கேரளா, கொழிஞ்சாம் பாறை,
கேரளீய தமிழ்மொழி சிறுபான்மை மக்கள் இயக்கம்
உலகளாவிய நிலையில் நடத்திய
ஒற்றை வர்ணப் பார்வை
என்னும் தலைப்பிலான கவிதைப் போட்டியில் ஒற்றைப் பரிசாகிய முதலிடத்தைப் பெற்ற கவிதை
பொற்கிழிப் பரிசு (18.01.2026)
(பொற்கிழி பரிசளிப்பவர் பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு பாலச்சந்திரன்)
வண்ணங்கள் இவ்வுலகில் வகைபிரித்தால்
கோடி
வந்துதிக்கும் பரிதிவெண்மை வழங்கிடுமே
ஓடி
எண்ணங்கள் தலைமுறைகள் எடுத்துவரும்
நாடி
எவரிங்கே பேதங்கள் எடுத்துரைத்தார்
தேடி
புண்படுத்தும் புரட்டுகளைப்
புனைந்ததுமேன் சூடி
புவியினிலிப் பொல்லாங்கின்
பூண்டழிப்போம் சாடி
கண்ணோட்டம் இல்லாதார் கதையளந்தார் கூடி
கனலிலிட்டுப் பொசுக்கிடுவோம் கற்பனைகள் மூடி! (1)
தொட்டாலே தீட்டென்று தொன்றுரைத்தார்
யாரோ?
தொல்லையற வசதிதந்தார் தொண்டுமறந் தாரோ
அட்டிலுக்கு வேளாண்மை அவரோட்டிய ஏரோ
அட!அனைத்தும் வேண்டுமிங்கு ஆகாது ஊரோ?
மட்டில்லா மகிழ்வுடனே மாண்புகொளத் தேரோ
மந்தையெனப் பாட்டாளி மடிந்தழுகும் நாரோ?
குட்டியதால் சாதிகளைக் கூட்டிவரும்
பேரோ
குமைகிறதே இவ்வழக்கம் குறைசொல்லும் பாரோ! (2)
நின்றஇடம் கழுவிவிட்டால் நீங்கிடுமாம் தீட்டு
நீசர்களின் மனங்கழுவ நீருண்டா? நீட்டு!
என்றைக்கும் சாதிகண்டு ஈகின்ற ஓட்டு
எழில்நாட்டின் ஏற்றத்தில் இடுகின்ற
வேட்டு!
மன்றலுக்குச் சாதிகாட்டி மாட்டுகிறார்
பூட்டு
மறுப்பவர்க்குக் கொடுத்திடுவார்
மரணத்தின் சீட்டு!
குன்றுகளில் எதிரொலிக்கும் குமரவேலன்
பாட்டு
குறவள்ளி மணம்முடித்த கோட்பாட்டின் காட்டு! (3)
பிறப்பொக்கும் எனச்சொன்ன வள்ளுவரின்
வாக்கு
பிழையென்பார் சிந்தையிலே பின்னலிட்ட
சீக்கு!
உறவுகளில் கலப்புமணம் ஒப்புதலாய் ஊக்கு
ஊருக்குள் சாதிகளை ஒழிக்கத்தோள்
தூக்கு!
இறப்புக்கு முன்னாலே இருள்நெஞ்சம்
நீக்கு
இனபேதம் காண்போரே! ஏனிந்த போக்கு?
அறத்திற்குச் சாதியில்லை; அன்பிற்கும் ஆக்கு
அன்னையான தெரசாவின் அருந்தொண்டு நோக்கு! (4)
எல்லோரின் உடலோடும் இரத்தமது சிவப்பு
இயற்கைதரும் மகிழ்வெல்லாம் ஏற்றாதோ
உவப்பு!
பொல்லாத வன்கண்ணர் புகுத்திவிட்ட
திணிப்பு
பொருளற்ற சாதிவெறி புற்றுநோயின்
பிணிப்பு!
கல்லாமைச் சூழலிலே கட்டியகை குவிப்பு
கடந்துவிட மனமிருந்தும் கட்டுகளால்
தவிப்பு!
அல்லலொடு ஆண்டையிடம் அடிமையான பிறப்பு
அம்பேத்கர் அறிவுரையால் அறிந்துணர்ந்தோம் சிறப்பு! (5)
புள்ளினங்கள் தமக்குள்ளே பூணவில்லை
சாதி
புலிகரடி யானைகளும் போற்றுமோஇச் சேதி!
கள்ளிருக்கும் மலர்களிலே கவின்வண்ண
சோதி
கடைவாயில் தேன்கொள்ள கருவண்டு ஊதி!
உள்ளமிலார் கவடுகொண்டு உருட்டிவிட்ட
பீதி
ஒற்றுமையாய்த் தகர்த்தெறிவோம் உரமோடு
மோதி!
கொள்வோமே பொதுவென்று ஊர்தோறும் வீதி
கோயில்களில் தடுப்பதுமேன்? கூடிவந்து வாதி! (6)
குடிப்பதற்கு இருகுவளைக் கோட்பாடு ஏனோ
கொண்டாடும் மேல்சாதி எச்சிலென்றால்
தேனோ?
படித்திருந்தும் எண்ணத்தில்
படிந்திருக்கும் கூனோ
பார்நிமிர்ந்து! கண்களிலே படவில்லை
வானோ?
துடிதுடித்துச் செத்துவிட தூண்டிலிட்ட
மீனோ
துரத்திகொன்று போடுதற்குத்
துள்ளிவிழும் மானோ?
கொடிதென்று நசுக்கிவிடக் கொண்டையிடைப்
பேனோ
கோட்டைதனைப் பிடித்துவிடில் கும்பிடுவார் தானோ! (7)
வெட்டிப்பார்; புழுநெளிந்து வெறுப்புதரும் அத்தி
வெறும்வாயர் சாதிகளால் விதம்பிரித்த
உத்தி!
கட்டுகின்ற உடைதனிலும் கட்டவிழும்
புத்தி
கனிவின்றி உழைப்புதனைக்
கடைந்தெடுப்பார் எத்தி!
அட்டிலுக்கும் வேற்றுமைகள்
அளந்துவைத்தார் ஒத்தி
அவர்க்குமட்டும் எளிதென்றார் ஆண்டவனால்
முத்தி!
எட்டநின்று தரிசிக்க ஏணிவைத்த பத்தி
இனங்காட்டி நந்தனையும் எரித்துவிட்ட சத்தி! (8)
தண்ணீரில் தீட்டென்று தடுத்துவைத்தார்
ஆறு
தனித்தொட்டி மலங்கரைத்துத் தடம்பதித்தார்
ஊறு!
வெண்மணியூர் படுகொலையின் வேதனைகள் கூறு
வெந்தபின்னே அனைவருக்கும் விஞ்சுவதோ
நீறு!
உண்கலங்கள் குவளைகளும் உணவகத்தில் வேறு
ஊருணியின் வழிதடுத்தால் உரங்கொண்டு
சீறு!
எண்ணெழுத்து படித்ததனால் எட்டியதே பேறு
இழிவெதுவும் இனிதொடர்ந்தால் இறுதிவரை மீறு! (9)
தெய்வவழி பாட்டிலுமே தேடிவைத்தார்
பேதம்
தேசமெங்கும் அரசியலார்
தீர்ப்புரைக்கும் சூதம்!
உய்வதற்கு இடந்தருமா ஒதுக்கீட்டு வீதம்?
ஊருக்கும் சேரிக்கும் உயர்திட்டம்
சேதம்!
பொய்யாக வழக்கிட்டுப் போக்குகின்ற
நீதம்
போராடும் வாழ்வினிலே காணவில்லை மீதம்!
மேம்படற்கு வழியடைக்கும் மேட்டிமையார் வாதம்! (10)
தீண்டாமை என்கின்ற திமிர்பிடித்தார்
வட்டம்
திசையெங்கும் ஒழித்துவிடத்
தீட்டவேண்டும் திட்டம்!
வேண்டாதார் என்றேதான் வெறுத்தொதுக்கும்
துட்டம்
வேற்றுமையை நிறைத்திடுவோர் விரியுலகின்
குட்டம்!
மாண்டபின்பு சுடுகாட்டு மத்தியிலும்
மட்டம்
மண்ணுலகம் பொதுவென்று மாற்றவேண்டும்
சட்டம்!
ஆண்டானும் அடிமைகளும் அற்றுவிடும்
கட்டம்
அத்வைதம் நிலைகொள்ளும்; அணுகாது
நட்டம்! (11)
தொழில்வழியில் சாதிகளைத் தோற்றுவித்தல்
முறையா
தொல்லைமனு சாத்திரங்கள் நால்வேதம்
மறையா?
அழியாத வன்முறைகள் ஆக்குவிக்கும்
துறையா
அறிவார்ந்த மானுடத்தில் அழியாத கறையா?
விழிப்பற்று அடிமையென வீழ்ந்திருக்கும்
குறையா
வீறுகொள அஞ்சுதற்கு வீரியமில் பிறையா?
வழிவழியாய் அச்சத்தால் வழங்கியது
திறையா
வாதோழா! புறப்படுவாய்! வாசலென்ன சிறையா? (12)
No comments:
Post a Comment