Monday, 2 December 2019

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 30


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 30
தான் சந்திரனின் வீட்டிற்குக் காலடி எடுத்து வைப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடந்த நிகழ்ச்சிகளை ரீவைண்ட் செய்து பார்த்தாள் சுந்தரி;
அன்று சனிக்கிழமை.
அண்ணனின் மகள்கள் இருவரும் தங்கள் பள்ளியில் மகாபலிபுரத்திற்குப் பிக்னிக் அழைத்துச் செல்கிறார்கள் என்று ஒருநாள் சுற்றுலா சென்றுவிட்டிருந்தனர்.
சனிக்கிழமைகளில் அண்ணனுக்கு அரைநாள் மட்டுமே அலுவலகம் செல்ல வேண்டும். அவன் காலையிலேயே வேலைக்குச் சென்றுவிட்டான். வீட்டிற்குத் திரும்ப இரண்டு மணியாகும்.
வீட்டில் அண்ணி மட்டுமே இருந்தாள்.
சுந்தரிக்கு வாந்தி எதுவும் வரவில்லை. ஆனால் நாலைந்து முறை வாந்தி வருவதுபோல் அண்ணி பார்க்குமாறு குரல் எழுப்பிக்கொண்டே கொல்லைக்கு ஓடினாள்.
'என்னடி பன்னுது?' – அண்ணி விஷயம் கேட்டாள்.
பதில் ஒன்றும் சொல்லாமல் ஹாலில் பாய் போட்டுப் படுத்துக் கொண்டாள் சுந்தரி; முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீரும் வரத் தயாராக இருந்தது.
கலாவுக்கு அத்தனையும் சட்டென விளங்கியது. இரண்டு குழந்தைகளைப் பெற்றவளாயிற்றே!
'எனக்கெதற்கு வம்பு? எல்லாம் அவள் அண்ணன் வந்து பார்த்துக் கொள்ளட்டும்' என்று சமையலில் ஈடுபட்டாள் கலா.
பணி முடித்து விநாயகம் வீட்டிற்கு வந்தான். அவன் வாசலில் செருப்பைக் கழற்றும் சத்தம் கேட்டது. சுந்தரி சுவரின் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ஹாலில் சுந்தரி படுத்திருப்பதைப் பார்த்தான் விநாயகம். சாப்பிட அமர்ந்துகொண்டே கலாவைச் சைகையால் விசாரித்தான்.
'என்னைக் கேட்டா? எல்லாம் ஒங்க அருமை தங்கச்சியையே கேளுங்க. ஒடம்புக்கு என்னன்னு?' சாப்பாடு போட்டுக்கொண்டே பீடிகை போட்டாள் கலா.
'ஏன் அவமேல ஒனக்கு அக்கற எதுவும் இல்லையா? நீ என்னன்னு விசாரிக்கக் கூடாதா?' பசி எரிச்சலில் மேலும் எரிந்து விழுந்தான் விநாயகம்.
அன்றைய சாப்பாட்டில் உப்பும் காரமும் தூக்கலாகவே இருந்தன. எதையும் வாயில் வைக்க முடியவில்லை.
'ஜுரம், தலைவலின்னா விசாரிச்சு மருந்து மாத்தர கொடுக்கலாம். காரணம் இல்லாம வாந்தி எடுத்துக்கிட்டு மூலைல முடங்கிக் கெடக்கற வயசுப் பொண்ண என்னன்னு விசாரிக்கிறது?'
'என்னடி சொல்ற? சொல்றத வௌக்கமாத்தான் சொல்லேன். இப்படிப் பொடி வெச்சுப் பேசறதெல்லாம் என்கிட்ட வெச்சுக்காதே!'
'நான் ஏன் பொடி வெச்சுப் பேசனும். எவனோட சொக்குப்பொடில மயங்கிப்போய் உன் தங்கச்சி முந்தி விரிச்சாளோ? அவகிட்டயே போய் எல்லாத்தையும் கேளுங்க. உங்க மெரட்டலுக்கெல்லாம் நான்தான் கெடச்சனா?' – தன் பங்குக்கு எகிறினாள் கலா.
சாப்பாட்டுத் தட்டைக் காலால் உதைத்துத் தள்ளினான் விநாயகம்.
எச்சில் கையால் சுந்தரியின் தலைமுடியைப் பிடித்து மேலே தூக்கினான். சுந்தரியின் முகத்தைத் திருப்பிப் பார்த்தான்.
சுந்தரியின் முகம் அழுதழுது வீங்கியிருப்பது தெரிந்தது. கண்கள் சிவந்திருந்தன.
'அதை'த் தவிர வேறு காரணம் எதுவுமில்லை என்பதை சுந்தரி தன் முகத் தோற்றத்தாலேயே விநாயகத்திற்குத் தெள்ளத்தெளிவாகப் புரிய வைத்தாள்.
சுந்தரியின் கன்னத்தில் பளார் பளார் என்று ஓங்கி அறைந்தான் விநாயகம்.
'யாருகிட்ட இப்படி ஏமாந்து நிக்கற? சொல்லு, சொல்லு, அவன வெட்டிக் கூறு போட்டுடறேன்' –கத்தினான் விநாயகம்.
'என்னை நல்லா அடிண்ணா, நல்லா அடி, ஒன் கை ஓயற வர அடி, இந்தப் பாவி ஒங்க எல்லாரையும் தல குனிய வெச்சிட்டேன்'.
'உன்ன இந்த கதிக்கு ஆளாக்குனவன் யாருன்னு சொல்லு, அவன் கால்ல கையில விழுந்தாவது அவனுக்கே ஒன்னக் கல்யாணம் பண்ணி வெக்கறேன்'
'என்னக் கொன்னு போட்டாலும் போடுன்னா . . . ஆனா இதுக்கு யார் காரணமன்னு மட்டும் என்னக் கேக்காதே!'
அவள் நிலைக்குக் காரணமானவனை அவள் சொல்ல மறுத்தது விநாயத்தை ஆத்திரப்பட வைத்தது.
'செய்யறதயும் செஞ்சிபுட்டு இப்ப வியாக்யானம் பேசறியா? சனியனே!'
அவன் அவளைச் சனியன் என்று திட்டியதும் ஒரு வகையில் சரிதான். அந்தச் சனியன்தானே சந்திரனை இப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
விநாயகம் அவள் கழுத்தைப் பிடித்துத் தள்ளினான். சுந்தரி ஓரத்திலிருந்த மேஜையில் மோதி விழுந்தாள். விழுந்த அளவில் அவள் நெற்றியில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது.
'இப்பச் சொல்லப் போறியா, இல்ல அடி வாங்கியே சாகப் போறியா?' – அவளை மீண்டும் அடிக்க முயன்றான் விநாயகம்.
நிலைமை மோசமாவதற்குள் கலா தன் கணவனை ஓடிவந்து தடுத்தாள். தங்கையைக் கொலை செய்துவிட்டு அவன் ஜெயிலுக்குச் சென்றுவிட்டால் இரு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு தன்நிலை என்னாவது?
'நிறுத்துங்க! அமைதியா விசாரிக்காம இப்படியா பிள்ளத்தாச்சியப் போட்டு மூர்க்கமா அறைவிங்க! இப்ப நிறுத்துறிங்களா, இல்லையா,' – தன் பலமனைத்தும் பிரயோகித்துக் கணவனைப் பிடித்து நிறுத்தினாள் கலா. சுந்தரியை இழுத்து அறையில் தள்ளி தானும் உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டாள் கலா.
கதவைத் திறந்து விடுமாறு வெளியே இருந்து கத்திக்கொண்டிருந்தான் விநாயகம்.
'நீங்க மொதல்ல வெளியே போங்க, நான் எல்லாத்தையும் விசாரிக்கிறேன். வெளிய போயிடுங்கன்னா போயிடுங்க'  -கத்தினாள் கலா.
செருப்பை மாட்டிக்கொண்டு விநாயகம் வெளியே செல்லும் சத்தம் கேட்டது.
(தொடரும்)

No comments:

Post a Comment