Wednesday, 9 September 2020

வில்லியம் கோல்டிங்

 William Golding

வில்லியம் கோல்டிங்

(19.9.1911 - 19.6.1993)

தந்தை பள்ளியாசிரியர்

தாயும் பணிக்குச் சென்ற பாவை

அதனால்தான்

கல்வி அவருக்குக்

கற்கண்டாய் இனித்தது!

 

குழந்தைப் பருவத்தில்

தாய் சொன்ன

தேவதைக் கதைகள்

கற்பனைச் சிறகைக்

கட்டிவிட்டன!

 

பட்டப் படிப்பின் படித்துறை

இவருக்குக் கவித்துறையானது!

பட்டம் பெறும்போதே

கவிதைத் தொகுப்பொன்று

வெளிவந்து

மாணவனைக்

கவிஞனாகக் காட்சிப்படுத்தியது!

 

ஆங்கில இலக்கியத்தை

ஆழங்கால் பட்டதால்

பள்ளி ஆசிரியராய்ப்

பரிமளித்தார்!

 

இரண்டாம் உலகப்போரில்

கப்பற்படையில்

வீரராய்க் கால்பதித்துக்

கடல் அளந்தார்!

 

கப்பற்படை அனுபவங்கள்

கடலுக்கடியில் வட்டம்

கடல்குதிரை

முதலான கதைகளுக்குக்

கரு அளித்தன!

 

பித்தளைப் பட்டாம்பூச்சி

அவருடைய இறப்பிற்குப் பின்னர்தான்

அச்சிலேறி பறக்க ஆரம்பித்தது!

இரட்டை நாவும்

அவர் இறப்பிற்குப்பின்

பேச ஆரம்பித்து

பிறரைப் பேசவைத்தது!

 

நோபல் பரிசு

இந்த

பிரித்தானிய நாவலாசிரியர்

இலக்கியத் தொண்டின்

இலக்கானது!

 

புக்கர் பரிசும்

கோல்டிங் எழுத்துக்கு

புகழ் சேர்த்தது!

 

எண்பத்தோரு அகவை வாழ்ந்த

இந்த

பிரித்தானிய நாவலாசிரியர்

பிரித்தானியாவின்

ஐம்பது தலைசிறந்த

நாவலாசிரியர்களின்

பட்டியலிட்டால்

மூன்றாம் நபராய்

முன்னணி வகிப்பவர்!

 

அறிவியல் புதினம்

வரலாற்றுப் புதினம்

சாகசப் புதினம்

மேடை நாடகம்

கவிதை

என்று

அத்துணைக் களத்திலும்

கால்பதித்தவர்!

 

ஆங்கில இலக்கியத்தில்

இவர் கணக்கில்

பன்னிரு புதினங்கள்

பங்களிப்பு செய்தன!

 

‘பெண்ணே ஆக்கும் சக்தி’

என்ற

இவரது கவிதை

பெண்குலத்திற்கு

இவரிட்ட பொன்னாரம் மட்டுமல்ல

புகழாரமும் கூட!

Tuesday, 21 January 2020

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 36


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 36
'கொழந்த அப்பாவ உரிச்சிகிட்டுப் பொறந்திருக்கு' அனைவரும் சொல்லிச் சொல்லிப் பூரித்தனர்.
'சுந்தரி செல்லம்! செல்லம்மா! குட்டிம்மா! டார்லிங்!' உருகினான் சந்திரன்.
மெல்லக் கண்களைத் திறந்துபார்த்தாள் சுந்தரி.
அவள் தலையை வருடிக் கொடுத்தான். முகத்தில் முத்தமழை. அவள் தியாகத்திற்கு அவன் கொடுத்த பரிசு.
செய்தி அறிந்தாள் தாட்சாயணி. அவளுக்கு உண்மை நிலவரம் நன்றாக விளங்கியது. அவளுடைய ஷேர் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்துவிட்டது. அதன் புள்ளிகள் இனி உயர வாய்ப்பே இல்லை.
     சற்றே தெளிவடைந்தாள் சுந்தரி. 'இதோ பாருங்க! நீங்க ஏன் என்னக் காப்பத்தனீங்க? என்னக் காப்பாத்த முயற்சி பண்ணாதீங்கன்னு முதல்லயே நான் சொல்லலையா, அப்படி இருக்கும்போது ஏங்க என்னக் காப்பத்தனீங்க?'
அடுத்த கட்ட நடிப்பைத் தொடர்ந்தாள் சுந்தரி. குழந்தைக்குப் பால் கொடுக்கமாட்டேன் என்றாள்.
'இதோ பாருங்க! இந்தக் கொழந்த அக்காவுக்கு மட்டும்தான் சொந்தம். அதனால இந்தக் கொழந்தைக்கு என் பால கொடுக்கமாட்டேன். என் பால குடிச்சுட்டான்னா அதுக்கே பழக்கமாயிடுவான். அவனுக்கு இப்போதே புட்டிப்பால் கொடுத்துப் பழக்கிடுங்க. நான் இவன் பொறந்தப்பவே செத்திருக்கணும். ஆனா என்னக் காப்பாத்திட்டீங்க. நான் பண்ணின சத்தியம் என்னாவறது? என்னால எழுந்திருக்க முடியலையே? எழுந்திருக்க முடிஞ்சா இப்பவே எங்கயாச்சும் கண் காணாத எடத்துக்குப் போயிடுவேன். அக்கா வாழ்க்கையில தலையிடவே மாட்டேன்!' - புலம்பினாள்.
'பச்சை உடம்புக்காரி இப்படி அனத்தக் கூடாது' என்று அண்ணி கண்டித்தாள்.
தாய் உயிரோடு இருக்கும்போது தாய்ப்பால் இன்றிக் குழந்தை மறுக்கப்படுவது கொலைக்கு நிகரானது என்ற நிதர்சன உண்மை அவனுக்கு உணர்த்தப்பட்டது.
குழந்தைக்குப் பால் ஊட்டுமாறு வற்புறுத்தினான் சந்திரன். ஏதோ வேண்டா வெறுப்பாகத் தருவதுபோல் பால் கொடுத்தாள். 'பாருங்க ஒங்க கொழந்தய! எப்படிப் பால் குடிக்குது?' என்று இடையிடையே சொல்லவும் அவள் தவறவில்லை.
'இதோ பாருங்க! எல்லாம் நான் எழுந்து நடமாடற வரைதான். நான் டிஸ்சார்ஜ் ஆயிட்டேன்னா நான் ஏற்கெனவே வாக்குக் கொடுத்த மாதிரி என் தாலிய காளியாத்தா உண்டியல்ல போட்டுட்டு கிருஷ்ணா ராமான்னு கண்காணாத எடத்துக்குப் போயிடுவேன்'.
பதினைந்து நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.
தாட்சாயணி குழந்தை பெற்றுக்கொள்ளாத மலடியாதலால் அவளுக்குக் குழந்தையைச் சரியாகத் தூக்கத் தெரியாது, கழுத்தில் உரம் விழுந்துவிடும் என்றெல்லாம் அண்ணியும் சுந்தரியும் சந்திரனிடம் கூறி அக்குழந்தையைத் தாட்சாயணி தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டனர். அருகில் நெருங்கவோ, பார்க்கவோகூட தாட்சாயணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவை எதுவும் சந்திரன் கண்களுக்கும் படவில்லை, அறிவுக்கும் எட்டவில்லை.
(தொடரும்)

Monday, 13 January 2020

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 35


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 35
நாளை மாலை டெலிவரி ஆகிவிடும். நீங்கள் மருத்துவமனையில் இன்றே அட்மிட் செய்துவிடுங்கள் என்று சுந்தரியைச் செக்கப் செய்த டாக்டர் கூறினார்.
சுந்தரி, சந்திரனைவிட தனக்கு எப்பொழுது விடிவுகாலம் வரும் என்று நாட்களை எண்ணிக்கொண்டிருந்த தாட்சாயணிக்கு மனத்தில் மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது.
ஆனால் அம் மகிழ்ச்சி உண்மையில் மனத்தில் எங்கே இருக்கிறது என்று அவளால் உணர முடியவில்லை. அழுகிய முட்டையில் மஞ்சட்கரு வெள்ளைக்கருவில் கலங்கிக் காணப்படுவதைப்போல் சந்தேகத்தில் சிக்கிக்கொண்டது மகிழ்ச்சி. இது சாத்தியமா? இது சாத்தியமா? என்று நிமிடத்திற்கு நூறு தடவை மனம் கேட்டது.
பதில் இரண்டு நாளில் தெரிந்துவிடும்.
சந்திரன் சொன்னதுபோல் நடந்தால் இன்னும் இரண்டு நாளில் இப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
மருத்துவமனையில் தானும் சுந்தரியுடன் இருக்கப் போவதாகக் கூறினாள் தாட்சாயணி. இனி அக் குழந்தையை ஏற்றுத் தன் குழந்தையாக வளர்க்க வேண்டும்? என்ன இருந்தாலும் அது தன் கணவனின் இரத்தமல்லவா?
இவ் விஷயத்தைக் கேட்டதும் சுந்தரிக்குத் திக்கென்றது. தான் டெலிவரியாகி மயக்க நிலையில் இருக்கும்போது தான்சொன்ன தியாக சத்தியத்தை நினைவுபடுத்திச் சந்திரனின் மனத்தைத் தாட்சாயணி கலைத்துவிட்டால் என்னசெய்வது?
'நீதானே குழந்தை பெற்றுக்கொடுத்ததும் விலகிக்கொள்கிறேன் என்றாய்?' என்று சந்திரன் தன்னைநோக்கி வினா தொடுத்தால்? அவனுக்கு என்ன பதில் சொல்லமுடியும்?
குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் தன்னை அவன் கை கழுவிவிட்டால் என்ன செய்வது?
இன்னும் முடிச்சுகளை இறுக்கிப் போடவேண்டும். அவ்வாறு போடப்படும் முடிச்சுகள் அவனால் எளிதில் அவிழ்க்கப்பட்டு விடக்கூடாது. முடிச்சுகளும் வெளியில் தெரியக் கூடாது.
'என்னங்க. . . , அக்கா என்கூட இருக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இது அவங்க கொழந்த, அவங்க தன் குழந்ததைய மொதல்ல பாக்க வேணாமா? அவங்களும் என்மேல இருக்கற கோவத்த எல்லாம் வுட்டுட்டு இப்ப வரேன்னு சொல்லும்போது மனசு அப்படியே சந்தோஷத்துல மிதக்குது.
அதுமட்டும் இல்லிங்க. கொழந்தயக் கொடுத்துட்டு, இதோ பாருக்கா. . . !நான் ஒனக்குச் செஞ்ச சத்தியத்தக் காப்பாத்திட்டேன்! இத உன் கொழந்தையா வளத்துப் பெரிய ஆளா ஆக்கு, நான் இப்போ கடவுள்கிட்ட போறேன்னு சொல்லிட்டு அக்கா மடியில அப்படியே தலைய வெச்சு உசுர விட்டுடணும்னு ஆசையாயிருக்கு!'
'என்ன இப்படியெல்லாம் பேசற? ஒனக்கு ஒன்னும் ஆகாம நாங்க பாத்துக்குவோம்டா . . .  நீ பேசாம இரு குட்டிம்மா!'
'இல்லிங்க, நான் அதுக்குச் சொல்லல, ஆனா நான் இத தியாகமாதான் செஞ்சாலும் அக்கா என்ன இத்தன நாளாப் புரிஞ்சுக்கல, என்னப் புரிஞ்சுக்காம சரியா சாப்புடாம, தூங்காம ரொம்ப எளைச்சுட்டாங்க. அதனால அக்காவுக்கு நான் என்ன அறியாம கஷ்டம் கொடுத்துட்டேன்ற குற்றஉணர்ச்சி என்னை வாட்டிக்கிட்டே இருக்கு. இப்படி இருக்கும்போது பிரசவ நேரத்துல அவங்க என்கூட இருந்தா அவங்க ஒடம்பப் பாத்துப்பாத்து நான் ரொம்ப வேதனப்படுவேன். அதனால உங்கக் கொழந்தைக்கு ஏதேனும் ஆயிடுமோன்னு பயமா இருக்குங்க. கொழந்த பொறந்த அடுத்தநொடியே அவங்க வந்து பாக்கட்டும். நான் ஒன்னும் தடை சொல்லல, ஆனா. . . இப்ப என்கூட வரவேணாங்க!' – தழுதழுத்தாள் சுந்தரி.
சுந்தரி தாட்சாயணி மீதுகொண்ட பாசம் சந்திரனை நெக்குருகச் செய்தது. மாணிக்கவாசகரின் திருவாசகத்தைப் படித்துப் பக்தர்கள் எப்படி நெக்குருகி ஆனந்தக் கண்ணீர் சொரிவார்களோ அப்படி சுந்தரியின் பேச்சைக் கேட்கக்கேட்கச் சந்திரன் நெஞ்சு உருகினான்.
'நீ ஒன்னும் சங்கடப்படாத சுந்தரி, உன் தியாக குணத்தப் பத்தி எனக்குத் தெரியாதா? நான் தாட்சாயணி கிட்ட பக்குவமாச் சொல்லிடறேன். நீ இப்ப அந்தத் திருப்பதி பாலாஜிய மட்டும் நெனக்சுக்கோ!'
'ஆமாங்க, நான் சொன்ன மாதிரி பாலாஜியே வந்து பொறக்கப் போறான். அதுவும் அவனுக்கு உகந்த சனிக்கிழமைல, அவனுக்குப் பாலாஜின்னு பேர் வெச்சிடுங்க, நான் அவனப் பாப்பேனோ? மாட்டேனோ?'
'அய்யோ! அப்படிப் பேசாத என் சுந்தரி செல்லம்!' – செல்லமாகக் கண்டித்தான் சந்திரன்.
தாட்சாயணி மருத்துவமனையில் உடனிருப்பது தடை செய்யப்பெற்றது. என்றாலும் அவ்வப்போதைய சுந்தரியின் உடல் நிலவரத்தைக் கேட்டு அவள் அறிந்துகொண்டாள்.
'நார்மல் டெலிவரி ஆகிவிடும்' என்று டாக்டர் கூறினார். சிசேரியன் செய்தால் தனக்கு லாபம் கிடைக்கும் என்று சில டாக்டர்கள் நார்மல் டெலிவரியைச் சிசேரியன் ஆக்குவதுண்டு. அவ்வப்போது இப்படிப்பட்ட மகப்பேறு மருத்துவர்களை இனம்காணும் தருணங்களில் மக்கள் கூக்குரலிடுவதும், அவர்களைத் திட்டிப் போஸ்டர் ஒட்டுவதும் நடைமுறையில் காண்பதுண்டு. ஆனால் சுந்தரியின் டாக்டர் திருமதி டிஸோஸா உண்மையிலேயே கருணை உள்ளம் கொண்டவர்; காசுக்கு ஆசைப்படாதவர்; திறமையானவர். அவர் சொன்னால் சொன்ன நேரத்திற்குக் குழந்தை பிறக்கும் என்பார்கள்.
சுந்தரிக்கு நார்மல் டெலிவரிதான் என்று திட்டவட்டமாகச் சொன்னார் அவர்.
ஆனால் சுந்தரி மாலைநேரத்தில் நல்லநேரம் இல்லை என்றாள். அவன் காலை ஏழுமணிக்குப் பிறந்துவிட வேண்டும் என்றாள். தனக்குச் சிசேரியன் செய்து அக்குழந்தையை எடுத்துவிடவேண்டும் என்று அடம்பிடித்தாள். அப்படித்தான் அசரீரி சொன்னதாகச் சொன்னாள். டிஸோஸா வற்புறுத்தல்களை எல்லாம் அசட்டை செய்தாள்.
'நார்மல் டெலிவரியே ஆயிடும்னு டாக்டர் சொல்றப்போ ஏன் தேவையில்லாம வயித்த அறுக்கணும்னு அடம்பிடிக்கிறே!' – உருகினான் சந்திரன்.
'நான் வாழணும்னு ஆசைப்பட்டாத்தானே நார்மல் டெலிவரி ஆகட்டும்னு காத்திருப்பேன். ஆனா நான் உங்களுக்காக, அக்காவுக்காகத்தான் இந்தக் குழந்தையையே பெத்துக்குடுக்கப் போறேன். அப்புறம் என் உசுரப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்? நான் பெத்துக் கொடுக்கப்போற புள்ளய இந்த உலகமே தெய்வமா நினைக்கும், அவன் ஒரு யுக புருஷனா இருப்பான், ராமன்மாதிரி, கிருஷ்ணன் மாதிரி, விவேகானந்தர் மாதிரி, நான் சொல்றது நடக்குதா இல்லையான்னு பாருங்க!'
கேட்ட சந்திரனுக்குப் புல்லரித்தது. சுந்தரி நிஜமாகவே தியாகசீலிதான். அவளை ஒரு சதவீதம்கூட சந்தேகிக்க முடியாது. இவளைப்போய் தாட்சாயணி நம்ப மறுக்கிறாளே! இப்படிப்பட்ட அபூர்வப் பெண்ணை நாம் புராணங்களில்தான் பார்க்கமுடியும்!'
நூற்றுக்குத் தொண்னூறு குழந்தைகள் சிசேரியன் மூலம்தான் நலமாகப் பிறக்கின்றன என்பது சுந்தரிக்குத் தெரியும். சிசேரியன் செய்துகொண்டவர்கள் நார்மல் டெலிவரி ஆனவர்களைக் காட்டிலும் இறப்புப் பயம் இல்லாமல் இருக்கலாம் என்பதும் அவளுக்குத் தெரியும். மேலும் நார்மல் டெலிவரியானால் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள். சிசேரியன் செய்தால்தான் பத்துப் பதினைந்து நாட்கள் மருத்துவமனையிலே காலந்தள்ள முடியும். சந்திரனையும் பச்சாதாபப்பட வைக்கமுடியும். சந்திரன் சரியான மரமண்டை என்பதைச் சுந்தரி எப்போதோ கண்டுபிடித்துவிட்டாள்.
நார்மல் டெலிவரிக்கு ஒத்துக்கொள்ளாமல் சிசேரியன் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்திய அவளது தியாகத் தன்மையை தாட்சாயணிக்கு எடுத்துரைத்துச் சிலாகித்தான் சந்திரன். தாட்சாயணியின் மனத்தில் உவாமுள் நெருடியது. ஏதோ ஒரு பயங்கரத்திட்டத்தை வகுத்துவிட்டாள் சுந்தரி. ஆனால் எதைச் சொன்னாலும் சந்திரன் மயக்கத்திலிருந்து மீளப் போவதில்லை. அவன் சுந்தரியின் நன்கு வடிவமைக்கப்பட்ட நடிப்பு என்ற பிரௌன் சுகர் அருந்தி மயங்கிக் கிடக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள்.
திரைப்படத்தில் பாத்திரங்களின் நடிப்பில் மயங்கி அதனை உண்மையானது என்று எண்ணி நாம் கண்ணீர் வடிப்பதில்லையா, அப்போது நாம் கற்பனைக் கதையொன்றைப் பார்க்கிறோம் என்னும் உண்மையையே மறந்துவிடுகிறோமே, அதுதான் நடிகர்களின் வெற்றி.
சுந்தரியும் கைதேர்ந்த நடிகையானாள். அவள் நடிப்பில் சந்திரன் ஒரு மாய உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் காணும் உலகம் பொய்யானது என்று சொன்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
சுந்தரியின் விருப்பப்படியே சிசேரியன் மூலம் குழந்தை நல்லபடியாகப் பிறந்தது. முன்பே ஸ்கேன் பார்த்து ஆண் குழந்தை என்று தெரிந்துதான்வைத்திருந்தார்கள். இருந்தாலும் பிரசவம் முடிந்ததும் வெளியே வந்த நர்ஸ் ஆண்குழந்தை என்றதும் புதிதான செய்தியொன்றைக் கேட்டதுபோல் அங்கேயிருந்தவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
'பாலாஜி! பாலாஜி!' ஆனந்தத்தில் கூவினான் சந்திரன்.
சுந்தரியின் நினைவு வந்தது.
'சுந்தரி! சுந்தரி!' துடித்தான்.
'அவங்களும் சௌக்கியமா இருக்காங்க சார்! கொஞ்சம் மயக்கமா இருப்பாங்க, நீங்கபோய் டிஸ்டர்ப் பண்ணாமப் பாருங்க'.

(தொடரும்)