Sunday, 5 February 2017

பாரதியாரின் இறைக் கோட்பாடு


பாரதியார் அனைத்து மதங்களையும் சார்ந்த கடவுளர் மீது பாடல்கள் இயற்றித் தமது சமரச உணர்வை வெளிப்படுத்தியதுடன் அனைவரும் ஒருமித்த சமரச எண்ணம் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் தம் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளமையை மையமிட்டு அமைகிறது இக்கட்டுரை.
பல்சமய வழிபாடு
      பாரதியார் கடவுளர் பலரையும் வணங்கி வழிபட்டுப் பாக்கள் வடித்திருக்கிறார். விநாயகர்சரஸ்வதிதிருமகள்காளிபராசக்திமாரியம்மாஉமைமுருகன்கிருஷ்ணன்சூரியன்சந்திரன்தீ,   புத்தர்அல்லா (அல்லா), ஏசு (யேசு கிறிஸ்து) என்று சைவம், வைணவம், பௌத்தம், கிறித்தவம், இசுலாம் எனப் பல சமயங்களைச் சார்ந்த கடவுளர் மீது பாடல்களைப் பாடித் துதிக்கிறார் பாரதியார்.
ò       விநாயகர் - விநாயகர் நான்மணி மாலை.
ò       சரஸ்வதி - ஸரஸ்வதி ஸ்தோத்திரம். ஸரஸ்வதி தேவியின் புகழ், மூன்று காதல் : ஸரஸ்வதி காதல்.
ò       திருமகள் - லஷ்மி தேவி சரண் புகுதல், லஷ்மி பிரார்த்தனை, ஸ்ரீதேவி ஸ்துதி, நவராத்திரிப் பாட்டு, மூன்று காதல் : லஷ்மி காதல்.
ò       காளி - மூன்று காதல் : காளி காதல், காளி ஸ்தோத்திரம், காளிப் பாட்டு, ஹே காளீ, மகா காளியின் புகழ், யோக சித்தி வரங் கேட்டல், காளிக்கு விண்ணப்பம்.
ò       பராசக்தி - காணி நிலம், மஹாசக்தி வெண்பா, ஓம் சக்தி, கேட்பன, பராசக்தி, போற்றி அகவல், சக்திக் கூத்து, சக்தி, வைய முழுதும், சக்தி விளக்கம், சக்திக்கு ஆத்ம ஸமர்ப்பணம், சக்தி திருப்புகழ், மஹாசக்தி பஞ்சகம், மஹாசக்தி வாழ்த்து, சிவசக்தி புகழ், ஊழிக் கூத்து, மஹா சக்தி, மஹாசக்திக்கு விண்ணப்பம்.
ò       மாரியம்மா - முத்துமாரி, தேச முத்துமாரி.
ò       உமை - கோமதி மஹிமை.
ò       முருகன் - முருகன் பாட்டு, முருகக் கடவுள் மீது கிளித் தூது, வேலன் பாட்டு).
ò       கிருஷ்ணன் - ஆர்ய தரிசனம் : கிருஷ்ணார்ஜுன தரிசனம், கண்ணன் பிறப்பு, கண்ணன் வரவு, கண்ணம்மா : அங்க வர்ணனை, கண்ணம்மா 1,2,3, கோவிந்தன் பாட்டு, நந்தலாலா.
ò       சூரியன் ஸ+ர்ய தர்சனம், ஞாயிறு +ர்ய ஸ்துதி.
ò       சந்திரன் -  வெண்ணிலாவே, ஸோமதேவன் புகழ்.
ò       தீ - அக்நி தோமம், அக்னி பகவான் - யாகப் பாட்டு).
ò       புத்தர் - ஆர்ய தரிசனம் : புத்த தரிசனம்.
ò       அல்லா - அல்லா
ò       ஏசு - யேசு கிறிஸ்து )
அனைத்தும் கடவுள்
இறைவன் அனைத்துப் பொருள்களிலும் இருக்கிறான் என்ற சயமவாதிகளின் கொள்கையை,
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவு ளென்றார்
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்
(பாரதி அறுபத்தாறு 217)
என்று எடுத்துக்கூறும் பாரதியார் தாமும் அக்கருத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்.
சொல்லடா ஹரியென்ற கடவு ளெங்கே
சொல்லென்று ஹிரணியன்தா னுறுமிக் கேட்க
நல்லதொரு மகன்சொல்வான் தூணி லுள்ளான்
நாரா யணன்துரும்பி லுள்ளான் என்றான்
என்று இரணியன் - பிரகலாதன் புராணக் கதையை எடுத்துரைக்கும் பாரதியார் தொடர்ந்து,
வல்லபெருங் கடவுளிலா வணுவொன் றில்லை
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை
அல்லலில்லை அல்லலில்லை அல்ல லில்லை
அனைத்துமே தெய்வமென்றா லல்ல லுண்டோ?
(பாரதி அறுபத்தாறு 220)
என்று உலகப் பொருள்கள் அனைத்தையும் தெய்வமென்று ஏற்றுக்கொண்டுவிட்டால் மக்களுக்கு மதத்தின் பெயரால் துன்பங்கள் ஏற்படாது என்பதை வகுத்துரைக்கிறார்.
ஜடப்பொருட்களும் தெய்வம்
      ஐம்பூதங்களையும் உயிரல்லாத பிற பொருட்களையும் இறைவனின் திருவடிவாகக் காண்கிறார் பாரதியார்.
வெயிலளிக்கு மிரவி மதி விண்மீன் மேகம்
மேலுமிங்கு பலபலவாந் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்க ளனைத்துந் தெய்வம்;
                              (பாரதி அறுபத்தாறு 221)
கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டந் தெய்வம்
மீளத்தா னிதைத்தெளிவா விரித்துச் சொல்வேன்
விண்மட்டுங் கடவுளன்று மண்ணு மஃதே
சுத்தஅறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்
சுத்தமண்ணும் சிவமென்றே யுரைக்கும் வேதம்
(பாரதி அறுபத்தாறு 220)
என்னும் பகுதிகளில் சடத்துவப் பொருள்களிலும் இறைவனின் இருப்பை எடுத்துரைக்கிறார் பாரதியார். மேலும்,
காடு மலை அருவி ஆறு
கடல் நிலம் நீர் காற்று
தீ வான்
ஞாயிறு திங்கள் வானத்துச் சுடர்கள் எல்லாம்
தெய்வங்கள் (காட்சி 3 : 424)
என்று வசன கவிதையிலும் ஐம்பூதங்கள் தெய்வமாவதைப் புலப்படுத்துகிறார்.
அனைத்தையுந் தேவர்க் காக்கி அறத்தொழில் செய்யு மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்
(ஸ{ர்ய ஸ்தோமம் - ஞானபாநு 110)
என்னும் பகுதியில் நெருப்பைத் தெய்வமாகச் சுட்டுகிறார் பாரதியார்.
அற்பமும் இறையே
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
பயிலுயிர் வகைமட்டு மின்றி யிங்கு
பார்க்கின்ற பொருளெல்லாந் தெய்வங் கண்டீர்
(பாரதி அறுபத்தாறு 220)
என்று அனைத்து உயிர்களையும் உயிரல்லாத பொருட்களையும் தெய்வமாக உரைக்கிறார் பாரதியார். மேலும், உலகத்தில் காணப்படுகின்ற அற்பமான பொருட்களையும் கடவுள் என்றே கூறுகிறார் பாரதியார்.
கேளப்பா சீடனே கழுதை யொன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கர சங்கரவென்றே பணிதல் வேண்டும்
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
(பாரதி அறுபத்தாறு 220)
என்னும் பகுதியில் மக்களால் துச்சமாகக் கருதப்படும் கழுதை, பன்றி முதலியவற்றையும் மக்களுக்குத் தீமையை உண்டாக்கும் தேளையும் அருவருப்பை ஏற்படுத்தும் மலம். குப்பை போன்றவற்றையும்கூட கடவுளின் ரூபமாகக் கூறி அவற்றையும் வணங்கவேண்டும் என்று தத்துவ நிலையில் விளக்கிக் கூறுகிறார்.
அனைவரும் இறையே
      உலகிலுள்ள அனைத்தும் தெய்வமென்றால் தீண்டாமை காரணமாக இழிவுபடுத்தப்படும் புலையர்களும் தெய்வமாகவே மதிக்கப்பட வேண்டும் என்பதை,
வித்தகனாங் குருசிவமென் றுரைத்தார் மேலோர்
வித்தையிலாப் புலையனுமஃ தென்னும் வேதம்
உயிர்களெலாந் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை
(பாரதி அறுபத்தாறு 220)
என்று முழங்கித் தீண்டாமையைக் களைவதற்குரிய வழிவகுக்கிறார் பாரதியார்.
பெண் தெய்வம்
      பெண்ணைத் தெய்வமாகக் கருதுவது இந்திய மரபு. அதனையே,
பித்தரே அனைத்துயிருங் கடவு ளென்று
பேசுவது மெய்யானாற் பெண்டி ரென்றும்
நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்து வீரே
(பாரதி அறுபத்தாறு 220)
என்று கூறும் பாரதியார் ஒருபடி மேலாக பெண்ணாகிய மனைவியைத் தெய்வமாகக் கருதவேண்டும் என்பதை,
மண்ணுக்குள் எவ்வுயிருந் தெய்வ மென்றால்
மனையாளுந் தெய்வமன்றோ? மதிகெட் டீரே
(பாரதி அறுபத்தாறு 227)
என்று கூறுகிறார்.
அழகே தெய்வம்
      தெய்வத்தைப் பலவாறு விளக்க நினைத்த பாரதியார் அழகினைத் தெய்வமாக எடுத்துரைக்கிறார்.
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ அடடா
அழகென்னுந் தெய்வந்தான் அதுவென்றே யறிந்தேன்
(அழகுத் தெய்வம் 103)
என்னும் பாடலில் அழகினை இளவயது மங்கையாக உருவப்படுத்தும் பாரதியார் அதனையே தெய்வம் என்றும் விளக்குகிறார்.
அறிவே தெய்வம்
      வெவ்வேறு தெய்வங்களை வணங்கும் மக்களை அறிவிலிகள் என்று கூறும் பாரதியார் அறிவையே தெய்வம் என்று அறிவுறுத்துகிறார்.
ஆயிரந் தெய்வங்க ளுண்டென்று தேடி
அலையு மறிவிலிகாள் - பல்
லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள் - எத
னூடுநின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? – பல்
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ? (அறிவே தெய்வம் 101-102)
என்னும் பகுதி சிறுதெய்வ வழிபாட்டை இடித்துரைத்து அறிவைத் தெய்வம் என்று காட்டி அத்தகைய அறிவை அனைவரும் பெறவேண்டும் என்று தூண்டுகிறது. இப் பாடலில் உருவ வழிபாட்டைக் கடிந்துரைக்கும் சித்தர்களின் மனப்பாங்கு வெளிப்படக் காணலாம்.
புதுமைத் தெய்வங்கள்
      மனம் தெய்வம் சித்தம் தெய்வம் உயிர் தெய்வம்
(வசன கவிதை, காட்சி 3 : 424)
      உணர்வு தெய்வம் (வசன கவிதை, காட்சி 2 : 424)
என்னும் பகுதிகள் மனம், சித்தம், உயிர் ஆகியவற்றையும் தெய்வமாகக் காட்டுகின்றன.
மேலும் பாரதியார் தமது எழுத்தையும் எழுது கோலையும் தெய்வத்தின் உருவாகவே காணுகிறார்.
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்துந் தெய்வம்
(பாரதி அறுபத்தாறு 221)
என்று கூறுவதுடன்,
நீயே யுயிரெனத் தெய்வமும் நீயென
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்
(கவிதா தேவி அருள் வேண்டல் 393)
என்று கவிதையையும் தெய்வமாகக் கருதி வேண்டுவதையும் காணலாம்.
தானே தெய்வம்
    ஒவ்வொருவரும் தம்மையும் தெய்வமாகவே கருதலாம் என்பதை,
இவ்வுலகம் ஒன்று
ஆண் பெண் மனிதர் தேவர்
பாம்பு பறவை காற்று கடல்
உயிர் இறப்பு இவை யனைத்தும் ஒன்றே
ஞாயிறு வீட்டுச் சுவர் ஈ மலை யருவி
குழல் கோமேதகம் இவ் வனைத்தும் ஒன்றே
இன்பம் துன்பம் பாட்டு
வண்ணான் குருவி
மின்னல் பருத்தி
இஃதெல்லாம் ஒன்று
மூடன் புலவன்
இரும்பு வெட்டுக்கிளி
இவை ஒரு பொருள்
வேதம் கடல்மீன் புயற்காற்று மல்லிகை மலர்
இவை ஒருபொருளின் பலதோற்றம்
உள்ள தெல்லாம் ஒரே பொருள் ஒன்று
இந்த ஒன்றின் பெயர் 'தான்"
தானே தெய்வம் (காட்சி 4 : 424)
என்னும் வசனகவிதை மூலமாகப் புலப்படுத்துகிறார்.
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே
தத்வமஸி தத்வமஸி நீயே யஃதாம்
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை
சாமிநீ அம்மாயை தன்னை நீக்கி
ஸதாகாலம் சிவோ ஹமென்று ஸாதிப் பாயே
(பாரதி அறுபத்தாறு 223)
என்னும் பகுதியும் ஒவ்வொருவரும் தம்மையே தெய்வமாகக் கருதவேண்டும் என்பதைச் சுட்டுகிறது.
மத ஒருமை
      அனைத்து மதங்களும் ஒன்றே என்பதை,
ஒருமொழி ஓம்நமச்சி வாய வென்பர்
ஹரிஹரியென் றிடினு மஃதே ராமராம
சிவசிவவென் றிட்டாலும் அஃதே யாகும்
தெரிவுறவே ஓம்சக்தி யென்று மேலோர்
ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்
ஸாரமுள்ள பொருளினைநான் சொல்லி விட்டேன்
சஞ்சலங்க ளினிவேண்டா சரதந் தெய்வம்
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போது மருளைமனத் திசைத்துக் கொள்வாய்
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்
பூமியிலே கண்டமைந்த மதங்கள் கோடி
புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுபதம் போற்று மார்க்கம்
ஸநாதனமாம் ஹிந்துமதம் இஸ்லாம் யூதம்
நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்
நல்ல கண்பூசி மத முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள்பல வுளவா மன்றே
யாவினுக்கு முட்புதைந்த கருந்திங் கொன்றே
பூமியிலே வழங்கிவரு மதத்துக் கெல்லாம்
பொருளினைநா மிங்கெடுத்துப் புகலக் கேளாய்
(பாரதி அறுபத்தாறு 222-23)
என்னும் பகுதியில் பாரதியார் அறிவுறுத்துகிறார்.
      மேற்கூறியவற்றால் சமயப் பொதுமை காணும் பாரதியார் உலகிலுள்ள அனைத்துப் பொருள்களையும் தெய்வமாகவே போற்றும் இறைக்கோட்பாட்டை வற்புறுத்துவதைக் காணமுடிகிறது. இத் தன்மையால் மக்களிடையே உள்ள வேற்றுமைகளை எல்லாம் அகற்றி அனைவரையும் சகோதரத்துவம் மிக்கவர்களாக ஆக்க முடியும் என்ற நம்பிக்கையை பாரதியார் வெளிப்படுத்துவதையும் அறியமுடிகிறது.
பயன்நூல் :
ச. மெய்யப்பன் (பதி.) பாரதியார் கவிதைகள், 10ஆம் பதி. 2000; சிதம்பரம் : தென்றல் நிலையம், 2010.


காண்க : ஔவை இரா நிர்மலா, சமயச் சாரலில், காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2016, பக்.183-192.   

கால ஓவியன்




காலமே!
நீ ஒப்பற்ற ஓவியன்!

குறும்புக் குழந்தையைக் குமரியாக்கினாய் - அவள்
கூந்தலில் அலைகளை நீயே எழுப்பினாய்
காண்போர் இமைக்கா விழிகளை வரைந்தாய்
கிளர்ச்சி யூட்டும் தோள்களை அமைத்தாய்
நடையில் நளின நாட்டியம் சேர்த்தாய்
இடையில் இன்மை அழகினைப் புகுத்தினாய்
உதட்டில் கனிச்சுவை இனிமை குழைத்தாய்
ஆமாம். . .
அந்த ஓவியத்தை
நன்றாகத்தானே வரைந்து கொண்டிருந்தாய்!
காலமே!
நீ ஒப்பற்ற ஓவியன்!
ஆனாலும் குணமாறாட்டமுள்ளவன் நீ!
நீ பார்த்துப்பார்த்து வரைந்த ஓவியத்தை
ஏன் இப்படிப் பாழ்படுத்தி விட்டாய்?
கூந்தல் கருமையில் வெண்மையை விரவினாய்
அடர்த்தியைக் குறைத்துக் குட்டை ஆக்கினாய்
குதிரை வாலினை எலிவா லாக்கினாய்
கண்களின் வெண்மையில் பழுப்பினைக் கலந்தாய்
கண்களைச் சுற்றிக் கருவளையம் தீட்டினாய்
வெண்பல் வரிசையில் வெற்றிடம் வரைந்தாய்
தோள்க ளிரண்டையும் சரிந்திடச் செய்தாய்
ஓடி ஆடிய கால்களை நீதான்
முடக்கி மூலையில் கிடந்திடச் செய்தாய்
மெத்தென இருந்த மெல்லிய பாதத்தில்
வெடிப்புகள் கிறுக்கித் தடித்திடச் செய்தாய்
இருபது நிலவுகள் ஒளிர்ந்திட்ட நகங்களில்
சொத்தையும் புத்தையும் சேர்த்துக் கலந்தாய்
வழுவழு தோலைச் சுருக்கியே திரைத்தாய்
உயிர்தந்த நீயே உயிரினைப் பிரித்தாய்
அத்துடன் உன்பணி முற்றுப் பெற்றதாய்ச்
சித்திரம் சிதைத்துச் சிதையினில் எறிந்தாய்
காலமே!
நீ ஒப்பற்ற ஓவியன்தான்
முற்றிலும் உன்னைக் குணப்படுத் திடுகையில்
காலமே!

நீ ஒப்பற்ற ஓவியன்தான்!

(புதுவை அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதைநூலுக்குரிய பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் கூடிய கம்பன்புகழ் இலக்கிய விருது பெற்ற கவிஞர் ஔவை நிர்மலாவின் பெண்களின் கதை என்னும் கவிதை நூலிலிருந்து - (கவிஞர் ஔவை நிர்மலா, பெண்களின் கதை, காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2013, விலை ரூ80/-)

Saturday, 4 February 2017

வீரமாமுனிவரின் புலமைத்திறம்


தமிழ் வளர்த்த மேனாட்டுக் கிறித்தவர்களில் சிறப்பிடம் பெறுபவர் தமிழ் உரைநடையின் தந்தை வீரமாமுனிவர். அவருடைய பிறப்பு, இளமைக்காலம், தமிழ்ப் பணி, சமயப் பணி முதலான பல செய்திகளும் பலரால் அடிக்கடி விரித்தும் தொகுத்தும் வகுத்தும் கூறப்பெற்று வருவதால் கூறியது கூறலைத் தவிர்க்கும் பொருட்டு அதுபோன்ற செய்திகள் இக்கட்டுரையில் தவிர்க்கப் பெற்றுள்ளன.
தமிழ் இலக்கிய வரலாற்றின் மைல் கல்
முதல் இலக்கண நூல் இயற்றிய தொல்காப்பியர், அற இலக்கிய வகையைத் தொடங்கிவைத்த திருவள்ளுவர், முதல் தமிழ்க் காப்பியம் இயற்றிய இளங்கோவடிகள், விருத்தப்பாவினைக் காப்பிய வடிவமாக்கிய திருத்தக்கதேவர், மடலைச் சிற்றிலக்கியமாக்கிய திருமங்கையாழ்வார், ஆத்திசூடியை அறிமுகப்படுத்திய அவ்வையார், இன்னும் பிற சிற்றிலக்கிய வகைகளை அறிமுகப்படுத்தியவர்கள், சிலேடைப் புலவர் காளமேகம், சந்தங்களுக்குச் சொந்தக்காரரான அருணகிரிநாதர், முதல் நாவல் இயற்றிய வேதநாயகம் பிள்ளை, வசன கவிதையைத் தோற்றுவித்த பாரதியார் முதலானோர் தமிழ் இலக்கிய வரலாற்றின் மைல் கற்களாகத் திகழ்வதனைத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறியும். அவ்வகையில் வீரமாமுனிவரும் முதல் அகராதியை ஆக்கித் தந்தும் பரமார்த்த குரு கதை என்னும் உரைநடையிலமைந்த கதைகளைப் படைத்தும் தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு மைல் கல்லாகத் திகழ்கிறார்.
இலக்கண, இலக்கியப் புலமை
கற்பனை ஒருசிறிதும் கலவாத இலக்கணம், கற்பனை இன்றி நடைபெறவியலாத இலக்கியம் என்னும் வேறுபட்ட இருதுறைகளிலும் ஒருவரே புலமை பெற்றிருத்தல் அரிதாகும். அவ்வகையில் செறிவும் உண்மையும் கைகோர்க்கின்ற இலக்கணத் துறைக்குத் தொன்னூல் விளக்கத்தையும் கற்பனையும் நெகிழ்வும் பின்னிப் பிணைந்து செல்லும் இலக்கியத் துறைக்குத் தேம்பாவணியையும் அளித்துத் தம் புலமையையும் திறனையும் ஒருசேரப் புலப்படுத்தியுள்ளார் வீரமாமுனிவர்.
நடைத் தெரிவு
            செய்யுள், உரைநடை என்னும் வேறுபட்ட இரு வடிவங்களையும் ஒருங்கே கைவரப் பெறுதல் என்பது படைப்பாளரின் தனித்திறமையை எடுத்துக்காட்டும். அவ் வகையில் வீரமாமுனிவர் தம் படைப்புகளில் செய்யுள், உரைநடை என்னும் இருவேறுபட்ட நடைகளைச் சிறப்பாகக் கையாண்டிருப்பதுடன் இவை இரண்டினும் வேறுபட்ட வடிவுடைய அகராதிக் கலையிலும் ஆழங்கால் பட்டிருத்தல் அவரது புலமையைப் பறைசாற்றும். மேலும் பொருளாலும் நடையாலும் வேறுபடும் கடித இலக்கியமும் அவரால் படைக்கப்பட்டிருத்தல் குறிப்பிடத்தக்கது.
இலக்கிய வகைமைத் தெரிவு
காப்பியம் (தேம்பாவணி) என்னும் அளவில் பெரிய படைப்பை அளித்ததுடன் அளவால் சிறிய அம்மானை (கித்தேரியம்மாள் அம்மானை), கலம்பகம் (திருக்காவலூர்க் கலம்பகம்), மாலை (அடைக்கல மாலை), அந்தாதி (அன்னை அழுங்கல் அந்தாதி), பதிகம் (கருணாம்பரப் பதிகம்) முதலிய சிற்றிலக்கிய வகைகளையும் தெரிவு செய்துள்ளார்.
மொழி ஆளுமை
ஒருவரே இரண்டு மொழிகளில் படைப்புகளைச் சிறப்பாக அளித்தல் என்பது கடினமான செயலாகும். பல மொழிகளை அறிந்த படைப்பாளர்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு மொழியினைத் தம் படைப்பு மொழியாக அமைத்துக் கொள்வதைக் காண்கிறோம். அவ் வகையில் காணும்போது வீரமாமுனிவர் தம் தாய்மொழியான இலத்தீன் மொழி, இடையில் கற்றுக்கொண்ட தமிழ்மொழி ஆகிய இரண்டிலுமே பல படைப்புகளை அளித்துள்ளமை அவர்தம் மொழி ஆளுமையைப் புலப்படுத்தும். ஒரே மொழியில் படைப்பைப் படைத்தளித்தல் என்பதோடு ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குப் பெயர்த்தலாகிய மொழிபெயர்ப்பு என்னும் செயலை ஒப்பிடும்போது பின்னது அதிகச் சவால் நிறைந்த ஒன்று என்பதனை மொழி வல்லுநர் அனைவரும் ஏற்பர். அந்த வகையிலும் வீரமாமுனிவர் இருதிறப்பட்ட பணிகளையும் சிறப்பாகச் செய்திருத்தல் அவருடைய மொழி ஆளுமையைத் தெளிவுபடுத்துகிறது.
செறிவும் எளிமையும்
செறிவும் திட்பமும் கொண்ட கற்றோர்க்கு மட்டுமே புலனாகும் உயர்ந்த நடையில் எழுதப் புகுவோர் தம் புலமை நடை என்னும் தரத்திலிருந்து இறங்கி எளிய பாமர நடையைக் கைக்கொள்ளுதல் கடினமான செயலாகும். மெத்தப் படித்த பலர் கற்றறிந்தார் அவையில் பொருளுணர்த்தும் திறன் வாய்க்கப் பெற்றிருந்தும் சாமானியர் நிறைந்த அவையில் பொருளுணர்த்தும் திறமின்றித் தோற்றுப்போதல் கண்கூடு.
அவ்வகையில் நோக்கும்போது புலமை நடை செறிந்த இலக்கியங்களைப் படைத்துள்ள வீரமாமுனிவர் பாமர மக்களும் குழந்தைகளும் எளிதில் புரிந்துகொள்ளும் நடையில் பரமார்த்த குரு கதையைப் படைத்து இருவேறுபட்ட நடை ஆளுமையைப் புலப்படுத்தியுள்ளார்.
முரண் இல் முரண்
வீரமாமுனிவர் வாழ்க்கையும் முரண்பட்ட இரண்டு நெறிகளை ஒருங்கிணைப்பதாக அமைந்து சிறந்தது. வாழ்க்கை நெறிமுறை என்பது பண்பாடு, சமயம் என்னும் இரண்டின் பிரிக்க முடியாத, காலங்காலமாக உருவாக்கப் பெற்றுவந்த கூட்டுக் கலவையால் அமைக்கப் பெறுவது. ஒவ்வொரு மனிதனும் அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவன் தோன்றிய சமுதாயத்திற்குக் கட்டுப்பட்டு அவ் வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிக்கிறான்.
உரோமானிய பண்பாட்டுடன் கூடிய கிறித்தவ சமய வாழ்க்கை நெறியில் முப்பதாண்டுகள் திளைத்த வீரமாமுனிவர் அடுத்த முப்பத்தேழு ஆண்டுகளைத் தமிழ்ப் பண்பாட்டோடு இணைத்துக் கொண்டார். ஒரு கிறித்தவ மதகுரு என்ற நிலையில் இந்து சமயத்தோடு பின்னிப் பிணைந்த தமிழ்ப் பண்பாட்டைக் கைக்கொண்டமை வியப்பளிக்கும் செய்தியாகும்.
மூலமும் உரையும்
தமது முப்பதாவது வயதில் தமிழைக் கற்றுக்கொண்டு, தாய்மொழியாகத் தமிழைக் கொண்டிராத ஒருவரால் படைக்கப்பெற்ற நூல் என்று இனங்காண இயலாத வகையில் பல இலக்கிய நூல்களைப் படைத்துள்ளமை வீரமாமுனிவருடைய ஆழங்கால்பட்ட தமிழ்ப் புலமையைக் காட்டுகிறது.
மேனாட்டுக் கிறித்தவர்கள் பலரும் வீரமாமுனிவர் போன்றே தமது இளமைக் காலம் கழிந்த நிலையில் புதிதாகத் தமிழைக் கற்றுக்கொண்டு தமிழில் பல நூல்களைப் படைத்துள்ளனர் என்பதும் மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளனர் என்பதும் தமிழ் இலக்கிய வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இருப்பினும் அவர்கள் அனைவரைக் காட்டிலும் இவரது புலமையும் திறனும் விஞ்சி நிற்கின்றன என்பது ஆய்வு முடிவு. இதனை அறிய வேண்டுமாயின் நமக்குக் கிடைக்கும் அளவுகோலாக அமைவது அவர் படைத்த தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலாகும்.
தொன்னூல் விளக்கத்தின் நூற்பாக்களைத் தனியே கண்ணுறும் தமிழ்ப்புலவர், அவை தொல்காப்பிய நூற்பாக்களோ என ஐயுறுவர் என்பது திண்ணம். அந்த அளவிற்கு வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல் செறிவும் திட்பமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அவர் புலமை அத்துடன் நின்றுவிடவில்லை. தம் இலக்கண நூலுக்கு அவரே வகுத்துள்ள உரை இடைக்காலத்தில் தமிழில் தோன்றிய உரையாசிரியர்களின் உரைத்திறனோடு ஒப்பிடும் அளவிற்கு அமைந்திருக்கக் காணலாம். அவர் உரையில் சேனாவரையர் நடையின் தாக்கத்தை இனங்காண முடிகிறது. ஒரு நூற்பாவிற்கு (நூ.எண். 315) வீரமாமுனிவர் கொடுத்த விளக்கம் ஐந்து பக்கங்களில் விரிகிறது.
இவ்வாறு ஒருவரே மூலநூலாசிரியராகவும் சிறந்த உரையாசிரியராகவும் அமைந்திருக்கும் பெற்றிக்கு வீரமாமுனிவர் சான்றாகிறார்.
நுண்மாண் நுழைபுலம்
தொன்னூல் விளக்கத்தின் உரையைக் கூர்ந்து பயிலுவார் அவர் பெற்றிருந்த தமிழ் இலக்கிய நூல்களின் புலமையையும் தமிழ் இலக்கண நூல்களின் புலமையையும் நன்கு அறியக்கூடும். அது மட்டுமன்றி அவருடைய காலகட்டத்தில் அருகிய வழக்குகளாக ஆகிவிட்ட மொழிப் புலப்பாட்டு உத்திகளையும் எடுத்துக்காட்டுமிடத்து இலக்கிய இலக்கண நூல்களை மானிடவியல் பார்வையிலும் வரலாற்று அடிப்படையிலும் அவர் நோக்கிய திறம் புலனாகிறது.
மேலும் அவர் காலத்து வழக்குகளையும் புலப்படுத்தும் தன்மை அவருடைய சமுதாயவியல், நாட்டுப்புற வழக்காற்றியல் பார்வையையும் நாம் தெள்ளிதின் அறிந்துகொள்ள வழிவகுக்கிறது.
இவ்வாறு வேறுபட்ட துறைகள் : இலக்கணம் - இலக்கியம்; வேறுபட்ட வடிவம் : செய்யுள் - உரைநடைவேறுபட்ட புலமை : ஒருமொழிப் படைப்பு - மொழிபெயர்ப்புவேறுபட்ட நடை : புலமை நடை - எளிய நடை என்னும் எதிர்எதிர் முனைகளில் ஒரே மாதிரியான ஆற்றல் படைத்துள்ளமையுடன் இரு துருவங்கள் எனச் சொல்லத்தக்க வேறுபட்ட பண்பாடுகளையும் இணைத்துத் தம் வாழ்க்கை நெறியாக அமைத்துக் கொண்டமை மனித சமுதாயத்திற்கு நலம்பயக்கும் சிந்தனையாகும்.
வீரமாமுனிவர் தம் சமயத்தைச் சார்ந்தவர் என்று கிறித்தவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளும் அதே வேளையில் அவருடைய வாழ்க்கை நெறியைப் பின்பற்றுவதுடன் அவருடைய இலக்கண இலக்கியப் படைப்புகளை ஆர்வத்துடன் கற்றுணர்ந்து என்றும் பயனளிக்கின்ற வகையில் தாமும் சிறந்த நூல்களைத் தம் தாய்மொழியாம் தமிழுக்கு ஆக்கித்தர வேண்டும்.
 காண்க : ஔவை இரா நிர்மலா, சமயச் சாரலில், காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2016, பக்.169-174.  



கற்பெனப்படுவது




காமவெறிபிடித்து அலையும்
இராவணன்களும்
இந்திரன்களும்
கம்பீரமாய்
நடைபயிலும் வரை
கோடுதாண்டா சீதையோ
குடிலில் இருக்கும் அகலிகையோ
யாருமே
இழப்பிலிருந்தும்
இழிவிலிருந்தும்
தப்பமுடியாது!



Friday, 3 February 2017

மயிலிறகு முட்கள்


வெளியேயிருந்து வந்தகிளி
கூண்டுக்கிளியையும்
கூட்டிப் போய்விடுமென்ற
குருட்டுப் பயத்தில்
தன்வீட்டுக் கிளியின்
இறக்கைகளையும்
முறுக்கி முடக்கிப்போடுவர்!

புதிய உறவுக்காய்த்
தன்வீட்டில் பூக்கின்ற
பாராட்டுப் பூக்களைக்
கசக்கி எறிந்து
காலால் மிதிப்பர்!

அடுப்பறை ராஜ்ஜியத்தை
முழுசாக விட்டுக்கொடுத்தால்
அடிமைச்சாசனம்
ஆள்மாறி விடுமென்று
உப்புக்கார முடிவெடுப்புகளில்
பங்குபோட்டு
உணவுகளின் சுவைகெடுத்து
குப்பையில் கொட்டி
குதூகலம் அடைவர்!

ஒருகாலத்தில்
தான் ஓதிய
தலையணை மந்திர ஞாபகத்தில்
படுக்கைகளைப் பிரித்துப்போட
பிரயத்தனம் செய்வர்!

கைப்பிடியில் பிடித்திருந்த
கருவேப்பிலைக்கொத்து
முந்தானை முடிச்சுகளில்
சிக்கிக் கசங்கிப் போகுமென
சித்தாந்தம் பேசி
முடிச்சுகளை அறுத்தெறியும்
முட்டாள்தனம் வளர்ப்பர்!

கத்தியால் கீறி
காயப் படுத்துவதைவிட
இவர்கள்
வார்த்தைகளோடு நடத்தும்
வன்முறை
வரம்புகள் கடக்கும்!

மயிலிறகால் வருடுவதாய்
வெளியே காட்டினாலும்
அதற்குள்
மறைத்து வைத்திருக்கும்
முட்கள் கீறி
மனதெங்கும் இரணமாகும்!
(புதுவை அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதைநூலுக்குரிய பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் கூடிய கம்பன்புகழ் இலக்கிய விருது பெற்ற கவிஞர் ஔவை நிர்மலாவின் பெண்களின் கதை என்னும் கவிதை நூலிலிருந்து - (கவிஞர் ஔவை நிர்மலா, பெண்களின் கதை, காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2013, விலை ரூ80/-).


திருமூலரின் மூப்பு, இறப்புச் சிந்தனைகள்

திருமூலரின் மூப்புஇறப்புச் சிந்தனைகள்

உலகில் தோன்றிய எந்த ஓர் உயிரும் எதிர்கொள்ள வேண்டிய இருபெரும் நிகழ்வுகளாக மூப்பும் இறப்பும் திகழ் கின்றன. மூப்பைத் தள்ளிப்போட இயலுமே தவிர முற்றாக அதனைத் தவிர்த்தல் இயலாது என்கின்றனர் மருத்துவ உலகின் மூப்பியல் துறையினர்.  இறப்போ அவ்வாறன்றி எப்போது, எப்படி, எங்கு நிகழுமென்று அறுதியிட்டுக் கூறவியலாத - ஓர் அவசர நிகழ்வாக - எதிர்பாராச் செயலாக - காலத்தின் கட்டாயமாக அமைகிறது. தனித்தன்மை மிக்க இவ்விரு கூறுகளும் இலக்கியங்களில் பேசப்படும் தன்மை இயல்பானதும் பொருத்த மானதும் ஆகும். அந்நிலையில் திருமந்திரம் வாயிலாக அறியப்படும் திருமூலரின் மூப்பு, இறப்புச் சிந்தனைகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
மனித வாழ்க்கைப் பருவங்கள்
            உயிர் வாழ்வின் வளர்ச்சி உடலியல் மாற்றங்களைக் கொண்டு வருகின்றது. காலை எழுந்தவர்கள் நித்தம்நித்தம் மாலை வருவதைக் கண்டு எவ்விதக் கவலையுமின்றி இன்புறுகின்றனர். ஆனால் உண்மையில் இது அவர்களின் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் கழிந்து ஒவ்வொரு கூறுபாடும் அழிவதையே காட்டுகிறது  (226).  பிறவி பெற்ற ஒவ்வொரு உயிரும் இம்மாற்றம் அடைவதிலிருந்து தப்புவதில்லை.
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே (221)
எனவரும் திருமூலரின் பாடல், பசு பிறப்பின்போது கன்றின் நிலையிலிருந்து பின் வயது மூத்து எருதாகி விடுவதைச் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய உடல் மாற்றம் பிற உயிர் வகைகளைக் காட்டிலும் மனிதப்பிறவியில் கவனிக்கத் தக்க வேறுபாட்டுடன் அமைவதைக் காணலாம்.
குழந்தை பிறந்தது முதலாக உடலின் பல்வேறு உறுப்புகளும் உடலின் உள்ளே இயங்கும் மண்டலங்களும் சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து ஒரு குறிப்பிட்ட உயர் நிலையை எட்டுகின்றன.  அதன்பின்னர் உடலின் வளர்ச்சிஎன்ற நிலை மாறி ஒரு குறிப்பிட்ட காலஅளவு வரை அவ் உயர்நிலையின் சமநிலைகாக்கப்படுகிறது. அதற்கடுத்த நிலையில் உடலின் வளர்ச்சி வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது.  இதனைத் திருமூலர்,
முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினிற்
கெட்ட தெழுபதிற் கேடறி யீரே (207)
என்னும் பாடல் மூலம் புலப்படுத்துகிறார். கரு முட்டையானது பத்து மாதங்களில் குழந்தையாக உருவாகித் தாயின் கருப்பையை விட்டு வெளிவருகிறது. அது படிப்படியாக வளர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் எய்தும்போது முழுவளர்ச்சி பெறுகிறது.  அதன்பின் முழுவளர்ச்சி எட்டிய அவ்வுடல் எழுபது ஆண்டுகள் அளவில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கிறது என்று இப்பாடலின் வாயிலாகப் புலப்படுத்துகிறார்.  எழுபது வயதில் உடலுறுப்புகள் அதிகளவு தளர்வினைச் சந்திக்கின்றன என்னும் மூப்பியல் துறையினர் கூறும் முடிபுகளுடன் இச்செய்தி ஒரளவு பொருந்தி வரக் காண்கிறோம். (Senile tremor,  rare under the age of 70, begins in the hands, especially in that most used, and spreads to the neck and head, rarely occurring in the lower limbs.  - Rolleston Humphry, SOME MEDICAL ASPECTS OF OLD AGE , London : Macmillan & Co. Ltd.,1922, 143. மேற்கோள் : இரா. நிர்மலா, தமிழிலக்கியத்தில் மூப்பும்)
மனித வாழ்வினைக் குழந்தைப்பருவம், பிள்ளமைப் பருவம், இளமைப்பருவம், நடுத்தர வயதுப்பருவம், முதுமைப் பருவம் எனப் பலவாறு பகுத்துக்காணலாம். திருமூலர் பாலன் இளையன் விருத்தன் எனநின்ற காலம் (225) என மனித வாழ்க்கையை மூன்று பருவங்களில் அடக்கிக் காண்கிறார். மேற்கூறிய மனித உடல்வளர்ச்சியின் மூன்று படிநிலைகளான வளர்ச்சி, சமநிலை, வீழ்ச்சி ஆகிய மூன்றையும் முறையே பாலன், இளையன், விருத்தன் என்னும் முப்பருவப் பாகுபாடு சமன்செய்யக் காணலாம்.
மூப்பை அறியும் வாயில்
            மூப்புக் காலத்தில் பல்வேறு உடலியல் மாற்றங்கள் தோன்றுமாயினும் ஒருவர் முதுமையடைகிறார் என்பதை முடி நரைத்தல்என்னும் கூறு எளிதாகப் புலப்படுத்திவிடுகிறது. இம்மாற்றம் எளிதில் புலப்படக்கூடியதாக இருப்பதோடு, எல்லாவற்றுக்கும் முதன்மையதாகவும் அமைகிறது. எனவே பெரும்பாலான புலவர்கள் முதுமையைச் சுட்டுமிடத்து முடி நரைத்தலையே அதிகமாகச் சுட்டுகின்றனர்.
மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறு மதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறுங் கருமயிர் வெண்மயி ராவது
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே (234)
என்னும் பாடலில் நல்ல பட்டாடையும் காலத்தால் நைந்துவிடும். அதேபோன்று மனிதருடைய வாழ்நாளாகிய அகவையைக் காலம் ஈர்ந்து செல்கிறது; கருமயிர் உருமாறி வெண்மயிராய் நரைக் கிறது என்று மூப்புப் பருவத் தோற்றத்தை எடுத்தியம்புகிறார் திருமூலர்.
மூப்புக்காலத் துன்பம்
            மூப்புக்காலம் என்பது உடல்தளர்வுறும் காலமாகும்.  அதனால் இளமையில் எளிதாகச் செய்யமுடிந்த காரியங்கள் முதுமையில் செய்ய இயலாத நிலையடைகின்றன.
தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே (223)
என்னும் பாடல் மூலமாக, இளமைக் காலத்தில் செய்யவியன்ற காரியங்கள் முதுமையில் செய்வதற்கு அரியனவாகிவிடுவதைத் திருமூலர்  சுட்டுகிறார். 
மகளிர் இகழ்தல்
            முதுமையுற்ற ஆடவரைக்கண்டு மகளிர் வெறுத் தொகுக்கும் தன்மையைச் சம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன், திருமங்கை யாழ்வார் முதலியோர் தத்தம் பாடல்களில் புலப்படுத்தியுள்ளனர். காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால் / ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்என்று சம்பந்தர் (233:9) தம் தேவாரத்தில் குறிப்பிடுகிறார். 
விரும்புவர் முன்னென்னை மெல்லியன் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே (224)
என்று திருமூலர் இளமையில் மகளிருக்குக் கரும்பாய் இனித்த தான், மூப்பில் எட்டிக்காயாய்க் கசக்கும் தன்மையைக் கூறுகிறார். இவ்வாறு மூப்புற்ற ஆடவரைக் கண்டு மகளிர் வெறுப்பதன் காரணம் யாது?
கொம்பும் அரவமும் வென்றநுண் ணேரிடை
வம்புண் குழலார் வாசல் அடைத்திக ழாதமுன்
செம்பொன் கமுகினந் தான்கனி யும்செழுஞ் சோலைசூழ்
நம்பன் நறையூர் நாம்தொழு தும்எழு நெஞ்சமே (நா.தி.பி. 1481)
என்னும் பாடலுக்குப் பெரியவாச்சான்பிள்ளை,
(கொம்புமித்யாதி) வஞ்சிக் கொம்பையும் அரவையும் வல்லிக் கொடியையும் மற்றுள்ளவர்களையும் தோற்பிக்க வற்றான இடையையுடையராய், பரிமளிதமாக குழலை யுடைய ஸ்திரீகளானவர்கள். (வாசலித்யாதி) முற்காலம் இவனை விரும்பி, பின்பு வெறுவியனானவாறே, புறம்பே தள்ளிக் கதவடைப்பார்கள்; இவற்றான் பின்னையும் சாபலத்தாலே போகாதே புறம்பே நிற்கும்; லஜ்ஜித்து இவன் அங்கு நின்றும் கால் வாங்கிப் போகைக்காக, இவனுக்குப் போகயோக்யதை யில்லாமையைச் சொல்லிப் பரிபவிப்பர்கள்; இப்படிப்பட்டவர்கள் பரிபவோக்தி செவிப்படுவதற்கு முன்னே. . .  (ஸ்ரீ வைஷ்ணவ க்ரந்த முத்ராபக ஸபை (பதி.), பெரிய திருமொழி (4-7 பத்துக்கள்), காஞ்சீபுரம் : ஸ்ரீ கீதாசார்ய அச்சுக்கூடம், 1909).
என்று விளக்கம் அளிக்கிறார். 
இவ்வுரையினை ஒப்புநோக்கும்போது, மூப்புற்ற போதும் இல்லற வேட்கை தணியாதிருத்தலும் அதன் காரணமாக மகளிரை நாடும் செயலும் வெளிப்படுகின்றன. ஆனால் மூப்புக்கால உடலியல் மாற்றங்களும் அதனால் ஏற்பட்ட செயல்திறன் குறைபாடும் அம்மகளிர் வெறுத்தொதுக்கும் காரணிகளாய் அமைகின்றன.  அதனால் மனத்தில் ஏற்படும் ஆழமான துன்பத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் கேடயமாக இறையுணர்வு அமைவதை மேற்காட்டிய திருமூலரின் பாடல் உய்த்துணர வைக்கிறது.
மூப்பைத் தவிர்த்தல்
            எக்காலமும் இளமையோடு இருக்கவேண்டும் என்ற விழைவு எல்லா மனிதருக்கும் எழுவது இயல்பே.  மார்க்கண்டேயன், யயாதி முதலியோருடன் தொடர்புடைய இளமையோடு இருத்தல்பற்றிய புராணக்கதைகள் இளமை விழைவையும் மூப்பை வெறுத்தலுமாகிய மக்களின் மனப்பாங்கைப் புலப்படுத்துகின்றன.  யோகத்தால் நரை, திரை அணுகாது உடலைக் காக்கக் கூடும் என்றும் இளமைக்காலத்தில் யோகப்பயிற்சி அற்றோரும் முதுமையில் யோகத்தைக் கைக்கொண்டாலும் இளமையை மீண்டும் பெறலாம் என்னும் கருத்தும் சித்தர் பாடல்களில் குறிப்பிடப்பெற்றுள்ளன. சித்துகளிலும் யோகத்திலும் வல்லவரான திருமூலரும் மேற்குறித்த செய்திகளைப் பலபாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
மேலையண் ணாவில் விரைந்திரு காலிடிற்
காலனும் இல்லை கதவுந் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே (784)
என்னும் திருமந்திரப் பாடல் பிராணாயாமப் பயிற்சிஇறப்பினைத் தவிர்ப்பதுடன் உலகோர் அறியுமாறு மூப்பைப் புலப்படுத்தும் கூறுகளான நரையையும் திரையையும் மாற்றி இளமையை மீட்டுத்தந்துவிடும் என்று ஆணையிட்டுச் சொல்கிறது.
இறப்பு உறுதி
            இறப்பு உறுதியானது.  பிறந்த எல்லா உயிர்களும் இறந்தேயாக வேண்டும்.
தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும் (229.1-2)
என்று கூறும் திருமூலர் வெட்டவெட்டத் தழைத்து வளர்வதாய் நாம் நினைக்கும் தாவரங்களே இறத்தல் என்னும் வினையைத் தவிர்க்கவியலாது போகும்போது மனிதனுக்கு நிச்சயமாக இறப்பு உண்டு என்பதைப் புலப்படுத்துகிறார். அவ்வாறு இறப்பு நிகழ்ந்தவிடத்து அதனை மாற்றத்தக்க வழியும் இல்லை.
உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை (220)
என்று உடலை விட்டு உயிர்பிரியும்போது அதனைத் தடுக்கும் வழி இன்மையையும் புலப்படுத்துகிறார்.
இறப்பை அறிய இயலாது
            இறப்பு நிகழ்தல் உறுதியானதே என்றாலும் இறப்புநேரும் காலத்தை யாராலும் கணித்தறிய முடியாது.  அழைக்கின்றபோது அறியார் (229.4) என்று திருமூலர் இறப்பு நிகழும் காலம் அறியாத தன்மையைக் குறிப்பிடுகிறார்.
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
            கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே (192)
என்னும் பாடல் எப்பொழுதும்போல் உணவு உண்டுவிட்டுத் தூங்குவதற்காகப் படுத்தவர்கள் அப்படியே உயிரை விட்டுவிட்ட அகால இறப்பை எடுத்துரைக்கிறது. மூப்பு தோன்றுவதற்கென்று கால எல்லை இருப்பதுபோல் இறப்பு நிகழ்வதற்கு எந்தவித வரையறையும் இல்லை. 
தன்னை அறியாது தான்நல்ல ரென்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடுங் கூற்றம் வருமுன்னந்
தன்மையின் நல்ல தவஞ்செய்யும் நீரே (112)
என்ற பாடல் இளமைக்காலமாயினும் இறப்பு நிகழ்ந்துவிடுவதை எடுத்துரைக்கிறது.
இறப்பிற்கு முன் இறைதொழுதல்
            உடலைவிட்டு உயிர் பிரிந்தபிறகு அவ்வுடல் ஒரு முடிவினை எய்தி விடுகிறது; மண்ணோடு மண்ணாகி அழிந்துவிடுகிறது. ஆனால் இத்தகையதொரு முடிவை உயிர் அடைவதில்லை. உயிர் என்றும் நிலைபேறுடையது.  அதற்கு மறுமைஎன்ற நிலை உண்டு என்ற நம்பிக்கைகள் உலகளாவியதாகக் காணப்படுகின்றன. மத வேறுபாடின்றி உலகின் அனைத்து மதங்களும் பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பரிந்துரைக்கின்றன. 
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே (242)
என்ற திருமூலரின் பாடல் மறுமை நம்பிக்கையை ஆணித்தரமாக முன்வைக்கிறது. உயிரை எமதூதர்கள் கொண்டு செல்வர் என்றும் பாவம் செய்வோர் நரகம் செல்வார்கள் என்றும் சமூகத்தில் நிலவிவரும் நம்பிக்கையை இங்கே திருமூலர் பதிவுசெய்கிறார்.  இறப்புத் துன்பத்தைப் போக்கி மறுமை இன்பத்தை எதிர்கொள்ள இறைவனை வழிபடும் வழியைச் சமயப் பெரியோர் அனைவரும் ஒருமனதாக எடுத்துரைக்கின்றனர்.
            பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
            ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே (223)
என்று திருமூலரும் இறப்பிற்கு முன் இறைவனைத் தொழவேண்டும் என்னும் கருத்தினை முன்வைக்கிறார்.  இறப்பதற்கு முன் இறைவனைத் தொழுதல் வேண்டும் என்னும் கருத்தைப் பல பாடல்களில் திருமூலர் (112, 229) வற்புறுத்துகிறார்.
இறப்பால் கொள்ளவேண்டிய சமூக உணர்வு
            தவிர்க்க இயலாத இறப்பினைக் கண்டாவது மக்கள் நல்வழியில் செல்ல முயலவேண்டும். சமூக நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.  ஆனால் சமூகச் சூழலில் மக்கள் இறப்பையும் மிகச் சாதாரணமாக ஏற்றுக்கொண்டு விழிப்புணர்வு பெறாமல் இறக்கின்றனர். இறந்தவருக்காகச் சிறிதுநேரம் அழுதுவிட்டு இறந்தவரின் உடலை எரித்துவிட்டு அந்த நினைப்பையும் விட்டுவிட்டு எப்பொழுதும்போல் தத்தம் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
            ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
            பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
            சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
            நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே (189)
என்னும் திருமூலரின் பாடல் மக்களின் சமுதாய விழிப்புணர்வற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
மரணமிலாப் பெருவாழ்வு
            சாதாரண வாழ்வு வாழும் மக்களால் இறப்பினைத் தவிர்க்கமுடியாது என்றாலும் யோகவழி நிற்பின் வாழ்நாள் நீட்டம் பெறலாம். நூறாண்டு இன்பமாய் வாழலாம்.  யோகநிலையில் அணுவளவும் பிசகாது இருப்போர் மரணமிலாப் பெருவாழ்வு வாழக்கூடும் என்ற சித்தர்களின் சிந்தனையைத் திருமூலரின் பாடல்வழியும் அறியமுடிகிறது.
கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே (737)
சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி யுகமது வாமே (738)
ஆகிய பாடல்கள் மனிதன் மரணமிலாப் பெருவாழ்வினை யோகம் மூலம் எய்தக்கூடும் என்பதைக் கூறுகின்றன.  திருமூலரும் யோகநிட்டை காரணமாக மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர் என்று சொல்லப்படும் கருத்தும் இதனோடு ஒப்புநோக்கத் தக்கது. 
            இவ்வாறு திருமூலர், மூப்பு இறப்புப் பற்றிய பன்முகப் பரிமாணங்களைத் தம் படைப்பில் வாய்க்குந்தோறும் பரவலாகச் சொல்லிச்செல்வதை அறியமுடிகிறது.  மக்களின் சாதாரண நடப்பியல் வாழ்வில் தவிர்க்க இயலாதனவாகக் கருதப்படும் மூப்பையும் இறப்பையும் சிறந்த யோக முறைகளாலும் தெய்வீக நெறிகளாலும் நிச்சயமாக வெற்றிகொள்ள இயலும் என்பதை உறுதியாகக் குறிப்பிடுகிறார். மரணமிலாப் பெருவாழ்வு குறித்த இன்றைய சர்ச்சைக்குரிய சிந்தனை இவருக்கு இருந்தமையும் இவருடைய பாடல்கள் வாயிலாக நம்மால் அறியமுடிகிறது. இவற்றை அறிவியல் அடிப்படையில் நிரூபிக்க நமக்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லாத நிலையில் இச்சிந்தனைகள் எதிர்கால ஆய்வுக்கு விடப்படுகின்றன.

பயன் நூல் :

திருமந்திரம், சென்னை : கழகப் பதிப்பு, 1969
 காண்க : ஔவை இரா நிர்மலா, சமயச் சாரலில், காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2016ஈ பக்.61-71.