Thursday 31 March 2022

Covid Poem கொல்லும் கொரோனாவை வெல்லும் மனிதஇனம்

 

கொல்லும் கொரோனாவை வெல்லும் மனிதஇனம்

                                                                               

 எத்தனையோ நோய்உலகில் வந்த துண்டு

என்றேனும் இதனைப்போல் கண்ட துண்டா?

அத்திக்குள் நுழைகின்ற பூச்சி போலே

அதம்செய்து நுழைகிறதே இந்த வைரஸ்

பித்தரைப்போல் உலகினரும் மருட்சி கொள்ள

பிடரியிலே அமர்ந்தேதான் துரத்து தம்மா!

எத்தர்களால் உருவாகி வந்த தாமோ?

எவரிதனைக் கொண்டுவந்து பரப்பி விட்டார்?

 

அச்சத்தின் உச்சத்தில் உறைந்து நின்றோம்

அழிக்கவொண்ணா கிருமியினால் மருகி நின்றோம்!

இச்சைகளை முற்றிலுமாய்த் துறந்து நின்றோம்

இறுமாப்பு உடையோரும் அடங்கி நின்றார்!

பிச்சையெனக் கைகளையே ஏந்து கின்றோம்

பிறவியிலே புதுமையிதைக் காணு கின்றோம்!

மிச்சமுள காசுகளை எண்ணி எண்ணி

மிதக்கின்றார் கண்ணீரில் நாளை எண்ணி!

 

முகக்கவசம் போட்டேதான் இருக்க லானோம்

முகங்கொடுத்துப் பேசிடவும் அஞ்சு கின்றோம்!

நகக்கண்ணில் தொற்றுவரும் கார ணத்தால்

நாடுகிறோம்சானிடைசர்துய்மை காக்க!

சிகைவெட்டக் கடைகளுமே திறக்க வில்லை

சிறுதொழில்கள் ஒன்றேனும் தப்ப வில்லை!

பகைவந்தால் எதிர்நிற்கும் வீர ருண்டு

பரவுகின்ற கொரோனாமுன் நிற்பா ருண்டோ?

 

ஊர்விட்டு ஊர்வந்து வேலை செய்வார்

ஊரடங்கு நடைமுறையால் தவித்துப் போனார்!

ஆர்வந்து தம்துயரைத் தீர்ப்பா ரென்று

அங்கங்கே பிரிந்துநின்றார் சொந்த பந்தம்!

தேர்இழுத்துத் தெருவினிலே விட்ட தைப்போல்

தேம்புகிறார் உலகத்தில் பிரிந்தி ருப்போர்!

சேர்கின்ற நோக்கத்தில் நடந்து போனார்

செத்தாரே நடுவழியில் சோகம் அந்தோ!

 

பார்முற்றும் பலியாகும் உயிர்க ளாலே

படிப்பினையே இன்றேனும் பெறுதல் வேண்டும்!

பேர்பெற்ற வல்லரசே தவிக்கக் கண்டோம்

பின்னும்நாம் அசட்டையாய்த் திரிய லாமோ?

ஊர்சுற்றும்புள்ளிங்கோஉணர வேண்டும்

உற்றாரைத் தொடுவதையே தவிர்க்க வேண்டும்!

சீர்பெற்று மீண்டும்நம் பணிகள் செய்ய

சிந்தித்து நமைக்காக்கத் தனித்தி ருப்போம்!

Tuesday 29 March 2022

அன்பு கனிந்த கனிவே

 

அன்பு கனிந்த கனிவே

நுண்ணுயிரிப் பெருந்தொற்றுப் பரந்த போதும்

நேர்நின்று பிணியாளர் தம்மைக் காக்கக்

கண்போன்ற தம்மகவைப் பிரிந்து வந்தார்

கணவனினும் கடமைக்கே முதன்மை தந்தார்

மண்ணுலகில் செவிலியரை அன்பின் வார்ப்பாய்

மதிக்கின்றோம் அதிலெதுவும் ஐயம் இல்லை

விண்சென்றார்; பிறருயிரைக் காத்துத் தந்தார்

வீரரன்றோ; அன்பாலே கனிந்தார் அன்றோ!

 

ஊரடங்கால் ஆயிரத்தோர் பணிகள் இன்றி

உளங்குன்றி உணவின்றி உழன்றார் அந்தோ!

பாரடங்கி நின்றிட்ட அந்த நாளில்

பதைப்புற்று உதவிசெய வந்தார் பல்லோர்

ஈரத்தை இதயத்தில் குவித்தா ரெல்லாம்

இன்பமுடன் சேமிப்பைச் செலவு செய்தார்

நேரத்தில் அவர்தந்த உணவை உண்டு

நெஞ்சத்தால் வாழ்த்தினரே அன்பைக் கண்டு!

 

குழந்தைகளும் சில்லறைகள் குவித்துத் தந்தார்

குறைவின்றி உண்டியலை உடைத்துத் தந்தார்

மழலையரின் அன்புளத்தைக் கண்டோ ரெல்லாம்

மனமற்ற தன்னிலைக்கு வெட்கி நின்றார்

வழங்குகின்ற வதுவைக்காம் காசைக் கூட

வனிதையர்கள் வழங்கினரே வறுமை தேய

இழப்பதற்கு எதுவுமிலா ஏழைக் கூட்டம்

இவர்போன்றோர் அன்பாலே வாழ்கின் றாரே!

 

தெருவெல்லாம் திரிகின்ற நாய்கள் உண்ணத்

தருகின்றார் ரொட்டிகளை வாங்கி வந்து

இருளுற்ற கண்களுக்கு வழியைக் காட்ட

இருக்கின்றார் அன்புடையோர் கருணை சிந்தி

தருவாக நின்றிங்கே நிழலைச் செய்யும்

தறுகண்மை மிக்கவர்கள் பல்லோர் உண்டு

உருள்கின்ற புவியினிலே எங்கும் எங்கும்

உருவாகும் இடரிலெலாம் அன்பே வெல்லும்!

 

அன்பினையே அளக்கின்ற கோலும் உண்டோ

ஆழத்தில் அகலத்தில் எல்லை உண்டோ?

என்பினையும் உருக்குகின்ற ஆற்றல் உண்டு

எல்லையிலா அதைக்காணும் கண்கள் உண்டு

துன்பத்தில் கைகொடுக்கும் ஒருவர் வந்தால்

துயரமிகு தற்கொலைகள் இனியும் உண்டோ?

மன்பதையில் அன்பின்றேல் வாழ்க்கை இல்லை

மணவினையின் அடிப்படையும் அதுவே யன்றோ!

 

புலிப்பறளைப் பாலூட்டி நாயும் காக்கும்

புல்வாயைச் சிங்கமது நக்கிப் போக்கும்

வலிகண்டு துடிக்கின்ற மந்தி தன்னை

வனவிலங்கும் அன்பாலே காவல் காக்கும்

பலிவாங்க எண்ணாத விலங்கும் உண்டு

பண்பாலே அவைகூட உதவும் நன்று

நலிகின்ற துன்பங்கள் விரட்டும் போதும்

நானிலத்தில் அன்பொன்றே கனிவாய் ஆளும்!

*