பெண்மை
வாழ்கென்று போற்றுவோமடா
- கவிஞர் அவ்வை நிர்மலா
தாயெனச் சொல்லித் தலையால் வணங்கித்
தயையுடன்
பாடுகிறார் - அவர்
பேயெனச் சொல்லி மனைவியைத் தூற்றிப்
பிழைகளைத்
தேடுகிறார்!
தேய்ந்திடும் சந்தனம் என்றே புகழ்ந்து
திசைதொறும்
மீட்டுகிறார் - அவர்
வாய்க்க மணக்கொடை வேண்டும் எனவே
வம்புகள்
பூட்டுகிறார்!
பாய்தனில் என்றும் மகிழ்வை யளித்திடும்
பாங்கைப்
புகழுகிறார் - அவர்
வேய்மகள் தேடி விலையும் அளித்துமே
வெப்புநோய்
வாங்குகிறார்!
தோய்வுடன் சேயை வளர்ப்பவள் என்றே
தோரணம்
நாட்டுகிறார் - அவர்
வாய்தனை மூடா வனிதையர் என்றே
வசையொடு
வாட்டுகிறார்!
நோய்தனில் வீழ்ந்தால் செவிலியாம் என்றே
நெகிழ்ந்து
பரவுகிறார் - அவள்
மாய்ந்திடின் வேறொரு மங்கையை அன்றே
மணக்க
விரையுகிறார்!
ஆய்ந்திடில் அன்பில் நிகரிலை என்றே
அரங்கினில்
போற்றுகிறார் - அவர்
ஓய்வும் தராமல் பணிகள் சுமத்தியே
ஓய்வின்றித்
தூற்றுகிறார்!!
No comments:
Post a Comment