Tuesday 3 December 2019

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 32


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 32
சுந்தரி தினந்தோறும் கோயிலுக்குச் சென்றதுகூட ஒருவகை நாடகம்தான். அவள் எந்தக் கோயிலுக்கும் செல்லவில்லை. தாட்சாயணியோ சந்திரனோ பார்க்கும்போது கோயிலுக்குக் கிளம்ப ஆயத்தங்கள் செய்வாள். அவர்கள் அலுவலகம் சென்ற பின்னர் உடைமாற்றிக்கொண்டு 'அக்கடா' என்று படுத்து ஓய்வெடுப்பாள்.
ஒருமுறை தாட்சாயணி அலுவலகம் செல்லும்போது பாதிவழியில் முக்கியமான கோப்பு ஒன்றை மறந்துவிட்டது ஞாபகம் வந்தது. அன்று அதனைத் தபாலில் அனுப்பியாக வேண்டும். வேறு வழியின்றி பேருந்தைவிட்டு இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தாள். அன்று சுந்தரி மாங்காடு செல்வதாகக் கூறியிருந்தாள். தாட்சாயணி புறப்பட்டபோது சுந்தரியும் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். இந்நேரம் அவள் மாங்காடே போய்ச் சேர்ந்திருப்பாள் என்று எண்ணினாள் தாட்சாயணி.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு மேலிருந்து எட்டிப் பார்த்தாள் சுந்தரி. யாராக இருக்கும்?  
எதேச்சையாக அன்னாந்து பார்த்த தாட்சாயணி, சுந்தரி நிற்பதைக் கவனித்தாள். அதுவும் சாதாரண உடையில்! என்ன சுந்தரி கோயிலுக்குப் போகலையா?
'அத ஏம்மா கேக்கறீங்க? பஸ் ஸ்டாண்டு வரைக்கும் போய்ட்டேன். பஸ்கூட வந்துடிச்சி. ஏறலாம்னு போனா மயக்கம் தள்ளுது. மயக்கம் வந்துவிழுந்துட்டா என்ன பண்றதுன்னு கொஞ்சம் ரெஸ்டு எடுத்துட்டுப் போலாம்னு வந்துட்டேன்மா. இப்ப ஒடம்பு தேவலாம். கௌம்பலாம்னுதான் எழுந்திரிச்சு வந்தேன்.'
'சரிதான்! எப்பப்பாரு ஒருபொழுதுன்னு சரியாச் சாப்பிடாம ஒடம்ப வருத்திக்கிற. அப்பறம் மயக்கம் வராம என்னாகும்? இன்னைக்குக் கோயிலுக்குப் போ வேணாம். சாமி ஒன்னும் உன் கண்ணைக்குத்திடாது போ'.
'ஐய்யய்யோ அப்படியெல்லாம் சொல்லாதிங்க. வேண்டுதல்னா அதக் கட்டாயம் நெறவேத்திடனும். அதுவும் நான் இன்னைக்கு ஒங்களுக்காகத்தான் வேண்டிக்கிட்டேன்' என்று தாட்சாயணியைக் குளிப்பாட்டினாள்.
அவள் ஒருபொழுது என்று கூறியதெல்லாம் கூட அப்பட்டமான பொய். சந்திரன் அவள் செலவுகளுக்காக அடிக்கடி நிறைய பணம் தந்தான். அவள் பழங்கள், பிஸ்கெட்டுகள் என்று வாங்கித் தன் அறையில் அடுக்கி வைத்திருந்தாள். யாரும் அவள் மொட்டைமாடி அறைக்குச் செல்லமாட்டார்கள். எனவே அவள் அடுக்கி வைத்திருந்த தீனி வகையறாக்கள் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
இப்படி அவள் தினமும் கோயிலுக்குச் செல்வதாகக் கூறித் தன்னிடமிருந்த விபூதி, குங்குமப் பொட்டலங்களில் கொஞ்சம் எடுத்துக் கோயில்களில் கொடுக்கப்பட்டதாக நாடகமாடினாள். விடுமுறை நாளில் தெருமுனைக் கோயிலுக்குச் சென்று இருந்துவிட்டு வெகுதூரம் சென்று வந்ததாக ஏமாற்றினாள். தாட்சாயணி அக்கம்பக்கத்தாரிடம் அனாவசியமாக ஊர்வம்பு பேசாதவளாதலால் சுந்தரி பற்றிய செய்திகள் எவையும் அவள் காதில் விழவில்லை.
இப்படித் தன் காரியங்கள் யாவும் முறையாக நடந்து எந்தச் சந்தேகத்தையும் ஏற்படுத்தாமல் தன் கழுத்தில் தாலி ஏறி, தான் அசைக்கமுடியாத இடத்தை அடைந்துவிட்டதை எண்ணித் தனக்குத்தானே தட்டிக்கொடுத்துக் கொண்டாள் சுந்தரி.
(தொடரும்)

No comments:

Post a Comment