Showing posts with label புதினம். Show all posts
Showing posts with label புதினம். Show all posts

Tuesday, 21 January 2020

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 36


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 36
'கொழந்த அப்பாவ உரிச்சிகிட்டுப் பொறந்திருக்கு' அனைவரும் சொல்லிச் சொல்லிப் பூரித்தனர்.
'சுந்தரி செல்லம்! செல்லம்மா! குட்டிம்மா! டார்லிங்!' உருகினான் சந்திரன்.
மெல்லக் கண்களைத் திறந்துபார்த்தாள் சுந்தரி.
அவள் தலையை வருடிக் கொடுத்தான். முகத்தில் முத்தமழை. அவள் தியாகத்திற்கு அவன் கொடுத்த பரிசு.
செய்தி அறிந்தாள் தாட்சாயணி. அவளுக்கு உண்மை நிலவரம் நன்றாக விளங்கியது. அவளுடைய ஷேர் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்துவிட்டது. அதன் புள்ளிகள் இனி உயர வாய்ப்பே இல்லை.
     சற்றே தெளிவடைந்தாள் சுந்தரி. 'இதோ பாருங்க! நீங்க ஏன் என்னக் காப்பத்தனீங்க? என்னக் காப்பாத்த முயற்சி பண்ணாதீங்கன்னு முதல்லயே நான் சொல்லலையா, அப்படி இருக்கும்போது ஏங்க என்னக் காப்பத்தனீங்க?'
அடுத்த கட்ட நடிப்பைத் தொடர்ந்தாள் சுந்தரி. குழந்தைக்குப் பால் கொடுக்கமாட்டேன் என்றாள்.
'இதோ பாருங்க! இந்தக் கொழந்த அக்காவுக்கு மட்டும்தான் சொந்தம். அதனால இந்தக் கொழந்தைக்கு என் பால கொடுக்கமாட்டேன். என் பால குடிச்சுட்டான்னா அதுக்கே பழக்கமாயிடுவான். அவனுக்கு இப்போதே புட்டிப்பால் கொடுத்துப் பழக்கிடுங்க. நான் இவன் பொறந்தப்பவே செத்திருக்கணும். ஆனா என்னக் காப்பாத்திட்டீங்க. நான் பண்ணின சத்தியம் என்னாவறது? என்னால எழுந்திருக்க முடியலையே? எழுந்திருக்க முடிஞ்சா இப்பவே எங்கயாச்சும் கண் காணாத எடத்துக்குப் போயிடுவேன். அக்கா வாழ்க்கையில தலையிடவே மாட்டேன்!' - புலம்பினாள்.
'பச்சை உடம்புக்காரி இப்படி அனத்தக் கூடாது' என்று அண்ணி கண்டித்தாள்.
தாய் உயிரோடு இருக்கும்போது தாய்ப்பால் இன்றிக் குழந்தை மறுக்கப்படுவது கொலைக்கு நிகரானது என்ற நிதர்சன உண்மை அவனுக்கு உணர்த்தப்பட்டது.
குழந்தைக்குப் பால் ஊட்டுமாறு வற்புறுத்தினான் சந்திரன். ஏதோ வேண்டா வெறுப்பாகத் தருவதுபோல் பால் கொடுத்தாள். 'பாருங்க ஒங்க கொழந்தய! எப்படிப் பால் குடிக்குது?' என்று இடையிடையே சொல்லவும் அவள் தவறவில்லை.
'இதோ பாருங்க! எல்லாம் நான் எழுந்து நடமாடற வரைதான். நான் டிஸ்சார்ஜ் ஆயிட்டேன்னா நான் ஏற்கெனவே வாக்குக் கொடுத்த மாதிரி என் தாலிய காளியாத்தா உண்டியல்ல போட்டுட்டு கிருஷ்ணா ராமான்னு கண்காணாத எடத்துக்குப் போயிடுவேன்'.
பதினைந்து நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.
தாட்சாயணி குழந்தை பெற்றுக்கொள்ளாத மலடியாதலால் அவளுக்குக் குழந்தையைச் சரியாகத் தூக்கத் தெரியாது, கழுத்தில் உரம் விழுந்துவிடும் என்றெல்லாம் அண்ணியும் சுந்தரியும் சந்திரனிடம் கூறி அக்குழந்தையைத் தாட்சாயணி தூக்கவிடாமல் பார்த்துக் கொண்டனர். அருகில் நெருங்கவோ, பார்க்கவோகூட தாட்சாயணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவை எதுவும் சந்திரன் கண்களுக்கும் படவில்லை, அறிவுக்கும் எட்டவில்லை.
(தொடரும்)

Monday, 13 January 2020

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 35


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 35
நாளை மாலை டெலிவரி ஆகிவிடும். நீங்கள் மருத்துவமனையில் இன்றே அட்மிட் செய்துவிடுங்கள் என்று சுந்தரியைச் செக்கப் செய்த டாக்டர் கூறினார்.
சுந்தரி, சந்திரனைவிட தனக்கு எப்பொழுது விடிவுகாலம் வரும் என்று நாட்களை எண்ணிக்கொண்டிருந்த தாட்சாயணிக்கு மனத்தில் மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது.
ஆனால் அம் மகிழ்ச்சி உண்மையில் மனத்தில் எங்கே இருக்கிறது என்று அவளால் உணர முடியவில்லை. அழுகிய முட்டையில் மஞ்சட்கரு வெள்ளைக்கருவில் கலங்கிக் காணப்படுவதைப்போல் சந்தேகத்தில் சிக்கிக்கொண்டது மகிழ்ச்சி. இது சாத்தியமா? இது சாத்தியமா? என்று நிமிடத்திற்கு நூறு தடவை மனம் கேட்டது.
பதில் இரண்டு நாளில் தெரிந்துவிடும்.
சந்திரன் சொன்னதுபோல் நடந்தால் இன்னும் இரண்டு நாளில் இப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
மருத்துவமனையில் தானும் சுந்தரியுடன் இருக்கப் போவதாகக் கூறினாள் தாட்சாயணி. இனி அக் குழந்தையை ஏற்றுத் தன் குழந்தையாக வளர்க்க வேண்டும்? என்ன இருந்தாலும் அது தன் கணவனின் இரத்தமல்லவா?
இவ் விஷயத்தைக் கேட்டதும் சுந்தரிக்குத் திக்கென்றது. தான் டெலிவரியாகி மயக்க நிலையில் இருக்கும்போது தான்சொன்ன தியாக சத்தியத்தை நினைவுபடுத்திச் சந்திரனின் மனத்தைத் தாட்சாயணி கலைத்துவிட்டால் என்னசெய்வது?
'நீதானே குழந்தை பெற்றுக்கொடுத்ததும் விலகிக்கொள்கிறேன் என்றாய்?' என்று சந்திரன் தன்னைநோக்கி வினா தொடுத்தால்? அவனுக்கு என்ன பதில் சொல்லமுடியும்?
குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் தன்னை அவன் கை கழுவிவிட்டால் என்ன செய்வது?
இன்னும் முடிச்சுகளை இறுக்கிப் போடவேண்டும். அவ்வாறு போடப்படும் முடிச்சுகள் அவனால் எளிதில் அவிழ்க்கப்பட்டு விடக்கூடாது. முடிச்சுகளும் வெளியில் தெரியக் கூடாது.
'என்னங்க. . . , அக்கா என்கூட இருக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இது அவங்க கொழந்த, அவங்க தன் குழந்ததைய மொதல்ல பாக்க வேணாமா? அவங்களும் என்மேல இருக்கற கோவத்த எல்லாம் வுட்டுட்டு இப்ப வரேன்னு சொல்லும்போது மனசு அப்படியே சந்தோஷத்துல மிதக்குது.
அதுமட்டும் இல்லிங்க. கொழந்தயக் கொடுத்துட்டு, இதோ பாருக்கா. . . !நான் ஒனக்குச் செஞ்ச சத்தியத்தக் காப்பாத்திட்டேன்! இத உன் கொழந்தையா வளத்துப் பெரிய ஆளா ஆக்கு, நான் இப்போ கடவுள்கிட்ட போறேன்னு சொல்லிட்டு அக்கா மடியில அப்படியே தலைய வெச்சு உசுர விட்டுடணும்னு ஆசையாயிருக்கு!'
'என்ன இப்படியெல்லாம் பேசற? ஒனக்கு ஒன்னும் ஆகாம நாங்க பாத்துக்குவோம்டா . . .  நீ பேசாம இரு குட்டிம்மா!'
'இல்லிங்க, நான் அதுக்குச் சொல்லல, ஆனா நான் இத தியாகமாதான் செஞ்சாலும் அக்கா என்ன இத்தன நாளாப் புரிஞ்சுக்கல, என்னப் புரிஞ்சுக்காம சரியா சாப்புடாம, தூங்காம ரொம்ப எளைச்சுட்டாங்க. அதனால அக்காவுக்கு நான் என்ன அறியாம கஷ்டம் கொடுத்துட்டேன்ற குற்றஉணர்ச்சி என்னை வாட்டிக்கிட்டே இருக்கு. இப்படி இருக்கும்போது பிரசவ நேரத்துல அவங்க என்கூட இருந்தா அவங்க ஒடம்பப் பாத்துப்பாத்து நான் ரொம்ப வேதனப்படுவேன். அதனால உங்கக் கொழந்தைக்கு ஏதேனும் ஆயிடுமோன்னு பயமா இருக்குங்க. கொழந்த பொறந்த அடுத்தநொடியே அவங்க வந்து பாக்கட்டும். நான் ஒன்னும் தடை சொல்லல, ஆனா. . . இப்ப என்கூட வரவேணாங்க!' – தழுதழுத்தாள் சுந்தரி.
சுந்தரி தாட்சாயணி மீதுகொண்ட பாசம் சந்திரனை நெக்குருகச் செய்தது. மாணிக்கவாசகரின் திருவாசகத்தைப் படித்துப் பக்தர்கள் எப்படி நெக்குருகி ஆனந்தக் கண்ணீர் சொரிவார்களோ அப்படி சுந்தரியின் பேச்சைக் கேட்கக்கேட்கச் சந்திரன் நெஞ்சு உருகினான்.
'நீ ஒன்னும் சங்கடப்படாத சுந்தரி, உன் தியாக குணத்தப் பத்தி எனக்குத் தெரியாதா? நான் தாட்சாயணி கிட்ட பக்குவமாச் சொல்லிடறேன். நீ இப்ப அந்தத் திருப்பதி பாலாஜிய மட்டும் நெனக்சுக்கோ!'
'ஆமாங்க, நான் சொன்ன மாதிரி பாலாஜியே வந்து பொறக்கப் போறான். அதுவும் அவனுக்கு உகந்த சனிக்கிழமைல, அவனுக்குப் பாலாஜின்னு பேர் வெச்சிடுங்க, நான் அவனப் பாப்பேனோ? மாட்டேனோ?'
'அய்யோ! அப்படிப் பேசாத என் சுந்தரி செல்லம்!' – செல்லமாகக் கண்டித்தான் சந்திரன்.
தாட்சாயணி மருத்துவமனையில் உடனிருப்பது தடை செய்யப்பெற்றது. என்றாலும் அவ்வப்போதைய சுந்தரியின் உடல் நிலவரத்தைக் கேட்டு அவள் அறிந்துகொண்டாள்.
'நார்மல் டெலிவரி ஆகிவிடும்' என்று டாக்டர் கூறினார். சிசேரியன் செய்தால் தனக்கு லாபம் கிடைக்கும் என்று சில டாக்டர்கள் நார்மல் டெலிவரியைச் சிசேரியன் ஆக்குவதுண்டு. அவ்வப்போது இப்படிப்பட்ட மகப்பேறு மருத்துவர்களை இனம்காணும் தருணங்களில் மக்கள் கூக்குரலிடுவதும், அவர்களைத் திட்டிப் போஸ்டர் ஒட்டுவதும் நடைமுறையில் காண்பதுண்டு. ஆனால் சுந்தரியின் டாக்டர் திருமதி டிஸோஸா உண்மையிலேயே கருணை உள்ளம் கொண்டவர்; காசுக்கு ஆசைப்படாதவர்; திறமையானவர். அவர் சொன்னால் சொன்ன நேரத்திற்குக் குழந்தை பிறக்கும் என்பார்கள்.
சுந்தரிக்கு நார்மல் டெலிவரிதான் என்று திட்டவட்டமாகச் சொன்னார் அவர்.
ஆனால் சுந்தரி மாலைநேரத்தில் நல்லநேரம் இல்லை என்றாள். அவன் காலை ஏழுமணிக்குப் பிறந்துவிட வேண்டும் என்றாள். தனக்குச் சிசேரியன் செய்து அக்குழந்தையை எடுத்துவிடவேண்டும் என்று அடம்பிடித்தாள். அப்படித்தான் அசரீரி சொன்னதாகச் சொன்னாள். டிஸோஸா வற்புறுத்தல்களை எல்லாம் அசட்டை செய்தாள்.
'நார்மல் டெலிவரியே ஆயிடும்னு டாக்டர் சொல்றப்போ ஏன் தேவையில்லாம வயித்த அறுக்கணும்னு அடம்பிடிக்கிறே!' – உருகினான் சந்திரன்.
'நான் வாழணும்னு ஆசைப்பட்டாத்தானே நார்மல் டெலிவரி ஆகட்டும்னு காத்திருப்பேன். ஆனா நான் உங்களுக்காக, அக்காவுக்காகத்தான் இந்தக் குழந்தையையே பெத்துக்குடுக்கப் போறேன். அப்புறம் என் உசுரப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்? நான் பெத்துக் கொடுக்கப்போற புள்ளய இந்த உலகமே தெய்வமா நினைக்கும், அவன் ஒரு யுக புருஷனா இருப்பான், ராமன்மாதிரி, கிருஷ்ணன் மாதிரி, விவேகானந்தர் மாதிரி, நான் சொல்றது நடக்குதா இல்லையான்னு பாருங்க!'
கேட்ட சந்திரனுக்குப் புல்லரித்தது. சுந்தரி நிஜமாகவே தியாகசீலிதான். அவளை ஒரு சதவீதம்கூட சந்தேகிக்க முடியாது. இவளைப்போய் தாட்சாயணி நம்ப மறுக்கிறாளே! இப்படிப்பட்ட அபூர்வப் பெண்ணை நாம் புராணங்களில்தான் பார்க்கமுடியும்!'
நூற்றுக்குத் தொண்னூறு குழந்தைகள் சிசேரியன் மூலம்தான் நலமாகப் பிறக்கின்றன என்பது சுந்தரிக்குத் தெரியும். சிசேரியன் செய்துகொண்டவர்கள் நார்மல் டெலிவரி ஆனவர்களைக் காட்டிலும் இறப்புப் பயம் இல்லாமல் இருக்கலாம் என்பதும் அவளுக்குத் தெரியும். மேலும் நார்மல் டெலிவரியானால் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள். சிசேரியன் செய்தால்தான் பத்துப் பதினைந்து நாட்கள் மருத்துவமனையிலே காலந்தள்ள முடியும். சந்திரனையும் பச்சாதாபப்பட வைக்கமுடியும். சந்திரன் சரியான மரமண்டை என்பதைச் சுந்தரி எப்போதோ கண்டுபிடித்துவிட்டாள்.
நார்மல் டெலிவரிக்கு ஒத்துக்கொள்ளாமல் சிசேரியன் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்திய அவளது தியாகத் தன்மையை தாட்சாயணிக்கு எடுத்துரைத்துச் சிலாகித்தான் சந்திரன். தாட்சாயணியின் மனத்தில் உவாமுள் நெருடியது. ஏதோ ஒரு பயங்கரத்திட்டத்தை வகுத்துவிட்டாள் சுந்தரி. ஆனால் எதைச் சொன்னாலும் சந்திரன் மயக்கத்திலிருந்து மீளப் போவதில்லை. அவன் சுந்தரியின் நன்கு வடிவமைக்கப்பட்ட நடிப்பு என்ற பிரௌன் சுகர் அருந்தி மயங்கிக் கிடக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள்.
திரைப்படத்தில் பாத்திரங்களின் நடிப்பில் மயங்கி அதனை உண்மையானது என்று எண்ணி நாம் கண்ணீர் வடிப்பதில்லையா, அப்போது நாம் கற்பனைக் கதையொன்றைப் பார்க்கிறோம் என்னும் உண்மையையே மறந்துவிடுகிறோமே, அதுதான் நடிகர்களின் வெற்றி.
சுந்தரியும் கைதேர்ந்த நடிகையானாள். அவள் நடிப்பில் சந்திரன் ஒரு மாய உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் காணும் உலகம் பொய்யானது என்று சொன்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
சுந்தரியின் விருப்பப்படியே சிசேரியன் மூலம் குழந்தை நல்லபடியாகப் பிறந்தது. முன்பே ஸ்கேன் பார்த்து ஆண் குழந்தை என்று தெரிந்துதான்வைத்திருந்தார்கள். இருந்தாலும் பிரசவம் முடிந்ததும் வெளியே வந்த நர்ஸ் ஆண்குழந்தை என்றதும் புதிதான செய்தியொன்றைக் கேட்டதுபோல் அங்கேயிருந்தவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
'பாலாஜி! பாலாஜி!' ஆனந்தத்தில் கூவினான் சந்திரன்.
சுந்தரியின் நினைவு வந்தது.
'சுந்தரி! சுந்தரி!' துடித்தான்.
'அவங்களும் சௌக்கியமா இருக்காங்க சார்! கொஞ்சம் மயக்கமா இருப்பாங்க, நீங்கபோய் டிஸ்டர்ப் பண்ணாமப் பாருங்க'.

(தொடரும்)

Thursday, 5 December 2019

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 34


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 34

பள்ளியில் மூத்த ஆசிரியர் ஒருவர் ஓய்வு பெற்றுவிட்டார்.
அடுத்து ஒருவர் அந்த வேலைக்கு நியமனம் செய்யப்பட்டு அவர் வந்து சேர்வதற்குள் ஆறுமாதம் ஆகிவிடாதா? அதுவரை என்ன செய்வது? தலைமையாசிரியர் என்ற முறையில் அப்பாடத்தைச் சந்திரன்தானே சரிகட்ட வேண்டும்? அதனால் பள்ளியில் சற்று அதிகமாகவே அவன் வேலைப்பளு கூடியது. அதுவும் சுந்தரிக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.
நேரம் கழித்துக் களைத்துவரும் சந்திரனைத் தன் அறையில் பிடித்துவைத்துக் கொள்வாள் சுந்தரி. 'இதோ பாருங்கள்! உங்கள் பையன் இங்கே உதைக்கிறான்! அங்கே உதைக்கிறான்!' என்றுகூறி அவன் கவனம் முழுக்கத் தன்மீதே இருக்குமாறு பார்த்துக்கொண்டாள்.
'களைப்பாயிருக்கிறது', 'மயக்கமாயிருக்கிறது' என்றுகூறி முகத்தைச் சோர்வாக வைத்துக்கொள்வாள்.
'ஜுஸ் போட்டுத் தாருங்கள்', 'கை, கால் விரல்களில் சொடுக்கு எடுத்துவிடுங்கள்', 'கை வலிக்கிறது, ஆயின்மெண்ட் தடவுங்கள்' என்று ஏதாவதொரு சிறுசிறு வேலைகளை வைத்து அவனைத் தாட்சாயணியைப் பற்றிச் சிந்திக்கவிடாமல் கட்டிப்போட்டாள்.
ஞாயிற்றுக் கிழமைகளில் 'நான் அந்தக் கடவுளுக்கு வேண்டிக்கிட்டேன்', 'இந்தக் கடவுளுக்கு வேண்டிக்கிட்டேன்', 'பொறக்கப்போற நம்ம கொழந்தைக்கு அர்ச்சனை செய்யணும்' என்று அவனை மெதுமெதுவாகக் கரைத்து வெளியே அழைத்துச்சென்று விடுவாள்.
அந்த நேர்த்திக் கடன்களை அண்ணியோடு சென்று செய்யமுடியாது என்றும் குழந்தைக்குக் காரணமானவர் முக்கியமாக உடன் இருக்க வேண்டும் என்றும் சென்டிமெண்ட் எடுத்துவிடுவாள்.
முதலில் சந்திரனை அறிந்தவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று அவனைப் பாதுகாப்பதுபோல் தூரத்தில் இருந்த கோயில்களுக்கு அழைத்துச் சென்றாள்.
நாளடைவில் 'அலைச்சல்அதிகமாகிறது', 'உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை', 'குழந்தைக்கு ஆகாது' என்று மெதுமெதுவாகத் தூரத்தைக் குறைத்தாள்.
கடைசியில் அவன் வாழிடத்தைச் சுற்றி அவனை அறிமுகமானோர் பலரும் வளையவரும் இடங்களிலுள்ள கோயில்களில் பூஜைகளை வைத்துக்கொண்டாள்.
இப்படி அவளது தியாக உணர்வை அவன் சிறிதும் சந்தேகிக்காதவண்ணம் நிகழ்ச்சிகளை வடிவமைத்தாள்.
வீட்டிலேயே அடைந்துகிடப்பதும் எப்போதும் தாட்சாயணியின் சோக உருவத்தைக் காண்பதும் மனஇறுக்கத்தை ஏற்படுத்துகிறது என்றாள் சுந்தரி. தாட்சாயணி வீட்டில் இருக்கும்போது தன்னால் சந்திரனிடம் கலகலப்பாகப் பேச இயலவில்லை என்றாள். அது தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றாள்.
எதைச் சொன்னால் சந்திரன் அசைந்து கொடுப்பான் என்பதைச் சுந்தரி வெகுசாமர்த்தியமாக அறிந்து வைத்திருந்தாள். அதனை நேர்த்தியாகவும் எடுத்துரைக்கத் தெரிந்து வைத்திருந்தாள். அவள் பழந்தின்று கொட்டை போட்ட நெளிவுசுளிவுகள் அறிந்த கிராமத்துப் பெண்ணல்லவா?
கொஞ்சம் கொஞ்சமாக 'பீச் போகணும்', 'பார்க் போகணும்' என்று சந்திரனிடம் தன் ஆசைகளை வெளியிட்டாள்.
'பிள்ளைத்தாச்சி ஆசப்பட்டா கட்டாயம் நெறவேத்தியே ஆவணும்' என்று பின்பாட்டுப் பாடினாள் அண்ணி கலா.
கர்ப்பிணிப் பெண்கள் காலார நடந்தால்தான் சுகப்பிரசவம் ஆகும் என்று ஒரு அறிவியல் தகவலையும் முன்வைத்தாள்.
இப்படி அங்கே, இங்கே என்று சந்திரனின் புது மனைவியாகிய தன்னை அவனுக்கு அறிமுகமானோர் மெல்லமெல்ல அறியுமாறு செய்துவிட்டாள் சுந்தரி. சும்மா வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தால் அவளுக்குச் சமுதாய அங்கீகாரம் எப்போது கிடைக்கும்?
விஷயம் அறிந்தவர்கள் 'ஆமாம், குழந்தை இல்லாம வெறும் சொத்து வச்சுக்கிட்டு அவர் என்ன செய்வார் பாவம்? அவர் பேர் சொல்ல ஒரு புள்ள வேணாமா?' என்று தங்களுக்குள் கூறி சந்திரனின் செய்கையை நியாயப்படுத்திப் பேசிக்கொண்டனர்.
தனக்கு அபூர்வமாகக் கிடைக்கும் சிறிய நிமிடப் பொழுதுகளின் இடைவெளியில் எப்போதோ எட்டிப்பார்க்கும் குற்றவுணர்ச்சியின் உந்துதலில் சந்திரன் தாட்சாயணியைப் பார்க்கச் செல்வான்.
அப்போதெல்லாம் அவள் அகமும் முகமும் மலரத் தன்னை வரவேற்று நலம்விசாரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். தூக்குத் தண்டனைக் கைதியைப் பார்த்து நன்றாக இருக்கிறாயா? என்று விசாரித்துவிட்டு அவன் நலத்தோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் டாக்டரின் குரூர மனத்தைப் போன்று இருந்தது அவன் செய்கை.
தனக்குக் கிடைக்கும் அச் சிறு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தாள் தாட்சாயணி. சுந்தரியின் செயல்களில் பயங்கர உள்நோக்கம் இருக்கிறது என்று எடுத்துக்காட்டினாள். ஆனால் சந்திரன் அதனை முற்றிலும் நம்ப மறுத்தான். தான் நல்லவன் என்றும் அதனால் தான் பழகுகின்ற மக்களும் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் மூடத்தனமான நம்பிக்கையை ஆணித்தரமாக முன்வைத்தான்.
'ஒரு மகான் நடந்துபோற பாதை ஓரத்துல யாரோ போயிருக்கிற மலத்தை மிதிச்சுட்டா, அதை மகான் மிதிச்சார் என்பதற்காக அது மலம் இல்லன்னு ஆயிடுமா? மகான் மிதிச்சாலும் மலம், மலம்தான். மகான் மிதிச்சுட்டார் என்பதற்காக அவர் கால்ல விழற பக்தர்லாம் அந்த மலத்தச் சந்தனமா நெனச்சி அவங்க நெத்தியில இட்டுக்க முடியுமா?' தாட்சாயணியின் இக்கேள்வியை வறட்டுவாதம் என்று கூறிப் புறந்தள்ளினான் சந்திரன்.
அவள் தன் எதிர்காலத்தைப் பற்றிய சந்தேகத்தை எழுப்பும் போதெல்லாம் மாறாமல் ஒரே பதிலைக் கிளிப்பிள்ளைபோல் சொன்னான்.
தாட்சாயணி அதனை முற்றிலும் நம்பவில்லை என்றாலும் இத்தனை நாள் தன்னைப் புரிந்துகொண்டு வாழ்ந்தவன் பொய் சொல்வானா என்று ஏதோ ஒரு மூலையில் தொக்கிநின்ற சந்தேகத்தைப் பிடித்துக்கொண்டு நடுக்கடலில் சிறு மரத்துண்டைப் பற்றிக்கொண்டு எப்படியேனும் கரை சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருப்பவர் மனநிலையில் ஊசலாடிக் கொண்டிருந்தாள்.
(தொடரும்)

Wednesday, 4 December 2019

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 33


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 33
தாட்சாயணி இல்லத்தின் சமையலறை சுந்தரியின் அண்ணியினுடைய முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் எட்டுக்கு நாலு சிறிய அறையில் எட்டி அடி வைக்கவும் முடியாமல் காற்றின்றி திணறிய கலா இன்று மாடுலர் கிச்சன் என்ற நவீன வசதியுடன் கூடிய பதினைந்துக்குப் பதினைந்து சதுரஅடி கொண்ட விசாலமான சமையலறையில் வலம்வந்தாள்.
சுந்தரிதான் எவ்வளவு சாமர்த்தியக்காரி. அவள் சந்திரன் வீட்டில் இருப்பதை ஓரிருவர் சொல்லத்தான் செய்தார்கள். இருந்தாலும் சுந்தரியின் கட்டளைப்படியே கலா இம்மியும் பிசகாமல் விநாயகத்தைச் செயல்பட வைத்தாள்.
நான்கு நாட்கள் முன்னதாக சுந்தரியிடமிருந்து கலாவுக்குப் போன் வந்தது.
'அண்ணி, நீங்களும் அண்ணாவும் எப்படி இருக்கீங்க, சுதா, சுமித்ரா நல்லா இருக்காங்களா அண்ணி?'
'எல்லாரும் நல்லா இருக்காங்க சுந்தரி. நீஎப்படிஇருக்க?'
'நல்லாவே இருக்கேன் அண்ணி, என் வாழ்க்கை இப்ப உங்க கையிலதான் இருக்கு அண்ணி'
'என்னடி சொல்றே? கொஞ்சம் புரியும்படியாச் சொல்லேன்'.
'அண்ணி, நான் நெனச்ச மாதிரியே எல்லாம் நடந்துக்கிட்டிருக்கு!  ஆனா இன்னும் என் கழுத்துல தாலி ஏறல அண்ணி, அதுக்கு இந்தச் சந்தர்ப்பத்த விட்டா வேற சந்தர்ப்பம் கெடக்கவே கெடைக்காது.'
'அதுக்கு நான் என்னடி பண்றது சுந்தரி?'
'நீங்க எல்லாரும் நாளன்னைக்கு வீட்டுக்குக் கௌம்பி வாங்க. இப்பதான் உங்களுக்கு நான் இருக்கற எடம் தெரிஞ்சமாதிரி காட்டிக்கணும். என் கழுத்துல தாலி கட்டியாகணும்னு அவரைக் கட்டாயப்படுத்துங்க. திடீர்னு நீங்க செய்யற தாக்குதலை அவரால தனியா நின்னு சமாளிக்க முடியாது. அவரோட மொத சம்சாரத்தாலும் ஒன்னும் செய்ய முடியாது. இப்ப அவர் என் வயித்துல இருக்கிற கொழந்த மேல அவ்வளவு பாசமா இருக்காரு. அந்தக் கொழந்தய இழக்க அவரு விரும்பமாட்டாரு. அதனால நீங்க கொடுக்கற நெருக்கடில அவரு எனக்குக் கட்டாயமா தாலி கட்டிடுவாரு. அதுக்கு அடுத்த நாளே நல்ல முகூர்த்தநாள். கல்யாணத்துக்கு வேண்டிய தாலி, புடவ, வேஷ்டி எல்லாத்தையும் ரெடி பண்ணி வெச்சிடுங்க. மறுநாள் கல்யாணத்துக்கு வர்றதுக்கு முக்கியமான சொந்தக்காரங்க சிலரையும் நமக்குத் தோதா யோசிச்சு வைங்க. போட்டோ, வீடியோ எல்லாத்துக்கும் அரேன்ஜ் பண்ணிடுங்க.
நீங்க எங்க வீட்டுக்கு வந்தப்புறம் நான் உங்ககிட்ட ஒரு வார்த்தகூட முகம்குடுத்துப் பேசமாட்டேன். பேச சந்தர்ப்பமும் இருக்காது. என்னை எதையும் பேச விடாம வாய்க்கு வந்தபடி நீங்க ரெண்டுபேரும் என்னை நல்லா திட்டணும். அதக்கேட்டுட்டு அவரு கண்கலங்கணும். உங்ககிட்ட இருந்து என்னைக் காப்பத்தணும்னு அவரு நெனக்கணும். நேரத்துக்கு ஏத்த மாதிரி நீங்கதான் புரிஞ்சி நடந்துக்கணும். அண்ணனையும் நீங்கதான் சரியா வழிநடத்தணும். எப்படி இருந்தாலும் கல்யாணம் கட்டாயம் நடந்தே ஆகணும். அப்பறமா நடக்கறத நான் பாத்துப்பேன். ஒங்க செலவுக்கெல்லாம் ஒரு லட்சரூபா ரெடிபண்ணித் தாரேன்'.
இலட்ச ரூபாய் தருவதாகச் சுந்தரி சொன்னது கலாவின் காதில் தேனாய் இனித்தது. சுந்தரியின் திட்டத்திற்கு எந்தவித பங்கமும் நேர்ந்துவிடாமல் செயலாற்ற வேண்டியது தன் பொறுப்பு என்பது கலாவிற்கு நன்றாகவே புரிந்தது.
சுந்தரி எவ்வளவு சாகசக்காரியாக இருக்கிறாள். தானும் அவளிடத்தில் வெகுஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதும் அவளுக்குப் புரிந்தது.
கலாவும் லேசுப்பட்டவள் இல்லை. சுந்தரியின் திட்டத்தை நன்றாகவே புரிந்துகொண்டு செயலாற்றினாள். இரு பெண்களின் கூட்டுறவால் எல்லாம் இனிதாக முடிந்தது.
சந்திரன் – சுந்தரியின் திருமணப் புகைப்படம் படுக்கைஅறைச் சுவரில் பெரிதாக மாட்டப்பட்டது. அதனை ஹாலில் மாட்ட வேண்டும் என்றுதான் சுந்தரி நினைத்தாள். ஆனால் ரொம்பவும் சந்திரனை வளைத்தால் அது விபரீதமாகி ஒடிந்துவிட்டால் என்ன செய்வது? அவன் சந்தேகப்பட்டுவிட்டால் காரியம் கெட்டுவிடும். எனவே அதற்குச் சுந்தரி அடம்பிடிக்காமல் விட்டுவிட்டாள். போட்டோவில் சுந்தரி சந்திரனின் தோளோடு தோள் நின்று மாலையும் கழுத்துமாக வெற்றிப் புன்னகை சிந்திக்கொண்டிருந்தாள்.
தான் சமைத்து உணவைக் கொண்டுசென்றால் தாட்சாயணி உதாசீனம் செய்கிறாள் என்று சுந்தரியின் அண்ணி சந்திரனிடம் முறையிட்டாள். அதனால் தாட்சாயணிக்கு வேளாவேளைக்குத் தன்னால் காபி, டிபன், சாப்பாடெல்லாம் தரமுடியாது என்று சுந்தரியின் அண்ணி திட்டவட்டமாகக் கூறிவிட்டாள்.
ஒரு வேலைக்காரி அமர்த்தப்பட்டாள்.
பிறகு வேளாவேளைக்கு தாட்சாயணியின் அறையில் சிற்றுண்டி, இரவுஉணவு வந்தது. அவள் உண்டாளா? இல்லையா? என்று யாருக்கும் அக்கறையில்லை.
அவள் சரியாகச் சாப்பிடுவதில்லை என்னும் செய்தியைச் சந்திரனிடம் சுந்தரி தெரிவிக்க விரும்பவில்லை. அவளைப் பற்றிச் சிந்திக்கும் தருணங்களை ஏன் ஏற்படுத்தித் தர வேண்டும்?
தாட்சாயணியின் நகைகளும் புடவைகளும் அண்ணியின் கண்ணில் பட்டன.
சந்திரன் மனத்தை மெதுமெதுவாகக் கரைத்தாள். புள்ளதாச்சிப் பொண்ணுக்கு அதையெல்லாம் போட்டு அழகு பாக்கணும். அப்பத்தான் கொழந்த அழகாப் பொறக்கும் என்றாள்.
தாட்சாயணி ஒன்றும் சொல்லமாட்டாள், உங்களுக்கு என்னென்ன வேணுமோ எல்லாம் எடுத்துப் போட்டுக்கங்க என்றான் சந்திரன்.
சுந்தரியும் அண்ணியும் குழந்தைகளும் தங்கள் மனம் விரும்பியபடியெல்லாம் தாட்சாயணியின் அணிகலன்கள், ஆடைகள் ஆகியவற்றை அணிந்து பாழ்படுத்தினர்.
தாட்சாயணி பொக்கிஷம்போல் பாதுகாத்து வைத்த அவளது கல்யாணப் புடவையைக்கூட சுந்தரி ஒருமுறை அணிந்துகொண்டு வெளியே சென்றாள். அவளது கால் கொலுசில் ஜரிகை மாட்டி புடவையின் பார்டர் டார்டாராகக் கிழிந்துவிட்டது. 'புடவ பழசாப்போய் நஞ்சி போச்சி' என்று வெகு அலட்சியாகமாகக் கூறி அதனைக் கழற்றிக் குவியலாகப் போட்டாள் சுந்தரி.
தாட்சாயணிதான் மனம் பொறுக்காமல் அதனை வாரிச் சுருட்டிக் கொண்டுபோய் நன்றாக நீவி மடித்துத் தனது அறையில் வைத்துக்கொண்டாள். தனது கல்யாணப் புடவையின் மதிப்பு தெரியாமல் சுந்தரி இப்படிச் செய்துவிட்டாளே என்று சந்திரனிடம் கூறி அங்கலாய்த்தாள் தாட்சாயணி. 'சரிசரி விடு, இதெல்லாம் ஒரு விஷயமா பெரிசுபடுத்தாதே! நாளான புடவை நஞ்சிதான் போகும். வேணும்னா இதவிட காஸ்ட்லியா ஒரு புடவ வாங்கித்தரேன் கட்டிக்கோ', - சந்திரன் சுந்தரியைவிட மிக அலட்சியமாக பதில் சொன்னான்.
உயிரும் உடலுமான தன்னையே பழசாகி விட்டாள் என்று களைந்து போட்டவன் அஃறிணைப் பொருளாகிய தன் புடவை மீதா அக்கறைகொள்ளப் போகிறான்?
பல சிறந்த புராஜெக்டுகளை வடிவமைக்கத் தாட்சாயணிக்கு உதவிய கணினி இப்போது கலாவின் மகள்கள் சுமித்ராவும் சுதாவும் கேம்ஸ் விளையாடும் விளையாட்டுப் பொருளானது. அவள் சேர்த்து வைத்த கலைப்பொருட்கள் விளையாட்டுப் பொம்மைகளாயின.
இப்பொழுதெல்லாம் சந்திரனைப் பள்ளியை விட்டுச் சீக்கிரம் வீட்டிற்கு வரவேண்டும் என்று சுந்தரி வற்புறுத்துவதில்லை. அவன் வீட்டிற்குச் சீக்கிரம் வந்தால் தாட்சாயணியிடம் பேச அதிகநேரம் கிடைக்கும். அதனால் தன்னைப் பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்றும் தன்னை அண்ணி நன்றாகப் பார்த்துக் கொள்கிறார் என்றும் கூறி வைத்தாள்.
(தொடரும்)

Tuesday, 3 December 2019

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 32


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 32
சுந்தரி தினந்தோறும் கோயிலுக்குச் சென்றதுகூட ஒருவகை நாடகம்தான். அவள் எந்தக் கோயிலுக்கும் செல்லவில்லை. தாட்சாயணியோ சந்திரனோ பார்க்கும்போது கோயிலுக்குக் கிளம்ப ஆயத்தங்கள் செய்வாள். அவர்கள் அலுவலகம் சென்ற பின்னர் உடைமாற்றிக்கொண்டு 'அக்கடா' என்று படுத்து ஓய்வெடுப்பாள்.
ஒருமுறை தாட்சாயணி அலுவலகம் செல்லும்போது பாதிவழியில் முக்கியமான கோப்பு ஒன்றை மறந்துவிட்டது ஞாபகம் வந்தது. அன்று அதனைத் தபாலில் அனுப்பியாக வேண்டும். வேறு வழியின்றி பேருந்தைவிட்டு இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தாள். அன்று சுந்தரி மாங்காடு செல்வதாகக் கூறியிருந்தாள். தாட்சாயணி புறப்பட்டபோது சுந்தரியும் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். இந்நேரம் அவள் மாங்காடே போய்ச் சேர்ந்திருப்பாள் என்று எண்ணினாள் தாட்சாயணி.
கதவு திறக்கும் சத்தம் கேட்டு மேலிருந்து எட்டிப் பார்த்தாள் சுந்தரி. யாராக இருக்கும்?  
எதேச்சையாக அன்னாந்து பார்த்த தாட்சாயணி, சுந்தரி நிற்பதைக் கவனித்தாள். அதுவும் சாதாரண உடையில்! என்ன சுந்தரி கோயிலுக்குப் போகலையா?
'அத ஏம்மா கேக்கறீங்க? பஸ் ஸ்டாண்டு வரைக்கும் போய்ட்டேன். பஸ்கூட வந்துடிச்சி. ஏறலாம்னு போனா மயக்கம் தள்ளுது. மயக்கம் வந்துவிழுந்துட்டா என்ன பண்றதுன்னு கொஞ்சம் ரெஸ்டு எடுத்துட்டுப் போலாம்னு வந்துட்டேன்மா. இப்ப ஒடம்பு தேவலாம். கௌம்பலாம்னுதான் எழுந்திரிச்சு வந்தேன்.'
'சரிதான்! எப்பப்பாரு ஒருபொழுதுன்னு சரியாச் சாப்பிடாம ஒடம்ப வருத்திக்கிற. அப்பறம் மயக்கம் வராம என்னாகும்? இன்னைக்குக் கோயிலுக்குப் போ வேணாம். சாமி ஒன்னும் உன் கண்ணைக்குத்திடாது போ'.
'ஐய்யய்யோ அப்படியெல்லாம் சொல்லாதிங்க. வேண்டுதல்னா அதக் கட்டாயம் நெறவேத்திடனும். அதுவும் நான் இன்னைக்கு ஒங்களுக்காகத்தான் வேண்டிக்கிட்டேன்' என்று தாட்சாயணியைக் குளிப்பாட்டினாள்.
அவள் ஒருபொழுது என்று கூறியதெல்லாம் கூட அப்பட்டமான பொய். சந்திரன் அவள் செலவுகளுக்காக அடிக்கடி நிறைய பணம் தந்தான். அவள் பழங்கள், பிஸ்கெட்டுகள் என்று வாங்கித் தன் அறையில் அடுக்கி வைத்திருந்தாள். யாரும் அவள் மொட்டைமாடி அறைக்குச் செல்லமாட்டார்கள். எனவே அவள் அடுக்கி வைத்திருந்த தீனி வகையறாக்கள் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
இப்படி அவள் தினமும் கோயிலுக்குச் செல்வதாகக் கூறித் தன்னிடமிருந்த விபூதி, குங்குமப் பொட்டலங்களில் கொஞ்சம் எடுத்துக் கோயில்களில் கொடுக்கப்பட்டதாக நாடகமாடினாள். விடுமுறை நாளில் தெருமுனைக் கோயிலுக்குச் சென்று இருந்துவிட்டு வெகுதூரம் சென்று வந்ததாக ஏமாற்றினாள். தாட்சாயணி அக்கம்பக்கத்தாரிடம் அனாவசியமாக ஊர்வம்பு பேசாதவளாதலால் சுந்தரி பற்றிய செய்திகள் எவையும் அவள் காதில் விழவில்லை.
இப்படித் தன் காரியங்கள் யாவும் முறையாக நடந்து எந்தச் சந்தேகத்தையும் ஏற்படுத்தாமல் தன் கழுத்தில் தாலி ஏறி, தான் அசைக்கமுடியாத இடத்தை அடைந்துவிட்டதை எண்ணித் தனக்குத்தானே தட்டிக்கொடுத்துக் கொண்டாள் சுந்தரி.
(தொடரும்)

Monday, 2 December 2019

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 31


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 31
  சுந்தரியின் நெற்றியில் ஏற்பட்ட காயம் ஆழமாக இல்லை. சிறியதாகத்தான் இருந்தது.
அடிக்கடிக் குழந்தைகள் கீழே விழுந்து அடிபட்டு விடுவது சகஜம். அதனால் எப்பொழுதும் அவள் வீட்டில் காயத்திற்குப் போடும் பிளாஸ்திரி ஸ்டாக்கில் இருக்கும். அதில் ஒன்றை எடுத்துச் சுந்தரியின் நெற்றியில் போட்டாள் கலா.
சுந்தரி பீரோவின் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். அவள் அண்ணன் நன்றாகவே அறைந்திருந்தான். கன்னத்தில் அவன் அறைந்ததின் வீக்கம் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் தாங்கும்.
அவள் நினைத்தது போலவே கன்னத்தின் வீக்கமும் விரும்பியது போலவே நெற்றிக் காயமும் அமைந்திருந்தன. மனசுக்குத் திருப்தியாக இருந்தது.
சுந்தரி மெதுவாக அண்ணியிடம் பேச்சுக் கொடுத்தாள்.
கலாவுக்கும் சுந்தரியின் போக்கால் எரிச்சல்தான் ஏற்பட்டது. அவள் செயலால் தங்கள் குடும்பமும் சேர்ந்தல்லவா தலைகுனிய வேண்டும்? சுந்தரி பேச ஆரம்பித்ததும் மேகலா எழுந்துபோக முனைந்தாள்.
'அண்ணி, நான் பேசறதக் கொஞ்சம் காதுகொடுத்துக் கேளுங்க, பிளீஸ் அண்ணி', மேலே போகாதவாறு அண்ணியின் காலைப் பிடித்துக் கொண்டாள்.
சுந்தரி என்னதான் சொல்கிறாள் என்று கேட்டுத்தான் பார்ப்போம் என்று கலா கீழே சற்றுத் தள்ளியே அமர்ந்தாள்.
'நான் எதையும் எடுத்தேன் கவுத்தேன்னு செஞ்சுடல, நான் யார் போட்ட சொக்குப் பொடியிலயும் மயங்கிக் கெட்டுப் போயிடல. எல்லாம் நல்லா யோசிச்சுத்தான் செஞ்சேன்.'
'இப்படி வாயும் வயிறுமா நின்னுகிட்டு நான் யோசிச்சுத்தான் இப்படி ஆனேன்னு சொல்றியே இதுஉனக்கே அபத்தமா தெரியலையா?'
'அண்ணி, நான் எதச் செஞ்சாலும் நம்ம எல்லாரோட சுகத்தையும் மனசுல வெச்சுக்கிட்டுத்தான் செய்வேன்னு உங்களுக்கே நல்லாத் தெரியும்.'
'கல்யாணமே ஆகாம இப்படிப் புள்ளைய வாங்கிட்டு நிக்கறியே, இதுல போய் என்ன நன்மை இருந்திடப் போகுது? இந்தச் சேதி வெளியில தெரிஞ்சா உங்க அண்ணன் வெளியில நடமாட முடியுமா? நான்தான் நாலு கல்யாணம் காட்சின்னு போகமுடியுமா? நான் என்ன ஆம்பள புள்ளைங்களையா பெத்து வெச்சிருக்கேன்?  ரெண்டையும் பொட்டையா இல்ல பெத்து வெச்சிருக்கேன்? அவங்களுக்கு எப்படி கல்யாணம்லாம் ஆவும்னு யோசிச்சுப் பாத்தியா?'
'எல்லாம் யோசிச்சுப் பாக்காம இருப்பேனா அண்ணி? நான் உங்க மேலயும் அண்ணன் மேலயும் எவ்வளவு பாசம் வெச்சிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும். சுமித்ராவும் சுதாவும் பெரிய படிப்பெல்லாம் படிச்சி நல்ல பணக்கார மாப்பிள்ளைங்களாக் கட்டிக்கிட்டு நல்லா வாழனும்னு நான் எத்தன நாள் கனவு கண்டிருப்பேன்?'
'பேசறதெல்லாம் நல்லாத்தான் பேசறே ஆனா உன் செயல்லதான் எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டுத் திரியறே'
'அண்ணி, நீங்க குறுக்ககுறுக்கப் பேசினா நான் எப்படிச் சொல்ல வந்ததச் சொல்ல முடியும், தயவுசெஞ்சி அண்ணன் வர்றதுக்குள்ள எல்லாத்தையும் சொல்லவிடுங்க அண்ணி.'
சுந்தரியின் குரலில் ஒலித்த நிதானம் கலாவைச் சிந்திக்க வைத்தது. சுந்தரியின் பேச்சில் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது. அண்ணன் வருவதற்குள் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்று துடிக்கிறாள். விநாயகம் சரியான சொதப்பல் பேர்வழி. எதையும் சரியாகக் கேட்காமல் ஆச்சா போச்சா என்று குதிப்பான். இனி குறுக்கே பேசாமல் சுந்தரி என்னதான் சொல்கிறாள் என்று கேட்போம். மௌனத்தை முன்நிறுத்தினாள் கலா.
'அண்ணி, இப்ப எதையும் விவரமாக் கேக்காதீங்க, நான் நாளைக்கு ஸ்கூலுக்கு எப்பவும் போல போவேன். ஆனா சாயந்திரம் நம்ம வீட்டுக்குத் திரும்பிவர மாட்டேன். யாராச்சும் நான் எங்கன்னு கேட்டா சென்னையில வேல செய்யிறேன்னு சொல்லிடுங்க. கொஞ்சநாள் கழிச்சு நானே உங்களுக்குப் போன் பன்னுவேன். அப்ப நீங்கல்லாம் என்ன மாதிரி நடந்துக்கனும்னு நான் சொல்றேனோ அதே மாதிரி நடந்துகோங்க.  அதுக்கு இடையில என்னப் பத்தி ஏதாச்சும் சங்கதி கேள்விப்பட்டாக்கூட ஒன்னும் தெரியாத மாதிரி இருந்துடுங்க. அண்ணன் ஏதாச்சும் எக்குதப்பாச் செஞ்சிக் குட்டையக் குழப்பாமப் பாத்துக்கோங்க.
நான் சொல்றபடி நடந்திங்கன்னா என் வாழ்க்கையும் சௌக்கியமா இருக்கும், உங்களுக்கும் என்னால எந்தவிதப் பொருள் நஷ்டமும் இருக்காது, அத்தோட சுதா, சுமித்ரா படிப்புக்கும் நிச்சயமா என்னால உதவ முடியும். அவங்கள ஈசியா டாக்டருக்குப் படிக்க வைக்கலாம். அது என் பொறுப்பு, அப்புறம் அவங்க கல்யாணத்துக்கும் நீங்க கவலயேபட வேண்டாம். அவ்வளவுதான் நான் சொல்வேன்.
சுந்தரி சொல்வதைப் பார்த்தால் சரியான புளியங்கொம்பாகத்தான் பார்த்துப் பிடித்திருக்கிறாள் என்பது கலாவுக்கு நன்றாகவே புரிந்தது. சுந்தரி திறமைசாலிதான் என்பதில் கலாவுக்கு எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. அவளென்ன பச்சைக் குழந்தையா ஏமாந்து நிற்க?
தனக்கும் தன் குழந்தைகளுக்கும் வருங்காலத்தில் உதவுவதாய்ச் சுந்தரி சொன்ன போனஸ் வார்த்தைகள் கலாவின் மனத்தில் கோட்டைகளை நிர்மானித்தன. தன் குழந்தைகள் இருவரும் வருங்காலத்தில் டாக்டர்கள். அப்படியென்றால் டாக்டர் மாப்பிள்ளைகளைப் பார்த்துத் திருமணம் செய்துவைத்து விடலாம். நினைக்கவே நன்றாக இருந்தது. இப்போது சுந்தரியின் திட்டம் நன்றாகச் செயல்பட வேண்டும் என்று சுந்தரியைவிட கலா அதிக அக்கறை கொண்டாள்; தனக்குத் தெரிந்த தெய்வங்களை யெல்லாம் ஒரு ரவுண்டு வேண்டிக் கொண்டாள்.
சுந்தரிக்குப் பக்கபலமாகக் கலா செயல்பட ஆரம்பித்தாள். எங்கெங்கோ கால்போன போக்கில் சுற்றிவிட்டு இரவு எட்டு மணிக்கு விநாயகம் வீட்டிற்கு வந்தான். அவன் வரும் சத்தம் கேட்டதும் சுந்தரி அவன் கண்களுக்குப் படாமல் அடுப்படியில் சென்று முடங்கிவிட்டாள்.
விநாயகத்திடம் கலா மெதுமெதுவாகத் தனக்குத் தெரிந்த, தெரியாத விஷயங்களை எல்லாம் பக்குவமாக எடுத்துரைத்து அவனைச் சாந்தப்படுத்தினாள். சுந்தரியின் விஷயத்தில் அவன் தலையிட்டு தாய் தந்தையில்லாத அவளை நோகடிக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டாள். அவள் வாழ்க்கையைத் தானாகவே நல்லபடியாக அமைத்துக் கொள்வாள் என்று உறுதி கூறினாள். இரண்டு மணி நேரம் அவள் விநாயத்திற்கு நன்றாக வேப்பிலை அடித்தாள். அதுவும் நன்றாகவே வேலை செய்தது.
'நீயாச்சு, உன் நாத்தனார் ஆச்சு, ரெண்டுபேரும் சேந்து என் மானத்த வாங்காம இருந்தா சரி' என்று அவன் சட்டையை மாட்டிக்கொண்டு சுற்றுலா சென்றிருந்த தன் இரண்டுமகள்களையும் அழைத்துவரப் பத்து மணி சுமாருக்குப் பள்ளிக்குச் சென்றான்.
திங்கட்கிழமை சுந்தரி நினைத்தது போலவே சந்திரன் சுந்தரியின் திட்டத்தில் அகப்பட்டு அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டான். அவள் நினைத்த அளவிற்குச் சந்திரன் வீட்டில் எந்தவிதச் சிக்கலும் ஏற்படவில்லை. தாட்சாயணியும் சந்திரனைவிட அநியாயத்திற்கு நல்லவளாக இருந்தாள். சுந்தரியைப் பற்றி எந்தவித சந்தேகமும் அவள் அடையவில்லை. நவநாகரிகம் உடையவளாக இருந்தாலும் கணவன் சொல்லை அப்படியே நம்புபவளாக இருந்தாள். சந்திரனும் தாட்சாயணியும் இத்தனை ஆண்டுகள் நடத்திய தாம்பத்தியத்தின் நெருக்கம் அப்படி. அதில் ஏற்பட்ட கரையான் புற்றை இருவருமே அறிந்து கொள்ளவில்லை.
(தொடரும்)

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 30


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 30
தான் சந்திரனின் வீட்டிற்குக் காலடி எடுத்து வைப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடந்த நிகழ்ச்சிகளை ரீவைண்ட் செய்து பார்த்தாள் சுந்தரி;
அன்று சனிக்கிழமை.
அண்ணனின் மகள்கள் இருவரும் தங்கள் பள்ளியில் மகாபலிபுரத்திற்குப் பிக்னிக் அழைத்துச் செல்கிறார்கள் என்று ஒருநாள் சுற்றுலா சென்றுவிட்டிருந்தனர்.
சனிக்கிழமைகளில் அண்ணனுக்கு அரைநாள் மட்டுமே அலுவலகம் செல்ல வேண்டும். அவன் காலையிலேயே வேலைக்குச் சென்றுவிட்டான். வீட்டிற்குத் திரும்ப இரண்டு மணியாகும்.
வீட்டில் அண்ணி மட்டுமே இருந்தாள்.
சுந்தரிக்கு வாந்தி எதுவும் வரவில்லை. ஆனால் நாலைந்து முறை வாந்தி வருவதுபோல் அண்ணி பார்க்குமாறு குரல் எழுப்பிக்கொண்டே கொல்லைக்கு ஓடினாள்.
'என்னடி பன்னுது?' – அண்ணி விஷயம் கேட்டாள்.
பதில் ஒன்றும் சொல்லாமல் ஹாலில் பாய் போட்டுப் படுத்துக் கொண்டாள் சுந்தரி; முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீரும் வரத் தயாராக இருந்தது.
கலாவுக்கு அத்தனையும் சட்டென விளங்கியது. இரண்டு குழந்தைகளைப் பெற்றவளாயிற்றே!
'எனக்கெதற்கு வம்பு? எல்லாம் அவள் அண்ணன் வந்து பார்த்துக் கொள்ளட்டும்' என்று சமையலில் ஈடுபட்டாள் கலா.
பணி முடித்து விநாயகம் வீட்டிற்கு வந்தான். அவன் வாசலில் செருப்பைக் கழற்றும் சத்தம் கேட்டது. சுந்தரி சுவரின் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ஹாலில் சுந்தரி படுத்திருப்பதைப் பார்த்தான் விநாயகம். சாப்பிட அமர்ந்துகொண்டே கலாவைச் சைகையால் விசாரித்தான்.
'என்னைக் கேட்டா? எல்லாம் ஒங்க அருமை தங்கச்சியையே கேளுங்க. ஒடம்புக்கு என்னன்னு?' சாப்பாடு போட்டுக்கொண்டே பீடிகை போட்டாள் கலா.
'ஏன் அவமேல ஒனக்கு அக்கற எதுவும் இல்லையா? நீ என்னன்னு விசாரிக்கக் கூடாதா?' பசி எரிச்சலில் மேலும் எரிந்து விழுந்தான் விநாயகம்.
அன்றைய சாப்பாட்டில் உப்பும் காரமும் தூக்கலாகவே இருந்தன. எதையும் வாயில் வைக்க முடியவில்லை.
'ஜுரம், தலைவலின்னா விசாரிச்சு மருந்து மாத்தர கொடுக்கலாம். காரணம் இல்லாம வாந்தி எடுத்துக்கிட்டு மூலைல முடங்கிக் கெடக்கற வயசுப் பொண்ண என்னன்னு விசாரிக்கிறது?'
'என்னடி சொல்ற? சொல்றத வௌக்கமாத்தான் சொல்லேன். இப்படிப் பொடி வெச்சுப் பேசறதெல்லாம் என்கிட்ட வெச்சுக்காதே!'
'நான் ஏன் பொடி வெச்சுப் பேசனும். எவனோட சொக்குப்பொடில மயங்கிப்போய் உன் தங்கச்சி முந்தி விரிச்சாளோ? அவகிட்டயே போய் எல்லாத்தையும் கேளுங்க. உங்க மெரட்டலுக்கெல்லாம் நான்தான் கெடச்சனா?' – தன் பங்குக்கு எகிறினாள் கலா.
சாப்பாட்டுத் தட்டைக் காலால் உதைத்துத் தள்ளினான் விநாயகம்.
எச்சில் கையால் சுந்தரியின் தலைமுடியைப் பிடித்து மேலே தூக்கினான். சுந்தரியின் முகத்தைத் திருப்பிப் பார்த்தான்.
சுந்தரியின் முகம் அழுதழுது வீங்கியிருப்பது தெரிந்தது. கண்கள் சிவந்திருந்தன.
'அதை'த் தவிர வேறு காரணம் எதுவுமில்லை என்பதை சுந்தரி தன் முகத் தோற்றத்தாலேயே விநாயகத்திற்குத் தெள்ளத்தெளிவாகப் புரிய வைத்தாள்.
சுந்தரியின் கன்னத்தில் பளார் பளார் என்று ஓங்கி அறைந்தான் விநாயகம்.
'யாருகிட்ட இப்படி ஏமாந்து நிக்கற? சொல்லு, சொல்லு, அவன வெட்டிக் கூறு போட்டுடறேன்' –கத்தினான் விநாயகம்.
'என்னை நல்லா அடிண்ணா, நல்லா அடி, ஒன் கை ஓயற வர அடி, இந்தப் பாவி ஒங்க எல்லாரையும் தல குனிய வெச்சிட்டேன்'.
'உன்ன இந்த கதிக்கு ஆளாக்குனவன் யாருன்னு சொல்லு, அவன் கால்ல கையில விழுந்தாவது அவனுக்கே ஒன்னக் கல்யாணம் பண்ணி வெக்கறேன்'
'என்னக் கொன்னு போட்டாலும் போடுன்னா . . . ஆனா இதுக்கு யார் காரணமன்னு மட்டும் என்னக் கேக்காதே!'
அவள் நிலைக்குக் காரணமானவனை அவள் சொல்ல மறுத்தது விநாயத்தை ஆத்திரப்பட வைத்தது.
'செய்யறதயும் செஞ்சிபுட்டு இப்ப வியாக்யானம் பேசறியா? சனியனே!'
அவன் அவளைச் சனியன் என்று திட்டியதும் ஒரு வகையில் சரிதான். அந்தச் சனியன்தானே சந்திரனை இப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
விநாயகம் அவள் கழுத்தைப் பிடித்துத் தள்ளினான். சுந்தரி ஓரத்திலிருந்த மேஜையில் மோதி விழுந்தாள். விழுந்த அளவில் அவள் நெற்றியில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது.
'இப்பச் சொல்லப் போறியா, இல்ல அடி வாங்கியே சாகப் போறியா?' – அவளை மீண்டும் அடிக்க முயன்றான் விநாயகம்.
நிலைமை மோசமாவதற்குள் கலா தன் கணவனை ஓடிவந்து தடுத்தாள். தங்கையைக் கொலை செய்துவிட்டு அவன் ஜெயிலுக்குச் சென்றுவிட்டால் இரு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு தன்நிலை என்னாவது?
'நிறுத்துங்க! அமைதியா விசாரிக்காம இப்படியா பிள்ளத்தாச்சியப் போட்டு மூர்க்கமா அறைவிங்க! இப்ப நிறுத்துறிங்களா, இல்லையா,' – தன் பலமனைத்தும் பிரயோகித்துக் கணவனைப் பிடித்து நிறுத்தினாள் கலா. சுந்தரியை இழுத்து அறையில் தள்ளி தானும் உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டாள் கலா.
கதவைத் திறந்து விடுமாறு வெளியே இருந்து கத்திக்கொண்டிருந்தான் விநாயகம்.
'நீங்க மொதல்ல வெளியே போங்க, நான் எல்லாத்தையும் விசாரிக்கிறேன். வெளிய போயிடுங்கன்னா போயிடுங்க'  -கத்தினாள் கலா.
செருப்பை மாட்டிக்கொண்டு விநாயகம் வெளியே செல்லும் சத்தம் கேட்டது.
(தொடரும்)

Friday, 29 November 2019

முரண்கோடுகள் (புதினம்) - அத்தியாயம் 29

முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 29
   'தாட்சு . . . நான் இப்படில்லாம் நடக்கும்னு நெனச்சுப் பாக்கவேயில்ல. எல்லாம் சுந்தரியோட அண்ணன்தான்... விடாப்பிடியா யோசிக்கவே விடாம இப்படி திடீர்னு கல்யாணம் பண்ணிவெச்சிட்டான்.  நான் எதிர்பார்க்கவே இல்ல. அதனாலதான் உன்கிட்டயும் எதுவும் சொல்ல முடியலே.' - சின்னத்தம்பியில் வரும் பிரபுவின் அப்பாவித்தனத்தோடு பேசினான் சந்திரன்.
   'இன்னைக்கு ஒருநாள் பொறுத்துக்கோ, நாளைக்கு எல்லாரையும் அனுப்பிச்சிடறேன்'.
     அவன் சொன்னது மறுநாள் நிகழவில்லை.
   முதல்நாள் அலைச்சல் சுந்தரிக்கு ஒத்துக்கொள்ளவில்லையாம். கொஞ்சம் அதிகமாகவே 'அய்யோ!,அம்மா!' என்றாள்.
    எல்லாம் அண்ணன் குடும்பத்தைத் தன்னுடன் இருக்கச்செய்ய அவள் செய்த நாடகம் என்பது தாட்சாயணிக்கு மட்டுமே புரிந்தது. யாருக்குப் புரிய வேண்டுமோ அவன் மக்கு மாணவனாக இருந்தான்.
    சந்திரன் பரிதவித்தான்.
   நிச்சயமாக தாட்சாயணி இனி வீட்டுவேலைகள் செய்யமாட்டாள். அவளுக்கிருக்கும் கோபத்தில் சுந்தரிக்குப் பச்சைத் தண்ணீர்கூட எடுத்துக்கொடுக்க மாட்டாள். அப்படியானால் இந்த நிலையில் சுந்தரியை யார் பார்த்துக் கொள்வார்கள்?
 சுந்தரியைப்பார்த்துக்கொள்வதற்காகத்தன்னுடையஉறவுமுறையிலிருந்துயாரைவரவழைக்கமுடியும்?  
   அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தன்னால் பதில்தர முடியுமா? அவர்கள் என்ன தாட்சாயணியா அவன் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள?
     'சுந்தரி இப்படி வாயும் வயிறுமா பரிதவிக்கும்போது எப்படி அவளத் தனியா உட்டுட்டுப் போறது மச்சான்?' விநாயகம் கேட்டான்.  
      என்ன பதில் சொல்வான் சந்திரன்.
     'கொழந்த பொறக்கற வரை பேசாம நீங்களும் சுந்தரியோட இருந்து பாத்துக்கோங்களேன். அவளுக்கும் ஆறுதலா இருக்கும். எனக்கும் ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு. இவளப் பத்தின கவல இல்லாம நானும் என் வேலையப் பாக்கப் போகனும்.'
    'சரிசரி! எங்களவிட்டா ஒங்களுக்கும் உதவிசெய்ய யார் இருக்கா', வேண்டா வெறுப்புடன் ஒத்துக்கொள்வதைப் போல் ஒத்துக்கொண்டனர் சுந்தரியின் அண்ணியும் அண்ணனும்.
சுந்தரியைப்பார்த்துக்கொள்ளும்சாக்கில்அவர்களின்ராஜ்ஜியம்அமர்க்களமாகஆரம்பமானது.
  தாட்சணியின் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று சந்திரன் சுந்தரியிடம் வரம் கேட்டான்.
  'என்னங்க இப்படிச் சொல்லிட்டிங்க? என்னை இப்படி நெனச்சிட்டீங்களே? நான் அக்கா மேல எவ்வளவு பாசமா இருக்கேன்னு என் இதயத்தக் கிழிச்சுக் காட்டட்டுமா? அப்பத்தான் நம்புவீங்கன்னா அதையும் செய்யறேன்'.
  'நான் வாழற வாழ்க்கை அவங்க போட்ட பிச்சயில்லையா? அவங்க என்னோட கடவுள். என் ஜன்மத்துக்கும் அவங்க காலடியிலேயே கெடந்து உசுரவிடுவேன்' - நா தழுதழுத்தாள் சுந்தரி.
  ஒரே வாரத்தில் சந்திரன் கேட்ட வரமும் சுந்தரி கொடுத்த சரணாகதி வாக்குமூலமும் மறுபரிசீலனை செய்யப்பட்டன.
   'நான்தான் போயிப்போயி அக்கா கிட்டப் பேசறேன். ஆனா அவங்க என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கறாங்க. நான் என் வயித்த பிடிச்சுக்கிட்டு நடக்கமுடியாம நடந்து மாடி ஏறி எத்தனை தடவை அக்காவப் போயி பாத்துருக்கேன் தெரியுமா? அவங்கள வேணா இது உண்மையா இல்லையான்னு கேட்டுப் பாருங்க. ஆனா அவங்க என்னைப் பாத்ததும் முகத்தத் திருப்பிக்கறாங்க. நம்ம கொழந்தயக் கரிச்சுக் கொட்டறாங்க. அவங்க என்ன மொறச்சுப் பாக்கறதப் பாத்தா எங்க நம்ம கொழந்தைக்கு ஏதாச்சும் ஆகிடுமோன்னு பயமா இருக்குதுங்க' பொலபொலவென்று கண்ணீர் உகுத்துக் காட்டினாள் சுந்தரி.
    'அய்யய்யோ! அழாத செல்லம்மா! அவ கெடக்கறா, நீ ஏன் இப்படி மாடிப்படியெல்லாம் ஏறுற செல்லம்? டாக்டர் உன்னை மாடிப்படி ஏறக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்களேடா செல்லம்,  இனி நீ ஒன்னும் அவ எதுர போகாத, எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.' அவள் வயிற்றைத் தடவிக் கொடுத்தான் சந்திரன். 
    அவளைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு ஏ.சி.யை ஆன் செய்தான். சிறிதே தட்டிக் கொடுத்துவிட்டுக் கதவை மூடிக்கொண்டு வெளியே சென்றான்.
     சுந்தரியின் முகத்தில் மகிழ்ச்சியின் ரேகை படர்ந்தது; எல்லாம் அவள் நினைத்தவாறே நடந்து முடிந்ததால். . . . !
(தொடரும்)