பாவை அல்ல பாவை
நடிப்பதுவும் தொழிலென்று நானிலத்தார்
சொன்னாலும்
நங்கைக்கு
எப்போதும் ஆடைமீறும் நிர்வாணம்!
துடிப்புடைய தொகுப்பாளர்
தொலைக்காட்சித் திரையினிலும்
தொடைதெரிய கொங்கைகளை
இறுக்குகின்ற உடைக்கோலம்!
வடித்திடுவார் எழுத்தாளர்
நெடுங்தொடராம் பண்ணைகளில்
வாழ்வினையே
நொறுக்குகின்ற வனிதையரின் தசைப்பிண்டம்!
அடிக்கின்ற விளம்பரங்கள் பதாகைகள்
அனைத்திலுமே
ஆவாளே ஆடவரின்
கண்களுக்கோர் திண்பண்டம்!
கடிமணமும் புரிவதற்குக் கேட்கின்ற மணக்கொடையில்
கனவுகளைக்
கரைத்திடுவாள் கண்ணீரின் ஆற்றினிலே!
வடிக்கின்ற கஞ்சியுமே பலநேரம் இல்லாமல்
வாடுகிறாள்
குடிகாரக் கணவனது ஏச்சினிலே!
பொடிப்பொடியாய் எத்தனையோ வேலைகளைத்
தான்செய்யும்
போக்கற்ற
முழுநேரப் பணிப்பெண்ணாம் வீட்டினிலே!
இடிபோன்று கணவனுந்தான் இன்னொருபெண்
புணருங்கால்
இயலாத
தவிப்பினிலே இடர்ப்படுவாள் கூட்டினிலே!
நொடியொன்றில் ஏதோவோர் மூலையிலே
பெண்பித்தர்
துடித்திடவே
பெண்மகவை வன்புணர்வு மேற்கொள்வார்!
படிக்கின்ற பள்ளியிலும் பாபாக்கள்
எங்கெங்கும்
பாலுணர்வு
தலைக்கேறப் பாவையரைச் சுகிக்கின்றார்!
முடியாதோ மகளிரின்மேல் கட்டவிழ்க்கும்
வன்கொடுமை
முந்துகிறார்
மேடையிலே பெண்புகழைப் போற்றிடவே!
விடிவுக்கு அவள்தலையில் முள்முடியைச்
சூட்டாதீர்
விந்தையன்றோ!
பாவையரைப் பாவையென ஆட்டாதீர்!
No comments:
Post a Comment