Monday, 22 August 2022

கவி வேள்வி

 

கவி வேள்வி

- கவிஞர் அவ்வை நிர்மலா

அழகழகாய்க் கவிதைகளைச் சொல்லில் கூட்டி

ஆய்ந்தாய்ந்து களைகளையும் போக்கு கின்றார்!

பழகுதமிழ்ச் சொல்லெடுத்துப் பாக்கள் தந்து

பைந்தமிழாள் மயங்கிடவே தேக்கு கின்றார்!

விழப்போகும் சருகுக்கும் மகுடம் சூட்டி

விழுதாகத் துளிரெழவே நோக்கு கின்றார்!

இழப்பினிலே ஆறுதலை நெஞ்சில் ஈந்து

இருப்புக்கு இலக்களித்து ஊக்கு கின்றார்!!

 

அழுகின்ற குழந்தைக்கு மதியைக் காட்டல்

ஆராரோ தாலாட்டில் உறவைக் கூட்டல்!

பழுதான அரசியலைத் தூற்றும் பாட்டில்

பங்கெடுப்பார் அஞ்சாமல் சோகக் காட்டில்!

நழுவாராம் சிக்கல்கள் கண்டால் நாட்டில்

நலம்காணச் சொல்லெடுத்து வடிப்பார் ஏட்டில்!

முழுதாகப் படிக்கவைக்கும் கவிஞர் ஆற்றல்

முத்தமிழாள் சிலிர்ப்பதற்கே கவிதை வேட்டல்!!

 

மொழிப்பயிரும் காலங்கள் கடந்து வாழ

மொய்க்கின்ற கவிஞருந்தாம் உரமாய் ஆவார்!

கழிகின்ற இலக்கியத்தின் சொற்கள் எல்லாம்

கண்டெடுத்துக் கல்வெட்டாய்ப் பதித்து ஈவார்!

விழிவழியே காணுகின்ற உலக விந்தை

விரிக்கின்ற நுண்ணோக்கிக் கவிதை நாவார்!

அழியாது செந்தமிழும் உலகை ஆளும்

அற்புதநல் கவிஞருமே என்றும் மூவார்!!!

No comments:

Post a Comment