முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 33
தாட்சாயணி
இல்லத்தின் சமையலறை சுந்தரியின் அண்ணியினுடைய முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.
இரண்டு
நாட்களுக்கு முன்னால் எட்டுக்கு நாலு சிறிய அறையில் எட்டி அடி வைக்கவும் முடியாமல்
காற்றின்றி திணறிய கலா இன்று மாடுலர் கிச்சன் என்ற நவீன வசதியுடன் கூடிய பதினைந்துக்குப்
பதினைந்து சதுரஅடி கொண்ட விசாலமான சமையலறையில் வலம்வந்தாள்.
சுந்தரிதான்
எவ்வளவு சாமர்த்தியக்காரி. அவள் சந்திரன் வீட்டில் இருப்பதை ஓரிருவர் சொல்லத்தான் செய்தார்கள்.
இருந்தாலும் சுந்தரியின் கட்டளைப்படியே கலா இம்மியும் பிசகாமல் விநாயகத்தைச் செயல்பட
வைத்தாள்.
நான்கு
நாட்கள் முன்னதாக சுந்தரியிடமிருந்து கலாவுக்குப் போன் வந்தது.
'அண்ணி,
நீங்களும் அண்ணாவும் எப்படி இருக்கீங்க, சுதா, சுமித்ரா நல்லா இருக்காங்களா அண்ணி?'
'எல்லாரும்
நல்லா இருக்காங்க சுந்தரி. நீஎப்படிஇருக்க?'
'நல்லாவே
இருக்கேன் அண்ணி, என் வாழ்க்கை இப்ப உங்க கையிலதான் இருக்கு அண்ணி'
'என்னடி
சொல்றே? கொஞ்சம் புரியும்படியாச் சொல்லேன்'.
'அண்ணி,
நான் நெனச்ச மாதிரியே எல்லாம் நடந்துக்கிட்டிருக்கு! ஆனா இன்னும் என் கழுத்துல தாலி ஏறல அண்ணி, அதுக்கு
இந்தச் சந்தர்ப்பத்த விட்டா வேற சந்தர்ப்பம் கெடக்கவே கெடைக்காது.'
'அதுக்கு
நான் என்னடி பண்றது சுந்தரி?'
'நீங்க
எல்லாரும் நாளன்னைக்கு வீட்டுக்குக் கௌம்பி வாங்க. இப்பதான் உங்களுக்கு நான் இருக்கற
எடம் தெரிஞ்சமாதிரி காட்டிக்கணும். என் கழுத்துல தாலி கட்டியாகணும்னு அவரைக் கட்டாயப்படுத்துங்க.
திடீர்னு நீங்க செய்யற தாக்குதலை அவரால தனியா நின்னு சமாளிக்க முடியாது. அவரோட மொத
சம்சாரத்தாலும் ஒன்னும் செய்ய முடியாது. இப்ப அவர் என் வயித்துல இருக்கிற கொழந்த மேல
அவ்வளவு பாசமா இருக்காரு. அந்தக் கொழந்தய இழக்க அவரு விரும்பமாட்டாரு. அதனால நீங்க
கொடுக்கற நெருக்கடில அவரு எனக்குக் கட்டாயமா தாலி கட்டிடுவாரு. அதுக்கு அடுத்த நாளே
நல்ல முகூர்த்தநாள். கல்யாணத்துக்கு வேண்டிய தாலி, புடவ, வேஷ்டி எல்லாத்தையும் ரெடி
பண்ணி வெச்சிடுங்க. மறுநாள் கல்யாணத்துக்கு வர்றதுக்கு முக்கியமான சொந்தக்காரங்க சிலரையும்
நமக்குத் தோதா யோசிச்சு வைங்க. போட்டோ, வீடியோ எல்லாத்துக்கும் அரேன்ஜ் பண்ணிடுங்க.
நீங்க
எங்க வீட்டுக்கு வந்தப்புறம் நான் உங்ககிட்ட ஒரு வார்த்தகூட முகம்குடுத்துப் பேசமாட்டேன்.
பேச சந்தர்ப்பமும் இருக்காது. என்னை எதையும் பேச விடாம வாய்க்கு வந்தபடி நீங்க ரெண்டுபேரும்
என்னை நல்லா திட்டணும். அதக்கேட்டுட்டு அவரு கண்கலங்கணும். உங்ககிட்ட இருந்து என்னைக்
காப்பத்தணும்னு அவரு நெனக்கணும். நேரத்துக்கு ஏத்த மாதிரி நீங்கதான் புரிஞ்சி நடந்துக்கணும்.
அண்ணனையும் நீங்கதான் சரியா வழிநடத்தணும். எப்படி இருந்தாலும் கல்யாணம் கட்டாயம் நடந்தே
ஆகணும். அப்பறமா நடக்கறத நான் பாத்துப்பேன். ஒங்க செலவுக்கெல்லாம் ஒரு லட்சரூபா ரெடிபண்ணித்
தாரேன்'.
இலட்ச
ரூபாய் தருவதாகச் சுந்தரி சொன்னது கலாவின் காதில் தேனாய் இனித்தது. சுந்தரியின் திட்டத்திற்கு
எந்தவித பங்கமும் நேர்ந்துவிடாமல் செயலாற்ற வேண்டியது தன் பொறுப்பு என்பது கலாவிற்கு
நன்றாகவே புரிந்தது.
சுந்தரி
எவ்வளவு சாகசக்காரியாக இருக்கிறாள். தானும் அவளிடத்தில் வெகுஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
என்பதும் அவளுக்குப் புரிந்தது.
கலாவும்
லேசுப்பட்டவள் இல்லை. சுந்தரியின் திட்டத்தை நன்றாகவே புரிந்துகொண்டு செயலாற்றினாள்.
இரு பெண்களின் கூட்டுறவால் எல்லாம் இனிதாக முடிந்தது.
சந்திரன்
– சுந்தரியின் திருமணப் புகைப்படம் படுக்கைஅறைச் சுவரில் பெரிதாக மாட்டப்பட்டது. அதனை
ஹாலில் மாட்ட வேண்டும் என்றுதான் சுந்தரி நினைத்தாள். ஆனால் ரொம்பவும் சந்திரனை வளைத்தால்
அது விபரீதமாகி ஒடிந்துவிட்டால் என்ன செய்வது? அவன் சந்தேகப்பட்டுவிட்டால் காரியம்
கெட்டுவிடும். எனவே அதற்குச் சுந்தரி அடம்பிடிக்காமல் விட்டுவிட்டாள். போட்டோவில் சுந்தரி
சந்திரனின் தோளோடு தோள் நின்று மாலையும் கழுத்துமாக வெற்றிப் புன்னகை சிந்திக்கொண்டிருந்தாள்.
தான்
சமைத்து உணவைக் கொண்டுசென்றால் தாட்சாயணி உதாசீனம் செய்கிறாள் என்று சுந்தரியின் அண்ணி
சந்திரனிடம் முறையிட்டாள். அதனால் தாட்சாயணிக்கு வேளாவேளைக்குத் தன்னால் காபி, டிபன்,
சாப்பாடெல்லாம் தரமுடியாது என்று சுந்தரியின் அண்ணி திட்டவட்டமாகக் கூறிவிட்டாள்.
ஒரு வேலைக்காரி
அமர்த்தப்பட்டாள்.
பிறகு
வேளாவேளைக்கு தாட்சாயணியின் அறையில் சிற்றுண்டி, இரவுஉணவு வந்தது. அவள் உண்டாளா? இல்லையா?
என்று யாருக்கும் அக்கறையில்லை.
அவள்
சரியாகச் சாப்பிடுவதில்லை என்னும் செய்தியைச் சந்திரனிடம் சுந்தரி தெரிவிக்க விரும்பவில்லை.
அவளைப் பற்றிச் சிந்திக்கும் தருணங்களை ஏன் ஏற்படுத்தித் தர வேண்டும்?
தாட்சாயணியின்
நகைகளும் புடவைகளும் அண்ணியின் கண்ணில் பட்டன.
சந்திரன்
மனத்தை மெதுமெதுவாகக் கரைத்தாள். புள்ளதாச்சிப் பொண்ணுக்கு அதையெல்லாம் போட்டு அழகு
பாக்கணும். அப்பத்தான் கொழந்த அழகாப் பொறக்கும் என்றாள்.
தாட்சாயணி
ஒன்றும் சொல்லமாட்டாள், உங்களுக்கு என்னென்ன வேணுமோ எல்லாம் எடுத்துப் போட்டுக்கங்க
என்றான் சந்திரன்.
சுந்தரியும்
அண்ணியும் குழந்தைகளும் தங்கள் மனம் விரும்பியபடியெல்லாம் தாட்சாயணியின் அணிகலன்கள்,
ஆடைகள் ஆகியவற்றை அணிந்து பாழ்படுத்தினர்.
தாட்சாயணி
பொக்கிஷம்போல் பாதுகாத்து வைத்த அவளது கல்யாணப் புடவையைக்கூட சுந்தரி ஒருமுறை அணிந்துகொண்டு
வெளியே சென்றாள். அவளது கால் கொலுசில் ஜரிகை மாட்டி புடவையின் பார்டர் டார்டாராகக்
கிழிந்துவிட்டது. 'புடவ பழசாப்போய் நஞ்சி போச்சி' என்று வெகு அலட்சியாகமாகக் கூறி அதனைக்
கழற்றிக் குவியலாகப் போட்டாள் சுந்தரி.
தாட்சாயணிதான்
மனம் பொறுக்காமல் அதனை வாரிச் சுருட்டிக் கொண்டுபோய் நன்றாக நீவி மடித்துத் தனது அறையில்
வைத்துக்கொண்டாள். தனது கல்யாணப் புடவையின் மதிப்பு தெரியாமல் சுந்தரி இப்படிச் செய்துவிட்டாளே
என்று சந்திரனிடம் கூறி அங்கலாய்த்தாள் தாட்சாயணி. 'சரிசரி விடு, இதெல்லாம் ஒரு விஷயமா
பெரிசுபடுத்தாதே! நாளான புடவை நஞ்சிதான் போகும். வேணும்னா இதவிட காஸ்ட்லியா ஒரு புடவ
வாங்கித்தரேன் கட்டிக்கோ', - சந்திரன் சுந்தரியைவிட மிக அலட்சியமாக பதில் சொன்னான்.
உயிரும்
உடலுமான தன்னையே பழசாகி விட்டாள் என்று களைந்து போட்டவன் அஃறிணைப் பொருளாகிய தன் புடவை
மீதா அக்கறைகொள்ளப் போகிறான்?
பல சிறந்த
புராஜெக்டுகளை வடிவமைக்கத் தாட்சாயணிக்கு உதவிய கணினி இப்போது கலாவின் மகள்கள் சுமித்ராவும்
சுதாவும் கேம்ஸ் விளையாடும் விளையாட்டுப் பொருளானது. அவள் சேர்த்து வைத்த கலைப்பொருட்கள்
விளையாட்டுப் பொம்மைகளாயின.
இப்பொழுதெல்லாம்
சந்திரனைப் பள்ளியை விட்டுச் சீக்கிரம் வீட்டிற்கு வரவேண்டும் என்று சுந்தரி வற்புறுத்துவதில்லை.
அவன் வீட்டிற்குச் சீக்கிரம் வந்தால் தாட்சாயணியிடம் பேச அதிகநேரம் கிடைக்கும். அதனால்
தன்னைப் பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்றும் தன்னை அண்ணி நன்றாகப் பார்த்துக்
கொள்கிறார் என்றும் கூறி வைத்தாள்.
(தொடரும்)
No comments:
Post a Comment