ஓடி விளையாடு
முனைவர் அவ்வை நிர்மலா
புதுச்சேரி
இளவேனில் படுசுட்டி. ஆனால் இன்று வழக்கத்துக்கு மாறாக சோஃபாவில் கவிழ்ந்து படுத்துக்கொண்டிருந்தான். தாத்தாவின் மீது எரிச்சல் எரிச்சலாக வந்தது.
“நான் அப்படி என்ன பண்ணிட்டேன். இந்த தாத்தா ரொம்ப மோசம். அப்பாவும் மோசம். அம்மாவும் மோசம். என்னைக்கும் இல்லாம இன்னைக்கு எல்லாரும் என்னையே திட்டி தீத்துட்டாங்க. சே. . .”
இப்படியே அவன் நினைத்துக்கொண்டிருந்தான். முகம் சுருங்கிவிட்டது.
அப்படி என்னதான் நடந்தது? ராத்திரி எப்போதும்போல் தாத்தாவின் அலைபேசியை எடுத்து விளையாடிக்கொண்டிருந்தான்.
அவன் வீட்டில் இளவேனில் வைத்ததுதான் சட்டம். ஆனாலும் அப்பாவிடம் அவன் அடம் பலிக்காது. அப்பா தன் அலைபேசியை அவனிடத்தில் தரவே மாட்டார். ஒருமுறை அப்பாவுக்குத் தெரியாமல் மெதுவாக அவர் மேசையிலிருந்து அலைபேசியை எடுத்துவிட்டான். அவன் அப்பாவிற்கு வந்த போன்கால்கள் தொந்தரவு செய்யாதவாறு ஒலியை அமிழ்த்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்தான். முக்கியமான எத்தனையோ பேர் அப்பாவை அழைத்திருக்கிறார்கள். அப்பாவிற்குத் தெரிந்ததும், “வேனிலு. . . இப்டி செய்வியா? செய்வியா? ஒனக்கு அறிவிருக்கா?” என்று நாலு சாத்து சாத்தினார்.
அதிலிருந்து இளவேனில் அப்பாவின் அலைபேசியைத் தொடுவதில்லை. ஆனால் தாத்தாவிடம் கொஞ்சம் செல்லம் அதிகம். அதனால் தாத்தா அலுவலகம் விட்டு வந்ததும் அலைபேசி அவன் கைகளுக்குத் தாவிவிடும்.
இப்போதெல்லாம் அவன் வால்தனமும் அதிகமாகிவிட்டது. நாலு வயது முடியப்போகிறது. ஊரடங்கால் பள்ளியில் அவனை இன்னும் சேர்க்க முடியவில்லை. அதனால் கண்டிப்பும் குறைந்துவிட்டது. அவன் ஏதாவது தப்பு செய்தால் பாட்டியும் சேர்ந்து கொஞ்ச ஆரம்பித்துவிடுகிறார்கள்.
ஆனால் அன்றைக்கு ஏன் அப்படி அனைவரும் கோபித்துக் கொண்டார்கள். நடந்தது இதுதான். அவன் விளையாடிக்கொண்டே இருந்தான். எல்லோரும் தூங்கிவிட்டார்கள். பகலெல்லாம் தூங்குவதால் இரவில் இளவேனிலுக்குத் தூக்கம் வரவில்லை. அம்மா நல்ல தூக்கத்தில் இருந்தார்.
அவன் மட்டும் அலைபேசியை அமுக்கிக்கொண்டிருந்தான். கார்ட்டூன் படங்கள் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனது. செல்பேசியில் விளையாட்டுகளும் விளையாடி விளையாடி அலுத்துவிட்டன.
ஒரு புது விளையாட்டு அவனாகவே கண்டுபிடித்தான். தொடர்பு எண்களுக்குச் சென்று அமுக்கி அமுக்கிப் பார்த்தான். மாற்றி மாற்றி நிறைய பேருக்கு மிஸ்டு கால் கொடுத்துக்கொண்டே இருந்தான். சிறிது நேரத்தில் எதிர்முனையிலிருந்து கால் வர ஆரம்பித்தது. வேனிலுக்கு பயமாகிப் போனது. என்ன செய்வதென்று யோசித்தான். பேசாமல் செல்பேசியைச் “சுவிட்ச் ஆஃப்” செய்தான். போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டான்.
காலையில், “ஏய் எந்திரி, வேனிலு எந்திரிக்கிறியா? ஒத வாங்கறியா?” என்று அப்பாவின் குரல் ஓங்கி ஒலித்தது. பட்பட்டென்று இரண்டு அடிகளும் கிடைத்தன. வாரிச்சுருட்டி எழுந்தான் வேனில்.
தூக்கக் கலக்கத்தில் வரவேற்பரையில் நிறைய குரல்கள் கேட்டன. அப்பா தரதரவென்று அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு முன்அறைக்குச் சென்றார்.
வெளியே வாசலில் ஐந்தாறு வண்டிகள் நின்றிருந்தன. அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எல்லோர் கண்களும் அவனையே பார்ப்பதுபோல் தோன்றியது.
“இதோ பாருங்கப்பா, எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம்தான். இப்போ இந்த அளவுக்கு வந்திருக்கு. எத்தனவாட்டி நான் அவனுக்கு செல்பேசி கொடுக்காதிங்கன்னு சொல்றேன் கேட்டிங்களா?” என்று அப்பா கத்தினார்.
வேனில் பேந்தப் பேந்த விழித்தான். “ஏன் எல்லோரும் என்னத் திட்டறாங்க?”
“ஏண்டா எரும, எதுக்குடா எல்லோருக்கும் அந்த நடுநிசில போன் பண்ணின. எல்லோரும் பாரு, பயந்துபோயி தாத்தாவுக்கு என்னாச்சோன்னு காலையிலேயே ஓடி வந்திருக்காங்க. இப்படித்தான் பண்ணுவியா?” என்று சொல்லிக்கொண்டே சுரீர் சுரீர் என்று பின்பக்கம் நாலு வைத்தார் அப்பா.
“அப்பா, இல்லப்பா, அது வந்துப்பா...” என்று கண்களில் நீர் விட்டான் வேனில்.
“வந்தவர்கள் சரி சரி விடுங்க. புள்ள பயந்துடப்போவுது. அதுக்கு என்ன தெரியும்? நாமதான் இனிமே சொல்லி வளக்கணும்” என்று ஒவ்வொருவராகப் பரிந்துபேசிவிட்டுப் போனார்கள்.
இருந்தாலும் அவர்களுக்கு அந்தக் குழந்தையின் செயலில் சிறு வெறுப்பும் இருக்கத்தான் செய்தது.
“வேனிலு. . . இதோ பாரு. ஒன் விளையாட்டால என்ன நடந்ததுன்னு. நான் எத்தன வாட்டி சொல்லியிருக்கேன். நீ விளையாட எவ்வள பொம்ம வாங்கிக்கொடுத்திருக்கேன். ஆனா அதயெல்லாம் விட்டுட்டு எப்பப் பாத்தாலும் செல்போன வெச்சிக்கிட்டிருக்க. கண்ணையும் கெடுத்துக்கற.” என்று அவனை இழுத்துப்பிடித்து நிற்கவைத்து மிரட்டினார்.
“இனி இந்த வீட்ல யாராச்சும் வேனில் கிட்ட செல்போன கொடுத்திங்கன்னா அப்பறம் நடக்கறதே வேற” என்று பொதுவாகக் கத்திவிட்டு அப்பா வேலைக்குப் போய்விட்டார்.
எப்போதும் பரிந்துவரும் பாட்டியும் இன்றைக்குப் பேசாமல் விட்டுவிட்டார். அம்மாவும் தாத்தாவும் கூட அவனைச் செல்லம் கொஞ்சவில்லை. யோசித்துப் பார்த்தான் வேனில். ஆமாம் விளையாட்டு வினையாகிவிட்டது. தன் மீதே வருத்தம் வருத்தமாக வந்தது. பக்கத்து காலிமனையைப் பார்ப்பதுபோல் இருந்த சன்னலின் அருகேயிருந்த நாற்காலியில் போய் அமர்ந்தான்.
அந்தக் காலிமனையில் அவன் தெருப் பிள்ளைகள் ஏழைச்சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. இதற்கு முன்னாலும் அவர்கள் அங்குதான் விளையாடுவார்கள். ஆனால் வேனில் அவர்கள் போடும் சத்தம் கேட்கிறது என்று சன்னலை முடிவைத்துவிடுவான்.
இன்று தன்னையொத்த நண்பர்களின் தோழமை வேண்டும்போல மனத்திற்குப் பட்டது. இதுநாள்வரை அவர்களுடைய பெயர்கூட அவன் தெரிந்து வைத்திருக்கவில்லை. மெதுவாகத் தாத்தாவின் பக்கத்தில்போய் நின்றான்.
தாத்தா தலையைத் தூக்கிப் பார்த்து, “இனிமே எதுவும் பேராது. என் கிட்ட வராத. ஒனக்கு செல்போன் கொடுத்துட்டு அப்பறம் ஒங்க அப்பன் கிட்ட பேச்சு வாங்க முடியாது” என்று சொல்லிவிட்டார்.
“இல்ல தாத்தா, நான் வெளிய போயி விளயாடட்டுமா?” என்று கேட்டான் வேனில்.
தாத்தாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனையோ முறை வெளியில் பிள்ளைகளோடு போய் விளையாடுமாறு கூறினாலும் போகாதவன் இன்று கேட்கிறான். நல்லதுதான்.
“போடா, போ. போய் விளையாடு. தெருவ விட்டு வெளிய போகக்கூடாது. கிரவுண்டுகுள்ளயே விளையாடு” என்று கூறிவிட்டு அவரும் அலுவலகம் கிளம்பினார்.
“டேய், வேனிலு, போவும்போது அந்த பந்தையும் எடுத்துட்டுப்போ. அப்பதான் ஒன்ன அவங்க விளையாட்டுல சேத்துப்பாங்க.” என்று பாட்டி அறிவுரை கூறினார்.
மாமா வாங்கித்தந்த பந்து வெகு மாதங்களாக தொடப்படாமலேயே மூலையில் கிடந்தது. அதனை எடுத்துக்கொண்டான் வேனில்.
பாட்டி சன்னல் ஓரம் போய் உட்கார்ந்துகொண்டு, பேரன்மேல் ஒரு கண்வைத்தார்.
மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் வேனிலைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தனர். ஆனால் அவன் கையிலிருந்த பந்து மட்டும் அவர்களை ஈர்த்துக்கொண்டிருந்தது.
வேனில் மெதுவாக, “டேய் நானும் விளையாட வரண்டா” என்று கெஞ்சினான்.
குழந்தைகள் மனம் இரங்கினர். “சரி வாடா. ஆனா அந்தப் பந்த எங்ககிட்ட கொடுக்கணும்” என்றனர்.
“சரிடா, இந்தாங்க.” என்று நீட்டினான். பிள்ளைகளுக்குள் மகிழ்ச்சி. அவர்கள் இரு அணிகளாகப் பிரிந்தனர். கால்பந்து விளையாட்டு தொடங்கிவிட்டது.
இத்தனைநாள் கேட்கும் சத்தத்தைவிட இன்று அவர்கள் விளையாட்டில் அதிக சத்தம் கேட்டது. அதில் அதிக சத்தம் போட்டவனே இளவேனில்தான்.
ஓடிஓடி விளையாடினான் வேனில். விழுந்து விழுந்து காரணமில்லாமல் குழந்தைகள் சிரித்தனர். ஒருவர்மேல் ஒருவர் விழுந்து ஒரே ரகளையாக இருந்தது.
“டேய் சாப்புட வாடா. பாரு, ஒரு மணி யாவுது. இன்னுமா ஒங்களுக்கு பசிக்கல?” என்று சத்தம் போட்டார் இளவேனிலின் பாட்டி.
யாரும் நகர்வதாகக் காணோம். “எல்லாரும் போய் சாப்டு ரெஸ்ட் எடுத்திட்டு மறுபடியும் மூனு மணிக்கு வந்து விளையாடுங்க”, என்றவாறு வெளியே போய் அனைவரையும் விரட்டினார் இளவேனிலின் அம்மா பொன்னி.
பாட்டியிடம் ஓடிவந்தான் இளவேனில். அவன் உடல்முழுக்க நன்றாக வியர்த்திருந்தது. எப்போதும் குளிரூட்டிய அறையில் படுத்தவாக்கில் கிடக்கும் இளவேனில் உடல் முழுக்க புழுதிபடிந்து வந்ததுகூட அழகாக இருந்தது.
“பாட்டி, பாட்டி, நான் சாயங்காலமும் விளையாடப் போகட்டுமா?” அனுமதி கேட்டு நின்றான் இளவேனில்.
“சரிடா. போய்வா. சாயந்திரம் போகும்போது பொம்மையெல்லாம்கூட எடுத்துட்டுப்போ. எல்லாரும் அடிச்சிக்காம ஒத்துமையா விளையாடணும். சரியா?” என்றார் பாட்டி.
“சரி பாட்டி” என்று உள்ளே போய் முகம், கை கால் கழுவினான் இளவேனில்.
மூன்று மணிக்கெல்லாம் குழந்தைகள் பட்டாளம் மரத்தடியில் குழுமியது. வேப்பமரம் குழந்தைகளின் குதுகலத்தைப் பார்த்துத் தலையசைத்து அவர்களுக்கு விசிறிவிட்டது. இளவேனில் தன்னிடமிருந்த பொம்மைகள் சிலவற்றை ஒரு பையில் போட்டு எடுத்துப்போனான். குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது. முத்து, ராதா, வனிதா, ரவி, ஜபார், லைலா, ஜோசப் என்று பெயர்களைக் கூவிக்கொண்டு விளையாடினார்கள்.
இருட்டத் தொடங்கியது.
“போதும் போதும். விளையாடினது. வீட்டுக்குக் கௌம்புங்க. நாளைக்கு வௌயாடலாம்”. பாட்டியின் அதட்டலான குரல்கேட்டு மெதுமெதுவாய்க் குழந்தைகள் கலைந்து போயினர்.
இளவேனில் வீட்டிற்குள் வந்ததும் தானாகவே மாச்சில்லைச் சாப்பிட்டுவிட்டு பாலை முழுதாகக் குடித்தான்.
மேசை மீது தாத்தாவின் அலைபேசி கேட்பாரற்றுக் கிடந்தது.
இளவேனிலுக்கு ஓடிஆடி விளையாடுவதன் சுவை
தெரிந்துபோனது!
***
No comments:
Post a Comment