Thursday, 5 December 2019

நிக்கி கிருட்டினமூர்த்தி : குழந்தைக் கவிஞர்



நிக்கி கிருட்டினமூர்த்தி : குழந்தைக் கவிஞர்
குழந்தைகள் எதிர்காலச் சமுதாயத்தின் தூண்கள் என்பதால் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது சமுதாய நலன் நாடுவோர் கடமையாகும். நடப்பியல் வாழ்வின் வன்மை மென்மைகளை எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வைத் தம் படைப்புகள் மூலம் வெளிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பை இளைய நிலாவே... என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டதன் வாயிலாகக் கவிஞர் தவறாமல் நிறைவேற்றுகிறார்.
இளைய நிலாவே... என்னும் தலைப்பில் அமைந்துள்ள கவிஞர் நிக்கி அவர்களின் நூல் குழந்தைகளுக்கான கவிதைத் தொகுப்பாகும்.
மொழி
நாடு
அறிவுரைக் கொத்து
இயற்கை
பன்மணி
என்னும் ஐந்து பகுதிகளை 57 கவிதைகள் அணிசெய்கின்றன. இப்பகுதி தமிழ் மொழி நம் விழிக்குச் சமமானது என்று தொடங்கி, தமிழ்இலக்கியக் கர்த்தாக்கள் சிலரை அறிமுகம் செய்துவைக்கிறது.  மொழி உன் விழி என்னும் கவிதையில்,
அன்றுமுதல் இன்றுவரை ஆயிரம்நற் கவிஞர் - கவி
அளித்ததனால் மேனாட்டார் ஆகிவிட்டார் சுவைஞர்!
தொன்றுதொட்டு இன்றுவரை தமிழ்க்குநிகர் தமிழே - அதை
அறியாத மாந்தரிந்த உலகிலொரு பதரே
என்றென்றும் புகழ்மணக்க இருந்துவரும் தமிழே - புது
எழிற்கவிதை பாடுதற்கு ஏற்றமொழி அமுதே!
என்று தமிழின் சிறப்பைப் பலபடக் கூறும் கவிஞர் தொடர்ந்து,
மொழிபோற்று உயிராக என்றுமே பாப்பா- அது
மெருகேற்றும் உன்பெருமை எப்போதும் சிறப்பாய்
தாயாக நீபோற்று உன்னருமை மொழியை - தமிழ்
தழைக்கட்டும் என்றென்றும் வற்றாத நதியாய்! (13)
என்று குழந்தை செய்யவேண்டியதையும் தெளிவுபடுத்திவிடுகிறார். தாய் மொழியைச் சிறப்பாகக் கைக்கொண்டால்தான் அம் மொழியின் பயனால் பெருமை பெறலாம் என்னும் சிந்தனையை விதைக்கிறார் கவிஞர்.
ஈரடி என்னும் சீரடி யாலே
                        ஊரினை அன்றி உலகினை அளந்த
சீரடி யாதென செப்படி நீயது
                        தேனினும் இனிய திருக்குறள் தானடி
பாரினில் அதனைத் தவிர்த்தொரு நூலை
                        பரவசத் தோடு காட்டிடல் அரிதடி
தேரினில் அதனை ஏற்றித் தெருவெலாம்
                        தெரியக் காட்டடி தெரிந்திடும் உலகே!
                                                                                                                        (தேனெனும் திருக்குறள் 14)
என்று திருக்குறளின் பெருமையைப் புலப்படுத்துகிறார் கவிஞர். பிற எந்த நூலைப் படிப்பதைக் காட்டிலும் முதலில் திருக்குறள் படித்திட வேண்டும் என்பதையும் எல்லாவற்றைப் பற்றியும் திருக்குறள் தொட்டுக் காட்டுகிறது என்பதையும் பாப்பாவிடம் கூறுகிறார் கவிஞர்.
அதியமானின் அரசவையை
அலங்கரித்து வென்றவர் - அவர்
ஆத்திசூடி தந்ததால்
தமிழை இனிக்கச் செய்தவர்
பாலுடன் தேன்பாகு
பருப்புடனே தந்ததால் - சுவைப்
பைந்தமிழை இறைவனிடம்
கேட்டுவாங்கி வென்றவர்
                                             (அவ்வைப் பாட்டி 15)
என்று தமிழ் மூதாட்டி அவ்வையாரின் பன்முகப் பரிமாணங்களைக் கூறி அறிமுகப்படுத்துவதைக் காணலாம். அதியமானின் அவையை அலங்கரித்தமையையும், ஆத்திசூடி தந்தமையையும் முருகனால் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்கப்பட்டதையும் சங்கத் தமிழ் மூன்றும் தாஎன்று பாடியதையும் நீட்டோலை வாசியாதவர், குறிப்பறிய மாட்டாதவர் நெடுமரங்கள் என்று சொன்ன செய்தியையும் தம் பாடல் வழி தருகிறார் கவிஞர். அவ்வையார் பலர் என்று ஆய்வுகள் கூறினாலும் அத்தகு செய்திகளைக் குழந்தைகளுக்குப் புரியவைத்தல் எளியதன்று என்பதால் அனைத்து அவ்வையார்களின் ஒட்டுமொத்த உருவம் கொண்ட அவ்வையாரைப் புலப்படுத்துகிறார் கவிஞர்.
கவிஞர் காரைக்காலில் வாழ்பவர் என்பதால் பெரும்பாலும் பிற குழந்தை இலக்கியக் கவிஞரால் எடுத்துச் சொல்லப்படாத காரைக்காலம்மையார் குறித்தும் பாப்பாவுக்குக் கவிதை மூலம் அறிமுகப்படுத்துகிறார்.
புனிதவதி நங்கையெனத் தோன்றினார் - அவர்
திக்கெட்டும் புகழ்மணக்க மேவினார் - அமுதத்
தமிழ்க்கவிதை தந்ததனால் தாயானார் - அரிய
சிவபெருமான் கோலம் காணப் பேயானார்
அகிலமெலாம் அன்னைபுகழ் ஓங்கவே - சிவனார்
அற்புதநல் மாங்கனியைத் தோற்றினார் - அந்த
அலகிலாத விளையாட்டில் அரனையே - புது
அன்புவழி காட்டிவெற்றி கொண்டவர்
(காரைக்காலம்மையார் 16)
என்று காரைக்காலம்மையாரின் சரிதையைச் சுருங்க உரைக்கும் கவிஞர் அவர் கயிலைக்குத் தலையால் நடந்து சென்றதையும் அவர் பாடிய பாடல்களையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். இதைப்போன்றே திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் சைவ சமயக் குரவர் நால்வரைப் பற்றிய அறிமுகமாக அமைகிறது நால்வர் என்ற தலைப்பிலான கவிதை.
ஞானரதம் செலுத்திவென்றான் பாரதி - இந்த
நானிலத்தில் அவனுக்கிணை யாரடி - பேய்
வெள்ளையர்க்கு அவன்கவிதை பேரிடி - நாட்டு
விடுதலைக்கோ வெற்றிதந்த தாய்மடி
(புதுவயிரக் கத்தி 19)
என்று பாரதியாரையும்,
பாடற் பொருண்மையால்
பாவேந்தன் - பார்
அதிரக் கவியாளும்
தமிழ்வேந்தன் (பாவேந்தன் 21)
என்று பாரதிதாசனையும் தம் கவிதையால் அறிமுகப்படுத்துகிறார் கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் மீது கொண்ட பற்றின் காரணமாகக் குழந்தைப் பாட்டிலும் அவரைக் குறித்துப் பாடல் இயற்றத் தவறவில்லை. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை என்னும் தலைப்பிலமைந்த கவிதை பட்டுக்கோட்டை மீது கவிஞர் கொண்ட பற்றினை நன்குணர்த்தும்.
தொல்காப் பியத்துடன் புறமும் அகமும்
                        தொல்புகழ்ச் சிலம்பும் மணிமே கலையும்
பல்புகழ்க் குறளும் சிந்தா மணியும்
                        படித்திட இனிக்கும் கம்பராமா யணமும்
சொல்லிடற் கரிய சூளா மணியும்
                        சுடர்விடு பெருங்கதை தேம்பா வணியும்
நல்லிசைப் புலவர் வகுத்தநன் னூலும்
                        எனவிரி தமிழைத் தவமென லாமே!   
                                                             (தமிழைத் தவமெனலாமோ? 24)
என்று தமிழ்இலக்கண இலக்கிய நூல்களை எளிய நடையில் அடுக்கிக் காட்டுகிறார் கவிஞர்.
                        நாடு என்ற பகுதியில்,
வானத்தில்
கற்கண்டை
வரவழைக்கும்
தந்திரமல்ல
சுதந்திரம்!
ஆண்டுகள்
பலவாய்ப்
போரிட்ட
புரட்சியாளர்களின்
மந்திரம்!
வீழ்ந்துகிடந்த
ஏழைகளின்
கூனல்முதுகுகளைத்
தூக்கிநிறுத்திய
எந்திரம்!
தமக்கெனவாழாப்
பெருந்தகையாளரின்
குருதியிலெழுதிய
சாகாத
சரித்திரம்! (சுதந்திரம் 26)
என்று சுதந்திரத்தின் தன்மையை விவரிக்கிறார். தொடர்ந்து சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட வீரர்களைப் பற்றிய கவிதைகள் இடம்பெறுகின்றன. விடுதலை வேள்விக்கோர் பாரதி’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘தில்லையாடி வள்ளியம்மை’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘வாஞ்சிநாதன்என்ற தலைப்புகளில் தமிழக வீரர்களைப் பாடுகின்றார். உயிரெழுத்துஎன்ற தலைப்பில் காந்தியடிகளை நினைவுகூர்கிறார்.  உங்கள் மாமாநேருவைப் பற்றிய கவிதையாகும்.
உலைத்தீயை
உயிரறுக்கும்
கொலைத்தீயை
பள்ளிகள் இனிமேல்
பார்த்திட வேண்டாம்!
ஓலைக்கூரைகள்
ஒழிந்தினிப் பள்ளிகள்
ஒட்டுத் தளங்களாய்
உயர்ந்திட வேண்டும்!
வளர்ந்திட வேண்டும்! (40)
என்று நேரு மாமா குழந்தைகளைப் பார்த்து உரைப்பதாக உள்ள பகுதி 96 குழந்தைகளின் உயிரைக் குடித்த குடந்தையில் நிகழ்ந்த தீவிபத்தை நினைவுகூர்கிறது. ஓலைக் கூரைகள் ஒழிய வேண்டும் என்பது நேரு மாமா வாயிலாகப் பள்ளிகள் நடத்துவோர்க்குக் கவிஞர் விடுக்கின்ற வேண்டுகோள் ஆகும்.
புதுவை விடுதலையில் முக்கியப் பங்குபெற்ற தோழர் சுப்பையா அவர்களை மக்கள் தலைவர் சுப்பையாஎன்ற கவிதையில் அறிமுகப் படுத்துகிறார். நாட்டிற்குழைத்த நல்லோரை அறிமுகப்படுத்துவதாக நேர்மையின் சின்னம்என்ற தலைப்பில் காமராசரையும் மடமை கொளுத்திய மாவீரர்என்ற தலைப்பில் பெரியாரையும் காலம் ஆனார் கலாம்என்ற தலைப்பில் அப்துல்கலாம் அவர்களையும் அல்பேனிய வெண்புறாஎன்ற தலைப்பில் அன்னை தெரசாவையும் பாடுகிறார் கவிஞர். காரைக்காலின் சிறப்பைக் கவின்மிகு காரைக்கால் என்ற தலைப்பிலும் பாரதத்தின் புகழைப் பண்பாட்டு தேசம் என்ற தலைப்பிலும் பதிவுசெய்கிறார்.
                        'அறிவுரைக் கொத்து' என்னும் பகுதி குழந்தைகளுக்கான அறிவுரைகளை மனம் ஏற்கும் விதத்தில் மென்மையாகப் புகட்டுவனவாக அமைந்துள்ளது.
                        ஆசிரியப் பத்து’, ‘கல்வி’, ‘அன்பு’, ‘அருள்’, ‘சிறியன சிந்தியாதே’, ‘முதியோர்க்கு உதவு’, ‘சாலை விதி நீ அதை மதி’, ‘ஈ மொய்த்திடும் பண்டம் நோய் தந்திடும் நித்தம்’, ‘துப்பாதே எச்சில்... அது தூய்மைக்குச் சவால்’, ‘நடைப்பயிற்சி வேண்டும் நமக்கு’, ‘உணவில் வேண்டும் உன்னதக் கனிகள்’, ‘கீரை தருமே உடலுக்குச் சீரை’, ‘பாப்பாவுக்கு ஆத்திசூடி’, ‘ஆசிரியர்க்குஎன்னும் தலைப்புகளில் காலத்திற்குத் தேவையான அறிவுரைகளை முன்வைக்கிறார் கவிஞர்.
பள்ளிக்கூட வாசலிலே குப்பை - நீ
போடுவதால் குறைத்திடாதே உன்மதிப்பை
அடுத்தவர்மேல் தெளிக்காதே மையை - அது
அடித்த பந்தாய் திருப்பித்தரும் தீமையை
குண்டூசி பேனாமுள் கூர்நுனிகள் - கீழே
போடுமுன்னே சிந்தி யுந்தன் காலடிகள் (70)
எனவரும் பகுதிகள் சிறியன சிந்தியாதேஎன்னும் கவிதையின் வாயிலாக் கவிஞர் சிறுவருக்குச் சொல்லும் அறிவுரையாகும். சாலை விதி நீ அதை மதிஎன்னும் கவிதையில்,
பச்சைவிளக் கெரிகையில்நீ சாலையை - மிக
பத்திரமாய்க் கடக்கவேண்டும் அறிந்திடு!
சிவப்புவிளக் கெரிகையிலே சாலையில் - நீ
சித்திரம்போல் நின்றதனை மதித்திடு! (75)
என்று உயிர்ப் பாதுகாப்பு குறித்த சிந்தனையை ஊட்டுகிறார் கவிஞர். கீரை, காய்கறிகளை உணவில் ஒதுக்கிவிடும் பழக்கத்தைச் சிறுவர்கள் இயல்பாகக் கொண்டிருக்கிறார்கள். இச்செயல் தவிர்க்கப்பட வேண்டியதாகும். அதனால் கீரைகளின் சிறப்பை உணர்த்தும் வகையில் கீரை தருமே உடலுக்குச் சீரைஎன்னும் கவிதையைப் படைத்துள்ளார் ஆசிரியர். அக்கவிதையில்
காசறு கீரை அரைக்கீரை - சிறு
பருப்புக் கீரை பசலையென
பாங்காய்த் திகழும் கீரைகளை - தினம்
பாப்பா உண்டிடு பயன்பெறவே!
முருங்கைக் கீரை உணவாகும் - உடல்
மூப்பு நரைதிரை அது போக்கும்
கறிவேப் பிலையைத் தினம்உண்டால் - அடர்
கருகரு முடியும் உடன்கிடைக்கும் (85)
என்று கீரையின் பயன்பாடுகளையும் அறிவுறுத்துகிறார்.
                        இயற்கைஎன்னும் அடுத்த பகுதி நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை - விலங்குகளை - பறவைகளை அழகிய வருணனையாக அறிவியல் கண்கொண்டு விளக்குகிறது.
                        எங்கள் வீட்டு நாய்க்குட்டி’, ‘காகம்’, ‘மயிலும் குயிலும்’, ‘அழகிய சிட்டே’, ‘காடு’, ‘மரம்’, ‘மழை’, ‘கடல்ஆகிய தலைப்புகளுக்குள் அடங்கிய கவிதைகள் அவ்வவற்றின் சித்திரத்தைச் சொற்களில் வடித்தனவாக அமைந்துள்ளன.
தும்பைப்பூவின் கட்டு
தூயவெள்ளைப் பட்டு
வெள்ளைரோஜா மொட்டு
வெள்ளிமேகத் திட்டு!
சீனித்தேங்காய்ப் புட்டு
சீனதேச வெல்வெட்டு
பால்நிறமேனி தொட்டு
பார்க்கநல்ல ரவைலட்டு!
(எங்கள் வீட்டு நாய்க்குட்டி 97)
என்றெல்லாம் தம் வீட்டுச் செல்லப்பிராணியை அறிமுகப் படுத்துகிறார் ஆசிரியர்.
                        பாடம் படித்திடு’, ‘இயற்கையெனும்’, ‘ஓசோன் படலத்தில் ஓட்டை ஏன்?’ ஆகிய கவிதைகள் அறிவியல் பார்வையை இயற்கையின் மீது செலுத்துகின்றன.   
ஓடும் பாப்பா ஒரு பாடம் - நீ
உட்கார்ந்து கேட்பாய் ஒரு நிமிடம்
ஓசோன் என்னும் வான்பரப்பில் - பெரும்
ஓட்டை விழுந்தது அறிவாயா?
(ஓசோன் படலத்தில் ஓட்டை ஏன்? 95)
என்று கேட்கும் கவிஞர் அதற்குரிய அறிவியல்பூர்வமான காரணங்களையும் எளிய நடையில் அடுக்கிச் சொல்கிறார்.
வீட்டைச் சில்லென வைத்திடவும் - புது
காய்கறி பழங்கள் காத்திடவும்
குளிர்தரு சாதனம் அமைத்தோமே - அதில்
குற்றம் ஏதென அறிந்தோமா?
நாளும் அதுவிடும் மூச்சேதான் - பெரும்
நச்சுப் புகையாய் வானத்தில்
வடுவாய்ப் பரவிச் சூழ்வதனால் - நம்
வானில் விழுந்தது ஓட்டையன்றோ (95-96)
என ஒவ்வொரு காரணமாக அடுக்குகிறார் ஆசிரியர்.
                        பொங்கலோ பொங்கல்’, ‘மாட்டுப் பொங்கல்’, ‘காணும் பொங்கல்’, ‘மேஜிக்’, ‘பொருட்காட்சி’, ‘புத்தாண்டு மலர்க’, ‘தங்கமே தாலேலோஆகிய கவிதைகள் பன்மணிஎன்னும் பகுதியை அழகுறுத்துகின்றன.
                        குழந்தைப் பாடல்களில் கவிதைச் சுவைக்கும் அப்பாற்பட்டு, சிறுவர்க்குத் தேவையான செய்திகளை உணர்த்துகின்ற சில இலக்கிய உத்திகளையும் கவிஞர் நிக்கி அவர்கள் பயன்படுத்துகின்றார். ஆசிரியப் பத்துஎன்னும் பாடலை,
ஒன்றே உலகெனும்
உண்மை தன்னை
எடுத்துச் சொன்ன
இயங்கியல் வல்லுநர்! (59)
என்று தொடங்கி ஒவ்வொரு பாடல் அடியிலும் இரண்டு கால்கள், மூன்றாம் கண், நான்கு சுவர்கள், ஐந்தியல் பூதங்கள், ஆறாம் அறிவு, ஏழாம் உலகு, எட்டுத் திக்குகள், ஒன்பது சுவைகள், பத்து உருவங்கள் என்று எண்களை அடுக்கிச் சொல்லும் உத்தியைக் கையாள்கிறார் கவிஞர். குழந்தைகள் இப்பாடலை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையிலும் எண்களை அறிந்துகொள்ளும் வகையிலும் இப் பாடல் அமைகிறது.
                        உயிரெழுத்துஎன்னும் தலைப்பிலமைந்த கவிதை, மகாத்மா காந்தியைச் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
காந்தி . . .
இது
இந்திய மண்ணில்
இன்றுவரையிலும்
அதிகமாய் உச்சரிக்கப்படும்
அற்புத மூன்றெழுத்து!
விடுதலை இந்தியா என்ற
வெற்றிப் பெயரை
ஆய்த எழுத்தின்றி
அகிம்சை எழுத்தில்
எழுதிப்பார்த்த
இந்தியாவின் தலையெழுத்து! (35)
என்று காந்தியைக் கவித்துவத்தோடு அறிமுகப்படுத்தும் கவிஞர் பாடல்களின் இறுதிச் சொற்றொடராக உயிரெழுத்து, மெய்யெழுத்து, வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்று உருவகங்களை அமைக்கிறார். கவிதையின் வாயிலாகத் தமிழ் இலக்கணத்தில் காணப்படும் கலைச்சொற்களையும் அறிமுகப்படுத்தும் பாங்கு எண்ணி இன்புறத்தக்கது.
                        பாப்பாவுக்கு ஆத்திசூடிஎன்பது ஆத்திசூடி இலக்கிய வகையில் அமைந்து இதைச் செய், இதைச் செய்யாதே என்று அறிவுறுத்தும் தன்மையோடு, மொழிமுதல் எழுத்துகளை அகரவரிசையில் தெளிவுபடுத்தும் பணியையும் செய்கிறது.
தோழமையில் கோள்சொல்லல் தவறு - அஃதுன்னைத்
தள்ளிவிடும் பாழடைந்த கிணறு
ஆசிரியர் மதிப்புணர்ந்து பழகு - அது
ஆற்றின்கரை சேர்க்கவந்த படகு
(சிறியன சிந்தியாதே 71)
என்னும் பாடலில் உருவகங்களை வெகுநேர்த்தியாக இளஞ்சிறார்க்குப் புரியும்வகையில் பயன்படுத்தியிருக்கக் காணலாம்.
படிக்கையிலே நண்பருடன் கூடிப்படி - அது
படிப்படியாய் வாழ்க்கைப்படி உயர்த்தும்படி
பிறர்க்குதவு மனமகிழ்ந்து அடிக்கடி - அது
பின்னாளில் திருப்பித்தரும் பயன்கோடி
(சிறியன சிந்தியாதே 70-71)
என்னும் பகுதியில் சொல்இயைபு சிறப்பாக அமைந்து பாடலுக்கு இனிய ஓசையழகைக் கொடுக்கக் காணலாம்.
குழந்தைகள் தாமே புரிந்துகொள்ளவும் குழந்தைகளுக்கு உறவும் நட்பும் எடுத்துக்கூறித் தெளிவுறுத்துமாறும் அமைந்த பாடல்களை இத்தொகுப்பில் கவிஞர் அமைத்துள்ளார். ஒவ்வொரு கவிதைக்கும் பொருத்தமான ஓவியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கவிதையின் பொருண்மையை சிறுவர்கள் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் இவ் ஓவியங்கள் சிறப்பாகத் தெரிவுசெய்யப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment