Monday, 22 August 2022

Children Story - அம்மாவின் அணைப்பில்

 

அம்மாவின் அணைப்பில்

அம்மா, அம்மா நம்ம ஊர்ல சர்க்கஸ் போட்டிருக்காங்க. என்ன அழைச்சிட்டுப்போம்மா,” என்று அடம்பிடித்தாள் குழலி.

இதோ பார் குழலி, எங்கப் பாத்தாலும் ஒரே காய்ச்சலா இருக்கு. கூட்டத்துல போகக்கூடாதுன்னு தொலைக்காட்சியில தினம் சொல்றாங்களே, நீ கேக்கலையா? பேசாம வீட்லயே இருக்கணும். அப்பதான் பாதுகாப்பு. நீ எவ்வள புத்திசாலிப் பொண்ணு. நான் ஒனக்கு சொல்லணுமா?” என்று அம்மா நீலவேணி திட்டவட்டமாக சர்க்கஸ் போவதற்கு மறுப்பு சொல்லிவிட்டார்.

அம்மா, நீ மட்டும் தெனம் வெளிய போற. . . நான் மட்டும் போவக்கூடாதுன்னு சொல்ற. . .சிணுங்கினாள் குழலி.

நான் போவலன்னா ஒனக்கு பள்ளிக்கூடம் பீஸ், பொஸ்தகங்க எல்லாம் யார் வாங்கித் தருவா? அப்பாவோட சம்பளம் மட்டும் நமக்குப் போதலையே குழலிஎன்றாள் வேணி.

நீ வேணா அப்பாகிட்ட கேளு. . .

அம்மாவுக்கு மேல அப்பா. எப்போதும் ஆபீஸ் ஆபீஸ்னு போயிடுவாரு. . . அவரா கூட்டிட்டுப் போவப் போறாரு?

எப்போதும் ஆன் லைனு வகுப்பில் உட்கார்ந்து உட்கார்ந்து குழலிக்கு அலுத்துப்போனது.

நாலாவதுன்னுதான் பேரு. ஆனா எவ்வளவு வேல? எப்பப் பார்த்தாலும் லீலா டீச்சர் அத எழுது, இத எழுதுன்னு டார்ச்சர் பண்றாங்களே. . .எரிச்சலாக வந்தது குழலிக்கு.

குழலி, அம்மா வேலைக்குப் போறேன். தோ பார். சாப்பாடு மேசையில வெச்சிருக்கேன். உள் பக்கம் தாப்பா போட்டுக்கிட்டு பத்திரமா இருக்கணும் தெரியுதா? ஏதாவது வேணும்னா கீழ்வீட்டு அத்தகிட்ட கேளுஎன்று சொல்லிவிட்டு வேணி வேலைக்குக் கிளம்பிவிட்டாள்.

குழலிக்கு கோபமாக வந்தது. பேசாம நாம வீட்ட விட்டுப் போயிடனும். என்ன நல்லாத் தேடட்டும். அப்பத்தான் இனிமே நான் கேட்டத இவங்க ஒடனே செய்வாங்கஎன்று நினைத்தாள் குழலி.

வீட்டைச் சாத்திப் பூட்டிவிட்டுச் சாவியை அம்மா வைக்கும் பூத்தொட்டியில் மறைவாக வைத்தாள்.

பதுங்கிப் பதுங்கி மெல்ல வாசலை அடைந்தாள். வெளியில் அவளை யாரும் பார்க்கவில்லை. அப்படியே மெதுமெதுவாய் நடந்து விமான தளத்தின் மதிற்சுவரைச் சுற்றிப்போய் மேற்குப் பக்கம் போய்விட்டாள். அங்கே பொட்டல் காடாக இருந்தது.

இப்படியே நடந்து நடந்து எங்கே போவது? என்று யோசித்தாள்.

அப்போது அங்கே ஒரு புதர்ச்செடியிலிருந்து கீக் கீக் கீக்என்று ஈனஸ்வரத்தில் ஒலி கேட்டது. மெதுமெதுவாய் குழலி கிட்டேசென்று உற்றுப் பார்த்தாள்.

ஒரு கோழிக்குஞ்சு அழுதுகொண்டே இருந்தது.

மேலே ஒரு காக்காய் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.

குழலி மெதுவாக நெருங்கிப் போனாள்.

என்ன ஒன்னும் செஞ்சிடாத, பிளீஸ் பிளீஸ்என்றது கோழிக்குஞ்சு.

இல்ல இல்ல நான் ஒன்னும் செய்யமாட்டேன். என் கிட்ட வாயேன். . . என்று சொன்னாள் குழலி.

இல்ல, முடியாது, என்னால நடக்க முடியல”.

ஏன் என்னாச்சு ஒனக்கு?”

மேலே பாரு. . . அந்தக் காக்கா என்ன கொத்திக்கிட்டு வந்துடிச்சி. அது கொத்தனதால என் றெக்கையில அடிபட்டுடிச்சி. மேல இருந்து தொப்புன்னு விழுந்ததுல காலும் சுளுக்கிக்கிச்சி. என்னால ஒரு அடிகூட நடக்க முடியாது. . .

அச்சச்சோ, அப்படியா? அப்படியே இரு. . . நான் ஒன்ன தூக்கிக்கறேன்”.

இல்ல இல்ல. நீ என்னத் தூக்கிவெச்சிக்கிட்டா அந்தக் காக்கா திரும்பவும் வந்து என்னக் கொத்திக்கிட்டுப் போயிடும். அதனாலதான் வெளிய வர பயமாயிருக்கு. . .  அந்தக் காக்கா மரத்துல ஒக்காந்துகிட்டு நம்மளயே மொறச்சிப் பாத்துட்டிருக்கு பாரு. . .

நீ ஒன்னும் பயப்படாத. நான் ஒரு குச்சி எடுத்துவரேன். அப்பறமா அந்த காக்கா கிட்ட வராதுஎன்று சொல்லி பக்கத்திலிருந்த ஒரு காய்ந்த குச்சியை எடுத்துக்கொண்டாள் குழலி.

கோழிக்குஞ்சோடு குழலி பேசிக்கொண்டிருந்ததையும் தன்னை ஓட்டுவதற்குக் குழலி குச்சியை எடுப்பதையும் பார்த்துக்கொண்டிருந்த காக்கைக்குக் குழலிமீது ஆத்திரம் வந்தது.

கா கா காவென்று கோபமாகக் குழலியைப் பார்த்துக் கத்தியது.

பாப்பா, தோ பார். நான் அந்தக் குஞ்சைக் கஷ்டப்பட்டு பிடிச்சுக்கிட்டு வந்தேன். பேசாம என் கிட்ட குடுத்துடு. இல்லன்னா நான் ஒன்னயும் கொத்திக் காயப்படுத்துவேன்என்றது.

காக்கா இப்படி மிரட்டியதும் குழலி நடுங்கினாள். அப்போது தலையில் கொத்துவதுபோல் காக்கையும் கிட்டே பறந்துவந்து வட்டமிட்டது.

குழலிக்குக் கோழிக்குஞ்சை அனாதையாக விடவும் மனசில்லை. அதே நேரம் காக்கை தன்னைக் கொத்திவிடுமோ? என்று பயமாகவும் இருந்தது.

அண்ணா, அண்ணா, நான் கொஞ்சம் சொல்றதக் கேளேன். ஒனக்குச் சாப்பாடுதான வேணும். இந்தக் கோழிக் குஞ்சைக் கொன்னுட்டா ஒரு வேளைக்குதான சாப்பாடு கிடைக்கும். நான் ஒனக்கு தெனம் சாப்பாடு தறேன்.

அப்படியா? நீ எப்டி சாப்பாடு தருவே?” என்றது காக்கை.

அதோ பாரு. அந்தப் பக்கந்தான் எங்க வீடு இருக்கு. நீ அங்கப் பறந்து வா. எங்க அம்மா எனக்கு வெதவெதமா தின்பண்டம்லாம் வாங்கித் தருவாங்க. நான் ஒனக்கு அதுல கொஞ்சம் டெய்லி தருவேன். நீ இந்தக் கோழிக்குஞ்ச விட்டுடேன்என்றாள்.

அப்டியா, பேச்சு மாற மாட்டியேஎன்றது காக்கை.

இல்லண்ணா, நிச்சயமா பேச்சு மாற மாட்டேன். வேணும்னா என் கூடயே வா. நான் ஒனக்கு எங்க வீட்டக் காட்டுறேன்என்றாள்.

சரி சரி. நான் அந்த மரத்துலயே காத்திருப்பேன். சீக்கரம் வா. பசிக்குதுஎன்றது காக்கை.

குழலி கோழிக்குஞ்சை நோக்கிக் குனிந்தாள். ஒங்க வீடு எங்க இருக்கு? நான் ஒன்ன பத்திரமா அங்கக் கொண்டுபோய் விடறேன்என்றாள்.

அடடே, எனக்கு எங்க வீட்டு முகவரி தெரியாதேஎன்றது கோழிக்குஞ்சு.

என்ன கொழந்த நீ, எப்பவுமே நம்ம வீட்டு அட்ரஸ தெரிஞ்சு வெச்சுக்கணும். அப்பதான் நாம தொலைஞ்சிபோயிட்டாலும் வீட்டு முகவரி சொல்லிப் பத்திரமா போயிடலாம். ஒங்க அம்மா இதச் சொல்லித் தரலையா?” என்றாள் குழலி.

இல்லையே. நாங்க எப்பவும் நாவ மரத்தடிலதான் இருப்போம். பக்கத்துல ஒரு வைக்கப்போரு இருக்கும். அங்க ரெண்டு மாடு கட்டி இருக்கும்என்று விவரித்தது கோழிக்குஞ்சு.

சரிதான் போ. இந்த அடையாளம்லாம் வெச்சி ஒன் வீட்டக் கண்டுபிடிக்கவே முடியாதுஎன்றாள் குழலி.

உடனே அந்தக் குஞ்சு கேவிக்கேவி அழ ஆரம்பித்தது.

குழலிக்குப் பாவமாக இருந்தது. சரி சரி அழாத. அந்தக் காக்காதான ஒன்னத் தூக்கிட்டு வந்தது. அதுக்கு நிச்சயமா ஒங்க வீடு தெரியும். அதுகிட்ட சொன்னா அது ஒன்னத் தூக்கிட்டுபோய் அங்க விட்டுடும்என்றாள் குழலி.

அய்யய்யோ, எனக்கு பயமா இருக்கு. அந்தக் காக்காவ நம்ப முடியாது. அது திரும்பவும் என்னத் தின்னாலும் தின்னுடும். அதோடு அது என்னக் கொத்தித் தூக்குனா திரும்பவும் என் ஒடம்புல காயந்தான் படும். நான் பயத்துல செத்தே போயிடுவேன்என்று பதைத்தது.

சரி, சரி, நீ கவல படாத. நான் அதுகிட்ட முகவரிய மட்டும் விசாரிச்சுக்கறேன்என்றாள்.

கையில் பத்திரமாகக் கோழிக்குஞ்சைத் தூக்கிக்கொண்டு மரத்தின் அருகில் சென்றாள்.

அதற்குள் அந்தக் காக்கை சிறு தூக்கம் போட்டுக்கொண்டிருந்தது.

அண்ணா, அண்ணா, இந்தக் குஞ்சோட வீட்டக் காட்டுங்கண்ணாஎன்ற சத்தமாகக் கேட்டாள் குழலி.

இது வேறயா, இப்பத்தான் பசியில அசந்து தூங்கப்போனேன். நல்ல தூக்கத்தக் கெடுத்துட்டியே, சரி சரி. அதோ அந்தக் குடிச வீடு தெரியுதா?” என்று கேட்டது காக்கை.

அங்க நெறைய வீடு இருக்கேண்ணா, எது இவங்க வீடு?”

நீங்க அந்தக் குடிசை வீட்டப்பாத்துப் போயிட்டே இருங்க. நீங்க கிட்ட போம்போது நான் பறந்துவந்து வழிகாட்டறேன்என்றது.

குழலியும் கோழிக்குஞ்சைப் பத்திரமாகத் தூக்கிக்கொண்டு குடிசைவீடுகளை நோக்கி நடந்தாள். கிட்டேபோனதும் காக்கை பறந்துவந்து ஒரு வைக்கோற்போரில் அமர்ந்தது.

அங்கே குழலி கண்ட காட்சி நெஞ்சை உருக்கியது. அம்மா கோழி தன் குஞ்சுகளை அணைத்துக்கொண்டு ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது.

ஆச ஆசயா வளத்த என் அன்னத்தக் காணமே, ஐயோ நான் என்ன செய்வேன், சொல்பேச்சக் கேக்காத புள்ளையாப் போச்சே, நான் எங்கபோயி தேடுவேன்,” என்று அலறிக்கொண்டிருந்தது அம்மா கோழி.

கிட்டே போனதும், “கீக் கீக்என்று கோழிக்குஞ்சு குரல்கொடுத்தது. அம்மா, அம்மா, நான் வந்துட்டேன்என்று கூவியது.

கோழி அன்னாந்து பார்த்து குழலியின் கையில் தன் குஞ்சைக் கண்டது. மகிழ்ச்சியால் இறக்கைகளைப் படபடவென்று அடித்துக்கொண்டது.

குழலி அந்தக் குஞ்சை இறக்கிவிட்டாள்.

என் அன்னமே, வந்துட்டியா? எங்கடி போன? தனியாப் போகத போகதன்னு எத்தனவாட்டி சொன்னேன், கேட்டியா என் கண்ணே, வாடி என் தங்கமேஎன்று ஓடி வந்து இறக்கைகளால் அணைத்துக்கொண்டது.

அம்மா, இந்த அக்காதான் என்னக் காக்கா கிட்டயிருந்து காப்பாத்தினாங்கஎன்று மகிழ்ச்சியோடு சொன்னது.

ரொம்ப நன்றி கொழந்தே, நீ நல்லா இருப்பேஎன்று சொல்லிவிட்டு தன் குஞ்சு நொண்டுவதைப் பார்த்துத் துடித்துப்போனது. உடனே கால்களை நீவி விட்டு, கழுத்தில் ஏற்பட்ட புண்ணை தன் எச்சிலால் ஆற்றியது.

மகிழ்ச்சியோடு அங்கிருந்து நகர்ந்தாள் குழலி. இப்போது என்ன செய்வது?” என்று யோசித்தாள்.

காக்கை அருகேவந்து, “என்ன யோசன? வீட்டுக்குப் போகல, எனக்குச் சாப்பாடு?” என்றது.

இல்லண்ணா, நான் கோவிச்சுக்கிட்டு வந்துட்டேன். அதான் யோசிக்கிறேன்.என்றாள்.

என்னது, கோவிச்சுட்டு வீட்டவிட்டு வந்துட்டியா? சரியாப்போச்சு போ, இந்த லட்சணத்துல இந்தக் கோழிக்குஞ்சக் காப்பாத்தினியாக்கும். தோ பாரு பொண்ணு. . . 

என் பேரு குழலி. . .

சரி கொழலி, சின்ன பசங்க அம்மா, அப்பாவோட இருந்தாத்தான் பாதுகாப்பு. அத வுட்டுட்டுக் கோச்சுக்கிட்டுத் தனியா வந்தா எவ்வளவு ஆபத்து இருக்கு பாத்த இல்ல?”

கோழிக்குஞ்ச காக்காவும், கழுகும் பாம்பும் கொத்தும். அதுபோலத்தான் ஒங்களமாதிரி மனுஷக் கொழந்தங்கள கெட்டவங்க பாத்தா நகய திருடிக்கிட்டு கொன்னு போட்டுடுவாங்க. இல்லன்னா கைய கால ஒடச்சிப் பிச்ச எடுக்க வெச்சிடுவாங்க. தெரியுமா?” என்றது.

காக்கை சொன்னதைக் கேட்டதும் குழலிக்குப் பயம் அப்பிக்கொண்டது.

ஆமாம், அம்மா சொல்லியிருக்காங்க. நான்தான் கோவத்துல யோசிக்காம வந்துட்டேன். ஒடனே நான் வீட்டுக்குப்போவணும்என்றாள் குழலி.

சரி பயப்படாத, நான் ஒனக்குத் துணையா வறேன்என்று குழலியின் தலைக்குமேல் வட்டமடித்துக்கொண்டே வந்தது காக்கை.

அண்ணா நான் ஒனக்கு நம்பின்னு பேரு வெக்கறேன்என்றாள் குழலி.

எனக்கு இந்தப் பேரு ரொம்ப புடிச்சிருக்குஎன்று மகிழ்ந்தது காக்கை.

நம்பி அண்ணா, எனக்குத் தாகமா இருக்கு, பசிவேற எடுக்குது, களைப்பா இருக்குஎன்றாள் குழலி.

இதயெல்லாம் நீ வீட்டவிட்டு வரும்போதே யோசிச்சி இருக்கணும். தோ ஒங்க வீடு கிட்ட வந்துடிச்சி பாரு. மெதுவா நடந்துவா, நான் பாட்டு பாடிட்டே வரேன், ஒனக்கு களைப்பு தெரியாதுஎன்று சொல்லிப் பாட ஆரம்பித்தது,

கா கா கா

காட்டுல ஒரு பாப்பா

கா கா கா

ரோட்டுல நடந்து போச்சு

கா கா கா

வூட்டுல அடஞ்சிருந்தா

கா கா கா

பத்திரம்னு தெரிஞ்சிகிச்சாம்

கா கா கா, கா கா கா!

 

நம்பி அண்ணா, வீடு வந்துடிச்சி. இனிமே கத்தாத, அப்பறம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும். உஸ். . .என்றாள் குழலி.

மெதுமெதுவாய் மாடிப்படியேறி வீட்டைத் திறந்து உள்ளே சென்றாள். அம்மா வைத்திருந்த தின்பண்டங்கள் எடுத்து காக்கையண்ணாவிற்குக் கொடுத்தாள்.

அது வயிறார சாப்பிட்டது.

நம்பி அண்ணா, நம்பி அண்ணா, ஒனக்கு எப்பல்லாம் பசிக்குதோ, வந்து ஒரு குரல் குடு, இனிமே எந்தக் கோழிக்குஞ்சையும் கொத்தாதஎன்றாள்.

சரி தங்கச்சியென்று தலையாட்டிவிட்டுப் பறந்தது நம்பி.

மாலையில் வீட்டிற்கு வந்த அம்மா, குழலி சமர்த்தாக அமர்ந்து படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கட்டியணைத்து முத்தம் தந்தார். அம்மாவின் அணைப்பில் என்றுமில்லாத பாதுகாப்பை உணர்ந்தாள் குழலி.

***

No comments:

Post a Comment