முனைவர் அவ்வை நிர்மலா
சுப்பையாவும் பாஸ்கரனும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். முதுகலை, ஆங்கில இலக்கியம். ஒரே விடுதியிலும் தங்கி இருந்தார்கள். உயிர் நண்பர்கள்.
பாஸ்கரன் கூச்ச சுபாவம். அனைவரோடும் சகஜமாகப் பேச பயப்படுவான். யாரேனும் ஏதேனும் நினைத்துக்கொண்டால்?
சுப்பையா கொஞ்சம் தைரியசாலி. பெண்களோடு சகஜமாகப் பழகுபவன். எப்போதும் அவனைச் சுற்றி ஐந்தாறு பெண் தோழிகள் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள்.
அவர்களில் புவனாவின் மேல் அவனுக்கு ஒரு கண். அவளுக்கும்தான்.
நட்பு கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாக மலர்ந்து டாக்டர்பட்டம் வாங்கிய கையோடு இருவரும் திருமணமும் செய்துகொண்டார்கள்.
அவர்கள் திருமணத்தைப் பார்த்து அனைவருமே சிலாகித்துப் பேசினார்கள். எல்லோருக்கும் இப்படி அமைந்துவிடுமா என்ன?
பாஸ்கரனும் உஷாவை உள்ளூறக் காதலித்துக் கொண்டுதான் இருந்தான். அவன் கேட்டிருந்தால் உஷாவும் ஓ.கே. சொல்லி இருப்பாள். ஆனால் அவனுக்குத்தான் பயம். அம்மா, அப்பா, இரண்டு தங்கைகள், அண்ணன், தம்பி என்று பெரிய குடும்பம். அவன் குடும்பப் பாசம் அவனை வெகுவாகக் கட்டிப்போட்டது.
அவன் தன் காதலைப் பற்றிச் சொன்னால் அவர்கள் ஒன்றும் தடைசொல்லப் போவதில்லை. இருந்தாலும் அவன் கூச்சம் அதனை வெளிப்படுத்த வியலாமல் செய்துவிட்டது.
அவன் பேசாமல் இருந்ததால் பெற்றோர்களே பார்த்து அவனுக்கு அலமேலுவைத் திருமணம் செய்துவைத்து விட்டார்கள்.
அலமேலு குடும்பப் பாங்கான பெண். நன்றாகச் சமைப்பாள். மாமியார், மாமனார், நாத்தனார் என்று அனைவரிடமும் அன்பாகப் பழகுபவள். கணவனே கண்கண்ட தெய்வம் என்று எந்நேரமும் கணவனுக்குப் பணிவிடை செய்வதில் மகிழ்ச்சி காண்பவள். அவனும் கொடுத்துவைத்தவன்தான். அவன் திருமணத்திற்குச் சுப்பையா தன் மனைவியோடு சென்று வாழ்த்திவிட்டு வந்தான்.
திருமணம் முடித்ததும் ஒவ்வொருவருக்கும் ஒரு திசையில் வேலை கிடைத்து அப்புறம் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றல் ஆகி என்று வாழ்க்கை இயந்திரகதியில் போய்க் கொண்டிருக்கிறது.
திருமணம் ஆகி சில மாதங்கள் சுப்பையாவும் பாஸ்கரனும் அவ்வப்போது கடிதங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். பிறகு அதுவும் மெல்ல மெல்ல நின்றுபோனது.
ஆயிற்று பத்து ஆண்டுகள்!
பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னையில். வருடாவருடம் இப்படி ஒன்றிரண்டு கருத்தரங்களில் பங்குகொண்டால்தான் மதிப்பாக இருக்கும்.
பாஸ்கரன் தன் மனைவியோடு கருத்தரங்கத்தில் கலந்துகொள்ளச் சென்றான்.
கருத்தரங்கம் வந்தவர்கள் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார்கள்.
சிற்றுண்டி அருந்திக் கையைக் கழுவிவிட்டுத் திரும்பிய சுப்பையாவின் கண்களில் மின்னல். எதிரே பாஸ்கரன் நின்றிருந்தான்.
'பாஸ் எப்படி இருக்கே?', அவன் வயிற்றில் செல்லமாகக் குத்தினான் சுப்பையா.
'நல்லா இருக்கேன் சுப்பு, பாத்து எவ்வளவு நாளாச்சி, நீ நல்லாயிருக்கியா?'
'எனக்கென்ன, ரொம்ப நல்லாயிருக்கேன்'.
'பாஸ்கர், சுகர் டேப்லட் எடுத்துக்காம வந்துட்டீங்களே, இந்தாங்க' - உல்லி உல்லி புடவையில் இருந்த ஒல்லியான தேகம் பாஸ்கரிடம் மாத்திரையை நீட்டியது.
சுப்புவின் முகத்தில் கேள்விக்குறிகள்.
'சுப்பு, இவங்க என்னோட மிஸஸ் சுதா. இவங்களும் நானும் ஒரே காலேஜ்லதான் வேல செய்யறோம்'.
'சுதா, நீ போய் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிட்டு புக்ஸ், பை எல்லாம் எனக்கும் சேர்த்து வாங்கி வச்சிடு. இதோ வந்துடறேன்'.
தன் கணவன் பாஸ்கரன் நண்பரிடம் தனியே பேச விரும்புகிறார். புரிந்துகொண்ட சுதா ஒரு புன்னகையோடு அங்கிருந்து விலகிப்போனாள்.
'பாஸ்கர், உன் ஒய்ப் . . . ?'
'அத ஏன் கேக்கற சுப்பு? அந்த அலமேலுவக் கட்டிக்கிட்டு நான் எவ்வளவு கஷ்டம்தான் படறது? சுத்த முண்டம். படிப்பறிவு கொஞ்சமும் இல்ல. பயங்கற பொஸஸிவ். எப்பப் பாத்தாலும் அவ முந்தானியப் புடிச்சிக்கிட்டே இருக்கனும்னு நினைச்சா. நம்ம ஒன்னு சொன்னா அவ ஒன்னு செய்வா? ஒரு படிப்பறிவில்லாத முட்டாளக் கட்டிக்கிட்டு எப்படி வாழ்க்கை நடத்த முடியும்?'
'சுதா என்னோட காலேஜ்ல வேலைக்குச் சேந்தா. செம பிரிலியண்ட். வெரி மாடஸ்ட், அவளுக்கு அண்ணன், தம்பின்னு எந்தவகையான பேமிலி பிக்கல் பிடுங்கலும் இல்ல. என்னோட லைப் பார்ட்னரா இருக்கேன்னு சொன்னா. ஜஸ்ட் ஒன் இயர் முன்னாடிதான் சிம்பிளா மால மாத்தி மேரேஜ் பண்ணிக்கிட்டோம்'.
'அலமேலு குழந்தய கூட்டிக்கிட்டு ஊரோட போயிட்டா. எப்பவாவது போய்ப் பாத்துட்டு வருவேன். சுதா எதுக்கும் தடை சொல்றது இல்ல'.
'இப்போ ரெண்டு சம்பளம். நெறைய விஷயங்கள எங்களால டிஸ்கஸ் பண்ண முடியுது. எங்களுக்குள்ள நல்ல அண்டர்ஸ்டேன்டிங், வி ஆர் வெரி ஹாப்பி'.
கூச்சம் கூச்சம் என்று அநியாயத்திற்கு வெட்கப்படுபவன் இப்படி சுதாவுடனான தனது தொடர்பை அப்பட்டமாக எடுத்துரைத்துக்கொண்டிருந்தான்.
அதற்குள் கருத்தரங்கம் தொடங்கியதற்கான அழைப்புமணி அடித்தது.
பரபரப்பாகிப் போனார்கள். சரி மீதியை அப்புறம் பேசிக்கொள்ளலாம்.
மதிய உணவு இடைவேளையில் சுப்புவும் பாஸ§வும் பேசிக்கொள்ள முடியவில்லை. புதுப்புது நண்பர்கள் சூழ்ந்துகொண்டார்கள்.
ஒருநாள் கருத்தரங்கம்தான். அதனால் மாலையில் அவரவர் ஜாகைக்குத் திரும்பும் அவசரம்.
'சுப்பு, உன் விசிட்டிங் கார்டு கொடு, அப்பறம் பேசறேன்'. சுப்புவின் விசிட்டிங் கார்டு பெற்றுக்கொண்டு பாஸ்கரன் தன் புது மனைவியோடு கிளம்பிப்போனான்.
ஆறு மாதம் ஓடிப்போனது. திருச்சியில் ஒரு கருத்தரங்கம். பாஸ்கரன் தன் மனைவி சுதாவோடு போயிருந்தான். சுப்பு திருச்சியில்தான் இருக்கிறான். ஆனால் அந்தக் கருத்தரங்கிற்கு சுப்பு வரவில்லை. அது இரண்டுநாள் கருத்தரங்கம்.
சனிக்கிழமை மாலை சுப்புவின் வீட்டிற்குப் போய் இரவு அங்கேயே தங்கி விடலாம். அவனும் அவன் மனைவி புவனாவும் தன்னிடம் எவ்வளவு பிரியம் காட்டுவார்கள்! நிச்சயமாய்த் தான் அவர்கள் வீட்டில் இரவு தங்காவிட்டால் கோபித்துக் கொள்வார்கள். சுப்புவுக்குப் போன் செய்யாமல் போய் அவனை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க வேண்டும்.
சுதாவைக் கூப்பிட்டான்.
'பிரண்ட்ஸ§க்குள்ள ஆயிரம் இருக்கும். நான் எதுக்கு அங்கே நந்தியாட்டம். நீங்க போயிட்டு வந்திடுங்க. அடுத்தமுறை நான் நிச்சயம் வரேன்'.
தனக்குத்தான் சுகர் வந்துவிட்டது. சுவீட் சாப்பிட முடியாது. ஆனால், சுப்புவுக்கு இனிப்பு வகைகள் ரொம்பப் பிடிக்கும், புவனாவுக்கும்தான். அகர்வால் ஸ்வீட்ஸ் ஒரு கிலோ வாங்கினான்.
சுப்புவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் ஒன்றும் சிரமமாக இல்லை. ஆனால் வீடுதான் கொஞ்சம் பழைய மாதிரி திண்ணையுடன் கூடியதாக இருந்தது. மாலைநேர இருளைப் போர்த்திக்கொண்டு நின்றது.
இருட்டுக்குள் ஒளிந்துகொண்டிருப்பது அவன் வீடாக இருக்குமோ என்று சற்றே சந்தேகமாகவும் இருந்தது.
காலிங்பெல்லை அழுத்தினான். சின்னதான இடைவெளியோடு கதவு திறந்தது. உள்ளே சன்னமாக ஒளி கிடைத்தது. ஒரு முகம் எட்டிப்பார்த்து 'யாரு?' என்றது.
தான் வீடு மாறி வந்துவிட்டது நிச்சயமாகத் தெரிந்து போனது.
'சுப்பையான்னு . . .'
'அவங்க வெளியில போயிருக்காங்க. இப்ப வந்திடுவாங்க. உள்ள வந்து உக்காருங்க' என்று சொல்லிவிட்டு ஓர் இருக்கையைக் காட்டிவிட்டு உள்ளே போய்விட்டாள் அந்தக் குள்ளமான பெண்.
'தான் ஒழுங்காகச் சுப்புவுக்குத் தெரிவித்துவிட்டு வந்திருக்க வேண்டும். சுப்புவும் புவனாவும் எப்பொழுது வருவார்களோ? சரியாகக் கூட பதில்சொல்லாமல் இந்த வேலைக்காரி உள்ளே போய்விட்டாளே!'
பொழுதுபோகாமால் அங்கே தூசி படிந்துகிடந்த ஒரு புத்தகத்தை எடுத்துத் தூசு தட்டிப் புரட்டிக் கொண்டிருந்தான்.
வாசலில் டூ வீலர் நிறுத்தும் சத்தம் கேட்டது. அவர்கள்தான் வந்திருக்க வேண்டும். எட்டிப் பார்த்தான்.
சுப்பு வாசற்படி ஏறிக்கொண்டிருந்தான்.
'சுப்பு . . . !'
'பாஸ் . . எப்ப வந்தே?'
'நான் வந்து பத்து நிமிஷமாச்சி!'
'சரி வா வா உட்கார்'.
'தேனு. . . ரெண்டு காபி கொண்டா' - உள்ளே நோக்கிக் குரல்கொடுத்தான் சுப்பு.
'சுப்பு . . . ! எங்க புவனாவக் காணோம்?'
'அது வந்து . . . நீ மொதல்ல காபியக் குடி. அப்பறம் பேசுவோம்'.
'தேனு . . .! நாங்க கொஞ்சம் வெளியில போய்ட்டு வரோம்'. - சொல்லிவிட்டு பாஸ§வின் கைபிடித்து அழைத்துக்கொண்டு வெளியில் இறங்கினான் சுப்பு.
ஒரு மௌனம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது.
தெருவின் முனையில் ஒரு சிறிய பார்க் இருந்தது. நான்கைந்து பெஞ்சுகள் இருந்தன, எல்லாம் காலியாக! மார்கழி மாதப் பனி பெய்துகொண்டிருந்தது. இருவரும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தார்கள்.
பாஸ்கரன் தொண்டையைச் செருமினான்.
சுப்புவிற்குப் புரிந்தது. 'பாஸ§ அவ என்னை விட்டுட்டுப் போயிட்டா'.
'ஏன்?' என்னும் தோரணையில் புருவத்தை உயர்த்தினான் பாஸ்கரன்.
'அவளோட பிராப்ளமே ஓவர் ஸ்மார்ட்னஸ்தான். பயங்கர அறிவுஜீவியோட வாழ முடியாதுடா. எதைச் சொன்னாலும் ஏன், எதுக்குன்னு கேள்விகேட்டா என்ன செய்யமுடியும்? ஒய்ப்புன்னா எப்பவும் புருஷனுக்கு கொஞ்சமாவது அடங்கி நடக்கனும் இல்ல'.
'எல்லா வேலைலயும் பிப்டி பிப்டி பங்கெடுக்கனுமுன்னு சட்டம் போட்டா'.
'குளிக்கப் போனா டவல், சோப்புன்னு எதுவும் எடுத்துத் தரமாட்டா'.
'நானும்தானே கிளம்பனும், எனக்கு லேட்டாகாதா? ஒங்களுக்கு வேண்டியத நீங்க எடுத்து வெச்சிக்கக் கூடாதா?' அப்படின்னு எப்பப்பாத்தாலும் ஏட்டிக்குப் போட்டியா நடந்தா . . .
'எனக்கு ஒன்னும் பிடிக்கல. எனக்குன்னு அவ ஒன்னும் பாத்துப் பாத்துச் செய்யல. பாத்துப் பாத்து எதயும் சமச்சுப் போடல. எப்பப் பாத்தாலும் லிட்டரேச்சர், புக்ஸ், செமினார், அசோசியேஷன், மீட்டிங் இப்படியே இருந்தா வீட்டைப் பாக்க வேணாமா?'
'நாம வெளியோபோய் களைச்சு வந்தா காலைப் பிடிச்சுவிடனும், வாய்க்கு ருசியா சமைச்சுப் போடனும், நேரம் காலம் தெரியாம நம்மள எதுவும் எதுத்துப் பேசக்கூடாது. இப்படி இல்லைன்னா அந்தப் பொண்டாட்டிகூட எப்படிக் குடும்பம் நடத்த முடியும்?'
சுப்பையாவின் செயலுக்கு அவன் பார்வையில் நன்றாகவே காரணங்களைக் கற்பித்தான்.
சுப்பையா, பாஸ்கரன் இவர்களுக்கு என்னதான் வேண்டும்? அவர்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் ஆடைகளா இந்தப் பெண்கள்? குளிர் காலத்திற்குக் கம்பளி உடை, வெயிலுக்குப் பருத்தி உடை!
வேலை செய்யும் வேலைக்காரி, குடும்பத்தைக் குதூகலமாய் நடத்தும் அறிவு ஜீவி இரண்டும் ஒரே ஓட்டுக்குள் வெள்ளைக்கருவும் மஞ்சள் கருவுமாய் முட்டையில் இருப்பது போன்று இரண்டு உருவங்கள் ஒரு பெண்ணுக்குள் இருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அப்படி என்றால் ஆண்கள் எப்படி இருக்க வேண்டும்? அவர்களுக்கு யார் விதிகளை வகுக்க முடியும். ஏனென்றால் விதிகளை வகுப்பவர்கள் அவர்களல்லவா?
'அப்ப புவனா . . . ?'
'அவளுக்கு நான் டைவர்ஸ் கொடுத்துட்டேன்'. ஏதோ அவளுக்கு விருது கொடுத்ததுபோல் சொன்னான் சுப்பையா.
'அப்ப வீட்ல . . .?'
'தேனு . . . தேன்மொழி . . . ! அவதான் என் பொண்டாட்டி. மாடியில குடியிருந்த பொண்ணு. அப்பப்ப வீட்டப் பாத்துக்கிட்டா. அப்படியே . . . கல்யாணமாகி அஞ்சு வருஷமாச்சி . . . இப்ப நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்'.
எப்படியோ பாஸ்கரனும் சுப்பையாவும் செய்முறைப் பரிசோதனை செய்து அவர்களது சந்தோஷம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பலியாடுகள் புவனாவும் அலமேலுவும் . . . ?
அங்கிருந்து கிளம்பினான் பாஸ்கரன்.
No comments:
Post a Comment