விழிச்சுடர்ப் பதிப்பகம், 2014, 107-117.

No comments:

Post a Comment