Thursday, 5 December 2019

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 34


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 34

பள்ளியில் மூத்த ஆசிரியர் ஒருவர் ஓய்வு பெற்றுவிட்டார்.
அடுத்து ஒருவர் அந்த வேலைக்கு நியமனம் செய்யப்பட்டு அவர் வந்து சேர்வதற்குள் ஆறுமாதம் ஆகிவிடாதா? அதுவரை என்ன செய்வது? தலைமையாசிரியர் என்ற முறையில் அப்பாடத்தைச் சந்திரன்தானே சரிகட்ட வேண்டும்? அதனால் பள்ளியில் சற்று அதிகமாகவே அவன் வேலைப்பளு கூடியது. அதுவும் சுந்தரிக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.
நேரம் கழித்துக் களைத்துவரும் சந்திரனைத் தன் அறையில் பிடித்துவைத்துக் கொள்வாள் சுந்தரி. 'இதோ பாருங்கள்! உங்கள் பையன் இங்கே உதைக்கிறான்! அங்கே உதைக்கிறான்!' என்றுகூறி அவன் கவனம் முழுக்கத் தன்மீதே இருக்குமாறு பார்த்துக்கொண்டாள்.
'களைப்பாயிருக்கிறது', 'மயக்கமாயிருக்கிறது' என்றுகூறி முகத்தைச் சோர்வாக வைத்துக்கொள்வாள்.
'ஜுஸ் போட்டுத் தாருங்கள்', 'கை, கால் விரல்களில் சொடுக்கு எடுத்துவிடுங்கள்', 'கை வலிக்கிறது, ஆயின்மெண்ட் தடவுங்கள்' என்று ஏதாவதொரு சிறுசிறு வேலைகளை வைத்து அவனைத் தாட்சாயணியைப் பற்றிச் சிந்திக்கவிடாமல் கட்டிப்போட்டாள்.
ஞாயிற்றுக் கிழமைகளில் 'நான் அந்தக் கடவுளுக்கு வேண்டிக்கிட்டேன்', 'இந்தக் கடவுளுக்கு வேண்டிக்கிட்டேன்', 'பொறக்கப்போற நம்ம கொழந்தைக்கு அர்ச்சனை செய்யணும்' என்று அவனை மெதுமெதுவாகக் கரைத்து வெளியே அழைத்துச்சென்று விடுவாள்.
அந்த நேர்த்திக் கடன்களை அண்ணியோடு சென்று செய்யமுடியாது என்றும் குழந்தைக்குக் காரணமானவர் முக்கியமாக உடன் இருக்க வேண்டும் என்றும் சென்டிமெண்ட் எடுத்துவிடுவாள்.
முதலில் சந்திரனை அறிந்தவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று அவனைப் பாதுகாப்பதுபோல் தூரத்தில் இருந்த கோயில்களுக்கு அழைத்துச் சென்றாள்.
நாளடைவில் 'அலைச்சல்அதிகமாகிறது', 'உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை', 'குழந்தைக்கு ஆகாது' என்று மெதுமெதுவாகத் தூரத்தைக் குறைத்தாள்.
கடைசியில் அவன் வாழிடத்தைச் சுற்றி அவனை அறிமுகமானோர் பலரும் வளையவரும் இடங்களிலுள்ள கோயில்களில் பூஜைகளை வைத்துக்கொண்டாள்.
இப்படி அவளது தியாக உணர்வை அவன் சிறிதும் சந்தேகிக்காதவண்ணம் நிகழ்ச்சிகளை வடிவமைத்தாள்.
வீட்டிலேயே அடைந்துகிடப்பதும் எப்போதும் தாட்சாயணியின் சோக உருவத்தைக் காண்பதும் மனஇறுக்கத்தை ஏற்படுத்துகிறது என்றாள் சுந்தரி. தாட்சாயணி வீட்டில் இருக்கும்போது தன்னால் சந்திரனிடம் கலகலப்பாகப் பேச இயலவில்லை என்றாள். அது தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றாள்.
எதைச் சொன்னால் சந்திரன் அசைந்து கொடுப்பான் என்பதைச் சுந்தரி வெகுசாமர்த்தியமாக அறிந்து வைத்திருந்தாள். அதனை நேர்த்தியாகவும் எடுத்துரைக்கத் தெரிந்து வைத்திருந்தாள். அவள் பழந்தின்று கொட்டை போட்ட நெளிவுசுளிவுகள் அறிந்த கிராமத்துப் பெண்ணல்லவா?
கொஞ்சம் கொஞ்சமாக 'பீச் போகணும்', 'பார்க் போகணும்' என்று சந்திரனிடம் தன் ஆசைகளை வெளியிட்டாள்.
'பிள்ளைத்தாச்சி ஆசப்பட்டா கட்டாயம் நெறவேத்தியே ஆவணும்' என்று பின்பாட்டுப் பாடினாள் அண்ணி கலா.
கர்ப்பிணிப் பெண்கள் காலார நடந்தால்தான் சுகப்பிரசவம் ஆகும் என்று ஒரு அறிவியல் தகவலையும் முன்வைத்தாள்.
இப்படி அங்கே, இங்கே என்று சந்திரனின் புது மனைவியாகிய தன்னை அவனுக்கு அறிமுகமானோர் மெல்லமெல்ல அறியுமாறு செய்துவிட்டாள் சுந்தரி. சும்மா வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தால் அவளுக்குச் சமுதாய அங்கீகாரம் எப்போது கிடைக்கும்?
விஷயம் அறிந்தவர்கள் 'ஆமாம், குழந்தை இல்லாம வெறும் சொத்து வச்சுக்கிட்டு அவர் என்ன செய்வார் பாவம்? அவர் பேர் சொல்ல ஒரு புள்ள வேணாமா?' என்று தங்களுக்குள் கூறி சந்திரனின் செய்கையை நியாயப்படுத்திப் பேசிக்கொண்டனர்.
தனக்கு அபூர்வமாகக் கிடைக்கும் சிறிய நிமிடப் பொழுதுகளின் இடைவெளியில் எப்போதோ எட்டிப்பார்க்கும் குற்றவுணர்ச்சியின் உந்துதலில் சந்திரன் தாட்சாயணியைப் பார்க்கச் செல்வான்.
அப்போதெல்லாம் அவள் அகமும் முகமும் மலரத் தன்னை வரவேற்று நலம்விசாரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். தூக்குத் தண்டனைக் கைதியைப் பார்த்து நன்றாக இருக்கிறாயா? என்று விசாரித்துவிட்டு அவன் நலத்தோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் டாக்டரின் குரூர மனத்தைப் போன்று இருந்தது அவன் செய்கை.
தனக்குக் கிடைக்கும் அச் சிறு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தாள் தாட்சாயணி. சுந்தரியின் செயல்களில் பயங்கர உள்நோக்கம் இருக்கிறது என்று எடுத்துக்காட்டினாள். ஆனால் சந்திரன் அதனை முற்றிலும் நம்ப மறுத்தான். தான் நல்லவன் என்றும் அதனால் தான் பழகுகின்ற மக்களும் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் மூடத்தனமான நம்பிக்கையை ஆணித்தரமாக முன்வைத்தான்.
'ஒரு மகான் நடந்துபோற பாதை ஓரத்துல யாரோ போயிருக்கிற மலத்தை மிதிச்சுட்டா, அதை மகான் மிதிச்சார் என்பதற்காக அது மலம் இல்லன்னு ஆயிடுமா? மகான் மிதிச்சாலும் மலம், மலம்தான். மகான் மிதிச்சுட்டார் என்பதற்காக அவர் கால்ல விழற பக்தர்லாம் அந்த மலத்தச் சந்தனமா நெனச்சி அவங்க நெத்தியில இட்டுக்க முடியுமா?' தாட்சாயணியின் இக்கேள்வியை வறட்டுவாதம் என்று கூறிப் புறந்தள்ளினான் சந்திரன்.
அவள் தன் எதிர்காலத்தைப் பற்றிய சந்தேகத்தை எழுப்பும் போதெல்லாம் மாறாமல் ஒரே பதிலைக் கிளிப்பிள்ளைபோல் சொன்னான்.
தாட்சாயணி அதனை முற்றிலும் நம்பவில்லை என்றாலும் இத்தனை நாள் தன்னைப் புரிந்துகொண்டு வாழ்ந்தவன் பொய் சொல்வானா என்று ஏதோ ஒரு மூலையில் தொக்கிநின்ற சந்தேகத்தைப் பிடித்துக்கொண்டு நடுக்கடலில் சிறு மரத்துண்டைப் பற்றிக்கொண்டு எப்படியேனும் கரை சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருப்பவர் மனநிலையில் ஊசலாடிக் கொண்டிருந்தாள்.
(தொடரும்)

No comments:

Post a Comment