Friday, 29 November 2019

மனிதநேயக் கவிஞர் நிக்கி கிருட்டினமூர்த்தி

மனிதநேயக் கவிஞர்
நிக்கி கிருட்டினமூர்த்தி




கவிஞரின் வாழ்வும் படைப்பும்
தமிழிலக்கியத்தில் ஆழங்கால்பட்டவர்; தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களில் தேர்ந்த புலமையர்; மரபுக் கவிதை புனையும் ஆற்றலர்; நாணயத்தின் இரண்டு பக்கங்களாய்க் கவிஞர்; திறனாய்வாளர் என்னும் இரட்டைப் பரிமாணங்களுடன் திகழும் மனிதநேய மாண்பாளர்; பெண்ணியச் சிந்தனையாளர்; ஆசிரியப் பணி மட்டுமன்றி, அச்சுப் பணி, கட்டிடப் பணி என பல்துறையிலும் தடம் பதித்தவர்; இயற்கை மீதான ஈடுபாடும் சமுதாய அக்கறையும் மிக்கவர் என இவரை அறிமுகப்படுத்தலாம். நிக்கி என்ற புனைபெயருக்குச் சொந்தமான கவிஞர் நிக்கி கிருட்டினமூர்த்தியின் வாழ்வும் இலக்கியப் பணியும் குறித்த இந்நூல் அவரது பன்முக ஆற்றலைப் பருந்துப் பார்வையாய் வெளிப்படுத்துகிறது.
பிறப்பு
திண்டிவனம் வட்டத்தில் நெல் வயல்களும் நீர் நிலைகளும் தாமரைத் தடாகங்களும் தென்னந் தோப்புகளும் முந்திரிக் காடுகளும் நிறைந்த இயற்கை எழில்மிக்க அனுமந்தை என்னும் கிராமம் உள்ளது. இவ் ஊரின் கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடல் ஆர்ப்பரிக்கிறது. இவ்ஊரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் விடுதலைக் கவிஞர் பாரதியும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் மக்கள் தலைவர் வ. சுப்பையாவும் கவிஞர் தமிழ்ஒளியும் வாழ்ந்த சிறப்புமிக்க புதுச்சேரி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இராமாயண காலத்தில் சீதையைச் சிறைமீட்க அனுமன் தன் வானரக் கூட்டங்களோடு இலங்கை சென்றபோது வழியில் இங்கு ஓய்வெடுத்துச் சென்றதாகவும் அதனால்தான் இவ் ஊருக்கு அனுமந்தைஎன்ற பெயர் தோன்றியதாகவும் கதையன்று இவ் ஊரில் வழங்கப்பெறுகிறது.
இவ் ஊரில் நடராசன் - லோகாம்பாள் தம்பதியருக்கு 1961ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் நாள் மூன்றாம் மகனாய்க் கிருட்டினமூர்த்தி பிறந்தார். கிருட்டினமூர்த்தியின் தமையனார் சுந்தரமூர்த்தி, தமக்கையார் வசந்தா என்பவராவர்.
இளமைக் கல்வி : கணக்குப் புலி
            பெற்றோர் தம் மகன் கிருட்டினமூர்த்தியைத் தமது வீட்டிற்கு வெகு அருகாமையில் இருந்த தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர். கிருட்டினமூர்த்தி வெகு ஆர்வமாகக் கல்வி பயின்றார். பிற பாடங்களைக் காட்டிலும் கணிதப் பாடத்தில் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தார். இச் சிறப்பை அறிந்த கிராமத்துப் பெருமக்கள் இரவு நேரங்களில் ஒன்றாக அமர்ந்து அளவளாவிக் கொண்டிருக்கையில் கிருட்டினமூர்த்தியை நடுவே அமர்த்தி பல்வேறு கணக்குகளைக் கொடுத்து விடைசொல்லுமாறு கேட்பார்களாம். அவர்கள் கேட்கும் கடினமான பின்னக் கணக்குகளையும் மனக்கணக்காகச் செய்து அவற்றிற்குரிய விடைகளை மிக விரைவாகச் சொல்லி அனைவரது பாராட்டுகளையும் பெறுவாராம் கிருட்டினமூர்த்தி.  அப் பயிற்சியும் ஆற்றலுமே இன்றும் கணக்கிடும் சாதனங்கள் எதுவுமின்றிக் கடினமான கணக்கீடுகளைத் தம் வணிகத்தில் மிக விரைவாகச் செய்யும் ஆற்றலைத் தந்ததாக அவர் கருதுகிறார்.
உயர்நிலைக் கல்வி : ஊட்டியது வைராக்கியம்
தொடக்கக் கல்வியைச் சிறப்பாக முடித்து ஆறாம் வகுப்புப் பயிலுவதற்கு ஊரிலேயே இருந்த உயர்நிலைப் பள்ளியில் சேர வேண்டியிருந்தது. முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் கிராமங்களில் கல்வியின் தேவை பெரிதாக உணரப்படவில்லை. பிறந்த இடத்திலேயே அனைவரும் விவசாயம் முதலான ஏதோ ஒரு தொழில் செய்து முடங்கிக்கிடந்த காரணத்தால் நன்றாகப் படித்தால் வேலைக்குச் செல்லலாம் என்ற விழிப்புணர்வும் இல்லாதிருந்தது. மேலும் இன்றைய காலகட்டத்தைப் போல் அப்போது அரசுப் பள்ளிகளில் சத்துணவோ இலவச நூல்களோ வழங்கும் திட்டம் வழக்கிற்கு வரவில்லை. எனவே, பாடப் புத்தகங்கள் வாங்குவதை வீண்செலவு என்றே பெற்றோர் நினைத்தனர். அதனால் பாடப்புத்தகங்கள் வாங்கப் பெரும்பொருள் செலவழிப்பதைக் காட்டிலும் தங்கள் குழந்தைகளின் படிப்பே தேவையற்றது என்ற முடிவுக்கும் வந்தனர்.
கல்விநலமற்ற காரணத்தால் அக்காலத்தினர் பலர் வருமானத்திற்குள் சிக்கனமாகத் தங்கள் வாழ்க்கையை வகுத்துக்கொள்ளும் திறன் அறியாதவர்களாகவும் இருந்தனர். கிருட்டினமூர்த்தியின் பெற்றோரும் அதற்கு விதிவிலக்கானவர் அல்லர். வருகின்ற வருமானத்தை முறையாகச் செலவிடும் நெறியறியாமல் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மீதம் வைக்காமல் அன்றன்றைக்குத் தடபுடலாக வருவோர் போவோர் அனைவருக்கும் விருந்துவைத்துச் சாப்பிட்டுத் தீர்த்துவிடும் இயல்பினராக இருந்ததால் கிருட்டினமூர்த்தியின் குடும்பத்தில் பெரும்பாலும் வறுமைச் சூழலே நிலவி வந்தது. அதன் காரணமாகத் தம் மகன் கிருட்டினமூர்த்தியை ஆறாம் வகுப்பில் சேர்க்க மறுத்தார் தந்தை நடராசன். இனிக் கல்வி தேவையில்லை என்றும் குலத்தொழிலைக் கற்குமாறும் வற்புறுத்தினார். கல்வியின் மீது தீராத ஆர்வம் இருந்தமையால் எப்படியும் ஆறாம் வகுப்பு சேர்ந்தே தீருவது என்று கிருட்டினமூர்த்தி அழுது அடம்பிடித்தார். அதைக் கண்ட அவர் தாயார் லோகாம்பாள் திண்டிவனத்தில் வசித்துவந்த தம் தம்பியிடம் புத்தகங்கள் வாங்கிக்கொள்ள உதவி கேட்குமாறு அனுப்பிவைத்தார். தாய்மாமன் அவ் உதவியை மனதாரப் புரியவில்லை. எனினும், வெறுப்புடனும் எரிச்சலுடனும் முப்பத்தைந்து ரூபாய் இருபது காசுகள் செலவழித்துப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். கிருட்டினமூர்த்தி முனைவர் பட்டம் சேர்ந்த காலகட்டத்தில் தாய்மாமன் இறந்துவிட்டார். அப்போது மாமாவின் மகள் ஆறாம் வகுப்பு சேரவேண்டி இருந்தது. தந்தையின் இறப்பால் புத்தகங்கள் வாங்கஇயலா நிலை அவளுக்கு ஏற்பட்டது. அதனை அறிந்த கிருட்டினமூர்த்தி தன் இளமைக் காலத்தில் மாமா செய்த உதவிக்குக் கைமாறாக அவருடைய மகளுக்கு அவர் வாங்கித்தந்த அதே திண்டிவனம் வெங்கடேஸ்வரா புக் ஸ்டாலில் நூற்றுமுப்பத்தைந்து ரூபாய் இருபது காசுகள் செலவிட்டுப் புத்தகங்கள் வாங்கிக்கொடுத்துத் தம் நன்றியைத் தவறாது செலுத்தினார்.
மாமாவின் மனஉணர்வு சிறுவன் கிருட்டினமூர்த்தியிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இனிப் புத்தகங்களுக்காக யாரிடமும் கையேந்துவதில்லை என்ற வைராக்கியமும் பிறந்தது. அதுமுதல் தாம் படிக்கும் புத்தகங்களைக் கிழிந்துபோகாமல் பத்திரமாகப் போற்றிப் பாதுகாத்துப் படித்தார். அந்த ஆண்டுப் படிப்பில் வெற்றிபெற்றதும் அப் பழைய புத்தகங்களை விற்று, அந்தப் பணத்திலேயே இனிப் படிக்கவேண்டிய அடுத்த வகுப்பிற்கான பழைய புத்தகங்களை வாங்கிக்கொள்வதை வாடிக்கையாக்கிக் கொண்டார். இவ்வாறு ஏழாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பாடப்புத்தகப் பரிமாற்றம் அவர்தம் கல்வியை எளிதாக்கியது.
துரதிர்ஷ்டவசமாகப் பதினோறாம் வகுப்பிற்குச் சென்றபோது பழைய பாடத்திட்டம் அனைத்தும் மாறிப்போனதால் பத்தாம் வகுப்புப் பாடப் புத்தகங்களை விற்கஇயலாநிலை ஏற்பட்டது. மேலும் பதினோறாம் வகுப்பிற்கும் புதிய புத்தகங்களை வாங்கவேண்டியதாகி விட்டது. அப்போதும் புத்தகங்கள் காரணமாகப் படிப்பைத் தொடரஇயலாத நிலை ஏற்பட்டது. கட்டாயம் படித்தே தீருவேன்என்று வீட்டில் அழுது அடம்பிடித்தார் கிருட்டினமூர்த்தி. வேறுவழியின்றி அவர் தந்தையார் தமது வீட்டை நூறு ரூபாய்க்கு அடமானம் வைத்துப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். வறுமைச் சூழல் காரணமாக இக்கடனைக் கட்டி வீட்டை அடமானத்திலிருந்து மீட்க இயலா நிலை தொடர்ந்தது. நூறு ரூபாய் கடன் பத்தாண்டுகளில் வட்டிமேல் வட்டியாகி மூவாயிரம் ரூபாயாக வளர்ந்துவிட்டது. கிருட்டினமூர்த்தி முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்தபோது அவருக்குப் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு வழங்கிய உதவித்தொகையிலிருந்து அத் தொகையைக் கொடுத்து வீட்டை மீட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தமிழ்க் கல்வி : தந்தது வருமானம்
அறுபடைவீடுகளுக்கு நிகரான சிறப்புப் பெற்றது திண்டிவனத்திற்கு அருகில் அமைந்துள்ள மயிலம் என்னும் முருகன் குடிகொண்டுள்ள திருத்தலமாகும். இதனைப் பொம்மபுர ஆதீனம் நிர்வகித்து வருகிறது. இந்த ஆதீனம் சிவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியையும் நடத்திவருகிறது. இங்குதான் அக்காலத்தில் தமிழ்ப் புலவர்கல்விப் படிப்பு நடத்தப்பெற்றது. இப் புலவர் கல்வி இளங்கலை இலக்கியமாக (B.Litt.) 1977இல் மாற்றப்பெற்றது.
கிருட்டினமூர்த்தியின் ஊரான அனுமந்தைக்கு அருகாமையில் இக் கல்லூரி அமைந்திருந்ததன் காரணமாக இங்குச் சேர்ந்து தமிழ் படிக்குமாறு தமையனார் சுந்தரமூர்த்தி ஆலோசனை வழங்கினார். மேலும் அவர் தாபால்காரராகப் பணியாற்றி வந்தமையால் தம் வருவாயைத் தம்பியின் முதலாண்டுப் படிப்பிற்குச் செலவிட முன்வந்தார். அனுமந்தையிலிருந்து மயிலம் 50 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த காரணத்தால் கிருட்டினமூர்த்தி விடுதியில் தங்கிப் படித்தார்.
அக்கால கட்டத்தில் முருகையன் என்பவர் மயிலத்தில் தொழில்தொடங்க சிலநாள் பழக்கத்தில் சுந்தரமூர்த்தியிடம் உதவிகேட்டார். முருகையனைப் பற்றிப் பெரிதும் அறிமுகம் இல்லாதபோதும் அதனைப் பற்றிச் சிந்திக்காமல் தாம் வறுமையில் இருந்தபோதிலும் தயாள குணத்தின் காரணமாகத் தம்மிடம் இருந்த பணத்தைக் கொடுத்ததோடன்றித் தம் மனைவியிடமிருந்த சில நகைகளையும் தான் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தையும் கொடுத்துவிட்டார். அந் நண்பரோ அதற்குப் பின்னர் யாதொரு செய்தியுமின்றிக் காணாமல் போய்விட்டார். மேலும் மயிலத்தில் மண்வளப் பாதுகாப்புத் திட்டத்தில் பணிபுரிய சுந்தரமூர்த்தியின் பெயரைப் பயன்படுத்தித் துரை என்பவரிடம் இரண்டாயிரம் ரூபாய்க்குச் சிமெண்ட்டு மூட்டைகளைக் கடனாகப் பெற்றதுடன் அப் பணத்தையும் தராமல் ஏமாற்றிவிட்டு எடுத்த வேலையையும் முடிக்காமல் பாதியிலேயே போட்டு, ஊரைவிட்டுக் காணாமல் போய்விட்டார்.
சுந்தரமூர்த்தியின் பெயரைப் பயன்படுத்தியதால் அவருடைய தம்பியான கிருட்டினமூர்த்தி மயிலம் கல்லூரியில் படிப்பதை அறிந்து அவரின் உணவுவிடுதிக்குத் தேடிவந்தார் துரை. பின்னர் முருகையனால் சுந்தரமூர்த்தியும் ஏமாற்றப்பட்டதை அறிந்து வருந்தினார் துரை. தம் தமையனார் இழந்த பணத்தையும் பொருட்களையும் மீட்டாக வேண்டும் என்று கிருட்டினமூர்த்தி துரையிடம் சொல்ல, முருகையன் எடுத்து நடத்திய மண்வளப் பாதுகாப்புத் திட்டத்தின் வேலைவாய்ப்பினைக் கிருட்டினமூர்த்தி ஏற்று நடத்த ஏற்பாடு செய்வதாகவும் ஆனால் அதற்கு முருகையனிடமிருந்து மறுப்பின்மைக் கையெழுத்து பெற்றுவருமாறும் ஆலோசனை கூறினார். மேலும் அவ்வுதவி செய்யவேண்டுமாயின் முருகையனிடம் தாம் இழந்த இரண்டாயிரம் ரூபாயை வாங்கித் தரவேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். அதன்படி கிருட்டினமூர்த்தி, புதுச்சேரி பெத்துசெட்டி பேட்டையில் முருகையனின் இருப்பிடத்தைக் கண்டறிந்து செல்ல முருகையன் அங்கு வருவதே இல்லை என்று அவனுடைய தந்தையார் கைவிரித்தார். ஆனாலும் தொடர்ந்து பலநாள் நடையாய் நடந்து ஒருவாறு இரண்டாயிரம் ரூபாயை அவருடைய தந்தையாரிடமிருந்து பெற்றுத் துரையிடம் அளித்தார். தந்தையும் இனி முருகையன் தொடர்பாக ஒரு பைசாகூட தர முடியாது என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
மறுப்பின்மைக் கையெழுத்து வாங்க முருகையனைத் தேடி வாரக்கணக்கில் அலைந்தார் கிருட்டினமூர்த்தி. வழக்கமாகத் திண்டிவனம் சைக்கிள் கடை ஒன்றில் வாடகை சைக்கிள் எடுக்க வருவார் என்ற செய்தியறிந்து பலநாள் முயற்சியின் பலனாய் ஒருநாள் முருகையனைக் கையும்களவுமாய்ப் பிடித்து, ஒருவாறு மறுப்பின்மை கையெழுத்து வாங்கி அப் பணியைச் செய்துமுடிக்க உறுதி பூண்டார்.
தாங்கள் செய்துவந்த வேலை பாதியில் நின்றுபோனதால் வருவாய் இன்றித் தவித்த கூலித் தொழிலாளர்கள் கிருட்டினமூர்த்திக்கு உதவுவதாக வாக்களித்தனர். அதன்படி தினமும் தங்கள் உணவுக்கு மட்டும் ஏற்பாடு செய்யும்படியும் மிச்சப் பணத்தை அரசிடமிருந்து முதல் தவணை பெற்ற பின்னர் மொத்தமாக வாங்கிக்கொள்வதாகவும் உடன்படிக்கை செய்துகொண்டனர். அவர்களுக்குரிய உணவைத் தானே தந்துவிடுவதாகவும் பணத்தைப் பின்னர் தரலாமென்றும் மயிலத்தின் பாரம்பரிய உணவுவிடுதியின் உரிமையாளர் புலவர் செல்வம் என்பவர் உதவிக்கரம் நீட்டினார். அனைவரிடமும் வெகு இயல்பாக நட்பு பாராட்டும் கிருட்டினமூர்த்தியின் பண்பே இத்தகைய உதவிகளை எளிதாகப் பெறுவதற்குத் துணைநின்றன எனலாம்.
மலைப் பகுதியில் புல்டோசர்தோண்டிய மணற் குவியலை வரப்பு கட்டி அவற்றிற்கிடையே குழாய்களைப் பதித்து அவற்றில் மழைக்காலங்களில் பெருக்கெடுத்துவரும் மழைநீரை மலையடிவார கிராமங்களுக்கு மடைமாற்றம் செய்யும் அப்பணி மண்வளப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் அமைந்த பணியாகும். அப்பணியைத் திறம்படவும் சாதுர்யமாகவும் துணிச்சலுடனும் பதினெட்டே வயது நிரம்பிய கிருட்டினமூர்த்தி ஏற்று நடத்தினார். அப்பணி மூலம் கிடைத்த வருவாயைச் சேர்த்துவைத்துப் பின்னர்த் தாம் பயின்ற இளங்கலை மூன்றாண்டுகள், முதுகலை இரண்டாண்டுகளுக்கான  கல்விக் கட்டணம், உணவு விடுதிக் கட்டணம் முதலானவற்றிற்குப் பயன்படுத்திப் பிறர் உதவியின்றித் தம் சொந்த உழைப்பில் படித்து முடித்தார் கிருட்டினமூர்த்தி. அவ்வாறு அவர் எளிதில் தம் பட்டப் படிப்புகளை முடிப்பதற்கான பொருளாதார மேம்பாட்டிற்கு உதவிபுரிந்த மண்வளப் பாதுகாப்புத் திட்டப் பொறியாளர் திரு டெக்ளேசன் அவர்களை இன்றளவும் நன்றியுடன் நினைவுகூர்கிறார் கிருட்டினமூர்த்தி.
மேலும் முருகையனிடம் தான் தந்துவிட்ட  கைக்கடிகாரத்தை மீட்க வேண்டும் என்று தமையனார் கூறினார். கிருட்டினமூர்த்தி தன் தமையனாரின் வேண்டுகோளை நிறைவேற்ற, முருகையனிடம் கடிகாரத்தைப் பற்றிக் கேட்டார். முருகையன் அக் கடிகாரத்தைத் திண்டிவனத்தில் ஒரு தேநீர்க் கடைக்கு வரும் நண்பரிடம் விற்றுவிட்டதாகவும் அவர்பெயர் முனுசாமி என்றும் அவரிடமிருந்து அக்கடிகாரத்தை மீட்பது இயலாது என்றும் கூறிக் கைவிரித்தார். குறிப்பிட்ட அத் தேநீர்க் கடைக்குச் சென்று முனுசாமியின் முகவரியைப் பெற்றார். கல்லூரிவிட்டுத் திரும்பியதும் மாலையில் முனுசாமி வசித்த கிடங்கல் என்னும் இடத்திற்குச் சென்றார். வீட்டில் அவர் மனைவி மற்றும் குழந்தைகளே இருந்தனர். தன் கணவனைத் தேடுவது வீண் என்று கூறிய அவருடைய மனைவி வீட்டிற்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார். தம் தேடல் பயணத்தைத் தொடர்ந்தார் கிருட்டினமூர்த்தி. மறுநாளும் முனுசாமியைத் தேடி அவர் வீட்டிற்குச் சென்றார். குழந்தைகளுக்கு இரு பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கிச் சென்று கொடுத்தார். அன்றும் அவரால் முனுசாமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு அடுத்த நாளும் பிஸ்கட்டுடன் குழந்தையைக் காணச் சென்றதும், மனம் இளகிய முனுசாமியின் மனைவி, தன் கணவன் கிடங்கலிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஓரிடத்தில் இரவுநேரக் கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ள செய்தியைக் கூறினார். மனம் தளராமல் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அங்கே சென்றார் கிருட்டினமூர்த்தி. கிருட்டினமூர்த்தியின் அணுகுமுறையில் மகிழ்ந்த முனுசாமி, கடிகாரம் தன்னிடம் இல்லையென்றும் மற்றொருவருக்காக அதனை வாங்கிக் கொடுத்ததாகவும், அந் நபர் அன்று வேலைக்கு வரவில்லையென்றும், அவரிடமிருந்து மறுநாள் வாங்கித் தருவதாகவும் உறுதியளித்தார். அவர் கூறியதுபோன்று மறுநாளும் நள்ளிரவு சென்றார் கிருட்டினமூர்த்தி. தான் கூறியபடியே முனுசாமி கைக்கடிகாரத்தைப் பெற்று வைத்திருந்தார். அவரிடம் இருநூறு ரூபாயைச் செலுத்தித் தமையனாரின் கைக்கடிகாரத்தை மீட்டார். அவ்வேளையில் பேருந்துகள் இல்லாததால் முனுசாமியே கிருட்டினமூர்த்தியை ஒரு லாரியில் ஏற்றி அனுப்பினார். விழுப்புரம் செல்லும் அந்த லாரி கூட்டேரிபட்டு சாலை வரை மட்டுமே செல்லவிருந்தது. எனினும் முனுசாமியின் வேண்டுதலின் பேரில் கிருட்டினமூர்த்தியை மயிலம் விடுதி வரை கொண்டுசென்று விட்ட நிகழ்வு மறக்கமுடியாத ஒன்றாகும்.
தான் மீட்ட கடிகாரத்தைத் தமையனாரிடம் சேர்ப்பித்து மகிழ்வித்தார் கிருட்டினமூர்த்தி. ஒரு வேலையை எடுத்தால் பின்வாங்காது வெற்றியுடன் முடிக்கும் இத்தகைய பண்பு பாராட்டத்தக்கதாக அமைந்திருந்தது.
இவ்வாறு கிருட்டினமூர்த்தி தமிழ் படித்து 1981 ஆம் ஆண்டு கல்லூரியில் முதல் மாணவராகத் தேறினார். கல்லூரி முதல்வர் து. கார்த்திகேயன், பேராசிரியர்கள் வே. சிவசுப்பிரமணியன், சு. திருநாவுக்கரசு, பழ. முத்தப்பன், க. விநாயகம், மா. சற்குணம் முதலானோரின் நன்மதிப்பிற்குப் பாத்திரமானவராகத் திகழ்ந்தார்.
முதுகலைக் கல்வி
சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் வகுப்பில் சேர்ந்து விடுதியில் தங்கிப் படித்தார். அப்போதும் குடும்பத்தின் வறுமை நிலை தொடர்ந்தது. அக்கால கட்டத்தில் கம்பன் கழகம் முதலான அமைப்புகள் நடத்திய பல்வேறு கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று அதன்மூலம் கிடைத்த பணத்தைத் தம் படிப்புச் செலவிற்குப் பயன்படுத்திக் கொண்டார். நூல்களை வாங்கப் பணமின்மையால் மறைமலையடிகள் நூலகம், கன்னிமரா நூலகம், சென்னைப் பல்கலைக்கழக நூலகம், தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம் ஆகிய நூலகங்களைப் பயன்படுத்திக் குறிப்புகள் எடுத்துப் படித்தார்.
தம் இலக்கியப் புலமை மற்றும் சுறுசுறுப்பின் வாயிலாக மாநிலக் கல்லூரியில் பயிற்றுவித்த அத்தனைப் பேராசிரியர்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவராகத் திகழ்ந்தார். பேராசிரியர் மெ. சுந்தரம், முனைவர் இரா. இளவரசு, கவிஞர் மேத்தா, கவிஞர் பொன். செல்வகணபதி உள்ளிட்டோர் அவர்மீது அன்பைப் பொழிந்தனர்.
1983இல் அனைத்துப் பாடங்களிலும் சிறப்புநிலை (Outstanding) மதிப்பீட்டுடன் வெற்றி பெற்றார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி வாயிலாக இதழியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி வாயிலாக இளநிலைக் கல்வியியல் கல்வியை முடித்து அதைத் தொடர்ந்து முதுகலைப் பட்டமும் (எம்.எட்.) பெற்றுள்ளார்.
ஆய்வுப் பணி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களில் மார்க்சியத் தாக்கம்என்னும் தலைப்பில் மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ந. பிச்சமுத்து அவர்களிடம் இளமுனைவர் பட்ட (எம்.ஃபில்.) ஆய்வை நிகழ்த்தி 1987இல் பட்டம் பெற்றார்.
இளமுனைவர் பட்டம் முடித்தபோது வேலைக்குச் சென்று சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சென்னை அண்ணாநகரிலுள்ள எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து வகுப்பில் படித்த மாணவர்களின் அபிமானத்திற்குரிய ஆசிரியரானார்.
அந்த ஆண்டில்தான் முதன்முதலாக முனைவர் பட்ட ஆய்வு நிகழ்த்த உதவித்தொகை அளிக்கும் தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகப்படுத்தியது. அத் தேர்வை முனைப்புடன் எழுதி வெற்றியும் பெற்றார் கிருட்டினமூர்த்தி.
பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) நடத்திய ஆய்வாளர் தகுதித் தேர்வில் அகில இந்திய அளவில் வெற்றிபெற்று முனைவர்பட்ட ஆய்வினை மேற்கொண்டமை அவருடைய புலமையைத் தெற்றென வெளிப்படுத்தும்.
உதவித் தொகையுடன் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் சேர்ந்து அத்துறையின் தலைவர் பொன். கோதண்டராமன் (பொற்கோ) அவர்களிடம் தமிழ்ச் சிறுகதை இலக்கிய உத்திகள் : கு. அழகிரிசாமி சிறுகதைகள் வழிச் சிறப்பாய்வுஎன்னும் தலைப்பில் முனைவர் பட்ட (பிஎச்.டி.) ஆய்வை நிகழ்த்திச் சிறப்புநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் தேசிய கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார். அக் கட்டுரைகள் கருத்தரங்குகளில் வெளியிடப்பெற்று ஆய்வுக்கோவைகளை அணிசெய்கின்றன. சிங்கப்பூர் டின்டேல் கல்லூரியும் கலைஞன் பதிப்பகமும் இணைந்து நிகழ்த்திய பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கிலும் பங்குகொண்டு ஆய்வுக் கட்டுரை வழங்கியுள்ளார்.
பிறதுறைப் புலமை
முனைவர்ப் பட்டம் நிகழ்த்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பெற்ற மாலைநேர பட்டயப் படிப்புகளில் சேர்ந்தார். இரண்டாண்டுகள் ஒப்பிலக்கியமும் இரண்டாண்டுகள் நாட்டுப்புறவியலும் கற்று அவற்றில் நிறைசான்றிதழ்ப் பட்டயங்கள் பெற்றார்.
கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் அடிக்கருத்துகள் என்னும் தலைப்பில் ஒப்பிலக்கியம் பட்டயப் படிப்பிற்கான (Diploma in Comparative Literature) ஆய்வையும் கதைப்பாடல்களில் பண்பாட்டுச் செய்திகள் என்னும் தலைப்பில் நாட்டுப்புறவியல் பட்டயப் படிப்பிற்கான (Diploma in Folklore) ஆய்வையும் நிகழ்த்தியுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் கல்வி படித்து எம்.எட். பட்டமும் பெற்றார். மதுரைப் பல்கலைக் கழகத்தில் தொலைதொடர்புக் கல்வி வாயிலாக இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் சான்றிதழ்க் கல்வியைப் படித்து முடித்தநிலையில் அவ்வாண்டு அதே பாடத்தில் முதுகலைப் பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட, அதன் முதல் கட்ட மாணவராகச் சேர்ந்து முதல்நிலையில் தேர்ச்சிபெற்று முதுகலைப் பட்டமும் பெற்றார் கிருட்டினமூர்த்தி.
இவ்வாறு, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரைப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக் கழகங்களிலும் கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாகத் தம் கல்விப் புலமையை வளர்த்துக் கொண்டார்.
மணவாழ்வு
பாரதியார், பாரதிதாசன், பெரியார் படைப்புகளைப் படித்ததன் வாயிலாக முற்போக்கு எண்ணம் கொண்டவராகத் திகழ்ந்த கிருட்டினமூர்த்தி, இலக்கியங்களைப் படித்ததன் வாயிலாகக் காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதிலும் அதுவும் கலப்புத் திருமணமாக அமையவேண்டும் என்பதிலும் தீவிர எண்ணம் கொண்டிருந்தார். அதன்படியே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் தாம் முனைவர் பட்டம் நிகழ்த்திய காலகட்டத்தில் மொழித்துறையில் பேராசிரியர் அ.அ. மணவாளன் அவர்களிடம் முனைவர் பட்டம் நிகழ்த்திய நிர்மலா என்பவர் தன்னை விரும்ப அவரையே காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். புரோகிதர் வைத்துத் திருமணம் செய்துகொள்ளும் வைதீக நெறியை எதிர்த்ததோடன்றி தாமும் அவ்வாறே தம் தாயார் தாலியை எடுத்துத் தர மங்கல அணி அணிவித்துத் தம் காதலியை மணந்துகொண்டவர். உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் தலைமையில் முனைவர் இரா. இளவரசு, கவிஞர் இன்குலாப், கவிஞர் செல்வ கணபதி, கவிஞர் துவாரகைக் கண்ணன் முதலியோர் வாழ்த்துரைக்க மணவிழா வரவேற்பை சென்னை அண்ணா நகர் டி.ஆர். திருமண மண்டபத்தில் பெருஞ்சிறப்பாக நிகழ்த்தினார். இவ்வாறு சொல் வேறு செயல் வேறு என்று இல்லாத உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர் அவர்.
பணி     
முனைவர்ப் பட்டம் பெற்றிருந்தபோதும் அரசாங்கப் பணியில் தான் கட்டாயம் சேர்ந்தே ஆகவேண்டும் என்ற பேரவா அற்றவர். தம் மனைவி அரசாங்கக் கல்லூரியில் பணியாற்றுவதால், தாமும் அரசு வேலைக்குச் செல்வது சரியில்லை என்ற கொள்கை உடையவர். ஒரு வீட்டில் அனைவரும் அரசு வேலைக்குச் சென்றுவிட்டால் மற்றவருக்கு அவ் வாய்ப்பு கிடைக்காது என்றும் ஒருவீட்டில் ஒருவர் அரசு வேலை செய்தால் போதுமானது என்றும் அதுவே, வாழ்க்கைக்குரிய நிலையான வருவாயைத் தரப் போதுமானது என்ற கொள்கையின் காரணமாக வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிவாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்து வணிகத்தில் ஈடுபட்டார். காரைக்கால், ஆர்.வி.எஸ். கல்வியியல் கல்லூரி நிர்வாகத்தின் வற்புறுத்தல் காரணமாக அக் கல்லூரியில் துணைமுதல்வராக 2006 முதல் 2008 வரை பணியாற்றித் தம் வணிகத்தை விரிவுபடுத்தக் கருதி விருப்ப ஓய்வு பெற்றார்.
வெளியீடுகள்
            பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களில் மார்க்சியத் தாக்கம் (1993), தமிழ்ச் சிறுகதை இலக்கிய உத்திகள் : கு. அழகிரிசாமி சிறுகதைகள் வழிச் சிறப்பாய்வு (1999), தமிழிலக்கியச் சிந்தனைகள் (2010), தமிழிலக்கியத்தில் பெண்ணியச் சிந்தனைகள் (2012), தமிழிலக்கியக் கருவூலம் (2013), தமிழிலக்கியப் பேழை (2016) ஆகிய திறனாய்வு நூல்களை வெளியிட்டுள்ளார்.
            பெண்ணிய எழுத்தாளர் ஒளவை நிர்மலா (2015) என்ற வாழ்க்கை வரலாற்று நூல் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.
மானுடம் பேசு (2008), கேட்காத வரங்கள் (2015), மரப்பாச்சி பொம்மைகள் (2016) ஆகியவை இவருடைய கவிதைப் படைப்புகளாகும்.
இளைய நிலாவே... (2015) என்பது இவருடைய குழந்தை இலக்கியப் படைப்பாகும்.
பதிப்புப் பணி
நூல்கள் பல எழுதும் ஆற்றல் இருந்தும் அவற்றைப் பதிப்பித்து வெளியிடுகின்ற வழிவகை தெரியாமல் எத்தனையோ பேர் தமது நூல்களைப் பரணில் தூசுப்படிய வைத்துள்ளனர். அத்தகைய நண்பர்களுக்கு நூலை வெளியிட ஆற்றுப்படுத்தியதுடன் அவர்தம் நூல்களில் காணப்பெறும் பிழைகளைக் களைந்து தொகுத்து, வகுத்து முறைப்படுத்தி இலாப நோக்கின்றி நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தளிக்கும் பணியையும் இவர் செய்துவருவது பாராட்டத் தக்கதாகும்.
விருதும் பாராட்டும்
இவருடைய தமிழிலக்கியக் கருவூலம் என்னும் நூல் 2013ஆம் ஆண்டின் சிறந்த திறனாய்வு நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் புதுவை அரசின் கம்பன் விருதும் பத்தாயிரம் உரூபாய் பொற்கிழியும் பெற்றது.
சோலை பதிப்பகத்தின் தமிழ் வள்ளல், எழுத்துச்சுடர், கவிச்சுடர், பாரதி கவிச்செல்வர், பாரதிதாசன் கவிச்செல்வர், கவியரசர் கண்ணதாசன் கவிச்செல்வர், கவித்தென்றல், கவிமுகில் முதலான விருதுகளைப் பெற்றுள்ளார். திருவையாறு, தமிழய்யா கல்விக் கழகத்தின் செந்தமிழ்த் திலகம், இலக்கியச்சுடர், செந்தமிழ்ச் சிற்பி, ஆய்வுச் சுடர் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.    
காரைக்கால். இந்து சமய இலக்கியக் கழகம் வாழ்நாள் சாதனையாளர் (2013) விருதையும் ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை சாதனைச் செம்மல் (2013) விருதையும் சென்னை, தமிழ்நாடு திருவள்ளுவர் கலை இலக்கியச் சங்கம் திருவள்ளுவர் இலக்கிய விருதையும் (2014) அளித்துச் சிறப்பித்துள்ளன. காரைக்கால் மாவட்டக் கலைஞர்கள் மாமன்றம் சிறப்புச் சான்றிதழ் (2015) அளித்துச் சிறப்பித்துள்ளது.
புதுச்சேரி தாழி அறக்கட்டளை நிகழ்த்திய 2013-14 ஆண்டிற்கான பன்னாட்டு அளவிலான கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு திருக்குறளில் துறவறம் என்னும் கட்டுரைக்கு ரூபாய் மூவாயிரம் பரிசு பெற்றார்.
இலக்கியப் பணி
தமிழுலகிற்கு இருபத்தைந்தாண்டுகளாகத் தொடர்ந்து தொண்டுபுரிந்து வருகிறார். காரைக்கால், உலகத் தமிழ்ப் பேரவையின் தலைவராகப் பல்வேறு இலக்கியப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறார். பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.
ஐம்பதுக்கு மேற்பட்ட கவியரங்குகளில் கவிதை படைத்துள்ளார். இதழ்களிலும் முகநூலிலும் தொடர்ந்து கவிதைகள் படைத்து வருகிறார். சிங்கப்பூரிலிருந்து இயங்கும் நிலாமுற்றம் முகநூல் கவிதைப் பட்டறை இவரது கவிதைகளுக்கு இருமுறை சிறப்புத் தங்கமுத்திரை அளித்துப் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
ஐம்பதுக்கு மேற்பட்ட உரையரங்குகளில் இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துகளில் உரை நிகழ்த்தியுள்ளார்.
இருபதுக்கு மேற்பட்ட இலக்கிய விழாக்களை நடத்தியுள்ளார்.
பண்புநலன்
அனைவருக்கும் உதவும் இரக்க மனம் கொண்டவர். சுழற்சங்கத்தில் தலைவராகவும் உறுப்பினராகவும் வீற்றிருந்து சுனாமி, குஜராத் பூகம்பம், தானே புயல் முதலான இயற்கைப் பேரிடர்களின்போது பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டுள்ளார். முதியோர் இல்லங்களுக்கும் பிற தொண்டு நிறுவனங்களுக்கும் தம்மாலான உதவிகளைப் புரிந்துவரும் தொண்டுள்ளம் மிக்கவர்.
பெண்களுக்குச் சம உரிமை அளிக்கவேண்டும் என்னும் சிந்தனையைச் செயல்வடிவம் ஆக்கியர். ஆடவர் பெரும்பாலும் தன்னையே முன்னிறுத்திக் கொள்ளும் செயலை விடுத்து ஆண் - பெண் இருபாலாரையும் சமமாக நோக்கும் விரிந்த மனத்தினர்.
செல்லப்பிராணியாகிய நாயிடம் மிகுந்த அன்பு பூண்டவர். தம் வீட்டில் வளர்க்கின்ற நாய்களிடம் மட்டுமல்லாது தெருவில் திரிகின்ற நாய்களிடமும் சமமான அன்பு பாராட்டும் குணத்தினர். முன்பின் தெரியாத நாய்களையும் கொஞ்சுவதோடு, அருகில் கடைகள் காணப்படின் பிஸ்கெட்டுகள் வாங்கி அவற்றின் பசியைப் போக்குவதை வழக்கமாகக் கொண்டவர்.
பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கிப் போகாத துணிச்சல் மிக்கவர். தன்னாலாகும் உதவிகளை அனைவருக்கும் செய்து அவர்களுக்கு மனஆறுதலை ஏற்படுத்தும் மனிதநேய மாண்பாளர்.
புனைபெயர்
            கல்லூரி நாட்களில் தமிழமுதன் என்னும் புனைபெயரில் இதழ்களில் கவிதைகள் எழுதினார். திருமணத்திற்குப் பிறகு தம் துணைவியாரின் பெயராகிய நிர்மலா என்பதில் முதல் எழுத்தையும் தம் பெயரில் முதலெழுத்தையும் இணைத்து நிக்கிஎன்ற புனைபெயரை வைத்துக்கொண்டார். தம் வணிக நிறுவனங்கள் அனைத்திற்கும் நிக்கி முனைவகம், நிக்கி கன்ஸ்ட்ரக்ஷன், நிக்கி கிரானைட்ஸ் என்று அப்பெயரையே வைத்து நடத்தி வருகிறார். மேலும் அவர் வாழும் காரைக்காலிலும் நிக்கி என்ற பெயராலேயே அனைவருக்கும் அறிமுகமானவர். இவ்வாறு தம் பெயரிலும் தம் மனைவிக்குச் சமஉரிமை அளித்திருக்கும் பெருந்தன்மை பாராட்டத் தக்கது.
பயண ஈடுபாடு
சுற்றுலா செல்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்தியாவின் முக்கிய நகரங்களான புதுதில்லி, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களையும் கேரளா, டார்ஜிலிங், அகமதாபாத் சபர்மதி ஆசிரமம், சாந்தினிகேதன் முதலான பல சுற்றுலா மையங்களையும் அந்தமான் தீவினையும் சுற்றிப் பார்த்தவர்.
            சிறு வயதில் பாடப் புத்தகத்தில் படித்த இந்தியாவின் தாஜ்மகால், ஐரோப்பிய நாட்டின் பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரம், பாரீஸில் உள்ள ஈபில் கோபுரம், சீனப் பெருஞ்சுவர், எகிப்தின் பிரமிடு, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஆகிய உலக அதிசயங்கள் அனைத்தையும் காணவேண்டும் என்னும் பெருவிருப்பால் தம் உழைப்பின் வருவாயில் பெரும்பகுதியைச் சுற்றுப் பயணங்களுக்குச் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.
வாட்டிகன், இத்தாலி, ஆஸ்திரியா, ஜெர்மனி, ஹாலந்து, லிச்சஸ்டெயின், சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இலண்டன், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் பதினைந்து நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அமெரிக்கா, கனடா, அலாஸ்கா ஆகிய அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 45 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
            மலேசியா, சிங்கப்பூர், துபாய், அபுதாபி, சீனா, ஹாங்காங், மக்காவ், ரஷ்யா, இலங்கை ஆகிய ஆசிய நாடுகளிலும் ஆப்பிரிக்காவின் எகிப்திலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அனைத்துப் பயணங்களிலும் தம் துணைவியாருடன் இணைந்து பயணித்துத் தம் ஆசைக் கனவான உலகம் சுற்றுவதை நிறைவேற்றிக் கொண்டார். ஆண்டிற்கு ஒருமுறையாவது இத்தகைய அயலகப் பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.



No comments:

Post a Comment