Sunday 4 February 2024

Pen Poem - விடாது கருப்பு

 


விடாது கருப்பு

பெண்ணுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

               பெண்ணடிமைத் தளையொழிக்க இணைய வேண்டும்

கண்ணாவார் அவரன்றோஎன்றே இங்கு

               கனவான்கள் மேடைதொறும் முழங்கக் கண்டோம்

புண்ணுக்குப் பூணிட்டு மறைத்தல் போன்றே

               புல்லியர்கள் தம்பேச்சால் மயக்கு கின்றார்

எண்ணமெலாம் ஆதிக்க வெறியே கொண்டார்

               எதற்கிந்த நாடகத்தை நடத்து கின்றார்?

 

சமத்துவத்தைச் சொல்தேனில் குழைப்பார் நன்றாய்

               சகபெண்டிர் நலம்பெற்றால் பொறாமை கொள்வார்

தமதாக்கம் மட்டுந்தான் இலக்காம் என்று

               தக்கநல் செயல்செய்தல் தவறே அன்று

மமதையினால் மகளிர்மேல் பழிகள் சொல்லி

               மகிழ்வதுதான் ஆண்மையெனில் வைப்போம் தள்ளி

யமவாதை தருவார்தம் முகம்ம றைக்க

               ஏதுதனை அறியாமல் அலைவார் பெண்டிர்!

 

பதவிகளைப் பெண்ணாள இடுவார் தாழ்ப்பாள்

               பாசத்தை வெளிப்பூச்சாய்த் தொடுவார் வாக்கால்

உதவிக்கு நண்பரையும் ஒருங்கு கூட்டி

               உறுதுன்பம் கொடுக்கபல வழிகள் தீட்டி

பதவியிலே இருப்பாரைத் துணையாய் நாட்டி

               பற்றற்றேம்என்றேதான் வேடம் காட்டி

புதரினிலே மறைந்திருக்கும் புலியைப் போலே

               புள்ளிமான் வேட்டையினைத் தொடரு கின்றார்!

 

பெண்ணுக்குச் சமவுரிமை பேச்சால் அன்றி

               பெறுகின்ற வாய்ப்புகளில் நிலைக்க வேண்டும்

திண்ணமாய் அவர்பணியைச் செய்வ தற்கே

               திகைப்பூட்டும் அலைக்கழிப்பு நிறுத்த வேண்டும்

வண்ணங்கள் காணுகின்ற கண்கள் ஒன்றில்

               வார்ப்பிரும்பு குத்துகின்ற கொடுமை விட்டால்

ஒண்ணுதலார் சமத்துவமாய் வாழ்வார் இங்கு

               ஓங்கிடுமே இந்நாட்டின் உயர்வும் அன்றே!

No comments:

Post a Comment