Thursday, 26 January 2017

கண்ணதாசனின் சேரமான் காதலி - திறனாய்வு

கண்ணதாசனின் சேரமான் காதலி - திறனாய்வு
கண்ணதாசன் இயற்றிய வரலாற்றுப் புதினமாகிய சேரமான் காதலி சாகித்ய அகாதமியின் பரிசு பெற்ற சிறப்புடையது. இப்புதினத்தின் பன்முகப் பரிமாணங்களை ஒரு
பருந்துப் பார்வையாக ஆய்வதாக அமைகிறது இக்கட்டுரை.
கதைக் களம்
            கதையின் பெயரே இது சேரர்களை மையமிட்டது என்பதை உணர்த்திவிடுகிறது. அந்நிலையில் சேரநாட்டின் பகுதிகளாகிய திருவஞ்சைக்களம், திருவிதாங்கோடு, கிருஷ்ணன் கோயில், முதலானவை இக்கதையின் களமாக அமைகின்றன.
கதைக் கரு
தமது கதைக்குரிய கருவைத் தாம் தேர்ந்தெடுத்த விதத்தை,
அண்மைக் காலங்களில் நான் எந்தக் கதையை எழுதுவதென்றாலும் மதக் கருத்துக்களோ, சமுதாயக் கருத்துக்களோ இடம்பெறக்கூடிய கருவைத்தான் எடுத்துக் கொள்வது வழக்கம். (முன்னுரை 13)
சேரமான் பெருமாள் வரலாற்றிலும் மதக் கருத்துக்களைச் சொல்வதற்கு நிறைய இடம் இருந்தது. காரணம், இரண்டாம் சேரமான் பெருமாள் குலசேகர ஆழ்வார் ஆனது, வைணவக் கருத்துக்களைச் சொல்ல வசதியாக இருந்தது. அவரது திருமகன் வேணாட்டடிகள் என்ற பட்டப் பெயரோடு சைவப் பெரியாராக வாழ்ந்தது சைவக் கருத்துக்களைச் சொல்ல வசதியாக இருந்தது. மூன்றாம் சேரமான் பெருமாள் மதம் மாறி மகமதியரான குறிப்பும் இருந்தது. (முன்னுரை 14-15)
என்று கண்ணதாசன் அவர்களே தமது முன்னுரையில் தெளிவாக்கிவிடுகிறார்.
கதைநிகழ் காலம்
            வரலாற்றுக் கதைகளில் கதைநிகழ் காலம் இன்றியமையா இடம் வகிக்கிறது. சேரமான் காதலி என்னும் இப் புதினம் மூன்றாம் சேரமான் ஆட்சிக்காலமாகிய கி.பி.798 முதல் கி.பி.834 வரையில் நடந்த நிகழ்வுகளை மையமிட்டதாக அமைகிறது. எனினும் இந்த 36 ஆண்டுக்கால நிகழ்வுகள் சுமார் மூன்று ஆண்டுகளில் முடிவு பெற்றதைப்போல் கதைப்பின்னல் விளங்கக் காணலாம்.
இந்த வரலாற்றில் ஒரே ஒரு விஷயத்தில்தான் வாசகர்களுக்குக் குழப்பம் ஏற்படும்.
அதாவது கி.பி. 798இல் பட்டத்துக்கு வந்த மூன்றாம் சேரமான் 834இல் தான் மெக்காவுக்குப் போகிறார். அவரது 36 ஆண்டு ஆட்சியை நான் கதைப் போக்குக்காகச் சுருக்கிக் கொண்டிருக்கிறேன். அதைத்தவிர, அனைத்தும் கலை நியாயங்களுக்குக் கட்டுப்பட்டவையே (முன்னுரை 15)
என்னும் முன்னுரைப் பகுதியில் வேண்டுமென்றே இத்தகைய காலச்சுருக்கத்தைக் தாம் புகுத்தியமையையைக் கண்ணதாசன் தெளிவுபடுத்திவிடுகிறார்.
கதைமாந்தர்
பாஸ்கர இரவிவர்மன் என்னும் இயற்பெயர் கொண்ட மூன்றாம் சேரமான் பெருமாள் இக்கதையின் நாயகனாகத் திகழ்கிறான். இருப்பினும் குலசேகராழ்வார் என்று வைணவர்களால் கூறப்படுகின்ற இரண்டாம் சேரமான் பெருமாளின் வாழ்க்கையிலிருந்தே இக்கதை தொடங்குகிறது. அவர் வாயிலாக வைணவ சமய தத்துவங்களை விரிக்கக்கூடுமாகையால் இவ்வாறு செய்ததாக ஆசிரியர் அதற்குரிய காரணத்தை முன்னுரையில் தெளிவுபடுத்துகிறார். குலசேகராழ்வாரின் மகன் மார்த்தாண்ட வர்மன், அவருடைய மனைவி மெல்லிளங்கோதை, ரவிவர்மனின் மனைவி பத்மாவதி, நாராயண நம்பூதிரி ஆகியோர் முதன்மைக் கதைமாந்தராக விளங்குகின்றனர்.
கதைச்சுருக்கம்
இரண்டாம் சேரமான் பெருமாள் வைணவ பக்தி காரணமாகத் தம் அரசாட்சியைத் தம் மகன் மார்த்தாண்ட வர்மனுக்கு முடிசூட்டிவிட்டுக் குலசேகர ஆழ்வார் என்ற பட்டத்தோடு வைணவத் தலயாத்திரை மேற்கொள்கிறார்.
இந்த ஏற்பாட்டை விரும்பாது தாயாதியின் மகனாகிய ரவிவர்மன் மார்த்தாண்டனை வஞ்சகமாய் விரட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பிடிக்கிறான். பல சிக்கல்களுக்குப்பின் பாண்டியன் தலையீட்டால் சேரநாட்டை இரு பிரிவுகளாகப் பிரித்து பழைய தலைநகராகிய திருவஞ்சைக் களத்தைக் கொண்டு ரவிவர்மன் ஆள்வதென்றும் திருவிதாங்கோட்டை மற்றொரு தலைநகராகக்கொண்டு மார்த்தாண்ட வர்மன் ஆள்வதென்றும் முடிவுசெய்யப்பெறுகிறது.
மூன்றாம் சேரமான் முடிசூட்டிக்கொள்ளும்போது சேரமானின் யூதக்காதலி யூஜியானா கர்ப்பவதியாக இருக்கிறாள். வேற்று சமயத்தைச் சேர்ந்த பெண்ணின் வாரிசு சேரநாட்டின் எதிர்காலத்தைப் பாழாக்கிவிடாமலிருக்க நாராயண நம்பூதிரியின் திட்டப்படி அவளது பூர்வ தேசமாகிய இஸ்ரவேலுக்குப் பயணப்படுகிறாள். ஆனால் அதே காலகட்டத்தில் சேரநாட்டில் தரையிறங்கிய அரபுநாட்டுப் பெண் சலீமா மூன்றாண்டுக்காலத்தின் நிறைவில் சேரமானின் காதலியாக மாறும் நிலை ஏற்படுகிறது. இசுலாமியப் பெண்ணை வீழ்த்துவதற்கு யூஜியானாவே சரியானவள் என்று கருதும் நாராயண நம்பூதிரி மீண்டும் அவள் சேரநாடு வருவதற்குத் திட்டம் தீட்டுகிறார். அவளும் மூன்றாடுகள் நிரம்பாத குழந்தையோடு வந்திறங்குகிறாள். ஆனால் நாராயண நம்பூதிரி எதிர்பாராத வகையில் இருவரும் தமக்குள் சமாதானமாகிவிடுகின்றனர்.
அரபுப்பெண் சலீமாவை மணம்முடிக்க வேண்டுமாயின் சேரமான் மதம் மாறவேண்டும் என்று இசுலாமியர்கள் வற்புறுத்துகின்றனர். நம்பூதிரிகள்சபை எதிர்ப்புக் குரல் கொடுத்து அவனையும் காதலியையும் சிறைசெய்ய எண்ணுகிறது. மார்த்தாண்ட வர்மனும் பாண்டியனும் படையுடன் எதிர்க்கின்றனர். உள்நாட்டுக் கலகமும் மூள்கிறது. சேரமான் தமது நாட்டைப் பன்னிரு சிறு நாடுகளாகப் பிரித்து தமது ஐந்து சகோதரிகள், தம்பி, சுற்றத்தினர், நண்பர்கள் என அளித்துவிட்டுத் தன் காதலியோடு அரபுக் கப்பல் ஒன்றில்ஏறி தப்பித்துச் சென்று அரபிக்கரையில் சகர்முக்கல் என்னும் துறைமுகத்தை அடைகிறான் என்று இக்கதை முடிகிறது.
வரலாறும் புனைவியலும்
            மூன்றாம் சேரமான்பெருமாள் ஆட்சிக்கால வரலாறு கதையின் பின்னலுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இருப்பினும் கதையின் சுவைக்காக யூஜியானா என்ற யூதகுலப் பெண்ணை அவன் காதலித்ததாய்க் கற்பனை செய்ததாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் நம்பூதிரித் தலைவர், சேரமான் காதலித்த இசுலாமியப் பெண் ஆகியோர் உண்மையில் வரலாற்று மாந்தராயினும் அவர்களுடைய பெயர் தம்மால் படைத்தளிக்கப்பெற்றதாகப் பதிவுசெய்கிறார் ஆசிரியர்.
மீமெய்ம்மையியல்
            இப் புதினத்தின் இரண்டாம் பாகம் முழுமையும் (205-359) மீமெய்ம்மையியல் புனைவுடன் அமைகிறது. இறைவியே வேட்டுவ மகளாகத் தோன்றி மெல்லிளங்கோதையுடனும் கண்மணியாகத் தோன்றி பத்மாவதியுடனும் உரையாடுவதாகவும் அவள் மேலும் குலசேகராழ்வார், ரவிவர்மன், நம்பூதிரி, சாலியூர்த் தாவளி அனைவருடனும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொள்வதாகவும் அவளது சிவப்பு மூக்குத்தியின் ஒளிபரவல் அதீத நிலையை ஏற்படுத்துவதாகவும் கதையைப் புனைந்துள்ளார் கண்ணதாசன். கதைக்குள் இடம்பெறும் இத்தகைய மீமெய்ம்மையியல் புனைவுகள் ஆசிரியரின் மிகுகற்பனையாக அமைந்து கதைக்கு மர்மத்தன்மையை ஏற்படுத்துகிறது.
இலக்கிய அறிமுகம்
            தம் கதையின் வாயிலாக தமிழ் இலக்கியம், மொழி முதலானவை பற்றிய சிந்தனையை மக்களுக்கு ஊட்டப் பெருமுயற்சி மேற்கொள்கிறார் ஆசிரியர்.
குலசேகராழ்வார் இயற்றிய பதினைந்து பாடல்கள் கதைப்போக்கில் அளிக்கப்பெறுகின்றன (103, 229-30, 256, 297). ஆழ்வார் அரங்கனைச் சேவித்துப் பாடத் தொடங்கினார் என்ற பகுதியைத் தொடர்ந்து,
மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்
இவ்வையத் தன்னோடும் கூடுவ தில்லையான்
ஐயனே அரங்கா வென்றழைக் கின்றேன்
மையல் கொண்டொழித் தேனென்றன் மாலுக்கே (103)
என்று தொடங்கி ஒன்பது பாடல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் கண்ணதாசன். மேலும், நாச்சியார் திருமொழியிலிருந்து ஒரு பாடலையும் (223) அறிமுகப்படுத்தும் கண்ணதாசன் ஆங்காங்கு சங்க இலக்கிய அடிகளையும் பிற இலக்கிய அடிகளையும் கதைப்போக்கில் பின்னியிருத்தலை அறியமுடிகிறது.
சங்க காலம், சங்கம் மருவிய காலம், சங்கம் இருந்த கபாடபுரம, தொல்காப்பியக் காலத் தமிழ் முதலான பல செய்திகளைக் கண்ணதாசன் கதையினூடே கூறிச்செல்லும் பாங்கு சிறப்பானதாகும். தமிழகத்தின் இலக்கியப் பெருமையையும் மொழியின் நுணுக்கங்களையும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்று கதைப்போக்குடன் பின்னியிருக்கிறார். இத்தகு செய்திகள் கதையைத் தொய்வுள்ளதாக ஆக்கிவிடும் என்னும் அச்சமின்றி இப்படியாவது மக்கள் கூட்டத்திற்குச் இவற்றைச் சொல்லியே ஆக வேண்டுமென்று நுட்பமாக அளிக்கும் திறன் பாராட்டுக்குரியது.
நடப்பியல் ஒப்பீடு
            வரலாற்றுக் கதையைக் கூறும்போது சிலநேரங்களில் அக் கதைக்கூறுகளில் இன்றைய வாழ்வியல் இல்லாதிருக்கும்போது வாசகர்களின் புரிதல் குறைவுபடலாம். அத்தகைய சூழல்களில் கதையின் ஆசிரியர்கள் அதனை எவ்வாறேனும் விளக்க முயலுகின்றனர். அவ்வகையில் கண்ணதாசனும் தம் கதையில் சில கதைமாந்தரின் நிலையை விளக்கவருகையில்,
தற்போதைய நிலையை மேற்கோள் காட்டினால் நாராயண நம்பூதிரி பிரதம மந்திரியாகவும், இரண்டாம் சேரமான் பெருமாள் குடியாட்சித் தலைவராகவும் விளங்கினார்கள் (19)
என்று இன்றைய நடப்பியல் வாழ்முறையோடு பொருத்திக் காட்டுகிறார்.
            அரசனின் வலிமையையும் செல்வாக்கையும் பொறுத்து நாட்டின் எல்லைகளும் தலைநகரம் போன்றவையும் மாற்றத்திற்குட்படுகின்றன. வரலாற்றுப் புனைவுகளில் இத்தகைய செய்திகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. எனவே இவற்றைப் பற்றிய தெளிவான விளக்கம் வாசகர்களுக்குத் தரப்படல் வேண்டும். இதனைக் கண்ணதாசன் மிக நேர்த்தியாகச் செய்திருப்பதை,
சேரநாடு - சங்க காலத்தில் இதன் தலைநகரம் கரூர் என்பார்கள். ஆனால் நம் கதை நடக்கும் காலத்தில் இதன் தலைநகரம் வஞ்சியாகவே இருந்தது. (18)
என்னும் பகுதியால்; அறியமுடிகிறது.
தம்கால அரசியல்
            கண்ணதாசன் தம் புதினத்தில் வாய்க்கும் இடமெல்லாம் தம்கால அரசியல் செய்திகளை இலைமறை காயாக பதிவுசெய்து வாசகர்களைக் கவரத் தவறவில்லை. சான்றுக்கு,
ஒரே கேள்வியை ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொண்டிருக்க அரசியல்வாதிகளால்தான் முடியும். (38)
ஈடுகட்ட முடியாத ஒரு தலைவன் தன் இடத்தைக் காலிசெய்யப் போகிறான் என்றால் அடுத்த வரிசையிலுள்ளவர்களுக்குள் பலப் பரீட்சை நடப்பது இயற்கை. (52)
பிணத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடத்துவது ஒரு கலை! அது ஒருவகை ராஜதந்திரம்.
இயற்கையாக அழுது அறியாதவன் செயற்கையாக அழுது பழகுவதற்குப் பெயரே அரசியல்.
அரசியலில் செய்கின்ற காரியத்தைவிட அது செய்யப்பபடும் காலமே முக்கியமானது. (114)
ஆகிய பகுதிகளைச் சுட்டலாம்.
பெரும்பாலான மக்கள் அரசு பீடத்தில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்களது அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமல் இருந்தால் போதும் என்பதுதான் அவர்கள் நிலை. (184)
என்று அரசியல் குறித்த மக்களின் மனநிலையையும் எடுத்துரைக்கிறார் கண்ணதாசன்.
மறுவாசிப்பு
            சமுதாயத்திலும் இலக்கியத்திலும் காணப்படுகின்ற தீர்க்கமுடியாத சந்தேகங்களுக்கும் சிக்கல்களுக்கும் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளின் வாயிலாக விடைசொல்ல முயலுகிறார்கள். அத்தகைய போக்கிற்கு,
முனிவனோடு உடலுறவு கொள்ளாததால். அவனது உடலுறவு எப்படி இருக்கும் என்று அறியாமல் முனிவனாகத் தோன்றிய இந்திரனுக்கு இணங்கிவிட்டாள் அல்லவா, அகலிகை? (36)
என்று கதைப்போக்கில் அகலிகையின் வாழ்வில் காணப்படுகின்ற அவிழ்க்கவியலாத முடிச்சை அவிழ்த்து வாசகர்களின் கேள்விக்கு விடைசொல்கிறார் கண்ணதாசன்.
புதுமைச் சிந்தனை
சிறந்த எழுத்தாளர்கள் சமுதாயத்திற்குத் தேவையான புதுமைக் கருத்துகளையும் சொல்;வதில் முன்னிற்கின்றனர். சேரமான் மனைவி பத்மாவதிக்குப் பணிப்பெண் ஒருத்தி விசிறி வீசுகிறாள். அவள் தனது கதையைக் கூறும்போது தான் கணவனை இழந்தவள் என்று கூறுகிறாள். அப்போது,
'மங்கலம் இழந்தாயா? நெற்றியில் குங்குமம் இருக்கிறதே!"
'மனத்திலே நாயகன் இருக்கிறான்; அதனால் மார்பிலே மாங்கல்யம் இருக்கிறது. கனவிலே அவனோடு உறவாடவே இந்த மாங்கல்யமும் இந்தக் குங்குமமும்!" (236)
என்னும் உரையாடல் தொடர்கிறது. இதில் அப் பணிப்பெண்ணை இறைவியாகக் காட்டுகிறார் கண்ணதாசன். இவ் உரையாடலில் பெண்கள் கணவனை இழந்தாலும் தமது தாலியையும் குங்குமத்தையும் அகற்றத் தேவையில்லை என்னும் கருத்தை வலியுறுத்தும் ஆசிரியர், கணவன் இறப்பிற்குப் பின்னர் அவன் மனைவியின் கனவில் தோன்றும் வாய்ப்பு நேர்ந்தால் அவள் தாலியோடும் குங்குமத்தோடும் இருப்பதுதான் முறை என்னும் புதுமையான சிந்தனையையும் முன்வைக்கிறார்.
தத்துவம்
       கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் தமிழகமக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்றவை. தமது புதினத்திலும் ஆங்காங்கு அழகிய வாழ்வியல் தத்துவங்களைச் சுவைபட விரித்துச்செல்கிறார் கண்ணதாசன். ரவிவர்மன் தன்னை எதிர்ப்பான் என்று அத்தாக்குதலுக்குத் தயாராக இருந்த நாராயண நம்பூதிரி எதிர்பார்த்ததற்கு மாறாக அவன் தன்னைப் புகழவே ரவிவர்மனின் எதிர்பார்ப்பிற்குத் தாம் இணங்கிப்போக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இச் சூழலில்,
எதிர்த்துப் பேசினால் சுடச்சுடப் பதில் கொடுத்துவிட முடியும். புகழ்ந்துபேச ஆரம்பிப்பவனை அப்புறப்படுத்துவது கடினமான காரியம். (98)
என்று வாழ்வியல் தத்துவத்தை நமக்குப் புலப்படுத்துகிறார் கண்ணதாசன்.
இதுகாறும் கண்டவற்றால் ஒரு வரலாற்றுப் புனைவிற்குரிய அனைத்துச் சிறப்புகளையும் பெற்று சேரமான் காதலி என்னும் இப் புதினம் திகழ்வதை அறிய முடிகிறது. எனினும் ஆசிரியர் 36 ஆண்டுக் கதையை மூன்றாண்டுக் காலத்தில் சுருக்கிவிட்டமை சேரமான் ரவிவர்மனின் காதல்கள் அவனது ஆட்சிச்சிறப்பை வெகுவாகச் சுருக்கிவிட்டது என்று வாசகர்கள் கருதிவிடக்கூடிய பொய்மைச் சூழலை ஏற்படுத்தி யுள்ளமையையும் மறுக்க முடியாது.
பயன்நூல் :

கண்ணதாசன், சேரமான் காதலி, சென்னை : கண்ணதாசன் பதிப்பகம், 2010.

சுவர்கள்




                            கோபு. . . கோபு. . . பாலு உள்ளே நுழைவதற்கு முன், அவன் கூப்பிடும் ஒலி நுழைந்தது.

                         ‘கீதா. . . ,  கோபு குட்டி எங்கே?’ தன் சட்டையைக் கழற்றிக்கொண்டே கேட்டான் பாலு.

                           ‘ஹால்லதான் விளையாடிக்கிட்டிருந்தான். நீங்க வர்ரத பாத்து எங்கேயாவது ஒளிஞ்சிக்கிட்டிருப்பான். . .’ என்றாள் சமையல்கட்டில் கிரைண்டரில் மாவரைத்துக் கொண்டிருந்த கீதா.

                         கோபுவிற்கு மூன்று வயதாகிறது. படுசுட்டி. . .

                        தன் அப்பா மாலையில் வீட்டிற்கு வரும் நேரம் கோபுவுக்கு நன்றாகத் தெரியும். அப்பா தன்னைத் தேடவேண்டும் என்பதற்காக அவன் வரும்நேரத்தில் கட்டிலுக்கடியில், கதவின் பின்புறம், சோபாவின் பின்னால், பீரோவின் பக்கத்தில் - என்று எங்காவது நாளுக்கொரு இடத்தில் மறைந்துகொள்வான். அவன் பீரோவின் பக்கத்தில் ஒடுங்கிக்கொண்டு நிற்பது கண்களுக்குப் புலப்பட்டாலும் வீடுமுழுக்கச் சுற்றிச் சுற்றி ஐந்து நிமிடமாவது தேடுவதுபோல் பாவனை செய்துவிட்டு கோபுவைக் கண்டுபிடித்ததாகக் காட்டிக்கொள்வதில் பாலுவுக்கு அத்தனை மகிழ்ச்சி.

                      சும்மாவா? அவனைப் பெறுவதற்காகத்தான் எத்தனை எத்தனை முயற்சிகள். கல்யாணமாகி பத்து வருடமாய்க் குழந்தை பிறக்கவில்லையே என வேண்டாத தெய்வமில்லை; போகாத மருத்துவரில்லை; தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு கோயிலைக் காட்டி இந்தச் சாமியைக் கும்பிட்டால் பிள்ளை வரம் வாய்க்கும் என்று சொல்லிவிட்டால் போதும். உடனே காரோ, பஸ்ஸோ, ரயிலோ - எது சௌகரியப்படுமோ அதில் கணவனும் மனைவியும் கிளம்பிவிடுவார்கள். பாலு இதற்கு விடுப்பெடுக்க மறுப்பதே இல்லை.

                       அடுத்ததாக அவர்கள் பார்க்கும் இன்னொரு நிகழ்ச்சி - மருத்துவம். ‘இந்த லேகியம் தின்றால் குழந்தை பிறக்கும்’. ‘அந்தச் சூரணம் தின்றால் குழந்தை பிறக்கும்’ - என்று எதைச் சொன்னாலும் உடனே எப்படியாவது அந்த மூலிகைகளைக் கொண்டுவந்து அரைத்து, வதக்கி, குழைத்து - என்று எதையாவது செய்து, குடித்து, தடவி . . .  இப்படியாக ஒரு பக்கம்.
வெகுநாள் குழந்தை இல்லாத யாருக்கேனும் குழந்தை பிறந்தால் உடனே அவர்கள் பார்த்த மருத்துவரிடம் செல்வது, குழந்தையைப் பெற்றவர்களிடம் அறிவுரை கேட்பது  - என்று இப்படியாக ஒரு பக்கம்.

                      ஒருவருக்கு வரமளிக்கும் கடவுள் அடுத்தவருக்குக் கைவிரிப்பது தவறு என்று கடவுளிடம் கோபித்துக்கொள்ள முடியுமா?

                     ஒருவருக்குப் பலனளிக்கும் மூலிகை அடுத்தவருக்கும் பொருந்தும் என்று எதிர்பார்க்க முடியுமா?

                     ஒருவருக்குப் பார்க்கும் மருத்துவம் அடுத்தவருக்கும் வெற்றியளிக்க முடியும் என்று நம்பமுடியுமா?

                    நாடி சோதிடம் முதல் கிளி ஜோஸியம் வரை பார்த்தாகிவிட்டது.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஆங்கில மருத்துவம், அக்குப் பஞ்ச்சர், அக்குப் பிரஷர் என்று ஒன்றையும் பாக்கியாக விட்டுவைக்கவில்லை.

                       சோதனைக் குழாய் முறையும் முதல்தடவை தோற்றுப் போனபோது இரண்டாவது தடவையில் எவ்வளவோ கண்ணும் கருத்துமாக இருந்து ஒருவாறாகப் பெற்றவனாயிற்றே அவன்!

               கோபு பிள்ளைக்கலி தீர்க்கவந்தவனாயிற்றே. அவன் மீது பாலு பாசத்தைப் பொழிந்ததில் வியப்பேதுமில்லை.

                   அதுமட்டுமா? இது ஒரு பிள்ளைதான். இனி பிள்ளைப் பேற்றிற்கு வாய்ப்பில்லை என்று மருத்துவர் உறுதியாகக் கூறிவிட்டார். தங்கள் பரம்பரைக்கே அவன் ஒற்றைப் பிள்ளையாகிப் போனான். தன் தந்தைக்கு பாலு ஒற்றைப் பிள்ளை. இப்போது தனக்கும் கோபு ஒற்றைப் பிள்ளை. . .
கோபு, கோபு . . . கோபு, கோபு . . . ஒவ்வொரு இடமாகத் தேடிக்கொண்டே போனான் பாலு. சோபாவிற்குப் பின்னால் . . . பீரோவின் பக்கத்தில். . .
கட்டிலில் கோபு போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான். ‘திருட்டுப் படவா... இங்கதான் படுத்துக்கிட்டுப் பாசாங்கு பண்றியா?’ என்றவாறே போர்வையைச் ‘சரக்’கென்று இழுத்தான் பாலு. ஆனால் போர்வைக்குள்ளே தலையணைதான் இருந்தது. கோபுதான் வேண்டுமென்றே தலையணையைப் போர்த்தி வைத்திருந்தான். அவன் எதிர்பார்த்ததுபோலவே அப்பா இன்றும் ஏமாந்துவிட்டார்.

                          ‘கோபு செல்லம். . .  எங்கடா இருக்கே. . . ?’ தேடுதலைத் தீவிரமாக்கினான் பாலு.

                       ‘இவங்க ரெண்டு பேருக்கும் இதே வேலயாப் போச்ச. ஆபீஸ் விட்டு வந்தமா, கையகால கழுவுனமா, டீய குடிச்சமான்னு இல்லாம. . . மெதுவா சாவகாசமா விளையாடக் கூடாதா? வந்ததும் வராததுமா தினமும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிகிட்டு? என்ன சொன்னாலும் கேக்க மாட்டாங்களே. . .’ செல்லமாய்த் தனக்குள் அலுத்துக்கொண்டாள் கீதா.
பாலு, கீதா சுருக்கமான பெயர்கள். தங்கள் மகனுக்கும் அதேபோன்றே சுருக்கமாகப் பெயர் வைத்தார்கள். ஆனால் கூப்பிடும் போதெல்லாம் கோபு கண்ணா, கோபு செல்லம், கோபு கண்ணம்மா, கோபு குட்டி, கோபு தங்கம் என்று பெயர் நீண்ண்ண்டுகொண்டே போகும்.

                   ஒவ்வொரு கதவின் பின்புறமும் நிதானமாகத் தேடினான் பாலு. ஒருமுறை அப்படித்தான் வேகமாகக் கதவை இழுக்க கதவிடுக்கில் கோபுவின் விரல் சற்றே நசுங்கி அலறினான். கோபுவைவிட பாலு அதிகமாகத் துடித்துவிட்டான். கீதா அழுதேவிட்டாள்.

                         சமையல்கட்டின் கதவு, படுக்கையறைக் கதவு, பாத்ரூம்... எல்லா இடத்தின் கதவின் பின்னாலும் தேடியாகிவிட்டது.
                       எங்கே? எங்கே? யோசித்தான் பாலு.

                        இந்த வீட்டைக் கட்டிய மனை பூர்வீகச் சொத்தாக வந்தது. தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அவர்கள் மகன் சந்தானம் தன்னுடைய அப்பா, அம்மா என்று கூட்டுக்குடும்பமாக இருந்தார்கள். அறுபதுக்கு முப்பது இடம்.
அண்ணன் தம்பி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பாலுவையும் சந்தானத்தையும் பாராட்டியதெல்லாம் அந்தக் காலம். ஒரே பாயில் ஒரே தலையணையில் படுத்து ஒரே போர்வையில் உருண்டு, ஒரே தட்டில் சாப்பிட்டு காலைமுதல் மாலைவரை கட்டிப்புரண்டு விளையாடிய காலங்களை மறக்க முடியுமா? உண்மையில் அவர்கள் பெரியப்பா சிற்றப்பா பிள்ளைகள். ஆனால் சிறுவயதில் அண்ணன் தம்பியாகவே தெரிந்தார்கள். இந்தப் பாசம், நேசம் எல்லாம் பெரியவர்களானதும் எங்கே போய்த் தொலைகின்றன?

                            ஒரே குடும்பமாய்க் கூட்டுக்குடும்பமாய் இருந்தவரையில் யார் செலவு செய்கிறார்கள்? யார் சாப்பிடுகிறார்கள்? என்றெல்லாம் கணக்குப் பார்த்ததே கிடையாது.

                              பாலுவுக்கும் சந்தானத்துக்கும் அடுத்தடுத்துத் திருமணம் நடந்தேறின. வீட்டின் மக்கள் தொகையில் இரண்டு எண்ணிக்கை கூடியதோடு அவர்களைப் பார்க்க வருவோர் போவோர் என்று இடநெருக்கடி கூடுதலாகத் தெரிந்தது. சந்தானத்திற்கு வாய்த்த கஸ்தூரி தாராளமாகச் செலவு செய்பவள். அடிக்கடி ஓட்டலுக்குப் போகவேண்டும் என்று விரும்புபவள். புதிய படம் வெளிவந்தது என்றால் திரைப்பட அரங்குக்குச் சென்றுதான் பார்க்க வேண்டும் அவளுக்கு. இப்படியெல்லாம் செலவுகள் தாறுமாறாயின. கீதாவோ படு சிக்கனம். - இவற்றால் அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வெடித்தன.
தன் மகன்கள், மருமகள்கள், பேரன்களையும் கைப்பிடியில் வைத்திருந்த தாத்தா மேலோகம் போய்ச்சேர்ந்தார். இனி சௌகரியப்படாது என்று பாகம் பிரித்துவிட்டார்கள். வீடு ரொம்பவும் பழைய வீடாகையால் இனி உதவாது என்று இடித்து, மனையாகப் பிரித்துத் தரப்பட்டது.

                             பாலுவோ சந்தானமோ முழுசாய் ஒருவர் அந்த இடத்தை எடுத்துக்கொண்டு மற்றொருவருக்குப் பணத்தைத் தந்துவிட்டால் அவர் வேறொரு இடம் வாங்கிவிடலாம். இருவருமே தாராளமாக வீடு கட்டலாமே என்று எதிர்வீட்டு ஏகாம்பரம் மாமா சொன்ன அறிவுரை இருவர் காதிலும் ஏறவில்லை. பிறந்து வளர்ந்த இடம் என்ற சென்டிமென்ட்டை இருவரும் விடத் தயாராய் இல்லை.

                                 மாமனார் உதவியால் சந்தானம் உடனடியாக வீடுகட்டத் தொடங்கிவிட்டான். கட்டடத்தின் இரண்டு பக்கமும் இரண்டு அடியாவது விடவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஏற்கெனவே குறைவாய் உள்ள பதினைந்தடி அகலத்தில் பக்கவாட்டில் வேறு காலிஇடம் விட முடியுமா? தன் பாகம் முழுக்கக் கட்டவேண்டும் என்றான் சந்தானம். ‘அப்படியென்றால் சன்னல்கள் வைக்க முடியாதே’ என்றார் பொறியாளர். ‘சன்னல் தேவையில்லை சார். இப்பல்லாம் எல்லாரும் ஏ.சி. வெச்சுக்கறாங்க. எதுக்கு சன்னல்? சுவராகவே எழுப்பிவிடுங்கள்’ என்றான் சந்தானம். ஓர் ‘இன்ச்’ இடமும் விடாமல் சுவர் எழும்பியது. எல்லைத் தகராறும் எழுந்தது. பாலுவும் கருவிக்கொண்டிருந்தான் தன் இடம் குறைந்துவிட்டதாக. இரண்டு பக்கமும் சன்னல்கள் இன்றிச் சிறைச்சாலை போன்று இரண்டுமாடி வீடு எழுந்தது.
பெரியப்பா மகன் வீடுகட்டி விட்டதால் தானும் உடனே வீடுகட்டத் துடித்தான் பாலு. வங்கிக் கடன் வாங்கக் கால தாமதம் ஆனது. கடன் கிடைத்துக் கட்டத் தொடங்கியதும்தான் இன்னொரு பிரச்சனை எழுந்தது. சந்தானம் கட்டியதுபோன்றே தானும் தன் மனை முழுக்கக் கட்டடத்தை எழுப்பவேண்டும் என்று சொன்னான் பாலு.

                         ‘சார், அவரு வீடு கட்டும்போது உங்க மன காலியா இருந்திருக்கும். ஆனா இப்ப எப்படி நாங்க நின்னு வேல செய்ய முடியும்?’ வினவினான் மேஸ்திரி.

                          பாலு ஒத்துக்கொள்ளவில்லை. சந்தானம் வீட்டுச் சுவரிலே கட்டிவிடலாமா என்று யோசித்தான். சந்தானம் தன் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டுத் தன் அலுவலகத்திற்கு அருகில் குடியேறிவிட்டாலும் பாலு வீடு கட்டும்போது அடிக்கடி வந்து கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.

                          பொறியாளரும், ‘பிற்காலத்தில் வீடு விற்கக் கொள்ளப் பிரச்சனையாகும்’ என்று எச்சரித்தார். அதனால் சுவர் தனியாகத்தான் கட்ட வேண்டும் என்றார். பேச்சுவார்த்தையின் இறுதியில் அரையடி இடுக்குவிட்டு அடிக்கல் நாட்டிச் சுவர் எழுப்பப்பெற்றது. கட்டுவேலையின்போது கையை இடைவெளியில் விட்டுப் ‘பதிந்து விடவும்’ துடைப்பத்தால் பெருக்கிவிடவுமே கடினமாக இருந்தது. அடிக்கடி ஆள் பெருக்கிவிடும்போது புறங்கையைப் பக்கத்து வீட்டுச் சுவரில் தேய்த்துக்கொண்டனர். கட்டுவேலையில் சுவரைப் பதிந்துவிடும்போது கலவைக்கனத்தால் மேலும் ஓர் அங்குலம் இடைவெளியில் குறைந்துபோனது.

                              சந்தானத்திற்கும் பாலுவிற்குமிடையே சிலபல வாக்குவாதங்களோடு ஒருவழியாகக் கட்டடம் முடிக்கப்பட்டுவிட்டது. சந்தானத்தின் வீட்டின் பக்கம் மட்டும் பாலுவின் வீட்டுச் சுவர் பூசப்படாமல் இருந்தது. அதற்கு வழியில்லை.

                            பாலு வீடு கட்டும்போதே சந்தானத்தைப் போன்று முதல் மாடியையும் சேர்த்துக் கட்டிவிட்டான். ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டுவிட்டால் ஆபத்து அவசரத்திற்கு உதவியாக இருக்குமல்லவா? அத்துடன் வங்கிக்கடனைக் கட்டவும் வசதியாக இருக்குமே!
பாலு மேல்மாடியில் இருந்துகொண்டு கீழே வாடகைக்கு விட்டான். ஏனென்றால் கீழ் போர்ஷனுக்குத்தான் வாடகையாக ஐநூறு ரூபாய் சேர்த்துவாங்க முடிந்தது.

                              கோபுவை ஒவ்வொரு அறையாகத் தேடியபோது அறையின் விஸ்தாரமற்ற தன்மை பழைய நினைவுகளைப் பாலுவுக்குக் கொண்டுவந்து சேர்த்தது. பாலுவிற்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. ‘ஒருவேளை பையன் கீழே குடித்தனக்காரர் வீட்டில்போய் விளையாடிக் கொண்டிருப்பானோ?’ படிக்கட்டுகளில் வேகமாக இறங்கினான் பாலு. கதவு உள் தாழ்ப்பாள் இட்டிருந்தது. அழைப்பு மணியை அழுத்தினான். பங்கஜத்தம்மாள் எட்டிப் பார்த்தார்.

                        ‘என்னப்பா பாலு? நேத்திக்கே கீதாகிட்ட வாடகை குடுத்துட்டேனே!’ என்றார்.
                         ‘இல்லம்மா, கோபு உள்ள இருக்கானா?’
                       ‘கோபுவா? இங்க வரலியேப்பா!’
                      பாலுவுக்குச் ‘சொரேர்’ என்றது.

                       தான் வரும்போது ‘வாசல்கேட்’ கதவு தாழிடப்படாமல் திறந்திருந்தது. ஒருவேளை வெளியே ஒடிஇருப்பானோ? ‘கீதா பொறுப்பில்லாமல் என்ன செய்துகொண்டிருந்தாள்?’ மனத்திற்குள் கோபம் கொப்பளித்தது. அதற்குள் கீதாவும் இறங்கி வந்தாள்.

                      கோபு. . . கோபு. . . என்று உரக்கக் கூவினர். தெருவின் இரு முனைகளுக்கும் குரல்கொடுத்துக்கொண்டே ஓடினர். இங்கும் அங்கும் தேடித்தேடி ஓடினார்கள். ஒவ்வொரு வீட்டையும் தட்டினார்கள். வீட்டின் சந்துபொந்துகள் எல்லாம் தேடினார்கள். தெருவே தேடியது. எங்கும் கோபுவைக் காணவில்லை.

                            கோபுவின் கையில் பொன்னாலான காப்பு அணிந்திருந்தான். அது கையில் இறுகிக் கிடந்தது. காப்பைக் கழற்றிவிடலாம் என்று பாலு பலமுறை சொன்னான். கீதாதான் கேட்கவில்லை. அது அவள் அம்மா போட்டது. தங்கக் காப்பிற்கு ஆசைப்பட்டுக் கோபுவை யாராவது கடத்திக்கொண்டு போய்விட்டார்களோ? அண்மையில்கூட ஒரு குழந்தையின் காதில் இருந்த நகையைத் திருடிக்கொண்டு கிணற்றில் குழந்தையை வீசிவிட்டதாகச் செய்தி வந்திருந்ததே. பாலுவின் மண்டைக்குள் வண்டு குடைந்தது.

                    கோபு அழகுப் பிள்ளையாயிற்றே! யாரேனும் ஆண்பிள்ளைக்கு ஆசைப்பட்டுக் கடத்திச் சென்றிருப்பார்களோ? - கீதா புலம்பினாள். தேடித்தேடித் திகைத்துப்போனார்கள்.

                     காவல்துறையிலும் புகார் செய்தார்கள்.

                     கோபு காணாமல்போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. கீதா கிழிந்த நாராய்க் கிடந்தாள். அவள் உயிரோடு இருக்கிறாளா? என்றே பலமுறை அசைத்துப்பார்க்க வேண்டியிருந்தது. பாலுவுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

                       ஊருக்குச் சென்றிருந்த வேலைக்காரி பொன்னம்மா இரண்டுநாள் கழித்துத் திரும்பிவந்தாள். செய்தியைக் கேள்விப்பட்டு அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. ‘அம்மா, நீங்க வேணா பாருங்க. போலீஸ்காரங்க கட்டாயம் நம்ப கொழந்தய கண்டுபிடிச்சுடுவாங்க. வருத்தப்படாதிங்கம்மா’, என்று ஆறுதல் சொன்னாள்.

                     வீடே அலங்கோலமாகக் கிடந்தது. மனத்தைத் தேற்றிக்கொண்டு சீர்ப்படுத்தினாள்.  துணிகளைத்  துவைத்தாள்.  கோபுவின்   துணிகளைப் பார்க்கும்போது நெஞ்சே நின்றுவிடும்போல் இருந்தது பொன்னம்மாவிற்கு. அழுகை பீறிட்டது. ‘மகமாயி, ஆத்தா! புள்ளயக் கொண்டுவந்து சேத்துடும்மா. . .’ என்று மாரியம்மனை வேண்டிக்கொண்டாள்.

                        துணிகளைக் காயவைக்க மேல்மாடி சென்றாள். ஏற்கெனவே காயவைத்த துணிகள் இரண்டு நாட்களாக எடுக்கப்படவில்லை. காற்றில் அசைந்து அசைந்து கிளிப்போடு சேர்ந்து கொடிக்கயிற்றின் ஒருபுறமாக ஒதுங்கிக் கிடந்தன. சில துணிகள் கிளிப்பைவிட்டுக் கழன்று கீழே அலங்கோலமாகக் கிடந்தன.

                         சில நேரங்களில் காற்றில் துணிகள் பறந்து பின்வீட்டிலோ அல்லது பக்கத்து வீட்டின் சுவர் இடுக்கிலோ விழுந்து கிடக்கும். எத்தனை கிளிப்புகள் போட்டாலும் காற்றில் நிற்கிறதா? என்று கூறிக்கொண்டே சந்தானம், பாலு இருவர் வீட்டுச் சுவர் இடுக்கில் துணிகள் வீழ்ந்துவிட்டதா என்று பொன்னம்மா எட்டிப்பார்த்தாள்.

                       அவள் நினைத்ததைப்போலவே இடுக்கில் கோபுவின் ஆரஞ்சுச் சட்டை நடுவாந்திரத்தில் மாட்டிக்கொண்டு கிடந்தது.

                      ஆனால். . . ஆனால். . .  அங்கு சட்டை மட்டுமா இருக்கிறது?

                      நெஞ்சுக்குள் ஒரு பயப் பந்து உருண்டது. ‘குழந்தை. . . குழந்தை . . . ’
‘கோபூஊஊஊ. . .’  - வீறிட்டாள் பொன்னம்மா. அவள் வீறிட்ட ஒலி அந்தத் தெருவையே அதிரவைத்தது. கீதா தன் உயிரை ஏந்திக்கொண்டு ஓடிவந்தாள். பாலு பதறியடித்துக்கொண்டு வந்தான். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பொன்னம்மாள் அரை மயக்கத்தில் இருந்தாள். அவளை அனைவரும் உலுக்கினார்கள். அவள் விரல் காட்டிய இடத்தில் உற்றுநோக்கினர்.
கோபு. . .

                      அவன் தலை இரண்டு சுவர்களின் இடுக்கில் சிக்கித் தலைகீழாக. . .
அவன் ஆசையாய் விளையாடும் சிவப்புப்பந்து அவனுக்குக் கீழே தரையில் அசையாமல் . . .                                                      


                                                                                   ***

Friday, 6 January 2017

நூலக ஆற்றுப்படை

கவிஞர் அவ்வை நிர்மலாவின்
நூலக ஆற்றுப்படை
நூல் அணிந்துரை

முனைவர் நா.இளங்கோ
தமிழ்த்துறைத் தலைவர்
தமிழ் இணைப் பேராசிரியர்
தாகூர் கலைக்கல்லூரி
புதுச்சேரி- 605008
மனிதன் தான் சிந்தித்த, கற்பனை செய்த, விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்துவடிவில் பதிந்து வைக்க உருவாக்கிக் கொண்டதோர் கருவிதான் நூல். எழுத்து வடிவிலான இத்தகைய பதிவுகள் தொடக்கத்தில் கல்லிலும் சுடுமண் பலகைகளிலும், ஓலைகளிலும் பதிந்து வைக்கப்பட்டன. காகிதம் மற்றும் அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு நூல்களின் பெருக்கத்திற்குப் பெருமளவில் வழிவகுத்தது. தமிழகத்தில் தொடக்ககால நூல்கள் பனையோலை நறுக்குகளில்  எழுதப்பட்டன. அவை சுவடிகள் என்றழைக்கப்பட்டன. பனையோலை நறுக்குகள் துளையிட்டுக் கயிற்றால் கோர்த்துக்கட்டப்பட்டிருந்த காரணத்தால் அவை பொத்து அகம்- பொத்தகம் என்றழைக்கப்பட்டன. நூல் என்ற சொல்வழக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்திலேயே இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் குறிப்பிடும் நூல் இலக்கண நூல் ஆகும். நன்னூல் தனது பொதுப்பாயிரத்தில் நூல் என்ற சொல்லுக்கான பொருட்காரணத்தை விளக்கிக் காட்டுகின்றது.ஒரு மரத்தின் வளைவு நெளிவுகளைக் கண்டறிவதற்கு மரவேலை செய்யும் தச்சர்கள் பயன்படுத்தும் கருவி, நூல் ஆகும். மரத்தின் வளைவைக் கண்டறிந்து அதனைச் சீர் செய்வதற்கு நூலைப் பயன்படுத்துவது போல மனிதனின் மனதில் உண்டாகும் கோணல்களைக் கண்டறிந்து அவன் மனக்கோளாறுகளை ஒழுங்குபடுத்தும் கருவியாக நூல் செயல்படும் என்கிறார் நன்னூல் ஆசிரியர் பவனந்தியார்.
மனிதகுல வரலாறு மற்றும் சிந்தனைகளின் எழுத்துப் பதிவுகளாக அமைந்திருக்கும் நூல்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமித்து வைக்கப்பட்டு ஒருவருக்கோ பலருக்கோ வாசிக்க இடமளிக்கும் போது அவ்விடம் நூலகம் என்றழைக்கப்படுகிறது. இவ்வகை நூலகங்கள் அரசாலோ கல்வி மற்றும் பொது நிறுவனங்களாலோ குழுக்களாலோ, தனி நபர்களாலோ உருவாக்கப்பட்டு நிறுவகிக்கப்படும். இத்தகு சேவைகள் பெரும்பாலும் கட்டணமின்றியும் ஒரோவழி கட்டணச் சேவையாகவும் வழங்கப்படும்.
நூலகங்களின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகின்றது. மெசபடோமியர்கள் என்றழைக்கப்படும் இன்றைய ஈராக்கியர்களே முதன்முதலில் நூலகத்தை உருவாக்கியவர்கள். இவர்கள் களிமண் பலகைகளில் எழுதி அவற்றை நெருப்பில் சுட்டு அரண்மனைகளிலும் கோவில்களிலும் பாதுகாத்து வைத்திருந்தனர். துறைவாரியாகப் பகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட மெசபடோமியர்களின் முயற்சியை நூலகங்களுக்கான முன்னோடி முயற்சி எனலாம்.
அச்சியந்திரங்கள், காகிதங்கள், அச்சிடும் மை முதலான பொருட்களின் பயன்பாடு பெருகிய கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் தான் நூல்களும் பெருகின நூலகங்களும் பெருகின. தற்போதைய நூலகங்களின் தோற்றமும் வளர்ச்சியும் நூற்றைம்பது ஆண்டுக்கால வரலாற்றினை மட்டுமே கொண்டுள்ளது. கல்வி மற்றும் மத நிறுவனங்களின் பெருக்கமே நூலகங்களின் பெருக்கத்திற்கு வழிவகுத்தன. உலகம் முழுமைக்கும் இதுவே பொதுவிதி.
நூலகங்கள் பலதிறத்தன, வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான நூலகங்கள் அரசு நூலகங்களாவே உள்ளன. அரசு நூலகங்களைப் பொதுவாக தேசிய நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், கிராம நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் என்று வகைப்படுத்தலாம். இவ்வகை அரசு நூலகங்கள் மட்டுமல்லாமல் பல்கலைக் கழக நூலகங்கள், கல்லூரி, பள்ளி நூலகங்கள், தனியார் நூலகங்கள், வாசகசாலைகள் முதலான பல்வேறு நூலகங்கள் நாட்டில் இயங்குகின்றன.
இத்தகு நூலகங்களின் அருமை பெருமைகளை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் பாங்கில் தமிழின் மரபுச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான ஆற்றுப்படை இலக்கணத்திற்கேற்ப உருவாகியுள்ள சிற்றிலக்கியமே கவிஞர் அவ்வை நிர்மலாவின் நூலக ஆற்றுப்படை என்ற இந்நூல்.
கவிஞர் அவ்வை நிர்மலா,புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்ப் பேராசிரியர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியப் பணியோடு பல நூறு கவிஞர்களையும் பேச்சாளர்களையும் மாணவியர்களிலிருந்து உருவாக்கி வளர்த்த பெருமை அவருக்குண்டு. இவர் சிறந்த கல்வியாளர், ஐந்து முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலம் மட்டுமன்றிப் பிரஞ்சு, இந்தி, தெலுங்கு, மராட்டி முதலான மொழிகளைப் பயின்றவர். கவிதை, நாவல், சிறுகதைகள், நாடகம் எனப் படைப்பிலக்கியத்தின் பல்வேறு வகைமைகளிலும் தொடர்ச்சியாக நூல்களை எழுதி வெளியிட்டு வருவதோடு மிகச்சிறந்த ஆய்வாளராகவும் திகழ்பவர். அண்மையில் புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் விருதினைப் பெற்றுள்ள அவர் படைப்பிலக்கியத் திறன், ஆய்வுத் திறன்களோடு முனைப்பான ஆளுமைத் திறனும் பெற்றுத்திகழ்வது அவரின் தனித்தன்மைக்கு மிகச்சிறந்த சான்றாகும். உலக நாடுகள் பலவற்றையும் சுற்றிப்பார்ப்பதில் அவருக்கிருக்கும் ஆர்வம் அலாதியானது. பல்வேறு, மொழி, இன, பண்பாட்டு வேற்றுமைகள் கொண்ட மனித குலத்தைக் கூர்ந்து நோக்கி உலகியல் அறிவை விசாலப்படுத்திக் கொள்வதில் அவருக்கிருக்கும் அதே நாட்டம், சக மனிதர்களின் அக மன முரண்களையும் புற உடல் நடவடிக்கைகளையும் கூர்ந்து நோக்கித் தம் கதை, கவிதை முதலான படைப்பிலக்கியங்களில் பதிவுசெய்வதிலும் இருப்பது வியப்பானதொன்றாகும்.
அண்மைக் காலங்களில், குறிப்பாகக் கடந்த ஓராண்டாக அவர் மரபிலக்கியங்களின் பக்கம் பார்வையைத் திருப்பியிருப்பது தமிழ் மரபிலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி. ஓராண்டுக்கு முன்னர் அன்பு அண்ணனின் பிறந்தநாள் பரிசாக நான் அவருக்குத் தந்த இலக்கணச்சுடர் இரா. திருமுருகனாரின் பாவலர் பண்ணை என்ற நூல் அவரின் கவிதைப் பயணத்திற்குப் புதியதோர் பாதையைச் சமைத்துத் தந்துள்ளது என நான் கருதுகிறேன். தற்போது அவர் எழுதிவரும் வெண்பா, அகவல், விருத்தம், காவடிச் சிந்து முதலான மரபுப்பாடல் வகைகள்மிகச்சிறப்பான செய்நேர்த்தி கொண்ட படைப்புகளாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது.புதுக்கவிதைகளில் மட்டுமே தமது படைப்பாளுமையைக் காண்பித்து வந்த அவ்வை நிர்மலா அவர்களின் பார்வையை மரபுக் கவிதைகளின் பக்கம் திருப்பிய பெருமையில் எனக்கும் பங்குண்டு என மகிழ்கிறேன். இலக்கணச் சுடர் அய்யா அவர்களுக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழின் முதல் சிற்றிலக்கியம் என்ற பெருமை ஆற்றுப்படை நூல்களுக்கு உண்டு. சங்க இலக்கிய எட்டுத்தொகையின் புறப்பாடல் தொகுப்புகளான புறநானூறு, பதிற்றுப்பத்து முதலான நூல்களிலேயே ஆற்றுப்படை தொடர்பான பாடல்கள் இடம்பெற்றுள்ளன என்றாலும் பத்துப்பாட்டில்தான் ஆற்றுப்படை தனி இலக்கிய வகைமையாக, இலக்கியமாக உருப்பெற்றுள்ளது. பத்துப்பாட்டின் செம்பாதி நூல்கள் ஆற்றுப்படைகளே. ஆறு என்றால் வழி, குறிப்பிட்ட ஒரு வழியில் செல்லும்படி பிறரை ஆற்றுப்படுத்திச் சொல்வதே ஆற்றுப்படையாகும். இது உயர்ந்த மக்களைப் பாடும் பாடாண் திணையைச் சேர்ந்தது. பதிற்றுப்பத்து, புறநானூறு போன்ற சங்கப் புறப்பாடல்களில்இடம்பெறும் ஆற்றுப்படைகள் அளவால் சிறியன. இந்தத் தலைவனிடம் போனால் பரிசில் பெறுவாய் என்ற நிலையிலேயே அந்தப் பாடல்கள் நின்றுவிடுகின்றன. பத்துப்பாட்டில் இடம்பெறும் ஆற்றுப்படைகள் புதிதான ஓர் இலக்கியவகை.
இந்தவகை ஆற்றுப்படைகளுக்கென்று ஒரு தனித்த கட்டமைப்பு உண்டு. ஆற்றுப்படை இலக்கியங்களில் முதற்கண் புலவரும் பாணரும் பொருநரும் கூத்தரும் தம்தம் வாழ்க்கையின் பழைய நிலையை எடுத்துக்கூறுவர், அடுத்துப் பரிசு தந்து வறுமை போக்கிய தலைவனுடைய புகழைப் பலபடப் புகழ்ந்து பேசுவர், அடுத்து, வாடி வருந்தி எதிர்ப்பட்ட புலவரையும் பாணரையும் பொருநரையும் கூத்தரையும் நோக்கி, இவ்வறுமைத் துன்பம் ஒழிந்து நீங்களும் எம்மைப்போல் வாழவேண்டுமானால் இந்த வழியே சென்று இன்ன தலைவனைக் கண்டு இன்னபயன் பெற்று வருவீர்களாக என்பர், மேற்சுட்டிய நிகழ்ச்சிக் கூறுகள் ஆற்றுப்படைகளின் அடிப்படை நிகழ்ச்சிகளாக இவ்வகைச் சிற்றிலக்கியத்தில்இடம்பெறும். பிற பகுதிகள் அந்தந்தப் புலவர்களின் தனித்தன்மைகளுக்கேற்பக் கூடியும் குறைந்தும் வரும்.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்     (தொல்.. புறத். 36)
என்று ஆற்றுப்படைகளுக்குத் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கின்றது.
        உரைநடையின் மறுவருகைக்குப் பின்னர் மரபான செய்யுள் இலக்கிய வகைமைகள் வழக்கொழிந்து விட்டன என்ற பொதுக்கருத்தில் உண்மையில்லை. கடந்த இருபதாம் நூற்றாண்டில் காலத்திற்கேற்ற புதுப்புது உள்ளடக்கங்களோடும் புத்தம்புது பாட்டுடைத் தலைவர்களைக் கொண்டும் உருவாகியுள்ள சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை பல்லாயிரமாகும். அவ்வகையில் உருவானதோர் புதுமைப் படைப்பே இந்த நூலக ஆற்றுப்படை. இது உருவத்தில் மரபையும் உள்ளடகத்தில் புதுமையையும் கொண்டு உருவான காலத்தின் தேவைக்கு ஏற்றதோர் கவின்மிகு படைப்பாகும்.
        நூல் வாசிப்பு என்பது ஒரு மகிழ்வான அனுபவம். கதை, கவிதை முதலான படைப்பிலக்கிய வாசிப்பு மட்டுமல்லாமல் எந்தவகை வாசிப்பாக இருந்தாலும் அது வாசகனின் மனவுலகைத் தன்வயப்படுத்துகிறது. வாசிப்பே கற்பனைகளின் ஊற்றுக்கண், கற்பனைகளே மனித சமூக வளர்ச்சியின் படிக்கட்டுகள். மனித மனத்தின் கற்பனைகள் இல்லாமல் அறிவியல், தொழில்நுட்பம் முதலான வியத்தகு விந்தைகள் எவையும் இல்லை என்பதை உணர்ந்தால்தான் வாசிப்பின் இன்றியமையாமை நமக்குப் புலனாகும். இத்தகு உன்னத வாசிப்பை நமக்கு வழங்குவன நூல்களும் நூலகங்களும்தான்.
        நூல்கள் மற்றும் நூலகத்தின் அருமை பெருமைகளை அதன் சிறப்பறியா இளைஞன் ஒருவனுக்கு எடுத்துச் சொல்லி நூலகத்திற்குச் செல்ல ஆற்றுப்படுத்தும் மூத்த அறிஞர் ஒருவரின் ஆற்றுப்படுத்தலாக முந்நூற்று அறுபத்தைந்து அடிகளில் விரிகிறது இந்த நூலக ஆற்றுப்படை. நூல்களின் சிறப்பறியா இளைஞனின் வாய்மொழிக் கூற்றாக இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. பாடங்களை மனனம் செய்து விடைத்தாளில் கக்கி விழுக்காடுகளைப் பெறும் இன்றைய சராசரி இளைஞனின் பிரதிநிதி இந்த ஆற்றுப்படையின் இளைஞன், அதனால்தான்,
பாட நூலெனில் பாகலின் கசப்பே
ஏடுக ளின்றி எழுதுகோ லின்றிக்
கையை வீசிக் களித்தோம் அங்கே!
தேர்வு வருங்கால் நண்பர் கூடிச்
சேர்த்த நகலைத் தெளிவே யின்றிப்
பார்த்த துண்டு()டல் வேர்த்த துண்டு!
தன்னாட்சி பெற்ற கல்லூரி யதனால்
நாட்டில் தமது மதிப்பைக் காக்க
ஏட்டில் வெற்றி வீதம் நிறுத்த
படித்தார் படியார் அத்தனை பேர்க்கும்
பெரும்படி மதிப்பெண் அளித்தார் முதல்வர்!
என்று மாணவர்களின் பொறுப்பற்ற கற்றலையும் கற்பிப்பவர்களின் வணிக நோக்கிலான சுயநலச் செயல்பாடுகளையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றான் அவன். மேற்காட்டிய பகுதியில் கவிஞர் அவ்வை நிர்மலா இன்றைய கல்விமுறை மற்றும் தேர்வுமுறை மீதான தமது விமர்சனங்களை மாணவன் கூற்றாக அமைத்து எள்ளி நகையாடுகின்றார்.
        அதுமட்டுமா? அடுத்து, கல்லூரி மற்றும் துறை நூலகப் பொறுப்பு ஏற்றிருக்கும் பேராசிரியர்களின்உண்மை நிலைமைகளை மாணவன் வாயிலாக விவரிக்கும் பின்வரும் பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கது.
துறைநூ லகமும் இருந்தது அங்கே
புல்லிய நெஞ்சப் பேரா சிரியரின்
பொறுப்பில் இருந்தன அடுக்கிய நூல்கள்!
மாணவத் தோழர் நூல்களை வேண்டி
அவ்வப் போது அணுகிய துண்டு!
தலைமேல் அவர்க்குத் தாங்கொணாப் பணியால்
இலையே நொடியும் ஓய்வெனச் சொல்லி
தட்டிக் கழித்தே தடைசெய லானார்
வலிந்து கேட்டால் முகத்தைச் சுளிப்பார்
விலங்கு போலே வெறுப்புடன் கடிப்பார்
காவிய நூல்களின் கல்லறை அமைத்தார்
கேட்டுக் கேட்டுப் புளித்துப் போனதால்
அதற்குப் பின்னால் கேட்பதை விடுத்தோம்
துறையில் இருக்கும் நூல்களை விரும்பிக் கேட்கும் மாணவர்களுக்கு வழங்காமல் பூட்டிவைத்துப் பாதுக்காக்கும் பொறுப்பற்ற ஆசிரியப் பெருமக்களின் மீதான கவிஞரின் தார்மீகக் கோபம்,வலிந்து கேட்டால் முகத்தைச் சுளிப்பார், விலங்கு போலே வெறுப்புடன் கடிப்பார், காவிய நூல்களின் கல்லறை அமைத்தார் முதலான அடிகளில் நெருப்புக் கணைகளாக வெளிப்படுப்படுகிறது.ஆக, மாணவர்களின் வாசிப்புக் குறைபாட்டிற்கு மாணவர்களை மட்டுமே குற்றஞ்சொல்ல முடியாது என்றும் ஆசிரியர்களின் அக்கறையின்மை, சுயநலப்போக்கு முதலான காரணங்களும் அதற்குண்டு என்றும் கவிஞர்குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
        கவிஞர் அவ்வை நிர்மலா ஆசிரியர், மாணவர்கள் குறித்தும் கல்விமுறை, தேர்வுமுறைகள் குறித்தும் விமர்சிப்பதோடு நிறுத்தாமல் நூலகங்களை நாடிச் சென்று வாசிக்கும் பழக்கமுடைய பொதுமக்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளையும் கண்டிக்கத் தவறவில்லை. நூலகம் பொதுச்சொத்து என்பதையும் அது அனைவருக்குமானது என்பதனையும் மறந்து சுயநலப் போக்கோடு பொது நூலகங்களில் செயல்படும் சராசரி வாசகரைச் சாடும் பின்வரும் பகுதி குறிப்பிடத்தக்கது.
நூலைத் தேடும் வாசகர் சிலரோ
பின்னர்ப் படிக்க விரும்பிடும் நூல்களை
வேறொரு துறையின் நூல்களின் அடுக்கில்
செருகிச் செருகி மறைத்தே வைப்பர்
காலப் போக்கில் மறந்தும் தொலைப்பர்!
நல்ல நூல்கள் பலவும் இப்
படிச்
செல்லாக் காசாய்ப் பயனில வாகும்
பாடம் தொடர்பாய்ப் படித்திடும் நூல்களின்
பக்கம் கிழிப்பர் பண்பிலா மாணவர்
மறுபதிப் பில்லா மாறிலா நூல்கள்
இத்தகு செயலால் இல்லா தாகுமே!
நூலகப் பணியாளர்கள் வாசகர்களுக்குத் தேவைப்படும் நூல்களை விரைந்து தேடியெடுப்பதற்கு வாகாகக் கோலன் முதலான நூலகப் பகுப்பு முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நூல்களை வகுத்தும் பகுத்தும் அடுக்கிவைத்திருப்பர். இந்த ஒழுங்கைச் சிதைக்கும் விதமாய்த் தாறுமாறாக நூல்களைக் கண்ட இடத்தில் செருகி வைக்கும் நூலக வாசகர்களின் புன்மைச் செயலைக் கண்டிக்கும் பகுதியும் நூல்களின் பக்கங்களைக் கிழித்து எடுத்துச் செல்லும் பண்பற்ற செயலைக் கண்டித்துரைக்கும் பகுதியும் அனைவருக்கும் ஏற்ற நூலக அறநெறிகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
புதுச்சேரியை அடுத்துள்ள கோட்டக்குப்பம் ஊரில் அமைந்துள்ள அஞ்சுமன் நுஸ்ரதுல் இஸ்லாம் நூலகம் குறித்து ஆற்றுப்படுத்தும் ஆற்றுப்படையின் அடுத்த பகுதி இந்நூலின் மிக இன்றியமையாத பகுதியாகும். இந்நூலகத்தின் பெருமைகளை விரிசைப்படுத்தி விவரிக்கும் நெடிய கூற்றின் ஒருபகுதிபின்வருமாறு,
கோட்டக் குப்பம் என்னும் ஊரில்
அஞ்சுமன் நுஸ்ரதுல் இஸ்லாம் என்னும்
அருமை நூலகம் உண்டே அறிவாய்
தொண்ணூ றாண்டுகள் தழைத்து வளர்ந்து
துறைதுறை தோறும் நூல்கள் பெருத்து
நல்லார் பல்லோர் திசைதொறும் அடுத்து
இல்லா நூல்கள் இலையென விடுத்துச்
சொல்லால் புகழ்ந்த செம்மலோர் பலரே!
கோட்டக்குப்பத்தில் 1926 முதல் இயங்கிவரும் அஞ்சுமன் நூலகம் தொண்ணூறு ஆண்டுகளாய்த் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஓர் அரிய ஆவணக் காப்பகமாகும் உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் ஓர் இஸ்லாமிய அறிவு மையமாய் இயங்கும் இந்நூலகத்தின் பெருமைகளை விரிவாகக்கூறும் நூலின் இப்பகுதி ஆற்றுப்படையின் மையப்பொருளை விவரித்துச் சொல்கிறது.
நிறைவாக மூத்த அறிஞர் விவரித்துரைத்த நூல்களின் நூலகத்தின் பெருமைகளை உணர்ந்து கொண்ட இளைஞன் நன்றி கூறுவதாக அமையும் பகுதி இதோ,
'ஐயா, மகிழ்ந்தேன் நன்றி மொழிந்தேன்
மெய்யாய் இன்றே கண்கள் திறந்தேன்
பொய்யாம் வாழ்வின் போக்குகள் விடுத்து
நையா நூல்கள் நாளும் படிப்பேன்
கையா லாகும் நூல்களை வாங்கி
விழாக்கள் தோறும் பரிசாய் அளிப்பேன்
வீணாய்ச் சுற்றி அலைவதை விடுத்து
விருப்பாய் நூலக அறையில் கழிப்பேன்"
நூல்களை வாசிப்பதோடு, இனி நூல்களை விலைகொடுத்து வாங்கி விழாக்கள் தோறும் பரிசளிப்பேன் என்றும் நூலகங்களில் விருப்பத்தோடு பொழுமைக் கழிப்பேன் என்றும் இளைஞன் கூறுவதாகக் கவிஞர் அமைத்துள்ள இப்பகுதி இன்றைய இளைஞர்களுக்கான இன்றியமையாச் செய்தியாகும்.
        365 அடிகளில் ஆற்றுப்படை இலக்கணத்தை ஏற்றும் புதுக்கியும் கவிஞர் அவ்வை நிர்மலா படைத்துள்ள இந்நூலின் சிறப்பியல்புகளைப் பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.
1.   எளிய இனிய சொற்களில் ஆற்றொழுக்கான நடையில் கற்போர் நெஞ்சைக் கவரும் வகையில் நடைநலத்தால் சிறப்புற்றுள்ளது.
2.   காட்சி ஊடகங்களின் படையெடுப்பால் காட்சி ஊடகங்களில் கரைந்து போகும் இன்றைய தலைமுறையினருக்கு நூல்களின் நூலகங்களின் சிறப்பியல்புகளை மென்மையாக எடுத்துரைக்கும் உள்ளடக்கத்தால் சிறப்புற்றுள்ளது.
3.   இன்றைய கல்விமுறையின் போதாமையை விமர்சனப் போக்கில் துணிந்து எடுத்துரைப்பதோடு செப்பனிட வேண்டிய நிலைமைகளை சுட்டிக்காட்டும் ஆக்க பூர்வமான அணுகுமுறையால் சிறப்புற்றுள்ளது.
4.   ஆய்வுலகமும் அறிஞருலகமும் அறிந்துகொள்ள வேண்டிய அஞ்சுமன் நூலகத்தின் அரும்பணியை அடையாளப்படுத்தும் நோக்கத்தால் சிறப்புற்றுள்ளது.
சிறுகதைகள், நாடகங்கள், புதினம், புதுக் கவிதை, மரபுக் கவிதை, கட்டுரை, திறனாய்வு எனத் துறைகள் தோறும் ஈடுபட்டு நூல்கள் படைத்துவரும் கவிஞர் அவ்வை நிர்மலாவின் சிற்றிலக்கியப் பணியைப் பாராட்டுவோம். தொடர்ந்து படைப்புலகில் அவர் தரமான படைப்புகளைத் தருவார் என்ற நம்பிக்கையோடு. வாழ்க! வளர்க!!.

nagailango@gmail.com