10.08.2017 அன்று புதுவைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற முனைவர்
அவ்வை நிர்மலா அவர்களின் அவ்வையார் வரலாற்று நாடகக் காப்பிய வெளியீட்டின்போது
வழங்கிய வாழ்த்துப்பா
கவிஞர் வடுகைக் கண்ணன்
புதுச்சேரி
தமிழ்த்தாய் வாழ்த்து
பாரிலுள்ள பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற
நேரிய என்தாயே! தாய்த்தமிழே! - கூரிய
வாளைப்போல் என்சொல்லை வார்த்துக் களித்திடுவேன்,
காளை எனக்கென்றும் காப்பு!
அவை வாழ்த்து
பல்சான் றோரே! பல்சான் றோரே!
பகடுகள் மந்தையில் கன்றெனப் புகுந்தேன்
சொல்லே ருழவர், சூழ்ந்துள அவையீர்!
எல்லா நாளும் இளைஞனாய் எண்ணும்
நல்ல தமிழ்க்கே செல்லக் குழந்தைநான்!
என்னில் முதியோர்க் கென்வணக் கங்களும்
என்னிலும் இளையோர்க் கென்வாழ்த் துகளும்
பன்முறை கூறுவன்! பாருளோர் வாழ்கவே!
நூலாசிரியர்க்கு வாழ்த்து
கவிஞர், முனைவர், பேரா சிரியர்
கவிதை நாடகக் காப்பியம் இயற்றிய
காஞ்சிமா முனிவர் பட்டமேற் படிப்பு
மையத் தமிழ்த்துறை தலைவரா யிருப்பினும்
ஐயன் வள்ளுவன் அறிவுரை ஏற்றும்
ஐயமில் பெரியார் அறிவுரை ஏற்றும்
வாழ்வில் துலங்குமிவ் வடுகைக் கண்ணன்
வாழ்த்த வந்துளேன்; நிர்மலா வாழ்க!
நிர்மலா என்மகள் நிக்கி மருமகன்
என்றே அழைத்து இன்புறு வேன்யான்
எத்தனை அவ்வையர் இலக்கிய உலகில்
இருந்தனர் என்ற ஐயமெப் போதும்
இருப்பது உண்மை யாவரும் அறிவர்
இருப்பினும் சங்கக் கால அவ்வையின்
வரலாறு தன்னை சங்கநூல் கொண்டும்,
வளமார் பற்பல தனிப்பாக் கொண்டும்,
வளமை நாடகக் காப்பியந் தன்னை
வடித்த என்றன் மகளே வாழி!
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு
ஐந்தென முழுதும் படித்து முடித்தேன்.
பன்னீரா யிரத்து முன்னூற்றி நாற்பத்
தைந்து வரிகளில் அமைத்த காப்பியம்,
பைந்தமிழ்த் தாய்க்கே படைத்ததோர் காவியம்!
உரைநடை நாடகம் பலரும் படைப்பர்;
கவிதை நாடகம் கதைத்தல் எளிதோ?
சிறிய செயல்களை பலரும் செய்வர்;
அரிய செயல்செய அவ்வைக் கிணையார்?
அவ்வையார் படத்தில் குமரி அவ்வை
தவ்வையாய் ஆக வேண்டினார் கடவுளை;
அவ்வை நிர்மலா ஆக்கிய நூலில்
அவ்வையின் காதல் முறிவால் மூப்பினார்!
இதுவே அனைவரும் ஏற்கும் கருத்தாம்.
வதுவை யின்றி வாழ்ந்த அவ்வையோ
மதுநிகர்ப் பாக்கள் யாத்ததால் மகிழ்ந்தோம்.
நூலி னுள்ளே நுண்ணிய புனைவுகள்,
பாலினும் தேனினும் சீரிய உவமைகள்,
இந்த நூலில் இருக்கும் அழகினை
எடுத்துக் கூறின் இந்நாள் போதா!
கொம்பிடை மாங்கனி துருவும் கிளியை
வம்புசெய் அணிலும் வாலால் விரட்டும்,
பம்பும் பீலியை விரிக்கும் தோகை,
எம்பிப் பேடையை அகவி அழைக்கும்”
நேரில் பார்த்தபோல் நெகிழ வைக்கும்
நேரிய வரிகள் நெஞ்சை நிறைக்கும்!
‘கனிகள் கண்ணில் புலப்படும் போது
வேரைத் தோண்டி விதையைத் தேடும்
மூடர் உலகிது முறைமை அற்றது.”
உண்மையை உணரா உலகிது என்பதை
திண்ணமாய்ச் சொன்ன செல்வியே வாழி!
அகவன் மகளோ அவ்வையைப் பற்றி
அகமகிழ்ந் துரைக்கும் அழகு வரிகளோ,
‘அழகி” அழகின் இலக்கணம்” என்றும்
அழகைப் பாடினேன் அழகிய மயிலெனும்
பெண்ணின் அழகைப் பெரிதும் பாடி
வண்ணப் பாக்கள் படைத்த வென்னை
முப்பத் தேழு வரிகளின் புனைவுகள்
செப்படித்தாற் போலென் சிந்தையில் பதிந்தது
‘நானும் என்ன பச்சைக் குழந்தையா?”
‘பச்சைக் குழந்தையோ? நீலக் குழந்தையோ?”
இதைவிட எள்ளலை எவரே விளம்புவர்?
பொதுவாழ் வினிலே விருப்புகள், வெறுப்புகள்
உதவா தென்பதை உரைத்திட வேண்டுமோ?”
இதைவிட இன்றைய அரசிய லார்க்கு
எப்படிச் சொல்லி விளக்கிட இயலும்?
முதுமை வந்தால் எவ்வா றிருப்போம்?
பதுமை போன்றோர் உணர்ந்திடு மாறு
முப்பத் தாறு வரிகளில் உரைத்ததை
எப்போது படிப்பினும் அச்சம் ஊட்டும்.
‘இச்சை யூட்டிய இடையின் பாரமும்
நச்சர வத்தின் படம்போல் தொங்கும்.”
அச்சோ இளமையில் நானும் கூறிய
விபூதிப் பையினும் விஞ்சிய விளக்கம்.
‘தனியாய்ப் பிறந்தோம் தனியாய் இறப்போம்
இடையில் தனிமை தவிர்ப்பதால் என்பயன்?”
என்ற வரிகள் இறவா வரிகள்
‘மாந்த வாழ்வோ இன்பம் மிக்கது
இன்பம் மட்டுமே நினைத்திட வேண்டும்
துன்பம் எண்ணி வாழ்வைத் தொலைத்தல்
இயற்கையை மதியா இழிவுச் செயலாம்.”
என்றன் வாழ்வின் நோக்கமும் இதுவால்
என்மனங் கவர்ந்த சொற்றொடர் நன்றே
அரசியல் அறிவு ஆடவர்க் குரித்தென
ஆடவர் உரைப்பது மடமை என்பதை
உரைத்த கருத்துதான் இன்றைய பெண்கள்
அரசியல் நெறியில் வாழ்தலுக் குரித்தாம்.
அவ்வையின் பாடலின் சிறப்புகள் எவையென
உறுவை சொல்லும் வரிகளில் மிளிரும்
‘மானிடப் பிறப்பில் முதலாம் ஆசான்
பாலினை யூட்டும் தாயெனல் பொருந்தும்.”
இதுவே உண்மை! இதுவே உண்மை!
என்றென் தாயுமென் பத்து அகவையில்
நன்றென பாரதம், இராமா யணமும்
நாயனார் கதைகளும் ஆழ்வார் கதைகளும்
கற்பித் தவையே கருத்தில் நிலைத்தன.
அவரோ படித்தவ ரில்லை; அவர்த(ந்)தை
உரிய சொற்பொழி வாள ரென்பதால்
அன்னை உரைத்தனள் அவரறிந் ததையே
நான்காம் காட்சியில் நாட்டில் நிகழ்ந்த
நலமறா வெள்ளப் பாழ்கள்; இன்னல்;
இவைக ளெல்லாம் அன்று நடந்ததாய்
அவையில் அதியன் தன்னிடம் கூறலும்
அதற்கவன் எடுத்த செயல்பா டுகளை
இன்றுள அரசினர், அலுவலர் அனைவரும்
நன்றாய்ச் செய்திட நயமாய் உரைத்தார்!
நூற்று அறுபத்து நான்காம் பக்கம்
‘சமையல் மையல் இரண்டும் தவிர்த்து
உலகம் சுற்றிப் பார்த்திட ஆவல்”
இந்த வரிகளைப் படித்த எனக்கோ
இருபதும் முப்பதும் ஆண்டுகள் முன்பே
‘சமையலுன் தனித்திறமை; மையலென் தனியுடைமை’”
என்றே எழுதிய என்றென் வரிகள்
நன்றாய் நினைவில் வந்து மகிழ்த்தும்!
காட்சி ஏழில் காதல் வகுப்பை
மீட்டிக் காட்டுவார் ஆண்பெண் தமக்கே
இந்தக் காலக் காதல் தன்னையும்
தந்தனர் எள்ளல் சுவையில் நன்றே!
அதியன் மனைவியின் அழகைப் புகழ்வதில்
மதியும் மயங்கும்; மகிழும் இதயம்!
கழுதை சுமந்த கதையினை நன்றாய்
வழுவில் லாமலே உரைத்தார் பாங்காய்.
சில்லாண் டுகள்முன் பச்சைச் சேலையை
சீராய்த் தந்தார் உடன்பிறந் தாட்கே
எந்தச் செய்தியும் நெஞ்சில் கொண்டே
இந்தச் செய்தியைக் கவிதையில் தந்தார்!
மணமுறார் முதுமையின் வாழ்வு பற்றி
மனமுருக உரைக்கும் வரிகளோ அழுகை.
அவ்வைக்குச் சேந்தனார் அளிக்கும் அறிவுரை
அனைத்துப் பெண்டிர்க்கும் ஆகுதல் காண்க!
வேளாண் சிறக்கச் செய்தக பற்றித்
தாளாண் காரிக்கு அவ்வை வழங்கிய
அறிவுரை இன்றைய அரசுக்கே பொருந்தும்!
பாலையின் கடுமையைப் பாடலில் காட்டியும்
பாலை நிலத்தின் பண்பினை உரைத்தும்
விறலியர் நிலையிலா வாழ்வு குறித்தும்
பரவுவார் மென்மைத் தாயுளத் தாலே!
நானும் பயின்ற கோவலூர் தன்னில்
அங்கவை, சங்கவை சந்திப்பு தன்னையும்,
ஆங்கோர் தோட்ட மரங்கள், மூலிகை,
தீங்கு நேர்கையில் தீதறு மருத்துவம்,
முல்லைக்குப் பாரி தேரீந்த நிகழ்வும்,
எத்தனைப் பக்கம் எளிமை நடையில்!
அவ்வையும் கபிலரும் அழகிய பறம்பின்
பெருமையும், பாரியின் வண்மையும், வளத்தையும்
கூறலில் நம்மனம் குன்றில் ஏகும்!
அங்கவை, சங்கவை, மலையன் தமக்கும்
சேரர், சோழர், பாண்டியர் தமக்கும்
அவ்வை வழங்கிய அறிவுரை பலவும்
இன்றை தமிழர்க் கேலும் அறிவீர்!
ஆண்பெண் வேற்றுமை அறிவிலாச் செயலென
ஆய்ந்தே சொல்கிறார் அவ்வை வழியாய்!
திரையனுக் கறிவுரை கூறுவ தாக
உரைத்தார் இன்றுள அரசர்க் கறிவுரை
நமக்கெனக் கொண்டால் நாடு நலமுறும்!
அஞ்சியோ கருநெல்லிக் கனியைப் பறித்து
அவ்வைக் களித்த அருஞ்செயல் வரலாறாய்
இருப்பது போலவே இந்த நூலை
எழுதிய அவ்வை நிர்மலா வாழி!
கருப்பாய்த் துணைவர் இலையென் றாலும்
கருப்பு அழகெனப் பல்வரி பகர்கிறார்;
கருப்பாய் நானும் இருப்பத னாலே,
‘கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரென
விருப்பாய் அடிக்கடி என்துணை பாடுவாள்!
பத்து முதலாய் ஒன்று வரைக்கும்
உண்ட உணவினை உரைக்கும் பான்மை,
உண்டது போல உந்தி நிறையும்.
நாகையார் தனது கணவன் பற்றி
வாகையாய் நவிலுதல் இன்றைய கணவர்,
எப்படி எல்லாம் இருக்க வேண்டும்
என்ற அறிவுரை அதிலே சிறக்கும்.
‘அன்றைக்கு மணம்புரிந்த அழகியோன் வீடுவந்தான்
இன்றைக்கு மணம்புரிந்தான் எனும்படி நெஞ்சிலன்பு”
என்ற பாவேந்தர் வரிகளுக் கொப்ப
முதுமையில் காதல் தொடரும் என்பதால்
‘முதுமைக் காதல்” எனும்நூல் எழுதினேன்
கவிதை எப்படி அமைய வேண்டும்
என்ற விளக்கம் எழிலாய்த் தந்தார்;
அவ்வை வாக்கல; ஆசான் வாக்கு
எழினிக்கு அவ்வை எடுத்தே உரைக்கும்
நாட்டின் பிரிவுகள், எல்லைக் கோடுகள்,
நாட்டும் அவரின் சங்கநூல் பயிற்சியை!
மொழிக்குள இலக்கணம் போர்க்கும் விரித்து
முழுமையாய் இரண்டின் ஒற்றுமை விளக்கினார்!
வள்ளுவன் தனது நூலில் அரிதாய்
உள்ளுவன் நட்பினுக் கதிகாரம் நான்கு
நட்பைப் பற்றியும், அன்பைப் பற்றியும்,
ஆமையின் வாழ்வையும், முயலின் வாழ்வையும்,
அமுதாய்த் தந்தார் எழினிக்கும் நமக்கும்!
அதியன் முடிவை அறியும் நமக்கு
அவலச் சுவையே நெஞ்சை நிறைக்கும்!
உலகியல் கூறி எழினியைத் தேற்றும்
அலகிலா ஆற்றல் அவ்வையின் ஆற்றலே!
ஆதியைக் கண்டு அம்மையென் றறிந்தும்
அவர்க்கே ஆறுதல், தேறுதல் கூறிய
அவ்வையின் திறமை ஆர்க்கே அமையும்?
பாண்டியன் அவையில் பல்லரும் புலவோர்
மாண்புடை வள்ளுவன், வெள்ளி வீதியார்,
உட்புரி குடியார், உருத்திர சன்மனார்,
இடைக்காடர் மற்றும் பெருஞ்சித் திரனாருடன்
அவ்வை பேசும் அத்துணைப் பேச்சும்
கொவ்வைப் பழமாய் நெஞ்சில் இனிக்கும்!
எதுகையும் மோனையும் எங்கும் நிறைந்து
இயைபும் அளவிலே நிறைந்தே இருக்கும்!
அகவற் பாக்கள் மிக்கிருந் தாலும்
அவைகளி னூடே வஞ்சிப் பாக்களும்,
சிந்துப் பாக்களும், சந்தப் பாக்களும்,
சிந்தை மகிழ அளித்தார் நிர்மலா!
நற்றிணை, குறுந்தொகை, அகம்,புற நானூறு
மேற்கோள் காட்டினார் தக்க விடங்களில்!
கடைசியில் அவ்வை கல்வராயன் மலையின்
கண்ணுக் கழகிய காட்சியில் மயங்கி
ஆல மரத்தின் அடியில் அமர்ந்து
எழுதத் தொடங்கினார் என்றே முடித்தார்!
‘பாரி பறித்த பறியும் பழையனூர்
காரி கொடுத்த களைக்கொட்டும் சேரமான்
வாராய் எனவுரைத்த வாய்மொழியும் இம்மூன்றும்
நீலச்சிற் றாடைக்கு நேர்”என் றெழுதிய
அவ்வைப் பாடலின் செய்திகள் நான்கையும்
தக்க இடங்களில் தடம்பதித் தெழுதிய
திறத்தைக் கண்டு திணறிய தென்மனம்!
இவரது திறமைக் கெடுத்துக் காட்ட
எவரு மில்லை என்றுநான் சொன்னால்,
எவரும் தவறாய் எண்ண மாட்டீர்
என்றே எண்ணுவன் என்மனம் நிறைய
நன்றே வாழ்த்துவன்; நாளும் பொலிகவே!
No comments:
Post a Comment