Sunday 4 February 2024

முரண்கோடுகள் - அத்தியாயம் 37

                              முரண்கோடுகள் - அத்தியாயம் 37



( எனது முரண்கோடுகள் என்னும் புதினத்தின் 36 அத்தியாயங்கள் ஏற்கெனவே இந்த பிளாகரில் உள்ளன. நீண்ட இடைவெளிக்குப்பின் இதோ கதை தொடர்கிறது)


குழந்தை பிறந்து ஒருமாதம் ஆனது. தன் சொந்த வீட்டில் சந்திரனிடம் மனம்விட்டுப் பேசுவதற்குக்கூட தாட்சாயணியின் வாய்ப்புத் தட்டிப் பறிக்கப்பட்டது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். ஒருநாள் அலுவலகத்திற்குச் செல்வதுபோல் புறப்பட்டாள். வழியில் அலுவலகத்திற்கு லீவு போட்டாள். நேராகத் தன் கணவன் பள்ளிக்குச் சென்றாள். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பெற்றோரும் உற்றோரும் புடைசூழத் தனக்குக் தாலிகட்டிய கணவனைச் சந்திக்க அவளுக்கு வேறுவழி தெரியவில்லை.

அவள் போகும்போது தலைமையாசிரியனாகிய சந்திரன் அவன் அறையில்தான் இருந்தான். அங்கே இரண்டு ஆசிரியர்கள் சந்திரனிடம் ஏதோ அலுவலக விஷயம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். கணவனைக் கண்டதும் பள்ளி என்றும் பாராமல் அடக்க முடியாமல் அழுதுவிட்டாள் தாட்சாயணி.

இதுவரைத் தன் கணவனின் மானம் பறிபோகக் கூடாது என்பதற்காக - தன் கணவன் நல்லவன் என்று அனைவரும் நம்பவேண்டும் என்பதற்காக - அவன் தனக்கிழைத்த வார்த்தையால் வடிக்கவியலாத அத் துன்பத்தை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக யார் எதிரிலும் கண்ணீர் விடாதவள்தான். இன்று அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அண்மைக்காலத்தில் தலைமையாசிரியர் வீட்டு நிகழ்வுகளை அரசல்புரசலாக அறிந்திருந்த ஆசிரியர்கள் கணவன் மனைவியிடையே எழும் பிரச்சனையில் அருகிருப்பது தர்மசங்கடமானது என்பதை உணர்ந்து கொண்டு அங்கிருந்து நழுவிவிட்டனர்.

தன் கீழ்ப் பணிபுரியும் ஆசிரியர்கள் முன்னிலையில் அழுது, தாட்சாயணி தன்னை அவமானப்படுத்தி விட்டதாகக் குமுறினான் சந்திரன். அவன் அங்கும் அவளுக்குப் பேசும் வாய்ப்பைத் தர மறுத்தான்.

அவன் காது கொடுத்துக் கேட்காவிட்டாலும் தாட்சாயணி நீதி கேட்டாள். நீதி கிடைக்காது என்று நன்றாகவே அறிந்தும் நீதி கேட்டாள்.

'என் கணவனைக் கள்வன் என்று தவறான நீதியை வழங்கிவிட்டாயே?' என்று பாண்டியனிடம் வழக்காடி நீதி கேட்டாள் கண்ணகி. ஏனென்றால் அவன் தவறைச் சுட்டிக்காட்ட அவளுக்கு ஒரு ஆதாரம் இருந்தது. அந்த ஆதாரம் அறிவு வயப்பட்டது. அந்த வழக்கை யார் விசாரித்தாலும் உண்மையும் தீர்ப்பும் ஒன்றாகத்தான் இருக்கமுடியும்.

 அந்தக் கண்ணகி கூட தன் கணவனாகிய கோவலன் தவறிழைத்தபோது தனக்காக அவனிடம் நீதி கேட்கவில்லை. ஏனென்றால் கோவலன் இழைத்த தவறை அறிவு வழி நின்று ஆதாரத்துடன் விளக்க முடியாது. அது உணர்வு வயப்பட்டது. அந்த வழக்கை விசாரிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்ப்பை வழங்குவார்களேயன்றி ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்க மாட்டார்கள். அத் தீர்ப்பு கண்ணகிக்குச் சாதகமாக அமையும் என்று கூறவும் முடியாது. ஒருவேளை அவளே குற்றவாளி ஆக்கப் பட்டாலும் படலாம்.

நீதியை உணர்ந்தவன் பாண்டியன். அவனிடம் நீதி கேட்டால் கிடைக்கும். நீதியை அறியாதவன் கோவலன், அவனிடம் அவள் எப்படி நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பாள்?

தாட்சாயணி நிலையும் அப்படித்தான் இருந்தது. சுந்தரி எப்போது அவள் முன்னர்க் கூறிய தீர்மானத்தை நிறைவேற்றுவாள் என்று கேட்டாள் தாட்சாயணி.

சுந்தரி எந்த வினாடியும் குழந்தையை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தான்தான் குழந்தையின் நன்மை கருதி அவளைப் போகவிடாமல் சித்திரவதை செய்வதாகவும் புதியதாக ஒரு பழியைத் தன்மீது வலிந்து சுமத்திக் கொண்டான் சந்திரன். எந்த நிலையிலும் சுந்தரிமீது தாட்சாயணி பழி சுமத்திவிடக்கூடாது என்று அதனைத் தவிர்ப்பதில் கவனமாக இருந்தான் சந்திரன்.

தன்னிலும் வயது குறைந்த சுந்தரியின் மீது அவன் கொண்ட மோகம் என்பதா? அப்படியொன்றும் அவள் உலகமகா அழகியல்லவே!

சந்திரனுக்காகவே தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்ததாய்ச் சுந்தரி பூசிக்கொண்ட அரிதாரம் இன்னும் கலையாமல் அப்பழுக்கின்றி இருந்தது.

குழந்தை தாய்ப்பால் குடிப்பதை மறந்து புட்டிப் பாலுக்கு மாறிவிட்டால் அவள் அந்தக் கணமே வீட்டை விட்டுச் சென்றுவிடச் சித்தமாக இருக்கிறாள். அதுவரை பொறுத்துக்கொள் என்றான் சந்திரன். சுந்தரியைத் தக்கவைத்துக்கொள்ள அவன் புதுப்புதுக் கொள்கைகளை முன்மொழிந்தான். எல்லாம் சுந்தரி போடும் தொட்டில் மந்திரம்.

அவன் சொல்வது எதுவும் நிகழக்கூடும் என்று தாட்சாயணிக்குப் படவில்லை.

குழந்தை பால்குடி மறந்துவிட்டால், 'தாயைப் பிரிந்து இருக்கமுடியாமல் தாயைத் தேடுது. அது பள்ளிக்குப் போகும்வரை பொறுத்துக்கொள்' என்பான்

அதற்குப் பின்னால், 'பச்சைப் பிள்ளை தாயைப் பிரிந்து ஏங்கும், பத்து வயதாகும் வரை பொறுத்துக்கொள்' என்பான்.

பிறகு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, 'இப்போது போய் தாயையும் சேயையும் பிரித்தால் அக்குழந்தைக்குப் பைத்தியம் பிடிக்கும்' என்பான்.

இப்படி நாம் காரணங்களைத் தேடிக்கொண்டே போகலாம்.

அக்குழந்தைக்குச் சிந்திக்கும் அறிவு வந்துவிட்டால், 'நீ யாரடி என் தாயை விரட்ட? நீ முதலில் வீட்டை விட்டு வெளியே போ!' என்று அதுவே தாட்சாயணியை விரட்டிவிடும்.

ஆறு மாதம் பல்லைக் கடித்துக்கொண்டு இருப்போமா? யோசித்தாள் தாட்சாயணி.

மெதுமெதுவாக தாட்சாயணியை விலக்கும் வேலைகளில் ஈடுபட்டாள் சுந்தரி. குழந்தைக்கு வரும் சிறுசிறு அசௌகரியங்களுக்குக் கூட தாட்சாயணியின் கண்பட்டுத்தான் இப்படி ஆனது என்று கூறினாள்.

'யாரு கண்ணு பட்டாலும் படலாம்! ஆனா கொழந்த மேல ஒரு மலடியோட கண் மட்டும் படக்கூடாதுப்பா!' என்று அண்ணி ஒத்து ஊதினாள்.

'தன் குழந்தை தாட்சாயணியால் துன்புறுவதா? இதற்கு மாற்றுவழி என்ன?' சந்திரன் யோசித்தான்.

மறு நாள் மல்லிகைப் பூவையும் தாட்சாயணிக்குப் பிடித்த பால்கோவாவையும் வாங்கிக் கொண்டு சென்றான். மெதுவாக அவளை அணுகினான். 'தாட்சு, இதோ பார்! ஒரே வீட்ல நீ இப்படிக் கவலையோட இருக்கறதப் பாக்க மனசு கஷ்டமா இருக்கு. இங்க இருந்து உனக்கும் ஆபிஸ் தூரமா இருக்குல்ல. பேசாம ஆபிஸ் பக்கத்துல ஒரு வீடு பாத்துடலாம். நீ அங்கயே கொஞ்ச நாள் இரு. நான் அப்பப்ப வந்து பாத்துக்கறேன். ஒனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்'.

அவள் சரி என்றாளா? இல்லை என்றாளா தெரியாது. ஆனால் அவள் இடமாற்றம் செய்யப்பட்டாள் என்பது மட்டும் நிதர்சன உண்மை. வெகு சொற்பமான சாமான்களோடு அவள் புது ஜாகைக்கு மாற்றப்பட்டாள்.

சிறிய சமையற்கட்டு, ஒரு சின்ன ஸிட் அவுட், ஒரு சின்ன படுக்கை அறை.

பெரிய வீட்டுக்குச் சொந்தக்காரி சின்ன வீட்டுக்குக் குடிபெயர்ந்தாள்.

முன்பெல்லாம் தாட்சாயணிக்குக் கடவுள் நம்பிக்கை என்று எதுவும் இருந்ததில்லை. ஆனால் இப்போது கடவுள் இருந்தாலும் இல்லையென்றாலும் அதனை முற்றிலுமாக வெறுத்தாள்.

அந்த ஒரு நம்பிக்கைதானே தன் வாழ்க்கை பறிக்கப்படக் காரணமாயிற்று. பகுத்தறிந்து பார்த்துச் செயல்களைச் செய்யும் தன் கணவன் முட்டாள் ஆக்கப்பட்டதும் அந்த நம்பிக்கையால்தானே. ஆறறிவு பெற்ற மக்களை முட்டாள்களாக்கி அப்பாவிகளை அல்லலுறச் செய்யும் இத்தகைய மூடநம்பிக்கை சமுதாயத்தில் தேவைதானா?

                                                                                                                     தொடரும்...




No comments:

Post a Comment