Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, 22 January 2026

ஒற்றை வர்ணப் பார்வை

 கேரளா, கொழிஞ்சாம் பாறை, 

கேரளீய தமிழ்மொழி சிறுபான்மை மக்கள் இயக்கம் 

உலகளாவிய நிலையில் நடத்திய 

ஒற்றை வர்ணப் பார்வை

என்னும் தலைப்பிலான கவிதைப் போட்டியில் ஒற்றைப் பரிசாகிய முதலிடத்தைப் பெற்ற கவிதை 

பொற்கிழிப் பரிசு (18.01.2026)

(பொற்கிழி பரிசளிப்பவர்  பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு பாலச்சந்திரன்) 



வண்ணங்கள் இவ்வுலகில் வகைபிரித்தால் கோடி

               வந்துதிக்கும் பரிதிவெண்மை வழங்கிடுமே ஓடி

எண்ணங்கள் தலைமுறைகள் எடுத்துவரும் நாடி

               எவரிங்கே பேதங்கள் எடுத்துரைத்தார் தேடி

புண்படுத்தும் புரட்டுகளைப் புனைந்ததுமேன் சூடி

               புவியினிலிப் பொல்லாங்கின் பூண்டழிப்போம் சாடி

கண்ணோட்டம் இல்லாதார் கதையளந்தார் கூடி

               கனலிலிட்டுப் பொசுக்கிடுவோம் கற்பனைகள் மூடி! (1)

 

தொட்டாலே தீட்டென்று தொன்றுரைத்தார் யாரோ?

               தொல்லையற வசதிதந்தார் தொண்டுமறந் தாரோ

அட்டிலுக்கு வேளாண்மை அவரோட்டிய ஏரோ

               அட!அனைத்தும் வேண்டுமிங்கு ஆகாது ஊரோ?

மட்டில்லா மகிழ்வுடனே மாண்புகொளத் தேரோ

               மந்தையெனப் பாட்டாளி மடிந்தழுகும் நாரோ?

குட்டியதால் சாதிகளைக் கூட்டிவரும் பேரோ

               குமைகிறதே இவ்வழக்கம் குறைசொல்லும் பாரோ! (2)

 

நின்றஇடம் கழுவிவிட்டால் நீங்கிடுமாம் தீட்டு

               நீசர்களின் மனங்கழுவ நீருண்டா? நீட்டு!

என்றைக்கும் சாதிகண்டு ஈகின்ற ஓட்டு

               எழில்நாட்டின் ஏற்றத்தில் இடுகின்ற வேட்டு!

மன்றலுக்குச் சாதிகாட்டி மாட்டுகிறார் பூட்டு

               மறுப்பவர்க்குக் கொடுத்திடுவார் மரணத்தின் சீட்டு!

குன்றுகளில் எதிரொலிக்கும் குமரவேலன் பாட்டு

               குறவள்ளி மணம்முடித்த கோட்பாட்டின் காட்டு!          (3)

 

பிறப்பொக்கும் எனச்சொன்ன வள்ளுவரின் வாக்கு

               பிழையென்பார் சிந்தையிலே பின்னலிட்ட சீக்கு!

உறவுகளில் கலப்புமணம் ஒப்புதலாய் ஊக்கு

               ஊருக்குள் சாதிகளை ஒழிக்கத்தோள் தூக்கு!

இறப்புக்கு முன்னாலே இருள்நெஞ்சம் நீக்கு

               இனபேதம் காண்போரே! ஏனிந்த போக்கு?

அறத்திற்குச் சாதியில்லை; அன்பிற்கும் ஆக்கு

               அன்னையான தெரசாவின் அருந்தொண்டு நோக்கு! (4)

 

எல்லோரின் உடலோடும் இரத்தமது சிவப்பு

               இயற்கைதரும் மகிழ்வெல்லாம் ஏற்றாதோ உவப்பு!

பொல்லாத வன்கண்ணர் புகுத்திவிட்ட திணிப்பு

               பொருளற்ற சாதிவெறி புற்றுநோயின் பிணிப்பு!

கல்லாமைச் சூழலிலே கட்டியகை குவிப்பு

               கடந்துவிட மனமிருந்தும் கட்டுகளால் தவிப்பு!

அல்லலொடு ஆண்டையிடம் அடிமையான பிறப்பு

               அம்பேத்கர் அறிவுரையால் அறிந்துணர்ந்தோம் சிறப்பு!    (5)

 

புள்ளினங்கள் தமக்குள்ளே பூணவில்லை சாதி

               புலிகரடி யானைகளும் போற்றுமோஇச் சேதி!

கள்ளிருக்கும் மலர்களிலே கவின்வண்ண சோதி

               கடைவாயில் தேன்கொள்ள கருவண்டு ஊதி!

உள்ளமிலார் கவடுகொண்டு உருட்டிவிட்ட பீதி

               ஒற்றுமையாய்த் தகர்த்தெறிவோம் உரமோடு மோதி!

கொள்வோமே பொதுவென்று ஊர்தோறும் வீதி

               கோயில்களில் தடுப்பதுமேன்? கூடிவந்து வாதி!           (6)

 

குடிப்பதற்கு இருகுவளைக் கோட்பாடு ஏனோ

               கொண்டாடும் மேல்சாதி எச்சிலென்றால் தேனோ?

படித்திருந்தும் எண்ணத்தில் படிந்திருக்கும் கூனோ

               பார்நிமிர்ந்து! கண்களிலே படவில்லை வானோ?

துடிதுடித்துச் செத்துவிட தூண்டிலிட்ட மீனோ

               துரத்திகொன்று போடுதற்குத் துள்ளிவிழும் மானோ?

கொடிதென்று நசுக்கிவிடக் கொண்டையிடைப் பேனோ

               கோட்டைதனைப் பிடித்துவிடில் கும்பிடுவார் தானோ!    (7)

 

வெட்டிப்பார்; புழுநெளிந்து வெறுப்புதரும் அத்தி

               வெறும்வாயர் சாதிகளால் விதம்பிரித்த உத்தி!

கட்டுகின்ற உடைதனிலும் கட்டவிழும் புத்தி

               கனிவின்றி உழைப்புதனைக் கடைந்தெடுப்பார் எத்தி!

அட்டிலுக்கும் வேற்றுமைகள் அளந்துவைத்தார் ஒத்தி

               அவர்க்குமட்டும் எளிதென்றார் ஆண்டவனால் முத்தி!

எட்டநின்று தரிசிக்க ஏணிவைத்த பத்தி

               இனங்காட்டி நந்தனையும் எரித்துவிட்ட சத்தி!            (8)

 

தண்ணீரில் தீட்டென்று தடுத்துவைத்தார் ஆறு

               தனித்தொட்டி மலங்கரைத்துத் தடம்பதித்தார் ஊறு!

வெண்மணியூர் படுகொலையின் வேதனைகள் கூறு

               வெந்தபின்னே அனைவருக்கும் விஞ்சுவதோ நீறு!

உண்கலங்கள் குவளைகளும் உணவகத்தில் வேறு

               ஊருணியின் வழிதடுத்தால் உரங்கொண்டு சீறு!

எண்ணெழுத்து படித்ததனால் எட்டியதே பேறு

               இழிவெதுவும் இனிதொடர்ந்தால் இறுதிவரை மீறு! (9)

 

தெய்வவழி பாட்டிலுமே தேடிவைத்தார் பேதம்

               தேசமெங்கும் அரசியலார் தீர்ப்புரைக்கும் சூதம்!

உய்வதற்கு இடந்தருமா ஒதுக்கீட்டு வீதம்?

               ஊருக்கும் சேரிக்கும் உயர்திட்டம் சேதம்!

பொய்யாக வழக்கிட்டுப் போக்குகின்ற நீதம்

               போராடும் வாழ்வினிலே காணவில்லை மீதம்!

 மெய்ஞானி வகுத்துரைத்தார் மேன்மைமிகு போதம்

               மேம்படற்கு வழியடைக்கும் மேட்டிமையார் வாதம்! (10)

 

தீண்டாமை என்கின்ற திமிர்பிடித்தார் வட்டம்

               திசையெங்கும் ஒழித்துவிடத் தீட்டவேண்டும் திட்டம்!

வேண்டாதார் என்றேதான் வெறுத்தொதுக்கும் துட்டம்

               வேற்றுமையை நிறைத்திடுவோர் விரியுலகின் குட்டம்!

மாண்டபின்பு சுடுகாட்டு மத்தியிலும் மட்டம்

               மண்ணுலகம் பொதுவென்று மாற்றவேண்டும் சட்டம்!

ஆண்டானும் அடிமைகளும் அற்றுவிடும் கட்டம்

               அத்வைதம் நிலைகொள்ளும்; அணுகாது நட்டம்!          (11)

 

தொழில்வழியில் சாதிகளைத் தோற்றுவித்தல் முறையா

               தொல்லைமனு சாத்திரங்கள் நால்வேதம் மறையா?

அழியாத வன்முறைகள் ஆக்குவிக்கும் துறையா

               அறிவார்ந்த மானுடத்தில் அழியாத கறையா?

விழிப்பற்று அடிமையென வீழ்ந்திருக்கும் குறையா

               வீறுகொள அஞ்சுதற்கு வீரியமில் பிறையா?

வழிவழியாய் அச்சத்தால் வழங்கியது திறையா

               வாதோழா! புறப்படுவாய்! வாசலென்ன சிறையா?                     (12)





Friday, 2 February 2024

அன்பு கனிந்த கனிவே Anbu Kanintha Kanive - Poem

 

அன்பு கனிந்த கனிவே


படம் : இடம் - பூட்டான்


நுண்ணுயிரிப் பெருந்தொற்றுப் பரந்த போதும்

               நேர்நின்று பிணியாளர் தம்மைக் காக்கக்

கண்போன்ற தம்மகவைப் பிரிந்து வந்தார்

               கணவனினும் கடமைக்கே முதன்மை தந்தார்

மண்ணுலகில் செவிலியரை அன்பின் வார்ப்பாய்

               மதிக்கின்றோம் அதிலெதுவும் ஐயம் இல்லை

விண்சென்றார்; பிறருயிரைக் காத்துத் தந்தார்

               வீரரன்றோ; அன்பாலே கனிந்தார் அன்றோ!

 

ஊரடங்கால் ஆயிரத்தோர் பணிகள் இன்றி

               உளங்குன்றி உணவின்றி உழன்றார் அந்தோ!

பாரடங்கி நின்றிட்ட அந்த நாளில்

               பதைப்புற்று உதவிசெய வந்தார் பல்லோர்

ஈரத்தை இதயத்தில் குவித்தா ரெல்லாம்

               இன்பமுடன் சேமிப்பைச் செலவு செய்தார்

நேரத்தில் அவர்தந்த உணவை உண்டு

               நெஞ்சத்தால் வாழ்த்தினரே அன்பைக் கண்டு!

 

குழந்தைகளும் சில்லறைகள் குவித்துத் தந்தார்

               குறைவின்றி உண்டியலை உடைத்துத் தந்தார்

மழலையரின் அன்புளத்தைக் கண்டோ ரெல்லாம்

               மனமற்ற தன்னிலைக்கு வெட்கி நின்றார்

வழங்குகின்ற வதுவைக்காம் காசைக் கூட

               வனிதையர்கள் வழங்கினரே வறுமை தேய

இழப்பதற்கு எதுவுமிலா ஏழைக் கூட்டம்

               இவர்போன்றோர் அன்பாலே வாழ்கின் றாரே!

 

தெருவெல்லாம் திரிகின்ற நாய்கள் உண்ணத்

               தருகின்றார் ரொட்டிகளை வாங்கி வந்து

இருளுற்ற கண்களுக்கு வழியைக் காட்ட

               இருக்கின்றார் அன்புடையோர் கருணை சிந்தி

தருவாக நின்றிங்கே நிழலைச் செய்யும்

               தறுகண்மை மிக்கவர்கள் பல்லோர் உண்டு

உருள்கின்ற புவியினிலே எங்கும் எங்கும்

               உருவாகும் இடரிலெலாம் அன்பே வெல்லும்!

 

அன்பினையே அளக்கின்ற கோலும் உண்டோ

               ஆழத்தில் அகலத்தில் எல்லை உண்டோ?

என்பினையும் உருக்குகின்ற ஆற்றல் உண்டு

               எல்லையிலா அதைக்காணும் கண்கள் உண்டு

துன்பத்தில் கைகொடுக்கும் ஒருவர் வந்தால்

               துயரமிகு தற்கொலைகள் இனியும் உண்டோ?

மன்பதையில் அன்பின்றேல் வாழ்க்கை இல்லை

               மணவினையின் அடிப்படையும் அதுவே யன்றோ!

 

புலிப்பறளைப் பாலூட்டி நாயும் காக்கும்

               புல்வாயைச் சிங்கமது நக்கிப் போக்கும்

வலிகண்டு துடிக்கின்ற மந்தி தன்னை

               வனவிலங்கும் அன்பாலே காவல் காக்கும்

பலிவாங்க எண்ணாத விலங்கும் உண்டு

               பண்பாலே அவைகூட உதவும் நன்று

நலிகின்ற துன்பங்கள் விரட்டும் போதும்

               நானிலத்தில் அன்பொன்றே கனிவாய் ஆளும்!


படம் : இடம் - நேபாளம், காட்மண்டு - தர்பார் சதுக்கம்

Monday, 22 August 2022

மனைத்தக்க மாண்புடையாள்

 

மனைத்தக்க மாண்புடையாள்

நில்லென்றால் கோட்டினிலே நிற்றல் வேண்டும்

நிறுத்தென்றால் பேசுவதை நிறுத்தல் வேண்டும்!

மெல்லெனவே அழைத்தாலும் விரைந்து ஓடி

வேண்டுவதைக் குறிப்புணர்ந்து செய்தல் வேண்டும்!

முல்லைப்பூ வாங்கிவரின் தேவை தன்னை

முறையாகச் சேவகியாய் ஆற்றல் வேண்டும்!

மல்லுக்கு நிற்காமல் கணவன் வார்த்தை

மனமார ஏற்பவளே மனைவி என்பீர்!

 

வல்லவனோ? அல்லவனோ? எவ்வா றேனும்

வனிதையவள் இல்லறத்தை நடத்தல் வேண்டும்!

தொல்லைதரு மதுப்பழக்கம் உண்டென் றாலும்

தோகையவள் நாற்றத்தை மகிழ்தல் வேண்டும்!

துல்லியமாய்ச் சுவையுணவு ஆக்கல் வேண்டும்

தூக்கியவன் எறிந்தாலும் பொறுத்தல் வேண்டும்!

பல்லோர்முன் அடியுதையை ஏற்றல் வேண்டும்

பாங்கான மனைவியவள் பண்பென் பீரே!

 

செல்லாத காசைப்போல் மனையாள் தன்னை

எள்ளிடுவார் தம்சுற்றம் உற்றார் முன்னே!

புல்லுதற்குப் பலபெண்டிர் தேடிப் போவார்

புண்பட்ட தன்மனையாள் கண்ணீர் காவார்!

 பொல்லாத நோயுற்றுப் படுக்கை வீழ்ந்து

பொன்றுகின்ற காலத்தில் போற்றும் சொற்கள்

நல்லாளை மகிழ்வுறுத்த வல்ல தாமோ?

நாணிலையோ ஆடவரே! திருந்தப் பாரீர்!

யுத்தச் சாம்பல்

 

யுத்தச் சாம்பல்

- கவிஞர் அவ்வை நிர்மலா

நம்வீட்டுக் குப்பைதனைப் பெருக்கிக் கூட்டி

நகர்த்திடுவோம் அடுத்தவரின் வீட்டு வாசல்!

வம்புக்கே கோழிகளை விரட்டி விட்டு

வலிந்தேநாம் செய்கின்றோம் தெருவில் ஏசல்!

பம்புகின்ற அறியாமை தன்னால் வந்த

பக்குவமில் செயலென்போம் இந்தப் பூசல்!

அம்புவியில் நாடுகளும் அறிவே இன்றி

அடுகின்றார் இல்லையந்தோ சற்றும் கூசல்!!

 

கும்பிட்டுக் குழியினிலே பதுங்கித் தங்கிக்

குழந்தையுடன் பதைபதைப்பார் பசியால் நொந்து!

கொம்பில்லாக் கொடிபோலே அலைந்து எல்லைக்

கோட்டினிலே சுடப்பட்டு வீழ்வார் வெந்து!

செம்மையிலா உளத்தாலே அணுவின் குண்டு

சேர்ந்தெடுத்தால் அழியாதோ உலகப் பந்து!

தம்மினமும் தம்நாடும் அழிதல் கண்டு

தக்கதொரு பேச்செடுக்க ருசியா. . . முந்து!!

 

சும்மாவே பார்த்திருக்கும் நாட்டார் எல்லாம்

சுமப்பாரே மாபாவம் சுகமோ மௌனம்!

இம்மென்னும் முன்னாலே ஈசல் போன்று

இல்லாமல் செய்வதுவோ அறிவின் வண்ணம்?

வெம்புகின்ற அகதிகளின் அலறல் கேட்டும்

வெட்காரோ? வீடாரோ? அவரின் எண்ணம்

தெம்புளது எனவெண்ணி யுத்தம் செய்யின்

தேம்பிடுவார் சாம்பலிலே, அழிவும் திண்ணம்!!

பெண்மை வாழ்கென்று போற்றுவோமடா

 

பெண்மை வாழ்கென்று போற்றுவோமடா

- கவிஞர் அவ்வை நிர்மலா

தாயெனச் சொல்லித் தலையால் வணங்கித்

தயையுடன் பாடுகிறார் - அவர்

பேயெனச் சொல்லி மனைவியைத் தூற்றிப்

பிழைகளைத் தேடுகிறார்!

 

தேய்ந்திடும் சந்தனம் என்றே புகழ்ந்து

திசைதொறும் மீட்டுகிறார் - அவர்

வாய்க்க மணக்கொடை வேண்டும் எனவே

வம்புகள் பூட்டுகிறார்!

 

பாய்தனில் என்றும் மகிழ்வை யளித்திடும்

பாங்கைப் புகழுகிறார் - அவர்

வேய்மகள் தேடி விலையும் அளித்துமே

வெப்புநோய் வாங்குகிறார்!

 

தோய்வுடன் சேயை வளர்ப்பவள் என்றே

தோரணம் நாட்டுகிறார் - அவர்

வாய்தனை மூடா வனிதையர் என்றே

வசையொடு வாட்டுகிறார்!

 

நோய்தனில் வீழ்ந்தால் செவிலியாம் என்றே

நெகிழ்ந்து பரவுகிறார் - அவள்

மாய்ந்திடின் வேறொரு மங்கையை அன்றே

மணக்க விரையுகிறார்!

 

ஆய்ந்திடில் அன்பில் நிகரிலை என்றே

அரங்கினில் போற்றுகிறார் - அவர்

ஓய்வும் தராமல் பணிகள் சுமத்தியே

ஓய்வின்றித் தூற்றுகிறார்!!