Monday, 16 February 2015

வாலாட்டும் மனசு

வாலாட்டும் மனசு

பொய்சொல்லப் போறேன் பொய் சொல்லப் போறேன் நீ கொஞ்சம் அழகியடி' என்று ஹம் செய்தவாறே மணிமாறன் குளிக்கச் சென்றான்.

மணிமாறன் நல்ல வளத்தி. அவன் மனைவி கனிமொழியும் நல்ல அழகுதான். ஆனால் மணிமாறனை நோக்க அவள் நிறம் சற்று கம்மிதான். மணிமாறன் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு முதற்பரிசு பெற்றவனாயிற்றே! கனிமொழி மட்டுமென்ன மணிமாறனுக்குச் சளைத்தவளா? அவளும் அழகிப் போட்டியில் முதற்பரிசு பெற்றவள்தான்!

மணிமாறனுக்குக் கனிமொழி மீது எவ்வளவு பிரியம் என்றால் . . . அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.  எந்நேரமும் அவள் வாலைப் பிடித்துக்கொண்டே செல்வான். அவள் குழந்தைகளைப் பெறப்பெற அவளது அழகு கூடுவதாக நினைக்கிறான். மோகம் முப்பது நாள்; ஆசை அறுபது நாள் என்பது மணிமாறனின் விஷயத்தில் பொய்யாகிப் போனது.

'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்ற குடும்பக் கட்டுப்பாட்டின் தாரக மந்திரம் அவர்களைப் பொறுத்தவரை அர்த்தமற்றது. வீடு நிறைய குழந்தைகள் இருக்க வேண்டும். அவற்றிற்குப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்துத் தனது தாய்மையை நிலைநிறுத்த வேண்டும் என்பது கனிமொழியின் எண்ணம்.

தனது மனைவியை மணிமாறன் ஒருபொழுதும் பிரிவதே இல்லை. அவனுக்கென்ன? வேலையா வெட்டியா? எதுவும் இல்லை. மணிமாறன்தான் அப்படி என்றால் கனிமொழியும் படுமோசம். சாப்பிட்ட தட்டைக்கூட நகர்த்தமாட்டாள். அதற்குத்தான் மற்றவர்கள் இருக்கிறார்களே! சமயத்தில் தானாகச் சாப்பிட அலுப்பு ஏற்பட்டால் ஊட்டிவிடக்கூட அவளை வளர்த்த அம்மா தயாராக இருக்கிறாள்.

நன்றாகச் சாப்பிட்டுவிட்டு ஏ.சி.யில் படுத்து மூச்சுமுட்ட ஒரு தூக்கம் போடுகிறான் மணிமாறன். இடையிடையே குறட்டைச் சத்தம் வேறு. போட்டி போட்டுக்கொண்டு கனிமொழியும் பக்கத்திலேயே படுத்துத் தூங்குகிறாள்.

வேலை செய்து சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயம் மணிமாறனுக்கு இல்லை என்பது வாஸ்தவம்தான். கனிமொழியும் அவனிடம், 'எனக்கு அது வேண்டும் இது வேண்டும்' என்று கூறி அடம் பிடிக்கப் போகிறாளா என்ன?

அவர்கள் இருவருக்கும் ஊர் சுற்றுவதில் ஆசைதான். ஆனால் என்ன செய்ய? பஸ், ரயில், விமானம் என்றெல்லாம் ஏறி ஊரைவிட்டு இதுவரை வெளியே சென்றதில்லை. எப்போதும் டூ-வீலர் பயணம்தான். தூரம் கொஞ்சம் அதிகமென்றால் எஸ்டீம் கார் இருக்கவே இருக்கிறது. எங்கேனும் பக்கத்தில் போகவேண்டுமென்றால் நடராஜா சர்வீஸ். 

காரில் செல்வதைவிட கால்நடையாகச் செல்வதுதான் சுகம் என்று மணிமாறன் அடிக்கடி சொல்லுவான். ஆனால் கனிமொழிக்கு நடந்து செல்வதைவிட காரில்செல்வதுதான் பிடிக்கும். ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு வேகமாக முகத்தில் வீசும் காற்றை அனுபவிப்பதில் அவளுக்கு அப்படியோர் அலாதி இன்பம். அத்தோடு நடந்துபோகும்போது எதிரேவரும் பெண்களை மணிமாறன் சைட் அடித்துக்கொண்டு கடலை போடுவதையும் தவிர்க்கலாம். 

மணிமாறனுக்குச் சிக்கன் லெக் பீஸ் ரொம்பவும் பிடிக்கும். எலும்பைக் கடித்து எச்சில் ஊற சாப்பிட வேண்டும். கனிமொழியின் டேஸ்ட் போன்லெஸ்தான். அதுவும் சின்னச்சின்னத் துண்டுகளாக இருக்கவேண்டும். அவள் வாழைப்பழச் சோம்பேரி. 'பெரிய பெரிய துண்டுகளைக் கடித்துக் குதறிக் காட்டான் போல் சாப்பிடாதே! பார்த்தாலே வாந்தி வருகிறது' என்று மணிமாறனை வம்புக்கிழுப்பாள். அது நாகரிகக் குறைச்சல் என்பாள். 'நீ மட்டும் காலியாப்போன தட்டை நக்கி நக்கி, தட்டைக் கழுவுவதற்கு வேலையே இல்லாமல் செய்கிறாயே, இது அநாகரீகமாகப் படவில்லையா?' என்று மணிமாறன் கேலி செய்வான்.

சில நேரங்களில் நாம் ஓட்டலில் சாப்பிடும்போது இப்படிப்பட்ட நபர்கள் நம் எதிரே அமர்ந்திருந்தால் நமக்கு வாந்தியே வந்துவிடும். ஆர்டர் கொடுத்துவிட்டு நம் தட்டுகளில் இலையின்றி வெறுமனே வைக்கப்பட்டிருக்கும் உணவு வகைகளை வாயில் வைத்தால் வெளியே தள்ளிக்கொண்டு வரும். படித்தவர்கள் கூட நிறைய பேர் சாப்பிட்டு முடிக்கும்போது இப்படித் தங்கள் கையையும் தட்டையும் சுத்தமாக நக்கித் தீர்த்துவிடுகிறார்கள்.

சிக்கனை ஒரு வெட்டு வெட்டினாலும் மணிமாறனும் கனிமொழியும் தீனிப்பண்டாரங்கள் இல்லை. காலையில் ஒரு டம்ளர் பால். மாலையில் சிற்றுண்டியாக ஒன்றிரண்டு தரமான விலை உயர்ந்த பிஸ்கெட்டுகள், இல்லை யென்றால் முறுக்கு . . . இத்யாதி. கனிமொழிக்கு அர்ச்சனா ஸ்வீட்தான் என்றில்லை, எதுவானாலும் ஓ.கே.  மணிமாறனுக்குக் கேக்தான் பேவரிட். 

மணிமாறன் சாப்பாடு விஷயத்தில் படுநாகரிகமானவன். தன் மனைவி சாப்பிட்டதும்தான் சாப்பிடுவான் என்றால் பாருங்கள். அதற்காக அவனைப் பெண்டாட்டிதாசன் என்று முடிவுகட்டி விடாதீர்கள். சாப்பாட்டிற்கு அலையும் ரகமில்லை அவன்.

நல்ல தைரியசாலியாக வளரவேண்டும் என்று அவனுக்கு மணிமாறன் என்ற பெயர் வைக்கப்பட்டது. பாண்டிய வம்சத்து மன்னர்கள் மாறன் என்று பெயர் வைத்திருந்தார்கள் என்பது வரலாறு கூறும் செய்தி. 

கனிமொழி பிறந்து இரண்டு மாதம் முதலாகத் தன் தாய்தந்தையரைப் பிரிந்து வளர்ப்புக் குழந்தையாக மணிமாறன் வீட்டிலேயே வளர்ந்தாள். அவள் குரல் கேட்க இனிமையாக இருந்ததால் கனிமொழி என்று பெயர் சூட்டப்பட்டது. சிறுவயது முதலே கனிமொழியும் மணிமாறனும் ஒரே வீட்டில் வளர்ந்தாலும் அண்ணன் தங்கை உறவில் வளர்க்கப்படவில்லை. மணிமாறனுக்குக் கனிமொழிமேல் எப்போதும் ஒரு கண். வீட்டில்வேறு அனைவரும் அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிக்கொள்ளப் பேகிறார்கள் என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தார்கள்.  அதனால் அவர்கள் இருவரின் மனத்திலும் இளமை முதலே காதல் கனிந்தது.

தெருவில் செல்லும் எவனாவது கனிமொழிமேல் சிறுபார்வைகூட வீசிவிட முடியாது. மணிமாறன் அப்படி யாராவது வாசலில் வந்து நின்றாலோ அல்லது குறும்புப் பார்வை பார்த்துச் சென்றாலோ அவர்களைக் கண்டபடி வைவான். அவன் அவ்வாறு திட்டுகின்ற வார்த்தைகளை வாயால் எடுத்துச்சொல்ல முடியாது. காதில் நாராசம் பாயும். ஒன்றிரண்டு வசவு கனிமொழிக்கும் விழும். அப்படிப்பட்ட நேரத்தில் அவனை யாரும் அடக்கிவிட முடியாது. அவன் கையை அப்பொழுது யாரேனும் பிடித்தால் கடித்துக் குதறிவிடுவான். இதனாலேயே அவன் இருக்கும் சுற்றுவட்டாரத்து விடலைப் பையன்கள் அவர்கள் வீட்டுவழியே செல்ல நடுங்குவார்கள்.

கனிமொழியும் எப்பொழுதும் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவள்தான். அக்கம் பக்கத்தில் அநாவசிய பேச்சு வைத்துக்கொள்ள மாட்டாள். தெருவில் செல்லும் ஆடவரை ஏறெடுத்தும் பார்க்கமாட்டாள்.

ஆனால் அவள் வீட்டின் அவுட்ஹவுஸில் குடியிருக்கும் சீனு என்கிற சீனிவாசன் மீது எப்பொழுதும் கனிமொழிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. சீனு அவுட்ஹவுஸில் குடியிருப்பதில் கனிமொழிக்குச் சிறிதும் உடன்பாடில்லை. 'நாம் என்ன ஜாதி, அவன் என்ன ஜாதி?' என்று எப்பொதும் ஜாதிப் பிரச்சினையை முன்நிறுத்திப் பொருமிக்கொண்டே இருப்பாள்.

ஆனால் சீனுவோ கனிமொழியின் வம்புக்கே வருவதில்லை. அவன் பூனை ஜாதி. இருக்கும் இடமே தெரியாது. அவ்வளவு அமைதியானவன்.

அவனுக்கு வெளியேதான் வேலை. எப்போதும் வெளியே சுற்றிவிட்டுச் சாப்பாட்டிற்குதான் வீட்டுக்கு வருவான். இருந்தும் என்ன பயன்? அவன் குரல் கேட்டுவிட்டால் போதும் . . . கனிமொழி கொல்லைப் பக்கம் சென்று சீனு எங்கே இருக்கிறான் என்று நோட்டம் விடுவாள். சாடை மாடையாக வசவுகளை எடுத்துவிடுவாள். கனிமொழியை ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும் என்று சீனுவும் அவசரஅவசரமாக வாயில் திணித்துக்கொண்டு வந்த சுவடு தெரியாமல் வெளியேறி விடுவான். அப்படியும் கனிமொழி அவனை வாழவிடவில்லை. 

இவளிடம் ஏன் தலையைக்கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு நாள் சொல்லாமல் கொல்லாமல் சீனு வீட்டைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டான். அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்றுகூட யாருக்கும் தெரியவில்லை.

கனிமொழியின் தலைப் பிரசவத்தில் பிறந்தவள்தான் 'செம்மொழி'. பிரசவத்தின்போதுதான் இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது. அதன் நினைவாகத் தலைக் குழந்தைக்குச் செம்மொழி என்று பெயரிடப்பட்டது. செம்மொழி தன் பெயருக்கேற்ப வளவளவென்று அனாவசியமாகப் பேசமாட்டாள். நாலு வார்த்தை சொன்னாலும் நறுக்குத் தெரித்ததுபோல் செம்மையாகச் சொல்வாள்.  ரொம்ப பயந்த சுபாவம் வேறு.

செம்மொழியை 'அங்கே பார்க்காதே, இங்கே பார்க்காதே, அப்படிச் செய்யாதே, இப்படிச் செய்யாதே, பொம்பளப் புள்ளையா லட்சணமாக இருக்கணும்' என்றெல்லாம் எப்போது பார்த்தாலும் அதட்டிக்கொண்டே இருப்பாள் கனிமொழி. அம்மாவைப் பார்த்தாலே பாசத்திற்குப் பதில் பயம்தான் எழுந்தது செம்மொழியின் மனத்தில்.

செம்மொழி வளரவளர புதிதான பிரச்சனை உருவெடுத்துவிட்டது. செம்மொழி தன்னைக் காட்டிலும் அழகாக வளர்கிறாளோ என்று கனிமொழிக்கு எண்ணம். செம்மொழி அம்மாவைவிட நல்ல வெளுப்புதான். நாசுக்கான பேர்வழிகூட. ஸ்லிம் சிம்ரன் போன்று ஒடிசலாக வளர்கிறாள். ஒசிந்த நடை பழகுகிறாள். கனிமொழியோ ஜோதிகா போன்று சற்று குண்டு. குள்ளம் வேறு. எல்லாம் சேர்ந்து செம்மொழிமேல் பொறாமைத் தீயைக் கனிமொழி மனத்தில் வளர்த்தன. செம்மொழி பருவமடைந்ததும் கனிமொழியின் மனத்தில் பொறாமைத் தீ விசுவரூபம் எடுத்தது.

செம்மொழி அப்பாவிடமும் பேசக்கூடாது என்று கனிமொழி உறுதியாகச் சொல்லிவிட்டாள். மணிமாறனிடம் இதைப்பற்றிப் பேச கனிமொழிக்கு பயம். அதனால் செம்மொழி தனியாக இருக்கும்போது அவளைப் படாதபாடு படுத்துகிறாள். தான்பெற்ற மகளாயிற்றே என்று சற்றும் நினைத்துப் பார்ப்பதில்லை. 

கனிமொழி அஞ்சியதுபோலவே நடந்துவிட்டது. மணிமாறன் செம்மொழியையும் மனைவியாக வரித்து விட்டான். கனிமொழி நியாயம் கேட்டால் 'நம்ம ஜாதியில் இல்லாத புது வழக்கத்தையா செய்துவிட்டேன்?' என்று கொக்கரிக்கிறான்.

மணிமாறனின் செயலால் கோபம்கொண்ட கனிமொழி நேரம் கிடைக்கும்போதெல்லாம் செம்மொழிமேல் பாய்வது வழக்கமாகிவிட்டது. நேற்றுகூட செம்மொழியின் கூர்மையான நகத்தைக் கடித்துக் குதறிவிட்டாள். இப்பொழுது செம்மொழியைத் தூக்கினால் வலிபொறுக்க முடியாமல் 'வால் வால்' என்று கத்துகிறாள். கனிமொழியோ 'உர்'ரென்று உறுமுகிறாள்.

இப்பொழுது தெருவிலிருந்து பார்வையை வீசிவிட்டுப் போகும் விடலைப் பையன்களிடமிருந்து கனிமொழியைக் காப்பதோடு செம்மொழியைக் காப்பதும் மணிமாறனின் நித்திய வேலைகளில் ஒன்றாகிப் போனது. 

வழக்கம்போல் மணிமாறன் தெருவில் செல்லும் ஒருவனைப் பார்த்து, 'இப்படி வாலாட்டற வேலை எல்லாம் எங்கிட்ட வச்சுக்காதே, வாலை ஒட்ட நறுக்கிடுவேன். லொள், லொள்னு சிக்னல் காட்ற வேலை வச்சுக்காதே ஜாக்கிரதை!' என்று எம்பி எம்பிக் குதித்து உ(கு)ரைத்துக் கொண்டிருந்தான். 



எழுத்தாளர் ஔவை நிர்மலாவின் ஆசைமுகம் மறந்து போச்சே - பெண்ணியப் பார்வை


எழுத்தாளர் ஔவை நிர்மலாவின்

ஆசைமுகம் மறந்து போச்சே 

பெண்ணியப் பார்வை


திருமதி ச. கீதா
இணைப்பேராசிரியர்,
ஆங்கிலத்துறை
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி
காரைக்கால் - 609 602.

           பெண்ணியச் சிந்தனைகள் சமகால இலக்கிய மரபுகளாகவும் திறனாய்வுக் கோட்பாடுகளாகவும் சமூக இயக்கங்களாகவும் விரிந்து பல பரிணாமங்களைக் கொண்டுள்ளன. அவை சிதறலான கருத்தாக்கங்களாக இல்லாமல் நெறிமுறைப்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பாக (academically canonized) நிறுவப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் சமூகவியல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் போன்ற எந்தக் கட்டமைப்பிற்குள்ளும் பெண்ணியம் பற்றிய கருத்துத் தொகுப்புகளைப் பதிவு செய்யவேண்டியது மிகவும் அவசியமான ஆய்வறிதல் முறைமையாகும். அதனால் எல்லா நிலைப்பாடுகளிலும் உலகளாவிய சிந்தனைத் தளங்களிலிருந்து கடைக்கோடியில் இருக்கும் உள்ளுர்க் குழுமம் வரையிலும் பரவிவரும் பெண்ணியம் பற்றிய சொல்லாடல் தவிர்க்கமுடியாத தர்க்கவிவாதமாக மாறிவருவது கண்கூடு.

          இத்தகைய சூழலில் எந்தவொரு இலக்கியப் படைப்பையோ அல்லது சமூகக் கோட்பாட்டையோ திறனாய்வு செய்யும்பொழுது பெண்ணியம் சார்ந்த ஆய்வுக் கோணங்கள் அவசியமாகின்றன.குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமெனில், இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள எழுத்தாளர் ஒளவை நிர்மலாவின் ஆசைமுகம் மறந்துபோச்சே (காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2009) என்ற சிறுகதைத் தொகுப்பு, பெண்ணியக் களமாக ஏற்புடையதாகிறது. மேலும் 'பெண் எழுத்துகள்' (Women’s Writings) என்ற நவீன ஆய்வுக்களத்தின் பகுப்புகளில் ஒன்றாக அமைக்கத்தக்கவகையில் நடையாலும் மற்றும் அதன் பொருட்பதிவாலும் பெண்ணியக் கோட்பாடுகளின் இலக்கியப் பதிவாக இந்நூல் வடிவம் பெற்றுள்ளது.

          பெண்ணியம் பற்றிய பொதுவான விவாதங்களில் 'பெண் எழுத்துகள்' என்ற காலவரிசைத் தரவுகள் பெண்ணியச் சிந்தனைகளின் துவக்கமாகும் என்பர். இவ்வகையில் வெர்ஜினியா வுல்ஃ;ப் என்ற பெண் இலக்கியவாதியின் A Room of One’s Own என்ற திறனாய்வு நூல் மிக அதிக அளவில் மேற்கோள் காட்டப்பெறுகிறது. பெண்ணியச் சிந்தனையி;ன் இலக்கிய முன்னோடியாக அமைந்துள்ள இம் மதிப்பீட்டு மாதிரியின்படி பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் பெண் பற்றிய புதுமொழிகளையும் பெண்களின் சுயபுரிதல்களுக்கான எண்ணவோட்டங்களையும் பெண் விடுதலைக்கான சமுதாயப் போராட்டங்களையும் பெண் அல்லது பெண்மை பற்றிய புதிய அடையாளங்களாக முன்வைக்கின்றன. இக் கருத்தின் அடியொற்றியே 'பெண் எழுத்துகள்' என்னும் பகுப்பின்கீழ் உலகின் பல இலக்கியங்களில் மற்றும் மொழி சார்ந்த கலாச்சாரப் படைப்புகளில் சிறுகதைகளாக, புதினங்களாக, நாடகங்களாக உருமாறும் உத்திகளை பெண்ணியச் சிந்தனைகளின் காலவரிசைப் பட்டியலாகக் காணமுடிகிறது.

          அதன்படியே தமிழ் இலக்கியத்திலும் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் பெண்ணியத் தரவுகளாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கோதைநாயகி, ராஜம்கிருஷ்ணன், லஷ்மி போன்ற பிரபல பெண் எழுத்தாளர்கள் தொடங்கி அம்பை, பாமா போன்றவர்களின் நவீனத்துவப் படைப்புகள் மூலம் தொடர்ந்துவரும் பெண் பற்றிய இலக்கியப் பதிவுகளில் ஆணாதிக்க மரபுகளைச் சார்ந்தும் உடைத்தும் பின்னர் புதுமரபுகளைத் துவக்கியும் ஒரு பன்முகப் பெண்ணியம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

   சுருங்கச் சொல்லவேண்டுமெனில் தமிழில் பெண்ணியம் என்ற நவீனத்துவச் சிந்தனை யதார்த்த இலக்கிய வடிவில் உருவாக்கப்பட்டு நடைமுறைச் சமூகத்தளங்களிலும் அன்றாட வாழ் நடப்புகளிலும் காணப்பெறும் பெண்களின் நிலையெனக் கையாளப்பெறுகிறது.

        இந்த யதார்த்த பின்புலத்தின் பெண்ணியம்தான் காலக்கணிப்பு முறையில் தொகுக்கப்பட்ட 'பெண் எழுத்துகள்' - Women’s Writings (chronological) என்ற பகுப்பில் ஆசைமுகம் மறந்துபோச்சே என்ற இந்நூலையும் இணைக்கிறது.

      இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள எல்லாச் சிறுகதைகளும் பெண்களைப் பற்றிய யதார்த்தப் பதிவுகளாக வடிவம் கொள்வது இத் தொகுப்பின் நிறுவுகையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

          பாத்திரப் படைப்புகளிலும் அதன் எண்ணவோட்டங்களிலும் மிகையும் குறைவுமில்லாத இயல்பான நடைமுறை வாழ்வியலோடு ஒட்டிய கதைச்சூழல்கள் அமைக்கப்பட்டு ஒரு யதார்த்த பிம்ப வார்ப்பு உருவாகிறது.

         இக்கதைகளில் உள்ள பெண்பாத்திரங்கள் பலரும் குறிப்பாக, ஆசை முகம் மறந்து போச்சேயின் சாந்தி, மறதியின் வேதா, பாவமன்னிப்பின் கவிதா, கானல்வரியின் ஜென்னி போன்றவர்கள் கதை மாந்தர்களின் மாதிரிகளாக இல்லாமல் அக்கம்பக்கத்துக் குடும்பங்களைச் சேர்ந்த அணிமைத் தன்மையைக் கொண்டவர்களாகப் படைக்கப்பட்டுள்ள யதார்த்தச் செறிவினை இக்கதைகளுக்குக் கொடுக்கிறது. அவர்களின் சிறுசிறு அசைவுகளும் நடையுடை பாவனைகளும்கூட நடைமுறை யதார்த்தத்தின் பிரதிபலிப்புகளாகக் காணப்படுவது இக்கதைகளுக்கே உரித்தான நடைமுறைச் சித்திரிப்புப் பரிமாணங்களைக் கொடுக்கின்றன. மேலும் இக்கதைகளில் உள்ள பெண்களின் சுய சிந்தனைகள், அனுபவங்கள் பற்றிச் சொல்லப்படும்பொழுது உள்உணர்வுச் சிதைவுகள், குறியீடுகள், படிமங்கள் போன்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு நேரிடையான இயல்பான நடையியலில் கையாளப்படுவது இக்கதைகளின் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. சாந்தி, ஜென்னி போன்ற படித்த பெண்கள் மட்டுமல்லாமல் 'பணம் என்னடா பணம் பணம'; என்ற கதையின் பாக்கியம் என்ற பெண்ணும்கூட சுயசிந்தனையின் விடுதலையுணர்வை அறிந்த பெண்ணாகக் காட்டப்படுவது பெண்ணியத்தின் தாக்கத்தை யதார்த்தக் களனாக ஆசிரியர் கொண்டுள்ளமையைத் தெளிவுறச் சுட்டுகிறது.

     இதுமாதிரியான யதார்த்தச் சித்திரிப்புகள் பொதுவாகவே 'பெண் எழுத்துகள்' மரபில்  அதிய அளவில் கையாளப்படுதல் ஓர் பெண்ணியக் கோட்பாடாகவே கருதப்பட்டுவருகிறது.

          பெண்ணியச் சிந்தனை பற்றிய வரலாற்றுப் பதிவுகளில் அதன் துவக்க காலத்தை வரையறுக்கும்பொழுது பெண்ணியமும் நடைமுறை வாழ்வியல் சித்திரிப்புமுறையும் ஒன்றோடு ஒன்று இயைந்த சமூகவியலாகவே பார்க்கப்பட்டது. இத்தகைய யதார்த்த சித்திரிப்பின் வேறு வேறு தளங்கள் உருவாக்கப்பட்டு அந்தந்த சமூக கலாச்சாரத்தின் விடை வீச்சுகளின் நெளிவுசுளிவுகளுக்கேற்ப பெண்களின் கதை வடிவங்கள் பெண்ணிய வரைவுகளாகப் பல்கிப் பெருகின.

         இதனில் பெண்ணின் விடுதலைக்கான சமூகப் போராட்டங்கள் பற்றியது என்றாலும் பெண் தன்னைப் பற்றி உணர்வதற்கான சுய தேடல்களின் இலக்கிய வெளிப்பாடாக இருந்தாலும் பெண்ணியம் என்ற புதிய சிந்தனை மரபு பெண்ணைச் சுற்றியுள்ள யதார்த்த சூழல்களில்தான் உருவானது என்றால் அது மிகையாகாது. அதன் பின்விளைவாக பெண்ணின் விடுதலை என்ற போராட்டக்களமாக பெண்ணியம் பேசப்பட்டாலும் ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் சமனில்லாத நிலைப்பாடு என்ற பெண்ணியக் கருத்தாக்கமாகக் கொள்ளப்பட்டாலும் அப்பெண்ணினுடைய சுய தேடல்கள் என்ற இலக்கிய வகையிலான பெண்ணியம் என்றாலும் யதார்த்தப் பின்னணிகளைவிட்டு அப்பெண்ணியக் கோட்பாடுகள் விரைந்து பயணிக்க முடிந்ததில்லை.

   இதுமாதிரியான பரஸ்பர நிலைமாற்றம் பெற்ற பெண்ணியச் சிந்தனைகளும் யதார்த்தச் சித்திரிப்புகளும் இக்கதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் ஊடாடிப் பெண்ணிய அணுகுமுறையைத் தவிர்க்கமுடியாத தர்க்கப்படிவங்களாக மாற்றித் தருகின்றன.

      இத்தகைய நடைமுறையியல் சார்ந்த யதார்த்தப் பெண்ணியம் இத் தொகுப்பின் கதைகளில் விஞ்சியுள்ளது. குறிப்பாக, முதல் எட்டுச் சிறுகதைகளும் பெண் பற்றிய புதினப் பார்வையில் அமைந்துள்ளன. கதைகளின் வடிவமைப்பிலும் உள்ளுறைக் கட்டமைப்பிலும் உள்ள பெண் பற்றிய நவீனக் கருத்தாக்கம் பெண்ணிய மொழியை உருவாக்கிப் பெண் ஆளுமையைப் பற்றிய செய்தியை நுண்ணயமாக அமைத்துள்ளது. இதற்கேற்ற வகையில் ஒவ்வொரு கதையின் நடையிலும் மிகைச் சொல்லாடல் இல்லாத ஆனால் குறிப்பால் சுட்டுவதாக அமைந்த உரையாடல் உத்தி பெண்ணின் பேசப்படாத மொழியாக பெண்ணியத்தை அடையாளம் காட்டுகிறது.

     சிறுகதையின் அடிப்படை இலக்கணத்திற்கேற்றவாறு ஒவ்வொரு கதையும் சொல்லியதைவிட சொல்லாமல்விட்ட நயமே பொருளும் ஒரு விரிவான வெளியைத் தோற்றுவிக்கிறது. இந்தக் கதைவெளியில் கதைகளில் உலவும் பெண்பாத்திரங்கள் தத்தம் அநுபவங்களைப் பெண்பற்றிய புதிதான புரிதல்களுடன் தோற்றுவிக்கும் பெண் வெளியாக மாற்றிக் கொள்வது இக்கதைகளின் சிறப்பம்சம். ஒரு பெண் யதார்த்தமான வாழ்நிகழ்வுகளில் தன்னைப் பற்றி உணர்ந்து கொள்வதற்கும் உணர்த்துவதற்கும் பிரத்யேகமாக இந்த வெளியை உருவாக்கிக் கொள்வதாக அமைகிறது. இச் சிறுகதைகளின் கதைக்களன் பெண் தனக்கென்று உருவாக்கிக் கொள்ளும் இந்த வெளி பற்றித்தான் பெண்ணியத் தரவுகள் பலதரப்பிலிருந்தம் பல தளங்களிலிருந்தும் முன்வைக்கின்றன. அந்த முறையில் இச் சிறுகதைகளைப் படிக்கும்போது பெண்ணியப் பார்வை என்ற திறனாய்வுக்கோட்பாடு மூலம் இக்கதைகளில் பெண்ணியச் சிந்தனை வலுவான காரணியாகவும் கருவியாகவும் செயல்பட்டிருப்பதைத் தெளிவுற தெரிந்துகொள்ள முடிகிறது.

          அதே சமயம் பெண்ணியக் கருத்தாக்கத்தை மையப்புள்ளியாக வைத்து இந்தச் சிறுகதைகள் பின்னப்பட்டிருந்தாலும் அவை எந்த இடத்திலும் உணர்வு மிகையாகவோ வெளிப்படையான சொல்லாடலாகவோ பயன்படுத்தப் பெறவில்லை.

           பெண்ணியம் பற்றிப் பேசுபவர்களின் அல்லது எழுதுபவர்களின் உணர்வு ரீதியான தன்மை இக்கதைகளில் காணமுடியாத பெண் பற்றிய புதிய பார்வையை இயல்பாக முன்மொழிகிறது எனலாம். இச் சிறுகதைகளில் பெண்ணுக்கெதிரான எதிர்மறைச்சூழல்களில் தங்களை இழந்துவிடாமல் இயல்பான எதிர்ப்போடும் மதர்ப்போடும் முடிவுகளை எடுக்கும் பெண்களாகக் காட்டப்படும் இப்பெண் கதாபாத்திரங்கள் இந்நூலுக்குப் புதிய பெண்ணிய உருவளவைக் கொடுக்கின்றனர்.

      பெண்ணியம் பேசப்படும் பொதுவான விவாதங்களில் பெண்ணியம் இலக்கியச் சொற்றொடராக, சமூகச் சொல்லாடலாக, சட்டத்தின் பிரிவுகளாக, உலக நாடுகளின் தீர்மானங்களாக ஒருபுறம் பேசப்பட்டாலும் மறுபுறம் பெண்ணைப் பற்றிப் பேசுவதெல்லாம் பெண்ணியம்தான் என்ற பாமரத்தனமான தர்க்கமும் நிலவுகிறது. இந்த இரண்டு உச்ச அளவிற்கும் செல்லவிரும்பாத ஒரு பெண்ணியப் பார்வையை இந்நூலில் உள்ள கதைகள் நமக்குச் சுட்டுகி;ன்றன. மேடையில் ஆரவாரமாகக் காரசாரமாக விவாதிக்கப்டும் பெண்கள் பற்றிய செய்திகளாக இந்தக் கதைகள் பெண்ணியம் பேசவில்லை. பெண்ணைத் தெய்வமாக அல்லது பேயாகப் பாhர்த்து வேண்டப்படாதவளாக, தீண்டப்படாதவளாகக் காட்டும் பெண்ணின் பெருமைகளைப் பற்றிப் பேசி நம்மை இந்தக் கதைகள் ஏமாற்றவில்லை. பெண்ணின் மனக்குமுறல், உளைச்சல் என்ற மனநிலைச் சிக்கல்களும் இக்கதைகளில் தவிர்க்கப்பட்டுள்ளன.

           மாறாக, ஒரு பெண்ணை தனித்தன்மையான அறிவார்த்தமாகச் சிந்திக்கத் தெரிந்த - தன்னைப் பற்றித் தன் பெண்தன்மையின் தனித்துவத்தைப் பற்றிய யதார்த்த நுணுக்கங்களுடன் புரிந்துகொண்ட பெண்களைச் சித்திரித்துக் காட்டுவது இக்கதைத் தொகுப்பின் சிறப்பம்சம்.

    அன்றாட வாழ்வில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? எப்படித் தேடுகிறார்கள்;? முகமற்ற பிம்பங்கள் சுழலும் வாழ்க்கைச் சூழலில் தன்னுடைய முகத்தைத் தேடும் அடையாளத் தேடலில் எப்படிக் களைத்துப் போகிறார்கள்? என்பதை ஒவ்வொரு கதையும் யதார்த்த வடிவில் காட்டுகின்றன.

   குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் முதற்கதையான ஆசைமுகம் மறந்துபோச்சே, எட்டாவது கதையான கானல்வரி என்ற இவ்விரண்டு கதைகளிலும் உள்ள பெண் பாத்திரங்கள் தம் பெண் வெளிகளை அடையாளங்கொண்டு தக்கவைத்துக் கொள்கிறார்கள். திருமண பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்போதும் ஆனாதிக்கமிக்க கணவனால் திருமண முறிவு ஏற்படும்போதும் எந்தக் கழிவிரக்கமோ அல்லது ஏமாற்றவுணர்வோ இன்றி அறிவின் முதிர்ச்சியால் சூழலைக் கையாளும் திறன் படைத்தவர்களாகச் சாந்தியும் ஜென்னியும் காட்டப்படுவது நவீனப் பெண்ணியச் சிந்தனையின் முழு வெளிப்பாடு என்று கொள்ளலாம்.

    பெண் என்பவள் தன்னை இல்லத்தரசியாக, தாயாக, தாதியாக மாற்றிக்கொண்டு தியாகச் சுடராகும்போதுதான் பெண்மைக்கு முழுப்பலனும் கிடைக்கும் என்ற போலிப் பாசாங்குகளை இனங்கண்டு உதறிவிடக்கூடிய மனமாற்றப் பெண்ணியச் சிந்தனையாக இக்கதைகளில் வெளிப்படக் காணலாம்.

          இத்தொகுப்பில் வேறு சில கதைகளில் நடுத்தர வர்க்கத்தின் கலாச்சார வேடங்களில் சிக்கி வாழ்வின் சுமைகளுடன் குடும்ப உறவுகளின் கெடுபிடியில் மாட்டித் தவிக்கும் பெண்கள் தங்களுடைய படிப்பையோ வேலையையோ தங்களுடைய தனித்திறமைகளாகக் காட்ட முடியாமல் பேதைமையின் நிழலில் மறைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் தள்ளப்பட்டாலும் புதிய தேடல்களில் தங்களின் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளும் இயல்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. முற்றும் படித்த பெண்களாக இருந்த போதிலும் மென் உணர்வுகள்கொண்டு குடும்பம் குடும்பம் சார்ந்த உறவுகள், அவற்றால் ஏற்படும் பிணக்குகள் பிணைப்புகள் போன்ற கட்டாயங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலையையும் மறதி போன்ற கதைகள் பெண்ணியத்திற்கு எதிரான சவாலாக முன்வைக்கின்றன. ஆணின் ஆதிக்கத்தி;ற்கும் மூட நம்பிக்கைகளுக்கும் இடம்தரும் வகையில் பெண்களே பெண்களை அதிகாரம் செய்யும் மடமையையும் பெண்ணுக்கெதிரான சவாலாக 'ஒருவன் ஒருவன் முதலாளி' என்ற கதை எள்ளல் தொனியில் காட்டுகிறது.

      இது மாதிரியான பல தளங்களில் கோணங்களில் பெண்ணியக் கோட்பாட்டின்படி ஆய்வு செய்யத்தக்க வகையில் இருந்தாலும் பெண்ணியத் தீர்ப்பாக இல்லாமல் பெண்ணியத்தின் இலக்கியப் பதிப்பாக நயமிக்கதொரு கதைத் தொகுப்பாக இந்நூல் அமையப் பெற்றிருப்பது பாராட்டுதலுக்குரிய முயற்சியாகும்.

            இறுதியாக, அறுதியிட்டுச் சொல்வதென்றால் இச் சிறுகதைத் தொகுப்பு தன் வடிவத்தாலும் உட்பொருளினாலும் பெண்ணியச் சிந்தனையின் இலக்கியத் தரவுகளாக உருமாற்றம் கொள்ளும் வகையில், 'பெண் எழுத்துகள்' என்ற பெண்ணியப் படைப்புகளின் மரபோடு இணக்கம் பெறுகின்றது. இதன்பொருட்டு பெண்ணிய இலக்கியத்தில் பெரும்பங்கு வகிக்கின்ற பிரபல பெண் எழுத்தாளர்களின் படைப்புகளிலும் உள்ள பெண்ணியம் பற்றிய இலக்கியப் படிவங்களுக்கு நிகராக ஒளவை நிர்மலாவின் ஆசை முகம் மறந்து போச்சே என்ற இக்கதைத் தொகுப்பும் தன்னுடைய பிரத்யேக நடையில் பெண்ணியப் பார்வைக்கேற்ற இலக்கிய வரைவுகளை முன் வைக்கிறது என்று சொன்னால் அது மிகையன்று.
***

Sunday, 15 February 2015

விற்கப்படும் விடியல்கள். . .

விற்கப்படும் விடியல்கள். . . 




சுவர்ண புஷ்பங்களால்
ஆடவரை
அர்ச்சிக்க இயலாமல்
திரும்பிவராத
வரன்களுக்கு ஏங்கி
வற்றிய கன்னங்களுக்கு
வாழ்க்கைப்பட்டதால்
முப்பது வயதில்
முதிர்கன்னிப் பட்டத்தோடு
காண்பவர்க்கெல்லாம்
காரிகைகள் தங்கைகளாக!

கவிஞர்களையெல்லாம்
கண்பார்வையாலேயே
உருவாக்கி விட்டாலும்
நிரந்தரக் கண்ணீரே
கன்னியர்க்கு
குருதட்சணையாக
கவிதைகளைப் புஷ்பித்துவிட்டு
இன்பம்கொள்ளும்
ஆண்கள்
உயிர்க் கவிதைகளுக்கு
ஏன் சந்தை கூட்டுகிறார்கள்?

மனிதத் தின்னிகள் : ஓர் அங்கதப் படைப்பு


மனிதத் தின்னிகள் : ஓர் அங்கதப் படைப்பு






முனைவர் ஒளவை இரா. நிர்மலா 
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), எம்.ஏ.(இந்தி),  எம்.ஏ.(மொழியியல்), 
எம்.ஏ.(மொழிபெயர்ப்பு) எம்.ஃபில்., பிஎச்.டி.,  நிறைசான்றிதழ் : தெலுங்கு, 
சான்றிதழ் : நாட்டுப்புறவியல், பிரெஞ்சு, மராட்டி, கணினியியல்.
தமிழ் இணைப்பேராசிரியர் 
அவ்வையார் அரசினர் மகளிர் கல்லூரி 
       காரைக்கால் 609 602.

       கலை, இலக்கிய வெளிப்பாட்டு உத்திகளில் ஒன்றாக அங்கதம்  கருதப்படுகிறது. ஓவியம், சிற்பம், பேச்சு, நடனம், வாய்மொழி இலக்கியம், எழுத்து இலக்கியம் எனப் பல தளங்களில் இதன் பயன்பாடு உலகளாவிய நிலையில் நீண்ட நெடும்பயணத்தைக் கொண்டது. பண்டைக் காலந்தொட்டே சிறந்த இலக்கியப் படைப்பாளர்களால் இலாவகமாகக் கையாளப்பட்டு வருகிறது. அதாவது சிறந்த படைப்பாளர்கள் இதனைத் திறம்படக் கையாள்பவராக இருப்பார்கள். அங்கதத்தைத் திறனாய்வாளர்கள் பல்வேறு விதமாகப் பகுத்துப் பார்க்கின்றனர். எது நேரடியான தர்க்கத்திற்கு ஆட்படுத்த முடியாது என்று கருதப்படுகிறதோ, எவை பேசுவதற்குத் தடையானவை என்று சமுதாயம் கருதுகிறதோ அவை அங்கதமாக அணுகுவதற்கு வழிதேடிக்கொள்கின்றன என்று கருதுகின்றனர் மேனாட்டுத் திறனாய்வாளர். பெரும்பாலும் அரசியல், சமயம், பால் ஆகியவற்றின் அடிப்படையில் மேனாட்டுப் படைப்பாளரின் அங்கதம் அமைவதைத் திறனாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். தமிழிலக்கியத் திறனாய்வாளர் தனிமனித அங்கதம், சமுதாய அங்கதம், அரசியல் அங்கதம் என மூன்றாக வகைப்படுத்துகின்றனர். தனிமனிதன் சமுதாயத்தின் அங்கமாக ஆகிப்போவதால் அவனுடைய செயலின் பொதுமை சமுதாயத்தினுடையதாக உருக்கொள்கிறது எனலாம். அங்கதம் சமுதாயம், அரசியல், சமயம் முதலியவற்றோடு தொடர்புடைய கருத்தாக்கங்களின் சீர்கேடுகளை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்துவதுடன் அவற்றைச் சீரமைப்பதற்கான நோக்கத்தையும் தேவையையும் வழிவகையையும் வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம். எனவே இலக்கியத்தில் அங்கதம் என்பது சமுதாயப் பயன் நோக்கியதாக அமைகிறது. அவ்வகையில் கவிஞர் மலையருவியின் மனிதத் தின்னிகள் என்னும் கவிதைப் படைப்பில் காணலாகும் அங்கத வெளிப்பாட்டை அறிமுகப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

நூலாசிரியர் அறிமுகம்

கவிஞர் மலையருவி என்னும் புனைபெயரில் மனிதத் தின்னிகள் என்னும் கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ள முனைவர் நா. இளங்கோ புதுவைக் கல்லூரிகளில் 35 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் தமிழ்ப் பேராசிரியர். இவர் காலடியில் தலை, மனிதத்தின்னிகள் என்னும் இரண்டு கவிதை நூல்களையும் பத்து திறனாய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் சிறந்த நகைச்சுவைப் பேச்சாளராக இனங்காணப்படுபவர். முகநூல், இணையம் முதலானவற்றில் சமூகப் பிரக்ஞையுள்ள செய்திகளைத் தொடர்ந்து பரிமாறி வருபவர். இவருடைய சொற்பொழிவுகளிலும் எழுத்திலும் அங்கதச் சுவை நீக்கமற நிறைந்திருத்திருத்தல் குறிப்பிடத்தக்கதொன்றாகும். 

சமுதாய அங்கதம்

  சமுதாயத்தில் காணலாகும் நிகழ்வுகளிலும் சூழலிலும் எத்தகைய களையப்படவேண்டிய சீர்கேடுகள் உள்ளன என்பதைப் பல கவிதைகளில் முன்வைக்கின்றார் கவிஞர் மலையருவி.

  நல்ல காலம் பொறக்குது என்று கூவிக்கொண்டுவரும் குடுகுடுப்பைக்காரனின் சொற்களில் நம்பிக்கை வைத்து அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பவர்கள் அநேகர். பாரதியாரும் குடுகுடுப்பைக்காரன் பாட்டு ஒன்றைப் படைத்து இந்தியாவின் எதிர்காலத்தை எடுத்துரைப்பார். மலையருவியின் கவிதையில் குடுகுடுப்பைக்காரனையே கேலிக்குரிய வனாக்கும் அங்கதம் நிறைந்திருக்கிறது.
           
            புண்ணியவான்! சாமி!
            புஷ் மனசு வச்சிட்டாரு!
            அணுசக்தி ஒப்பந்தம்
            அமெரிக்கா ஒப்பந்தம்
            நல்லா நடந்ததுன்னா
            நாடே செழிச்சிப்புடும்
            வல்லரசா இந்தியாவும்
            வளைச்சிப் போடும் ஆசியாவ  (அணுசக்தி ஒப்பந்தம் 23)

என்று குடுகுடுப்பைக்காரன் வழியாக மதக்கலவரம், அணுசக்தி ஒப்பந்தம் முதலான பெரிய விஷயங்களைப் பேசவைக்கிறார் கவிஞர். உலகத்திற்கே நல்லது சொல்லும் குடுகுடுப்பைக்காரன் இறுதியில்,

           வயித்துக்கு வழியில்ல சாமி
           காலணாவோ எட்டணாவோ
           போட்டுட்டுப் போனா
           புண்ணியமாப் போவும் (24)

என்று கூறுதல் அங்கதச் சுவையின் உச்சமாகும்.

       செய்தித்தாள்களில் நாம் படிக்க விரும்பும் செய்திதான் என்ன? என்று அலசிப்பார்க்கிறார் கவிஞர். செய்தித்தாள்களைப் புரட்டினால் சாவு, கொலை, விபத்து, யுத்தம் முதலான செய்திகள் நிரம்பி வழிகின்றன. ஒருவேளை இத்தகைய செய்திகள் எதுவுமே செய்தித்தாளில் இடம்பெறவில்லை யென்றால் மனிதனின் மனநிலை எவ்வாறிருக்கும் என எண்ணிப் பார்க்கிறார் கவிஞர்:

          ஏன் இப்படி
          எங்கே? சாவும் பிணமும்
          எங்கே? கொலையும் விபத்தும்
          எங்கே? யுத்தமும் வெறியும்
          எங்கே? இரத்தமும் சதையும்
          என்ன எழவுச் செய்தித்தாள்
          இவைகளில்லாமல் (மனிதத் தின்னிகள் 33).

என்றாவது ஒருநாள் அப்படி நடந்துவிட்டால் மக்கள் செய்தித்தாள் படிப்பதையே வெறுத்துவிடக்கூடும். கொடுமையான நிகழ்வுகள் குறித்த செய்திகள் வெளியான பழைய இதழ்களையாவது தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒரு முறை ஆசைதீரப் படித்து மகிழ்ச்சியடைவார்கள் என்று புதுமையாகச் சிந்திக்கிறார் கவிஞர்.

           பழைய செய்தித்தாள்கள்
           பழைய குப்பைகள்
           புரட்டப் புரட்ட. . . 
           பிணவாடை மூக்கைத் துளைக்க
           பித்தம் தெளிய
           இருப்புக்குச் சேதமில்லாமல்
           நாள் தொடங்கியது (35)

என்று சமுதாயத்தினரின் அடிமன விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். இதனால் தன்னைத் தவிர்த்த சமுதாயம் துன்புற்றுஇ சீர்கெட்டுக் கிடத்தலையே மனிதன் விரும்புகிறான் என்னும் கொடுமையான உண்மையையும் உளவியல் நோக்கில் அங்கதத்தோடு வெளிப்படுத்துகிறார்.

            புரிகின்ற தமிழில் குழந்தைக்குப் பெயர் இடாமல் தமிழ் இலக்கணப்படி சொற்களின் முதல் ஒலியாக வராத ரி, ரீ, லு, லூ என்றெல்லாம் வருகின்ற எழுத்துக்களில் பெயரிடுதல்இ பெயர்களில் ஜ, ஸ்ரீ;. ஷ முதலான வடமொழி ஒலிகள் வந்தால்தான் 'மாடர்னா' இருக்குமென்று கருதுகின்ற தவறான கொள்கை, எழுத்துக்களைக் கூட்டினால் கூட்டுத்தொகை இத்தனை வந்தால் வாழ்வு வளமாக இருக்கும் என்று நம்புதல் முதலிய சமுதாயத்தில் பரவிவருகின்ற அயற் பண்பாட்டு மோகத்தைக் கோபத்தோடு நையாண்டி செய்கிறார் கவிஞர்.

           குழந்தைக்குப் பெயர்?
           சூட்டி மகிழ
           தாய், தந்தை
           தாத்தா, பாட்டி
           உறவு, நட்பு 
           ஆயிரமிருந்தும்
           ஓடு, ஜோசியக்கானிடம் (அடச்சீ! இதுக்கா பெத்தீங்க? 44)

என்று நடைமுறையைச் சுட்டும் இக்கவிதை, 'அடச்சீ! இதுக்கா பெத்தீங்க?' என்று முடிகிறது. இக் குரல் ஆசிரியருடையதா? அல்லது பிறந்த குழந்தையுடையதா? என்பது வாசகர் யூகத்திற்கே. சமுதாயத்தில் வேர்விட்டுவளரும் மூடநம்பிக்கைகளைச் சாடுதலும் படைப்பாளர்களின் முக்கியப் பணியாகவே அமைகிறது. இல்லையெனில் ஒட்டுமொத்த சமுதாயமும் திசைதெரியாமல் குலைந்துபோகும் நாள் வரக்கூடும்.

     தொழில்நுட்பச் சாதனங்கள் நம் வாழ்க்கையில் பெருமாற்றத்தை ஏற்படுத்தி நம் வளர்ச்சியைப் பலமடங்கு மேம்படுத்தியுள்ளமையை யாராலும் மறுக்க முடியாது. எனினும் இவ் வளர்ச்சியை விளைவிக்கும் சாதனங்களின் மாயக் கவர்ச்சியில் அவற்றைப் பயன்படுத்தும் அனைவரும் சிறிதுசிறிதாக அடிமைகளாகவே மாறி அவற்றிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் வழிதெரியாமல் கட்டுண்டுகிடக்கும் நிலையினை அங்கதச் சுவையுடன் எடுத்துரைக்கிறார் கவிஞர். 

'உள்ளங்கையும் கட்டை விரலும்' என்னும் கவிதை அலைபேசிகளில் தம்மைத் தொலைத்துவிடும் மாந்தரை முன்னிறுத்துகிறது.

           பிரபஞ்சமே
           உதடுகளில் தொடங்கி
           செவிகளில் முடிந்து போனது
           கண்கள் மட்டும் களவு போயின (48)

என்று ஒருவரோடு ஒருவர் முகம்கொடுத்துப் பேச முனையாத மனிதநேய அழிவைக்காட்டி, 

           எதிரே
           உறவும் நட்பும்
           முகங்களைக் காணோம்
           எண்கள்... எண்கள்...
           கட்டைவிரல் 
           உள்ளங்கையில் தடவத் தொடங்கியது (48)

என எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது.

தொலைக்காட்சிப் பெட்டியை 'வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்' என்று குறிக்கிறார் கவிஞர். விருந்தினர்கள், நண்பர்களிடையே அளவளாவுதல் மறைந்தது. நடுவீட்டில் குழந்தைகள் விளையாட அனுமதியில்லை என்று தொலைக்காட்சியால் வரும் சிக்கல்களைக் கவித்துவத்துடன் அலசுகிறது இக் கவிதை.

           யார்
           அந்த விதையைப் போட்டார்கள்
           என்றே தெரியவில்லை?
           போயும் போயும்
           வீட்டு வரவேற்பறையிலா
           அதைப்போடுவது. . . (51)

என்ற கேள்வியை எழுப்பும்போது உண்மையிலேயே வரவேற்பறையில் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாமல் வியாபித்து நிற்கும் ஓர் அடர்ந்த மரம் நம் கண்முன்னே விரிகிறது.

          வீட்டுக்குள் வளர்ந்த
          ஆலமரத்தின் 
          விழுதுகளுக்கு இடையே
          வேர் முடிச்சுகளில் சிக்கி
          கிளைகளின் ஊடே
          இறுகிய முகங்களோடு
          விழிகள் நிலைகுத்தி
          உறைந்து போகிறோம் (51)

என்னும் பகுதி சிந்திக்கப்படவேண்டிய ஒன்று.

         'விருந்தோம்பலும் பந்தியும்' என்னும் கவிதையில் அதன் அமைப்பிலேயே அங்கதம் துளிர்விடத் தொடங்கிவிடுகிறது. தொல்காப்பிய நூற்பாவின் அமைப்பில்,

         பந்தி என்பது பகரும் காலை
         முதல், இடை, கடை என மூன்றாகும்மே (55)

என்னும் தொடக்கம் அங்கத நடைக்கு அழைப்பு விடுக்கிறது. விருந்துப் பரிமாறப்படுவதைப் படம்பிடிக்கும் இக்கவிதையின் ஒவ்வொரு வரியும் அங்கதச் சுவையில் பரிணமிக்கிறது.

         முன்னவர் உண்டு முடித்து
         இலைமடித்து
         எழுவதற்குள்ளாக
         அந்த இருக்கையில்
         நுட்பமாய் உடலை
         நுழைத்து அமரணும்
         இல்லையென்றால்
         கண்மூடிக் கண்திறப்பதற்குள்
         பந்திநிரம்பி
         நம்மைப்
         பார்த்துச் சிரிக்கும் (56)

என்று சொல்லும்போது பந்தியில் இடம்கிடைக்காமல் பரிதவிப்போர் அசடுவழிய நிற்பதும்இ இடம் கிடைத்தவர்கள் தப்பித்தோம் என்று நமட்டுச் சிரிப்பு உதிர்ப்பதும் சொல்லாமல் புரிகிறது.

         இடம் பிடித்தபின்
         எச்சில் இலை
         முன்னே இருந்தாலும்
         காணாதது போல்
         கடமையில்
         கண்ணாயிருக்கணும் (57)

என்று விருந்துண்பவர்கள் செய்யவேண்டிய அடுத்தகட்ட கடமையை எடுத்துரைக்கிறார் கவிஞர்.

         இலையெடுத்து
         மேசை துடைத்து
         வகையாய் இலைபோட்டு
         வீசியும் எறிந்தும்
         கொட்டியும் ஊற்றியும்
         சிந்தியும் சிதறியும்
         விருந்து பரிமாறும்
         விந்தைமிகு பக்குவத்தில்
         தமிழனின் விருந்தோம்பல்
         தலைக்குப்புற
         வீழ்ந்து கிடப்பதைப் பற்றி
         நமக்கென்ன கவலை (57)

என்று கவிதை முடிவில் தெறிக்கும் அங்கதத்தொனி விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்கால நிலையென்ன என்பதை யோசிக்க வைக்கிறது.

    'சாகும் வரைக்கும் வேண்டும் வேலை!', 'எப்படி இருந்த நாம இப்படி ஆயிட்டோம்', 'சுற்றுச் சூழல் உன் சுற்றம்', 'கணினிப் புரட்சி', 'அநியாயத்துக்குக் கொள்ளை அடிக்கறாங்கப்பா!', 'நானும் அழுக்கு நீயும் அழுக்கு!', 'சாதி அரசியல்', 'சுயதொழில் நாட்டை உயர்த்தும்', 'மகாத்மா நீ இன்னும் சாகவில்லை!' முதலான கவிதைகள் சமுதாயச் சீர்கேடுகளை அங்கதத்தோடு எடுத்துரைத்து வாசகர்களைச் சிந்திக்கவைப்பதில் வெற்றிபெறுகின்றன எனலாம்.

அரசியல் அங்கதம்

          'அரசியல் நாடகம் பார்க்கலாம் வாங்க!' என்னும் கவிதைத் தலைப்பே அதன் ஊடாக இழையும் அரசியல் அங்கதத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

            அரிதாரம் பூசாத
            நடிகர்கள் எல்லாம்
            பாத்திரம் அறிந்து
            மிகையுமில்லாமல்
            குறையுமில்லாமல்
            கனகச்சிதமாய்
            வெளுத்துக் கட்டுகிறார்கள் (25)

என்று குறிப்பிடும் கவிஞர் அரசியல்வாதிகளைச் சிறந்த நடிகர்களாகக் காட்டுகிறார். அவர்தம் நடிப்பு சிறப்பாக அமைவதால்தான் தொண்டர்களால் அவர்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லையோ?

           முள்கம்பி வேலிகளுக்குள்
           வதை முகாம்களில்
           சிக்கி
           ஓர் உலகம்
           விழிபிதுங்கி
           சேறும் இரத்தமுமாய்
           சின்னா பின்னப்பட்டுக் கிடக்கையில்
            நாடகம் நடக்குது நலமாக (26)

என்று சமுதாய அவலத்தை முன்னிறுத்தும் கவிஞர் இவற்றைக் களையவேண்டியர்கள் அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் தம் நடிப்பில் கவனமாக இருக்க,

           வேடிக்கை பார்க்கும்
           வெட்கம் கெட்டதுகளோ
           எப்போதும் போலவே
           விநோதமாய் ரசிக்குது (26)

என்று அதை உணராத மக்களையும் தொண்டர்களையும் ஒருசேரச் சாடுகிறார் கடுமையாக.

             மின்வெட்டு குறித்த மலையருவியின் கவிதை அரசு நிர்வாகத்தினை அங்கதச் சுவையோடு கேலிசெய்கிறது. மின்வெட்டினால் சிறுதொழில்கள் பாதிப்படைவதை,

            சிறுதொழில்கள்
            மின்சாரமின்றி நலிவடைகின்றதா?
            உலக முதலாளிகளும்
            பன்னாட்டு நிறுவனங்களும்
            இருக்கும்போது
            உள்ளூர்த் தொழில்கள் எதற்கு? (சிரிக்கப் பழகுங்கள் 27)

என்று கேள்வியில் அடக்குவதன் மூலம் மின்வெட்டு இருவகையில் சிக்கல் ஏற்படுத்துவதைப் புரியவைக்கிறது. உலக மயமாக்கல் முலம் அந்நிய முதலாளிகளை அரசியல் தலைவர்கள் சுயலாபத்திற்காக நம்நாட்டிற்குள் வியாபிக்க விட்டுவிட்டு அவர்களுக்குத் துணைபுரியும் வண்ணம் உள்நாட்டுத் தொழில்களை மின்வெட்டு என்னும் பெயரால் நசுக்கி அவர்களை இனி எப்போதும் தலை எடுக்கவியலாமல் செய்யும் தந்திரத்தை அங்கதச் சுவையோடு எடுத்துரைக்கிறார் கவிஞர். 

           பகல் இரவு 
           இரண்டு நேரங்களில் மட்டும்
           மின்சாரம் தடைபடலாம்
           வந்து வந்தும் போகலாம்
           வராமலும் போகலாம் (27)

என்னும் தொடர்களில் வெளிப்படும் வார்த்தை ஜாலம் அங்கதத்தை வெகுவாகவே வெளிப்படுத்துகின்றது. 'தேசிய முகமூடி', 'அரசு ஊழியர்கள்', 'ஆட்சி மாற்றம்' முதலான கவிதைகள் அரசியல்சார்ந்த செய்திகளை அங்கதச் சுவையோடு வெளிப்படுத்துகின்றன.

சமய அங்கதம்

           ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையா!
           சூலி திரிசூலி சொல்லறதக் கேளுமம்மா! (30)

என்று இறைவனைப் போற்றித் தொடங்குகின்ற 'மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்' என்னும் தலைப்பில் அமைந்த கவிதை, மதத்தின் பெயரால் அயோத்தி, குஜராத், பம்பாய், கோவை எனப் பல இடங்களில் நடந்த பல்வேறு பிரச்சினைகளைக் கோடிட்டுக்காட்டி, 

          இரத்தவெறி வேண்டாம் - அம்மா
          யுத்தவெறி வேண்டாம்
          குண்டுகள் வேண்டாம் - அம்மா
          சூலங்களும் வேண்டாம்
          மதம் வேண்டாம் தாயே - எங்களை
          மனுஷங்களா வாழவிடு
          ஆயுதங்கள் வேண்டாம் தாயே - எங்களை 
          அன்போடு வாழவிடு (32)

என்று மதங்களில்லா உலகினை வரமாகக் கேட்கிறது அங்கத முரணோடு.

         'சாமியேய்ய் மரணம் ஐயப்பா!', 'பிள்ளையார் அரசியல்', 'விமர்சனம்', எங்கே கடவுள்', 'பேரண்டமும் நானும்', 'யார் யாருக்குக் கவலை?' முதலான கவிதைகள் கடவுள் சார்ந்த அறியாமையைக் களைய அங்கதத்தைத் துணைக்கழைத்துக் கொள்கின்றன.

          இவ்வாறு மனிதத் தின்னிகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கவிதைகளும் (34 கவிதைகள்) அங்கதச் சுவையை முரண் அழகுபடக் கையாண்டுள்ளன. மேலும்இ சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டுவதுடன் சமுதாயக் கண்ணோட்டத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது அங்கதத்தின் பயனாகும் என்று திறனாய்வாளர்கள் சுட்டும் பணியை மலையருவியின் கவிதைகள் செய்யவல்லன என்பதனை, 

மலையருவி நம்பிக்கை வறட்சி கொண்டவரில்லை; நம்பிக்கை உணர்வை எங்கும் எவருக்கும் பரப்புவதில் ஊக்கம் உடையவராக இருக்கிறார் (வல்லிக்கண்ணன், மலையருவி கவிதைகள், சென்னை : தமிழ்ப் புத்தகாலயம், 1985, 18)

என்று கவிஞர் வல்லிக்கண்ணன் குறிப்பிடும் விமர்சனமும் அரண்சேர்க்கிறது.




Friday, 13 February 2015

காதலி...

காதலி


காதலியின் கடைக்கண் பார்வை...

                 மலைகளைத் தகர்க்கச் செய்யும்
                 கடலையும் தாவச் செய்யும்!

                  சுனாமியிலும் 'ஸ்விம்மிங்' போட்டு
                  சுகமாகப் பாடச் செய்யும்!

                  கற்பனைச் சிறகுகள்
                  அவளால் முளைக்கும்!

                 கண்ணில் வெளிச்சம்
                 இருட்டிலும் தெரியும்!

                 கலவரம் வெடிக்கும்
                 பயங்கரப் பகுதியில்
                 பதைப்பின்றி நடக்கும்
                 துணிவைக் கொடுக்கும்!

                 தீய பழக்கம்
                 திரைக்குள் ஒளியும்!

                 திறமைகள் சிலிர்த்து
                 வெளியே கிளம்பும்!

Monday, 1 December 2014

பெண்ணென்று பிறந்துவிட்டால். . .


கவிதாயினி ஔவை நிர்மலா

செல்பேசி அலாரந்தான்
அடித்ததுவோ? அடிக்கலையோ?
தூக்கத்தில் ஆழ்ந்ததனால்
காதினிலே கேட்கலையோ?
என்றெல்லாம் தூக்கத்தில்
உளறுகின்ற உள்மனசில்
கலங்கலான கனவுகளில்
விட்டுவிட்டு ஒலிகேட்கும்!

அலாரமது அடிப்பதற்கு
அரைமணிதான் இருக்கையிலே
அச்சத்தால் எழுந்ததனால்
அரைத்தூக்கக் கலக்கத்தில்
பல்துலக்கிப் பால்காய்ச்சி
முன்னிரவே நறுக்கிவைத்த
கறிகாயைச் சமைத்துவைத்து
குழந்தைகளை எழுப்பிவிட்டு
குளியலெல்லாம் முடிக்கவைத்து
கட்டளைகள் பிறப்பித்து
அவர்செய்யும் செயல்களிலே
அயராமல் கண்வைத்து
சிற்றுண்டி ஊட்டிவிட்டு
மதியசோறும் கட்டிவிட்டு
பாடநூல சரிபார்த்து
பள்ளிவேனில் ஏற்றிவிட்டு
வீட்டுக்குள் வந்துபார்த்தால்
இடிச்சபுளி போலிருப்பார்
இல்வாழ்க்கைத் துணைவருந்தான்!

கடிகார முள்விரட்டக்
குளித்திடப் போகையிலே
அவர்குளிக்க வந்திடுவார்
இதுவரையில் என்னசெய்தீர்
எனும்கூச்சல் வலுத்திடுமே!
துண்டெங்கே சோப்பெங்கே
அதெங்கே இதெங்கேன்னு
ஆளாகப் பறக்கையிலே
அத்தனையும் தேடியோடி
அலுத்துவிடும் எரிச்சல்வரும்!


சிற்றுண்டிப் பரிமாறி
கேரியரில் சோறுகட்டி
அடுக்களையில் சாமான்கள்
அப்படியே போட்டுவிட்டு
அவசரமாய் உடைமாற்றி
கண்ணாடி எடுத்தோமா
சில்லறைகள் எடுத்தோமா
என்றேதான் ஒவ்வொன்றாய்
ஆராய்ந்து சரிபார்த்து
அறைக்கதவைச் சாத்திவிட்டு
வெளிக்கதவைப் பூட்டிவிட்டு
விரைகின்ற நேரத்தில்
சார்ஜ்போட்ட அலைபேசி
விட்டுவந்த நினைவுவர
மறுபடியும் தாழ்திறந்து
அதைஎடுத்து வந்ததிலே
பலநிமிடம் பாழாகி
அவசரத்தை மிகுவிக்கும்!

பேருந்து ஏற்றிவிடக்
கூடவரும் கணவனிடம்
வேண்டுகின்ற காய்கறிகள்
கட்டுகின்ற பில்களெல்லாம்
ஓயாமல் ஒப்புவித்தால்
வாய்மூடென்று அதட்டல்வரும்!

நிறுத்தத்தில் நிற்கின்ற
இடைநேரப் பொழுதினிலே
ஹீட்டரைத்தான் அணைத்தோமா?
கேஸைத்தான் அணைத்தோமா?
அயர்ன்பாக்ஸின் சுவிட்சைத்தான்
அணைக்கத்தான் மறந்தோமா?
நீரேற்றப் போட்டமோட்டார்
நிறுத்தாமல் வந்தோமா?
அறையினிலே மின்விசிறி
அணைத்தோமா? மறந்தோமா?
பால்மூடி வைத்தோமா?
மாவெடுத்து வைத்தோமா?
மீந்துபோன சட்டினியை
பிரிட்ஜினிலே வைத்தோமா?
மாடியைத்தான் திறந்தோமே
மறுபடியும் அடைத்தோமா?
டம்ளரிலே வெச்சகாப்பி
முழுதாகக் குடித்தோமா?
பூட்டுபூட்டி வந்தோமே
இழுத்துஅதைப் பார்த்தோமா?
என்றேதான் ஐயங்கள்
ஒவ்வொன்றாய் எழுந்துவரும்
விடைதெரியா பொழுதுமனம்
வீணாக எரிச்சலுறும்!
பேருந்துப் பயணத்தில்
பெண்கள்படும் தொல்லைகளை
எடுத்துரைத்தல் எளிதல்ல
எழுதிவிட முடிவதல்ல!

பேருந்து நிறுத்தத்தில்
கால்கடுக்கக் காத்திருந்தால்
வருகின்ற வாகனங்கள்
நிற்காமல் கடந்துசெலும்!
அப்படியே நின்றாலும்
குறிப்பிட்ட இடத்தினிலே
முறையாக நிற்காமல்
முன்பின்னாய் நின்றிடுமே!

ஒருபுறமாய்ச் சாய்ந்துவரும்
பேருந்தைப் பார்த்தாலே
ஏறுவது எப்படியோ
என்றுமனம் பேதலிக்கும்!
எட்டிஉள்ளே பார்த்தாலே
மூன்றுவண்டி ஜனமிருக்கும்
படிக்கட்டில் கால்வைக்க
நடத்துநரின் விசில்கேட்கும்!

பின்னாலே ஏறுபவர்
இடித்திடித்து முன்தள்ள
இஞ்ச்சிஞ்ச்சாய் முன்னேறி
நடுவினிலே சிக்கிடுவோம்!
அடுத்தடுத்து நிற்பவர்கள்
நம்காலை மிதித்திடுவார்
கால்வைக்க இடமின்றி
ஒற்றைக்கால் கொக்காவோம்!

கைகளால் பிடித்திடவோ
கம்பிகளோ எட்டாது
பிடிமானம் கிடைக்காமல்
தடுமாற வேண்டிவரும்!
இருக்கைமேல் பிடித்தாலோ
அமர்ந்திருப்பார் முறைத்திடுவார்
கைப்பையும் இடிக்குதென்று
கடுகடுப்பாய் முகம்சுளிப்பார்!

ஒருவரங்கே விடும்மூச்சை
இன்னொருவர் சுவாசிக்க
வியர்வையெனும் மழைபெய்து
உடலெங்கும் ஊற்றெடுக்கும்!

இருக்கையிலே அமர்ந்திருப்பார்
எப்போது எழுந்திருப்பார்
என்றேதான் மனதுக்குள்
மணிக்குருவி குரல்கொடுக்கும்!

எழுந்திடுவார் என்றேதான்
எதிர்பார்த்துக் காத்திருந்தால்
எங்கிருந்தோ வரும்ஒருவர்
தள்ளிவிட்டு அமர்ந்திடுவார்!
மூட்டைகளின் அடுக்குப்போல்
முட்டித்தான் கிடக்கையிலே
சீட்டுத்தர நடத்துநரோ
இடைஇடுக்கில் நுழைந்திடுவார்!

நெரிசலினைப் பயன்படுத்தும்
சபலபுத்திப் பேர்வழிகள்
அஞ்சுகின்ற பெண்தேடி
ஆங்காங்கே உரசிடுவார்!
தெருவினது திருப்பங்கள்
திடுமென்ற நிறுத்தல்கள்
எதிர்பார்த்துக் காத்திருந்து
வேண்டுமென்று மேல்விழுவார் !

இடிக்காமல் நில்லுமென்று
கடுப்பாகிச் சொல்லிவிட்டால்
காரிலேறிப் போங்களென்று
துடுக்காக மடக்கிடுவார்
சிக்னலிலே வண்டியுந்தான்
சிறைப்பட்டு நிற்கையிலே
நெடுநேர மாச்சுதென்று
நெஞ்செல்லாம் நடுநடுங்கும்!

தாமதந்தான் ஆகிவிட்டால்
தலைமையிலே இருப்பவர்கள்
தலைவாசல் நின்றுகொண்டு
வள்ளென்று விழுந்திடுவார்
வசைபாடி மகிழ்ந்திடுவார்
வகையாக மாட்டுபவர்
வாய்பேச முடியாமல்
கண்களிலே நீர்கோர்ப்பார்!

உணவுஇடை வேளையிலே
தம்முடைய துன்பத்தை
தோழியிடம் பரிமாறி
ஓயாமல் புலம்பிடுவார்
பிறர்துயரம் நோக்கையிலே
அக்கரைக்கு இக்கரைதான்
பச்சையென்ற உண்மைதனை
உணர்ந்துமனம் சலித்திடுவார்!

எட்டுமணி நேரந்தான்
அசராமல் வேலைசெய்து
எப்படித்தான் வீட்டுக்கு
போய்ச்சேர்வ தெனமலைப்பார்!

பேருந்து நிறுத்தத்தில்
பேரலையாய்க் கூடிநிற்கும்
கூட்டத்தைக் கண்டாலே
குளவிநெஞ்சில் கொட்டிடுமே
நாகரிகம் அத்தனையும்
மூட்டைகட்டி வைத்துவிட்டு
முண்டியடித் துள்ளேறத்
தயங்கிநொடி நின்றுவிட்டால்
இருட்டும்வரை அங்கேயே
இருந்திடத்தான் நேர்ந்திடுமே!

வீடுவந்து சேர்கையிலே
கைகால்கள் வெலவெலக்கும்
பசித்திருக்கும் குழந்தைகளோ
பாவமாக முகம்பார்க்கும்
காலையிலே செய்துவைத்த
உணவுகளைச் சுடவைத்து
சாப்பிடத்தான் எடுத்துவைத்தால்
சட்டென்று முகம்சுளிப்பர்
எப்போதும் இப்படியே
சாப்பிட்டுச் சாப்பிட்டு
வாழ்க்கைமிக சலித்ததென்று
கணவருந்தான் சிலிர்த்திடுவார்!

வகைவகையாய்ச் சமைத்திடவே
வீட்டினிலே இருந்திடவா?
வேலையை நாளைக்கே
விட்டுவிட்டு வந்திடவா?
என்றேதான் குரலெடுத்து
ஓங்கித்தான் ஒலித்துவிட்டால்
ஓர்நொடியும் நிற்காமல்
ஓடித்தான் ஒளிந்திடுவார்!

குழந்தைகளைத் தூங்கவைத்து
மிச்சமீதி ஆராய்ந்து
தோதான பாத்திரத்தில்
மீண்டுமதை எடுத்துவைத்து
பிரிட்ஜுக்குள் நிறைந்திருக்கும்
குவியலுக்குள் திணித்துவிட்டு
அடுத்தநாள் சமைப்பதற்கு
வெங்காயம் உரித்துவைத்து
பொரியலுக்குத் தேவைப்படும்
காய்கறிகள் நறுக்கிவைத்து
பத்துப்பாத் திரம்தேய்த்து
அடுக்களையைச் சுத்தமாக்கி
அடுத்தநாள் கட்டும்சேலை
ஜாக்கெட்டைத் தேடிவைத்து
அங்கங்கே கிடப்பதனை
அறைகுறையாய் ஒழுங்குசெய்து
கதவுகளைச் சாத்திவிட்டு
வெளிக்கதவைத் தாழிட்டு
விளக்குகளை அணைத்துவிட்டு
கட்டிலிலே படுக்கையிலே
உடல்முழுக்கத் துவண்டுவரும்
கண்களுக்குள் இருண்டுவரும்!

அடுத்தநாள் எழுந்திருக்க
அவகாசம் இல்லையென்று
கணவன்முகம் பாராமல்
கடிதாகக் கண்மூடி
போர்வைக்குள் சரண்புகுவோர்
போராட்டம் உரைப்பதற்குப்
பெண்களாலும் முடியாது
பைந்தமிழும் கைவிரிக்கும்!

(புதுவை அரசின் 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதைநூலுக்குரிய பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியுடன் கூடிய கம்பன்புகழ் இலக்கிய விருது பெற்ற கவிஞர் ஔவை நிர்மலாவின் பெண்களின் கதை என்னும் கவிதை நூலிலிருந்து - (கவிஞர் ஔவை நிர்மலா, பெண்களின் கதை, காரைக்கால் : விழிச்சுடர்ப் பதிப்பகம், 2013, விலை ரூ80/-) பக். 27-36.

Thursday, 27 November 2014

பலியாடுகள்


முனைவர் அவ்வை நிர்மலா




















சுப்பையாவும் பாஸ்கரனும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். முதுகலை, ஆங்கில இலக்கியம். ஒரே விடுதியிலும் தங்கி இருந்தார்கள். உயிர் நண்பர்கள்.

பாஸ்கரன் கூச்ச சுபாவம். அனைவரோடும் சகஜமாகப் பேச பயப்படுவான். யாரேனும் ஏதேனும் நினைத்துக்கொண்டால்?

சுப்பையா கொஞ்சம் தைரியசாலி. பெண்களோடு சகஜமாகப் பழகுபவன். எப்போதும் அவனைச் சுற்றி ஐந்தாறு பெண் தோழிகள் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். 

அவர்களில் புவனாவின் மேல் அவனுக்கு ஒரு கண். அவளுக்கும்தான். 
நட்பு கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாக மலர்ந்து டாக்டர்பட்டம் வாங்கிய கையோடு இருவரும் திருமணமும் செய்துகொண்டார்கள்.

அவர்கள் திருமணத்தைப் பார்த்து அனைவருமே சிலாகித்துப் பேசினார்கள். எல்லோருக்கும் இப்படி அமைந்துவிடுமா என்ன?

பாஸ்கரனும் உஷாவை உள்ளூறக் காதலித்துக் கொண்டுதான் இருந்தான். அவன் கேட்டிருந்தால் உஷாவும் ஓ.கே. சொல்லி இருப்பாள். ஆனால் அவனுக்குத்தான் பயம். அம்மா, அப்பா, இரண்டு தங்கைகள், அண்ணன், தம்பி என்று பெரிய குடும்பம். அவன் குடும்பப் பாசம் அவனை வெகுவாகக் கட்டிப்போட்டது.

அவன் தன் காதலைப் பற்றிச் சொன்னால் அவர்கள் ஒன்றும் தடைசொல்லப் போவதில்லை. இருந்தாலும் அவன் கூச்சம் அதனை வெளிப்படுத்த வியலாமல் செய்துவிட்டது.

அவன் பேசாமல் இருந்ததால் பெற்றோர்களே பார்த்து அவனுக்கு அலமேலுவைத் திருமணம் செய்துவைத்து விட்டார்கள்.

அலமேலு குடும்பப் பாங்கான பெண். நன்றாகச் சமைப்பாள். மாமியார், மாமனார், நாத்தனார் என்று அனைவரிடமும் அன்பாகப் பழகுபவள். கணவனே கண்கண்ட தெய்வம் என்று எந்நேரமும் கணவனுக்குப் பணிவிடை செய்வதில் மகிழ்ச்சி காண்பவள். அவனும் கொடுத்துவைத்தவன்தான். அவன் திருமணத்திற்குச் சுப்பையா தன் மனைவியோடு சென்று வாழ்த்திவிட்டு வந்தான்.

திருமணம் முடித்ததும் ஒவ்வொருவருக்கும் ஒரு திசையில் வேலை கிடைத்து அப்புறம் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றல் ஆகி என்று வாழ்க்கை இயந்திரகதியில் போய்க் கொண்டிருக்கிறது.

திருமணம் ஆகி சில மாதங்கள் சுப்பையாவும் பாஸ்கரனும் அவ்வப்போது கடிதங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். பிறகு அதுவும் மெல்ல மெல்ல நின்றுபோனது.

ஆயிற்று பத்து ஆண்டுகள்!

பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னையில். வருடாவருடம் இப்படி ஒன்றிரண்டு கருத்தரங்களில் பங்குகொண்டால்தான் மதிப்பாக இருக்கும்.
பாஸ்கரன் தன் மனைவியோடு கருத்தரங்கத்தில் கலந்துகொள்ளச் சென்றான்.
கருத்தரங்கம் வந்தவர்கள் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார்கள்.  
சிற்றுண்டி அருந்திக் கையைக் கழுவிவிட்டுத் திரும்பிய சுப்பையாவின் கண்களில் மின்னல். எதிரே பாஸ்கரன் நின்றிருந்தான்.

'பாஸ் எப்படி இருக்கே?', அவன் வயிற்றில் செல்லமாகக் குத்தினான் சுப்பையா.

'நல்லா இருக்கேன் சுப்பு, பாத்து எவ்வளவு நாளாச்சி, நீ நல்லாயிருக்கியா?'
'எனக்கென்ன, ரொம்ப நல்லாயிருக்கேன்'. 

'பாஸ்கர், சுகர் டேப்லட் எடுத்துக்காம வந்துட்டீங்களே, இந்தாங்க' - உல்லி உல்லி புடவையில் இருந்த ஒல்லியான தேகம் பாஸ்கரிடம் மாத்திரையை நீட்டியது.

சுப்புவின் முகத்தில் கேள்விக்குறிகள்.
'சுப்பு, இவங்க என்னோட மிஸஸ் சுதா. இவங்களும் நானும் ஒரே காலேஜ்லதான் வேல செய்யறோம்'. 

'சுதா, நீ போய் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிட்டு புக்ஸ், பை எல்லாம் எனக்கும் சேர்த்து வாங்கி வச்சிடு. இதோ வந்துடறேன்'.

தன் கணவன் பாஸ்கரன் நண்பரிடம் தனியே பேச விரும்புகிறார். புரிந்துகொண்ட சுதா ஒரு புன்னகையோடு அங்கிருந்து விலகிப்போனாள்.
'பாஸ்கர், உன் ஒய்ப் . . . ?'

'அத ஏன் கேக்கற சுப்பு? அந்த அலமேலுவக் கட்டிக்கிட்டு நான் எவ்வளவு கஷ்டம்தான் படறது? சுத்த முண்டம். படிப்பறிவு கொஞ்சமும் இல்ல. பயங்கற பொஸஸிவ். எப்பப் பாத்தாலும் அவ முந்தானியப் புடிச்சிக்கிட்டே இருக்கனும்னு நினைச்சா. நம்ம ஒன்னு சொன்னா அவ ஒன்னு செய்வா? ஒரு படிப்பறிவில்லாத முட்டாளக் கட்டிக்கிட்டு எப்படி வாழ்க்கை நடத்த முடியும்?'
'சுதா என்னோட காலேஜ்ல வேலைக்குச் சேந்தா. செம பிரிலியண்ட். வெரி மாடஸ்ட், அவளுக்கு அண்ணன், தம்பின்னு எந்தவகையான பேமிலி பிக்கல் பிடுங்கலும் இல்ல. என்னோட லைப் பார்ட்னரா இருக்கேன்னு சொன்னா. ஜஸ்ட் ஒன் இயர் முன்னாடிதான் சிம்பிளா மால மாத்தி மேரேஜ் பண்ணிக்கிட்டோம்'. 

'அலமேலு குழந்தய கூட்டிக்கிட்டு ஊரோட போயிட்டா. எப்பவாவது போய்ப் பாத்துட்டு வருவேன். சுதா எதுக்கும் தடை சொல்றது இல்ல'.
'இப்போ ரெண்டு சம்பளம். நெறைய விஷயங்கள எங்களால டிஸ்கஸ் பண்ண முடியுது. எங்களுக்குள்ள நல்ல அண்டர்ஸ்டேன்டிங், வி ஆர் வெரி ஹாப்பி'. 
கூச்சம் கூச்சம் என்று அநியாயத்திற்கு வெட்கப்படுபவன் இப்படி சுதாவுடனான தனது தொடர்பை அப்பட்டமாக எடுத்துரைத்துக்கொண்டிருந்தான்.
அதற்குள் கருத்தரங்கம் தொடங்கியதற்கான அழைப்புமணி அடித்தது.
பரபரப்பாகிப் போனார்கள். சரி மீதியை அப்புறம் பேசிக்கொள்ளலாம்.
மதிய உணவு இடைவேளையில் சுப்புவும் பாஸ§வும் பேசிக்கொள்ள முடியவில்லை. புதுப்புது நண்பர்கள் சூழ்ந்துகொண்டார்கள். 

ஒருநாள் கருத்தரங்கம்தான். அதனால் மாலையில் அவரவர் ஜாகைக்குத் திரும்பும் அவசரம்.

'சுப்பு, உன் விசிட்டிங் கார்டு கொடு, அப்பறம் பேசறேன்'. சுப்புவின் விசிட்டிங் கார்டு பெற்றுக்கொண்டு  பாஸ்கரன் தன் புது மனைவியோடு கிளம்பிப்போனான்.

ஆறு மாதம் ஓடிப்போனது. திருச்சியில் ஒரு கருத்தரங்கம். பாஸ்கரன் தன் மனைவி சுதாவோடு போயிருந்தான். சுப்பு திருச்சியில்தான் இருக்கிறான். ஆனால் அந்தக் கருத்தரங்கிற்கு சுப்பு வரவில்லை. அது இரண்டுநாள் கருத்தரங்கம். 

சனிக்கிழமை மாலை சுப்புவின் வீட்டிற்குப் போய் இரவு அங்கேயே தங்கி விடலாம். அவனும் அவன் மனைவி புவனாவும் தன்னிடம் எவ்வளவு பிரியம் காட்டுவார்கள்! நிச்சயமாய்த் தான் அவர்கள் வீட்டில் இரவு தங்காவிட்டால் கோபித்துக் கொள்வார்கள். சுப்புவுக்குப் போன் செய்யாமல் போய் அவனை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க வேண்டும்.

சுதாவைக் கூப்பிட்டான். 

'பிரண்ட்ஸ§க்குள்ள ஆயிரம் இருக்கும். நான் எதுக்கு அங்கே நந்தியாட்டம். நீங்க போயிட்டு வந்திடுங்க. அடுத்தமுறை நான் நிச்சயம் வரேன்'.
தனக்குத்தான் சுகர் வந்துவிட்டது. சுவீட் சாப்பிட முடியாது. ஆனால், சுப்புவுக்கு இனிப்பு வகைகள் ரொம்பப் பிடிக்கும், புவனாவுக்கும்தான். அகர்வால் ஸ்வீட்ஸ் ஒரு கிலோ வாங்கினான்.

சுப்புவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் ஒன்றும் சிரமமாக இல்லை. ஆனால் வீடுதான் கொஞ்சம் பழைய மாதிரி திண்ணையுடன் கூடியதாக இருந்தது. மாலைநேர இருளைப் போர்த்திக்கொண்டு நின்றது. 

இருட்டுக்குள் ஒளிந்துகொண்டிருப்பது அவன் வீடாக இருக்குமோ என்று சற்றே சந்தேகமாகவும் இருந்தது.

காலிங்பெல்லை அழுத்தினான். சின்னதான இடைவெளியோடு கதவு திறந்தது. உள்ளே சன்னமாக ஒளி கிடைத்தது. ஒரு முகம் எட்டிப்பார்த்து 'யாரு?' என்றது.

தான் வீடு மாறி வந்துவிட்டது நிச்சயமாகத் தெரிந்து போனது. 
'சுப்பையான்னு . . .'

'அவங்க வெளியில போயிருக்காங்க. இப்ப வந்திடுவாங்க. உள்ள வந்து உக்காருங்க' என்று சொல்லிவிட்டு ஓர் இருக்கையைக் காட்டிவிட்டு உள்ளே போய்விட்டாள் அந்தக் குள்ளமான பெண்.

'தான் ஒழுங்காகச் சுப்புவுக்குத் தெரிவித்துவிட்டு வந்திருக்க வேண்டும். சுப்புவும் புவனாவும் எப்பொழுது வருவார்களோ?  சரியாகக் கூட பதில்சொல்லாமல் இந்த வேலைக்காரி உள்ளே போய்விட்டாளே!' 
பொழுதுபோகாமால் அங்கே தூசி படிந்துகிடந்த ஒரு புத்தகத்தை எடுத்துத் தூசு தட்டிப் புரட்டிக் கொண்டிருந்தான்.

வாசலில் டூ வீலர் நிறுத்தும் சத்தம் கேட்டது. அவர்கள்தான் வந்திருக்க வேண்டும். எட்டிப் பார்த்தான்.

சுப்பு வாசற்படி ஏறிக்கொண்டிருந்தான்.
'சுப்பு . . . !'
'பாஸ் . .  எப்ப வந்தே?'
'நான் வந்து பத்து நிமிஷமாச்சி!'
'சரி வா வா உட்கார்'.

'தேனு. . . ரெண்டு காபி கொண்டா' - உள்ளே நோக்கிக் குரல்கொடுத்தான் சுப்பு.
'சுப்பு . . . !  எங்க புவனாவக் காணோம்?'

'அது வந்து . . .  நீ மொதல்ல காபியக் குடி. அப்பறம் பேசுவோம்'.
'தேனு . . .! நாங்க கொஞ்சம் வெளியில போய்ட்டு வரோம்'. - சொல்லிவிட்டு பாஸ§வின் கைபிடித்து அழைத்துக்கொண்டு வெளியில் இறங்கினான் சுப்பு.
ஒரு மௌனம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது.

தெருவின் முனையில் ஒரு சிறிய பார்க் இருந்தது. நான்கைந்து பெஞ்சுகள் இருந்தன, எல்லாம் காலியாக! மார்கழி மாதப் பனி பெய்துகொண்டிருந்தது. இருவரும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தார்கள்.

பாஸ்கரன் தொண்டையைச் செருமினான்.

சுப்புவிற்குப் புரிந்தது. 'பாஸ§ அவ என்னை விட்டுட்டுப் போயிட்டா'. 
'ஏன்?' என்னும் தோரணையில் புருவத்தை உயர்த்தினான் பாஸ்கரன்.
'அவளோட பிராப்ளமே ஓவர் ஸ்மார்ட்னஸ்தான். பயங்கர அறிவுஜீவியோட வாழ முடியாதுடா. எதைச் சொன்னாலும் ஏன், எதுக்குன்னு கேள்விகேட்டா என்ன செய்யமுடியும்? ஒய்ப்புன்னா எப்பவும் புருஷனுக்கு கொஞ்சமாவது அடங்கி நடக்கனும் இல்ல'.

'எல்லா வேலைலயும் பிப்டி பிப்டி பங்கெடுக்கனுமுன்னு சட்டம் போட்டா'.
'குளிக்கப் போனா டவல், சோப்புன்னு எதுவும் எடுத்துத் தரமாட்டா'. 
'நானும்தானே கிளம்பனும், எனக்கு லேட்டாகாதா? ஒங்களுக்கு வேண்டியத நீங்க எடுத்து வெச்சிக்கக் கூடாதா?' அப்படின்னு எப்பப்பாத்தாலும் ஏட்டிக்குப் போட்டியா நடந்தா . . . 

'எனக்கு ஒன்னும் பிடிக்கல. எனக்குன்னு அவ ஒன்னும் பாத்துப் பாத்துச் செய்யல. பாத்துப் பாத்து எதயும் சமச்சுப் போடல. எப்பப் பாத்தாலும் லிட்டரேச்சர், புக்ஸ், செமினார், அசோசியேஷன், மீட்டிங் இப்படியே இருந்தா வீட்டைப் பாக்க வேணாமா?' 

'நாம வெளியோபோய் களைச்சு வந்தா காலைப் பிடிச்சுவிடனும், வாய்க்கு ருசியா சமைச்சுப் போடனும், நேரம் காலம் தெரியாம நம்மள எதுவும் எதுத்துப் பேசக்கூடாது. இப்படி இல்லைன்னா அந்தப் பொண்டாட்டிகூட எப்படிக் குடும்பம் நடத்த முடியும்?' 

சுப்பையாவின் செயலுக்கு அவன் பார்வையில் நன்றாகவே காரணங்களைக் கற்பித்தான்.

சுப்பையா, பாஸ்கரன் இவர்களுக்கு என்னதான் வேண்டும்? அவர்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் ஆடைகளா இந்தப் பெண்கள்? குளிர் காலத்திற்குக் கம்பளி உடை, வெயிலுக்குப் பருத்தி உடை! 
வேலை செய்யும் வேலைக்காரி, குடும்பத்தைக் குதூகலமாய் நடத்தும் அறிவு ஜீவி இரண்டும் ஒரே ஓட்டுக்குள் வெள்ளைக்கருவும் மஞ்சள் கருவுமாய் முட்டையில் இருப்பது போன்று இரண்டு உருவங்கள் ஒரு பெண்ணுக்குள் இருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். 

அப்படி என்றால் ஆண்கள் எப்படி இருக்க வேண்டும்? அவர்களுக்கு யார் விதிகளை வகுக்க முடியும். ஏனென்றால் விதிகளை வகுப்பவர்கள் அவர்களல்லவா?

'அப்ப புவனா . . . ?'

'அவளுக்கு நான் டைவர்ஸ் கொடுத்துட்டேன்'. ஏதோ அவளுக்கு விருது கொடுத்ததுபோல் சொன்னான் சுப்பையா.

'அப்ப வீட்ல . . .?'

'தேனு . . .  தேன்மொழி . . . ! அவதான் என் பொண்டாட்டி. மாடியில குடியிருந்த பொண்ணு. அப்பப்ப வீட்டப் பாத்துக்கிட்டா. அப்படியே . . . கல்யாணமாகி அஞ்சு வருஷமாச்சி . . . இப்ப நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்'.

எப்படியோ பாஸ்கரனும் சுப்பையாவும் செய்முறைப் பரிசோதனை செய்து அவர்களது சந்தோஷம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பலியாடுகள் புவனாவும் அலமேலுவும் . . . ?

அங்கிருந்து கிளம்பினான் பாஸ்கரன்.