Wednesday, 9 September 2020

வில்லியம் கோல்டிங்

 William Golding

வில்லியம் கோல்டிங்

(19.9.1911 - 19.6.1993)

தந்தை பள்ளியாசிரியர்

தாயும் பணிக்குச் சென்ற பாவை

அதனால்தான்

கல்வி அவருக்குக்

கற்கண்டாய் இனித்தது!

 

குழந்தைப் பருவத்தில்

தாய் சொன்ன

தேவதைக் கதைகள்

கற்பனைச் சிறகைக்

கட்டிவிட்டன!

 

பட்டப் படிப்பின் படித்துறை

இவருக்குக் கவித்துறையானது!

பட்டம் பெறும்போதே

கவிதைத் தொகுப்பொன்று

வெளிவந்து

மாணவனைக்

கவிஞனாகக் காட்சிப்படுத்தியது!

 

ஆங்கில இலக்கியத்தை

ஆழங்கால் பட்டதால்

பள்ளி ஆசிரியராய்ப்

பரிமளித்தார்!

 

இரண்டாம் உலகப்போரில்

கப்பற்படையில்

வீரராய்க் கால்பதித்துக்

கடல் அளந்தார்!

 

கப்பற்படை அனுபவங்கள்

கடலுக்கடியில் வட்டம்

கடல்குதிரை

முதலான கதைகளுக்குக்

கரு அளித்தன!

 

பித்தளைப் பட்டாம்பூச்சி

அவருடைய இறப்பிற்குப் பின்னர்தான்

அச்சிலேறி பறக்க ஆரம்பித்தது!

இரட்டை நாவும்

அவர் இறப்பிற்குப்பின்

பேச ஆரம்பித்து

பிறரைப் பேசவைத்தது!

 

நோபல் பரிசு

இந்த

பிரித்தானிய நாவலாசிரியர்

இலக்கியத் தொண்டின்

இலக்கானது!

 

புக்கர் பரிசும்

கோல்டிங் எழுத்துக்கு

புகழ் சேர்த்தது!

 

எண்பத்தோரு அகவை வாழ்ந்த

இந்த

பிரித்தானிய நாவலாசிரியர்

பிரித்தானியாவின்

ஐம்பது தலைசிறந்த

நாவலாசிரியர்களின்

பட்டியலிட்டால்

மூன்றாம் நபராய்

முன்னணி வகிப்பவர்!

 

அறிவியல் புதினம்

வரலாற்றுப் புதினம்

சாகசப் புதினம்

மேடை நாடகம்

கவிதை

என்று

அத்துணைக் களத்திலும்

கால்பதித்தவர்!

 

ஆங்கில இலக்கியத்தில்

இவர் கணக்கில்

பன்னிரு புதினங்கள்

பங்களிப்பு செய்தன!

 

‘பெண்ணே ஆக்கும் சக்தி’

என்ற

இவரது கவிதை

பெண்குலத்திற்கு

இவரிட்ட பொன்னாரம் மட்டுமல்ல

புகழாரமும் கூட!

No comments:

Post a Comment