Wednesday 13 April 2022

ஆண்மை!

 வேளைதொறும்  சமைக்கின்ற உணவு தன்னில் 

 வேட்கையுடன் குறைகளையே காணு கின்றீர்  

நாளையிலே மூவேளை வேறு வேறாய் 

நாள்தோறும் புது விதமாய் வேண்டு கின்றீர் 

தேளைப்போல் நாவளைத்துக் கொட்டு கின்றீர் 

தேம்புகிறார் வனிதையர்கள் திகைப்புக் கொண்டே 

பாளைமுகிழ் நகைமுழுதாய்க் களவு செய்ய 

 படித்தீரோ எப்பள்ளி? தீயிடு வீரே!


காலைமுதல் பணியாளாய் உழலு கின்றாள் 

பதறாதோ உம்மனந்தான் கல்லோ? சொல்வீர்!

ஆலைக்கும் சிலநேரம் ஓய்வு உண்டு 

அவளுக்குக் கனவினிலும் பணிகள் உண்டு 

சேலைக்குக் கிடைத்திட்ட சாபம் என்னே? 

வேட்டிகளின் அதட்டலுக்குப் பூட்டும் எங்கே? 

வேலைக்கு ஆள்தேடி வீட்டில் வைத்தால் 

வெகுமானம் தந்திடவும் வருவாய் உண்டோ? 


வாதேதும் செய்யாமல் வாயைப் பூட்டி

வார்த்தைக்கு மறுவார்த்தை தலையை ஆட்டி 

சூதேதும் கண்டாலும் சுருங்கா மல்தான் 

சுகமிரவில் தருவதற்கு மனத்தை நீட்டி 

தோதேதும் இல்லாத வறுமை தன்னில் 

தொல்லையெதும் செவியிலிடா வார்த்தை கூட்டி

ஏதேது வைதாலும் எல்லை தாண்டா 

எளியாராய் மனையிருந்தால் கற்பென் பீரே!


மானத்தை மறைக்கின்ற ஆடை தன்னை 

மதம்பிடித்து உரித்தல்வன் முறையென் பீர்கள் 

ஈனமின்றி எப்போதும் மனைவி தன்னை 

இழித்துரைத்தல் வன்முறைதான் என்பேன் நானும் 

வானத்து எல்லையதும் குறுகிப் போகும் 

வார்த்தைகளால் புண்படுத்தும் உம்சொல் சேர்த்தால் 

ஆனமட்டும் மனைவியவள் மனத்தைக் கண்டு 

அவற்குதவி செய்திடுங்கள் அதுவே ஆண்மை!

No comments:

Post a Comment