Tuesday, 25 November 2014

புதுவைக் கவிஞர் மலையருவியின் கவிதைக் கொள்கை


புதுவைக் கவிஞர் மலையருவியின் 

கவிதைக் கொள்கை




முனைவர் ஒளவை இரா நிர்மலா

எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), எம்.ஏ.(இந்தி), எம்.ஏ.(மொழியியல்),
எம்.ஃபில்., பிஎச்.டி., நிறைசான்றிதழ் தெலுங்கு,
சான்றிதழ் : நாட்டுப்புறவியல், பிரெஞ்சு, மராட்டி, கணினியியல்.
தமிழ் இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி,
காரைக்கால் - 609 602 அலைபேசி 93450 05865

       முனைவர் நா. இளங்கோ 'மலையருவி" என்ற பெயரால் அறியப்படும் புதுவைக் கவிஞராவார். இவர் தமிழ்ப் பேராசிரியர். வலைப்பதிவுகளில் தமிழியல் ஆய்வுக் கட்டுரைகளைப் பதித்து வருபவர். சங்க இலக்கியங்கள், திருக்குறள், நாட்டுப்புறவியல், தகவல் தொடர்பியல் முதலான துறைகளில் மிகுந்த ஈடுபாடும் புலமையும் மிக்கவர். தமிழியல் ஆய்வுகள், பேச்சுக்கலை, பேராசிரியப் பணி மூன்றிலும் முத்திரை பதித்து வருபவர்.

            ஒரு கவிஞராக இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளமை, தொடர்ந்து முகநூல், பிளாகர் முதலிய இணைய தளங்களில் கவிதைகளைப் படைத்துவருதல்,கவிதைகளைப் பற்றிய புரிதலோடு கவிதைப் பட்டறைகளை நடத்துதல், இரண்டாயிரம் ஆண்டு நெடியவரலாறு படைத்த தமிழிலக்கியக் கடலின் கரைகண்ட நல்ல புலமை, முப்பத்தைந்து ஆண்டுகள் இலக்கியங்களைக் கற்பித்து வருதல், தமிழிலக்கியங்களை ஆய்வு செய்தல், ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் கவிஞர் மலையருவியின் எழுத்துகளில் காணலாகும் கவிதை பற்றிய செய்திகளிலிருந்து கவிதை இலக்கியக் கொள்கையை வரையறுப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

எது கவிதை அல்ல?

     மனிதத் தின்னிகள்  என்னும் தமது கவிதைத் தொகுப்பில் 'எழுதப் போகும் கவிதை" என்னும் தலைப்பில் அமைந்த முதல் கவிதையில் கவிதை பற்றிய ஓர் அலசலை முன்வைக்கிறார் கவிஞர் மலையருவி.

எண்ணங்களின் பின்னல் கவிதையா?

     எண்ணங்களாலே
     பின்னிய வலைகளில்
     சிக்கிய கவிதையின்
     இரத்தம் குடித்து
     இளைப்பாறுகின்றது
     சிந்தனைச் சிலந்தி (ப. 21)


என்னும் பகுதி எண்ணங்களால் பின்னப்படும் வலையில் கவிதை ஆக்குதலின் சிரமத்தை எடுத்துரைக்கிறார். சிந்தனையைச் சிலந்தியாக உருவகப்படுத்தும் கவிஞர் எவ்வாறு சிலந்தி வலையில் சிக்குகின்ற பூச்சிகளின் இரத்தத்தைக் குடித்து உயிரற்றதாக்கி விடுகிறதோ அதே போன்று சிந்தனையைச் செலவிட்டு எழுதப்படும் கவிதையில் கவிதை உயிரற்ற உடலாக இருப்பதாகப் புதிய கோணத்தில் சிந்திக்கிறார். 

       எது கவிதை என்பதனை வேர்ட்ஸ்வொர்த் குறிப்பிடுங்கால், ‘அமைதியான சூழலில் மனத்தில் அழுத்திக் கொண்டிருக்கும் வீரியமான எண்ணங்கள் எழுச்சியோடு வெளிவருதலைச் சேகரிக்கும்போது கவிதையாகிறது’ என்று குறிப்பிடுகிறார். வோர்ட்ஸ்வொர்த் இதுதான் கவிதை என்பதனை முத்திரை யிட்டுரைக்கக் கவிஞர் மலையருவி எது கவிதை அல்ல என்பதனைத் தெளிவுபடுத்துகிறார்.

கலைநயமா? யதார்த்தமா? - எது கவிதை?

      சொற்களைக் கொண்டு
      விண்ணை முட்டக்
      கலைநயத்தோடு
      கட்டிய மாளிகை
      யதார்த்த உலகின்
      அனுபவ அதிர்வுகளில்
      ஆட்டம் காண்கிறது          
(மனிதத் தின்னிகள் 21)

என்னும் பகுதியில் கலைநயம் மட்டுமே கவிதையாகி விடுவதில்லை என்பதைக் கவிஞர் அறியவைக்கிறார். கவிதையில் யதார்த்தம் என்பது இல்லையெனில் அது எவ்வளவுதான் கலைநயம் மிக்கதாகப் படைக்கப் பட்டாலும் அதன் கட்டமைப்பு ஆட்டம் கண்டுவிடும் என்கிறார் கவிஞர்.

வார்த்தைகளின் அடுக்கு கவிதையா?

             எழுத்துப் படைப்புகள் சொற்களாலும் தொடர்களாலும் கட்டமைக்கப் படுகின்றன. இவ்வடிவம் கவிதையில் மேலும் சுருங்கிய வடிவம் பெறுகிறது. இன்றியமையாச் சொற்களின் கட்டமைப்பில் கவிதை எழுந்துநிற்கிறது. அவ்வாறு கவிதை எழுவதற்கு சொற்கள் மட்டுமே துணைபுரியுமா? என்று தன் கவிதைப் படைப்பையே ஆய்ந்து பார்க்கிறார் மலையருவி.

     அதைத் தேடி
     இதைத் தேடி
     தேடித்தேடித் தேய்த்தேன்
     சொற்களை நிறுத்திச்
     சுமைகளை ஏற்றினேன்
     நகர மறுத்தன           (காலடியில் தலை)

என்று நிதர்சனத்தைச் சொல்லும்போது சொற்களைக் கொண்டு கவிதையைக் கட்டமைக்கும் முயற்சி தோல்வியில் முடிவதை ஒத்துக்கொள்கிறார் கவிஞர்.

     வார்த்தைகளை அடுக்கிவிட்டாலும் அது கவிதையாய்ப் பரிணமிப்பதில்லை. கவிதை என்னும் மீனினைப் பிடிக்க வார்த்தை என்னும் புழுக்களால் முடிவதில்லை என்றும் அந்த வார்த்தைகள் சிரத்தையோடு கண்டுபிடிக்கப்பெற வேண்டியுள்ளது என்பதையும் வலியுறுத்துகிறார்.

     வார்த்தைப் புழுவைத்
     தூண்டிலில் மாட்டி
     சிரத்தையின்றிக்
     கவிதையைப் பிடிக்கத்
     தூண்டிலோடு போனது
     மீன்
              (மனிதத் தின்னிகள் 21)

இந்தச் சிரத்தையே கவிஞனின் கவித்துவ உள்ளத்தைச் சார்ந்ததாகிறது.

     கழனிகளிலே
     கவிதைப் பயிர்கள்
     வார்த்தைக் களைகளால்
     வளர்ச்சி குன்றின. . .
     எழுத்தும் சொல்லும்
     வேகமாய் வளர்கையில்
     கவிதைகள் மட்டும்
     காணாமல் போவதேன்?
       (மனிதத் தின்னிகள் 22)

என்ற வினாவினை எழுப்புகிறார் கவிஞர். கவிதையைக் கட்டமைக்கச் சொற்கள் வேண்டுமாயினும் அச்சொற்களே சில சமயங்களில் களைகளாக மாறி பயிரின் வளர்ச்சியைக் குன்றச் செய்துவிடுகின்றன. அதாவது தேவையற்ற சொற்களை அடுக்குவதால் அளவில் பெரிய கவிதையாக அதனை வடிவமைக்க இயலும் என்னும் கருத்துத் தவறானதாகும். அச்சொற்களே இன்றியமையாச் சொற்களின் வீரியத்தைக் குறைத்துவிட வல்லன. கவிதையின் அளவு வேண்டுமானால் தேவையற்ற சொற்களின் பயன்பாட்டினால் பெரிதாகலாம். ஆனால் கவிதை அங்கிருந்து காணாமல் போய்விடுகிறது.

       ஒரு முழுக்கவிதையில் ஒரே ஒரு சொல்லில் கவிதை உட்கார்ந்து கொண்டு கண்ணாம்பூச்சி விளையாடும் அந்தச் சொல்லைக் கண்டுபிடித்து விளையாட்டைத் தொடர்வது அத்துணை எளிய செயலாய் இருப்பதில்லை. என்று புதுவை யுகபாரதியின் பருத்திக்காடு என்னும் துளிப்பா நூலுக்கு கவிஞர் அளித்த அணிந்துரைப் பகுதி ஈண்டு குறிப்பிடத்தக்கது எது (11). எனவேதான் கவிதை எச்சொல்லில் ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதே கவிஞனின் பணியாகிறது. சரியான சொல்லைத் தேர்ந்தெடுப்பவன் பேசப்படுகிறான்.

அணிநலம் கவிதையாகுமா?

       மரபுக் கவிதைகள் பெரும்பாலும் அணி அழகுகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டவையாகத் திகழ்கின்றன. அதன் காரணமாகவே அணி இலக்கண நூல்களும் வெகுவாக எழுந்தன. திறனாய்வாளர்கள் இலக்கியக் கட்டமைப்பில் உத்திகளின் பயன்பாடு குறித்து மெத்தவே கவனம் செலுத்துகின்றனர். அந்நிலையில் ஒரு கவிஞன் தன் கவிதைப் படைப்பில் அணிகளுக்கும் உத்திகளுக்கும் தரவேண்டிய கவனம் குறித்துச் சிந்திக்கிறார் மலையருவி:

     உத்திகளாலே குத்தித் தள்ளி
     அணிகளாலே நையப் புடைத்து
     மெல்ல நகர்த்தினேன்


     சொற்கள் செத்தன


     மீண்டும் மீண்டும்
     கவிதை தேய்ந்தது      
(காலடியில் தலை 61)

உத்திகளை வலிந்து திணிப்பதும் அணிகளால் அலங்கரிப்பதும் கவிதையின் உயிர்நாடியான சொற்களைச் சாகடித்துவிடச் செய்கின்றன என்பதையே தம் கவிதைக் கொள்கையாக அவர் முன்னிறுத்துகிறார்.

அனுபவம் கவிதையாகிறது

   கவிதை பற்றிய திறனாய்வாளர்கள் கவிஞன் தன்னுடைய அனுபவங்களையும் அல்லது தான் அறிந்த பிறருடைய அனுபவங்களையும் கவிதையாக்குகிறான் என்று கருத்துரைக்கின்றனர்.அவ்வகையில் மலையருவியும் வாழ்க்கைப் பூக்களிலிருந்து தொகுத்த அனுபவம் என்னும் தேன் தேனடையாகிய மனத்தில் நிறைக்கப்படுகிறது என்றும் தேக்கப்பட்ட தேன் அனைத்தும் நுகரப்படுவதில்லை என்பதுபோல் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட சில துளிகளே கவிதைகளாய் உள்ளத்தை உவகைப் படுத்துகின்றன என்பதையும்,

     வாழ்க்கைப் பூக்களில்
     வண்டுகள் உறிஞ்சி
     காலம் காலமாய்க்
     கட்டிய தேனடை
     கவிதைத் தேனாய்
     நிரம்பி வழிகையில்
     சிந்திய சிலதுளி
     நெஞ்சம் நிறைந்து
     நினைவில் இனிக்கிறது       
(மனிதத் தின்னிகள் 22)

என்னும் பகுதியில் எடுத்துரைக்கிறார்.

    எழுதும் தூரிகை
    வண்ணக் குழம்பில்
    நானே குழைந்து
    ஓவியமாகிறேன்


    தூரிகை பிடித்த
    விரல்களின் வழியே
    நானே படர்ந்து
    காட்சியாய்க் கரைகிறேன்


    மகுடியை இசைக்கும் லயிப்பில்
    நானே பாம்பாய்
    நெளிந்தாடுகிறேன்


    ஊதும் குழலில்
    காற்றாய்க் கரைந்து
    உயிரே இசையாய்
    உருகிடுகின்றேன்      
(காலடியில் தலை 25)

என்று வரிசைப்படுத்துங்கால் ஒரு படைப்பாளன் தன் படைப்பில் தன்னையே பதியவிடுகிறான் என்பதை நுணுக்கமாக உரைக்கிறார் கவிஞர். ஓவியன் தன் ஓவியத்தில் தன்னையே பதித்துக்கொள்கிறான் என்றும் தூரிகையின் வழியே தன்னைப் பற்றிய காட்சியும் தன் மனத்தில் விளைந்த காட்சியுமாகத் தன்னையே காண்கிறான் என்றும் கூறும்போது படைப்பாளனின் அனுபவப்பதிவு படைப்பின் கருவாவதை உறுதிப்படுத்துகிறார்.

பாடுபொருள்

                இலக்கியங்கள் எவற்றைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன என்பதை ஓர் ஆய்வாளனாகக் கண்டுரைக்கிறார் மலையருவி.

     என்னைச் சுற்றி இலக்கியங்கள்
     தொல்காப்பியம்
     சங்க இலக்கியம்
     திருக்குறள்
     சிலப்பதிகாரம்
     இன்னபிற இலக்கியங்கள்     
(மனிதத் தின்னிகள் 36)

என்று ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இலக்கியங்களைப் பட்டியலிடுகிறார் கவிஞர்.

     மார்க்சிய
     தமிழ்த்தேசிய
     பெண்ணிய
     தலித்திய
     நவீனத்துவ
     பின்நவீனத்துவ
     இன்னபிற பார்வைகளால்
     ஆய்வு புதுமெருகேறுகிறது     
(மனிதத் தின்னிகள் 37)

என்று சொல்வதன் மூலமாக இத்தகைய ஆய்வுகளுக்கு நிலைக்களனாக அவ் இலக்கியங்களின் பாடுபொருள் ஈடுகொடுப்பதை அறிய முடிகிறது.

               தமிழ் இலக்கியங்களாக இருந்தாலும் சரி, உலக இலக்கியங்களாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் போரையும் காதலையும் முன்னிறுத்துகின்றன. இவற்றில் போரைப் பற்றிப் பாடும் புலவர்கள் அவர்தம் காலத்தைய அரசர்களின் வீரத்தைப் புகழ்ந்து பாடி அவர்களைத் தன்னிகரற்ற தலைவர்களாக்குகிறார்கள்.அரசர்களின் வீரத்திலும் வெற்றியிலும் எஞ்சி நிற்பவை உயிர்க்கொலை என்னும் உண்மையைக் காணச் சமுதாயம் மறந்துவிடுகிறது. இதில் செம்மொழி இலக்கியங்களும் விதிவிலக்கல்ல.

     இரத்தமும் நிணமுமாய்ச்
     சிதறிய மாமிசத்துண்டுகள்
     தீய்ந்து கருகிய உடல்கள்
     நெருப்பு
     பெருநெருப்பு
     புகை
     வானை முட்டிய புகை
     கொத்துக் கொத்தாய்ப்
     பிணக் குவியல் (மனிதத் தின்னிகள் 38)

என்று போர்பற்றிய பாடல்களின் விமர்சனத்தை முன்னிறுத்துகிறார்.

     மரண ஓலங்களுக்கிடையே
     செம்சொழிப் புலவர்களின்
     பாணர்களின்
     பாடல்கள் தெளிவாகக் கேட்கவில்லை
     பிஞ்சுக் குழந்தைகளின்
     பெண்களின்
     வீரர்களின்
     சடலங்களுக்கிடையே
     வேந்தர்களும் வள்ளல்களும்
     காணாமல் போனார்கள்
     என் அறை முழுவதும்
     இரத்த வாடை        (மனிதத் தின்னிகள் 38)

என்னும் அடிகள் இலக்கியம் நுகர்ந்த வாசகனின் அனுபவமாக வெளிப்படுகிறது. இவ்விலக்கியங்களால் விளைந்த பயன் என்ன என்னும் வினாவையும் கவிஞர் எழச்செய்கிறார்.

படைப்பில் நிறைவின்மை

      எந்த ஒரு சிறந்த படைப்பாளனும் தனது படைப்பினை முழுமை பெற்றதாகக் கருதமாட்டான். படைப்பு வெளிவந்த பிறகு அதனை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்றே கருதுவான். அதனால்தான் கம்பனைப் போன்ற மாகவிஞர்களும் அவையடக்கப் பாடலைப்பாடி அங்கலாய்த்துக் கொண்டார்கள் எனலாம். இத்தகைய உளவியல்சார் மனப்பாங்கை,

     எழுதிய கவிதையை
     என்ன செய்வது
     படித்துப் படித்துப் பார்த்தேன்
     நிறைவு இல்லை
     நண்பரிடம் காட்டினேன்
     நன்றாக வந்திருக்கிறது என்றார்  
 
                                                (கவிதையும் குழந்தையும்மனிதத் தின்னிகள் 96)

என்று எடுத்துரைக்கிறார் கவிஞர் மலையருவி.

கவிஞனும் சமுதாயமும்


                 படைப்பாளர்கள் மற்றும் கவிஞர்கள் போற்றப்படுகிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அத்தகைய போற்றுதல் காலம் கடந்தே நடக்கிறது. பெரும்பாலும் படைப்பாளிகள் குறிப்பாகக் கவிஞர்கள் தம் சக மனிதர்களால் பாராட்டப் பெறுவதில்லை. சிலநேரங்களில் கேலியிலிருந்தும் உதாசீனத்தி லிருந்தும் அவர்கள் தப்புவதில்லை என்பதை,

     பலரும் ஆர்வத்தில் வாங்கி
     வாசித்தார்கள்
     என நினைக்கிறேன்
     புரியலையே! என்றார் ஒருவர்
     ஆரம்பிச்சிட்டீங்களா?
     இது இன்னொருவர்
     ஒன்றும் சொல்லாமல்
     கோபப் பார்வையுடன் மற்றொருவர்
     அசட்டுச் சிரிப்புடன் அடுத்தவர்
     உதட்டைப் பிதுக்கினார் ஒருவர்
     ஏன் காட்டினோம் என்றிருந்தது      
(மனிதத் தின்னிகள் 96)

 என்று உலக நடப்பினை எதார்த்தத்துடன் எடுத்துரைக்கிறார் கவிஞர்.

                 இவ்வாறு கவிதை எவ்வாறு பிறக்கிறது, எது கவிதையாகிறது, கவிதை பற்றிய சமுதாய மனப்பாங்கு முதலானவற்றைத் தம் கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தி கவிதைக் கொள்கையை வகுக்கிறார் கவிஞர் மலையருவி.




பயன் நூல்கள்
  • மலையருவி – நா. இளங்கோ, காலடியில் தலை, சென்னை : தமிழ்ப் புத்தகாலயம், 1985.
  • மலையருவி – நா. இளங்கோ,  மனிதத் தின்னிகள், சென்னை: விழிகள் பதிப்பகம், 2013.

No comments:

Post a Comment