முனைவர் க. ரேவதி
தமிழ்ப் பேராசிரியர்
தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரி
புதுச்சேரி 605 008.
ஆய்வுரை
உள்ளதை உள்ளவாறே புனைந்துரைக்கும்
தனிச் சிறப்பைப் பெற்று வாழ்விலிருந்து முகிழ்ப்பதே இலக்கியமாகும். தான்
படைக்கப்பட்ட கால எல்லைகளைக் கடந்தும் உணர்வு நிலையில் பயணிக்கும் ஆற்றல்
இலக்கியத்தின் தனிச் சிறப்பாகும். அவ்விலக்கிய வகைமைகளுள் தலையாயது கவிதையாகும்.
கவிதை, உணர்ச்சி மிக்கது; வடிவ அமைப்பிலும் சிறந்தது. இலக்கியம்
தழைத்தோங்கிய ஒரு மரம் எனில் மற்ற வகைமைகள் அதன் பக்கக் கிளைகளாக விளங்க அதன்
உயர்ந்த உச்சிக் கிளையாக விளங்குவது கவிதை எனலாம். அதனால்தான்,
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொற்புதிது, சோதி மிக்க நவகவிதை
எனப் பெருமையுடன் பாரதி கவிதையைக்
குறிக்கின்றார்.
மேற்குறித்த கவிதையுலகில் தனித்தடம்
பதித்தவர் பேராசிரியர் முனைவர் ஔவை நிர்மலா அவர்கள். இவர் ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், திறனாய்வாளர், பன்மொழிப் புலமை பாங்குறப் பெற்ற
பன்முகப் படைப்பாளர் என்னும் பல சிறப்புகளைப் பெற்றவர். தமிழ் மொழியின்பால்
பெருங்காதல் கொண்டவர். எனவேதான் அரும்பெரும் பரப்பினையுடைய தமிழ் இலக்கியங்களை
ஆய்ந்து, தமிழ் இலக்கியத்தில் மூப்பும் இறப்பும்
என்ற பொருண்மையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் மரபுக் கவிதை, புதுக்கவிதை, துளிப்பா, நாடகம், வரலாற்றுக் கவிதை நாடகம், சிறுகதை, புதினம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு சார்ந்த இருபத்தேழு
நூல்களைத் தமிழ்கூறும் நல்லுலகிற்குப் படைத்தளித் துள்ளார். தாம் படைக்கும்
இலக்கியங்களின் ஊடுபாவாகப் பெண்ணியக் கருத்துக்களை முன்வைக்கும் கவிஞரின் நவீன
பெண்ணியச் சிந்தனைகளின் முப்பரிமாணப் படைப்பே இவரது ‘ச’மையல்
அறையில் என்ற இக் கவிதைத் தொகுப்பாகும். இதில் எழுபது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
இவை அனைத்தும் இன்றைய மகளிர் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களை, அதிலிருந்து மீளக் கருதித் தடம்
மாறிப்போகும் நிலையை, அவற்றுக்கான தீர்வுகளை என அனைத்துக்
கூறுகளையும் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஆய்ந்துரைக்கிறது.
முதல் கவிதையான ‘ச’மையலறை
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் இனக்குழுக் காலத்தில் தலைமையேற்றிருந்த
பெண்ணினம் நிலவுடைமைச் சமூகத்தில் ஆணின் உழைப்பு சொத்துக்களாய் மாறி அவன் தலைமை
ஏற்க, பெண்ணின் உழைப்பு வீட்டு வேலைகள்
செய்வது, சமைப்பது, குழந்தைகளைப் பெறுவது, அவர்களைப் பராமரிப்பது, ஆணின் உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் இருப்பது
என இரண்டாம் பாலினமாய்ப் பின்னுக்குத் தள்ளப்பட்டுச் சமையலறைக்கும்
பள்ளியறைக்குமான ஓட்டமாய் மாறிப் போனதையும் அது இன்றுவரையும் தொடர்ந்து வருவதையும்
சமூகப் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் பெண்களை ஊமைகளாக்கி மிகச் சௌகரியமாக
ஆடவர்கள் ஆதிக்க அரியணைகளில் அமர்ந்திருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
இன்றைய சூழலில் தமது குடும்பத்தின்
பொருளாதாரத்தை மேம்படுத்தப் பெண்கள் பலர் வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டனர்.
என்றாலும் அவர்களுக்கு இயன்ற உதவிகளை இல்லத்தில் தாங்களும் செய்ய வேண்டும் என்ற
எண்ணமின்றி ஆண்களில் பலர் அவளைச் சமையலறை வேலைக்காரியாகவும் படுக்கையறையில் தன்
இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள ஒரு கருவியாகவும் கருதுகின்றனர். இதனை,
வேலைக்குப் போகும் பெண்கள்
சமையலறையிலும் சாதிக்க வேண்டும்
மையலறையிலும் சாதிக்க வேண்டும்
என்ற
ஆண்களின் எதிர்பார்ப்பு
அரக்கத்தனம் வாய்ந்தது
என்று சாடுகின்றார் கவிஞர்.
“ஆண்கள் தம் மனைவியை ஒரு
வேலைக்காரியாகத் தமக்குத் தொண்டு செய்வதற்கென்று வந்த ஜீவன் என்று கருகின்றனர்” என்பார் அறிஞர் பெட்ரண்ட் ரசல்.
அத்தகைய மனப்பான்மையே ஆண்களை இவ்வாறு சிந்திக்கச் செய்கிறது. மனிதச்
சமுதாயத்திற்குக் கேடாக அமைந்திருக்கக் கூடிய பெண்ணடிமைத்தனம் இதுவாகும். அங்க
அமைப்பிலன்றி அறிவின் பெருக்கத்திலோ வீரத்தின் மாண்பாலோ ஆணுக்கும் பெண்ணுக்கும்
ஏற்றத் தாழ்வைக் காண இயலாது. அவர்க்குரிய உணர்வுகளும் உரிமைகளும் அத்தகையனவே.
எனவேதான்,
உமையவன் சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநிகர் செய்துமை சமைத்தாள்
என்றார் பாரதியார். மேலும் “பூரண சமத்துவம் இல்லாத இடத்தில் ஆண்
மக்களுடன் வாழ மாட்டோம் எனப் பெண்கள் உறுதி கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
ஆண்களைவிடப் பெண்கள் அறிவுக் கூர்மை
மிக்கவர்கள். அத்தகைய பெண்கள் பலர் சமையலறையில் முடங்கிக் கிடந்ததாலே நம்
சமுதாயத்திற்குப் பயன்படாமல் போய்விட்டனர். இவ்வுண்மையை உளங்கொண்டு, “ஆண்களும் சமைத்தல் வேண்டும். இதன்மூலம்
பெண்களை அறிவுசார் துறைகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும்” என்ற விழைவினைப் பாவேந்தர்
பாரதிதாசனார்,
சமைப்பதும் வீட்டு வேலை
சலிப்பின்றிச் செயலும் பெண்கள்
தமக்கேஆம் என்று கூறல்
சரியில்லை! ஆடவர்கள்
தமக்கும்அப் பணிகள் ஏற்கும்
என்றென்றும் நன்னாள் காண்போம்
எனப் பதிவு செய்கிறார். பாரதி கண்ட புதுமைப்
பெண்ணாகிய கவிஞரோ,
காலை முதல் இரவு வரை
சமையலறைச் சாகசம்
பெண்ணிற்கே ஏற்றதென்று
பட்டா எழுதிவிட்ட
சமையலறைப் பக்கம்
ஆடவரே நீங்களுந்தான்
எட்டிப் பாருங்கள்
கரண்டியைக் கையிலெடுங்கள்
எனக் கட்டளையிடுகின்றார்.
பெண்மையின் உயர்வுக்கு ஏதுவாய் அமைவது
அவளது தாய்மைப் பண்பாகும்.
உதரத்தில் இடமும்
உதிரத்தில் குணமும்
அவளே தருகிறாள்
எனத் தாய்மையின் சிறப்பைச் சொல்லும்
கவிஞர்,
குழந்தையை
எறும்பு கடித்தாலும்
யானை மிதித்ததுபோல்
துடிப்பாள்
எனத் தாய் தன் உயிரனைய மகவைப் போற்றிப்
பாதுகாக்கும் தன்மையினை உரைக்கின்றார். பாவேந்தர் குடும்பவிளக்கில் படைத்துக்
காட்டும் நகைமுத்து தன் குழந்தையைக் கைகளால் அணைத்துப் படுத்துறங்க அவளை எழுப்ப
முற்படும் அவள் கணவன் வேடப்பன், மலர்க்கண்ணியை
அவள் முகத்தின் மீது போட்டும் அவள் எழவில்லை. உடனே அவன் ஒரு மலரிதழை மட்டும்
எடுத்துக் குழந்தையின் மீது போடத் துடித்தெழுந்து அவ்விதழைத் தூர விலக்கும்
நகைமுத்துவின் தாய்மையின் ஆற்றலைக் கண்டு வியக்கும் வேடப்பன்,
தலைமட்டும் இரண்டென் றாலும்
குழந்தையும் தாயும் ஒற்றைக்
குலையே யாம்;உயிரும் ஒன்றே
உள்ளத்தின் கூறும் ஒன்றே
என விதந்து போற்றும் காட்சியை இதன்வழி
நினைவுறுத்து கின்றார். மேலும்,
குட்டிப்பூனை கவ்விக்கிட்டு
இடந்தேடும் தாய்ப்பூனை
பாவமுன்னு நினைக்காதிங்க
பாசமங்கே தெரியுதுங்க
என ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்குள்ளும்
தாய்மைப் பண்பு பொதிந்திருப்பதைக் காட்டுகின்றார். தாயாக மட்டுமின்றி மனைவியாக, மருமகளாக, சகோதரியாக, மகளாக ஆணின் வாழ்வில் நீக்கமற பெண்
நிறைந்திருப்பதையும் ஆணின் வாழ்வுக்கு அடிநாதமாய் அவள் இருப்பதையும் இவர் தமது
கவிதையில் படைத்துக் காட்டுகிறார்.
இவ்வாறு மனித குலத்தின் செம்பாதியாய்
இருக்கும் பெண்களைப் போற்றி அவர்களின் உணர்வுகளை மதித்து உரிய உரிமைகளைத் தராமல்
சிறு வயதிலிருந்தே,
பெண்ணாய்ப் பிறந்தாய்
மென்மையாய்ப் பேசு
நாலு பேரிடை நாகரிகம் பேண்
எதிர்த்துப் பேசேல்
அதிர்ந்து நடவேல்
பொறுப்பாய் நடப்பாய்
தாய்க்கு உதவு
சமையல் செய்யும் சாத்திரம் பழகு
வீட்டைப் பராமரி
எடுத்த பொருளை எடுத்த இடம் வை
என அறிவுரை கூறி அடக்கி ஒடுக்கும் சமுதாயம் ஆண்
பிள்ளைகளை அவர்கள் மனம்போன போக்கின்படி வளரவும் வாழவும் வகைசெய்து கொடுப்பதை,
ஆண் குழந்தைக்கு???
பிடிவாதம் பிடித்தால் பிடித்தது
கிடைக்கும்!
அடாவடிக்கு அப்பாவின் முத்தம்!
துடுக்குத்தனத்தில் கிடைக்கும்
புகழ்மொழி!
குறும்பு செய்தால் கூடிக் களிப்போம்!
ஆண்குழந்தை எதுசெய்தாலும்
எல்லாம் மகிழ்ச்சி! எல்லாம் அழகு!
ஆண் எனும் மமதையை ஊட்டி ஊட்டி. . .
அநாகரிகமே அவனின் சிறப்பு!
பொறுப்பின்மை அவனது உரிமை!
தடித்த சொற்கள் அவனது வீரம்!
எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது தீரம்!
புகைப்பது உண்டேல் இளமையின் சாரம்!
குடிப்பதுகூட ஆண்மையின் பெற்றி!
என அடுக்கிக் காட்டி இப்படிப் பொறுப்பற்ற
தன்மையுடன் ஆண் பிள்ளையை வளர்க்கும் பெற்றோர் தும்பைவிட்டு வாலைப் பிடித்த
கதையாய்ப் பின்னாளில் வருந்திப் பயனில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோருக்குத் தக்க பாடமாய் இது அமைகிறது.
இளம்பருவம் முதலே தன்னைத் தலைமையானவ
னாகவும் பெண்ணைக் கடைநிலை சார்ந்தவளாகவும் காமப் பொருளாகவும் பார்த்துப் பழகும்
ஆண்களில் பலர் இன்று பச்சிளம் பெண் குழந்தைகளையும் சிறுமிகளையும்கூட ஈவு
இரக்கமின்றித் தம் இச்சைக்குப் பலியாக்கும் கொடுஞ்செயலை அரங்கேற்றி வருகின்றனர்.
குழந்தையைத் தெய்வமென்று கும்பிடும்
இந்நாட்டில்
சிறுமியரைக் கருவறையில் சீரழித்து
உவக்கின்றார்
என இத்தகைய வன்கொடுமையை ஆண்டவன் உறையும்
ஆலயத்தில் ஆசிபா என்ற பெண் குழந்தைக்கு நேர்ந்த அவலத்தை நினைவுறுத்தி ஆணினம்
வெட்கித் தலைகுனியும்படிச் செய்கின்றார் கவிஞர்.
இளந்தளிர்களின் நிலை இவ்வாறெனின்
கன்னிப் பருவத்து இளம்பெண்களின் நிலையை என்னவென்று சொல்வது? அன்பு, ஆதரவு, கனிவு, காதல், பற்று, பாதுகாப்பு ஆகியவற்றையே ஆண்களிடத்து நாடும் பெண்களிடத்து அவற்றையே
ஆயுதங்களாக்கி நம்பவைத்து ஆண்கள் தமது காம வலையில் சிக்கவைக்கும் இழிநிலையை,
அன்பென்றும் ஆதரவென்றும்
அனுதாபப் பகிர்வென்றும்
அறிவுத் தேடலென்றும்
ஆனந்தக் கூடலென்றும்
அரிதாரம் பூசிக்கொள்ளும்
காமக்கரங்கள்
கன்னியர் புறங்களைத்
தொட்டுவிட
நீளும்
என்று உணர்த்துகின்றார்.
காதல் ஒருவேளை திருமணத்தில்
முடிந்தாலும் நாட்கள் செல்லச்செல்ல மனைவியின் மீதான காதல் குறைந்து போகிறது.
பக்கம் பக்கமாய்க் காதலிக்குக் கவிதை பாடியவன் ஏதோவொன்றைக் குறை சொல்லி வசைபாடத்
துவங்குகிறான். மனைவியைத் தவிர பிற பெண்கள் அழகாகக் காட்சியளிக்கின்றனர்.
வாரிசுக்குப் பிள்ளை இல்லையெனில் பெருங் கொண்டாட்டம் ஆண்களுக்கு. அதனையே காரணம்
காட்டித் தமது செயல்களுக்குச் சமாதானம் கூற முற்படுகின்றனர். இதற்குத் தானும் ஒரு
காரணமாய் இருக்கலாமோவென ஒருபோதும் சிந்திப்பதில்லை. அத்தனைக்கும் ஆண்களின் காமக்
குணமே காரணம் என்பதை,
மனைவியின் கற்புநிலை வேண்டுகின்ற
கணவன்மார்
பிறன்மனையைத் தேடுவதில் கருத்தூன்றித்
திரிகின்றார்
அத்தனைக்கும் உள்ளாற அறுவறுப்பா
நிக்கறது
இருட்டுக்குள் மறைஞ்சிவந்த இந்திரனை
ஆட்டுவித்த
காமமென்னும் காரணம்னு கண்ணுக்குத்
தெரியலையோ
என இடித்துரைக்கின்றார்.
பிறர் நெஞ்சு புகாக் கற்பினைக் காலம்
காலமாகப் பெண்களுக்கு வற்புறுத்தி வந்த ஆணினம் நற்றிணை காட்டும் தலைவியைப் போல்,
நல்கா னாயினும் நயனில செயினும்
நின்வழி வருதும்
எனக்கூறி, தாம்
இகழ்ந்தாலும், அடித்தாலும், உதைத்தாலும் வேறொரு பெண்ணை நாடினாலும்
அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வகுத்த கட்டினை உடைத்து,
கற்பு நிலையென்று சொல்லவந் தாரிரு
கட்சிக்கு மஃது பொதுவில் வைப்போம்
என்ற பாரதியின் கூற்றுக்கு அரண்
சேர்க்கின்றார்.
இல்லறத்தில் மனைவியோடு மட்டுமே
சேர்ந்து வாழும் ஆண்களும் சமத்துவத்திற்கு மதிப்பு கொடுக்காமல், பிள்ளையைச் சுமந்து பெறும் வேலை ஒன்று
தவிர ஏனையவை அனைத்தும் இருவருக்கும் ஒன்றே என்று உணராமல் செக்குமாடுகள் போல்
பெண்கள் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். திருமணம் என்றால்
சுதந்திர வாழ்க்கை, சமத்துவ வாழ்க்கை என்று இருக்க
வேண்டுமே ஒழிய அடிமை வாழ்க்கை, மேல்
கீழ் வாழ்க்கை என்று இருக்கக் கூடாது.
“எப்படி ஓர் அரையணா ஸ்டாம்பில் முத்திரை
குத்தினால் அதைத் திரும்பப் பயன்படுத்த முடியாதோ, அதைப் போன்றதுதான் பெண்களுக்குக் கட்டப்படும் தாலியுமாகும்” என்பார் பெரியார். அத்தகைய கட்டுக்குள்
வாழும் பெண்கள் தங்கள் சுயம் இழந்து தங்களை முழுவதுமாகக் கரைத்துத் தத்தம் செய்ய
வேண்டியவர்களாகின்றனர். இப்படிப் பெண்களை அடிமைகளாக்கி வைத்திருக்கும் ஆண்களைப்
பார்த்து,
சோறு திங்க அழைக்கும்போது
செல்பேசி அணைத்ததுண்டா?
தின்னும் தட்டு எடுப்பதுண்டா?
இரவினிலே படுக்கை தட்டி
பாடும்கொசு அடிப்பதுண்டா?
துவைத்த துணி மடித்ததுண்டா?
கலையாம லவை எடுத்ததுண்டா?
எடுத்த பொருள் எடுத்தஇடம்
என்றேனும்
வைத்த துண்டா?
எனக் கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றார். “சிட்டுக் குருவி எனது பலகணி வழியே
வரின் யான் என்னை மறந்து சிட்டாகவே மாறி விடுகிறேன். மேலும் சிறு பரற்கற்களையும்
கொத்தத் தொடங்கி விடுகிறேன்”
என்று கீட்ஸ் கூறுவது போன்று
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு கொதித்தெழுந்து பெண்ணினத்தின்
பிரகிருதியாய் மாறி அவலங்களைக் கொத்திக் காட்டும் கவிச் சிட்டாகவே கவிஞர் அவ்வை
நிர்மலா அவர்கள் மாறிவிடுகிறார்.
பெண் அடிமை என்பது மனிதச் சமூக அழிவு
என்பதை நாம் நினைத்துப் பார்க்காத
தன்மையினாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனிதச் சமூகம் பகுத்தறிவு இருந்தும்
தேய்ந்து கொண்டே வருகிறது. கணவனையும் கருவறையையும் பிள்ளை வளர்ப்பினையும் குடும்ப
அமைப்பினையும் பெண்கள் மறுக்க வேண்டியதில்லை. அதே சமயம் இல்லத்தில் அவர்களுக்கான
சம உரிமை, சம பங்கு, சம வாய்ப்பு ஆகியவற்றைத் தர ஆண்கள்
தயங்கக் கூடாது.
காதல் மனையாளும் காதலனும் மாறுஇன்றித்
தீதுஇல் ஒருகருமம் செய்பவே - ஓதுகலை
எண்இரண்டும் ஒன்றும் மதிஎன் முகத்தாய்
கண்இரண்டும்
ஒன்றையே காண் நோக்குமால்
என்று சிவப்பிரகாசர் நன்னெறியில் கூறுவதுபோல்
கருத்தொருமித்துக் கணவனும் மனைவியும் வாழ்வார்களானால் சத்திருக்கும் பழம்போன்று, உரமிட்டுத் தழைத்திருக்கும் செடி
போன்று இல்லறம் இனிக்கும்;
வாழ்க்கை செழிக்கும் என்பதை,
இனிக்கும் இல்லறத்தில்
கணவன் உயிர்க்கூட்டில்
மனைவி உயிரும்
மனைவி உயிர்க்கூட்டில்
கணவன் உயிரும்
இடமாற்றம் அடைந்து
இன்னிசை பாடும்
என்ற கவிதையடிகளின் மூலம் கவிஞர்
காட்சிப்படுத்துகிறார்.
பெண்ணின் அடிமைத்தனத்திற்கு ஆண்
மட்டும் காரணம் அல்லன். சிறு சங்கிலியால் கட்டுண்டு அசையாது நிற்கும் யானையைப்
போன்று தனது ஆற்றலை உணராது,
இல்லத்தில் வேலைக்காரியாய், ஆணின் கண்களுக்கும் மனப்
புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மையாய் வலம்வந்து சமூக
அரசியல் அதிகாரத் தளங்களில் தாங்களும் பங்கேற்க வேண்டும், பணி புரிய வேண்டும் என்ற எண்ணம்
சிறிதும் இல்லாத பெண்களும் இத்தகைய இழிநிலைக்குக் காரணமாவர். இந்நிலை மாற
வேண்டுமாயின் அறியாமையைத் தோண்டியெடுத்து அறிவை ஊட்டும் கல்வியை அவர்கள் பெற
வேண்டும். இதனால் அவர்தம் பேதமை ஒழியும் என்பதை,
பெண்கள் அறிவை வளர்த்தாய் - வையம்
பேதமை அகற்றிடும் காணீர்
என்று பாரதியும்,
. . . கல்வி இல்லா
மின்னாளை வாழ்வில் என்றும்
மின்னாள் என்றே உரைப்போன்
என்று பாரதிதாசனும் கூறுவது இங்குக்
கருதத்தக்கது. இத்தகைய கல்வியைக் கற்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இன்று
கால்தடம் பதித்து வருவதைச் சாதனை படைத்த பெண்களின் வாழ்வை எடுத்துக் கூறுவதன்
மூலம் அனைவரும் அறியத் தருகிறார்.
காரட் என்னும் தங்க அளவை, உலோகப் பண்புகளின் பட்டியல், வெப்பக் குடுவை ஆகியவற்றை உலகுக்களித்த
எகிப்து நாட்டின் மரியா ஜூயஸ், உடலை
உருக்கும் ரேடியம் கண்டு உலகினர்க்காக உயிரைத் துறந்த போலந்து நாட்டின் மேரி
கியூரி, செயற்கைக் கதிர்வீச்சும், அணுச் சேர்வு என்னும் புதிய நுட்பமும்
கண்ட அவர் மகள் ஐரீன் கியூரி, நிறப்பிரிகை
மானியை உலகுக்களித்த அமெரிக்காவின் எம்மா பெர்ரி, ஞிஞிஜி எனும் பூச்சிக்கொல்லி
புற்றுநோய் விளைக்கும் என்னும் உண்மை உரைக்கத் தன் உடலையே ஆய்வுப் பொருளாக்கி
உயிரை விட்ட ஒப்பிலாப் பெண்மணி பென்சில்வேனியாவின் ராச்சல் லூயிஸ் கர்சன், டிஎன்ஏ, ஆர்என்ஏ மூலக்கூறுகளைக் கண்டறிந்து அவற்றையும் வைரஸையும் முதல்படம்
எடுத்த லண்டனைச் சேர்ந்த ரோசலின் எல்ஸி பிராங்ளின், அணுப்பிளவைச் செய்து காட்டி ஐன்ஸ்டீனின் கணிதச் சமன்பாட்டைக்
காட்சியில் நிரூபித்த ஆஸ்திரியாவின் லிஸி மெய்ட்டனர், மரபணு மாற்றத்தைக் கண்டு உரைத்த
நியூயார்க்கின் பார்பரா மெக்லின்டாக், சூரிய
சக்தியை மின்சக்தியாக்கும் தொழில் நுட்பம், சூரிய
சக்தியில் இயங்கும் கடிகாரம், சூரிய
ஆற்றலால் கடலின் உப்பைப் பிரித்தல், கடல்
நீர் குடிநீர்த் திட்டம் இவற்றைச் சாத்தியமாக்கிய ஹங்கேரி நாட்டின் மரியா டெல்கஸ், கரியமில வாயு மற்றும் அணுஆயுத நச்சை
அளக்கும் கருவிகளை வடித்த ஜப்பானின் சாரஹாஷி காட்ஸுக்கோ, இருநூற்று ஐம்பத்திரண்டு முறை புவியைச்
சுற்றி விண்வெளிப் பயணம் மேற்கொண்ட இந்தியாவின் வீரமங்கை கல்பனா சாவ்லா என
வெற்றித்தடம் பதித்த மங்கையர் பற்றி அறியும்போது பெருமிதமும் அவர்களைப் போன்று
தம்மாலியன்ற துறைகளில் பெண்கள் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற ஊக்கமும்
பிறக்கின்றன. மேலும் ஆட்சித் துறையிலும் அதிகாரத் தலைமையிலும் மகளிர்
சிறந்தோங்குவதை,
மாநில முதல்வராம்
பாரத முதல்வராம்
முதல்குடி மகளாம் - என
எத்தனைப் பதவிகள்
அத்தனை யுள்ளும்
சாதனை படைத்தாரே - சட்ட
ஞானம்
வளர்த்தாரே
எனக் கவிஞர் உணர்த்தும்போது பெண்களின் எழுச்சி
இன்று ஏறுமுகத்தில் செல்லத் தொடங்கியிருப்பது பெரும் மகிழ்வை உண்டாக்குகிறது.
கல்வி கற்கும் பெண்கள் தமது வாழ்வில்
முன்னேற்றம் கண்டு நாட்டையும் உயர்த்தும் நிலையில் செயல்படும் அதே வேளையில், பல பெண்கள் மோக வலைகளால் முக நூல்
போன்ற ஊடகங்களில் சிக்கித் தம் வாழ்வை இழக்கின்ற தன்மையைக் கவிஞர் சுட்டிக்
காட்டுகிறார்:
புலன்களை அடக்கத் தெரியாமல்
புலனத்தில் நுழைபவர்கள்
சலனத்தில்
வீழ்கின்றார்!
நாகரீகம், புதுமை, சமத்துவம், சுதந்திரம் என்ற பெயரால் தங்களைச்
சீரழித்துக்கொள்ளும் பெண்களும் இன்று சமுதாயத்தில் பெருகிவருகின்றனர். நாகரிகம்
என்ற பெயரில் அறைகுறை ஆடைகளும், உதட்டுப்
பூச்சுகளும், கருக்கலைப்பு மாத்திரைகளும், உயர்தர உணவகங்கள், பொழுதுபோக்கு, ஆடம்பர வாழ்க்கை, பணம், நகை ஆகியவற்றுக்காகத் தங்கள் கற்பையே விலைபேசும் பெண்களும்
சமுதாயத்தில் உள்ளனர். நகைகளிலும் உயர்தரமான உடை அலங்காரங்களிலும் பழாக்கப்படும்
பணம் குடும்பத்திற்கோ சமுதாயத்திற்கோ பயன்படாமல் வீணாகிறது. கணவன்மார்களும்
மனைவியின் அழகின் தன்மையைக் கொண்டே மனநிறைவு அடைகிறார்கள். பெண்களைத் திருப்தி
செய்ய, அவர்கள் தங்களுக்கு அடங்கி நடக்க
விலையுயர்ந்த நகையும் துணியும் கொடுத்து அழகிய பதுமைகளாக்கிவிட்டால் போதும் என்று
நினைக்கிறார்கள். ஊடகங்களும் இத்தகைய ஆசைகளைப் பெண்களிடத்து இன்று வளர்த்து
வருகின்றன. இத்தகைய கூட்டுக்குள் இருந்து பெண்கள் வெளியே வர வேண்டும். கூண்டுக்
கிளிகளுக்குக் கம்பிகள் மட்டும்தான் தெரியும். வானத்தில் பறந்து திரியும்
கிளிகளுக்குத்தான் வான் பரப்பின் சுதந்திரம் புரியும். இதனை,
ஒருபுறம்
பெண் போகப்பொருள்
அல்ல என்று
பெண்ணியவாதிகள்
போர்க்கொடி தூக்கினாலும்
போகப்பொருள்
என்னும்
பொன்கூண்டுக்குள்
அடைந்துகொள்ளும்
இந்தக் கிளிகள்
தானாய்ப்
பறந்தால்தான் உண்டு
எனத் தெளிவுறுத்துகிறார் கவிஞர்.
பெண்ணுக்குப் பெண்ணே துன்பமிழைக்கும் நிலையும் சமுதாயத்தில்
காணப்படுகிறது. கல்வி கற்கும் பெண்ணுக்குத் தங்கள் கடமையை முடித்துவிடத் திருமணம்
செய்விக்கும் பெற்றோர்கள்,
தம் பெண் குழந்தைகள் அவர்களது மாமியார்
வீட்டில் மகிழ்வோடும் சுதந்திரத்தோடும் வாழ வேண்டும் என நினைக்கும் தாய்மார்கள், தங்கள் மருமகளிடம் மாற்றாந்தாய்
மனப்பான்மையோடு தம் அதிகாரத்தைக் காட்டும் மாமியார்கள் எனப் பட்டியல் நீள்வதையும்
கவிஞர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. எனவே ஆண்களும் பெண்களும் தத்தமது குறைகளைக்
களைந்து செயலாற்றுதல் இன்றைய இன்றியமையாத் தேவையாகும். அதனைச் செய்யாமல்
வருடத்திற்கொரு முறை பெண்களின் புகழைப் பாடி, பெருமையைப்
பேசி மகளிர் தினம் கொண்டாடுவதில் மகத்துவம் ஏதுமில்லை.
பெண் தனது ஆளுமையைத் தானே உணர முடியாத
நிலையிலும் உணர்ந்தாலும் அதை வெளிப்படுத்தமுடியாத நிலையிலும் இந்தச் சமூகம் இருந்த
நிலை மாறி பெண் தன்னை உணர்ந்து வருகிறாள். தனது இருப்பை உணர்த்தி வருகிறாள்.
இவற்றையெல்லாம் தமது கவிதையில் வெளிப்படுத்தும் கவிஞர் அவற்றைக் கூறப் பல்வேறு
உத்திகளைக் கையாள்வது தனிச் சிறப்பு.
அன்னை என்பவள்,
அல்லும் பகலும்
அயராது உழைத்துக்
கரையும் சந்தனம்!
நல்ல கணவன் என்பவன்,
நெஞ்சக் கூட்டில்
மனைவியை அடைகாக்கும்
அன்பு நிழல்!
சுமைகளைத் தான்சுமந்து
மனைவியை மயிலிறகால்
மீட்டும்
தாயுள்ளம்!
எனும் கூற்றுகளில் அழகிய உவமைகள்
பொதிந்திருப்பதைக் காணலாம்.
“காமப் பசு
மோப்பம் பிடித்து
மேட்டு நிலங்களை
மேய்ந்துவிட்டுப்
பதுங்குவதற்குப்
பள்ளத்தாக்குகள்
தேடிப் பரிதவிக்கும்”
இங்குதான்
பச்சைக் கிளிகளை
ருசி பார்க்கும்
இந்திரப்
பூனைகள்
தந்திரத்தோடு பதுங்கிக்கிடக்கின்றன
என்பன போன்ற அற்புதப் படிமங்களையும் இக்
கவிதைத் தொகுப்பில் பரக்கக் காணலாம்.
சொற்கள் தமக்குரிய பொருட்செறிவோடும்
எண்ணத்தைத் தோற்றுவிக்கும் சக்தியோடும் வெளிப்படும்போது அங்கே கவிதைக் கலை
சிறக்கிறது. அத்தகைய சிறந்த சொல்லாடல்களைக் கவிஞர் இந்நூலில் படைத்திருக்கிறார்.
அவன் ‘புணர்’ஜென்மம்
இயன்றால் உடலோடு
இயலாவிடில் உள்ளத்தோடு
மகிழம்பூ நெறத்தழகி
மந்தாரக் காதழகி
மாம்பழத்த கன்னமாக்கி
மைஉருண்ட கண்களாக்கி
மாதுளய உதட்டுக்கேத்தி
மல்லிமொட்டுப் பல்வரிச
மருக்கொழுந்து வாசத்தோட
மாராப்பு மேலாட
மானுபோல
துள்ளிவந்தா
என்பன சொல்லழகால் சிறந்த கவியழகை நமக்கு
விருந்தாய்ப் படைக்கின்றன.
தனக்கு வாய்க்கப்போகும் மனைவி அழகு, அறிவு, அன்பு, அடக்கம், கற்பு என அனைத்தும் நிறைந்த முப்பெரும் தேவியர்போல் இருக்கவேண்டும்
என ஒருவன் இறைவனிடம் வரம் கேட்க,
எனக்கே வாய்க்கல அதுபோல
என் மனைவிகள் பாத்துமா தெரியல?
எனக்
கடவுள் கண்ணீர் விட்டாராம்
எனக் கூறும்போது அங்கதச் சுவை தொனிக்கிறது.
மேற்குறித்த நிலைகளில் சிறந்த கவிதைத்
திறத்தோடும் கருத்துக் கூறுகளோடும் கவிஞர் இந்நூலினைப் படைத்திருப்பதைக் கவியுலகம்
பெருமகிழ்வோடு வரவேற்கும் என்பது திண்ணம்.
“இதுநாள் வரை, பெண்கள் மூளையின் இருப்பறையில் மட்டன், புலவு, மசாலா, பூரி, தனியாப் பொடி,
உப்பு, சர்க்கரை, பால், எண்ணெய், நெய் என்று இவற்றைப் போட்டு
நிரப்பியிரா விட்டால் ஒருவேளை அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம். தண்ணீர்
கெட்டிலின் மூக்கு நுனி ஆவியைப் பார்த்திருக்கலாம். புதுக் கண்டங்களைக்
கண்டுபிடித்திருக்கலாம். கைலாச பர்வதத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம்.
குகைக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம். படித்திருக்கலாம். போர்கள், சிறைகள், தூக்கு மரங்கள், ரசாயன
யுத்தங்கள் இல்லாத உலகத்தை உண்டாக்கி இருக்கலாம்” என்பார் எழுத்தாளர் அம்பை. பெண்களும் ஆண்களுக்குச் சமமாக அறிவியல், கலை என அனைத்துத் துறைகளிலும் முன்னேற
விடாமல் சமையலறையும் படுக்கையறையும் மழுங்கடித்து விட்டன எனலாம்.
இத்தகு கருத்துகளை ஒரு கவிதை ஓவியமாகவே
தீட்டியிருக்கின்றார் கவிஞர் அவ்வை நிர்மலா அவர்கள். இந்நூலைக் கற்கும் அனைவர்
உள்ளங்களிலும் சமத்துவம் குடியேறும். “பெண்ணுலகை
அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும்
இடம் என்ற பெரியாரின் கொள்கையின் வழிநின்று சமையல் அறையில் என்ற இந்நூலை வடித்துச்
சமத்துவ முளை முளைக்க விதை தூவியிருக்கின்றார் கவிஞர். அது முளைத்துக் கிளைத்து
இச் சமுதாயத்திற்குப் பெரிதும் பயன் நல்குகின்ற இதுபோன்ற விதைகளை இடையறாது தூவிச்
சொல்லேர் உழவராக இந்நானிலத்தைப் பண்படுத்த வேண்டும் என்பது என் பேரவா. அதற்கான
வாழ்த்துப் பூச்செண்டுகளை இத் தருணத்தில் அவர் கைகளில் சேர்க்கிறேன்.
என்றும் அன்புடன்,
க. ரேவதி