Friday, 1 April 2022

வெற்றிப் பயணம்

 

வெற்றிப் பயணம்

 

முட்டுகின்ற தடைக்கல்லை முயற்சியெனும் உளிகொண்டு

முந்துகின்ற ஆர்வமெனும் சுத்தியலால் தகர்த்திடுக!

நட்டுவைத்த முட்செடிகள் நாற்றிசையில் பரந்தாலும்

நம்பிக்கை அரிவாளால் நாளெல்லாம் களைந்திடுக!

பட்டுநூல் உழைப்பின்றிப் பாவிடுமோ உடையாக?

பஞ்சணையில் படுத்திருந்தால் பதவிகளும் வாய்த்திடுமோ?

கட்டுக்குள் சிந்தைதனைக் காத்திடவே வல்லவர்கள்

கண்டிடுவார் சிகரங்கள் காலின்கீழ் மண்டியிட!

 

திட்டுகளை ஏலாமல் தினவுற்ற நெஞ்சத்தில்

திருத்தங்கள் என்றென்றும் திறன்கூட்ட நில்லாவே!

வட்டாடல், வன்சூது, வனிதையரைக் காமுறுதல்

வழக்கங்கள் இலையென்றால் வாழ்வெல்லாம் இன்பமயம்!

எட்டாத ஆசைகளில் ஏக்கங்கள் வளர்த்திட்டால்

எழிலாரும் சூழலெலாம் வெறுமையெனக் கண்காட்டும்!

ஒட்டாத மனத்தோடு மேற்கொள்ளும் காரியங்கள்

ஒருநாளும் வெற்றியதன் கனியதனை விளைக்காதாம்!

 

அட்டாலும் சுவைகூட்டும் ஆவின்பால் இனிமையதாய்

அனுபவங்கள் ஆசானாய்ப் பாடங்கள் புகட்டிடுமே!

குட்டுகின்ற பெரியோரின் அறிவுரைகள் உளங்கொண்டால்

குன்றாமல் நம்வாழ்க்கை குன்றின்மேல் விளக்காகும்!

தொட்டுவிட்ட எச்செயலும் முடிக்காமல் இடைவிட்டால்

தொடுகிணற்றின் பாதியிலே வீழ்ந்ததுபோல் ஆகிடுமே!

மொட்டொன்று மலராகி மணம்வீசல் போலேதான்

முனைந்திடுக பணியாற்ற, முன்னேற்றம் முகங்காட்டும்!

No comments:

Post a Comment