Tuesday 3 September 2019

அகநானூற்றில் பெண்பாற் புலவர் பாடல்களில் ‘பெண்’


அகநானூற்றில் பெண்பாற் புலவர் பாடல்களில்பெண்   
  
                சங்ககாலத்தில் பெண்பாற்புலவர்கள் ஆண்பாற் புலவர்களுக்கு நிகராக உலகியல் மற்றும் உளவியல் நுட்பங்களோடு பெண்ணின் மனஉணர்வுச் சித்திரிப்புகளை மிக நன்றாகக் காட்சிப்படுத்தியுள்ளமை குறித்துப் பெண்ணிய நோக்கில் ஆய்வுசெய்வது இக் கட்டுரையின் மைய நோக்காக அமைகிறது. அகநானூற்றில் காணப்பெறும் பெண்பாற் புலவர் பாடல்கள் இங்க ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பெறுகின்றன.
மகளிர் மனப்பாங்கு
                மகளிர் மெல்லிதயங் கொண்டோர் என்பது,
புலம்புனிறு தீர்ந்த புதுவர லற்சிரம்
நலங்கவர் பசலை நலியவும் நந்துயர்
அறியார் கொல்லோ தாமே அறியினும்
நம்மனத் தன்ன மென்மை யின்மையின்
நம்முடை யுலகம் உள்ளார் கொல்லோ (அகம். 273.4-8)
என்னும் ஔவையார் பாடலில் வெளிப்படுகிறது. மகளிர் உலகம் என்பது தனியானது; அதனை ஆடவர் அறியார் என்னும் மகளிர் உளவியலை இப்பாடல் எடுத்துரைக்கக் காணலாம். நம் மனத்தன்ன மென்மை யின்மையின் என்பதன் மூலம் மகளிர் மென்மை உள்ளம் உடையவர் என்பதனையும் முன்வைக்கிறார்.
தலைவி மனப்பாங்கு
                தலைவியர்தம் பல்வேறு மனப்பாங்குகளை இப் பெண்பாற் புலவர்கள் விரிக்கும்நிலை சிறப்பானது.
பிரிவாற்றாமை
                வினையே ஆடவர்க்கு உயிரே என்று ஆடவர் பொருள் தேடப் பிரியும்போது அப்பிரிவை ஆற்றிஇருக்க வேண்டிய பொறுப்பு தலைவி மீது சுமத்தப்பெறுகிறது. பிரிவுத் துன்பம் ஒருபுறம் இருக்க அதனை அவள் வெளிப்படுத்தாமல் இருக்கவேண்டிய கடப்பாடு மேலும் துன்பத்தை மிகுவிக்கும் ஒன்றாகும்.
காடிறந் தனரே காதலர் மாமை
யரிநுண் பசலை பாஅய்ப் பீரத்
தெழின்மலர் புரைதல் வேண்டு மலரே (45.6-8)
என்று வெள்ளிவீதியார் தலைவனைப் பிரிந்த துன்பத்தை எடுத்துரைக்கிறார்.
உடைமதி லோரரண் போல
வஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே (45.18-19)
என்று கணவனைப் பிரிந்து தூக்கத்தை இழந்த நிலையை வெள்ளிவீதியார் உணர்த்துகிறார்.
. . . யானே
காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்
தாதி மந்தி போலப் பேதுற்
றலந்தனெ னுழல்வென் கொல்லோ (45.12-15)
எனவரும் பகுதியில் கணவனை இழந்த ஆதிமந்தி பித்துப்பிடித்தவர்போல் ஆன தன்மையை வெள்ளிவீதியார் குறிப்பிடுகிறார். கணவனின் இழப்பு மனைவிக்கு மிகப்பெரிய துன்பத்தை ஏற்படுத்தி அவளை மன ரீதியாக பாதிப்பதை இக்குறிப்புப் புலப்படுத்துகிறது.
விருந்தும் பெறுகுநள் போலுந் திருந்திழைத்
தடமென் பணைத்தோள் மடமொழி யரிவை
. . .
செல்லும் நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர்புகல் ஆய்ந்தே (324.1-2,14-15)
என்னும் ஒக்கூர் மாசாத்தியார் பாடல் தலைவன் வருகையே தலைவிக்கு மனமகிழ்வை ஏற்படுத்துவது என்பதை உழையர் கூற்றாகப் புலப்படுத்துகிறது.
            விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே (384.14) என்ற ஒக்கூர் மாசாத்தியார் பாடல் தலைவன் வரவால் புத்தழகு பெற்ற தலைவியைக் காட்டுகிறது.
வேட்கை உரைத்தல்
                இல்லறவின்பம் தொடர்பான தன் உள்ளத்து உணர்வுகளை ஒரு பெண் வெளியிடலாகாது என்றும் அவ்வாறு வெளியிடின் அவளது பண்புக்கு இழிதகவைத் தரும் என்றும் எண்ணுகின்ற கருதுகோளை விடுத்து, தலைவி தலைவனோடு அடைந்த இன்பத்தைத் தன் தோழியொடு சொல்லி இன்புறும் செய்தியை வெறிபாடிய காமக்கண்ணியார் பாடலாக்கியுள்ளமையை அக நானூற்றில் காணமுடிகிறது.
ஆர நாற வருவிடர்த் ததைந்த
சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக்
களிற்றிரை தெரீஇய பார்வ லொதுக்கி
னொளித்தியங்கு மரபின் வயப்புலி போல
நன்மனை நெடுநகர்க் காவல ரறியாமைத்
தந்நசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப
வின்னுயிர் குழைய முயங்குதொறு மெய்ம்மலிந்து
நக்கனெ னல்லனோ யானே (22.12-19)
என்னும் பாடலில் வெறிபாடிய காமக்கண்ணியார் தலைவனின் முயக்கத்தில் தான் மகிழ்ந்த விதத்தைத் தோழிக்கு எடுத்துரைக்கின்றாள்.
. . .  கான
மெம்மொடு கழிந்தன ராயிற் கம்மென
வம்புவிரித் தன்ன பொங்குமணற் கான்யாற்றுப்
படுசினை தாழ்ந்த பயிலிண ரெக்கர்
மெய்புகு வன்ன கைகவர் முயக்க
மவரும் பெறுகுவர் மன்னே (11.6-11)
எனவரும் பகுதியில் தலைவன் பொருள்தேடச் செல்லும் போது தன்னையும் உடன் அழைத்துச் சென்றால் தலைவனது முயக்கத்தைப் பெறலாம் என்று ஔவையார் பாடலில் தலைவி உரைக்கின்றாள்.
                தலைவனைப் பிரிந்துறையும்போது காமவேட்கை மிகுவதையும் அதனைப் பிறரிடம் கூறவியலாத தன்மையையும் ஔவையார்,
இடைபிற ரறித லஞ்சி மறைகரந்து
பேஎய் கண்ட கனவிற் பன்மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் (303.1-3)
என்று எடுத்துரைக்கிறார். பிறரிடம் கூறாமல் மறைத்தாலும் அதனை அவர்கள் மிக எளிதாக அறிந்துகொண்டு அலர் எழுப்புவதை,
மாயிருங் கொல்லி யுச்சித் தாஅய்த்
ததைந்துசெல் லருவியின் அலரெழப் பிரிந்தோர் (303.6-7)
என்று ஔவையார் சுட்டுகிறார். காமவேட்கையைச் சொல்ல அஞ்சுதல், அது வெளிப்படின் அஞ்சுதல் ஆகியவற்றைப் பெண்ணின் இயல்புகளாக ஔவையார் இப்பாடல்வழி உணர்த்துகிறார்.
யாங்கென உணர்கோ யானே வீங்குபு
தலைவரம் பறியாத் தகைவரல் வாடையொடு
முலையிடைத் தோன்றிய நோய்வள ரிளமுளை
அசைவுடை நெஞ்சத் துயவுத்திரள் நீடி
ஊரோர் எடுத்த அம்பல் அஞ்சினை
ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பிப்
புலவர் புகழ்ந்த நாணில் பெருமரம்
நிலவரை யெல்லாம் நிழற்றி
அலரரும் பூழ்ப்பவும் வாரா தோரே (273.9-17)
எனவரும் பகுதியிலும் ஔவையார் தலைவிகொண்ட காமவேட்கையை வெளிப்படுத்தக் காணலாம். இதற்குப் பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது என்று துறை வகுத்துள்ளமை நோக்கத்தக்கது. அறிவு மயங்கப்பெற்ற பெண்ணே காமவேட்கையை வெளிப்படுத்துவாள் என்ற சமுதாய மனப்பாங்கு இத்துறைக் குறிப்பு வாயிலாக வெளிப்படுகிறது.
தலைவன் பற்றிய மனப்பாங்கு
                தலைவன் குறித்த பெண்களின் மனப்பாங்கு பெண்பாற்புலவர்களின் பாடலில் வெளிப்படக் காணலாம்.
செயற்கரிய செய்தல்    
            மகளிர் தம்மால் காதலிக்கப்பெறும் ஆடவர் அல்லது தம் கணவர் வீரத்தோடு இருத்தலையும் தலைமைக் குணங்கள் வாய்க்கப்பெற்றிருத்தலையும் கண்டு மகிழ்வர். அவர்கள் செயற்கரிய செயல்களைச் செய்யவேண்டும் என்று விழைகின்றனர். மலைச்சாரலின் அணுகுதற்கு அரிய முழைஞ்சிடத்தே மலர்ந்த மலர்களைப் பறித்துத் தலைவன் சூடி வருவதைக் கண்டு தலைவி மகிழ்கிறாள் (22.12-13).
            தனது குடியிருப்புப் பகுதியில் காவலர்கள் பலர் இருந்தும் அவர்களின் கண்ணில்படாமல் வருகின்ற தலைவனின் திறனைத் தலைவி குறிப்பிடுகிறாள் (22.16).
            அச்சம் பொருந்திய நள்ளிரவில் அவன் வருவதை உள்ளூறப் பாராட்டுகிறாள் (22.11).
கடிகொள வழங்கார் ஆறே ஆயிடை
எல்லிற் றென்னான் வென்வேல் ஏந்தி
நசைதர வந்த நன்ன ராளன் (362.6-8)
என்று வெள்ளிவீதியாரின் தலைவி விலங்குகள் இயங்குகின்ற மக்கள் இயங்காத வழித்தடத்தில் இருட் பொழுதில் வேலைமட்டும் ஏந்திக்கொண்டுவரும் தலைவனை நன்னராளன் என்று செல்லமாகக் கடிந்துகொள்கிறாள்.
அஞ்சியத்தை மகள் நாகையார் தம் பாடலில் பெண்கள் விரும்பும் குணநலன்களை எடுத்துரைக்கிறார்.
குடிநன்கு உடையன் கூடுநர்ப் பிரியலன்
கெடுநா மொழியலன் அன்பினன் எனநீ
வல்ல கூறி வாய்வதிற் புணர்த்தோய் (352.8-10)
என்று தலைவனின் குணங்களைத் தலைவியிடம் கூறி அவனுடனான நட்பினைத் தோற்றுவிக்கிறாள் தோழி.
                அவன் வதுவை நாளினும் இனியனால் எமக்கே (352.17) என்று கூறித் தலைவி மகிழும்போது தலைவனின் அன்பொன்றையே பெரிதென எண்ணி வாழும் பெண்களின் இயல்பைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர்.
தோழியரின் தப்பித்தல் மனப்பாங்கு
            சிக்கல்கள் ஏற்படும்போது பேதமையுடைய பெண்கள் அச் சிக்கலை எதிர்கொண்டு தீர்வு காண்பதை விடுத்து அச் சூழலிலிருந்து தற்காலிகமாகத் தப்பித்துப் போதலையே செய்கின்றனர். தலைவியின் காதலை அடைய முயன்ற ஒருவன் அவளிடம் வேடிக்கைப் பேச்சுகளைப் பேச முனைந்தபோது உடனிருந்த தோழியர் தலைவியையும் அவளின் நெருங்கிய தோழியையும் தனியே விட்டுவிட்டு ஓடிவிடுகின்றனர்.
நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணா மோவெனக் காலிற் சிதையா
நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும் (110.18-20)
என்னும் பாடலில் முன்பின் அறியாத ஒருவன் தலைவியையும் அவளது நெருங்கிய தோழியையும் பார்த்து வம்புபேசிக்கொண்டிருக்கும்போது, தூரத்தே தெரியும் நாவாய்களைப் பாருங்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் இதுவரை கட்டி விளையாடிய மணல்வீடு களையும் சிதைத்துக்கொண்டு ஓடிவிடுதாகப் போந்தைப் பசலையார் பெண்களின் மனஇயல்பை மிக அருமையாக எடுத்துக்காட்டுகிறார்.
தலைவி பற்றிய தலைவன் மனப்பாங்கு
                தலைவி குறித்த தலைவனின் மனப்பாங்கு இத்தகையது என்பது பெண்நோக்கில் சில பாடல்களில் வெளிப்படுகிறது.
அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி
வெறிகமழ் நெடுவேள் நல்குவன் எனினே
செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக்
கான்கெழு நாடன் கேட்பின்
யானுயிர் வாழ்தல் அதனினும் அரிதே (98.26-30)
என்னும் பாடலில் தலைவியின் நோய்க்குக் காரணம் அறியாத அன்னை வெறியாட்டு அயர நினைக்கிறாள். தன் நோய் குணமாகாவிடின் தனது காமநோயைப் பிறர் அறியநேரின் அலராகும் என்று அஞ்சுகிறாள் தலைவி. ஒருவேளை நெடுவேள் தன் நோயைப் போக்கினால் அதனை அறியும் தலைவன் தன்னைத் தவறாக நினைக்கக் கூடும். அவ்வாறு நிகழ்த்தால் தான் உயிர்வாழவே இயலாது என்று தலைவி உரைக்கிறாள். தலைவியின் நோயைக் காணும் தலைவன், தன் பிரிவாலேயே அவள் துன்புறுகின்றாள் என மகிழ்ச்சியே அடைகிறான். கடவுளால் அந்த நோய் நீங்கின் தலைவியின் நோய் தீர்ந்ததே என்று மகிழ்ச்சி அடைவதற்கு மாறாக அவள் நோய்க்குத் தன் பிரிவு காரணமில்லையோ என்று ஐயுற்றுத் தலைவியின் அன்பிலேயே ஐயமடைகிறான். ஒரு பெண் தன்னையே முழுதும் நம்பியிருக்கிறாள்; தான் பிரியின் உயிர்தரியாள் என்ற எண்ணமே ஒரு ஆடவனைப் பெருமிதத்திற்கு உள்ளாக்கும். தன்னை முழுவதுமாக நம்பியிருக்கும் பெண்ணை அவன் அரவணைத்துப் பாதுகாக்க நினைக் கிறான். அதே நேரம் அப்பெண் தலைவன் பிரிவால் மனம் தளராதவள் என்னும் எண்ணம் அவனை இன்புறத்துவ தில்லை என்னும் அரிய உளவியற் கருத்தையும் மிக நுணுக்கமாக வெறிபாடிய காமக்கண்ணியார் இங்குப் புலப்படுத்துகிறார்.
தலைவனைத் தேடிச் செல்லுதல்
                தலைவன் திரும்பி வருவதாகக் குறித்த காலம்கழிந்தும் அவன் திரும்பவில்லை. அவனைத் தானே தேடிச்சென்றால் என்னவென்று ஔவையாரின் பாடல் தலைவி வினவுகின்றாள்.
வருவரென் றுணர்ந்த மடங்கெழு நெஞ்சம்
ஐயந் தெளியரோ நீயே . . .
அழிநீர் மீன்பெயர்ந் தாங்கவர்
வழிநடைச் சேறல் வலித்திசின் யானே (303.15-16, 19-20)
என்னும் பாடலில் வடிகின்ற நீரில் மீன்கள் ஏறிப்போனாற்போல் நான் அவனைத்தேடிச் செல்லத் துணிகிறேன் என்கிறாள். தன்னைப் பிரிந்து சென்ற கணவனைத் தேடிச்செல்லுதல் அக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத மரபாக இருந்தது எனலாம்.
 பெண்பாற் புலவர்களின் பெரும்பாலான பாடல்களின் கூற்று நிகழ்த்துவோர், கேட்போர் இருவரும் பெண்களாகவே அமைந்துள்ளனர். அவர்கள் பாடல்களில் தலைவி கூற்றுப் பாடல்களே அதிகமாக அமைந்துள்ளன. பாடல் கருத்தையும் சூழலையும் நுணுகி நோக்கும்போது அவை அப்புலவர்களின் தன்னுணர்ச்சிப் பாக்களாக அதாவது அவர்கள் வாழ்க்கைப் பகுதிகளைச் சுட்டுவனவாக அமைந்துள்ளமையை உணரமுடிகிறது. இந்நோக்கில் பெண்பாற்புலவர்களின் அனைத்துப் பாடல்களையும் ஒருங்கு ஆயும்போது அப்புலவர்களின் வாழ்க்கையை ஒருவாறு மீட்டுருவாக்கம் செய்யஇயலும் என்பதை இக்கட்டுரை ஆய்வு முடிபாகக் கொண்டமைகிறது.
நூல் : நிர்மலா கிருட்டினமூர்த்தி, பெண்ணியச் சாரலில், காரைக்கால் :      விழிச்சுடர்ப் பதிப்பகம், 2014, 11-19.

No comments:

Post a Comment