Monday, 22 August 2022

பெண்மை வாழ்கென்று போற்றுவோமடா

 

பெண்மை வாழ்கென்று போற்றுவோமடா

- கவிஞர் அவ்வை நிர்மலா

தாயெனச் சொல்லித் தலையால் வணங்கித்

தயையுடன் பாடுகிறார் - அவர்

பேயெனச் சொல்லி மனைவியைத் தூற்றிப்

பிழைகளைத் தேடுகிறார்!

 

தேய்ந்திடும் சந்தனம் என்றே புகழ்ந்து

திசைதொறும் மீட்டுகிறார் - அவர்

வாய்க்க மணக்கொடை வேண்டும் எனவே

வம்புகள் பூட்டுகிறார்!

 

பாய்தனில் என்றும் மகிழ்வை யளித்திடும்

பாங்கைப் புகழுகிறார் - அவர்

வேய்மகள் தேடி விலையும் அளித்துமே

வெப்புநோய் வாங்குகிறார்!

 

தோய்வுடன் சேயை வளர்ப்பவள் என்றே

தோரணம் நாட்டுகிறார் - அவர்

வாய்தனை மூடா வனிதையர் என்றே

வசையொடு வாட்டுகிறார்!

 

நோய்தனில் வீழ்ந்தால் செவிலியாம் என்றே

நெகிழ்ந்து பரவுகிறார் - அவள்

மாய்ந்திடின் வேறொரு மங்கையை அன்றே

மணக்க விரையுகிறார்!

 

ஆய்ந்திடில் அன்பில் நிகரிலை என்றே

அரங்கினில் போற்றுகிறார் - அவர்

ஓய்வும் தராமல் பணிகள் சுமத்தியே

ஓய்வின்றித் தூற்றுகிறார்!!

கவி வேள்வி

 

கவி வேள்வி

- கவிஞர் அவ்வை நிர்மலா

அழகழகாய்க் கவிதைகளைச் சொல்லில் கூட்டி

ஆய்ந்தாய்ந்து களைகளையும் போக்கு கின்றார்!

பழகுதமிழ்ச் சொல்லெடுத்துப் பாக்கள் தந்து

பைந்தமிழாள் மயங்கிடவே தேக்கு கின்றார்!

விழப்போகும் சருகுக்கும் மகுடம் சூட்டி

விழுதாகத் துளிரெழவே நோக்கு கின்றார்!

இழப்பினிலே ஆறுதலை நெஞ்சில் ஈந்து

இருப்புக்கு இலக்களித்து ஊக்கு கின்றார்!!

 

அழுகின்ற குழந்தைக்கு மதியைக் காட்டல்

ஆராரோ தாலாட்டில் உறவைக் கூட்டல்!

பழுதான அரசியலைத் தூற்றும் பாட்டில்

பங்கெடுப்பார் அஞ்சாமல் சோகக் காட்டில்!

நழுவாராம் சிக்கல்கள் கண்டால் நாட்டில்

நலம்காணச் சொல்லெடுத்து வடிப்பார் ஏட்டில்!

முழுதாகப் படிக்கவைக்கும் கவிஞர் ஆற்றல்

முத்தமிழாள் சிலிர்ப்பதற்கே கவிதை வேட்டல்!!

 

மொழிப்பயிரும் காலங்கள் கடந்து வாழ

மொய்க்கின்ற கவிஞருந்தாம் உரமாய் ஆவார்!

கழிகின்ற இலக்கியத்தின் சொற்கள் எல்லாம்

கண்டெடுத்துக் கல்வெட்டாய்ப் பதித்து ஈவார்!

விழிவழியே காணுகின்ற உலக விந்தை

விரிக்கின்ற நுண்ணோக்கிக் கவிதை நாவார்!

அழியாது செந்தமிழும் உலகை ஆளும்

அற்புதநல் கவிஞருமே என்றும் மூவார்!!!

Children Story - ஓடி விளையாடு

 

ஓடி விளையாடு

முனைவர் அவ்வை நிர்மலா

புதுச்சேரி

இளவேனில் படுசுட்டி. ஆனால் இன்று வழக்கத்துக்கு மாறாக சோஃபாவில் கவிழ்ந்து படுத்துக்கொண்டிருந்தான். தாத்தாவின் மீது எரிச்சல் எரிச்சலாக வந்தது.

“நான் அப்படி என்ன பண்ணிட்டேன். இந்த தாத்தா ரொம்ப மோசம். அப்பாவும் மோசம். அம்மாவும் மோசம். என்னைக்கும் இல்லாம இன்னைக்கு எல்லாரும் என்னையே திட்டி தீத்துட்டாங்க. சே. . .”

இப்படியே அவன் நினைத்துக்கொண்டிருந்தான். முகம் சுருங்கிவிட்டது.

அப்படி என்னதான் நடந்தது? ராத்திரி எப்போதும்போல் தாத்தாவின் அலைபேசியை எடுத்து விளையாடிக்கொண்டிருந்தான்.

அவன் வீட்டில் இளவேனில் வைத்ததுதான் சட்டம். ஆனாலும் அப்பாவிடம் அவன் அடம் பலிக்காது. அப்பா தன் அலைபேசியை அவனிடத்தில் தரவே மாட்டார். ஒருமுறை அப்பாவுக்குத் தெரியாமல் மெதுவாக அவர் மேசையிலிருந்து அலைபேசியை எடுத்துவிட்டான். அவன் அப்பாவிற்கு வந்த போன்கால்கள் தொந்தரவு செய்யாதவாறு ஒலியை அமிழ்த்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்தான். முக்கியமான எத்தனையோ பேர் அப்பாவை அழைத்திருக்கிறார்கள். அப்பாவிற்குத் தெரிந்ததும்,  “வேனிலு. . . இப்டி செய்வியா? செய்வியா? ஒனக்கு அறிவிருக்கா?” என்று நாலு சாத்து சாத்தினார்.

அதிலிருந்து இளவேனில் அப்பாவின் அலைபேசியைத் தொடுவதில்லை. ஆனால் தாத்தாவிடம் கொஞ்சம் செல்லம் அதிகம். அதனால் தாத்தா அலுவலகம் விட்டு வந்ததும் அலைபேசி அவன் கைகளுக்குத் தாவிவிடும்.

இப்போதெல்லாம் அவன் வால்தனமும் அதிகமாகிவிட்டது. நாலு வயது முடியப்போகிறது. ஊரடங்கால் பள்ளியில் அவனை இன்னும் சேர்க்க முடியவில்லை. அதனால் கண்டிப்பும் குறைந்துவிட்டது. அவன் ஏதாவது தப்பு செய்தால் பாட்டியும் சேர்ந்து கொஞ்ச ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஆனால் அன்றைக்கு ஏன் அப்படி அனைவரும் கோபித்துக் கொண்டார்கள். நடந்தது இதுதான். அவன் விளையாடிக்கொண்டே இருந்தான். எல்லோரும் தூங்கிவிட்டார்கள். பகலெல்லாம் தூங்குவதால் இரவில் இளவேனிலுக்குத் தூக்கம் வரவில்லை. அம்மா நல்ல தூக்கத்தில் இருந்தார்.

அவன் மட்டும் அலைபேசியை அமுக்கிக்கொண்டிருந்தான். கார்ட்டூன் படங்கள் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனது. செல்பேசியில் விளையாட்டுகளும் விளையாடி விளையாடி அலுத்துவிட்டன.

ஒரு புது விளையாட்டு அவனாகவே கண்டுபிடித்தான். தொடர்பு எண்களுக்குச் சென்று அமுக்கி அமுக்கிப் பார்த்தான். மாற்றி மாற்றி நிறைய பேருக்கு மிஸ்டு கால் கொடுத்துக்கொண்டே இருந்தான். சிறிது நேரத்தில் எதிர்முனையிலிருந்து கால் வர ஆரம்பித்தது. வேனிலுக்கு பயமாகிப் போனது. என்ன செய்வதென்று யோசித்தான். பேசாமல் செல்பேசியைச் “சுவிட்ச் ஆஃப்” செய்தான். போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டான்.

காலையில், “ஏய் எந்திரி, வேனிலு எந்திரிக்கிறியா? ஒத வாங்கறியா?” என்று அப்பாவின் குரல் ஓங்கி ஒலித்தது. பட்பட்டென்று இரண்டு அடிகளும் கிடைத்தன. வாரிச்சுருட்டி எழுந்தான் வேனில்.

தூக்கக் கலக்கத்தில் வரவேற்பரையில் நிறைய குரல்கள் கேட்டன. அப்பா தரதரவென்று அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு முன்அறைக்குச் சென்றார்.

வெளியே வாசலில் ஐந்தாறு வண்டிகள் நின்றிருந்தன. அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எல்லோர் கண்களும் அவனையே பார்ப்பதுபோல் தோன்றியது.

“இதோ பாருங்கப்பா, எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம்தான். இப்போ இந்த அளவுக்கு வந்திருக்கு. எத்தனவாட்டி நான் அவனுக்கு செல்பேசி கொடுக்காதிங்கன்னு சொல்றேன் கேட்டிங்களா?” என்று அப்பா கத்தினார்.

வேனில் பேந்தப் பேந்த விழித்தான். “ஏன் எல்லோரும் என்னத் திட்டறாங்க?”

“ஏண்டா எரும, எதுக்குடா எல்லோருக்கும் அந்த நடுநிசில போன் பண்ணின. எல்லோரும் பாரு, பயந்துபோயி தாத்தாவுக்கு என்னாச்சோன்னு காலையிலேயே ஓடி வந்திருக்காங்க. இப்படித்தான் பண்ணுவியா?” என்று சொல்லிக்கொண்டே சுரீர் சுரீர் என்று பின்பக்கம் நாலு வைத்தார் அப்பா.

“அப்பா, இல்லப்பா, அது வந்துப்பா...” என்று கண்களில் நீர் விட்டான் வேனில்.

“வந்தவர்கள் சரி சரி விடுங்க. புள்ள பயந்துடப்போவுது. அதுக்கு என்ன தெரியும்? நாமதான் இனிமே சொல்லி வளக்கணும்” என்று ஒவ்வொருவராகப் பரிந்துபேசிவிட்டுப் போனார்கள்.

இருந்தாலும் அவர்களுக்கு அந்தக் குழந்தையின் செயலில் சிறு வெறுப்பும் இருக்கத்தான் செய்தது.

“வேனிலு. . . இதோ பாரு. ஒன் விளையாட்டால என்ன நடந்ததுன்னு. நான் எத்தன வாட்டி சொல்லியிருக்கேன். நீ விளையாட எவ்வள பொம்ம வாங்கிக்கொடுத்திருக்கேன். ஆனா அதயெல்லாம் விட்டுட்டு எப்பப் பாத்தாலும் செல்போன வெச்சிக்கிட்டிருக்க. கண்ணையும் கெடுத்துக்கற.” என்று அவனை இழுத்துப்பிடித்து நிற்கவைத்து மிரட்டினார்.

“இனி இந்த வீட்ல யாராச்சும் வேனில் கிட்ட செல்போன கொடுத்திங்கன்னா அப்பறம் நடக்கறதே வேற” என்று பொதுவாகக் கத்திவிட்டு அப்பா வேலைக்குப் போய்விட்டார்.

எப்போதும் பரிந்துவரும் பாட்டியும் இன்றைக்குப் பேசாமல் விட்டுவிட்டார். அம்மாவும் தாத்தாவும் கூட அவனைச் செல்லம் கொஞ்சவில்லை. யோசித்துப் பார்த்தான் வேனில். ஆமாம் விளையாட்டு வினையாகிவிட்டது. தன் மீதே வருத்தம் வருத்தமாக வந்தது. பக்கத்து காலிமனையைப் பார்ப்பதுபோல் இருந்த சன்னலின் அருகேயிருந்த நாற்காலியில் போய் அமர்ந்தான்.

அந்தக் காலிமனையில் அவன் தெருப் பிள்ளைகள் ஏழைச்சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. இதற்கு முன்னாலும் அவர்கள் அங்குதான் விளையாடுவார்கள். ஆனால் வேனில் அவர்கள் போடும் சத்தம் கேட்கிறது என்று சன்னலை முடிவைத்துவிடுவான்.

இன்று தன்னையொத்த நண்பர்களின் தோழமை வேண்டும்போல மனத்திற்குப் பட்டது. இதுநாள்வரை அவர்களுடைய பெயர்கூட அவன் தெரிந்து வைத்திருக்கவில்லை. மெதுவாகத் தாத்தாவின் பக்கத்தில்போய் நின்றான்.

தாத்தா தலையைத் தூக்கிப் பார்த்து, “இனிமே எதுவும் பேராது. என் கிட்ட வராத. ஒனக்கு செல்போன் கொடுத்துட்டு அப்பறம் ஒங்க அப்பன் கிட்ட பேச்சு வாங்க முடியாது” என்று சொல்லிவிட்டார்.

“இல்ல தாத்தா, நான் வெளிய போயி விளயாடட்டுமா?” என்று கேட்டான் வேனில்.

தாத்தாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனையோ முறை வெளியில் பிள்ளைகளோடு போய் விளையாடுமாறு கூறினாலும் போகாதவன் இன்று கேட்கிறான். நல்லதுதான்.

“போடா, போ. போய் விளையாடு. தெருவ விட்டு வெளிய போகக்கூடாது. கிரவுண்டுகுள்ளயே விளையாடு” என்று கூறிவிட்டு அவரும் அலுவலகம் கிளம்பினார்.

“டேய், வேனிலு, போவும்போது அந்த பந்தையும் எடுத்துட்டுப்போ. அப்பதான் ஒன்ன அவங்க விளையாட்டுல சேத்துப்பாங்க.” என்று பாட்டி அறிவுரை கூறினார்.

மாமா வாங்கித்தந்த பந்து வெகு மாதங்களாக தொடப்படாமலேயே மூலையில் கிடந்தது. அதனை எடுத்துக்கொண்டான் வேனில்.

பாட்டி சன்னல் ஓரம் போய் உட்கார்ந்துகொண்டு, பேரன்மேல் ஒரு கண்வைத்தார்.

மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் வேனிலைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தனர். ஆனால் அவன் கையிலிருந்த பந்து மட்டும் அவர்களை ஈர்த்துக்கொண்டிருந்தது.

வேனில் மெதுவாக, “டேய் நானும் விளையாட வரண்டா” என்று கெஞ்சினான்.

குழந்தைகள் மனம் இரங்கினர். “சரி வாடா. ஆனா அந்தப் பந்த எங்ககிட்ட கொடுக்கணும்” என்றனர்.

“சரிடா, இந்தாங்க.” என்று நீட்டினான். பிள்ளைகளுக்குள் மகிழ்ச்சி. அவர்கள் இரு அணிகளாகப் பிரிந்தனர். கால்பந்து விளையாட்டு தொடங்கிவிட்டது.

இத்தனைநாள் கேட்கும் சத்தத்தைவிட இன்று அவர்கள் விளையாட்டில் அதிக சத்தம் கேட்டது. அதில் அதிக சத்தம் போட்டவனே இளவேனில்தான்.

ஓடிஓடி விளையாடினான் வேனில். விழுந்து விழுந்து காரணமில்லாமல் குழந்தைகள் சிரித்தனர். ஒருவர்மேல் ஒருவர் விழுந்து ஒரே ரகளையாக இருந்தது.

“டேய் சாப்புட வாடா. பாரு, ஒரு மணி யாவுது. இன்னுமா ஒங்களுக்கு பசிக்கல?” என்று சத்தம் போட்டார் இளவேனிலின் பாட்டி.

யாரும் நகர்வதாகக் காணோம். “எல்லாரும் போய் சாப்டு ரெஸ்ட் எடுத்திட்டு மறுபடியும் மூனு மணிக்கு வந்து விளையாடுங்க”, என்றவாறு வெளியே போய் அனைவரையும் விரட்டினார் இளவேனிலின் அம்மா பொன்னி.

பாட்டியிடம் ஓடிவந்தான் இளவேனில். அவன் உடல்முழுக்க நன்றாக வியர்த்திருந்தது. எப்போதும் குளிரூட்டிய அறையில் படுத்தவாக்கில் கிடக்கும் இளவேனில் உடல் முழுக்க புழுதிபடிந்து வந்ததுகூட அழகாக இருந்தது.

“பாட்டி, பாட்டி, நான் சாயங்காலமும் விளையாடப் போகட்டுமா?” அனுமதி கேட்டு நின்றான் இளவேனில்.

“சரிடா. போய்வா. சாயந்திரம் போகும்போது பொம்மையெல்லாம்கூட எடுத்துட்டுப்போ. எல்லாரும் அடிச்சிக்காம ஒத்துமையா விளையாடணும். சரியா?” என்றார் பாட்டி.

“சரி பாட்டி” என்று உள்ளே போய் முகம், கை கால் கழுவினான் இளவேனில்.

மூன்று மணிக்கெல்லாம் குழந்தைகள் பட்டாளம் மரத்தடியில் குழுமியது. வேப்பமரம் குழந்தைகளின் குதுகலத்தைப் பார்த்துத் தலையசைத்து அவர்களுக்கு விசிறிவிட்டது. இளவேனில் தன்னிடமிருந்த பொம்மைகள் சிலவற்றை ஒரு பையில் போட்டு எடுத்துப்போனான். குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது. முத்து, ராதா, வனிதா, ரவி, ஜபார், லைலா, ஜோசப் என்று பெயர்களைக் கூவிக்கொண்டு விளையாடினார்கள்.

இருட்டத் தொடங்கியது.

“போதும் போதும். விளையாடினது. வீட்டுக்குக் கௌம்புங்க. நாளைக்கு வௌயாடலாம்”. பாட்டியின் அதட்டலான குரல்கேட்டு மெதுமெதுவாய்க் குழந்தைகள் கலைந்து போயினர்.

இளவேனில் வீட்டிற்குள் வந்ததும் தானாகவே மாச்சில்லைச் சாப்பிட்டுவிட்டு பாலை முழுதாகக் குடித்தான்.

மேசை மீது தாத்தாவின் அலைபேசி கேட்பாரற்றுக் கிடந்தது.

இளவேனிலுக்கு ஓடிஆடி விளையாடுவதன் சுவை தெரிந்துபோனது!

***

 

 

 

 

Children Story - அம்மாவின் அணைப்பில்

 

அம்மாவின் அணைப்பில்

“அம்மா, அம்மா நம்ம ஊர்ல சர்க்கஸ் போட்டிருக்காங்க. என்ன அழைச்சிட்டுப்போம்மா,” என்று அடம்பிடித்தாள் குழலி.

“இதோ பார் குழலி, எங்கப் பாத்தாலும் ஒரே காய்ச்சலா இருக்கு. கூட்டத்துல போகக்கூடாதுன்னு தொலைக்காட்சியில தினம் சொல்றாங்களே, நீ கேக்கலையா? பேசாம வீட்லயே இருக்கணும். அப்பதான் பாதுகாப்பு. நீ எவ்வள புத்திசாலிப் பொண்ணு. நான் ஒனக்கு சொல்லணுமா?” என்று அம்மா நீலவேணி திட்டவட்டமாக சர்க்கஸ் போவதற்கு மறுப்பு சொல்லிவிட்டார்.

“அம்மா, நீ மட்டும் தெனம் வெளிய போற. . . நான் மட்டும் போவக்கூடாதுன்னு சொல்ற. . .” சிணுங்கினாள் குழலி.

“நான் போவலன்னா ஒனக்கு பள்ளிக்கூடம் பீஸ், பொஸ்தகங்க எல்லாம் யார் வாங்கித் தருவா? அப்பாவோட சம்பளம் மட்டும் நமக்குப் போதலையே குழலி” என்றாள் வேணி.

“நீ வேணா அப்பாகிட்ட கேளு. . .”

அம்மாவுக்கு மேல அப்பா. எப்போதும் ஆபீஸ் ஆபீஸ்னு போயிடுவாரு. . . அவரா கூட்டிட்டுப் போவப் போறாரு?

எப்போதும் ஆன் லைனு வகுப்பில் உட்கார்ந்து உட்கார்ந்து குழலிக்கு அலுத்துப்போனது.

“நாலாவதுன்னுதான் பேரு. ஆனா எவ்வளவு வேல? எப்பப் பார்த்தாலும் லீலா டீச்சர் அத எழுது, இத எழுதுன்னு டார்ச்சர் பண்றாங்களே. . .” எரிச்சலாக வந்தது குழலிக்கு.

“குழலி, அம்மா வேலைக்குப் போறேன். தோ பார். சாப்பாடு மேசையில வெச்சிருக்கேன். உள் பக்கம் தாப்பா போட்டுக்கிட்டு பத்திரமா இருக்கணும் தெரியுதா? ஏதாவது வேணும்னா கீழ்வீட்டு அத்தகிட்ட கேளு” என்று சொல்லிவிட்டு வேணி வேலைக்குக் கிளம்பிவிட்டாள்.

குழலிக்கு கோபமாக வந்தது. “பேசாம நாம வீட்ட விட்டுப் போயிடனும். என்ன நல்லாத் தேடட்டும். அப்பத்தான் இனிமே நான் கேட்டத இவங்க ஒடனே செய்வாங்க” என்று நினைத்தாள் குழலி.

வீட்டைச் சாத்திப் பூட்டிவிட்டுச் சாவியை அம்மா வைக்கும் பூத்தொட்டியில் மறைவாக வைத்தாள்.

பதுங்கிப் பதுங்கி மெல்ல வாசலை அடைந்தாள். வெளியில் அவளை யாரும் பார்க்கவில்லை. அப்படியே மெதுமெதுவாய் நடந்து விமான தளத்தின் மதிற்சுவரைச் சுற்றிப்போய் மேற்குப் பக்கம் போய்விட்டாள். அங்கே பொட்டல் காடாக இருந்தது.

இப்படியே நடந்து நடந்து எங்கே போவது? என்று யோசித்தாள்.

அப்போது அங்கே ஒரு புதர்ச்செடியிலிருந்து “கீக் கீக் கீக்” என்று ஈனஸ்வரத்தில் ஒலி கேட்டது. மெதுமெதுவாய் குழலி கிட்டேசென்று உற்றுப் பார்த்தாள்.

ஒரு கோழிக்குஞ்சு அழுதுகொண்டே இருந்தது.

மேலே ஒரு காக்காய் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

குழலி மெதுவாக நெருங்கிப் போனாள்.

“என்ன ஒன்னும் செஞ்சிடாத, பிளீஸ் பிளீஸ்” என்றது கோழிக்குஞ்சு.

“இல்ல இல்ல நான் ஒன்னும் செய்யமாட்டேன். என் கிட்ட வாயேன். . . ” என்று சொன்னாள் குழலி.

“இல்ல, முடியாது, என்னால நடக்க முடியல”.

“ஏன் என்னாச்சு ஒனக்கு?”

“மேலே பாரு. . . அந்தக் காக்கா என்ன கொத்திக்கிட்டு வந்துடிச்சி. அது கொத்தனதால என் றெக்கையில அடிபட்டுடிச்சி. மேல இருந்து தொப்புன்னு விழுந்ததுல காலும் சுளுக்கிக்கிச்சி. என்னால ஒரு அடிகூட நடக்க முடியாது. . .”

“அச்சச்சோ, அப்படியா? அப்படியே இரு. . . நான் ஒன்ன தூக்கிக்கறேன்”.

“இல்ல இல்ல. நீ என்னத் தூக்கிவெச்சிக்கிட்டா அந்தக் காக்கா திரும்பவும் வந்து என்னக் கொத்திக்கிட்டுப் போயிடும். அதனாலதான் வெளிய வர பயமாயிருக்கு. . .  அந்தக் காக்கா மரத்துல ஒக்காந்துகிட்டு நம்மளயே மொறச்சிப் பாத்துட்டிருக்கு பாரு. . .”

“நீ ஒன்னும் பயப்படாத. நான் ஒரு குச்சி எடுத்துவரேன். அப்பறமா அந்த காக்கா கிட்ட வராது” என்று சொல்லி பக்கத்திலிருந்த ஒரு காய்ந்த குச்சியை எடுத்துக்கொண்டாள் குழலி.

கோழிக்குஞ்சோடு குழலி பேசிக்கொண்டிருந்ததையும் தன்னை ஓட்டுவதற்குக் குழலி குச்சியை எடுப்பதையும் பார்த்துக்கொண்டிருந்த காக்கைக்குக் குழலிமீது ஆத்திரம் வந்தது.

“கா கா கா” வென்று கோபமாகக் குழலியைப் பார்த்துக் கத்தியது.

“பாப்பா, தோ பார். நான் அந்தக் குஞ்சைக் கஷ்டப்பட்டு பிடிச்சுக்கிட்டு வந்தேன். பேசாம என் கிட்ட குடுத்துடு. இல்லன்னா நான் ஒன்னயும் கொத்திக் காயப்படுத்துவேன்” என்றது.

காக்கா இப்படி மிரட்டியதும் குழலி நடுங்கினாள். அப்போது தலையில் கொத்துவதுபோல் காக்கையும் கிட்டே பறந்துவந்து வட்டமிட்டது.

குழலிக்குக் கோழிக்குஞ்சை அனாதையாக விடவும் மனசில்லை. அதே நேரம் காக்கை தன்னைக் கொத்திவிடுமோ? என்று பயமாகவும் இருந்தது.

“அண்ணா, அண்ணா, நான் கொஞ்சம் சொல்றதக் கேளேன். ஒனக்குச் சாப்பாடுதான வேணும். இந்தக் கோழிக் குஞ்சைக் கொன்னுட்டா ஒரு வேளைக்குதான சாப்பாடு கிடைக்கும். நான் ஒனக்கு தெனம் சாப்பாடு தறேன்.”

“அப்படியா? நீ எப்டி சாப்பாடு தருவே?” என்றது காக்கை.

“அதோ பாரு. அந்தப் பக்கந்தான் எங்க வீடு இருக்கு. நீ அங்கப் பறந்து வா. எங்க அம்மா எனக்கு வெதவெதமா தின்பண்டம்லாம் வாங்கித் தருவாங்க. நான் ஒனக்கு அதுல கொஞ்சம் டெய்லி தருவேன். நீ இந்தக் கோழிக்குஞ்ச விட்டுடேன்” என்றாள்.

“அப்டியா, பேச்சு மாற மாட்டியே” என்றது காக்கை.

“இல்லண்ணா, நிச்சயமா பேச்சு மாற மாட்டேன். வேணும்னா என் கூடயே வா. நான் ஒனக்கு எங்க வீட்டக் காட்டுறேன்” என்றாள்.

“சரி சரி. நான் அந்த மரத்துலயே காத்திருப்பேன். சீக்கரம் வா. பசிக்குது” என்றது காக்கை.

குழலி கோழிக்குஞ்சை நோக்கிக் குனிந்தாள். “ஒங்க வீடு எங்க இருக்கு? நான் ஒன்ன பத்திரமா அங்கக் கொண்டுபோய் விடறேன்” என்றாள்.

“அடடே, எனக்கு எங்க வீட்டு முகவரி தெரியாதே” என்றது கோழிக்குஞ்சு.

“என்ன கொழந்த நீ, எப்பவுமே நம்ம வீட்டு அட்ரஸ தெரிஞ்சு வெச்சுக்கணும். அப்பதான் நாம தொலைஞ்சிபோயிட்டாலும் வீட்டு முகவரி சொல்லிப் பத்திரமா போயிடலாம். ஒங்க அம்மா இதச் சொல்லித் தரலையா?” என்றாள் குழலி.

“இல்லையே. நாங்க எப்பவும் நாவ மரத்தடிலதான் இருப்போம். பக்கத்துல ஒரு வைக்கப்போரு இருக்கும். அங்க ரெண்டு மாடு கட்டி இருக்கும்” என்று விவரித்தது கோழிக்குஞ்சு.

“சரிதான் போ. இந்த அடையாளம்லாம் வெச்சி ஒன் வீட்டக் கண்டுபிடிக்கவே முடியாது” என்றாள் குழலி.

உடனே அந்தக் குஞ்சு கேவிக்கேவி அழ ஆரம்பித்தது.

குழலிக்குப் பாவமாக இருந்தது. “சரி சரி அழாத. அந்தக் காக்காதான ஒன்னத் தூக்கிட்டு வந்தது. அதுக்கு நிச்சயமா ஒங்க வீடு தெரியும். அதுகிட்ட சொன்னா அது ஒன்னத் தூக்கிட்டுபோய் அங்க விட்டுடும்” என்றாள் குழலி.

“அய்யய்யோ, எனக்கு பயமா இருக்கு. அந்தக் காக்காவ நம்ப முடியாது. அது திரும்பவும் என்னத் தின்னாலும் தின்னுடும். அதோடு அது என்னக் கொத்தித் தூக்குனா திரும்பவும் என் ஒடம்புல காயந்தான் படும். நான் பயத்துல செத்தே போயிடுவேன்” என்று பதைத்தது.

“சரி, சரி, நீ கவல படாத. நான் அதுகிட்ட முகவரிய மட்டும் விசாரிச்சுக்கறேன்” என்றாள்.

கையில் பத்திரமாகக் கோழிக்குஞ்சைத் தூக்கிக்கொண்டு மரத்தின் அருகில் சென்றாள்.

அதற்குள் அந்தக் காக்கை சிறு தூக்கம் போட்டுக்கொண்டிருந்தது.

“அண்ணா, அண்ணா, இந்தக் குஞ்சோட வீட்டக் காட்டுங்கண்ணா” என்ற சத்தமாகக் கேட்டாள் குழலி.

“இது வேறயா, இப்பத்தான் பசியில அசந்து தூங்கப்போனேன். நல்ல தூக்கத்தக் கெடுத்துட்டியே, சரி சரி. அதோ அந்தக் குடிச வீடு தெரியுதா?” என்று கேட்டது காக்கை.

“அங்க நெறைய வீடு இருக்கேண்ணா, எது இவங்க வீடு?”

“நீங்க அந்தக் குடிசை வீட்டப்பாத்துப் போயிட்டே இருங்க. நீங்க கிட்ட போம்போது நான் பறந்துவந்து வழிகாட்டறேன்” என்றது.

குழலியும் கோழிக்குஞ்சைப் பத்திரமாகத் தூக்கிக்கொண்டு குடிசைவீடுகளை நோக்கி நடந்தாள். கிட்டேபோனதும் காக்கை பறந்துவந்து ஒரு வைக்கோற்போரில் அமர்ந்தது.

அங்கே குழலி கண்ட காட்சி நெஞ்சை உருக்கியது. அம்மா கோழி தன் குஞ்சுகளை அணைத்துக்கொண்டு ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது.

“ஆச ஆசயா வளத்த என் அன்னத்தக் காணமே, ஐயோ நான் என்ன செய்வேன், சொல்பேச்சக் கேக்காத புள்ளையாப் போச்சே, நான் எங்கபோயி தேடுவேன்,” என்று அலறிக்கொண்டிருந்தது அம்மா கோழி.

கிட்டே போனதும், “கீக் கீக்” என்று கோழிக்குஞ்சு குரல்கொடுத்தது. “அம்மா, அம்மா, நான் வந்துட்டேன்” என்று கூவியது.

கோழி அன்னாந்து பார்த்து குழலியின் கையில் தன் குஞ்சைக் கண்டது. மகிழ்ச்சியால் இறக்கைகளைப் படபடவென்று அடித்துக்கொண்டது.

குழலி அந்தக் குஞ்சை இறக்கிவிட்டாள்.

“என் அன்னமே, வந்துட்டியா? எங்கடி போன? தனியாப் போகத போகதன்னு எத்தனவாட்டி சொன்னேன், கேட்டியா என் கண்ணே, வாடி என் தங்கமே” என்று ஓடி வந்து இறக்கைகளால் அணைத்துக்கொண்டது.

“அம்மா, இந்த அக்காதான் என்னக் காக்கா கிட்டயிருந்து காப்பாத்தினாங்க” என்று மகிழ்ச்சியோடு சொன்னது.

“ரொம்ப நன்றி கொழந்தே, நீ நல்லா இருப்பே” என்று சொல்லிவிட்டு தன் குஞ்சு நொண்டுவதைப் பார்த்துத் துடித்துப்போனது. உடனே கால்களை நீவி விட்டு, கழுத்தில் ஏற்பட்ட புண்ணை தன் எச்சிலால் ஆற்றியது.

மகிழ்ச்சியோடு அங்கிருந்து நகர்ந்தாள் குழலி. “இப்போது என்ன செய்வது?” என்று யோசித்தாள்.

காக்கை அருகேவந்து, “என்ன யோசன? வீட்டுக்குப் போகல, எனக்குச் சாப்பாடு?” என்றது.

“இல்லண்ணா, நான் கோவிச்சுக்கிட்டு வந்துட்டேன். அதான் யோசிக்கிறேன்.” என்றாள்.

“என்னது, கோவிச்சுட்டு வீட்டவிட்டு வந்துட்டியா? சரியாப்போச்சு போ, இந்த லட்சணத்துல இந்தக் கோழிக்குஞ்சக் காப்பாத்தினியாக்கும். தோ பாரு பொண்ணு. . .” 

“என் பேரு குழலி. . .”

“சரி கொழலி, சின்ன பசங்க அம்மா, அப்பாவோட இருந்தாத்தான் பாதுகாப்பு. அத வுட்டுட்டுக் கோச்சுக்கிட்டுத் தனியா வந்தா எவ்வளவு ஆபத்து இருக்கு பாத்த இல்ல?”

“கோழிக்குஞ்ச காக்காவும், கழுகும் பாம்பும் கொத்தும். அதுபோலத்தான் ஒங்களமாதிரி மனுஷக் கொழந்தங்கள கெட்டவங்க பாத்தா நகய திருடிக்கிட்டு கொன்னு போட்டுடுவாங்க. இல்லன்னா கைய கால ஒடச்சிப் பிச்ச எடுக்க வெச்சிடுவாங்க. தெரியுமா?” என்றது.

காக்கை சொன்னதைக் கேட்டதும் குழலிக்குப் பயம் அப்பிக்கொண்டது.

“ஆமாம், அம்மா சொல்லியிருக்காங்க. நான்தான் கோவத்துல யோசிக்காம வந்துட்டேன். ஒடனே நான் வீட்டுக்குப்போவணும்” என்றாள் குழலி.

“சரி பயப்படாத, நான் ஒனக்குத் துணையா வறேன்” என்று குழலியின் தலைக்குமேல் வட்டமடித்துக்கொண்டே வந்தது காக்கை.

“அண்ணா நான் ஒனக்கு நம்பின்னு பேரு வெக்கறேன்” என்றாள் குழலி.

“எனக்கு இந்தப் பேரு ரொம்ப புடிச்சிருக்கு” என்று மகிழ்ந்தது காக்கை.

“நம்பி அண்ணா, எனக்குத் தாகமா இருக்கு, பசிவேற எடுக்குது, களைப்பா இருக்கு” என்றாள் குழலி.

“இதயெல்லாம் நீ வீட்டவிட்டு வரும்போதே யோசிச்சி இருக்கணும். தோ ஒங்க வீடு கிட்ட வந்துடிச்சி பாரு. மெதுவா நடந்துவா, நான் பாட்டு பாடிட்டே வரேன், ஒனக்கு களைப்பு தெரியாது” என்று சொல்லிப் பாட ஆரம்பித்தது,

கா கா கா

காட்டுல ஒரு பாப்பா

கா கா கா

ரோட்டுல நடந்து போச்சு

கா கா கா

வூட்டுல அடஞ்சிருந்தா

கா கா கா

பத்திரம்னு தெரிஞ்சிகிச்சாம்

கா கா கா, கா கா கா!

 

“நம்பி அண்ணா, வீடு வந்துடிச்சி. இனிமே கத்தாத, அப்பறம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும். உஸ். . .” என்றாள் குழலி.

மெதுமெதுவாய் மாடிப்படியேறி வீட்டைத் திறந்து உள்ளே சென்றாள். அம்மா வைத்திருந்த தின்பண்டங்கள் எடுத்து காக்கையண்ணாவிற்குக் கொடுத்தாள்.

அது வயிறார சாப்பிட்டது.

“நம்பி அண்ணா, நம்பி அண்ணா, ஒனக்கு எப்பல்லாம் பசிக்குதோ, வந்து ஒரு குரல் குடு, இனிமே எந்தக் கோழிக்குஞ்சையும் கொத்தாத” என்றாள்.

“சரி தங்கச்சி”யென்று தலையாட்டிவிட்டுப் பறந்தது நம்பி.

மாலையில் வீட்டிற்கு வந்த அம்மா, குழலி சமர்த்தாக அமர்ந்து படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கட்டியணைத்து முத்தம் தந்தார். அம்மாவின் அணைப்பில் என்றுமில்லாத பாதுகாப்பை உணர்ந்தாள் குழலி.

***

Kavitai பாவை அல்ல பாவை

 

பாவை அல்ல பாவை

 

நடிப்பதுவும் தொழிலென்று நானிலத்தார் சொன்னாலும்

நங்கைக்கு எப்போதும் ஆடைமீறும் நிர்வாணம்!

துடிப்புடைய தொகுப்பாளர் தொலைக்காட்சித் திரையினிலும்

தொடைதெரிய கொங்கைகளை இறுக்குகின்ற உடைக்கோலம்!

வடித்திடுவார் எழுத்தாளர் நெடுங்தொடராம் பண்ணைகளில்

வாழ்வினையே நொறுக்குகின்ற வனிதையரின் தசைப்பிண்டம்!

அடிக்கின்ற விளம்பரங்கள் பதாகைகள் அனைத்திலுமே

ஆவாளே ஆடவரின் கண்களுக்கோர் திண்பண்டம்!

 

கடிமணமும் புரிவதற்குக் கேட்கின்ற மணக்கொடையில்

கனவுகளைக் கரைத்திடுவாள் கண்ணீரின் ஆற்றினிலே!

வடிக்கின்ற கஞ்சியுமே பலநேரம் இல்லாமல்

வாடுகிறாள் குடிகாரக் கணவனது ஏச்சினிலே!

பொடிப்பொடியாய் எத்தனையோ வேலைகளைத் தான்செய்யும்

போக்கற்ற முழுநேரப் பணிப்பெண்ணாம் வீட்டினிலே!

இடிபோன்று கணவனுந்தான் இன்னொருபெண் புணருங்கால்

இயலாத தவிப்பினிலே இடர்ப்படுவாள் கூட்டினிலே!

 

நொடியொன்றில் ஏதோவோர் மூலையிலே பெண்பித்தர்

துடித்திடவே பெண்மகவை வன்புணர்வு மேற்கொள்வார்!

படிக்கின்ற பள்ளியிலும் பாபாக்கள் எங்கெங்கும்

பாலுணர்வு தலைக்கேறப் பாவையரைச் சுகிக்கின்றார்!

முடியாதோ மகளிரின்மேல் கட்டவிழ்க்கும் வன்கொடுமை

முந்துகிறார் மேடையிலே பெண்புகழைப் போற்றிடவே!

விடிவுக்கு அவள்தலையில் முள்முடியைச் சூட்டாதீர்

விந்தையன்றோ! பாவையரைப் பாவையென ஆட்டாதீர்!