Friday 13 September 2019

இருள் பத்து - துளிப்பா


இருள் பத்து
நட்சத்திர விடுதி
மங்கிய வெளிச்சத்தில்
இருட்டு உலகம்!

மறைந்து கொள்கிறது
நிழலுக்குள் இருட்டு
பினாமி!

இருட்பசி விரட்டக்
கம்பியில் நடக்கிறது
மின்சாரம்!

மின்வெட்டில்
வழிகாட்டிச் செல்கிறார்
பார்வையற்றவர்!

மோதிக்கொண்டது
இருட்டு
மின்வெட்டு!

ஒளிவெள்ளத்தில் மாநாடுகள்
இருள்பிடியில் கிராமங்கள்
மக்கள் ஆட்சி!

விளக்குகள் எரிந்தாலும்
இருண்ட காலம்
மீண்டும் மீண்டும்!

கரிமூட்டைகள்
சாம்பலாக்கி எழுந்தது
கதிரவன்!

இரவுப் பேருந்து
மெய்தீண்டும் காமுகர்
இருண்மை!

வயிறு எரிந்தாலும்
இருண்டு கிடக்கிறது
அடுப்பு!

நூல் : கவிஞர் ஔவை இரா. நிர்மலா , நற்றமிழ்த் துளிப்பா நானூறு
காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2017, 45-46.

No comments:

Post a Comment