Tuesday, 30 July 2019

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 4


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 4


                 திருச்சியில் நெருங்கிய சொந்தக்காரர் ஒருவர் வீட்டுக் கல்யாணத்துக்கு முன்னதாகவே போகவேண்டி இருந்தது.
            பெரும்பாலும் சுந்தரி இதுபோன்ற திருமணம், வளைகாப்பு போன்ற வைபவங்களுக்குச் செல்ல விரும்புவதில்லை. ஆளாளுக்குத் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டுக் குடைவார்கள். எதற்கு வம்பு என்று அவள் இப்படிப்பட்ட விசேஷங்களுக்குப் போகாமல் 'வீட்டைப் பாத்துக்கறேன்' என்று தவிர்த்துவிடுவாள்.
            கலாவுக்கும் விநாயகத்துக்கும் தர்மசங்கடத்தைத் தவிர்க்கவும் இது  சௌகரியமாக இருந்தது.
            ஆனால் இப்போது கல்யாணம் திருச்சியில். சென்றுவர இரண்டு, மூன்று நாட்கள் ஆகும். சுந்தரியை மட்டும் தனியாகச் சென்னையில் விட்டுவிட்டுப்  போகமுடியாது. காலம் கெட்டுக் கிடப்பதால் சுந்தரியையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.
            எம்.எஸ்.வி. கல்வி அறக்கட்டளையின் தாளாளர் சோமசுந்தரம் சென்னையிலிருந்து திருமணத்திற்குக் காரில் வந்திருந்தார். பெரிய பணக்காரர். உதவும் மனப்பான்மை கொண்டவர். சென்னையிலிருந்த அவரது கல்வி அறக்கட்டளையில் ஆரம்பப் பள்ளி தொடங்கி மேல்நிலைப்பள்ளி வரை அனைத்தும் பக்கம் பக்கமாக இருந்தன. அவர் விநாயகத்துக்குத் தூரத்துச் சொந்தம்.
            விநாயகம் தனக்கு எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் நண்பர்களிடம் உதவி கேட்பானேயன்றி சுற்றத்தாரிடம் கையேந்த மாட்டான்.
            திருமணத்தில் சோமசுந்தரம் விநாயகத்தைப் பார்த்து நலம் விசாரித்தார்.
                'கார்ல நான் மட்டுந்தான் வந்திருக்கேன். நீயும் பொண்டாட்டி கொழந்தைங்களோட என்கூடவே கார்ல வந்திடு'.
            ஊருக்குத் திரும்பும்போது அவர்களைத் தன்னுடன் காரிலேயே வருமாறு வற்புறுத்தினார் சோமசுந்தரம்.
            விநாயகம் சுய கௌரவம் பார்ப்பவன். ஏதேதோ காரணங்களைக் காட்டி மறுத்தான். சோமசுந்தரம் விடுவதாக இல்லை. கல்யாணம் முடிந்ததும் அவர்களை வற்புறுத்திக் காரில் ஏற்றிக்கொண்டார்.
            பயணத்திடையே சுந்தரி திருமணமாகாமல் இருப்பது பற்றிக் கவலைப்பட்டான் விநாயகம். பிளஸ் டூ வரை மட்டுமே தன்னால் அவளைப் படிக்கவைக்க முடிந்தது என்று வருந்தினான். அவள் வீட்டிலேயே இருப்பதைவிட எங்காகிலும் வேலைக்குப் போனால் அவளுக்குப் பொழுது போக்காக இருக்கும் என்றான்.
            சோமசுந்தரத்திற்குச் சொந்தமான மேல்நிலைப் பள்ளியில் இரண்டு மூன்று நாட்கள் முன்னதாக ஒரு அட்டெண்டர் வேலை காலியானது. இன்னும் யாரையும் அவர் நியமிக்கவில்லை. பெரும்பாலும் அவர் நிறுவனங்களில் தனக்குத் தெரிந்தவர்களையே பணியில் அமர்த்துவார். அவர்களுக்கும் தன்னாலான உதவி செய்தது போலிருக்கும். அவர்களை அன்பு என்னும் கட்டுப்பாட்டிலும் வைக்கலாம். அதுவும் பெண்களாக இருந்தால் செருப்பாகத் தேய்ந்து உழைப்பார்கள்.
            சோமசுந்தரம் யோசித்தார். சுந்தரிக்கு அந்த வேலையைத் தருவதாகச் சொன்னார்.
            தலைமையாசிரியருக்கு மட்டும் பணிபுரியும் அட்டெண்டர் வேலை. அவர் சொல்லும் வேலைகளை முடிக்க வேண்டும். அவர் அறையைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
            சமயத்தில் அவர் பள்ளியில் இல்லை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்களிடம் என்ன? ஏது? என்று கேட்டுவிட்டு அதற்கேற்ப சரியான பதிலளிக்க வேண்டும்.
            எப்போதேனும் தலைமையாசிரியரைப் பார்க்க அதிகாரிகள், அந்தஸ்தில் பெரியவர்கள்  யாரேனும் வந்தால் அவர்களுக்கு டீ, காபி, பிஸ்கட் என்று தட்டில் வைத்து உபசரிக்க வேண்டும். அவற்றை வெளியில்சென்று வாங்கிவர வேறு பியூன்கள் இருந்தனர். எனவே வெளிவேலை இல்லை. சம்பளம் ஆயிரம் ரூபாய்.
            தலைமையாசிரியருக்கென்று ஒரு ரெஸ்பெக்ட் இருக்கிறது என்பதற்காக இப்படி ஓர் ஏற்பாடு செய்திருந்தார் சோமசுந்தரம்.
            இதுவரை ஒரு வயதான மூதாட்டிதான் அப்பணியில் இருந்தார். அவரும் சொந்தம்தான். அவருக்கு அண்மையில் உடம்பு முடியாமல் போய்விட்டது.
            விஷயத்தைச் சொன்னார் சோமசுந்தரம். விநாயகம் தன் தங்கைக்கு ஒரு வழி பிறந்தது என்று மகிழ்ந்தான். பள்ளியும் பேருந்தில் போய்வரும் தூரத்தில் இருந்தது.
            சுந்தரி வேலைக்குப் போய்விட்டால் வீட்டு வேலைகளை யார் பார்ப்பது என்று கலா யோசித்தாள்.
            எல்லா வேலைகளையும் ஓயாமல் செய்துசெய்து அலுத்துவிட்டது. எப்போதும் வீட்டிலேயே அடைந்து கிடப்பதும் சுந்தரிக்கு இப்போதெல்லாம் கஷ்டமாக இருந்தது.
            அண்ணி வேலைக்குப் போகவேண்டாம் என்று கூறிவிட்டால் தன்னால் மறுத்துப்பேச முடியாது.
            தான் தேடிக்கொண்டிருக்கும் கதாநாயகன் அங்கே கூட இருக்கலாம். வீட்டிலேயே இருந்தால் தன் கனவு நாயகனை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது?
                'நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க அண்ணி! நான் காலையிலேயே எழுந்து எல்லா வேலையும் முடிச்சுட்டு வேலைக்குப் போறேன்.  அத்தோடு மாசம் ஆயிரம் ரூபா வர்ரது நமக்கு லாபந்தானே' - வேகமாகச் சொன்னாள் சுந்தரி.
            ஆயிரம் ரூபாய் வருமானம் வரும் என்பதால் வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொள்ளலாம். மெதுமெதுவாக கிரைண்டர், பிரிட்ஜ் என்று சாமான்களை வாங்கிவிட்டால் வேலைப்பளுவும் குறையும்; வீட்டில் சுந்தரியின் வருமானத்தில் சாமான்களையும் சேர்த்துவிடலாம்; கொஞ்சம் காசும் பார்க்கலாம் என்று கலா கணக்குப் போட்டாள்.
                'அதுக்கென்னம்மா! தாராளமாப் போ! எப்படியோ நீ சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும் . . . !  கலா திருப்தியோடு தலையாட்டினாள்.
            அடுத்த வாரமே நல்ல நாள் பார்த்து வேலையில் சேர்ந்தாள் சுந்தரி. புது வாழ்க்கை அவளுக்குப் பிடித்துப் போனது.
(தொடரும்)

Friday, 26 July 2019

முரண்கோடுகள் (புதினம்) அத்தியாயம் 3


முரண்கோடுகள் (புதினம்)
அத்தியாயம் 3

  
            திடீரென்று ஒருநாள் அவள் வயது முப்பது ஆகிவிட்டதைக் காலண்டர் நினைவுறுத்தியது. அவள் முதிர்கன்னி என்ற விருதைப் பெற்றாள்.
            அதற்குப் பின் வந்த வரன்களெல்லாம் இரண்டாம் தாரமாகவே அமைந்தன.
                'கல்யாணமாகி அண்மையில் மனைவியை இழந்தவன், ஆனால் பிள்ளை என்று எதுவும் இல்லாதவன்'.
                'பையனுக்கு அம்பது வயசு, ஒரே பையன், அக்குதொக்கு இல்ல, எக்கச்சக்கம் சொத்து இருக்கு, கார் பாங்களா என்று வசதி இருக்கு'.
            ஏற்கெனவே கல்யாணமாகி மனைவி இருக்கா, ஆனா வாரிசுன்னு சொல்லிக்க ஒரு புள்ள இல்ல, எல்லா வசதியும் இருக்கு. மாப்பிள்ளைக்கும் கொஞ்சம் வயசுதான் ஆவுது!'
                'நாப்பது வயசுதான் இருக்கும், அவனுக்கு ஒரு பிள்ளைய பெத்துட்டு அவ பொண்டாட்டி கண்ண மூடிட்டா, பச்சப் புள்ளய வச்சிக்கிட்டு மவராசன் கஷ்டப் படறான், அரசாங்க உத்தியோகம்'.
                - இப்படிப் பல வரன்கள்.
            இவர்கள் யார் தலையிலாவது சுந்தரியைக் கட்டிவிடவேண்டும் என்று விநாயகம் நெருக்கடி கொடுத்தான்.
                'போயும் போயும் இரண்டாந் தாரமா நான் வாக்கப்படுறதா?'
                'ஒரு கெழவனுக்கா?'
                'எவளோ ஒருத்தி பெத்துப்போட்ட கொழந்தய என் குழந்தையா நெனச்சி  வளக்கணுமா?'
                'காரு பங்களா இருந்து என்ன லாபம்? என்னைக்கும் நான் ரெண்டாந் தாரந்தானே?'
                'இதுக்குப்போயா நான் இத்தன நாள் காத்திருந்தேன்?'
                'கொஞ்சம் வசதியா, அழகான புருஷன அடையனுங்கற  என் கனவு நிறைவேறாதா?'
            அழுதழுது அவள் தலையணை நனைந்தது.
                'அண்ணி. . . ! தயவுசெஞ்சி இந்த மாதிரி எடமெல்லாம் வேணாம் அண்ணி, நான் ஒங்களுக்குப் பாரமா இருந்தாச் சொல்லிடுங்க, எங்கயாச்சும் போய்ப் பத்துப்பாத்திரம் தேச்சிப் பொழச்சுக்கறேன். இல்லன்னா ஆறு, கொளம்னு விழுந்து உயிர மாய்ச்சுக்கறேன்' 
                'நான் உங்களுக்கென்ன பாதகமாவா இருக்கேன்? உங்க பிள்ளைங்கள நான் பாத்துக்கறேன். வீட்டு வேல எல்லாத்தையும் செய்றேன். நீங்க ஊத்தற கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு ஒரு மூலைல கெடக்கறேன். நகை நட்டுன்னு நான் எதுவும் கேக்க மாட்டேன். ரெண்டாந்தாரமா மட்டும் என்னை ஆக்கிடாதீங்க அண்ணி!' - அண்ணியிடம் புலம்பிக்கொண்டே இருந்தாள்.
            கலாவுக்கும் சுந்தரி தன் வீட்டில் இருப்பது ஒன்றும் பாரமாகத் தெரியவில்லை. அவள்தான் எல்லா வேலைகளையும் செய்கிறாள். அவர்கள் வீட்டிலென்ன எதற்கெடுத்தாலும் மிஷினா இருக்கிறது. இரு குழந்தைகளின் படிப்புச் செலவிற்கே வரும் வருமானம் போதவில்லை.
            அவர்கள் வீட்டில் ஒரு கிரைண்டர் உண்டா? பிரிட்ஜ் உண்டா? வாஷிங் மெஷின் உண்டா?
            ஒரே ஒரு ஹைதர் அலி காலத்து மிக்ஸிதான் இருக்கிறது. அதில் சட்னி அரைத்தால் மசிந்தும் மசியாமல் இருக்கும். அதன் மூடிகூட வீறல் விட்டிருக்கிறது. அதை மாற்றலாம் என்றால் 'இந்தக் கம்பெனி இப்ப வர்றதே இல்லீங்க! இதுக்கு பார்ட்ஸ்ஸெல்லாம் கெடைக்காது. பேசாம தூக்கிப் போட்டுட்டு புதுசா வாங்கிடுங்க!' என்று கேலி செய்கிறான் ரிப்பேர் கடைக்காரன்.
            அவர்கள் வீட்டில் நவீன கருவி என்று எடுத்துக் கொண்டால் வண்ணத்  தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று, அயர்ன் பாக்ஸ் ஒன்று, அவ்வளவே! 
            அவர்கள் வீட்டில் புழுங்கல் அரிசியை வடித்துச் சாப்பிட்டால்தான் அனைவருக்கும் ஒத்துக்கொள்ளும். கஞ்சியை வடிக்காமல் சாப்பிட்டால் வயிறு 'கடபுடா'தான். அதனால் அவர்கள் வீட்டில் சாதாரண பிரஷர் குக்கர் கூட அனாவசியமாகப்பட்டது.
            எந்தவித வசதியும் இல்லாமல் கலா ஒருத்தி மட்டும் வீட்டு வேலைகள் அனைத்தையும் எப்படிச் சமாளிப்பாள்!
            துணிகளைத் துவைப்பது, அயர்ன் செய்வது, வீடு வாசல் பெருக்கிக் கோலம் போடுவது, காய்கறி வாங்கி வருவது, கீரையை ஆய்வது, இட்லிக்கு மாவாட்டுவது என்று எல்லா வேலைகளையும் சுந்தரியே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். அதனால்தான்  தொலைக் காட்சியில் அடுக்கடுக்காக வரும் மெகா சீரியல்களை ஒரு சுற்றுவர  முடிந்தது கலாவால்!
            பிளஸ் டூ வரை படித்திருப்பதால் குழந்தைகள் படிப்பையும் சுந்தரியே மேற்பார்வை பார்த்துக் கொண்டாள்.
            இப்படிப்பட்ட நிலையில் சுந்தரியின் சேவையை இழந்துவிட கலாவுக்குச் சிறிதும் விருப்பம் இல்லை.
            சுந்தரியும் தன் திருமணத்தைப் பற்றிய கவலையை வெளிப்படுத்தாமல் இருந்ததால் அண்ணிக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் போனது.
            விநாயகத்துக்குத்தான் யாரேனும் தன்னைப் பார்த்துத் 'தங்கச்சிக்கு இன்னும் கல்யாணம் பண்ணலையா? வயசாயிக்கிட்டே போகுதேப்பா' என்று கேட்கும்போது மனசு உறுத்தியது.
                'அப்பன் ஆத்தா இருந்திருந்தா இந்நேரத்துக்குக் கல்யாணம் ஆகி நாலு கொழந்தயும் பெத்திருப்பா' என்று அவர்கள் தெருவிலிருக்கும் ஒரு பாட்டி விநாயகத்தைப் பார்க்கும் போதெல்லாம் வியாக்கியானம் செய்து கொண்டிருப்பாள்.
                'சுந்தரிதான் கல்யாணப் பேச்ச எடுத்தாலே மொகத்தச் சுளிக்கறாளே! நான் என்ன செய்யட்டும்?' என்று தன் மனத்திற்குச் சமாதானம் கூறிக்கொண்டான் விநாயகம்.
            சுந்தரிக்கு வீட்டு வேலைகள் செய்வதிலும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதிலும் நேரம் போனது.
            ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சித் தொடர் களையும் திரைப்படங்களையும் மியூசிக் சேனலில் அழகான கதாநாயகனும் அழகிய கதாநாயகியும் கட்டிப் பிடித்து ஆடும் நடனங்களையும்  பார்த்துவிட்டு இரவுநேரக் கனவுலகில் வாழ்வதில் ஒரு சுகம் கண்டாள் சுந்தரி.
                'எனக்கென ஒருவன் இதுவரை பிறக்காமலா இருப்பான்? அவனைத் நான்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். நிச்சயமாகக் கண்டுபிடித்துவிடலாம்' என்று அவள் நம்பவும் செய்தாள்.
(தொடரும்)

Thursday, 25 July 2019

பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள் 




bharathiyar க்கான பட முடிவு


பெரிதினும் பெரிது கேள்
என்று காலைப் பனி நேரம்
என் காதுகளில் ஒலித்தான் பாரதி
கண்திறந்தேன் காணவில்லை அவன்


மீண்டும் இமைமூட அதே ஒலி!
பட்டென்று கண்திறந்து
மறையப்பார்த்த
அவன் கரங்களைச்
சிக்கெனப் பிடித்தேன்!

‘பெரிதினும் பெரிதுகேள்’ என்று
என்னை உசுப்பேத்தும் பாரதியே!
சின்னதாய் எனக்குள் தயக்கம்
வழித்துணையாய் நீயும் வா!

கிணற்றடியோ குளக்கரையோ
காலைக்கடன் முடித்துக் குளித்துத்
துண்டை உதறிப்போடலாம்
என்று கற்பனைத் தேர் ஏறாதே!
திருவல்லிக்கேணி
- பெயரில் மட்டும்தான்
கேணி மிச்சமிருக்கிறது!
நீரின்றி அமையாது உலகு
என்பது எங்கள் அரசுக்குத் தெரியும்
அதனால் லாரிகளில் நீர் வருகிறது
காசுபோட்டு வாங்கிக்கொள்ளலாம்
அதுவும் எப்போது வருமென்று
யாருக்குத் தெரியும்?
வானவில்லாய்க்
குடங்களின் அணிவகுப்பு
கொட்டும் பனியில்
இடுப்பில் குழந்தையோடு பெண்கள்!

இவர்களைப் பார்த்து
விசனப்படாதே பாரதி
விசனப்படுவதற்கு
இந்நாட்டில்
விசயத்திற்குப் பஞ்சமில்லை!

பாரதி!
அதோ பார்!
நீண்ட வரிசை
நியாயவிலைக் கடையில்!

மாதத்தில் எந்தநாள்
பொருட்கள் வருமென்று
வந்தாலும் எப்போது தருவார் என்று
தந்துகொண்டிருக்கும்போதே
பொருள் எப்போது தீரும் என்று
அறியாத திருக்கூட்டம்
விசாரித்து விசாரித்து
விசனப்பட்டு
வீதியில் சுட்டெரிக்கும் வெயிலில்
விதியை நொந்தபடி!

இவர்கள் பெரிதாக என்ன கேட்டார்கள்?
இலவச அரிசிக்கு எத்தனைப் பாடு?
நேரமானது என்று
கண்ணோட்டம் இல்லாமல்
கதவுகள் அடைத்தாலும்
இடையிடையே
வசவுகள் வாய்தெரித்தாலும்
கொடைதானே எனநினைத்து
எடை குறைத்தாலும்
எழும்புமா உரிமை?

முடைநாறும் சமூகமிது
முன்னுரிமை கேட்காது!
மடைமாற்றம் செய்வதற்கு
மத்தியத்தில் கைநீளும்!
வரிசையில் நிற்பதே
இவர்களுக்கு வேலையாகிப்போனது
அன்றாடம் காய்ச்சிகளுக்கு
வேலைவெட்டி இல்லாத குறையை
இல்லாமையை நினைத்து
ஏக்கம் கொள்ளாதிருக்க
இத்தகைய நீண்ட வரிசைகளே
கற்றுத்தருகின்றன!

ஊர் சுற்றவேண்டும் என்கிறாயே பாரதி
ஒற்றையடிப் பாதைக் காலத்து
அமைதியைத் தேடாதே!

குறுக்கும் மறுக்குமாய் எங்கள் இளசுகள்
காதுகளில் ஹெட்போனும்
கண்களில் காதலுமாய்!
காற்றைப்போல் வாகனம்
வேகமெடுக்கையில்
கால்கை நமக்கு முறிந்துபோகலாம்!

பேருந்தில் பயணிப்போம் பாரதி!
தயாராய் நில்!
அச்சமில்லை அச்சமில்லை
யாவர்வந்த போதிலும்
அச்சமில்லை என்று பாடிய அடலேறே!
முண்டியடித்து ஏறும்
இந்தக் கூட்டத்தில்
உன் முண்டாசு அவிழாமல்
ஒரு துண்டுபோட்டு இடம்பிடி!
இல்லையென்றால்
மணிக்கணக்காய்த்
திண்டாடவேண்டிவரும்!

பாரதி!
நீ எங்கே தொலைந்துபோனாய்?
நான் இங்கே இருக்கிறேன்!
புளிமூட்டைகளாய்ப் பயணிகள்
உள்ளே நுழைந்து பிதுங்கி
என்னருகே வந்து அமர்ந்துவிடு!

என்ன முனகுகிறாய் பாரதி?
இந்தச் சின்ன இருக்கையில்
மூவர் எப்படி அமர்வது என்றா?

இது நெருக்கடி நிறைந்த அரசு
இருவர் அமரும் இருக்கையை
மூவருக்கு அளித்து
தீண்டாமை களையும்
முறையான முயற்சி இது!
அடுத்தவர் வியர்வையைப்
பூசிக்கொள்ளும் அரிய வாய்ப்பு!
அடுத்தவர் மூச்சு
மறுசுழற்சியில்
நமக்கு வரும்போது
சகோதரத்துவம் பொங்குமல்லவா?

ஆண்டாண்டு அழுக்கும்,
யாரோ என்றோ எடுத்த
வாந்தியின் மிச்சங்களும்
ஒட்டியிருக்கிறது பார்
சன்னல் கம்பிகளில்!

சற்றே உராயாமல் உட்கார்
வளர்த்துக்கொள்
‘கறை நல்லது’ என்ற மனப்பாங்கு!

உன் முகத்தில் ஏன் அட்ட கோணல்
கால்நீட்ட இடமில்லையா?
சரிதான் போ. . .
அமர்ந்தபின்னே சௌகரியம் கேட்கிறதா?
இது டயர் உள்ள இடம்
இது டயர் உள்ள இடம்!
விடுதலைப் போரில் மட்டுமா?
அரசுப் பேருந்திலும்
டயர்களால் எப்போதும் பிரச்சினைதான்
தொழில்நுட்பங்கள்
அரசுப் பேருந்துகளுக்கு
அறவே ஆகாது!

பாரதி! உனக்குப் பசிக்கிறதா?
பத்துநிமிடம் நிற்கும் இப்பேருந்து...
அதற்குள் புசித்துவிடு!

என்ன?
சாம்பார் சூடாக இல்லையா?
புளிக்கிறதா தோசை?
நீராக உள்ளதா குளம்பி?

யாரைத் தேடுகிறாய்?
கோபம் வேண்டாம் பாரதி
ரௌத்திரம் பழகாதே
வாதம் வேண்டாம்
வம்பெதற்கு?
பத்து மணித்துளியில்
பேருந்து புறப்பட்டுவிடும்
நம் அவசரத்தைப் பயன்படுத்தும்
அயோக்கியத்தனத்தின் அரங்கேற்றம் இங்கு
ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும்
ஓசியில் இங்குதான் கிடைக்கிறது
அதே புளித்த தோசையும் பூரிக்கிழங்கும்!

என்ன பாரதி?
உன்னோடு ஓயாத தொல்லை
கழிவறை செல்லவேண்டுமா?
பொறுத்துக்கொள் பத்துநிமிடம்!
பேருந்துநிறுத்தம் வரும்
அதுவரை தூங்கு!

தூக்கத்தில் நிறுத்தம் வருவது
தெரியாதே என்ற கவலைவேண்டாம்
சிறுநீர் நாற்றம்
உன் மூக்கைத் துளைக்காமல் விட்டுவிடாது!

ஒன்று தெரியுமா பாரதி
இங்கு கழிவறைகளுக்குக்கூட
கட்டணம் உண்டு!
ஐந்து ரூபாய் கொடுத்தால் அனுமதி!
இந்தக்
கட்டணக் கழிவறைகள்தான்
ஐந்து ரூபாய் நாணயம்
காலாவதியாகிப் போகாமல்
இன்னும்
வாழ்வளித்துக்கொண்டிருக்கின்றன!

ஆனால்
அங்கே கதவுகளை மட்டும்
எதிர்பார்த்தால்
ஏமாந்துபோவாய் பாரதி!

கள்ள ஓட்டு இல்லாத் தேர்தலும்
ஓட்டை இல்லா கழிவறைக் கதவும்
இந்தியாவில்
இல்லவே இல்லை பாரதி!

கழிவறைப் பிரவேசம் செய்துவிட்டு
வாந்தி எடுக்காமல்
மூக்கைப் பொத்தாமல் வந்துவிட்டால்
உன்னைப் போல் ஞானி
ஒருவருமில்லை என்று
ஓங்கியடித்து நான்
சத்தியம் செய்வேன்!

விட்டுவிடுதலையாகிப்
பறப்பாய்
சிட்டுக்குருவியைப் போலே
என்று பாடிய பாரதியே!

இந்தப் பேருந்தில்
அனுபவித்தாயா மீண்டும் சிறைவாசம்?

பாரதி
இப்போது சொல்
விடுதலை பாரதத்தில்
அடிப்படைகள் கூட
எமக்குக் கிடைக்கவில்லையே

நான் பெரிதாக எதனைக் கேட்க?
பெரிதினும் பெரிது கேள்
என்ற உன் வாசகம்
சில நேரங்களில் சாத்தியமாகிறதுதான்
மறுக்கமாட்டேன்!

திட்டங்கள் பல கோடிகளில்
அரசு அறிவிப்பு!
அத்தனையும்
கோட்டுப் பாக்கெட்டுகளில்
அடைக்கலமாகின்றன!
கடைசியில் பெரிய ஓட்டை
திட்டத்தில்!
விமான நிலையத்தின்
விதானத்தை நிறுத்த
முட்டுக்கொடுக்கும் சவுக்கோடு
முப்பதுபேர் நிற்கிறார்கள்!

கோடிகளில் கட்டிய பாலங்கள்
திறப்பதற்கு முன்பே விழுகின்றன!

ஆறுகளில் வெட்டிய கால்வாய்களில்
சாக்கடை நீர்!
எங்கள் ஆறுகள் கூட அடிக்கடி
சோப்புப்போட்டுக் குளிக்கின்றன!

லாரிகளில் மணற்கொள்ளை
வாரிகளில் நீர்க்கொள்ளை
ஏரிகளில் அடுக்குமாடிகள்

அத்தனையிலும்
பெரிதுபெரிதாய் ஊழல்!

குப்பனும் சுப்பனும்
ஆயிரம் ஐநூறு மாற்றப்போய்
நொந்து வெந்து
இதயத்துடிப்பு நின்று பாடையில்!

ஆனால்
கட்டுக்கட்டாய்ப் பணம் கோடிகளாய்ப்
பெட்டிகளில் மணக்கின்ற மாயாஜாலம்
எங்கள்
அரசியல்வாதிகளுக்கு மட்டுமே
சாத்தியமாகிறது!

மாதம் ஒருரூபாய்ச் சம்பளத்தைச்
சிக்கனமாய்ச் சேர்த்துவைத்து
ஐந்தாண்டுகளில்
கார்ப்பரேட் நிறுவனங்களாய்
மாற்றும் அதிசயம்
அவர்களால் மட்டுமே
நிகழ்த்தமுடிகிறது!

அரசு அலுவலகத்தில்
கோப்புகள் அசைய
பெரிதினும் பெரிது கேட்கிறார்கள்!

மேட்டுக் குடியினர்க்குத்
தங்கநாற்கரச் சாலை
ஓட்டுக் குடியினர்க்கோ
குண்டுகுழியாய்ச் சந்துகள்
பலர்வீடுகள் எலிப்பொந்துகள்!

சந்து பொந்துகளில்
சாக்கடை ஓரங்களில்
கொசுக் கடிகளால்
நொந்து மடிகின்ற
பட்டினியால் வெந்து மடிகின்ற
இந்நாட்டு மன்னர்களைக்
கண்டாயா பாரதி?

அரசு அதிகாரிகளுக்கு
விஸ்தார மாளிகைகள்!

கட்டணம் செலுத்த
வாரம் தவறினால்
எரிய மறுக்கின்றன
குடிசைகளின் குண்டு பல்புகள்!

அரசுரிமை பெற்ற
தனியார் நிறுவனங்களில்
வருடக்கணக்காய்க்
கணக்கின்றி மின்சாரம்
கச்சிதமாய்ப் பணமாகும்
கோடிகளில் மின்கட்டண ஏமாற்று
அத்துடன்
ஓடிப்போகிறார்கள் தம் நாட்டுக்கு!

ஈருந்து
உரிமம் இருந்தாலும்
அடிக்கடி மாமூல் கட்டுகிறது!

வானுந்து வாங்கிய கடனுக்கு
மல்லு கட்டாமல்
வாழ்த்தும் வரவேற்பும்
வங்கியில் பரிவட்டமும்!

வறட்சியால் காய்ந்த வயல்
வெள்ளத்தில் மூழ்கிய பயிர்
கடன் தள்ளுபடி கேட்டு நிற்கின்றன
வினை விதைத்தவர்கள்
வேடிக்கை பார்த்தனர்!

விதை விதைத்தவர்கள்
அழுதனர் புரண்டனர்
மண்சோறு தின்றனர்
எலும்புமாலை அணிந்தனர்
ஆடையில்லா ஆர்ப்பாட்டமும் நடந்தது
இறுதியில் தள்ளுபடி ஆயிற்று
உழவர்களின் உயிர்கள்!

கோடி மதிப்பில் படகுகள்
ஆடிய புயலில்
சிக்கிச் சின்னாபின்னமாயின!

தேடப்படவில்லை மீனவர்
தமிழர் உயிர்கள்
இங்கு
எப்போதும் செல்லாக் காசுகள்!

ஓட்டு வங்கியை நிரப்பவே
ஓடுகின்ற தலைவருக்கு
மீட்புப் பணிக்கேது நேரம்?

பெரிதினும் பெரிதுகேள் என்ற பாரதியே!
புழுதியில்லாத் தெருக்கள்
நெரிசலில்லா சாலைகள்
நிற்போர் இல்லாத் தொடர்வண்டி
விபத்தில்லா பயணம்
குடிசைகள் இல்லா ஊர்கள்
தரிசு இல்லா நிலங்கள்
மின்வெட்டில்லா நாள்
கட்டணமில்லாக் கல்வி
கையூட்டில்லா பணிவாய்ப்பு

- இப்படி
பாரதி
என் பட்டியல் நீள்கிறது?
சாதாரண இச் செய்திகள் கூட
நம் நாட்டில்
 பெரிதாகப் படுகிறதே!

பாரதி! இப்போது சொல்!
அடிப்படைகள் கூட
எமக்குக் கிட்டவில்லையே
நான்
பெரிதாக எதனைக் கேட்க?
பெரிதினும் பெரிதாக எதனைக் கேட்க?