Monday, 16 February 2015

வாலாட்டும் மனசு

வாலாட்டும் மனசு

பொய்சொல்லப் போறேன் பொய் சொல்லப் போறேன் நீ கொஞ்சம் அழகியடி' என்று ஹம் செய்தவாறே மணிமாறன் குளிக்கச் சென்றான்.

மணிமாறன் நல்ல வளத்தி. அவன் மனைவி கனிமொழியும் நல்ல அழகுதான். ஆனால் மணிமாறனை நோக்க அவள் நிறம் சற்று கம்மிதான். மணிமாறன் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு முதற்பரிசு பெற்றவனாயிற்றே! கனிமொழி மட்டுமென்ன மணிமாறனுக்குச் சளைத்தவளா? அவளும் அழகிப் போட்டியில் முதற்பரிசு பெற்றவள்தான்!

மணிமாறனுக்குக் கனிமொழி மீது எவ்வளவு பிரியம் என்றால் . . . அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.  எந்நேரமும் அவள் வாலைப் பிடித்துக்கொண்டே செல்வான். அவள் குழந்தைகளைப் பெறப்பெற அவளது அழகு கூடுவதாக நினைக்கிறான். மோகம் முப்பது நாள்; ஆசை அறுபது நாள் என்பது மணிமாறனின் விஷயத்தில் பொய்யாகிப் போனது.

'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்ற குடும்பக் கட்டுப்பாட்டின் தாரக மந்திரம் அவர்களைப் பொறுத்தவரை அர்த்தமற்றது. வீடு நிறைய குழந்தைகள் இருக்க வேண்டும். அவற்றிற்குப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்துத் தனது தாய்மையை நிலைநிறுத்த வேண்டும் என்பது கனிமொழியின் எண்ணம்.

தனது மனைவியை மணிமாறன் ஒருபொழுதும் பிரிவதே இல்லை. அவனுக்கென்ன? வேலையா வெட்டியா? எதுவும் இல்லை. மணிமாறன்தான் அப்படி என்றால் கனிமொழியும் படுமோசம். சாப்பிட்ட தட்டைக்கூட நகர்த்தமாட்டாள். அதற்குத்தான் மற்றவர்கள் இருக்கிறார்களே! சமயத்தில் தானாகச் சாப்பிட அலுப்பு ஏற்பட்டால் ஊட்டிவிடக்கூட அவளை வளர்த்த அம்மா தயாராக இருக்கிறாள்.

நன்றாகச் சாப்பிட்டுவிட்டு ஏ.சி.யில் படுத்து மூச்சுமுட்ட ஒரு தூக்கம் போடுகிறான் மணிமாறன். இடையிடையே குறட்டைச் சத்தம் வேறு. போட்டி போட்டுக்கொண்டு கனிமொழியும் பக்கத்திலேயே படுத்துத் தூங்குகிறாள்.

வேலை செய்து சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம் மணிமாறனுக்கு இல்லை என்பது வாஸ்தவம்தான். கனிமொழியும் அவனிடம், 'எனக்கு அது வேண்டும் இது வேண்டும்' என்று கூறி அடம் பிடிக்கப் போகிறாளா என்ன?

அவர்கள் இருவருக்கும் ஊர் சுற்றுவதில் ஆசைதான். ஆனால் என்ன செய்ய? பஸ், ரயில், விமானம் என்றெல்லாம் ஏறி ஊரைவிட்டு இதுவரை வெளியே சென்றதில்லை. எப்போதும் டூ-வீலர் பயணம்தான். தூரம் கொஞ்சம் அதிகமென்றால் எஸ்டீம் கார் இருக்கவே இருக்கிறது. எங்கேனும் பக்கத்தில் போகவேண்டுமென்றால் நடராஜா சர்வீஸ். 

காரில் செல்வதைவிட கால்நடையாகச் செல்வதுதான் சுகம் என்று மணிமாறன் அடிக்கடி சொல்லுவான். ஆனால் கனிமொழிக்கு நடந்து செல்வதைவிட காரில்செல்வதுதான் பிடிக்கும். ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு வேகமாக முகத்தில் வீசும் காற்றை அனுபவிப்பதில் அவளுக்கு அப்படியோர் அலாதி இன்பம். அத்தோடு நடந்துபோகும்போது எதிரேவரும் பெண்களை மணிமாறன் சைட் அடித்துக்கொண்டு கடலை போடுவதையும் தவிர்க்கலாம். 

மணிமாறனுக்குச் சிக்கன் லெக் பீஸ் ரொம்பவும் பிடிக்கும். எலும்பைக் கடித்து எச்சில் ஊற சாப்பிட வேண்டும். கனிமொழியின் டேஸ்ட் போன்லெஸ்தான். அதுவும் சின்னச்சின்னத் துண்டுகளாக இருக்கவேண்டும். அவள் வாழைப்பழச் சோம்பேரி. 'பெரிய பெரிய துண்டுகளைக் கடித்துக் குதறிக் காட்டான் போல் சாப்பிடாதே! பார்த்தாலே வாந்தி வருகிறது' என்று மணிமாறனை வம்புக்கிழுப்பாள். அது நாகரிகக் குறைச்சல் என்பாள். 'நீ மட்டும் காலியாப்போன தட்டை நக்கி நக்கி, தட்டைக் கழுவுவதற்கு வேலையே இல்லாமல் செய்கிறாயே, இது அநாகரீகமாகப் படவில்லையா?' என்று மணிமாறன் கேலி செய்வான்.

சில நேரங்களில் நாம் ஓட்டலில் சாப்பிடும்போது இப்படிப்பட்ட நபர்கள் நம் எதிரே அமர்ந்திருந்தால் நமக்கு வாந்தியே வந்துவிடும். ஆர்டர் கொடுத்துவிட்டு நம் தட்டுகளில் இலையின்றி வெறுமனே வைக்கப்பட்டிருக்கும் உணவு வகைகளை வாயில் வைத்தால் வெளியே தள்ளிக்கொண்டு வரும். படித்தவர்கள் கூட நிறைய பேர் சாப்பிட்டு முடிக்கும்போது இப்படித் தங்கள் கையையும் தட்டையும் சுத்தமாக நக்கித் தீர்த்துவிடுகிறார்கள்.

சிக்கனை ஒரு வெட்டு வெட்டினாலும் மணிமாறனும் கனிமொழியும் தீனிப்பண்டாரங்கள் இல்லை. காலையில் ஒரு டம்ளர் பால். மாலையில் சிற்றுண்டியாக ஒன்றிரண்டு தரமான விலை உயர்ந்த பிஸ்கெட்டுகள், இல்லை யென்றால் முறுக்கு . . . இத்யாதி. கனிமொழிக்கு அர்ச்சனா ஸ்வீட்தான் என்றில்லை, எதுவானாலும் ஓ.கே.  மணிமாறனுக்குக் கேக்தான் பேவரிட். 

மணிமாறன் சாப்பாடு விஷயத்தில் படுநாகரிகமானவன். தன் மனைவி சாப்பிட்டதும்தான் சாப்பிடுவான் என்றால் பாருங்கள். அதற்காக அவனைப் பெண்டாட்டிதாசன் என்று முடிவுகட்டி விடாதீர்கள். சாப்பாட்டிற்கு அலையும் ரகமில்லை அவன்.

நல்ல தைரியசாலியாக வளரவேண்டும் என்று அவனுக்கு மணிமாறன் என்ற பெயர் வைக்கப்பட்டது. பாண்டிய வம்சத்து மன்னர்கள் மாறன் என்று பெயர் வைத்திருந்தார்கள் என்பது வரலாறு கூறும் செய்தி. 

கனிமொழி பிறந்து இரண்டு மாதம் முதலாகத் தன் தாய்தந்தையரைப் பிரிந்து வளர்ப்புக் குழந்தையாக மணிமாறன் வீட்டிலேயே வளர்ந்தாள். அவள் குரல் கேட்க இனிமையாக இருந்ததால் கனிமொழி என்று பெயர் சூட்டப்பட்டது. சிறுவயது முதலே கனிமொழியும் மணிமாறனும் ஒரே வீட்டில் வளர்ந்தாலும் அண்ணன் தங்கை உறவில் வளர்க்கப்படவில்லை. மணிமாறனுக்குக் கனிமொழிமேல் எப்போதும் ஒரு கண். வீட்டில்வேறு அனைவரும் அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிக்கொள்ளப் பேகிறார்கள் என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தார்கள்.  அதனால் அவர்கள் இருவரின் மனத்திலும் இளமை முதலே காதல் கனிந்தது.

தெருவில் செல்லும் எவனாவது கனிமொழிமேல் சிறுபார்வைகூட வீசிவிட முடியாது. மணிமாறன் அப்படி யாராவது வாசலில் வந்து நின்றாலோ அல்லது குறும்புப் பார்வை பார்த்துச் சென்றாலோ அவர்களைக் கண்டபடி வைவான். அவன் அவ்வாறு திட்டுகின்ற வார்த்தைகளை வாயால் எடுத்துச்சொல்ல முடியாது. காதில் நாராசம் பாயும். ஒன்றிரண்டு வசவு கனிமொழிக்கும் விழும். அப்படிப்பட்ட நேரத்தில் அவனை யாரும் அடக்கிவிட முடியாது. அவன் கையை அப்பொழுது யாரேனும் பிடித்தால் கடித்துக் குதறிவிடுவான். இதனாலேயே அவன் இருக்கும் சுற்றுவட்டாரத்து விடலைப் பையன்கள் அவர்கள் வீட்டுவழியே செல்ல நடுங்குவார்கள்.

கனிமொழியும் எப்பொழுதும் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவள்தான். அக்கம் பக்கத்தில் அநாவசிய பேச்சு வைத்துக்கொள்ள மாட்டாள். தெருவில் செல்லும் ஆடவரை ஏறெடுத்தும் பார்க்கமாட்டாள்.

ஆனால் அவள் வீட்டின் அவுட்ஹவுஸில் குடியிருக்கும் சீனு என்கிற சீனிவாசன் மீது எப்பொழுதும் கனிமொழிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. சீனு அவுட்ஹவுஸில் குடியிருப்பதில் கனிமொழிக்குச் சிறிதும் உடன்பாடில்லை. 'நாம் என்ன ஜாதி, அவன் என்ன ஜாதி?' என்று எப்பொதும் ஜாதிப் பிரச்சினையை முன்நிறுத்திப் பொருமிக்கொண்டே இருப்பாள்.

ஆனால் சீனுவோ கனிமொழியின் வம்புக்கே வருவதில்லை. அவன் பூனை ஜாதி. இருக்கும் இடமே தெரியாது. அவ்வளவு அமைதியானவன்.

அவனுக்கு வெளியேதான் வேலை. எப்போதும் வெளியே சுற்றிவிட்டுச் சாப்பாட்டிற்குதான் வீட்டுக்கு வருவான். இருந்தும் என்ன பயன்? அவன் குரல் கேட்டுவிட்டால் போதும் . . . கனிமொழி கொல்லைப் பக்கம் சென்று சீனு எங்கே இருக்கிறான் என்று நோட்டம் விடுவாள். சாடை மாடையாக வசவுகளை எடுத்துவிடுவாள். கனிமொழியை ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும் என்று சீனுவும் அவசரஅவசரமாக வாயில் திணித்துக்கொண்டு வந்த சுவடு தெரியாமல் வெளியேறி விடுவான். அப்படியும் கனிமொழி அவனை வாழவிடவில்லை. 

இவளிடம் ஏன் தலையைக்கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு நாள் சொல்லாமல் கொல்லாமல் சீனு வீட்டைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டான். அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்றுகூட யாருக்கும் தெரியவில்லை.

கனிமொழியின் தலைப் பிரசவத்தில் பிறந்தவள்தான் 'செம்மொழி'. பிரசவத்தின்போதுதான் இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது. அதன் நினைவாகத் தலைக் குழந்தைக்குச் செம்மொழி என்று பெயரிடப்பட்டது. செம்மொழி தன் பெயருக்கேற்ப வளவளவென்று அனாவசியமாகப் பேசமாட்டாள். நாலு வார்த்தை சொன்னாலும் நறுக்குத் தெரித்ததுபோல் செம்மையாகச் சொல்வாள்.  ரொம்ப பயந்த சுபாவம் வேறு.

செம்மொழியை 'அங்கே பார்க்காதே, இங்கே பார்க்காதே, அப்படிச் செய்யாதே, இப்படிச் செய்யாதே, பொம்பளப் புள்ளையா லட்சணமாக இருக்கணும்' என்றெல்லாம் எப்போது பார்த்தாலும் அதட்டிக்கொண்டே இருப்பாள் கனிமொழி. அம்மாவைப் பார்த்தாலே பாசத்திற்குப் பதில் பயம்தான் எழுந்தது செம்மொழியின் மனத்தில்.

செம்மொழி வளரவளர புதிதான பிரச்சனை உருவெடுத்துவிட்டது. செம்மொழி தன்னைக் காட்டிலும் அழகாக வளர்கிறாளோ என்று கனிமொழிக்கு எண்ணம். செம்மொழி அம்மாவைவிட நல்ல வெளுப்புதான். நாசுக்கான பேர்வழிகூட. ஸ்லிம் சிம்ரன் போன்று ஒடிசலாக வளர்கிறாள். ஒசிந்த நடை பழகுகிறாள். கனிமொழியோ ஜோதிகா போன்று சற்று குண்டு. குள்ளம் வேறு. எல்லாம் சேர்ந்து செம்மொழிமேல் பொறாமைத் தீயைக் கனிமொழி மனத்தில் வளர்த்தன. செம்மொழி பருவமடைந்ததும் கனிமொழியின் மனத்தில் பொறாமைத் தீ விசுவரூபம் எடுத்தது.

செம்மொழி அப்பாவிடமும் பேசக்கூடாது என்று கனிமொழி உறுதியாகச் சொல்லிவிட்டாள். மணிமாறனிடம் இதைப்பற்றிப் பேச கனிமொழிக்கு பயம். அதனால் செம்மொழி தனியாக இருக்கும்போது அவளைப் படாதபாடு படுத்துகிறாள். தான்பெற்ற மகளாயிற்றே என்று சற்றும் நினைத்துப் பார்ப்பதில்லை. 

கனிமொழி அஞ்சியதுபோலவே நடந்துவிட்டது. மணிமாறன் செம்மொழியையும் மனைவியாக வரித்து விட்டான். கனிமொழி நியாயம் கேட்டால் 'நம்ம ஜாதியில் இல்லாத புது வழக்கத்தையா செய்துவிட்டேன்?' என்று கொக்கரிக்கிறான்.

மணிமாறனின் செயலால் கோபம்கொண்ட கனிமொழி நேரம் கிடைக்கும்போதெல்லாம் செம்மொழிமேல் பாய்வது வழக்கமாகிவிட்டது. நேற்றுகூட செம்மொழியின் கூர்மையான நகத்தைக் கடித்துக் குதறிவிட்டாள். இப்பொழுது செம்மொழியைத் தூக்கினால் வலிபொறுக்க முடியாமல் 'வால் வால்' என்று கத்துகிறாள். கனிமொழியோ 'உர்'ரென்று உறுமுகிறாள்.

இப்பொழுது தெருவிலிருந்து பார்வையை வீசிவிட்டுப் போகும் விடலைப் பையன்களிடமிருந்து கனிமொழியைக் காப்பதோடு செம்மொழியைக் காப்பதும் மணிமாறனின் நித்திய வேலைகளில் ஒன்றாகிப் போனது. 

வழக்கம்போல் மணிமாறன் தெருவில் செல்லும் ஒருவனைப் பார்த்து, 'இப்படி வாலாட்டற வேலை எல்லாம் எங்கிட்ட வச்சுக்காதே, வாலை ஒட்ட நறுக்கிடுவேன். லொள், லொள்னு சிக்னல் காட்ற வேலை வச்சுக்காதே ஜாக்கிரதை!' என்று எம்பி எம்பிக் குதித்து உ(கு)ரைத்துக் கொண்டிருந்தான். 



No comments:

Post a Comment