Thursday 12 September 2019

நாலடியாரில் பெண்


நாலடியாரில் பெண்

            காதலும் வீரமும் வாழ்வின் இரு கண்களாக மதிக்கப்பெற்ற சங்ககாலத்தை அடுத்துத் தமிழகத்தில் ஏற்பட்ட சமண, பௌத்த சமயங்களின் செல்வாக்கால் வாழ்வியல் நெறிகளை மக்கள் எதிர்கொண்ட நோக்கில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. இல்லற வாழ்க்கை இழிவானது; ஆடவர் மறுமை இன்பம் அடைவதற்கான வழியை அடைக்கும் தடையாகப் பெண்கள் அமைகின்றனர் என்னும் நிலையாமைத் தத்துவத்தை முன்னிறுத்திய கருதுகோள்களை மேற்சுட்டப்பெற்ற சமண, பௌத்த சமயங்கள் சமுதாயத்தில் விதைத்தன. இந்நிலையில் சமணசமயத் துறவியரால் இயற்றப்பெற்ற நாலடியாரால் பெண் பற்றிய கருதுகோள் எவ்வாறு வெளிப்படுத்தப் பெற்றுள்ளது என்பதனை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
பெண் - போகப்பொருள்
            பெண் அழகானவள் என்றே கவிஞர்களால் பண்டுதொட்டுச் சிறப்பிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் இதற்கு மறுதலையாகப் பெண்ணின் அழகு நிலையற்றது என்று கூறி அதன் ஈர்ப்பிலிருந்து விடுபடுவதே வாழ்க்கையைச் சிறப்பாக்கும் நெறி என்னும் சமணம் சார்ந்த கொள்கையை நாலடியார் வற்புறுத்துகிறது.
மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல்அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல் (41)
என்னும் பாடல் முதலாகப் பல பாடல்கள் (14, 15, 17) பெண்ணழகு அழிவதை வெளிப்படையாகப் புலப்படுத்து கின்றன. புனைந்துகொள்ளும் அழகைக் கண்டுமயங்கும் மாந்தர்க்கு உடலின் உள்ளிருக்கும் மலத்தையும் (43), வேல் போன்ற கண்களால் கவரப்படுவார்க்கு கண்ணீர்மை குன்றினால் காணப்பெறும் நுங்கு அகழ்ந்த பனையின் தோற்றத்தையும் (44), முல்லைப் பற்களெனப் புகழ்வார்க்குச் சுடுகாட்டில் உதிர்ந்துவிழும் பற்களையும் (45), புறஅழகில் திளைப்பார்க்குத் தோலை நீக்கிவிட்டால் காணப்படுகின்ற அழகற்ற உள்ளுறுப்புகளையும் (46, 47), பெண்ணின் நறுமணப் பொருளின் மணத்தில் மதிமயங்குவார்க்கு உடலின் முடைநாற்றத்தையும் (48) எடுத்துரைத்து ஆணினம் மயங்கிக்கிடக்கும் பெண்ணின் உண்மையான உடலியலை நாலடியார் வெளிக்கொணர்கிறது. இப் பாடல்களால் பெண் ஒரு போகப் பொருள் என்று நினைக்கின்ற சமுதாய மனப்பாங்கு புலப்படுகிறது. பெண்ணைப் போகப் பொருளாகக் கருதக் கூடாது என்னும் கருத்தை முன்வைக்காமல், அவள் ஒரு போகப்பொருளே என்பதையும் அதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளுதலே ஆடவரின் திறமையென்றும் கூறுகின்ற ஆணாதிக்க மனப்பாங்கையே நாலடியார் முன்னிறுத்துகிறது எனலாம்.
கொடுத்தலுந் துய்த்தலுந் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலாள் துய்க்கப் படும் (274)
என்னும் செய்யுள் ஈயாமை என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. ஈயாதவர்களின் செல்வம் அயலவரால் துய்க்கப்படும் என்னும் கருத்தை வலியுறுத்துமிடத்தில், பெண் தன் பிறந்தவீட்டாரால் துய்க்கப்பெறாமல் தொடர்பற்ற ஆடவன் ஒருவனால் துய்க்கப் பெறுகிறாள் என்னும் கருத்து உவமையாகப் பயன்கொள்ளப் பெறுகிறது. பெண்ணை ஒரு நுகர்பொருளாகவே நோக்கும் மனப்பாங்கு இதனால் உறுதிப்படுகிறது.
மனைவியைத் துறத்தல்
சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு (13)
என்னும் பாடல் ஆடவர்கள் தம் மூப்புக்காலத்தில் மனை வாழ்க்கையைத் துறந்துவிட வேண்டும் என்று கூறுகிறது. தமது மறுமை வாழ்க்கைக்காக மனைவியைத் துறந்துசென்று விடுதல் முதுமை வாழ்க்கையில் மனைவியின் நிலை பற்றிக் கவலைகொள்ளாத கணவனின் ஆணாதிக்கப் போக்கைக் காட்டுவதாகக் கொள்ளலாம். பெண்களின் இத்தகைய பாதுகாப்பற்ற போக்கிற்குச் சமயநெறி காரணமாக அமைதல் வருந்தத் தக்கதாகும்.
            முதல் மனைவி இறந்துவிட்டால் துறவு மனம் அடையாமல் இரண்டாம் முறையும் இன்னொரு திருமணம் செய்துகொண்டு வாழ்தல் தன்மீது தானே கல்லெறிந்து கொள்வதற்குச் சமமாகும் (364) என்னும் புதியதொரு கருத்தையும் ஒரு செய்யுள் முன்வைக்கிறது.
ஆணின் வாரிசைத் தருதல்
மாண்ட குணத்தொடு மக்கட்பே றில்லெனினும்
பூண்டாள் கழிந்தற் கருமையால் - பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார் (56)
என்னும் செய்யுள் குழந்தைப்பேறு இல்லாதவிடத்துத் தன் மனைவியைத் துறத்தல் அரிது என்று குறிப்பிடுகிறது. பெண்ணை மணம்புரிந்து கொள்வது குழந்தைப்பேறு அடைந்து சமுதாயத்தில் தன் ஆண்மையை நிலை நிறுத்துவதற்கே என்பதும் குழந்தைப்பேறு இல்லை யென்றால் அவளை நீங்கிவிடலாம் என்பதுமான ஆணாதிக்க மனப்பாங்கைத் தெற்றெனப் புலனாக்கு வதாகவே இச்செய்யுள் அமைகிறது. பெண் என்பவள் ஆணின் வாரிசைப் பெற்றுத்தரும் இயந்திரமாக நோக்கப்பெற்ற மனப்பாங்கு இதனால் புலப்படுகிறது.
பிறன்மனை நயவாமை
            தன் மனைவியல்லாத பிற மாதரைத் தாயாக எண்ணவேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டாலும் உண்மையில் அதனை நடைமுறைப்படுத்தல் சிரமமானது என்பதைப் பிறன்மனை நயவாமை பற்றி அறநூல்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருவதிலிருந்து அறிய முடிகிறது.
பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணஞ் செய்து கடிப்புக்க - மெல்லியற்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு (86)
என்னும் செய்யுள் ஆடவனின் பாலுணர்ச்சி நிறைவேறலுக்குச் சமுதாய ஒப்புதலுடன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்தும் பிற பெண்களை நோக்குகின்ற இழிதகைமையை வெளிப்படையாகவே சாடுகிறது.
அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால் - நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார் (81)
என்னும் செய்யுள் பிறன்மனையை நயத்தலில் தோன்றும் துன்பங்களைப் பட்டியலிடுகிறது. இப் புல்லிய செயலால் அரசனின் கொலைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று தெரிந்தும் அதிலிருந்து விடுபட முடியாத ஆடவரின் மனவியல்பை இப்பாடல் முன்வைக்கிறது. பிறன்மனை நயத்தலின் தவறை மேலும் சில பாடல்கள் சுட்டுகின்றன.
பரவா, வெளிப்படா பல்லோர்கண் தங்கா
உரவோர்கண் காமநோய் ஓஓ கொடிதே
விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
உரையாதுள் ஆறி விடும் (88)
என்னும் செய்யுளில்விரவார்என்னும் சொல்லாட்சி ஆடவரின் ஆசைக்கு உடன்படாத மகளிரைச் சுட்டுகிறது. குலமகளிரை அணுகி அவர் மனத்தில் நஞ்சைக் கலக்கின்ற ஆணாதிக்கப் போக்கையும் இச்செய்யுள் வெளிப்படுத்து கிறது.
கற்புநிலை
                பெண்பாலார் ஏழையராயின் சமுதாயத்தில் இயல்பாக இயங்குகின்றனர். ஆனால் செல்வந்தர் வீடுகளில் வாழும் பெண்கள் இயல்பாகப் பிற ஆடவர் காணுமாறு இயங்குவ தில்லை என்பதை,
யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல் - நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு (293)
என்னும் செய்யுள் குறிப்பாகப் புலப்படுத்துகிறது.
வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் - இழுக்கெனைத்துஞ்
செய்குறாப் பாணி சிறிதேஅச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது (362)
என்னும் செய்யுள் காவல் காத்திருந்தாலும் நிறையற்ற மகளிர் குற்றம் புரியாதிருக்கும் காலம் குறைவே என்றும் வழுக்குடைய காலமே அதிகம் என்பதையும் புலப்படுத்து கிறது. கற்பு நிலையிலிருந்து தவறும் பெண்களும் வாழ்ந்துகொண்டிருக்கும் உலக இயல்பைப் புலப்படுத்துவ தாக இச்செய்யுள் அமைந்திருக்கிறது.
பெண்மை - மென்மை
                மெல்லிய நல்லாருள் மென்மை’ (188.1) என்னும் தொடர் பெண்கள் மென்தன்மை உடையவர்களாதலால் அவர்களிடத்தில் ஆடவர்கள் மென்மையாக நடந்து கொள்ளல் வேண்டுமென வற்புறுத்துகிறது.
இசையா தெனினும் இயற்றியோ ராற்றாள்
அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
கண்டல் திரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப
பெண்டிரும் வாழாரோ மற்று (194)
என்னும் செய்யுள் கடினமான செயல்களை ஆடவர் முயன்று ஆற்றுதல் வேண்டும் என்று வற்புறுத்தும் அதே வேளையில் பெண்டிர் எளிமையான செயல்களையே ஆற்றும் இயல்பினர் என்னும் குறிப்பையும் வழங்குகிறது. இதன்மூலம் பெண்கள் மெல்லியர் (weaker sex) என்னும் கருதுகோளை முன்வைக்கிறது.
தாய்மை
            குழந்தையைப் பெற்றெடுத்தல் பெண்ணிற்குப் பலவிதமான துன்பங்களை அளிக்கும் காலகட்டமாகும். இருப்பினும் அதனை அப்பெண் மிகுந்த மகிழ்ச்சியுடனே எதிர்கொள்கிறாள்.
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும் (201)
என்னும் செய்யுள் சுற்றந்தழால் என்னும் அதிகாரத்தில் இடம்பெறுகிறது. ஒருவன் தளர்ச்சியடையும்போதும் அவன் தன்னுடைய கேளிரைக் காணுமிடத்துத் தன் தளர்ச்சியை மறந்துவிடுவான் என்று கூறுமிடத்தில் அதனைப் புலப்படுத்தும் உவமையாகத் தாய்மையை முன்னிறுத்து கிறார் ஆசிரியர். குழந்தை பெறுவதற்காகத் தான்பட்ட துன்பத்தையெல்லாம் அக்குழந்தையைப் பெற்றெடுத்த உடனே மறந்துவிடும் பெண்ணின் தாய்மைச் சிறப்பை இங்கு ஆசிரியர் பதிவுசெய்ய விரும்பியமையை அறிய முடிகிறது.
இல்லற மாட்சி
                செல்வ வளம் மிக்க மாளிகையாக இருந்தாலும் அங்கு மாண்பமைந்த இல்லக்கிழத்தி இருத்தல் வேண்டும். அன்றேல் அம் மாளிகை பார்க்கவியலா கொடிய காடாகும் என்பதை,
மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம் - விழைதக்க
மாண்ட மனையாளை யில்லாதான் இல்லம்
காண்டற் கரியதோர் காடு (361)
என்னும் செய்யுள் எடுத்தியம்புகிறது.
எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி - அட்டதனை
உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் - இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை (363)
என்னும் செய்யுள் இல்லற மாட்சியின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துரைக்கிறது. கணவனுக்கு அடங்கிப் போதல், அவனுக்கு உரியகாலத்தில் உணவினைத் தயார்செய்து பரிமாறுதல் ஆகியன மனைவியின் கடமை களாக எதிர்பார்க்கப்படுவதை இச்செய்யுள் வெளிப்படுத்து கிறது.
            கற்புடை மகளிருடைய மாட்சியைக் கற்புடை மகளிர் என்னும் அதிகாரம் (381-90) விதந்துரைக்கிறது. ஏழ்மையுற்ற காலத்தும் விருந்தோம்பும் சிறப்பு அவளுக்குப் பெரிதும் வற்புறுத்தப்படுகிறது (381, 382).
பொதுமகளிர்
            பொதுமகளிரின் இயல்பை நாலடியார் பொதுமகளிர் என்னும் அதிகாரத்தில் (371-80) மிகச் சிறப்பாக எடுத்துரைக் கிறது. மழை நின்றால் புதுப்புனல் அற்றுப்போவதைப்போல் கைப்பொருள் குறைந்தால் பொதுமகளிரின் அன்பு அற்றுப்போகும் என்று அவர்தம் இயல்பு எடுத்துரைக்கப் பெறுகிறது (370). பொது மகளிரின் இயல்பை அறிந்திருந்தும் அதிலிருந்து விடுபட இயலாத ஆடவர் மனப்பாங்கைச் சாடுவதையும் நாலடியாரில் காணமுடிகிறது (380). பொதுமகளிரைத் துய்த்துவந்த தலைவன் நீராடவும் செய்யாமல் தலைவியைத் துய்க்கவரும் செயலின் அருவருப்பைத் தலைவியின் கூற்றாக ஒரு செய்யுள் நுண்ணிதின் வெளிப்படுத்துகிறது.
கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன் - ஒருங்கொல்லா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையுந் தோய வரும் (387)
என்னும் இச்செய்யுளில் தலைவியின் சிறு எதிர்ப்பு வெளிப்பட்டு பெண்ணியத்திற்குக் குரல் கொடுக்கும் முயற்சியை அறியமுடிகிறது.
            மேற்கூறியவற்றால் நாலடியார் பெண்டிரைத் துறத்தல் என்னும் கோட்பாட்டை வலியுறுத்தினாலும் பிறனில் விழைதலாகாது, பொருட்பெண்டிர் தீயவர்கள் என்பதையும் மகளிரின் மாட்சியையும் விளக்கிப் பெண்டிரின் நலத்திற்கு அரண் சேர்த்திருப்பதையும் மறுக்கமுடியாது.

நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி, பெண்ணியச் சாரலில், காரைக்கால் :      விழிச்சுடர்ப் பதிப்பகம், 2014, 37-45.

No comments:

Post a Comment