Friday 2 February 2024

சங்க கால மருதம் : ஒரு சிற்றுலா

 


சங்க கால மருதம் : ஒரு சிற்றுலா

               சங்க காலத்தில் புலவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளாக நிலத்தைப் பிரித்து அகப்பாடல்கள் பாடினர். அந்த ஐந்திணைகளைப் பற்றிய அறிமுகமே கீழ்வரும் கட்டுரை. முதலில் நாம் மருத நிலத்தில் சிற்றுலா செல்வோம்.

 

               வாருங்கள். ஆறுகள் பாயும் மருத நிலத்திற்குச் சென்று ஆசை தீர நீராடியும் உண்டும் களிப்போம். கையில் என்ன மூட்டை முடிச்சுகள். பசியாற உணவா? தாகத்திற்குத் தண்ணீரா? எவையும் நமக்குத் தேவையில்லை. நாம் செல்கின்ற வழியில் நீருக்கும் உணவுக்கும் குறைவில்லை. கவலையின்றி வாருங்கள் என்னோடு.

               நாம் மெதுவாகத்தான் நடப்போம். அதனால் என்னைப் பின்பற்றி வாருங்கள். நீங்கள் உங்களுக்குள் பேசிக்கொண்டால் நான் சொல்லப்போவது கேட்காது. அதனால் நான் சொல்வதையும் கவனமாகக் கேட்டுக்கொண்டு வாருங்கள்.

               இதோ பாருங்கள் மருத வயல்கள். மருதம் என்றால் வயலும் வயல்சார்ந்த இடமும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

               என்ன அழகு. பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் எங்கும் நெல்வயல்கள். அட இன்னும் சில மாதங்களில் நெற்கதிர்கள் பால்பிடித்து முற்றி எங்கும் பொன் மணிகளாய்க் காட்சியளிக்கும்.

               குறிஞ்சியில் என்னதான் அருவிகள் கொட்டினாலும் அந்த நீரைத் தேக்கி வைக்க முடியாது. அங்கே வானம் பார்த்த பயிர்களாய்த் தினையும் வரகும் சாமையும் விளைந்தாலும், அவற்றின் உணவை அள்ளி அள்ளி விழுங்க முடியாது.

               ஆனால் மருதம் ஒரு நெல்மணியைப் போட்டால் நூறாக, ஆயிரமாக விளைவித்துத் தரும். அதைக் குற்றி அரிசியாக்கிச் சமைத்தால் வெள்ளை வெளேர் என்ற உணவு. அள்ளி அள்ளி விழுங்கலாம். அதற்கு அமைப்பான குழம்புகளோடும் பல்விதக் கறிகாய்களோடும்.

               மருத நிலத்தின் முக்கிய உணவு நெல். அதாவது அரிசி. நெல்லை விளைவித்துக் குதிர்களில் பாதுகாத்து வைக்கலாம். எப்போது வேண்டுமோ பச்சையாகவோ அல்லது புழுங்கலாகவோ அரிசியைக் குற்றி ஆண்டுமுழுக்கப் பயன்படுத்தலாம்.

               நெல் விளைவிப்பது எப்படி? கலப்பை பூட்டி உழ வேண்டும். உழுவதால் அவர்கள் உழவர் எனப்பட்டனர். உழவில் பெண்களுக்குப் பங்கில்லாமலா? அவர்கள்தான் நாற்றுநடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல், அறுவடை செய்த தாள்களைப் போராகக் கட்டுதல், போரடித்தல், போரடித்தபின் அவற்றைச் சுளகு எனப்படும் முறங்களில் எடுத்து காற்றின் போக்கிக்கேற்பத் தூற்றி அரிசியையும், தவிட்டையும் பிரித்தெடுத்தல் எனப் பல வேலைகளில் ஆணுக்கு நிகராக . . . இன்னும் கேட்டால் ஆணுக்கும் அதிகமாக உழவில் பங்கெடுக்கிறார்கள். அதனால் அவர்கள் உழத்தியர் எனப்படுகின்றனர். இவ்வாறு உழவர், உழத்தியர் மருத நிலத்தின் தலைமக்கள் ஆகிறார்கள்.

               குறிஞ்சியிலும் முல்லையிலும் சிறுகுடியாக மக்கள் வாழ்கிறார்கள். மருத நிலத்தில் அப்படியில்லை. வயல்கள் ஒருபுறம் இருக்க அதன் உரிமையளார்களாக இருந்தாலும் சரி, வயல்களில் பணிபுரிவோராக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரும் வயல்களுக்கு அருகாமையில் தங்கள் வீடுகளையும் குடில்களையும் அமைத்துக்கொண்டு வசிக்கிறார்கள். அவர்கள் இருப்பிடம் ஊராகப் பரிணமிக்கிறது. மருதம் சமவெளிப் பகுதியாகவும் நீர் நிறைந்ததாகவும் இருப்பதால் அவ்வப்போது இடம் விட்டு இடம்செல்லத் தேவையில்லை. நிலையாக வாழ்வதற்குரிய அமைப்பு அங்கே இருக்கிறது. தங்கள் குடும்பத்தைப் பெருக்கித் தலைமுறை தலைமுறையாக அங்கே கால்கொள்ள முடிகிறது. அதனால் அவர்கள் வாழிடத்தை ஊர் என்று குறிப்பிட்டார்கள். ஆத்தூர், துறையூர், உறையூர், பாலூர், தேரூர், ஆரூர், புத்தூர், மருதூர், வில்லியனூர், பாகூர் முதலான பெயர்களில் ஊர் என்ற சொல்லாட்சியை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இவ்வூர்கள் பலவும் ஆறுகளின் அருகே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

               அப்படி ஊர்களில் வாழுகின்ற தலைவனை எப்படிக் குறிப்பிடுவது. சங்ககாலப் புலவர்கள் அவனை ஊரன் என்று குறிப்பிட்டார்கள். மகிழ்நன் என்றும் குறிப்பிட்டார்கள். மேலும் மள்ளர் என்றும் குறித்தனர். உழவுத் தொழிலுக்குத் தொடர்பான பல்வேறு தொழில்கள் அங்கே தழைத்து வளர்ந்தன. அந்த வினைகளைச் செய்வார் வினைஞர் எனப்பட்டனர். எனவே மருத நிலம் பேசப்படும்போது இப்பெயர்கள் மக்களின் பெயர்களாகக் குறிப்பிடப் பெற்றன.

               மருத நில மக்கள் இவ்வாறு குறிக்கப்பெற்றதை நம்பிஅகப்பொருள், திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு முதலான நூல்களால் அறியலாம். சங்கப் பாடல்களிலும் நாம் இப்பெயர்களை ஆங்காங்கு காணலாம்.

               மருதநிலத்தில் அப்படியே ஓர் உலா போவோம் வாருங்கள். அங்கே பாருங்கள். ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. அந்த ஆறுதான் எவ்வளவு அகலமாக இருக்கிறது. அங்கிருந்து வயல்களுக்கு எத்தனைக் கால்வாய்கள் செல்கின்றன பாருங்கள்.

காவிரி, தென்பெண்ணை, பாலாறு - தமிழ்

கண்டதோர் வையை பொருநை நதி

என மேவிய ஆறு பலவோட - திரு

மேனி செழித்த தமிழ்நாடு

என்று பாடினார் விடுதலைக்குயில் பாரதியார்.

               ஆற்றை மட்டுமே நம்பிப் பயிர் செய்ய இயலுமா? அவையும் வெயில் காலங்களில் வற்றித்தானே போகும். ஆற்றின் மையத்தில் வேண்டுமானால் நீர் இருக்கலாம். ஆனால் கரை ஓரங்களில் தண்ணீர் குறைந்துவிடுமே. அப்படியென்றால் ஆற்றின் சேய்மையில் உள்ள பயிர்களைக் காப்பது எங்ஙனம்? சற்றே ஊரின் உள்ளே செல்வோம் வாருங்கள். அங்கே பாருங்கள் . . . கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஏதோ கரை உயர்ந்து காணப்படுகிறதே. மேலே ஏறிப் பார்ப்போம்.

               ஓ . . . ஏறிப் பார்த்ததும்தான் தெரிகிறது, இது ஏரி என்று. வரகனேரி, கோனேரி முதலானவை ஏரிகளின் காரணமாகவே அமைந்த ஊர்ப் பெயர்களாகும். இந்த ஏரிகள் இயற்கை நமக்களித்த கொடையாகும். நாகரிக வளர்ச்சியின் காரணமாக ஊரின் நடுவில் நமக்கு இருப்பிடம் வேண்டுமென்று எத்தனையோ ஜீவராசிகளை அல்லாட வைத்துவிட்டு, கொன்றுவிட்டு ஏரிகளை அழித்து நமக்குரிய வீடுகளைக் கட்டிக்கொண்டோம்.

               இன்னும் ஊருக்குள் செல்வோம். அங்கே பாருங்கள். அகன்ற நீர்நிலைகள். அவற்றை நாம் பொய்கை, குளம், தடாகம் என்றெல்லாம் குறிப்பிடுவோம். பொய்கைகளில் நன்னீர் நிறைந்திருக்கும். ஆழமாகவும் இருக்கும். அது குடிநீருக்கு உகந்ததாக இருக்கும். குளங்களில் சேறு நிறைந்திருக்கும். மக்கள் குளிக்கவும் கால்நடைகளை நீராட்டவும் பாசனத்திற்கும் அவற்றைப் பயன்படுத்தினர். 

               கொளத்தூர் என்ற பெயரைப் பாருங்கள். குளங்கள் நிறைந்த ஊர் என்றாகிறதல்லவா? உழவுக்காக மக்கள் அன்றைய காலத்தில் குளங்கள் பலவற்றை வெட்டினார்கள். அரசனும் குளங்கள் தொட்டான்.

               ஆறுகள், ஏரிகள், பொய்கைகள், குளங்கள் என மருதநிலம் நீர்நிலைகளால் நிறைந்துள்ளதைப் பாருங்கள். அதனால் மருத நிலம் வளம் குன்றாது புதிய வருவாயை அளித்துக்கொண்டே இருக்கிறது. இதனை யாணர் ஊரன் என்ற சங்க இலக்கியச் சொல்லாட்சி குறிப்பிடுகிறது. யாணர் என்றால் புதிய வருவாய். புதுப்புது, அதாவது garden fresh என்கிறோமோ அப்படிக் காய்கறிகளும் கனிகளும் வந்தவண்ணம் இருக்கும்.

               மருத நிலத்திற்குரிய மரங்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா. மா, பலா, வாழை என எல்லா மரங்களும்தான் இருக்கின்றன என்று நீங்கள் சொல்லலாம். நாம் இப்போதிருக்கும் நில அமைப்பை வைத்து அப்படிக் கூறுகிறோம். இன்று மருத நிலத்தில் காணப்படும் பலவகை மரங்களும் அங்கு வசிப்பவர்கள் கொணர்ந்து நட்டவை. சங்க காலத்தில் இப்படி மனித முயற்சியின்றித் தாமாகவே சில மர வகைகள் சில நிலங்களில் இருந்தன. அப்படி மருத நிலத்தில் இருந்த மரம் மருத மரம். அந்த மரம் ஓர் அருமையான மூலிகை மரமாகும். மருத மரங்கள் மிகுந்த அளவில் காணப்பட்டதால்தான் அந்த நிலத்தை அன்று மருத நிலம் எனப் பெயரிட்டார்கள். மருத மரத்தின் விதைகள் ஆற்றின் ஓட்டத்தால் அது பாயும் இடங்களிலெல்லாம் விதைப் பரவலால் முளைத்திருக்க வேண்டும். ஆறு பாயும் இடம் மருத நிலம்தானே. ஆனால் இப்போது அவை எங்கே போயின. எல்லாவற்றையும் வீடுகள் அமைக்க, கதவுகள், பலகைகள் செய்ய நாம் அழித்துவிட்டோம். அதனால் இன்று வயல்சார்ந்த இடங்களில் மருத மரங்கள் இல்லை. மருதம் என்ற பெயரை இலக்கியங்கள் மட்டுமே காத்து வருகின்றன. மருதத்திற்கு அடுத்ததாகக் காஞ்சி மரங்களும் வயல்சார்ந்த பகுதிகளில் பெருவாரியாகத் தழைத்திருந்தன. மருதம், காஞ்சி ஆகிய மரங்கள் மருதநிலத்திற்குரிய மரங்களாகும்.

               நடந்த களைப்பு நமக்கு வந்துவிட்டதல்லவா? வாருங்கள் தோழர்களே நாம் மருதம் மற்றும் காஞ்சி மரங்களின் நிழலில் சற்று அமர்ந்து இளைப்பாறுவோம். அமர்ந்துகொண்டே சுற்றிலும் கண்களை மட்டும் சுழலவிடுங்கள். மருத நிலத்தில் கண்களுக்கு ஏது களைப்பு? எங்கும் களிப்பூட்டும் காட்சிகளே!

               இனி மருத நிலத்தில் எத்தகைய விலங்குகள் உள்ளன என்று கவனிப்போமா? வயல்களை உழுவதற்கு முக்கியமாகக் கால்நடைகள் அதாவது காளைகள் தேவையல்லவா? காளைகள் எங்கிருந்து வரும்? பசுக்களின் ஆண் மகவு காளையாகிறது. இப்படிப் பசு, காளை ஆகியவை மருத நிலத்தின் முக்கிய விலங்காகின்றன. மருத நிலத்தில் ஆநிரைகளுக்கு உணவுப் பஞ்சமில்லை. அவற்றின் சாணம் எருவாகிறது. பசுக்கள் பால் தருகின்றன. அங்கே பாருங்கள் குளத்திலே எருமைகள் கிடப்பதை. எருமையும் மருத நிலத்தின் விலங்காகும். நாம் ஆடுகளை விட்டுவிட முடியுமா? அவையும் மருதநிலத்தின் விலங்கே. விலங்கென்றால் துஷ்ட மிருகங்களாகத்தான் இருக்கவேண்டும் என்று கருதுவது கூடாது. பசு, எருமை, காளை, ஆடு ஆகியவை விலங்கினத்தைச் சார்ந்தவைதானே. மான், வேங்கை போன்றவை மருதநிலத்தில் இருக்காதா? என்ற கேள்வி எழலாம். அன்று மலைகளும், காடுகளும் செறிந்திருந்த காரணத்தால் அவை பெரும்பாலும் மருதநிலத்திற்கு வருவதில்லை. இப்போதுதான் நாம் விலங்குகள் இருக்கும் இடங்களை அழித்துவருகிறோம். அவற்றின் வழித்தடங்களில் வேலிகள் அமைக்கிறோம். அதனால் குடியிருப்புகளைத் தேடி யானைகளும் சிறுத்தைகளும் குரங்குகளும் வருகின்றன.

               மருதநிலத்தின் விலங்காக நீர்நாய் அமைகிறது. ஆற்றில், நீர்நிலைகளில் காணப்படும் வாளை மீன்களைப் பிடித்து உண்பதற்காக அவை மருதநிலங்களில் மறைந்து வாழ்கின்றன.

               ஒரு நிலத்திற்குரிய விலங்கு என்பதை நாம் இப்படிப் பார்க்கவேண்டும். எந்தச் சூழ்நிலை அந்தக் குறிப்பிட்ட விலங்கிற்கு ஏற்றதாக இருக்குமோ அங்கேதான் தன் இனப்பெருக்கத்தைச் சிறப்பாகச் செய்ய இயலும். அவற்றின் வாழ்க்கையும் நிம்மதியாய் இருக்கும். அவ்வாறு நோக்கும்போது பசு, காளை, எருமை, ஆடு, நீர்நாய் ஆகியவற்றை தமிழ் இலக்கண நூலார் மருத நிலத்திற்குரிய விலங்குகளாக வரையறுக்கின்றனர்.

               விலங்கைப் பார்த்துவிட்டோம். இனி பறவைகளைச் சற்று ஆய்வோம் வாருங்கள். அதோ வயல்களில் ஏதோ பறவைகள் பறந்துகொண்டிருக்கின்றன பாருங்கள். அருகே சென்று பார்ப்போம். அடடா... பச்சைப் பசேல் என்ற கம்பளத்தின் இடையே கரைபோன்று வரப்புகள். அவற்றில் எத்தனை எத்தனை நாரைகள் அமர்ந்திருக்கின்றன பாருங்கள். கால்நடைகள் மேயும் இடங்களிலும் அவற்றின் காலடியில் சில பறவைகளைப் பாருங்கள். கால்நடைகள் புல்லைக் தின்கின்ற இடங்களில் தென்படும் புழு, பூச்சிகளை சட்டென்று கொத்தி எடுக்கின்றன கொக்குகளுனம் நாரைகளும் குருகுகளும்.

               அங்கே பாருங்கள் பொய்கைகளிலும் குளங்களிலும் வாத்துகள் நீந்திக் களிக்கின்றன. அதோ பனை மரத்தின் உச்சியில் பாருங்கள். அன்றில்கள் சத்தம் எழுப்புகின்றன.

               சிட்டுகள், காகங்கள் முதலான பறவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியென்றால் அவற்றை மருதநிலப் பறவைகளாகச் சொல்லக்கூடாதா என்பீர்கள். காகங்கள் இல்லாத இடமேது? பிறவகைப் பறவைகள் இருந்தாலும் கொக்கு, நாரை, குருகு, வாத்து, அன்றில் ஆகியவை வயல்சார்ந்த இடத்தில் மட்டுமே பெருவாரியாகக் காணப்படுவதால் அவற்றை மருதநிலத்திற்குரியன என்று நம்முடைய தமிழ்மொழி இலக்கண ஆசியர்கள் வரையறுத்துச் சொல்கிறார்கள்.

               இப்படியே அமர்ந்த வாக்கில் அங்கே தெரியும் குளங்களை உற்று நோக்குங்கள். மேற்குப் பக்கம் பொய்கையில் தாமரைகள் மலர்ந்திருப்பது தெரிகிறது பாருங்கள். வெள்ளை, சிவப்பு என விளக்குகள் போல் உள்ளன. சில நிமிர்ந்து வானத்திற்கே 'டார்ச்' அடிப்பதுபோல் உள்ளன. சில வளைந்து காணப்படுகின்றன. அவற்றின் இலைகளை கவனியுங்கள். தாமரை இலைத் தண்ணீர் என்பார்களே. தண்ணீர் ஒட்டாமல் 'வாட்டர் புரூஃப்' செய்தது யார்?

               அதோ கீழ்த்திசையில் ஒரு குளம் இருப்பதைக் கவனியுங்கள். குவளையும் அல்லியும் பூத்திருக்கின்றன. வயல்களிலும் பாருங்கள் கழுநீர் மலர்கள் அழகு கொஞ்சுகின்றன. களை எடுக்க வந்த உழவர்கள் அவற்றைத் தம் காதலியின் கண்கள் என்று கருதித் தடுமாறுவதைப் பாருங்கள்.

தாமரை, கழுநீர், குவளை, அல்லி இவையே மருதநிலத்திற்குரிய பூக்களாகும். அந்தக் காலத்தில் இவற்றையெல்லாம் மக்கள் அணிந்து மகிழ்ந்தனர். அப்படி இன்று யாரேனும் செய்துவிட்டால் நேராக மனநல மருத்துவரிடம் செல்லவேண்டியிருக்கும்.

               எங்கோ ஓர் ஒலி கேட்கிறதே என்று என்னை ஒருவர் கேட்கிறார். வேறொன்றும் இல்லை. அது பறை ஒலிதான். நெல்லரிப் பறை என்று அதனைக் கூறுவார்கள். எங்கோ அறுவடை நடந்துகொண்டிருக்கிறது.

               என்ன பசிக்க ஆரம்பித்துவிட்டதா? இதோ உணவும் வந்துவிட்டதே. இங்கு செந்நெல் எனப்படும் கார் மற்றும் பலவகையான வெண்நெல் பயிரிடப்படுகின்றன. அவற்றைக் குற்றி அரிசி எடுத்து சமைத்துக் கொண்டுவந்து உழவர்கள் நமக்கு விருந்து படைக்கிறார்கள் பாருங்கள்.

               இந்த உழவர்களின் தொழில் என்ன தெரியுமா? உழவுதான். களைகட்டல், களை பறித்தல், நாற்று நடுதல், நெல்லரிதல், கடாவிடல் ஆகியவை உழவு சார்ந்த தொழில்கள். ஏறுதழுவுதல் இவர்களின் பொழுதுபோக்கு.

               அனைவரும் நிம்மதியாய்ச் சாப்பிட்டுவிட்டீர்கள் போலிருக்கிறது. யாரேனும் பாடல்கள் பாடினால் சற்றே கண்ணயரலாம். அதோ பாடினி வருகிறாள். அவள் கையில் யாழ் இருக்கிறதே. அதனை மருத யாழ் என்பார்கள். அவள் மருதப் பண்ணை இப்போது வாசிக்கப் போகிறாள். முதலில் இந்நிலத்துக் கடவுளைத்தான் புகழ்ந்து பாடுவாள். மருத நிலத்திற்குரிய கடவுள் யாரென்று அறிவீர்களா? வேந்தன் மேய தீம்புனல் உலகம் என்கின்றார் தொல்காப்பியர். வேந்தனை இந்திரன் என்றும் கூறுகிறார்கள்.

               மருத நிலத்திற்குத் தகுந்த காலம் சொல்லவில்லையே என்கிறார் இங்கொருவர். கார் காலம், கூதிர் காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் என அனைத்தும் மருதத்திற்கு உகந்த காலமே. ஒரு நாளிலே எந்தப் பொழுது சிறந்தது என்றால் வைகறையும் விடியலும் தான். ஏனென்றால் வைகறையில் துயிலெழுந்தால்தான் வயல்வேளைகளைச் சூரியனின் வெப்பம் தாக்கும் முன் செய்து முடிக்கலாம். வெப்பம் மனிதர்களைத் தாக்கும் முன் என்று சொல்வதைவிட பயிர்களைத் தாக்கும் முன் என்று கொள்ள வேண்டும். ஏனென்றால் வெப்பம் வந்ததும் நீர் பாய்ச்சினால் நீர் சூடாகி பயிர்களின் வேர்கள் புழுங்கி அழுகிவிடும்.

               எல்லாம் சரி. நிலம், சொன்னீர்கள், பொழுது சொன்னீர்கள், கருப்பொருள்களையெல்லாம் காட்டினீர்கள். உரிப்பொருள் என்று ஒன்றை அகப்பொருளில் சொல்வார்களே, அதைத் தொடவேயில்லையே என்கிறீர்களா?

மருதத்தின் சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள். காலையில் சென்று வயலில் நீர்விடுதல் போன்ற வேலைகளை முற்பகல் செய்து முடித்தால் பிறகு நாள் முழுக்க ஓய்வுதான். மனைவி சமைத்த மதிய உணவான அரிசிச்சோற்றையும் பல்வகையான காய்கறிகளையும் வயிறு புடைக்கத் தின்றாகிவிட்டது. சரி. அப்படியே வயலை ஒரு எட்டு பார்த்துவருகிறேன் என்று தலைவன் புறப்படுகிறான். அவன் எங்கே வயலுக்குச் சென்றான்? ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கின்ற பரத்தையின் வீட்டிற்கல்லவோ சென்றான். ஆடலும் பாடலும் அவனைக் களிப்புறுத்துகின்றன. சரி வீட்டிற்குப் போகலாம் போகலாம் என்று நினைக்கையில் இரவும் வந்துவிட்டது. இரவுக்காலத்தில் எப்படி வயல் வரப்புகளைத் தாண்டி வீட்டிற்குச் செல்வது? ஆகட்டும் பார்க்கலாம். ஏதேனும் சமாதானம் கிடைக்காமலா போகும்? மருதத்திற்குரிய சிறுபொழுதாகிய விடியலில் விடுவிடு என்று வீடு நோக்கி நடக்கிறான்.

               தலைவி புரிந்து கொள்கிறாள். கோபம் வருகிறது. தலைவன் தெருமுனையில் வரும்போது அவள் உள்ளே சென்று தோழியை அழைக்கிறாள். தலைவனை உள்ளே வரவிடாதே என்று சொல்கிறாள். தலைவன் பார்க்கிறான். தோழி நிற்கிறாளே. அவளிடம் நாம் கெஞ்சுவதா? அங்கே பாணன் வருகிறான். அவன்தான் பரத்தையின் முகவரி தந்தவன். அந்தப் பாணனை அழைத்துச் சமாதானம் பேசுமாறு அனுப்புகிறான். தலைவியைச் சந்திக்க தலைவனை உள்ளே விடு என்று பாணன் வாயில் நேர்வதும், இல்லை என்று தோழி வாயில் மறுப்பதும் நடைபெறுகின்றன. அப்படியே சிறிதுநேரம் கழித்து ஏதோ ஒரு வகையில் தலைவன் உள்ளே சென்றாலும் தலைவி தலைவன் மீது கோபம் கொள்கிறாள். அதன் வெளிப்பாடு சாமான்களைத் தூக்கி வீசுவதல்ல. சங்க கால இலக்கியத் தலைவி அப்படிச் செய்யமாட்டாள். பேசாமல் இருப்பதுதான் அவள் காட்டக்கூடிய கோபம். ஊடுகிறாள். தலைவன் சமாதானம் செய்கிறான்.

இவ்வாறு ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பதுதான் மருதநிலத்தின் உரிப்பொருளாகும். இத்தகைய நிகழ்வுகள் எல்லா நிலத்திலும் நடக்கலாம் என்றாலும் மருதநிலத்தில் அதிகமாக நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் அங்குதான் ஆடவருக்கு ஓய்வு அதிகம். ஓய்வு இருக்கும்போதுதான் பொழுதுபோக்கில் மனம் செல்லும். அதனால்தான் ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பதை மருத நிலத்திற்குரிய உரிப்பொருளாக இலக்கண நூல் வரையறுக்கிறது.

               அனைவருக்கும் புரியும் வகையில் மருதத் திணையின் சிற்றுலா அமைந்திருக்கும் எனக் கருதுகிறேன். நீங்கள் விரும்பினால் மற்ற நிலங்களிலும் - திணைகளிலும் சிற்றுலாவைத் தொடரலாம்.

 

No comments:

Post a Comment