இடைக்காட்டுச்
சித்தர் பாடல்களில் தன்அனுபவ உத்தி
கிழவி சொல்லின் அவளறி கிளவி
தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது
என்று
தொல்காப்பியர் (தொல். பொருள். ) தோழி, தலைவி
ஆகியோர் கூற்று நிகழ்த்துவதான புனைவில் புலவர்கள் கவனம் செலுத்தவேண்டிய
செய்தியொன்றை நுணுக்கமாகக் குறிப்பிடுகிறார். மக்கள் பேசுகின்ற சொற்களில் அவர்கள்
பயிலுகின்ற பொருட்களும் நிகழ்வுகளுமே உவமைகளாக, பழமொழிகளாக, விடுகதைகளாகக் கருக்கொள்ள முடியும்.
ஒருவர் பார்த்த, பழகிய, அனுபவித்த செய்திகளையும் பொருட்களையுமே அவர்தம் உரையாடலில்
உள்ளார்ந்த பொருட்புலப்பாட்டோடு தெளிவாக வெளிப்படுத்த இயலும் என்பது அனுபவத்தால்
அறிந்த ஒன்றாகும். எனவே, படைப்பாளர்களும் தம் கண்ணால்
கண்டவற்றையும் அனுபவத்தால் கண்டவற்றையுமே தம் படைப்புகளில் வெகுஇயல்பாக
எடுத்தாள்கின்றனர் எனலாம். இதனை ஓர் உத்தியாக வரையறுக்கும்போது தன்அனுபவ உத்தி
என்று வகைப்படுத்துவர் (ந. கிருட்டினமூர்த்தி, தமிழ்ச்
சிறுகதை இலக்கிய உத்திகள் : கு. அழகிரிசாமி சிறுகதைகள் வழிச் சிறப்பாய்வு).
அவ்வகையில் இடைக்காட்டுச் சித்தர் பாடல்களில் காணலாகும் தன் அனுபவ வெளிப்பாட்டை
வெளிக்கொணர்வதாக இக் கட்டுரை அமைகிறது.
இடைக்காட்டுச்
சித்தர் வரலாறு
15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இடைக்காடர்
சிறுவயதிலிருந்து ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார் என்றும் வழக்கம்போல் மலைச்சாரலில்
ஆடுமேய்த்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் நவசித்தருள் ஒருவர் பால்கேட்க, அவருக்குப் பால் முதலியவற்றைக்
கொடுத்து உபசரித்தார் என்றும் அவ் உபசரிப்பால் மகிழ்ந்த அச்சித்தர் இடைக்காடருக்கு
ஞான உபதேசம் செய்தார் என்றும் அதன் விளைவாகவே சகல சித்திகளும் அடைந்து
இடைக்காட்டுச்சித்தரானார் என்றும் கூறப்படுகிறது.
நாட்டில்
ஒருமுறை கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது கால்நடைகள் தீவனமின்றித் துன்புற்றதாகவும் இடைக்காட்டுச் சித்தர் தம்
சித்துக்களினால் தம் ஆடுமாடுகளைக் காப்பாற்றியதுடன், கிரகங்களையும் மாற்றியமைத்து மழை பொழியச் செய்து உயிரினங்களைக்
காப்பாற்றினார் என்றும் கதை வழங்குகிறது (சித்தர் பாடல்கள், சென்னை : மணிவாசகர் பதிப்பகம், 1998, 239).
இடைக்காட்டுச்
சித்தர் ஆடுமாடு மேய்த்தவர்; காடுகளிலும்
மலைகளிலும் சுற்றித் திரிந்தவர் என்பதான அவரைப் பற்றிய கதை உண்மையென்பதை, அவர் பாடல்களில் பயன்படுத்தப்பெற்றுள்ள
விளி, கருப்பொருட்கள் வாயிலாக
அறுதியிட்டுரைக்க முடிகிறது. தத்துவங்களை விரித்துரைக்கும்போதும் அவற்றில்
கால்நடைகளும் கால்நடை மேய்ப்பவர்களும் காடுபடு பொருட்களும் இயல்பாக
இடம்பெறுகின்றன.
கால்நடை
மேய்ப்போர்
இடைக்காட்டுச்
சித்தர் பாடல்களில் மாடுமேய்ப்போர் பாடல்மாந்தராவதைக் காணலாம்.
தாண்டவராயக்
கோனார் கூற்று என்றும் நாராயணக் கோனார் கூற்று என்றும் பாடல்களை அமைத்துள்ளார்
இடைக்காட்டுச் சித்தர்.
தாந்தி மித்திமி தந்தக்கோ னாரே
தீந்தி மித்திமி திந்தக்கோ னாரே
ஆனந்தக் கோனாரே - அருள்
ஆனந்தக் கோனாரே
என்று
இவ்வாறு முன்னிலையில் மாடுமேய்க்கும் இனமான கோனார் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை
விளித்துக் கூறுவதாக அமைத்திருக்கின்றார்.
எல்லா உலகமும் எல்லா உயிர்களும்
எல்லாப் பொருள்களும் எண்ணரிய
வல்லாளன் ஆதிபரம சிவனது
சொல்லால் ஆகுமே கோனாரே (1)
என்னும்
பாடல் சமயவாதிகள் அறிந்துணரக்கூடிய ஆழ்ந்த தத்துவக் கருத்தைத் தன்னகத்தே
கொண்டிருந்தாலும் அதனை மாடுமேய்ப்பவர்களாகிய கோனாரிடம் உரைப்பதாக அமைத்திருத்தல்
நோக்கத்தக்கது. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தனக்குச் சித்தர் ஒருவர் ஞானோபதேசம்
செய்ததை மனத்தில்கொண்டு இத்தகைய பாடல்முறைமையை இடைக்காட்டுச் சித்தர்
கடைப்பிடித்தார் எனலாம்.
கால்நடைகள்
பற்றிய குறிப்புகள்
மும்மலம் நீக்கிட முப்பொறிக்கு எட்டாத
முப்பாழ் கிடந்ததாம் அப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை யமயத்தும்
சிந்தையில் வைப்பீரே கோனாரே (9)
என்னும்
பாடல் மேற்கொள்ளும் பணி செம்மறியாட்டை மேய்ப்பதாகவே இருந்தாலும், அதனிடையே இறையாண்மையைச் சிந்தனை
செய்தல் இயலுவதே என்பதை முன்னிறுத்துகிறது.
மெய்வாய் கண் மூக்குச் செவியெனும்
ஐந்தாட்டை
வீறுஞ் சுவையொளி யூறோசை யாம்காட்டை
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன்
ஆட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே (27)
பற்றிரண் டும்அறப் பண்புற்றேன்
நண்புற்றேன்
பாலையும் உட்கொண்டேன் மேலையாம்
கண்கண்டேன்
சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம்
நோக்கினேன்
சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ்
சார்ந்திட்டேன் (28)
என்னும்
பாடலில் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் ஐந்து ஆடுகளாகக் குறிப்பிடுகிறார்
இடைக்காடர்.
ஆட்டுக் கூட்டங்களை அண்டும் புலிகளை
ஓட்டியே ஊதுகுழல் - கோனே
ஓட்டியே ஊதுகுழல் (101)
என்னும்
பாடலில் மாந்த உயிர்களை ஆட்டுக் கூட்டங்களாகவும் தீவினைகளைப் புலிகளாகவும் உருவகம்
செய்து புலி ஆட்டை வேட்டையாடும் நிகழ்வை ஓர் ஆடுமேய்ப்போனாக நினைவுகூர்கிறார்.
அந்தக் கரணமெ னச்சொன்னால் ஆட்டையும்
அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன்
காட்டையும்
சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்
சாவாது இருந்திடக் கோட்டையுங்
கட்டினேன் (26)
என்னும்
பாடலிலும் ஆட்டைத் தவறாது குறிப்பிடுகிறார்.
இவ்வாறு
பாடல்களில் ஆட்டினை உவமை உருவகங்களாக எடுத்தாளல் பெரும்பாலும் காணலாகா ஒன்றாகும்.
நாராயணக்
கோனார் கூற்றில், ‘பசுவே’ என்று விளித்துப் பசுவிடம் சொல்வதாக அமைத்துள்ளார்:
ஆதபகவனையே பசுவே
அன்பராய் நினைப்பாயேல்
சோதி பரகதிதான் பசுவே
சொந்தமது ஆகாதோ? (33)
தன்மனந் தன்னாலே பசுவே
தாணுவைச் சாராதோர்
வன்மரம் ஒப்பாகப் பசுவே
வையத்துள் உறைவாரே (45)
உயிர்களைச்
சைவ சித்தாந்தம் பசு என்று குறிப்பிடும் தத்துவ விளக்கத்தைக் கடந்து, பசுவே என விளிக்கும் தன்மை
மனங்கொளத்தக்கது.
மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே
- முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே (13)
ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே -
இந்த
அண்டமெல்லாம் கண்டறிவாய் தாண்டவக்கோனே
(15)
என்னும்
பகுதிகளில் மனத்தையும் ஆசையையும் மாடாக உருவகப்படுத்தக் காணலாம். பிற புலவர்கள்
மனத்தைக் குரங்காகக் காட்ட இடைக்காட்டுச் சித்தர் அதனை மாடாகக் காட்டுகிறார்.
இருவினையாம் மாடுகளை ஏகவிடு கோனே - உன்
அடங்குமன மாடொன்றை அடக்கிவிடு கோனே (113)
அகங்கார மாடுகள் மூன்று அகற்றிவிடு
கோனே - நாளும்
அவத்தையெனும் மாடதை நீ அடக்கி விடு
கோனே (115)
ஒருமலத்தன் எனுமாட்டை ஒதுக்கிக் கட்டு
கோனே - உள்
உறையுமிரு மலந்தனையும் ஓட்டிக் கட்டுக்
கோனே (116)
மும்மலத்தன் எனுமாட்டை முறுக்கிக்
கட்டுக் கோனே - மிக
முக்கால நேர்மையெல்லாம் முன்பறிவாய்
கோனே (117)
முதலான
பகுதிகளில் இருவினைகளையும்,
அகங்காரத்தையும்
மும்மலங்களையும் என எல்லாவற்றையுமே மாட்டின் உருவாகக் கண்டு அவற்றை அடக்கும்
தன்மையை கிடைகட்டுதலோடு ஒப்புநோக்குகிறார் இடைக்காடர்.
மாடும் மனைகளும் மக்களுஞ் சுற்றமும்
வான்பொருளும்
வீடும் மணிகளும் பெண்பொன்னுஞ்
செம்பொன்னும் வெண்கலமும்
காடுங் கரைகளும் கல்லாம் பணியுங்
கரிபரியும்
தேடும் பலபண்டம் நில்லா சிவகதி
சேர்மின்களே (23)
என்று
நிலையாமை குறித்துச் சொல்லும் பாடலில் வீடு, மனை, மக்கள், சுற்றம், பொன், பொருள் ஆகிய பலவற்றைச் சுட்டினாலும் முதலாவதாக மாட்டினைச் சுட்டுதல்
அதன்மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது எனலாம்.
பாலிற் சுவைபோலும் பழத்தில் மதுப்
போலும்
நூலிற் பொருள்போலும் நுண்பொருளைப்
போற்றீரே (50)
என்னும்
பகுதியில் இறைத் தன்மையைப் பாலில் சுவைபோன்றது எனப் பலரும் குறிப்பிட்டாலும்
இடைக்காடர் குறிப்பிடுவதில் அவருடைய தனித்துவம் மிளிர்வதாகவே கொள்வதில் தவறில்லை.
குன்றுகள் சார்ந்த பகுதிகளில், ஆடுமாடு மேய்ப்போர் பெரும்பாலும்
குன்றுகளின் மீதிருந்து கால்நடைகள் மேய்வதைக் கண்காணித்தல் வழக்கமாகும். இறையை
உணர்ந்து அன்னமயம், பிராணமயம், மனோமயம், விக்கியான மயம், ஆனந்தமயம்
என்று சொல்லப்படுகின்ற ஐந்து கோசங்களைக் கண்டு குன்றின்மீதிருந்து ஆடு என்று
உரைக்கின்ற,
ஆறா தாரத்தெய் வங்களை நாடு
அவர்க்கும் மேலான ஆதியைத் தேடு
கூறான வட்ட ஆனந்தத்திற் கூடு
கோசமைந் துங்கண்டு குன்றேறி ஆடு (32)
என்னும்
இடைக்காடர் பாடல் குன்றேறி மேய்ச்சலைக் கண்காணிக்கும் செயலை எண்ணிப் பார்க்கத்
தூண்டுகிறது.
மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற -
மலை
மேலேறிக் கொண்டோம் என்று தும்பீபற (77.2)
என்னும்
பகுதியும் மேற்சுட்டிய கருத்தை வலியுறுத்துகிறது.
மட்டிக்குணமுள்ள மாரீச நாய்களைக்
கட்டிவைத்து ஊதுகுழல் - கோனே
கட்டிவைத்து ஊதுகுழல் (103)
கட்டாத நாயெல்லாம் காவலுக் கெப்போதும்
கிட்டாவென்று ஊதுகுழல் - கோனே
கிட்டாவென்று ஊதுகுழல் (103)
என்னும்
பகுதிகளில் ஐம்புலன்களைக் கட்டுக்குள் வைத்திடல் வேண்டும் என்ற தத்துவத்தை
முன்மொழிந்தாலும் நாய்களைக் கட்டிவைத்துப் பழக்கி அவற்றைக் கிடையின்
பாதுகாப்பிற்குப் பயன்படுத்தும் செயலை இடைக்காடர் பயன்கொள்ளும் பாங்கு எண்ணி
இன்புறத்தக்கது. ஐம்புலன்களை நாய்களாக உருவகப்படுத்துவதும் இடைக்காடனாரின்
முன்முயற்சி எனலாம்.
சாவாது இருந்திடப் பால்கற - சிரம்
தன்னில் இருந்திடும் பால்கற
வேவாது இருந்திடப் பால்கற - வெறு
வெட்ட வெளிக்குள்ளே பால்கற (107)
என்ற பால்கறத்தல்
என்னும் தலைப்பிலமைந்த பாடல் குண்டலினி சக்தியை நிலைநிறுத்தும் தன்மையைப்
பால்கறத்தலோடு ஒப்பிட்டு நோக்குகிறது. வெட்ட வெளிக்குள்ளே பால்கற (107.1), வயிறார உண்டிடப் பால்கற (108.2), கலசத்தினுள் விழப் பால்கற (110.2) முதலான பகுதிகள் உள்ளார்ந்த
தத்துவங்களை அடக்கிநிற்கும் அதேவேளையில் பால்கறத்தல் நிகழ்வின் பன்முகச்
செயல்களைக் காட்சிப்படுத்துகின்றன எனலாம்.
புல்லாங்குழலூதல்
(96-106), பால் கறத்தல் (107-112), கிடை கட்டுதல் (113-130) முதலான தலைப்புகள் மாடு மேய்ப்போர்
செயல்களையே நினைவுபடுத்துகின்றன.
காடுசார் கருப்பொருட்கள்
மலை, காடு முதலான இயற்கையில் வாழுகின்ற உயிரினங்களான பாம்பு முதலியவற்றை
அவ்விடங்களில் பயில்வார் அடிக்கடி எதிர்ப்படல் இயல்பு. இத்தகைய உயிரினங்கள்
படைப்பாளரின் படைப்புகளில் எவ்வாறேனும் தம்மை நிலைநிறுத்திக்கொண்டு விடுகின்றன.
அவ்வகையில்,
சினமென்னும் பாம்பு இறந்தால்
தாண்டவக்கோனே - யாவுஞ்
சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே (14)
பெட்டியிற் பாம்பெனப் பேய்மனம் அடங்க
ஒட்டியே ஊதுகுழல் - கோனே
ஒட்டியே ஊதுகுழல் (104)
என்னும்
பகுதிகளில் முறையே சினத்தையும் மனத்தையும் பாம்பாகக் குறிப்பிடுகிறார் இடைக்காடர்.
அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீபற - பர
மானந்தம் கண்டோம் என்று தும்பீபற (77.1)
என்னும்
பகுதி உள்ளிட்ட ‘தும்பீ பற’ என்றமைந்த பாடல்கள் (77-82), வெளிகளில் தும்பிகள் பறந்திடும்
காட்சியை இடைக்காடர் கண்டுணர்ந்த அனுபவத்தை வெளிப்படுத்துகின்றன எனலாம்.
சிறுதவளை தான் கலக்கிற் சித்திரத்தின்
நிழல் மறையும்
மறுவாயைத் தான் கலக்கின் மதிமயங்கும்
மடவனமே (90)
காற்றின் மரமுறியும் காட்சியைப்போல்
நல்லறிவு
தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம்
மடவனமே (91)
குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டில்
உருப்படுத்தல்போல்
வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே
(93)
எனவரும்
பாடற்பகுதிகள் குளத்தில் சிறுதவளைகள் பாய்ந்து சலனமற்ற நிழலோவியத்தைக் குலைத்தல்,
காற்றால்
மரங்கள் முறிதல், குளவி புழுவைத் தன் கூட்டில்வைத்துக்
காத்துக் குளவியாக்கல் முதலான இயற்கைநிகழ் செயல்பாடுகளைப் பதிவுசெய்கின்றன.
ஆடுமாடுகளை மேய்ப்போர் வனாந்தரங்களில் சுற்றித்திரியும்போது காணும் காட்சிகள் இவை
என்பது சொல்லாமலேயே விளங்குவதாகும்.
கரணங்கள் ஒரு நான்கும் அடங்கினவே -
கெட்ட
காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே
சரணங்கள் ஒரு நான்கும் கண்டனம் என்றே -
நிறை
சந்தோட மாகவே கூவுகுயிலே (83)
ஆடுமயிலே நடமாடு மயிலே - எங்கள்
ஆதியணி சேடனைக் கண்டு ஆடுமயிலே
கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே -
என்றும்
குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே (87)
அக்கினியாற் பஞ்சுபொதி அழிந்திட்ட
வாறேபோல்
பக்குவநல் அறிவாலே பாவம்போம் மடவனமே (92)
என்றும்
பாடல்கள் காடு முதலிய இயற்கையில் திரியும் ஒருவர் காணுகின்ற பறவை இனங்களை
அடிப்படையாகக் கொண்டமைகின்றன. குயிலொடு கிளத்தல் (83-86), மயிலொடு கிளத்தல் (87-89), அன்னத்தொடு
கிளத்தல் (90-95) ஆகிய தலைப்புகளில் இடைக்காடர் அமைத்த
பாடல்கள் இயற்கைக்கும் அவருக்குமான நெருக்கத்தைப் பதிவுசெய்கின்றன எனலாம்.
மேற்கூறியவற்றால் படைப்பாளரின் வாழும்
சூழ்நிலைக்கும் படைப்புப் பின்னலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதையும்
பாடுபொருள் எதுவாக இருந்தாலும் அதற்கேற்றாற்போல் தம் வாழியலைப் பயன்கொள்ளும்
பாங்கினைப் படைப்பாளர் கைவரப்பெறுவார் என்பதனையும் அறிந்துகொள்ள முடிகிறது. எனவே
தன்அனுபவம் படைப்பில் பெரும்பங்கு வகிக்கிறது என அறுதியிட்டுரைக்கலாம்.
பயன்நூல்
சித்தர்
பாடல்கள், மறு பதி., சென்னை : மணிவாசகர் பதிப்பகம், 1998.
No comments:
Post a Comment