Saturday, 4 February 2023

Drama பஞ்சதந்திரம் - காட்சி - 1

 

            நாடகம்

                            பஞ்சதந்திரம்


                            

                                காட்சி - 1

                களம்                          :     வானுலகம்

                கதை மாந்தர்        :     சீதை

                                                                                நளாயினி

                                                                                அகலிகை

                                                                                அருந்ததி

                                                                                சூர்யா

 

                மேலுலகம். உயர்ந்த கோபுரங்கள் நாற்புறமும் விளங்கும் கோயில். கோபுரங்களில் தங்கக் கலசங்கள் தகதகத்துக் கொண்டிருக்கின்றன. உள்ளே பரந்து விரிந்த ஆயிரங்கால் மண்டபம். தூண்கள்தோறும் நுணுக்கமான வேலைப்பாடமைந்த சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. சிற்பங்களில் அழகான பெண்களின் அங்க லாவண்யங்களே முதன்மையானதாய் மொய்த்த கண்கள் மொத்தமாய்த் தொலைவதாய் அமைந்திருந்தன. விதானத்தில் வண்ணமயமான ஓவியங்கள் உயிர்ப்புடன் திகழ்கின்றன. குத்துவிளக்குடன் ஏராளமான பெண்கள் அமர்ந்திருக்கின்றனர். சுமங்கலிப் பூசையென்று சொல்லிவிட்டால் போதும். இப் பெண்கள் எந்த மூலையிலிருந்தாலும் படையெடுத்து வந்து விடுகிறார்கள். எல்லாம் பூலோகப் பழக்கம்! அவ்வேளைதான் ஆண்களும் தம் மனைவியின் கண்காணிப்பு இன்றி நடன மங்கையரின் அங்கலாவண்யங்களை ரசிக்கவும் ருசிக்கவும் அவகாசம் கிடைக்கிறது. சுமங்கலிப் பூசை வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. நமக்குத் தெரிந்த நாம் கேள்விப்பட்ட பல பதிவிரதைகள் சுமங்கலிப்பூசை நடத்திவிட்டுப் பூக் கூடையோடு ஆயாசமாக வெளியே வருகிறார்கள்.

#

சீதை                 :     என்ன சுமங்கலிப் பூசை திருப்திகரமாக முடிந்ததா?

நளாயினி  :     இன்றென்னவோ எனக்கு மிகத் திருப்தியாக இருக்கிறது சீதா. இங்குவந்து இதுநாள்வரை எத்தனையோ முறை பூசை செய்திருக்கிறேன். ஆனாலும் இன்று கிடைத்த மனநிறைவை நான் என்றுமே அடைந்ததில்லை.

அருந்ததி  :     எனக்கும் அப்படித்தான் தோன்றியது சீதா.

சீதை                 : என்ன அகலிகை, பூசையெல்லாம் சிறப்பாக நடந்ததா?

அகலிகை: ம் . . . முறையாகவே முடிந்தது. நான் செல்கிறேன்.

சீதை                 :     அகலிகை, நில். எனக்கு உன்மீது எப்போதும் அக்கறையும் அனுதாபமும் உண்டு. ஆனால் நீயோ என்னைப் பார்த்தும் பாராமுகமாகச் செல்கிறாயே?

அகலிகை      :     அதெல்லாம் ஒன்றுமில்லையே. தாங்களாக ஏன் எதையாவது கற்பனை செய்துகொள்கிறீர்கள்?

                (அவர்களுக்குப் பின்னால் திடீரென்று சிரிப்பொலி கேட்கிறது. நால்வரும் திரும்பி, சிரித்தது யார் என்று நோக்குகின்றனர். அங்கே ஒரு பெண் அவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறாள். அவள் தலைமுடியைக் குட்டையாக வெட்டி ஆடவர்போல் மேல் சட்டையும் கால்சட்டையும் தரித்திருக்கிறாள். அவள் சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து நளாயினியின் மூக்கு சிவப்பேறித் துடிக்கிறது. சீதை புருவத்தை உயர்த்துகிறாள். அகலிகையும் அருந்ததியும் ஒன்றும் புரியாது திருதிருவென விழிக்கின்றனர்.)

சீதை                 : என்ன இப்படியொரு சிரிப்பு! பெண்ணாகப் பிறந்தவளுக்கு அடக்கம் வேண்டாமா? இப்படியா நாலுபேர் இருக்கும் இடத்தில் நாகரிகமில்லாமல் சிரிப்பது?

                (அவள் நிறுத்தாமல் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.) 

நளாயினி  :     (முறைத்துக்கொண்டே . . . ) போதும் நிறுத்து!

                (அப்பெண் அச்சப்படவில்லை. சிரிப்பையும் திடுமென்று நிறுத்தவில்லை. மெல்லமெல்ல நிறுத்துகிறாள். அவளது அச்சமற்ற போக்கு அனைவரையும் திகைக்க வைக்கிறது.)

அகலிகை  :     குழந்தாய்! ஏன் இப்படிச் சிரிக்கிறாய்?

அருந்ததி  :     காரணத்தைக் கூறிவிட்டுச் சிரி. பைத்தியம் பிடித்தவர்தான் காரணமில்லாமல் சிரிப்பார்கள்.

சூர்யா     :     உங்களுக்கு என்னைப் பார்த்தால் பைத்தியக் காரியாகத் தெரிகிறது. எனக்கு உங்களைப் பார்த்தால்தான் அப்படித் தெரிகிறது.

                (திரும்பவும் சிரிக்க ஆரம்பிக்கிறாள்.)

நளாயினி:  நீ சிரிப்பதை நிறுத்தப் போகிறாயா? இல்லையா? பிறகு ஏதேனும் சபித்துவிடப் போகிறேன்.

சூர்யா     :     உங்களால் செய்யமுடியாததை நான் செய்வதைப் பார்த்துப் பொறாமை!

சீதை :     என்ன உளறுகிறாய்? எங்களால் முடியாதது எது?

சூர்யா     :     சிரிப்பது! உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக வாய்விட்டுச் சிரித்ததுண்டா? யோசித்துப் பாருங்கள்! எப்போதும் அழுகை! அழுகை!! அழுகை தான்!!!... தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வரும் கதாநாயகிகளின் முன்னோடிகள் நீங்கள்தாம்!

                (அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். அவர்கள் முகத்தில் துயரச் சாயல் படிகிறது. தங்கள் வாழ்க்கையின் பக்கங்களை அவள் தூசிதட்டிப் புரட்டி விட்டதைப்போல் உணர்கின்றனர். நீண்டதொரு பெருமூச்சு நால்வரிடமிருந்தும் புறப்படுகிறது.)

சூர்யா     :     என்ன அமைதியாகிவிட்டீர்கள்?

சீதை                 :     ஒன்றுமில்லை. ஏதோ பழைய ஞாபகம். அதைவிடு. எங்கள் முகத்துக்கு நேரே இப்படி யாரும் இதுவரை எங்களை விமர்சித்தது கிடையாது. நாங்கள் யாரென்று உனக்குத் தெரியுமா?

சூர்யா                     :     உங்களை எனக்கு நன்றாகத் தெரியும். சீதை, நளாயினி, அகலிகை - வாழ்க்கையை ஒட்டு மொத்தமாய்த் தொலைத்த அபலைகள்! அப்புறம் ... இவர் அருந்ததி! சரியா?

நளாயினி  :     எங்கள் மீது பரிதாபப்படக்கூடிய அளவிற்கு நீ உயர்ந்தவளோ?

சூர்யா              :     ஒருவர் மற்றொருவர் மீது இரக்கம்காட்ட அவர்களைவிட உயர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? நல்ல இதயம் இருந்தால் போதாதா அம்மா?

அருந்ததி  :     இந்த நல்ல இதயத்திற்குச் சொந்தக்காரி யாரென்று நாங்கள் அறிந்துகொள்ளலாமா?

சூர்யா                     :     தாராளமாக அம்மா! நான் இங்கு வந்து சுமார் ஒரு வாரம்தான் ஆகிறது. புவியில் நான் பெண்கள் பத்திரிகை ஒன்றை நடத்திவந்தேன். ஓர் உலகறிந்த அரசியல்வாதியின் அந்தரங்கத்தை ஊரறியச் செய்து விட்டேன் என்று என்னை இங்கே பார்சல்செய்து அனுப்பிவிட்டார்கள். என் புனைபெயர் சூர்யா?

சீதை                 :     சூர்யா? அதனால்தான் சுட்டெரிக்கிறாயோ? ஒரு நல்ல பத்திரிகையாளருக்குரிய எல்லாத் தகுதியும் இவளிடம் இருக்கிறது அருந்ததி.

நளாயினி  :     என்ன சொல்கிறாய் சீதை?

சீதை                 :     ஆமாம் நளாயினி. வந்த ஒருவார காலத்தில் நாம் யார் யார் என்று நமது ஜாதகத்தையெல்லாம் ஓட்டு கேட்கும் அரசியல்வாதிபோல் விசாரித்து அறிந்து வைத்திருக்கிறாளே!

அகலிகை  :     அது மட்டுமா? பழக்கமுள்ள நாம் ஒருவரொடு ஒருவர் பேசவே தயங்கிக்கொண்டிருக்கும்போது முன்பின் அறியாத நம்மைப் பார்த்து நையாண்டி செய்யுமளவிற்கு இவளுடைய துணிச்சலைப் பாரேன்.

நளாயினி : சூர்யா! அந்தச் சூரியனையே இயங்க முடியாமல் தடுத்து நிறுத்தியவள் நான். இவர்களும் தங்கள் சக்தியில் சற்றும் இளைத்தவர்களல்லர். அப்பேர்ப்பட்ட எங்களைப் பார்த்துப் பைத்தியம் என்று எதனால் சொல்கிறாய்?

சூர்யா     :     உங்கள் சக்தியில் எனக்கு எந்தவித ஐயமும் இல்லை அம்மா. பெண்ணே சக்தியின் வடிவம்தான் என்று எங்கள் தேசியக்கவி பாரதியார் பாடிப் பரவசப்பட்டார். இருந்தும் என்ன பயன் சொல்லுங்கள்? உங்கள் சக்தியை உங்களின் சொந்த முன்னேற்றத்திற்காக என்றாவது பயன்படுத்திக் கொண்டீர்களா? அல்லது நீங்கள் இன்பமாக வாழ்வதற்காகப் பயன்படுத்திக் கொண்டீர்களா? அல்லது உங்கள் பிரச்சினைகளைப் போக்கிக் கொள்வதற்காகப் பயன்படுத்திக் கொண்டீர்களா? எதுவும் இல்லையே! எல்லாம் வீணாயிற்றே!

சீதை :     நீ சொல்வது ஒன்றும் புரியவில்லையே . . .

சூர்யா     :     திருமதி நளாயினி அவர்கள் சூரியனையே உதிக்கவிடாமல் நிறுத்தி இந்த அண்ட சராசரத்தையே தன்னை யார் என்று தேடுமாறு செய்தவர்தாம். அப்படிப்பட்ட சக்தியைப் பயன்படுத்தித் தன் கணவனின் தொழுநோயை எளிதாக நீக்கி யிருக்கலாமே. அல்லது . . . விலைமகளின் வீடுதேடித் தன் கணவனைக் கூடையில் சுமந்து செல்லாமல் தன் வீட்டிற்கே அவளை வருமாறு கட்டளை இட்டிருக்க லாம். அல்லது ஒரு விலைமகளின் எண்ணமே தன் கணவனுக்கு வராமல்கூடச் செய்திருக்கலாம். அப்போ தெல்லாம் நளாயினி அம்மையாரின் சக்தி எங்கே போயிற்று? உங்கள் சக்தியெல்லாம் கறிக்குதவாத ஏட்டுச் சுரைக்காயோ?

நளாயினி  :     . . . (மௌனம்)

சூர்யா     :     ஏன் பதில் சொல்ல முடியவில்லையா? பிறகு இதனைப் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

நளாயினி  :     . . . (மௌனம்)

சூர்யா     :     நளாயினி அம்மையார்தான் இப்படி என்றால் உலகமெல்லாம் புகழும் திருமதி சீதாராமனாகிய தாங்களோ இராவணனிடமிருந்து எளிதாகத் தப்பித்து வராமல் இராமன் வில்லிற்கு மாசென்று வீசினேன்என்ற பல்லவியைப் பாடிக்கொண்டு இராவணனின் பூச்சாண்டி வேலைகளுக்கெல்லாம் பயந்துகொண்டு அழுதுகொண்டு இருந்தீர்கள் . . .

சீதை :     எதனையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யக் கூடாது பெண்ணே! இப்போது இருப்பதைப் போல் அந்தக் காலத்தில் அலைபேசி வசதியா இருந்தது? நான் பாட்டுக்குத் தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஒரு வழியில் தப்பித்துச் சென்று இராமன் என்னைத் தேடி மற்றொரு வழியில் வந்துவிட்டால் அப்புறம் ஒருவரை ஒருவர் வாழ்நாள் முழுக்கத் தேடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அதனால்தான் அவர்வந்து காப்பாற்றட்டும் என்று சும்மா இருந்து விட்டேன்.

சூர்யா     :     நன்றாகவே சமாளிக்கிறீர்கள் அம்மா! அதுசரி. ஆனால்... இலங்கையிலிருந்து மிக நல்ல பெயரைத் தான் சம்பாதித்துக்கொண்டு வந்தீர்கள் போலும்!

சீதை :     ஏன்? என் பெயருக்கென்ன?

சூர்யா     :     நல்ல பெயரை நிலைநாட்டத்தானே முதல் வேலையாகத் தீக்குளித்தீர்கள்?

சீதை :     நான் இராவணன் இருப்பிடமாகிய அசோக வனத்தில் இருந்தபோது ஏதேனும் தவறு நிகழ்ந் திருக்குமோ என்று சமுதாயத்தினர் ஐயம் கொள்ளலாம் அல்லவா? அந்த ஐயத்தைப் போக்கவே இராமன் என்னைத் தீக்குளிக்குமாறு பணித்தான்.

சூர்யா     :     சமுதாயத்திற்கு ஐயமா? அல்லது ... இராமனுக்கே  அந்த ஐயமா?

சீதை :     என்னை ஏன் குடைந்து குடைந்து கேள்வி கேட்கிறாய்? சிலவற்றை இப்படித்தான் என்று நாமாக நம்பிக்கொண்டால்தான் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியும். இம்மாதிரி விஷயங்களில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தால் பிறகு மன அமைதியோடு காலந்தள்ள முடியாது மகளே!

சூர்யா     :     அப்படியென்றால் இதன் உண்மையை அறிந்து கொள்ள நீங்கள் விரும்பவில்லை... சரிதானே அம்மா?

சீதை :     ஆமாம் என்றுதான் வைத்துக்கொள்ளேன்!

சூர்யா     :     ஆக உண்மையை ஆராயப்போனால் அது உங்களுக்கு நிச்சயமாகச் சாதகமாக அமையாது என்று ஆணித்தரமாக நம்புகிறீர்கள் இல்லையா?

அருந்ததி  :     அடடா! அம்மா சூர்யா . . . இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிடேன்!

சூர்யா     :     அதெப்படி விடமுடியும் அருந்ததி அம்மையே? சீதையை அசோகவனத்தில் கண்டு திரும்பிய அனுமன் கூட இராமனிடம் கூறும்போது கண்டனன் கற்பினுக்கு அணியைஎன்றுதானே கூறினான். அதைத்தானே காலங்காலமாக அறிஞர் பெருமக்கள் எல்லாம் வியந்து வியந்து போற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தானே அனுமனைச் 'சொல்லின் செல்வன்' என்றும் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்!

நளாயினி  :     நீ இதிலென்ன தவறு கண்டாய்?

சூர்யா     :     அனுமன் ஏன் கற்பினுக்கு அணி என்று சீதை அன்னையைக் குறிப்பிடவேண்டும்? உடல் நலத்தோடு இருக்கிறார் என்று கூறியிருக்கலாம்; அல்லது உயிரோடு இருக்கிறார் என்று கூறியிருக்கலாம்; வேறு எதையாவதுகூட கூறியிருக்கலாம். ஏன் கற்பை முன் நிறுத்த வேண்டும் என்கிறேன்?

அருந்ததி  :     கற்போடு இருப்பதைக் கூறினால் எல்லாம் நலமாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்!

சூர்யா     :     அதைச் சொல்லாமல் இருந்திருந்தால்கூட சீதையவர்கள் கற்போடுதான் இருக்கிறார் என்று குறிப்பால் உணர்ந்திருக்கலாமே.

அகலிகை  :     ஆக இராமன் சீதையைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பியதெல்லாம் அவள் கற்போடு இருக்கிறாளா? இல்லையா? என்பதைத்தானா?

சூர்யா     :     அகலிகை அவர்களே...! அதில் உங்களுக்குமா ஐயப்பாடு? உங்கள் குடும்ப வாழ்க்கையை வேறு அறிந்தவராயிற்றே இராமர். அதனாலும் சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம்.

                (அகலிகையின் முகம் சட்டென வாடுகிறது. அவள் தலைகுனிந்து நிலத்தை வெறித்து நோக்குகிறாள். கண்களிலிருந்து பொலபொலவெனக் கண்ணீர் கொட்டுகிறது.)

நளாயினி  : ஏய் பெண்ணே! என்ன பேச்சுப் பேசுகிறாய்? நாவை அடக்கு.

சூர்யா     :     ஐயோ அம்மா, நான் அவர் மனத்தைப் புண்படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன். (அகலிகையை நோக்கி) என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் அம்மா. இராமனின் சந்தேக மனநிலையை உணர்த்தவே அந்த நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தினேன். மற்றபடி அதில் உங்கள் தவறு எதுவும் இல்லை என்பதை அறியாத அடிமுட்டாளா நான்?

                (சீதையும் யோசனையில் ஆழ்கிறாள்)

நளாயினி  :     அகலிகை, வருந்தாதே, இவளுக்கு என்ன தெரியும்? சின்ன பெண். இன்னும் திருமணம்கூட ஆனதோ இல்லையோ? தெரியவில்லை. கூறுகெட்டத்தனமாக இவள் எதுவோ சொன்னால் நீங்கள் இருவரும் அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே?

அகலிகை  :     அவள் சொல்வதிலும் ஓர் உண்மை இருக்கத்தானே செய்கிறது. நானல்லவா கவனமாக இருந்திருக்க வேண்டும்? என்ன செய்வேன்?

சூர்யா     :     அகலிகை அம்மையே! இதில் உங்கள் தவறு ஒன்றும் இல்லை. முக்காலமும் உணர்ந்த தவவலிமை பெற்ற கௌதமரே இந்திரன் சூழ்ச்சியை அறியாமல் போய்விட்டார் என்றால் நீங்கள் என்ன செய்ய முடியும்? கணவனின் விருப்பத்திற்கு மனைவி அடங்கிப்போக வேண்டும் என்று இந்தச் சமுதாயமே நிர்ப்பந்திக்கும்போது குறிப்பிட்ட தினத்தன்று நடந்த அசம்பாவிதத்திற்கு நீங்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? மேலும் இதற்குக் காரணமான இந்திரன் கௌதமரைப் போன்றல்லவா வேடம் தரித்துக் கொண்டு வந்தான்! எந்த அலுவலகப் பணி கெட்டுவிடப்போகிறது என்று அந்த அகால நேரத்தில் கௌதமர் ஆற்றுக்குக் குளிக்கச் சென்றார்?

அகலிகை  :     நிறுத்து சூர்யா. அன்று ஏதோநடந்துவிட்டது என்கிறாயே? என்ன நடந்துவிட்டது? அன்று ஒன்றுமே நடக்கவில்லை. இந்திரன் வந்தான். என்னை மெதுவாய்த் தொட்டான். என் கணவன் தொடுவதற்கும் அயலார் தொடுவதற்கும் வித்தியாசம் எனக்குத் தெரியாமலா போய்விடும்?

சீதை :     இதை ஏன் நீ அப்போதே எங்களுக்குக்கூட கூறவில்லை?

அகலிகை  :     கூறியிருந்தால் மட்டும் யார் நம்பப் போகிறீர்கள். இந்த உலகில் பெண்கள் மீது பழிசுமத்துதல் எதனை விடவும் எளிதாயிற்றே. அந்தப் பணியை அன்று என் கணவரே செய்துவிட்டார்.

சூர்யா     :     நடவாத ஒன்றுக்கு மண்ணுலகில் எத்தனை வாதப் பிரதிவாதங்கள்? எதையும் வெளிப்படையாகப் பேசாமல் இருப்பதால்தான் பெண்கள் இன்னும் விடுதலை இல்லாமல் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக் கிறார்கள் அம்மா. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு எல்லாவற்றையும் மூடிமூடி மறைத்துவைத்து எந்தவொரு சிக்கலுக்கும் தீர்வு காணாமல் மனத்தில் வைத்துப் புழுங்கிக் கொண்டிருப்பது இன்னும் எத்தனைக் காலத்திற்கு? அதனால்தான் பெண்விடுதலை என்பது இதுநாள்வரை வெறுங் கனவாகவே இருந்துவருகிறது.

நளாயினி  :     நீ சொல்வது முற்றிலும் உண்மை. தவறு செய்த இந்திரனோ எந்த லஜ்ஜையும் இல்லாமல் இன்னும் அரம்பை, மேனகை, ஊர்வசியின் நடனங்களைக் கண்டு களித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இவளோ ஒன்றும் நடக்காமலேயே கணவனின் சாபத்தால் ஏற்பட்ட தன்மீதான தேவையற்ற அருவறுப்பால் எங்களிடம்கூட சகஜமாகப் பேசிப் பழகாமல் எங்களைத் தவிர்த்து வருகிறாள்.

சூர்யா     :     அது மட்டுமா? ஒரு நல்ல கணவன் எப்படி இருக்க வேண்டும்? அறியாது நடந்துவிட்ட பிழையை அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே? அகலிகை யுடன் அதற்குமேல் வாழப் பிடிக்கவில்லை என்றால் பேசாமல் விலகியிருந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு கல்லாக நிற்கவைத்து, உலகம் பலவாறு கற்பனை செய்வதற்கு இடம் கொடுத்துவிட்டார். யார் இவள்? யார் இவள்? என்று எல்லோரும் சுட்டிக் கேட்குமாறு வெட்டவெளியில் கல்லாகப் போகுமாறு சபித்தாரே? அதற்குமேல் எப்பிழையும் செய்யாமல் இந்திரனை அல்லவா கல்லாகப்போகச் சபித்திருக்க வேண்டும்? எவ்வளவு வக்கிர புத்தி! என்னவொரு ஆணாதிக்கம்? தகாத செயல் செய்துவிட்டு அந்தப்புரத்தில் கொஞ்சிக் கொண்டிருக்கும் இந்திரனின் தவறை இந்திராணி இதுநாள்வரை யாரிடமாவது சொல்லியிருப்பாரா? இன்றைய காலமாக இருந்தால் பூலோகத்தினர் பாலியல் வன்முறை என்று சொல்லி இந்திரனை நார்நாராகக் கிழித்திருப்பார்கள்.

நளாயினி  :     அது சரி. பத்திரிகையாளராகிய நீங்களும்தான் ஒரு பெண்ணுக்கு அசம்பாவிதமாக ஏதேனும் நேர்ந்து விட்டால் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் வெட்டவெளிச்சமாக்கி அப்பெண்ணைக் கூனிக்குறுக வைத்துவிடுகிறீர்கள்!

சூர்யா     :     அப் பெண்ணுக்கு யார் அநீதி இழைத்தார்களோ அவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தால்தான் நாங்கள் அதைச் செய்யவேண்டி யிருக்கிறது. அதனால்தான் நாங்கள் அதுபோன்ற செய்திகளை வெளியிடும்போது, அவர்களது உண்மைப் பெயரை மறைத்துவிட்டுக் கற்பனையாய் ஒரு புதுப்பெயரைச் சூட்டுவிடுகிறோம். குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும்தானே தாயே?

நளாயினி  :     ஆமாம் ஆமாம். நன்றாகவே தண்டனை கிடைக்கிறது. நீங்கள் தண்டனை வாங்கிக்கொடுத்த அடுத்த வாரமே சில அரசியல் தலைவர்களின் ஆதரவால் குற்றவாளிகள் வெளியே வந்துவிடு கிறார்கள். உங்கள் பத்திரிகை அதிக அளவில் விற்பனை ஆவதற்கு நன்றாகவே செய்திகளுக்குக் கண், காது, மூக்கு வைத்து விடுகிறீர்கள். பின்னர், பாதிக்கப் பட்ட அந்தப் பெண்தான் சமுதாயத்தில் இயல்பாய் வாழ முடியாமல் நடைப்பிணமாகத் திரிகிறாள்.

சூர்யா     :     . . . (மௌனம்)

நளாயினி  :     என்ன இப்பொழுது நீ அமைதியாகி விட்டாய் ... பேச்சையே காணோம்.

சூர்யா     :     இப்படி நாங்கள் செய்யவில்லை என்றால் தவறுகள் மலிந்துவிடாதா?

நளாயினி  :     இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம்? பத்திரிகைத்துறை வளராத எங்கள் காலகட்டத்தில் இருந்த பிரச்சினைகள் இன்று மாறிவிட்டனவா என்ன? இன்னும் அதிகமான தவறுகள் புதுப்புது விதமாக நடந்துகொண்டுதானே இருக்கின்றன?

சூர்யா     :     உண்மைதான் அம்மா. பத்திரிகைத்துறை வலுவான ஆயுதம் என்றாலும் அத்துறையில் இருக்கின்ற முக்கால்வாசிப்பேர் பணம் பண்ணுவதற்கான தொழிலாகவே அதைக் கருதுகிறார்களே அல்லாமல் நெஞ்சுரத்தோடு உண்மைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் முன்வைக்கத் தயாராக இல்லைதான்.

சீதை :     அப்படியானால் பெண்களுக்கு எப்போதும் நீதி கிடைக்க வாய்ப்பே இல்லையா?

சூர்யா     :     பெண்களுக்கு நீதி வேண்டுமானால் முதலில் அவர்கள் தமக்கிழைக்கப்பட்ட கொடுமையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயக்கம் காட்டக் கூடாது. தம் பொருட்டுத் தாங்களே வாதாடும் துணிச்சல் வேண்டும். தெய்வப் பிறவியாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக்கொள்ள என்ன செய்தீர்கள்? நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள். . . நீங்கள் தீக்குளித்த பிற்பாடாவது இராமனுக்குச் சந்தேகம் தீர்ந்துவிட்டதா என்ன?

சீதை :     இந்தச் சமுதாயத்தில்தானே நாம் வாழ்கிறோம், அதனால் சமுதாயத்திற்கு நாம் அஞ்சி நடக்க வேண்டாமா?

சூர்யா     :     சமுதாயத்தின் பேரால் ஆடவர் சாக்கு சொல்லித் தப்பிப்பதெல்லாம் சுத்த அயோக்கியத்தனம் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா?

அகலிகை  :     சூர்யா சொல்வதெல்லாம் உண்மைதான் சீதை. எல்லாம் ஆணின் மனத்திற்குள் தேளாய்க் கொட்டுகின்ற ஆயிரமாயிரம் சந்தேகங்கள். பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். ஓர் ஆடவன் மீது இன்னொருவனுக்கு நம்பிக்கை இல்லை.  இன்னொருவன் மீது என்பதுகூட ஒரு பொய்தான். தன் மீதே அவனுக்கு நம்பிக்கை இல்லை. தன் சபலம் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தானே திருமால் மோகினி உருவம் எடுத்து ஆடவரைத் திசை திருப்பினார். விசுவாமித்திரரின் தவத்தைக் குலைக்க நடனமாதரை அனுப்பிய வித்தைகளும் நாம் அறிந்தவை தானே! அதனால்தான் தன் மனைவி சந்தர்ப்பம் வாய்த்தால் சோரம்போய் விடுவாளோ என்ற ஒரு சந்தேகத்தை அடிமனத்தில் அடைகாத்து வைக்கிறான் ஆண்.

சீதை :     இல்லை அகல்யா. தசரதன் புதல்வனை அப்படியெல்லாம் சொல்வதற்கில்லை.

சூர்யா     :     ஆயிரம் இருந்தாலும் எந்தப் பெண்தான் தன் கணவனை விட்டுக்கொடுப்பாள்? எவனோ ஒருவன் ஏதோ சொன்னான் என்பதற்காக உங்களைத் தனியாகக் காட்டுக்குள் விட்டுவிட்டாரே உங்கள் கணவர் - அதையும் நீங்கள் நியாயப்படுத்தப் போகிறீர்களா?

சீதை :     காலம் காலமாகப் பெண்கள் துன்பப் படுகுழியில் விழவேண்டும் என்ற விதி இருக்கும்போது யார்தான் என்னசெய்ய இயலும்?

அகலிகை  :     இராமனாக இருந்தாலும் சரி; கௌதமனாக இருந்தாலும் சரி. எல்லாத் துன்பமும் அவர்களுடைய மனைவிகளுக்குத்தான்.  இதுதான் விதிக்கப்பட்டது.

சூர்யா     :     உங்கள் மூவருக்கும் அதீத சக்திகள் இருந்தாலும் ஆண்களால் இழைக்கப்பெற்ற அநீதிகளிலிருந்து உங்களைத் தற்காத்துக்கொள்ள உங்களாலும் முடிய வில்லை என்பதைப் பார்க்கும்போது பைத்தியக் காரத்தனமாகப் படவில்லையா? அதனால்தான் நான் சிரித்தேன்! பிறகு இந்த வரங்களால் பயன்தான் என்ன?

சீதை :     இது சிந்திக்கவேண்டிய விஷயம்தான். என்னதான் ஆற்றல் இருந்தாலும் சக்தியின் அவதாரமாகவே இருந்தாலும் பெண்கள் என்ற அளவில் சமுதாயம் சுமத்துகின்ற கட்டுப்பாடுகள் மட்டுமன்றி, அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளைப் பெண்கள் தமக்குத்தாமே வகுத்துக்கொண்டு வாழமுற்படும்போது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இந்த அநீதிகளிலிருந்து தப்பித்து வாழமுடிவதில்லை.

சூர்யா     :     அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளையும் வரன்முறை களையும் துணிச்சலாய்த் தூக்கி எறிந்தால் என்ன அம்மா?

அகலிகை  :     அது சாத்தியமில்லை சூர்யா! சில விஷயங்களை வாயளவில் மட்டுமே சொல்லி இன்புறலாம். ஆனால் வாழ்க்கையளவில் கொண்டுசெல்ல முடியாது.  அதுதான் நிதர்சனம்.

சூர்யா     :     ஏன் முடியாது என்கிறீர்கள்? இப்போது பூவுலகில் எத்தனையோ மாற்றங்கள் வந்துவிட்டன. பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். அவர்கள் புகாத துறையே இல்லை எனலாம். ஆண்களுக்கு நிகராக எல்லா அலுவலகங்களிலும் அவர்கள் பணி புரிகிறார்கள். விண்வெளி ஆராய்ச்சியில்கூட அவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

சீதை :     உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? கல்வி என்பது தனிமனித முயற்சி. அதனால் பெண்ணின் அறிவை மேம்படுத்தலாம். அலுவலகப் பணி என்பதும் பல நேரங்களில் தனிமனிதத் திறமையின் வெளிப்பாடாகிறது. அதனால் பெண் தன் ஆற்றலை மிளிரச் செய்யலாம். ஆனால் குடும்ப வாழ்க்கை என்று வரும்போது அது தனிமனித ஆளுமைத் திறத்தை மட்டும் சார்ந்ததல்ல. அங்குப் பெண் என்பவள் ஆணைச் சார்ந்தே வாழவேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது.

அகலிகை  :     கற்பு என்னும் கோட்பாடு இருக்கும்வரை இப் பிரச்சினைகளுக்கு முடிவே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

சூர்யா     :     சில நாடுகளில்தான் கற்பு என்பதைப் புனிதமான ஒன்றாகக் கட்டிக்காத்துக்கொண்டு இருக்கிறோம். மேலை நாடுகளில் கற்பைப் பற்றி யார் கவலைப் படுகிறார்கள் சொல்லுங்கள்?

அருந்ததி  :     அப்படிச் சொல்லமுடியாது பெண்ணே! அங்கே வேண்டுமானால் கற்பு என்ற கட்டுப்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆணின் பலாத்காரம் என்பதும் ஆண்களால் பெண்கள் ஏமாற்றப்பட்டுக் குழந்தை களைச் சுமப்பதும் அதனால் உடலிலும் வாழ்க்கை நிலைகளிலும் பாதிப்படைவதும் பெண்தான் என்பது உலகமறிந்த செய்தி. இயற்கையும் அப்படித்தான் அமைத்திருக்கிறது. இனக் கவர்ச்சியால் தூண்டப் பட்டுப் பாலுறவில் ஈடுபடும் ஆணின் பணி அரைமணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனால் அந்த நிகழ்வால் ஏற்படும் பின்விளைவுகள் அந்தப் பெண்ணின் மனஇயல்பையும் சூழலையும் பொறுத்து அவள் வாழ்நாள் முழுக்கத் தொடர்ந்து வரும்.

சூர்யா     :     உண்மைதான். நாம் தெருவிலே பிச்சைக் காரர்களைப் பார்க்கிறோமே. எத்தனைப் பெண்கள் தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளைச் சுமந்து கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அக் குழந்தைக்குக் காரணமானவனோ எங்கோ நிம்மதியாகக் கவலையில்லாமல் இருப்பான். வலியும் வேதனையும் சோதனையும் எல்லாம் பெண்களுக்குத்தாம்.

அகலிகை  :     கற்புடையவளா இல்லையா என்ற சோதனை பெண்களுக்குச் செய்யமுடியுமே அன்றி அப்படியொரு சோதனை ஆண்களுக்கு இருக்கிறதா? அதுதான் இயற்கையிலேயே அமைந்துவிட்ட ஒன்று. அதனைச்  சிறப்பு என்பதா? கொடுமை என்பதா?

சூர்யா     :     பெண்களுக்குத் திருமணமாகிவிட்டால் தாலி என்ற ஒன்றை அணிவிக்கிறோமே. அதேபோன்று ஆணுக்கு என்ன அடையாளத்தை நாம் தந்திருக்கிறோம்? அவன் திருமணமாகாதவன் என்று நினைத்துத்தானே பல பெண்கள் ஏமாந்து விடுகிறார்கள். இது எவ்வளவு சமநீதியற்ற ஏற்பாடு பாருங்கள்!

அகலிகை  :     தொன்றுதொட்டுவரும் எத்தனையோ பழக்க வழக்கங்களில் புதுமையைப் புகுத்திவிட்ட நீங்கள் இனி மணமான ஆண்களும் தாலி அணிந்துகொள்ள வேண்டும் என்று புதியமுறையைக் கட்டாயப் படுத்தலாமே?

சூர்யா     :     இது ஒரு நல்ல யோசனைதான். நீங்கள் சொல்வதுபோல் ஆணுக்கும் தாலி கட்டி விடலாம்தான். அவன் அதனைத் தன் சட்டைக்குள் மறைத்துக் கொண்டால் என்ன செய்வது? அல்லது அதை அவ்வப்போது கழற்றி வைத்துவிட்டால்?

சீதை :     வாய்ப்புக் கிடைத்தால் மனைவியையே மறைப்பவர் களுக்குத் தாலியை மறைப்பதுதானா பெரிய காரியம்?

சூர்யா     :     பெண்கள் அந்த ஒன்றினால் மட்டும் காப்பாற்றப் படுவார்கள் என்று சொல்லமுடியாது. எத்தனைப் பெண்கள் ஒருவன் மணமானவன் என்று தெரிந்தும் அவனைத் தன் வலையில் சிக்க வைக்கிறார்கள் . . .  அப்படிப்பட்ட பெண்களை என்னென்பது?

சீதை :     வாலி இறக்குந்தறுவாயில் இராமனைப் பார்த்து அடுத்தவன் பெண்ணை விரும்பக்கூடாது என்னும் குறிக்கோள் வாழ்க்கை எல்லாம் குரங்கு இனமாகிய எங்களுக்கு இல்லை. அதெல்லாம் மனிதர்களின் வழக்கம் என்று கூறினான். உண்மையில் விலங்கின வாழ்க்கையே தேவலாம் என்று தோன்றுகிறது. ஆறறிவு படைத்த மனிதர்கள் நீதி, நேர்மை என்றும் ஒருவனுக்கு ஒருத்தி என்றும் பலவித சித்தாந்தங்களைப் படைத்துக்கொண்டு தமக்குள் இழைத்துக் கொள்ளும் அநீதிகள் எத்தனை? எத்தனை?

சூர்யா     :     விலங்குகளில் எந்த ஆணும் நீ என்னை மட்டுமே காதலிக்க வேண்டும், ஆனால் நான் எத்தனைப் பெண்களோடு வேண்டுமானாலும் திரிவேன், உறவு கொள்வேன் என்று தருக்கித் திரிவதில்லை. ஆணுக்கு எத்தனை உரிமைகள் உள்ளனவோ அதே அளவு பெண் இனத்திற்கும் உண்டு. அது ஒரே ஆணை வாழ்நாள் முழுதும் சார்ந்திருக்கவேண்டிய அவசிய மில்லை.

அகலிகை  :     கேட்கும்போதே குமட்டுகிறது. அப்படியென்றால் ஒரு பெண் யாருடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்றா கூறுகிறாய்?

சூர்யா     :     நான் அப்படிச் சொல்லவில்லை அம்மா. அது என் நோக்கமும் அல்ல. ஆறறவு படைத்த மனிதன் தன் சிந்தனைத் திறத்தால் வாழ்க்கைக்கு உகந்த குறிக்கோள்களை வகுத்து இருக்கிறான். ஆனால் பெரும்பாலானவை பெண்களைக் கட்டுப்படுத்துவன வாகவே அமைந்துள்ளன. அதே அளவு ஆணைக் கட்டுப்படுத்தும் குறிக்கோள்களும் வரையறுக்கப்பட வேண்டும். அடுத்தவன் நம்மீது அத்துமீறல் நிகழ்த்தக் கூடாது என்று கூறிக்கொண்டு நாம் அடுத்தவர் மீது அத்துமீறல் நிகழ்த்தலாமா? ஆண் தன் கற்பைக் காக்கா விட்டால் பெண் தன் கற்பைக் காத்திருப்பாள் என்பது எப்படிச் சாத்தியம்?

நளாயினி  :     வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் வகுப்பது ஆடவனாக இருக்கும்போது அவனைக் கட்டுப்படுத்துகின்ற சட்டங்களை அவன் நினைத்தும் பார்ப்பானா? அப்படியே சட்டம் போட்டாலும் அதற்கு அவன் அடங்கித்தான் போவானா?

சூர்யா     :     தன் வாழ்நாளில் பிற பெண்களைக் காமப் பார்வையோடு நோக்காமல், தன் மனைவியைத் தவிர பிற பெண்களை இச்சையோடு தொடாமல், உரசாமல், தன் மனைவியைத் தவிர வேறொருத்தியிடம் உடலுறவு கொள்ளாமல் வாழும் ஆண்கள் எத்தனைப் பேர்? நூற்றுக்குப் பத்துப் பேராவது தேறுவார்களா? சந்தேகம்தான். அவர்களிலும் சிலர் இந்த அத்து மீறலுக்கு ஆசைப்பட்டாலும் சமுதாய அச்சம் உடையவர்களாகவோ அல்லது சாதகமான சூழல் அமையாதவர்களாகவோ இருக்கலாம். மற்றபடி மனத் திட்பமும் நல்லொழுக்கமும் மனைவிக்கு எந்தச் சூழலிலும் எந்தவகையிலும் துரோகமும் நினைக்காத ஆடவரை நாம் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்.

நளாயினி  :     உண்மையாகவா?

சூர்யா     :     உண்மையாகத்தான். ஆடவர்கள் தங்கள் மன சாட்சியோடு பதில்சொல்லத் துணிந்தால் ஒருவேளை இதற்கு அப்படி வாழ்பவர்கள் ஒருவரும் இல்லைஎன்ற விடை கிடைக்கலாம்.

அருந்ததி  :     மனிதனுக்கு எத்தனையோ குறிக்கோள்கள் வாய்த்திருந்தும் கேவலம் ஒரு அரைமணி நேர இன்பத்திற்காகத் தன்னையே நம்பியிருக்கும் மனையாளின் உள்ளத்தைக் கிழித்து ரணப்படுத்தி அவளை நடைப்பிணமாக ஆக்கிவிடுகின்ற ஆடவரை என்னென்பது? வேறொரு பெண்ணிடம் மட்டும், அவன் சொர்க்கத்தையா கண்டுவிடப் போகிறான். அதற்குப் பின் அவன் எந்த உயரத்தை எட்டிவிடப் போகிறான்? கேவலம் அழியும் உடலுக்காக அழியாத ஆன்மாவைச் சிதைத்துவிடும் அவன் செயலை என்னென்பது?

சீதை :     இத்தகைய செய்திகளை எவ்வளவு நேரம் நாம் விவாதித்தாலும் விடைகிடைக்கப் போவதில்லை ஆண்களும் ஒரு கோட்டுக்குள் அடங்காத வரை . . .

அனைவரும்     :     ஆமாம். ஆமாம்.

நளாயினி  :     சூர்யா. நீ சொல்வதையெல்லாம் கேட்டதும் ஆணாதிக்கக் கட்டுக்குள் அடங்கலாகாது என்ற எண்ணம் வலுக்கவே செய்கிறது. ஆனால் . . . ஆனால்  . . . இதோ நேரம் கடந்துவிட்டது. எங்கள் குடிலுக்குத் திரும்ப நேரமாகிவிட்டது என்று உள்ளுணர்வு எச்சரிக்கிறது. தாமதமானால் வீட்டில் என்னென்ன வினாக்கள் எழும்புமோ என்று மனம் பதைபதைக்கிறது. மீண்டும் எங்கள் மனம் கட்டுப்பாடுகளுக்குள்ளேயே சென்று ஒடுங்குகிறது.

அகலிகை  :     உண்மைதான் சூர்யா. நீ கூறிய செய்திகளை நாங்கள் இனி அசைபோடுகிறோம். கூடிய விரைவில் கூண்டுகளை விட்டுப் பறக்க இயலுமா என்று முயற்சித்துப் பார்க்கிறோம். ஆனால் இவை எல்லாம் ஒரேநாளில் சாத்தியமாகிவிடும் என்று எங்களால் உறுதிதர முடியாது. காலம்தான் கனியவேண்டும். பொறுத்திரு.

அனைவரும்     :     ஆமாம். (அனைவரும் ஆமோதிக்கின்றனர்)

அனைவரும்     :     (சூர்யாவைப் பார்த்து) நாங்கள் புறப்படு கிறோம் சூர்யா. மீண்டும் சந்திப்போம்.

சூர்யா     :     மகிழ்ச்சி அம்மையீர். மறுமுறை உங்களையெல்லாம் சந்திக்கும்போது சிறு மாற்றத்தையாவது உங்களிட மிருந்து எதிர்பார்க்கிறேன். போய் வாருங்கள்.

                (அனைவரும் அங்கிருந்து செல்கின்றனர். அவர்கள் சென்ற திசையையே சூர்யா பார்த்துக் கொண்டிருக்கிறாள்)

#

No comments:

Post a Comment